மண்டை ஓடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 24, 2014
பார்வையிட்டோர்: 11,082 
 
 

சதா சண்டித்தனம் செய்யும் ஒருவனை வீட்டில் பூட்டி வைக்கலாம். நான்கு அடி கொடுத்து அடக்கப் பார்க்கலாம். பேசாமல் முறைத்துக்கொண்டு மௌன வதை செய்யலாம். அதிக பட்சம் சோறு போடாமல் கூட இருக்கலாம். யாராவது உணவகத்தில் வேலைக்குச் சேர்த்து விடுவார்களா? என் அம்மாவுக்கு இதுபோன்ற திட்டமெல்லாம் எங்கிருந்துதான் வருமோ. சபா மாமாதான் இனி உன்னை மேய்க்க லாயக்கு என கழுத்தைப் பிடித்து தள்ளாதக் குறையாக அனுப்பியே விட்டார்.

சபா மாமா என்றாலே எனக்கு நடுங்கும். சபா மாநிலத்தில் போலிஸ் வேலை செய்யப்போனவர், மேலதிகாரி ஏதோ திட்டினான் என்பதால் நான்கு அறையும் கூடவே வேலையையும் திரும்ப கொடுத்துவிட்டு தீபகற்பத்திற்கு வந்து சேர்ந்துவிட்டார். சபாவில் குறிப்பிட்ட ஒரு இன பெண்களுக்குக் கறுத்த கட்டை என்றால் கொள்ளை விருப்பமாம். வெள்ளை நிறமான அவர்களுக்கு கறுப்பு நிற ஆண்கள் மூலம் பிறக்கும் குழந்தைகள் வித்தியாசமான அழகுடன் திகழ்வார்கள் என்பதால் தமிழர்களை வசியம் வைத்து மணக்கக் கூடத் தயாராக இருப்பார்களாம். அப்படித்தான் என் மாமா சபா மாநிலத்து பெண்ணை மணந்து கொண்ட கதையை ரத்தினச் சுருக்கமாக வீட்டில் சொல்லியிருந்தார். குழந்தைதான் வேண்டுமென்றால் ஏன் வசியம் வரை போக வேண்டும் என எனக்கு கடைசி வரை விளங்கவே இல்லை. இதெல்லாம் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் உதவிதானே.

சபா அத்தைக்கு தமிழ் தெரியாது. ஆனால் பேசுவது புரியும். எல்லாவற்றையும்விட நன்றாகச் சமைக்கத் தெரிந்திருந்தது. மாமா அத்தையை நம்பித்தான் முதலில் ஒட்டுக்கடையையே ஆரம்பித்தார். வியாபாரம் பிய்த்துக்கொண்டு போனது. அத்தை மலாய்க்கார ஜாடையில் இருந்ததால் ‘ஹலால்’ என அவர்களாகவே நம்பி வந்தனர். அவர்களாக ஏமாறுவதற்கு மாமா என்ன செய்வார் பாவம். யாரின் நம்பிக்கையையும் கெடுக்க விரும்பாத அவர், தலையில் மட்டும் ஒரு குல்லாய் போட்டுக்கொண்டார். விளைவாக, வியாபாரம் படு சூடாக நடந்து குறுகிய காலத்திலேயே உணவகம் திறக்கும் நிலைக்கு உயர்ந்துவிட்டார். உணவகம் திறந்தபின் மாமா குல்லாய் போடுவதில்லை. அது முழு இந்திய உணவகமாக மாறியிருந்தது.

இந்த நிலையில்தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. ஆமாம்! அத்தை கர்பமானாள். இது அவர்களுக்கு எட்டாவது அற்புதம். மாமா ஒவ்வொரு வருடத்தின் போதும் இந்த அற்புதத்தை நிகழ்த்திக்காட்ட தவறுவதே இல்லை. அந்த வருடமும் அத்தைக்கு ஓய்வு தேவைப்பட்டதால் சமையலுக்கு வெளியிலிருந்து ஆளெடுக்கலாம் என முடிவானது. யாரோ சினேகிதர்கள் மூலம் பேசி நல்ல சமையல்காரராகப் பிடித்துவிட்டதாக மாமா சொன்னபோது அத்தை ஏதோ புரிந்தவராகச் சலிப்போடு தலையில் அடித்துக்கொண்டார். கூடமாட உதவவும் சமையல்காரரை கண்காணிக்கவும் நம்பிக்கையான ஆளைத் தேடுவதாக எப்போதோ மாமா அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். ஐந்து வெள்ளியைக்கூட என் கண்ணில் படாமல் ஒளித்துவைக்கும் அம்மாவுக்கு அப்போது மட்டும் நான் நம்பிக்கையின் சின்னமாக எப்படியோ தெரிந்து தொலைத்துவிட்டேன். “ரெண்டு மாசம் ஸ்கூல் லீவுல்ல சும்மாதான் திரியுறான். கூட்டிப்போ அவங்க அப்பாகிட்ட நான் சொல்லிக்கிறேன்…” என பலி கொடுத்தார்.

***

மாமாவின் ரெஸ்டாரன்ட் தாமான் கங்கோங்கில் இருந்தது. லுனாஸ் முழுவதும் பல குடியிருப்புகளுக்குக் கீரைகளின் பெயர்களைத்தான் வைத்திருப்பார்கள். மாமா வேறு ஒரு குத்தகையையும் எடுத்து நடத்துவதால் ஒவ்வொரு நாளும் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய முடியாது என்றும் உணவகத்தின் மேல் மாடியில் உள்ள அறையில்தான் நான் தங்க வேண்டி வரும் எனவும் கடைசி நிமிடத்தில் கூற அம்மாவை அனல் பறக்கப் பார்த்தேன். “அங்கனயே வச்சிக்கோ…” என வெளிப்படுத்திய ஒரு நமட்டுச் சிரிப்பில், அம்மா அனலில் குளிர் காய்கிறாள் எனப் புரிந்தது. துணி மூட்டையை எடுத்துக்கொண்டு மாமாவின் காரில் ஏறும்போது, “உள்ளுசிலுவார எடுத்துட்டியாடா? அப்புறம் அது இல்ல இது இல்லன்னு அடிக்கடி வீட்டுக்கு வராத. மாமா சொல்ற மாதிரி…” அதற்கு பிறகு அம்மாவின் வாயசைப்புதான் கேட்டது. கார் கதவை சாத்தியபின்பும் அம்மா வாயை அசைத்துக்கொண்டே இருந்தாள்.

ஏதோ உணவகத்தையே நான்தான் கட்டி ஆள வேண்டும் என்பதுபோலதான் மாமாவின் பேச்செல்லாம் இருந்தது. நான் மாமாவின் பேச்சுக்கு பதில் பேசவே இல்லை. அவரின் பிரமாண்டமான உருவத்துக்குப் பக்கத்தில் நானொரு சுண்டெலி. பள்ளியைப் பொறுத்தவரை நானும் ஒரு ரௌடிதான். வேறெந்த தனித்த திறனும் இல்லாத எனக்கு தாறுமாறாக கட்டிப்புரண்டு சண்டையிட நன்றாகவே வருகிறது என நண்பர்கள்தான் சொன்னார்கள். அதெல்லாம் என் ஒத்த வயது உள்ளவர்களிடம் மட்டும்தான்.

கரகரத்த விளக்கங்களுக்கு நடுவே அவ்வப்போது வாகனமோட்டிகளை தாறுமாறாக கெட்டவார்த்தையில் திட்டிக்கொண்டே வந்தார் மாமா. வேகமாக ஹாரண் அடித்தார். முறைப்பவர்களிடம் நடுவிரல் காட்டினார். யாரும் மாமாவை எதிர்க்க வர மாட்டார்கள். எதற்கும் துணிந்தவனின் முக சாயலையும் கண்களையும் உலகம் அறிந்தே வைத்திருக்கிறது. அதற்கான அத்தனை அங்க லட்சணமும் மாமாவிடம் இருந்தது. இன்னும் தெளிவாகச் சொல்வதானால் மாமா கொஞ்சம் மண்டை ஓடி.
மண்டை ஓடிகளுக்கென்று பொது குணம் சில இருக்கும். மண்டை ஓடிகள் அதிகம் சிரிப்பதுபோல அதிகம் கோவப்படுவார்கள். இரண்டிலுமே அவர்கள் எந்த எல்லையையும் தொடுவார்கள். பின்விளைவுகள் குறித்து மண்டை ஓடிகளுக்கு அதிக அக்கறை இருக்காது. எதிலும் ஒரு அலட்சியம் இருக்கும். தங்கள் உடல் ஏதோ கடினமான மூலப்பொருளால் செய்யப்பட்டது போலவே அதை உபயோகிக்கும் போது தீவிரம் காட்டுவர். குறிப்பாக வலிக்கு அஞ்சாதவர்கள். வலியை விளைவிக்கவும் தயங்காதவர்கள். எனவே பள்ளியில் நானொரு ரௌடி என்பதை மாமாவிடம் சொல்லி அவமானப்படாமல் மறைத்தே வைத்தேன்.

அதிகமான குண்டர்கள் இருந்த தாமான் கங்கோங்கில் மாமா போன்றவர்கள்தான் உணவகம் நடத்த முடியும். கடைக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால் தங்கள் நம்பருக்கு காசு கட்டச் சொல்லி குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் தொல்லைக் கொடுப்பது லுனாஸ் வணிக வீதிகளில் சாதாரணம்தான். நம்பருக்குப் பணம் கட்டாவிட்டால் அவர்களே ஆட்களை ஏவி அடாவடி செய்து எப்படியும் நம்பருக்குக் காசை கறந்துவிடுவார்கள். அப்புறம் மாதா மாதம் ஒரு தொகையைப் படியளக்க வேண்டும். மாமாவிடம் அதெல்லாம் செல்லாது. ஒரு கையில் மீ கோரிங் பிரட்டிக்கொண்டே மறுகையால் கழுத்தை எலுமிச்சை ஜூஸ் போடுவது போல பிழிந்துவிடுவார். அதைவிட, அதிகமாகச் சீனர்கள் மட்டுமே நடத்தும் பியர் வியாபாரத்தையும் மாமா உணவகத்தில் இணைத்துக்கொண்டார்.

சீனர்களுக்கு தங்கள் தொழிலில் ஒரு தமிழன் நுழைந்தால் பொறுக்காது. அவர்களின் குண்டர் கும்பல் கலாச்சாரம் இன்னும் விரிவானது; ஆபத்தானதும்கூட. தமிழர்கள் பாராங்கை வைத்து மிரட்டிக்கொண்டிருந்த சமயத்தில் அவர்கள் துப்பாக்கியைப் பயன்படுத்தத் தொடங்கியிருந்தனர். துப்பாக்கிகள் தாய்லாந்திலிருந்து மலிவாக அவர்களுக்குக் கிடைத்தன. இதனாலேயே தமிழர்கள் சீனர்களின் வணிகத்தில் நுழைய பயந்த சூழலில், மாமா தனக்கிருந்த பழைய செல்வாக்கைப் பயன்படுத்தி லைசன்ஸ் எடுத்து பியர் வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தியும் வந்தார். தொடக்கத்தில் சீனர்களிடம் சிற்சில மிரட்டல்கள் இருந்தாலும், மாமாவுக்குத் தமிழைப் போலவே சீனத்திலும் கொச்சை வார்த்தை பேசும் புலமை இருந்ததால் நக்கீரரிடம் அகப்பட்ட தருமி போல சீனர்கள் ஒடிந்து ஓடிவிடுவர். மாமா எதற்கும் விட்டுக்கொடுக்காதவர். அஞ்சாதவர்.
அப்படிப்பட்டவர், ஒருவரை வேலைக்கு எடுக்கிறார் என்றால் சும்மாவா? விச்சுவைப் பற்றி சொல்வதற்கு முன் கடையின் பூகோளம், வரலாறு, அறிவியல் , கணிதம் போன்றவற்றை தெளிவுபடுத்துவதுதான் உத்தமம்.

கடை சிறியதுதான். ஆறு பேர் அமரும் ஐந்து மேசைகள் போட்டாலே கடை நிறைந்துவிடும். தண்ணீர் கலக்க ஓர் இந்தோனேசியப் பெண் இருந்தாள். அவள் தினக்கூலி. உணவெல்லாம் கொடுத்து நாளைக்கு ஐந்து ரிங்கிட் சம்பளம். காலை, மதியம், இரவு என மூன்று வேளை கடையைச் சுத்தம் செய்ய ஒரு வங்காள தேச இளைஞன் வந்து செல்வான். அவனுக்குக் கூலியெல்லாம் இல்லை. வேலையை முடித்துவிட்டு, எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுச் செல்லலாம். சமையலுக்குத் துணையாகக் காசி எனும் ஒருவர் வருவார். அவர் யாரிடமும் பேச மாட்டார். வாய் திக்கும். ஏதாவது கேட்டுவிட்டால் வேலையை வைத்துவிட்டு ஒரு மணி நேரமாவது பதில் சொல்ல திணறுவார். வேலை கெடும் என்பதால் யாரும் அவரிடம் ஒன்றும் கேட்பதில்லை. அவரும் சொல்வதில்லை. ஒரு மணியோடு மதிய சமையலுக்கு உதவி செய்துவிட்டு, வயிறார உண்டு ஒரு பொட்டலமும் கட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார். மதிய உணவுக்குப் பின் அதிகமாகக் கூட்டம் வராது. அதோடு வெயில் அமர்ந்தபின் மீ கோரிங், நாசி கோரிங் போன்ற பிரட்டல் வகைகளைச் சாப்பிட கூட்டம் கூடும். மாலை தோய்ந்து இரவு நெருங்கும் நேரம் பியர் வாடிக்கையாளர்கள் முற்றுகையிடுவார்கள்.

பெரும்பாலும் மாமா மாலை நெருங்குவதற்குள் வந்துவிடுவார். மீ கோரிங் பிரட்டுவதில் அவர் மாஸ்டர். இரவில் கடை முழுமையாக அவர் ஆளுகைக்குள் வந்துவிடும். நெருக்கமான வாடிக்கையாளர்களோடு அமர்ந்து அவரும் பீர் குடிப்பார்; சிரிப்பார்; அடிப்பார். மாமா இல்லாத நேரங்களில் எல்லாம், கடையின் முழு கட்டுப்பாடும் விச்சுவிடம்தான் இருந்தது.

நான் கடையில் இறங்கியபோது சரியாக மதியம் சுட்டெரிக்கும் நேரம். சமையல் தடபுடலாக நடந்துகொண்டிருந்தது. பொதுவாகப் பள்ளியில் ஒவ்வொரு வருட தொடக்கத்திலும் நமது பெயர், ஊர் இன்னும் சில இத்தியாதிகளைச் சொல்லிய பின்பே பாடங்கள் கற்பிக்கப்படும். உணவகத்தின் ஒரு புதிய அங்கத்தினரான என்னை எப்படி அறிமுகம் செய்துகொண்டு எங்கிருந்து வேலையைத் தொடங்கலாம் என பல கற்பனைகளுடனும் முன்னேற்பாடுகளுடனும் சென்ற என்னை “டேய் கறுப்பட்டி இந்த வெங்காயத்த உரி” என விச்சு ஒரு பேசினை கையில் திணித்துவிட்டுப் போனார். யாரும் எதையும் கண்டுகொள்ளவில்லை. மாமா எதையும் காதில் வாங்காதது போல கல்லாவில் சில்லறையை மாற்றி கொட்டிவிட்டு கிளம்பினார். கண்ணீர் வெங்காயத்தால் வருவதாக அவர் அப்போது நம்பியிருக்கலாம்.

வெங்காயம் உரித்து எனக்கு பழக்கமில்லாத படியால் அதிகமாகவே காயப்பட்டிருந்தது. விச்சு வெங்காயத்தை எடுத்து பார்த்துவிட்டு “உம் மூஞ்சவா செதுக்கச் சொன்னேன்…” என நறுக்கி சட்டியில் போட்டார். காய்ந்த சட்டி உஷ்ஷ்ஷ் என வேகமாகவே சத்தமிட்டது. அந்தச் சத்தத்தினுள்ளே விச்சு என்னைப் பார்த்து ஏதோ சொல்ல உதவி சமையல்காரன் திக்குவது போலவே விக்கி விக்கி சிரித்தார். அவ்வாறு சிரிக்கும்போது என் முகத்தை ஆழ்ந்து பார்ப்பது என்னவோ போல் இருந்தது. கொஞ்ச நேரம் வேறெங்காவது திரும்பி பின் அவரை மீண்டும் பார்த்தேன் இன்னமும் என்னைப் பார்த்து காசி சிரித்துக்கொண்டிருக்கவே உணவகத்தின் முன்புறம் சென்றேன். மாமா காரில் வரும்போது சொன்ன சில வேலைகளை மீட்டுணர்ந்து மேசைகளைத் துடைக்கத் தொடங்கினேன். ஈக்கள் அண்டாமல் இருக்க டெத்தோலை இணைத்தேன். கூட்டம் வரத்தொடங்கியபோதுதான் நான் அதுவரை அனுமானிக்காத புதிய பிரச்னை தலைகாட்டியது.

***

பள்ளியில் நானொரு ஹீரோவாகும் தகுதி கொண்டவன்தான். எந்த நேரமும் முறைத்த முகத்துடன் இருக்கும் என்னிடம் பேச பொதுவாகவே சில தோழிகள் தயங்குவார்கள். ஆனால் நான் உண்மையில் கோபமாக இருப்பதில்லை. அப்படி முகத்தை வைத்துக்கொள்ளாவிட்டால் எதிரிகள் எளிதாக நெருங்கி தாக்கிவிடுவார்களோ என்ற பயம்தான் அப்படி இருக்கவைத்தது. உண்மையில் எனக்குள் எப்போதுமே மைக் மோகனின் ஏதாவது ஒரு பாடல் உற்சாகத்தோடு ஒலித்துக்கொண்டே இருக்கும். எல்லாமே மெல்லிசைப் பாடல்கள்தான். இப்படி மல்டிப்பல் பர்சனாலிட்டி டிசோடர் மனநிலையோடு வாழ்ந்த எனக்கு கனகாவைப் பார்த்தால் மட்டும் தாடி வளர்த்த மோகன் காதல் ஏக்கத்தோடு பாடும் பாடல் இசையோடு கேட்கும்.

கனகாவைப்பற்றி எந்தத் தகவலும் திரட்ட முடியாமல் திணறிய எனக்கு, அவளுக்கு இரண்டு அண்ணன்கள், அப்பா வலுக்கை, அவள் அப்படியே அம்மா ஜாடை என பல சங்கதிகள் அந்த ரெஸ்டாரன்டில் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே கை நுனிக்கு வந்தன. ரெஸ்டாரன்டில் என்னைப் பார்த்த கனகா ஒரு வினாடி மட்டும் ஆச்சரியத்தை காண்பித்து பின்னர் அவள் அண்ணனின் கைத்தொலைபேசியை பலவந்தமாக வாங்கி அதற்குள்ளேயே முகம் புதைத்தாள். பதற்றத்தில் முகத்தை எங்கே வைப்பது எனத் தெரியாதவர்களுக்கு இதெல்லாம் ஒரு உத்திதான் என பல வருட ஆய்வுக்குப் பின் நான் அறிந்து வைத்திருந்த படியால் அவளது அன்றைய தடுமாற்றம் உவப்பானதாகவே இருந்தது. நான் இந்த ரெஸ்டாரன் உரிமையாளரின் மச்சான், எனக்கு சகல விதத்திலும் இங்கே அதிகாரம் உள்ளது, மற்றவர்களை போல நான் ஒரு சாதாரண தொழிலாளியல்ல எனும் தகவல்களை அவளிடம் எப்படித் தெரிவிப்பது என யோசித்துக்கொண்டிருந்தபோதுதான் “டேய் கறுப்பட்டி… என்னாடா நிக்கிர… ஆர்டர் எடுக்கத் தெரியாதா?” என உள்ளிருந்து விச்சு கத்தினார். கனகா குடும்பத்தில் எல்லோரும் கொஞ்சமாகச் சிரித்து வைத்தார்கள். கனகா மட்டும் உதடுகளை வாய்க்குள் முழுசாகத்தள்ளி சிரிப்பை அடக்கினாள். அவள் கண்கள் கைத்தொலைபேசியை விட்டு அகலவில்லை.

எனக்கு உடம்பெல்லாம் கூசியது. ஒரு பெரும் கூட்டத்தின் முன் நிர்வாணமாக நிற்பது போன்ற அவமானம். இது போன்ற சமயங்களில் என்ன செய்வதென எனக்குத் தெரியும். சட்டென முகத்தை சீரியஸாக்கிவிட வேண்டும். நான் பிறந்ததிலிருந்தே சிரிப்பதில்லை என்பது போலவும் இதெல்லாம் எனக்குச் சகஜம் என்பது போலவும் பாவனை செய்ய வேண்டும். கொஞ்சம் தளர்ந்தாலும் அசடு வழிவது அம்பலமாகிவிடும். யார் முகத்தையும் பார்க்காமல் விறுவிறுவென ஆர்டர் எடுத்து உடனே மேலே சென்றுவிட நினைத்தேன். கொஞ்ச நேரம் தனிமையில் இருந்தால் தேவலாம் எனப்பட்டது. விச்சு என்னைக் கறுப்பட்டி என அழைக்கும்போது மேசையில் இருந்த ஒவ்வொருவரும் எப்படி சிரித்தார்கள் என்றும் அவ்வாறு சிரிக்கும் போது அவர்கள் என்னென்ன நினைத்திருப்பார்கள் என்றும் மனதில் ஒருதரம் ஓட்டிப் பார்க்க வேண்டும். முகத்தை நன்றாக கழுவி அவமானத்தை தண்ணீர் ஊற்றி அடித்துவிடவேண்டும். எங்கிருந்தோ வந்த கூட்டம் அவமானத்தை உணரக்கூட அவகாசம் இல்லாமல் செய்தது.

வாடிக்கையாளர்கள் இலையில் சோற்றைப் பரிமாறக்கேட்டதால் தப்பித்தேன். உண்டு முடிந்ததும் அப்படியே சுருட்டி குப்பைத்தொட்டியில் வீசி விடலாம். தட்டில் சாப்பிட்டால் எச்சில் மங்கை கழுவும் பொறுப்பு எனக்கு வந்து சேரும். முதலில் நான் அந்த வேலையை மறுக்கவே செய்தேன். அதை செய்யாவிட்டால் நான் உணவகத்தின் முன்புறம் நின்று வாடிக்கையாளர்களிடம் ஆர்டர் எடுத்தாக வேண்டும். அதில் பிசகு ஏற்பட்டால் வசை விழும். கூடவே விச்சு வேறு ‘கறுப்பட்டி’ என அழைத்து மானத்தை வாங்குவார். இப்படி அவமானப்படுவதைவிட யார் கண்ணிலும் படாமல் மங்குகளைக் கழுவி தொலைவது மேலென பட்டதால் குசினியிலேயே இருந்துவிட்டேன். தொடக்கத்தில் எச்சில் மங்கை கழுவுவது அருவருப்பாகதான் இருந்தது. பின்னர் அதுவே ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் மனநிலையும் அறிந்துகொள்ளும்படி செய்தது.

சில பிளேட்டுகள் நாக்கால் நக்கி எடுத்ததுபோல கழுவாமலேயே பளபளவென இருக்கும். சிலவற்றில் மீன் முள் முழு தலையுடன் இருக்கும். சில மீன்களுக்குத் தலையே இருக்காது. வயதானவர்களின் பிளேட்டுகளில் மிஞ்சும் கோழித்துண்டுகள் பாதியில் பிரேத பரிசோதனையை முடித்துவிட்டு வந்த பிணம் போல காட்சியளிக்கும். குழந்தைகளின் தட்டுகளில் பெரும்பாலும் காய்கறிகள் மீந்திருக்கும். இள வயது பெண்கள் பிளேட்டில் சோற்றை கொஞ்சம் மிச்சம் வைப்பதை கௌரமாகக் கருதினார்கள் என்றே தோன்றியது. இளைஞர்களின் பிளேட்டுகளில் பெரும்பாலும் சிகரெட் சாம்பல் இருக்கும். இப்படி எச்சில் பிளேட்டிலேயே சமூக ஆய்வை மேற்கொள்ளும் அளவுக்கு மாலை வருவதற்குள் அந்த வேலை எனக்கு நெருக்கமாகியது.

உடல், மனம் இரண்டும் சோர்ந்த நிலையில்தான் படுத்ததாக ஞாபகம். திடீரென முகத்துக்கு நேராக ஒளியின் அசூயை தெரிய மெல்லியதாகக் கண்களைத் திறந்தேன். விச்சு தன் கைத்தொலைபேசியால் என் முகத்தை பார்த்துவிட்டு பின்னர் ஏதோ தனக்குள்ளாகப் பேசிக்கொண்டு என் பக்கத்தில் படுத்துவிட்டார். அவரும் இதே அறையில்தான் தங்குகிறார் என்பதே அப்போதுதான் தெரிந்தது. அறையை முதலிலேயே ஆராயாமல் விட்ட எரிச்சலுடன் மெல்ல போர்வைக்குள்ளிருந்து தலையை நீட்டிப் பார்த்தேன். தலையணை, போர்வை, என ஒன்றும் இல்லை. வெறும் உள்ளுசிலுவாருடன் மல்லாக்காப் படுத்திருந்தார். கைகள் தலையணையாகி இருந்தன. அன்றைக்குப் பயன்படுத்திய உடைகள் கம்பியில் காய்ந்துகொண்டிருந்தன. எனக்கு அவர் பக்கத்தில் படுக்கவே அருவருப்பாக இருந்தது. இரவு முழுவதும் ஏதோ உளறிக்கொண்டே இருந்தார். நல்ல போதையில் இருக்கிறார் என வாடையில் தெரிந்தது. என்னை ஏதும் செய்துவிடுவாரோ என தேவையில்லாத சந்தேகம் வந்து நான் சற்று நகர்ந்தே படுத்தேன். கால்சட்டைக் கயிறை இன்னும் இறுக்கிக்கொண்டேன்.

***

விச்சு இரண்டே ஜோடி உடைகள்தான் வைத்திருந்தார். அவருக்கென எந்த உடமையும் இல்லாதது ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் இரவில் தாமதித்துதான் படுக்க வருபவர் அதிகாலையில் எனக்கு முன்பாகவே எழுந்து கடைக்குள் செல்வார் . அதிகாலையில் கடையில் என்ன வேலை என சென்று பார்த்த போதுதான் திடுக்கிட்டேன். ரொட்டி சானாய்க்கு மாவு பிசைந்துகொண்டிருந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட ரொட்டிக்கு மாவு பிசைவதால் தரையில் பழைய பேப்பரை அகல விரித்து அதில் வேலைகள் நடந்தன. அப்போதும் அவர் உள்சிலுவாருடன்தான் இருந்தார். தீவிரமாக மாவு பிணையும் போது அவர் உடலிலிருந்து வெளிப்பட்ட வியர்வை மாவில் விழுந்து கலந்தது. கடந்த சில நாள்களாக காலை ஆகாரமாக நான் சாப்பிட்ட ஒட்டுமொத்த ரொட்டி சானாயையும் எப்படி ஒரே இரவில் வாந்தியெடுப்பது என தெரியாமல் தவித்தேன்.

வியாபாரம் செய்வதிலும் விச்சு சில நுட்பங்களைக் கையாண்டார். பழைய மீன் கறியுடன் புதிய கறியைக் கலந்துவிடுவார். யார் எப்போது கேட்டாலும் காலையில் போட்ட வடையை இப்போதுதான் சுட்டது எனவும் சூடு ஆறிவிட்டதாகவும் கூசாமல் கூறுவார். வாடிக்கையாளர்கள் தொட்டு சாப்பிடாமல் வைத்துவிட்டுச் செல்லும் சட்டினியையோ கறியையோ மீண்டும் பானைக்குள் கவிழ்த்துவிடுவார். உணவகத்தின் உணவுகள் ஒவ்வொன்றும் விச்சுவால் எனக்கு அந்நியமாகிக்கொண்டே வந்தன. எதையும் எடுத்து வாயில் வைப்பதற்கு முன்னர் அதன் அறிவியல் கூறுகளையும் வரலாற்றுப் பின்னணியையும் ஆராய வேண்டிய நிதானம் ஏற்படத்தொடங்கியது.

சபா மாமாவுக்கு விச்சுவின் சமையலும் வியாபார உக்தியும் உற்சாகம் கொடுப்பதாகவே இருந்தது. சில சமயங்களில் அவரை கொஞ்சம் அதிகமாகவே புகழ்வது எனக்கு எரிச்சலை மூட்டும். விச்சு, மாமாவிடம் அதிகம் பேசுவதில்லை. கொஞ்சம் அடக்கிதான் வாசிப்பார். ஆனால், மாமா இல்லாத சமயங்களில் அவர் கிண்டல் பேச்சு கடையையே அதிரவைக்கும்.

காசி அவரைவிட அதிக வயதானவராகத் தெரிந்தாலும், விச்சு அவரைப் பெயர் சொல்லிதான் அழைப்பார். சில சமயம் மிரட்டுவார். அவரது திக்குவாயைக் கிண்டல் செய்வார். காசிக்கும் பேச வேறு நாதியில்லை. சமையல் எல்லாம் முடிந்து இருவரும் ஒன்றாகத்தான் சாப்பிடுவார்கள். காசி திக்கித் திணறி தன் மனைவியின் நோய்மை பற்றி சொல்லிக்கொண்டிருப்பார். அவர் சொற்களைப் பேசி முடிப்பதற்குள் என்ன சொல்லவருகிறார் என விச்சு உணர்ந்து தகவலைச் சொல்லி சரிபார்த்துக்கொள்வார். சில சமயம் காசியுடன் சேர்ந்து திக்குவது போல பாவனை செய்வார். திக்கும் போது காசியின் முகம் அஷ்டக்கோணலாகிவிடும். விச்சுவின் ஆர்ப்பாட்டத்தில் அவர் இன்னும் அதிகம் தடுமாறிப்போவார். ஆனால் விச்சு தன்னைப் பற்றி ஒன்றுமே கூறி நான் கேட்டதில்லை. காசியை வீட்டிலிருந்து துரத்திவிட்ட இரண்டு மகன்களையும் தட்ட வேண்டுமா எனமட்டும் ஒரு சில முறை அவரிடமே அனுமதி கேட்டு, காசியின் பதற்ற பார்வைக்குப் பின் எரிச்சலாக ஏதாவது சொல்வார். நோய்மையில் இருக்கும் அவர் மனைவிக்கு ஒவ்வொரு நாளும் உணவகத்தின் எல்லா உணவுகளையும் பொட்டலம் கட்டிக்கொடுப்பார். கல்லாவில் அமர்ந்து வேவு பார்க்கும் என்னிடம், “என்னாடா… உங்க மாமா கிங்காங்கிட்ட சொல்லப்போறியா… சொல்லிக்கடா… போனா மசிரு” என்பார். நான் மாமாவிடம் இதையெல்லாம் சொல்ல நினைத்ததே இல்லை.

மாமாவுக்கு கிங்காங் என்ற பெயர் பொறுத்தமாக இருப்பதாகவே பட்டது. விச்சு எல்லாருக்குமே புனைப்பெயர் வைத்திருந்தார். காசியை டைப்பரேட்டர் எனதான் அழைப்பார். வாடிக்கையாளர்கள் முன் அவரை அவமானப்படுத்துவதில் விச்சுவுக்கு ஏக சந்தோஷம். அதேபோல அவர் மனைவி குறித்து விசாரிக்கும் போது ‘சட்னி’ என அழைப்பது முதலில் குழப்பமாக இருந்தது. பின்னர் ஒருநாள் அவரது இரண்டு கிட்னிகளும் செயலிழந்துவிட்டதால் கிட்னி சட்டினியாகிவிட்டதாகக் கூறி விச்சு அப்பெயரை அவருக்கு வைத்தார் எனத் தெரிந்தபோது விச்சுவின் மீது கோபம் அதிகரிக்கவே செய்தது. விச்சுவின் கிண்டல் சிரிப்பினூடே காசியும் ஒவ்வொரு தடவையும் வானத்தைப் பார்த்து “கூகூகூகூப்புட மாட்டுறான்” என அழுவார். அப்போதும் விச்சு அடங்காமல் “என்னா காசி குயிலு மாதிரி கூவுற… வியாபாரம் நடக்குற எடத்துல குயிலு வந்து கிந்து தொலைஞ்சிடப்போவுது… அப்புறம் கிங்காங் அதையும் சமைக்கச் சொல்லும்,” எனக் கிண்டலைத் தொடர்வார். மண்டை ஓடிகளுக்கு நிதானம்தான் இருக்காது; இரக்கம் கூடவா இருக்காது என கடுப்பாக இருக்கும். என்னிடம் இந்த அளவுக்கு அவர் குசும்புகள் அணுகாதது மட்டும் தற்காலிக நிம்மதியைத் தரும். அந்தச் சின்னசிறிய உணவத்தில் விச்சுவின் கண்களில் அதிகம் படாமல் இருக்கும் உக்தியை ஒருவாரத்திற்குள்ளாகப் பழகிக்கொண்டேன். ஆனால் விச்சு கிண்டல் பேச்சு பேசாமல் இருப்பதும் ஆபத்துதான்.

மதிய உணவுக்குப் பின்பான நேரங்களில் இளைஞர்கள் கூட்டம் டீ, காப்பி சாப்பிட கடைக்கு வருவது வழக்கம். பணச்செழிப்பு அவர்கள் பேச்சிலும் தோற்றத்திலும் இருக்கும். பெரும்பாலும் ஆங்கிலம் அதட்டல் தொணியில் வந்து விழும். விச்சுவுக்கு அவர்களைப் பிடிக்காது. இயல்பாக அவர்களிடமிருந்து வந்துவிழும் அதிகாரத்தொணியால் எரிச்சலாகி விடுவார். ஆனால், ஒருவார்த்தைக் கூட அவர்களிடம் சொற்களைச் செலவளிக்காமல், தண்ணீர் கலக்கித் தர முன்வருவார். நுரை பொங்க டீ கலக்கி, அதில் எச்சிலைத் துப்புவார். சுவைத்து பருகி காலியாக வைக்கப்படும் கிளாஸைப் பார்க்க எனக்குப் பாவமாக இருக்கும். விச்சு மேசை ஓரம் அமர்ந்துகொண்டு காட்சியை ரசித்துக்கொண்டிருப்பார். இப்படி விச்சுவின் எச்சிலைக் குடித்து வளர்ந்த இளைஞர்கள் நிறையபேர் லுனாஸில் உலாவிக்கொண்டிருந்தனர்.

விச்சுவை நேரடியாகப் பகைத்துக்கொள்வதால் இதுபோன்ற அணுவாயுத தாக்குதலுக்குள் சிக்கலாம் என்பதால் அவரைப் பொறுத்துப்போவதை தவிர என்னிடம் வேறு வழி இருக்கவில்லை.

***

நான் கொஞ்ச கொஞ்சமாக ரெஸ்டாரன்டின் நடைமுறைக்கு பழக்கமாகி இருந்தேன். வெள்ளை துணியை ஈரம் செய்து விசிர கொடுத்த பயிற்சியின் அடிப்படையில் ரொட்டிச்சானாயை விசிர பழகியிருந்தேன். கொஞ்சம் காப்பித்தூளைச் சேர்த்தால் தே தாரேக் ருசி கூடும் என்பது தொடங்கி, மீ கோரிங்கில் கொஞ்சம் பழைய மீன் கறி சேர்த்தால் வாடிக்கையாளர்களின் நாக்கு நமக்கு அடிமையாகிவிடும் என்பது வரை தொழில் ரகசியங்கள் புரிந்தன. இருந்தாலும் விச்சுவிடம் விலகி இருப்பது மட்டுமே எனக்கு பாதுகாப்பானதாக இருந்தது. இரவில் அவர் வருவதற்கு முன்பாகவே கண்களை மூடிவிடுவதால் போதையில் அவர் என்னிடம் பேச முயன்ற தருணங்களை நாசுக்காகத் தவிர்க்க முடிந்தது. காலையில் ரொட்டிச்சானாய்க்கு மாவு பிசைந்து வைத்தபின்தான் குளிக்க வருவார். நான் கண் விழிக்கும்போது அவர் குளித்துவிட்டு துண்டுடன் பிரசன்னமாவார். வெட்கமே இல்லாமல் முழு அம்மணமாக என் முன்னே ஏதாவது பேசிக்கொண்டு உடை மாற்றுவார். காலையில் அந்த தரிசனம் கிடைத்தபின்தான் என் பொழுதுகள் தொடங்கும்.

ஒருமுறை அவர் குளித்து வருவதற்குத் தாமதம் ஆகியதால், காத்திருக்கும் இடைவேளையை நிறைக்க அறையில் மூலையில் விழுந்துகிடந்த பலூனை எடுத்து ஊதினேன். பலூன் வண்ணமிழந்திருந்தது. கழிவறையிலிருந்து வெளிவந்த விச்சு, “இது ஏது?” என்றார் வழக்கம் போல. அறையின் மூலையில் கிடந்ததைச் சொன்னேன். “ஓ… என்னோட கொண்டோம்தான்… அதெல்லாம் நீ வரரதுக்கு முன்ன… இப்பதான் நந்தி மாதிரி நிக்கிறியே,” என பலூனை கால்களால் தட்டி பறக்க விட்டார். எனக்கு வாந்தி வந்தது. கழிவறைக்குள் சென்று நன்றாக வாயைக் கழுவினேன். அன்று முழுவதும் வாயின் அருவருப்பு போகவே இல்லை. எதையுமே சாப்பிடாமல் எச்சிலைத் துப்பிக்கொண்டே இருந்தேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டேன். கண்ணாடியைப் பார்த்தே பல நாள்கள் ஆனதுபோல இருந்தது. கறைகளுக்கு நடுவே என் கறுத்த முகம் தெரிந்தது. கன்னங்கள் ஒட்டிப்போயிருந்தன. அம்மா பார்த்தாள் அழுவாள்.

அம்மா நினைவு வந்ததும் பெரிதாக வேலை ஓடவில்லை. நாம் நம்மை நினைத்து கவலைப்படுவதை விட பிறர் எப்படியெல்லாம் நம்மைப் பார்த்துக் கவலையடைவார்கள் என்ற எண்ணமே அத்தனை சக்தியையும் அழித்துவிடுகிறது. அன்று இரவு முழுவதும் காலண்டரையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஏதாவது ஒன்றைச் செய்து உணவகத்தில் இருந்து ஓடிவிட வேண்டும் என்பதுதான் திட்டம். அடுத்த வருடம் படிவம் ஐந்து என்பதால் கொஞ்சம் முன்னேற்பாடு இருப்பதாகக் கூறி வீட்டுக்குச் சென்றுவிட்டால் அதற்குப் பின் இந்தப் பக்கம் தலையைக் காட்டத் தேவையே இல்லை. அன்று மாலை மாமா வந்தவுடன் நயமாக என் தேவையைச் சொல்லி வைத்தேன். மாதம் முடிய ஐந்து நாள்கள் இருப்பதாகவும் சம்பளம் வாங்கிக்கொண்டு செல்லும்படியும் கூறினார். எனக்கு உற்சாகம் பிடிபடவில்லை. விடுதலையோடு பணமும் கிடைப்பது எவ்வளவு குதூகலம். நான் நாள்களை எண்ணிக்கொண்டிருந்தேன்.

அதற்குப் பின் விச்சுவின் அடாவடிகள் என்னைப் பெரிதாக பாதிக்கவில்லை. டைப்பரேட்டர், சட்னி என அவர் கிண்டல்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. என் பெயரை வாடிக்கையாளர்கள் உட்பட கறுப்பட்டி என்றே அறியும் வகை செய்தார். பலர் எச்சில் டீயைக் குடித்து வியர்வை கலந்த ரொட்டிச்சானாயைச் சாப்பிட்டு மகிழ்ந்தனர். ஆறிப்போன பழைய வடையை புதுசென நம்பி சாப்பிடும் அப்பாவிக்கூட்டம் குறைந்தபாடில்லை. என்னை எதுவும் பாதிக்கவே இல்லை. நான் விடுதலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தேன். அதற்கான அவகாசம் இன்னும் இரண்டு நாள்கள் இருக்கும் போதுதான் விச்சு காணாமல் போனார்.

அதிகாலையில் வந்து அறையின் கதவை உடைப்பது போல மாமா தட்டியபோதுதான் விச்சு பக்கத்தில் இல்லாததை உணர்ந்தேன். அவர் படுக்கும் இடத்தில் கைப்பேசி மட்டும் கிடந்தது. கதவை திறப்பதற்குள்ளாகவே ஏதோ நடந்திருப்பதை அறிய முடிந்தது. மாமா அறையில் புகுந்து ஒரு தரம் எட்டிப்பார்த்தார். கைப்பேசியை எடுத்து பாக்கெட்டில் செறுகிக்கொண்டார். பின்னர் படிக்கட்டில் சாய்ந்துகொண்டு இந்தோனேசிய பெண்மணியை அழைத்து வேலைக்கு வர வேண்டாம் என கட்டளையிட்டார். அதேபோல கடை கழுவ வருபவனிடமும் சொன்னார். காசியை தொலைப்பேசியில் அழைத்தபோது, வேறு யாரோ எடுத்திருக்க வேண்டும். பெண்ணின் குரல் தெளிவாகக் கேட்டது. “அப்படியா… அப்படியா” என்று மட்டும் பத்து பதினைந்து முறை கேட்டிருப்பார். பின்னர், “இல்ல… எதையும் எடுக்கல… நான் கொடுத்த ஹெண்ட்போனையும் வச்சிட்டு போய்டான்” என்றார் நிதானமாக. பின்னர் ஒன்றும் பேசாமல் என்னிடம் ‘கிழம்பு’ என்றார். நான் வந்ததுபோலவே எல்லா உடைகளையும் மூட்டையில் கட்டிக்கொண்டேன். மாமாவின் பதற்றத்தில் பல் துலக்கக் கூட அவகாசம் இல்லை.

காரில் ஏறியபோது மாமாவின் முகத்தைப் பார்த்துகொண்டே இருந்தேன். அதில் எந்த சலனமும் இல்லை. மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு விச்சுவை விசாரித்தேன். “தெரியல… நேத்து அவன் கணக்குல போட்டு வச்சிருந்த அஞ்சி மாச சம்பளத்த மொத்தமா கேட்டு வாங்கினப்பவே சந்தேகம் வந்துச்சி… ”
“கண்டுபிடிக்க முடியாதா மாமா…”

“ஊருக்கே பொய் பேரு வைக்கிறவன்… அவனுக்கு வச்சிருக்க மாட்டானா? என்னான்னு தேடுறது… அது கிடக்கட்டும் ஏன் அவன தேடனும்? இனி அவனால புண்ணியமில்ல… காசி பொண்டாட்டிக்கு ஒரு கிட்னிய கொடுத்திருக்கான். அதுவும் அவன் செலவுலேயே. கண்ணு முன்னுக்கே உலாவிக்கிட்டு எப்படிதான் இந்த ஏற்பாடெல்லாம் செஞ்சானோ”

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மாமாவை அதற்கு மேல் பார்க்க முடியாமல் சாலையை நோக்கினேன்…

“அவனெல்லாம் மண்டை ஓடிடா… மண்டை ஓடிங்கள புரிஞ்சிக்கவே முடியாது”, சாலையில் குறுக்காகப் புகுந்த ஒரு மோட்டார் ஓட்டியிடம் மாமா நடுவிரலைக் காட்டினார்.

– மே 2014 (நன்றி: http://vallinam.com.my)

Print Friendly, PDF & Email
மலேசியாவில் கெடா மாநிலத்தில் உள்ள லூனாஸ் எனும் சிற்றூரில் பிறந்தேன். ஆரம்பப் பள்ளி வெல்லஸ்லி லுனாஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி. இடைநிலைப்பள்ளியும் லுனாஸில்தான். அப்பா மனோகரன். அம்மா பேச்சாய். இருவருமே வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள். அப்பாவின் வாசிப்பு தத்துவம் சார்ந்தது. அம்மா இலக்கியம். எனது சகோதரி எனக்கு முன்பே கதைகள் எழுதும் ஆர்வம் பெற்றிருந்தார். லுனாஸில் இருக்கும் போதே பத்திரிகைகளுக்கும் இதழ்களுக்கும் கதைகள் மற்றும் கவிதைகள் எழுதினேன். 16 வயதில் எம்.ஏ.இளஞ்செல்வன்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *