(1998 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அவன் அவனே தான். ஆனால் அவனை யார் அடையாளம் காணப் போகிறார்கள்? அடையாளம் காண அல்லது கவனிக்க அவன் ஒரு சாதாரண மனிதனின் தராதரத்தில் கூட இல்லையே!
அவன் இப்போது ஒரு பிச்சைக்காரன். பரதேசி. போதும் போதாதற்கு ஒரு கண்ணும் இல்லை. ஒரு கையில் முழங்கைக்கு கீழே இல்லை.
கறுப்பு மயிரை எண்ணிவிடலாம் என்பது போல் நரைத்துவிட்டதலை. முகத்தில் காலதேவன் இரக்கமின்றி வரைந்துவிட்ட கோடுகள். மெலிந்த உடலில் சுருங்கித் தொங்கும் தோல். திட்டுத் திட்டாய்த் தெரியும் எலும்புகள்.
அழுக்கில் மொரமொரப்பாய்க் காட்சி தரும் கந்தல் உடை, போதும் போதாததற்கு நெஞ்சைக் குடைந்துவரும் இருமல். அவலட்சணமான உருவந்தான். அவலட்சணங்களை யாரும் வேலை மினக்கெட்டுப் பார்ப்பதில்லை.. தமது கண்களில் படுவதனைத் தானும் யாரும் விரும்புவதில்லையே!
அவன் ஒரு காலத்தில் நெஞ்சை நிமிர்த்தி, கைகளை வீசி மிடுக்கோடு நடந்த வீதிகள் தாம் அவை. ஆனால் இன்று இந்த வீதியில் நடக்கத் திராணி இல்லை. ‘சர்சர்’ என்று பறந்து கொண்டிருக்கும் கார்களும், பஸ்களும், மோட்டார் சைக்கிள்களும் ஆக்கிரமித்துள்ள வீதிகளில் இறங்கவே அவனுக்கு நடுக்கம்!
எவனாவது தன் வாகனத்தினால் பந்தாடி உடனேயே எமலோகத்திற்கு அனுப்பிவிடுவான் என்ற அச்சந்தான். இந்த நிலையிலும் உயிருக்குப் பயப்படுகின்றேனே! என்று நினைக்க அவனுக்கு உள்ளூர நகைப்பும் உண்டாகிறது. நடைபாதை ஓரமாக அவன் ஒதுங்கி ஒதுங்கி, ஒருகையில் தடியோடும் மற்றக்கையின் இடுக்கில் ஒரு தகரப்பேணியோடும் நடக்கின்றான். பரதேசி என்ன பசி? ஆனால் எந்த நேரமும் பசிப் பேயின் கொடுமை! சிறுகுடல் பெருங்குடல் எல்லாம் ஒன்று சேர்ந்து பிணைந்து பற்றி எரிவதை போல… அகோரப் பசி! அந்த ஹோட்டல் வெளிமூலையில் உள்ள குப்பைத் தொட்டியை நோக்கி அவன் நடக்க முயற்சிக்கிறான். “ஏய் கிழட்டுப் பிச்சைக்கார நாயே! குருடா! பார்த்துப் போகத் தெரியாமல் ஆளிலை மோதிறியே ராஸ்கல்! என் உடுப்பும் உன்னால் ஊத்தையாயிட்டுது…”.
ஒரு நாகரீக இளைஞன் அவனைத் தாறுமாறாய் ஏசி கனல்கக்கும் ஒரு பார்வையையும் வீசிவிட்டுப் போகிறான். அவன் அசட்டுச் சிரிப்புச் சிரித்து குழைகின்றான். முன்பின் தெரியாதவர்களிடமெல்லாம் அவன் இப்போதெல்லாம் ஏச்சு வாங்காத நாட்கள் குறைவு. தன்மானம், கோபம் என்பதெல்லாம் இப்போது அவனுக்கு ஏற்படுவதில்லை. ஏற்பட்டாலும் அதனைப் பொருட்படுத்தியவர் யாருமில்லை . ஆனால் ஒரு காலத்தில்….?
அவன் நீண்ட பெருமூச்சினை விட்டுக் கொண்டு விரைகின்றான். அவனது கவனமெல்லாம், கருத்தெல்லாம் அந்தக் குப்பைத் தொட்டியில் தான் இருக்கிறது.
குப்பைத் தொட்டியை எட்டிப்பார்கிறான். இலுப்பைப் பூவைக் கொட்டி வைத்தாற்போல், சோறு பளிச்சிடுகிறது. இந்தப் பஞ்ச காலத்திலும், நாளுக்கு நாள் உணவின் விலை ஏறிவரும் இந்தக் காலத்திலும் ஒருவன் இவ்வளவு சோற்றினை மிச்சமாக எறிந்திருக்கிறானே! போட்டிக்கு அப்போது அங்கே மனிதனும் இல்லை! நாய்களும் இல்லை! அதில் அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி! இல்லாவிட்டால் அடிக்கடி போட்டிதானே!
கடவுளே! மூன்று நாளாய் வயிறு வாய்க்கு ஒன்றுமில்லாமல் தவிக்கிறேன். இன்றைக்கு கருணைகாட்டி விட்டாய். அவன் கடவுளை நெஞ்சார வாழ்த்தி அந்த எச்சில் இலைச் சோற்றினை ஒரு கையால் அள்ளி எடுக்கும் வேளை…… பிடரியில் ஓர் அடி விழுகிறது! அவன் சுதாகரிப்பதற்கு முன்பே ஒருவன் அந்த இலைச் சோற்றைப் பறித்துக் கொண்டு ஓடுகிறான்.
வழியெல்லாம் சோற்றுப் பருக்கைகள்!
ஆண்டவனே! இரத்தத் திமிரில், ஆணவத்தில், அகங்காரத்தில் நான் முன்பு செய்த அக்கிரமங்களாலேயே என்னைச் சித்திரவதை செய்கிறாயா?
நெஞ்சை முட்டுகிறது துக்கம். கண்களை முட்டுகிறது கண்ணீர். சளி தொண்டைக் குழிக்குள் வந்து கற கறக்கிறது. முத்துக்குவியல் போல் தோன்றும் அந்த வெள்ளைச் சோறு.
அவன் சோர்ந்து போய், அந்த நடைபாதை ஓரத்தில் ஒரு கடையின் சுவரோடு சாய்ந்து கீழே உட்கார்ந்து கொள்ளுகிறான்.
மண்ணிலே விழுந்த சோற்றுப் பருக்கைகள்!
தொண்டைக் குழியை விட்டு – இறங்காத சோற்று உருண்டை ஏற்படுத்தும் அவதிபோல, அவன் திணறுகின்றான். அவன் கடந்த காலத்தில் புரிந்த அக்கிரமங்கள் நினைவில் விரிந்து வேதனை செய்கிறது.
அவன் பார்வைக்கு ஒரு குத்துச் சண்டை வீரன் போல் தோன்றுவான்; கரிய உருவம். உருண்டு திரண்டு அங்கங்கள். அகன்ற முகம். மீசை, உயரம், மிடுக்கான நடை. அவனைப் பார்ப்பவர்கள் ஒரு கணம் தயக்கம் கொள்வது தவிர்க்க முடியாத ஒன்று! அதையிட்டு அவனுக்கு எப்போதுமே ஒரு பெருமை. மமதை என்று கூடச் சொல்லாம். மற்றவர்கள் தனக்குப் பயப்பட வேண்டும். அடிபணிய வேண்டும் என்ற ஆசை எந்த மனிதனுக்குத் தான் இல்லை? அத்தோடு உருவப் பொருத்தமும் சேர்ந்து கொண்டால் சொல்லவே வேண்டாம்.
மனிதனுக்கு அந்த ஆசை வெளிப்படையாகவே புலப்பட்டு விடுகின்றது. தன்னைக் கண்டால் மற்றவர்கள் குழைந்து மரியாதை செய்ய வேண்டும் என அவாக் கொண்டு அவன் வெளியில் பெரிய மனித தோரணையில் நடந்து கொள்வான். பேசுவான் எல்லாம் வாயோடுதான்! உள்ளத்தில் அவன் ஒரு கோழை என்பது யாருக்குந் தெரியாது!
இது நாள் வரைக்கும் அவன் யாரோடும் சண்டைக்குப் போனதில்லை. கைநீட்டியதுமில்லை. அதற்குமாறாக அவனுக்கு வாய் நீளுவதும், கைநீளுவதும் தன் மனைவி மக்களோடுதான்!
பெண்கள் என்றாலே மட்டமான மதிப்பு அவனுக்கு. ஆண்களின் ஆதிக்கத்திலும், வழிநடத்தலிலும், கட்டுப்பாட்டிலும் வாழ வேண்டிய பிறவிகள் பெண்கள். அவர்களுக்கு என்ன தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் என்ற அசைக்க முடியாத எண்ணம் அவனுக்கு! அவனுடைய எண்ணத்துக்கு ஏற்றாற்போல் பிறந்ததெல்லாம் பெண்பிள்ளைகள். ஒன்றல்ல இரண்டல்ல, ஐந்துபேர்!
கொழும்பு நகைக்கடை ஒன்றில் உதவியாளனாக வேலை பார்த்தான் அவன். திடகாத்திரமான பேர்வழி. கப்பங்காரன், தண்டல்காரன் என்று யாராவது வந்து கலாட்டா செய்தால் முன்னுக்கு நின்று பேசிச் சமாளித்து அனுப்புவான் என்ற நம்பிக்கையில், முதலாளி அவனுக்கு மற்ற உதவிய களிலும் பார்க்க கொஞ்சம் கூடுதலாகவே சம்பளம் கொடுத்து வைத்திருந்தார். தேவையானால் கேட்டாலும் பலவும் கொடுப்பார்.
முதலாளி கடையில் இல்லாத வேலைகளில் அவன் தான் முதலாளி. பிறகு கேட்கவா வேண்டும் மிடுக்கிற்கு? மதுப் பழக்கம் அவனுக்கு ஏற்கனவே உண்டு. காசு புழங்கும் போது சொல்லவும் வேண்டுமா?
கூடவே சில குடிகார நண்பர்களும் சேர்ந்து கொள்வதினால் வருமானத்தில் கணிசமான பகுதியை குடியில் கரைப்பது அவனுக்கு ஒன்றும் பாரதூரமாகத் தோன்றாது. அவன் பசுப்போல சாதுவாகத் தோன்றுவான். மதுவரக்கன் கும்மாளமிடுகின்ற போது, அவனுடைய மிருகக் குணங்கள் கூத்தாட ஆரம்பித்துவிடும். சிறிய விஷயத்திக்கும் கோபம் பொத்துக் கொண்டுவரும். அதனை அவனால் அடக்கிக் கொள்ளமுடியாது.
அதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு அவனது மனைவி கமலாட்சிக்கும் பிள்ளைகளுக்கும் ஏற்பட்டுவிடும். அவனுடைய 18 வருட குடும்ப வாழ்வில், அவன் கமலாட்சியுடன் மோதிக்கொள்ளாத நாட்களை எண்ணி விடலாம். பார்க்க பதின்நான்கு பதினைந்து வயது இளையவள். சுமாரான அழகியும் கூட. யாருடனும் சகஜமாகப் பேசிப் பழகும் தன்மையும் கொண்டவள். இதனாலேயும் அவனுக்கு அவள் மீது சந்தேகம் உண்டு. அவன் எதனையும் நிதானமாகச் சிந்திப்பதோ அல்லது வெளிப்படையாக பேசுவதோ குறைவு.
ஏழு பேர் கொண்ட குடும்பத்தினைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு லேசானதல்ல. பிள்ளைகளின் உடுபுடவைகள், உணவு, படிப்பு, போக்குவரத்துச் செலவு… இத்தனையையும் அவன் தனியொருவனாலேயே தனது உழைப்பில் கவனிக்க வேண்டுமே! பலகாரம் செய்து விற்று சிறிது பணம் சம்பாதிக்கிறேன் என்று முனைந்தாள் கமலாட்சி. ‘சும்மாபோடி’ என்னுடைய மரியாதை என்ன ஆகிறது? என்று சண்டையிட்டு அதனையும் தடுத்து விட்டான். தவறணை செல்வதை கவனித்த பின்னர் தானே வீட்டுச் செலவுக்குப் பணம் கொடுக்க வேண்டும்.
இரண்டு ரூபாவை அல்லது மூன்று ரூபாவைத்தான் அவன் வீட்டுச் செலவுக்குத் தினமும் கொடுப்பான். சிலவேளைகளில் அதுவும் இல்லை.
“இது எதற்குப் போதும்? பாணும், அரிசியும் வாங்கத்தானே சரி. மிச்சச் செலவுகளுக்கு என்ன செய்கிறது?’ என்று கமலாட்சி கேட்டால் போதும், பற்றிக் கொண்டு வரும் அவனுக்கு. அவன் செய்வதனைத் தட்டி கேட்க அவள் யார்? என்பது அவனது எண்ணமாகும்.
எதையாவது செய்யடி’ என்று கத்திவிட்டுப் போவான்.
இரவு சாப்பாட்டுக்கு வந்தால் சாப்பாடு தரமானதாயும், சுவையுள்ளதாயும் இருக்க வேண்டும். என எதிர்பார்ப்பான். முக்கியமாக மீன் குழம்பு, ஒரு பொரியல்,
ஒரு துவையல் ரசம் என்று இல்லாது போனால் சுருக் என்று கோபம் வரும்.
ஒரு நாள் இரவு , உணவு அவன் எதிர்பார்த்தவாறு இருக்கவில்லை. சோறும் வட்டுக் கத்தரிக்காய் குழம்பும் கீரையும் ஆக்கியிருந்தாள் கமலாட்சி. பிள்ளைகளுக்கும் பசி. ‘அப்பா சாப்பிட்டு முடியட்டும். பொறுங்கோ ‘ என்று கமலாட்சி
அவர்களிடம் சொல்லியிருந்தாள்.
தந்தை உணவு அருந்தும் சடங்கு எப்போது முடியுமோ என்று பிள்ளைகள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்கள்.
வழமை போல் அவன் அன்றும் நன்றாய் குடித்திருந்தான். போதை தலைக்கு மேற் அவன் பிதற்றிக் கொண்டிருந்தான். இரவு ஒன்பரை மணியாகி விட்டது. அவன் சாப்பிட எழும்புவதாகக் காணோம்.
கடைசி இரண்டு பிள்ளைகளும் பசியோடு படுத்துவிட்டார்கள். மற்ற மூவரும் காத்திருந்தார்கள். அவர்களும் படிக்கும் பிள்ளைகள்தான்.
சாப்பிட வாங்கோ !. கமலாட்சி பல தடவை பணிவாகவும், பயபக்தியோடும் அழைத்துப் பார்த்து விட்டாள். அவன் காதில் அது விழுந்ததாக இல்லை.
‘அப்பா சாப்பிட வாங்கோப்பா, எங்களுக்கும் பசிக்குது’ மூத்தவள் வினயமாகக் கூறினாள்.
அவன் மெதுவாக எழுந்து வந்து சாப்பிட அமர்ந்தான். கமலாட்சி உணவைக் கோப்பையில் வைத்தாள். சோறும் அந்தக் கறிகளிரண்டும் அவனைப் பரிதாபமாகப் பார்த்தன. கையில் போதுமான பணத்தைக் கொடுத்தால் தானே வாய்க்கு சுவையான உணவு தயாரிக்க முடியும்.
என்ன இது?”
அவள் பேசவில்லை.
‘வேறை கறியில்லையா?’
‘இல்லை’ அவள் முனகினாள்.
இதை மனிதன் சாப்பிடுவானாடி? கொண்டு போய் நாய்க்குப் போட்டி’ சோற்றுக் கோப்பையை விசுக்’ கென்று தட்டினான். கோப்பை சுழன்று கொண்டு பறந்தது. குசினித்தனையெல்லாம் சோற்றுப் பருக்கைகள் .
‘அப்பா’
இரண்டாவது மகள் மாலா பாய்ந்து முன்னே வந்தாள். பின்னர் செய்வதறியாது திகைத்துப் பின்வாங்கினாள்.
‘திமிர் பிடித்த நாய்கள்! துலையுங்கடி எல்லாரும்! பாருங்க உங்களுடைய கொழுப்பு அடங்க செய்யிறன் வேலை! என்றவன், அவர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில், அந்தச் சீவன்களின் பசிக்கு ஆதரவாக இருந்த சோற்றுப் பானையையும் தூக்கித் தலைக்கு மேலே உயர்த்தி, படீர் என்று நிலத்தில் போட்டு உடைத்தான்.
பானை ஓடுகள் சில்லுச்சில்லாக நாலாபுறத்திலும் பறந்தன. சோறு சிதறிக் கிடந்தது.
‘பாவீ! பிள்ளைகள் பசியிலை துடிக்குது. இப்படி ஒரு தகப்பன் செய்வானா? கமலாட்சி ஆத்திரத்தோடும், ஆவேசத்தோடும் கத்தினாள்.
‘என்னடி? என்னை எதிர்த்துப் பேசுறாயா? ராஸ்கல். உங்களைப் பத்து நாளைக்கு பட்டினி போடவேணும்…! என்றவன், பாய்ந்து அவளது தலைமயிரைப் பிடித்து அடிக்க… பிள்ளைகள் குறுக்கே வர… அவர்களுக்கும் அடிக்க…
கடவுளே இப்படி அக்கிரமங்களை குடிவெறியில் ஒரு தடவையா இரண்டு தடவைகளா செய்து அச்சீவன்களை வதைத்தேன்?
எனக்கு எப்படி இன்று வயிற்றுப் பசிக்கு உணவு கிடைக்கும்? கொடுத்து வைத்தவன் தானே வாங்க முடியும்? நான் என்னை நம்பியிருந்த பொஞ்சாதி பிள்ளைகளுக்கே கொடுக்க வேண்டியதை உரிய முறையில் கொடுக்கவில்லையே! ஒரு குடும்பத் தலைவனாக இருக்க எனக்கு என்ன தகுதி ? நெஞ்சு வேதனை செய்கிறது. கண்களில் இருந்து நீர் வழிந்தோடுகிறது. ஜன சந்தடிமிக்க அந்த வீதியை அவன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
யாரோ ஒரு புண்ணியவான். ஒரு முழு ரூபா நாணயத்தை மடியில் எறிந்துவிட்டுப் போனான். அவனுக்கு என்ன மனசு! பாவிகள் வாழும் உலகத்தில் புண்ணியவான்களும் இருக்கவே செய்கின்றனர். இல்லாது விடின் இவ்வுலகம் எப்படி நிலைத்திருக்கிறது.?
அந்த மனிதன் போட்டுச்சென்ற ஒரு ரூபாவை விட, இருபது சதச்சில்லறைகள் அவனுடைய கிழிந்த பைக்குள் இருக்கிறது. அறையிறாத்தல் பாண் வாங்கவே ஒரு ரூபா பதினைந்து சதம் வேண்டும். பிச்சை கேட்டால் ஐந்து சதமோ பத்துச்சதமோ தான் தருவார்கள். இல்லாது போனால் தராமலே போவார்கள். பிச்சை தந்த பெருமகனை நினைத்துக் கொண்ட அவன் பாண் வாங்கக் கடைக்குப் போனான் .
அவனுடைய முதலாளி சொந்த ஊரான தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். அவர் தனது சொந்த நாட்டுக்குப் போய்ச்சேர புதிய ஒருவர் கடையை வாங்கின்னார். புதியவர்கள் வர அவனுடைய சில கால வேலையும் பறிபோய்விடுகிறது. சிலகாலம் வேலையில்லாமல் அலைந்த அவனுக்கு நண்பன் ஒருவனின் உதவியால் மதுச்சாலை ஒன்றில் வேலை கிடைக்கிறது. சம்பளம் குறைவுதான். ஆனால் தினமும் வயிறு நிறைய மது அருந்தக் கிடைப்பதையிட்டு அவனுக்குப் பரம திருப்தி.
வீட்டிலே அட்டகாசமும் அதிகரித்தது. வறுமையும் தலைவிரித்தாடியது. பெண்களும் பருவச்சிட்டுகளாகினார்கள். பிரச்சினைகளும் கூடின. அவர்களது பள்ளிப்படிப்புக்கும் முற்றுப் புள்ளி விழுந்தது. அவனுடைய அட்டகாசம் அவர்களைப் பட்டினி போட்டு வாட்டுவதில் மட்டுமா இருந்தது.?
மூத்தமகளுக்கு ஒரு காதலனாம். அவர்கள் இருவரையும் ஒருநாள் அவன் தற்செயலாக ஒரு சினிமாப்பட மாளிகையில் இருந்து வெளியே வரும்போது அவன் தற்செயலாய்க் கண்டு விட்டான். ஆனால் அவர்கள் அவனைக் காணவில்லை. வழமை போல் கோபம் தலைக் கேறியது: வஞ்சக எண்ணங்கள் நெஞ்சில் அலைமோதின. எனக்குத் தெரியாமல் இவள் எப்படி காதல் செய்வாள் என்பது அவனது ஆத்திரம்.
ஆத்திர உணர்வுகள் கொப்பளிக்க சாராயத்தை உள்ளே தள்ளி, வெறி தலைக்கேறச் சென்றவன் வீட்டில் அட்டகாசம் புரிந்தான் என்பதைக் கூறவேண்டியதில்லை.
எங்கேடி போனாய் இன்டைக்கு? உன்னோட வந்தவன் ஆரடி? என்று மூத்த மகளிடம் கர்ச்சித்தபோது அவள் தன் குட்டு வெளிப்பட்டுவிட்டதே என்று விழித்தாள். நடுங்கினாள்.
‘ஆட்டக்காரிக்கு விதவிதமான உடுப்பு வேறை! நான் கஷ்டப்பட்டு உழைச்சிப் போடுகிறேன். நீங்கள் தின்றுவிட்டு றோட்டில் ஆடுகிறீர்களா? என்று கேட்டவன், பார் செய்கிறன் வேலை! என்று கூறி கண்ணில் பட்ட ஆடைகள் எல்லாவற்றையும் எடுத்துப் போட்டு தீக்கிரையாக்கினான்.
“ஐயோ! உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு. எங்களை ஒற்றைத் துணியோடை நிக்க வைக்கிறீங்களே! என்று கத்தினான் கமலாட்சி. அவளுக்கு ஆத்திரம் பொறுக்கவில்லை. எத்தனை நாட்கள் தான் அக்கிரமங்களைச் சகிப்பது? பிள்ளைகள் ஆத்திரம் தாங்காமல் சீ, நீங்களும் ஒரு மனிதனா? என்று ஏசினார்கள்.
அவன் அவர்கள் எல்லோருக்கும் அடியடியென்று அடித்தான். ஒரே கூக்கூரல். பாவி துலைச்சு போ நீ உன்னால் எப்பவும் தரித்திரம். உன்னை இனி எங்களுக்குத் தேவையில்லை. இனிமேல் என்னாலும் பிள்ளைகளாலும் உன்ரை கொடுமைகளைச் சகிக்க ஏலாது! நீ போகாட்டி நாங்கள் போறம்! எங்கையென்டாலும் போறோம். எப்படி என்டாலும் சீவிக்கிறோம். ஆனால் நீ நாசமாகத்தான் போவாய், நீ வேண்டுமென்றால் இருந்து பார்’ கமலாட்சி நெருப்பாகக் கத்தினாள்.
‘ஹா! ஹா’ இவ ஒரு கற்பாஸ்திரி, கண்ணகி, சபதம் போட்டு உடனே பலிச்சிடப் போவுது. தன்னிலை விளங்காமல் நின்ற அவன் எக்காளமிட்டுச் சிரித்தான்.
அவர்கள் போய்விட்டார்கள். அவன் தேடவில்லை. எப்படியும் போனால் வரத்தானே வேண்டும். தன்னைவிட்டால் அவர்களுக்கு கதியில்லை எப்படியும் வருவார்கள் என்று சில நாள் அவன் எண்ணினான். பலநாள் ஆகியும் அவர்கள் வரவில்லை. எங்கு போனார்கள்? ‘போங்கடி’ என்றவன் தான் இருந்த அந்த வாடகை வீட்டையும் சொந்தக் காரனிடம் விட்டு விட்டு. தேசாந்திரியாகப் புறப்பட்டு விட்டான். இலங்கை முழுவதும் சுற்றினான். விரும்பிய ஊர்களில் தங்கித்தங்கி பல வருடங்களைக் கழித்தான்.
எத்தக் கர்மத்திற்கும், அது நன்மையானால் நன்மையான பலன்களும், தீமையானால் தீய பலன்களும் ஏற்படவே செய்கின்றன.
அவன் தன்னை நம்பிய மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் மது மயக்கத்தில் புரிந்த அக்கிரமங்கள் காலச் சுழற்சியோடு சூழ்ந்து பிடித்தன.
வெளியூரில் ஒரு நாள் அலட்சியமாக வீதியில் நடந்து கொண்டிருக்கும் வேலையில் வேகமாக வந்த பஸ் ஒன்று மோதிவிட்டுச் சென்றுவிட்டது. அவனது வலது காலும், வலது கையின் முழங்கைக்குக் கீழ்ப்பக்கமும் போய் விட்டது. இப்போது அவனைக் கவனிப்பவர் யார்? செலவு செய்வதுயார்? வறுமையும் வேதனையும் அவனது சொத்துக்களாகின.
பல வருடங்களாக வெளியூர்களில் அனாதையாக அலைந்து திரிந்தவன் மீண்டும் தட்டத்தடுமாறிக் கொழும்புக்கு வந்து சேர்ந்தான். வீதிகளில் பிச்சை எடுத்தான். கடந்த காலத்துக்காக அழுதான். அவனை ஒருவராலும் அடையாளம் காண முடியவில்லை. ஓரிருவருக்குத்தன்னும் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள அவனும் தயாரில்லை. தன்மானம் என்ற ஒன்று இப்போதும் இருப்பதையிட்டு அவனுக்கு சிரிப்பும் வருவதுண்டு.
இப்போதெல்லாம் அவனுக்கு ஒரு அற்ப ஆசை. தன்புத்திரிகளில் ஒருத்தியைத்தானும் கண்ணால் பார்த்துவிட்டுச் சாக வேண்டும் என்பதுதான் அந்த அவா. ஓகோ! பெற்ற பாசம் போலும்,
அவர்கள் எங்கே எங்கே வாழ்கிறார்களோ? எப்படியான நிலையில் இருக்கிறார்களோ ஒரு காலம், ஒருகணமாவது வீதியில் தானும் ஒருத்தியையாவது காணும் பாக்கியம் கிடைத்தால் அவன் எவ்வளவு பெரும் அதிஷ்டசாலி, அவன் பெருமூச்சுவிட்டுக் கொண்டான்.
பொரல்லை வீதிகளில் கனகாலம் பிச்சை எடுத்து நாட்களைக் கடத்தியவன். கொட்டாஞ்சேனைப் பக்கம் போனான்.
ஒரு மாலை. ஏதோ விசேஷ நாள், அம்மன் பக்தகோடிகள் புடைசூழ வீதிவலம் வந்து கொண்டிருந்தாள். சுவாமிக்குப் பின்னே வந்த பெண்கள் கோஷ்டியில் வந்து கொண்டிருப்பவர்களில் அந்த இருவரும்?
வீதிச்சுவரோடு இருமல் அவஸ்தை தாங்காமல் நெஞ்சைப் பிடித்துக் கொண்டிருந்த அவன் ஏதோ உணர்வு வந்தவனாய் தட்டுத்தடுமாறி எழுந்து நின்றான்.
அவனது கண்களில் ஐம்பது வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணையும், அவளுக்குப் பக்கத்தில் சிரித்துப் பேசியபடி வரும் இளம் பெண்ணையும் வெறித்துப் பார்க்கின்றான்.
அந்தப் பெண் கமலாட்சிதான். அவனுக்கு அதில் எவ்வித சந்தேகமும் தோன்றவில்லை. அந்த இளம் பெண் அவனுடைய இரண்டாவது புத்திரி மாலா அல்லவா?
ஓ! என்ன அழகாய் அவள் வளர்ந்திருக்கிறாள். பன்னிரண்டோ பதின்மூன்றோ வயதில் சிறுமியாக அவன் அவளைக் கடைசியாகப் பார்த்திருக்கிறான். அதற்குள் இடைவெளி, பதினைந்தோ பதினாறோ ஆகிவிட்டனவே!
கல்யாணம் கட்டிக் குழந்தை குட்டிகளோடுதான் வாழ்கிறாள் போலிருக்கிறது. எப்படியோ நன்றாகத்தான் வாழ்கிறார்கள். சந்தோஷம் தான். இந்தப் பாவியை அவர்கள் அடையாளம் காண்பார்களா? ஒரு அன்புப் பார்வை பார்ப்பார்களா? நெஞ்சு பட படவென்று அடிக்கிறது. சளி நெஞ்சை வந்தடைக்கிறது.
அவன் தடுமாறிக் கொண்டு வந்து கொண்டிருக்கும் அவர்களை பார்த்துப் பேசினான்.
‘கமலா … ட்சி’
‘மா….லா’
அவன் உரக்கத்தான் கூப்பிடுகிறான். ஆனால் குரல் நெஞ்சக் கூட்டுக்குள்ளேயே அடங்கியிருந்தது. வெளியில் சத்தம் வரவில்லையே! எவ்வளவு முயன்றும் சொற்கள் வெளியே வரமுடியாமல், தொண்டைக்குள்ளேயே சளி அழுத்தியது. அவன் அவர்களை விழுங்கி விடுவது போல் பார்த்தான்.
‘ஐயோ! ஆரோ பிச்சைக்காரன், பைத்தியம் போலிருக்கிறது; இருக்கும் கிட்டவருகுது என்று அருவறுத்துக் கொண்டே அவள் தாயையும் தள்ளிக்கொண்டு சாமிக்குப் பின்னால் ஓடி கூட்டத்திற்குள் போய் சேர்ந்து விட்டாள்.
அவனால் நிற்கமுடியாமல் உடல் நடுங்கியது. இல்லை தலைசுற்றியது. இந்த அக்கிரமக்காரனுக்கு வேண்டியது தான், என்று தன்னைத் தானே சபித்துக் கொண்டு வீதியில் உட்கார்ந்து கொண்டான்.
(‘நெருப்பு வெளிச்சம்’ சிறுகதைத் தொகுப்பில் இருந்து)
– சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல