மச்சம் குறித்த முதல் அக்கறை அவனுக்கு வந்தது சில மாதங்களுக்கு முன் ஒரு திங்கள்கிழமை அதிகாலையில்தான். விடுமுறை முடிந்து அலுவலகம் கிளம்பவேண்டி முகச்சவரம் செய்ய கண்ணாடியைப் பார்த்தவனுக்கு நம்பவே முடியாத ஆச்சர்யம்,, சரியாக அவனது இடது கன்னத்தில் இதழ்களுக்கு மிக அருகில் சின்னதாய் ஒரு மச்சம்.
ஏதாவது அழுக்காயிருக்குமோ என ஒரு முறைக்கு இரண்டு முறை முகம் கழுவிப் பார்த்தும் அந்தக் கருப்பு அதே அழுத்தத்துடன் இருந்தபோதுதான் இது மச்சம் தானென நம்பவேண்டியதாகிப் போனது, அதெப்படி இருப்பத்தி ஆறு வயதிற்கு மேல் ஒரு மனிதனுக்கு புதிதாக மச்சம் வளர முடியும்… ஆச்சர்யந்தான். சில நிமிடங்கள் ரொம்பவே பெருமையாக அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். நண்பர்கள் தனக்குத் தெரிந்தவர்கள் எவருக்கும் அந்த இடத்தில் இவ்வளவு வசீகரமாய் மச்சம் இருந்ததில்லை. ஒருவிதமான கர்வம் முகத்தில் ஏறிக்கொள்ள வழக்கத்திற்கு மாறான உற்சாகத்துடன் முகச்சவரம் செய்து அலுவலகம் கிளம்பினான்.
அவன் கவனித்த மச்சத்தை மற்றவர்கள் கவனிக்க இன்னும் இரண்டு நாட்கள் தேவைப்பட்டது. உண்மையில் யாராவது அதுகுறித்து கேட்பார்களாவென அவனாகவே எதிர்பார்த்து ஒருவரும் கேட்கவில்லை என்றானதும் ஒருவருக்கும் அது தெரிந்திருக்கவில்லையோ என பேசும் போது கொஞ்சம் நெருக்கமாக சென்று பேசினான். அப்படியும் பலன் இல்லை, ஒருவேளை கவனித்தும் கேட்க என்ன இருக்கிறதென விட்டுவிட்டார்களோ? எப்படி இருந்தாலும் இந்த மச்சம் கொஞ்ச விசேசமானதுதான் இல்லையா? இத்தனை அழகாய் இத்தனை வயதிற்குமேல் ஒரு மச்சம்.
மற்ற எவருக்கும் இல்லாத ஆர்வம் இவனுக்கு தன் மச்சம் குறித்து ரொம்பவே அதிகமானது. தனது கேபினுக்குப் பக்கத்துக் கேபினில் இருக்கும் நந்துவிடம் தான் முதலில் கேட்டான்.. அவனுக்கு அதுவொன்றும் விசேசமாய்த் தெரியவில்லை… “இல்ல மச்சான்… ரெண்டு நாள் முன்னவர அந்த இடத்துல இப்படி ஒரு மச்சமே இல்ல… திடீர்னு பாக்கறேன்… க்யூட்டா சின்னதா ஒரு மச்சம்…” நந்துவுக்கு இந்த விளக்கங்கள் எதிலும் அவ்வளவு சுவார்ஸ்யங்கள் இல்லை. இவனிடம் பேசியபடியே அலைபேசியில் இரண்டு கேபின் தள்ளி இருக்கும் தனது காதலியிடம் காஃபி சாப்பிட வரச் சொல்லி குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்தான்… அவள் வேலையாய் இருப்பதாய்ப் பதிலனுப்ப வேறு வழியே இல்லாமல் “its not so special தாமு… இந்த மாதிரி அப்பப்போ வரும்னு நான் ஒரு புக்ல படிச்சிருக்கேன்… நீதான் அதப் பெருசா ஹைப் பன்ற…” சொல்லிவிட்டு வேலை அதிகம் இருப்பவனைப் போல் கணினித் திரையைக் கவனமாகப் பார்த்தான்… தாமுவுக்கு நந்துவின் குரலில் இருந்த பொறாமையைப் புரிந்து கொள்ள முடிந்தது… இருக்கட்டுமென சிரித்தபடி அவனிடமிருந்து விலகி வந்தான்.
தனது அலைபேசியிலும் மடிக்கனினியிலும் வெவ்வேறு நிலைகளில் தனது முகத்தை படமெடுத்து அதனை அழகாக வடிவமைத்து அந்த மச்சத்தை ரசிக்கத் துவங்கினான். சாலையில் அலுவலகத்தில் வீட்டில் கழிவறையில் சமயங்களில் தியேட்டர்களின் கழிவறைகளிலென அவனது இந்த மச்சத்தைப் படம் பிடிக்கும் ஆர்வம் மட்டற்றுப் போய்க் கொண்டிருந்தது… ஒருநாள் குளிப்பதற்கு முன்பு இருபது நிமிடங்களுக்கும் மேலாய் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருந்த போதுதான் அந்த மச்சம் சின்னதாய் வளர்ந்திருப்பது தெரிந்தது. அவனால் நம்பமுடியவில்லை. இது எப்படி சாத்தியம்?… மச்சம் ஒரு மனிதனுக்கு வளருமா? அவன் அந்த மச்சத்தை அளந்து விடுவதென முடிவு செய்தான்.. ஆனால் அதற்கான உபாயம் எதுவும் கிடைத்தமாதிரியில்லை. தனது சுட்டுவிரலால் தொட்டு அடையாளம் காண முதலில் முயன்றான். தோராயமாகக்கூட கணக்கிட முடியவில்லை. பிறகு டவலோடு போய்த் தனது அலைபேசியை எடுத்து வந்தவன் முகத்தை நெருக்கமாக வைத்துப் படம் எடுத்தான். அந்த மச்சம் கருத்த முத்துப் போல் அழகாயிருந்தது. இனி தினமும் இதுபோல் மச்சத்தை குளிப்பதற்கு முன் படமெடுத்துக் கொள்வதென முடிவு செய்து கொண்டான். அவன் குளித்து முடித்து கிளம்பும்போதுதான் உரைத்தது இந்த நேரத்திற்கு அலுவலகத்திலிருந்து வரும் வாகனம் போயிருக்குமென. அடித்துப் பிடித்து பேருந்தைப் பிடிக்க ஓடியவனை அவனது அறை நண்பர்கள் வினோதமாய்ப் பார்த்தனர். சமீபமாய் தனது அழகு குறித்து அவன் அதிகம் அக்கறை கொள்கிறானென அவர்களுக்கும் சின்னதொரு சந்தேகம் இருந்தது, ஆனால் அதனை ஒருவரும் பொருட்படுத்தி இருக்கவில்லை. ஏதாவது பெண்களின் மேல் கொண்ட விருப்பாய் இருக்கலாம் என இயல்பாய் எடுத்துக் கொண்டனர்.
பேருந்தில் அப்படி ஒன்றும் கூட்டமில்லை. பயணச்சீட்டு எடுத்துக் கொண்டு உள்ளே கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்தவனுக்கு அலுவலகம் போகும் வரை என்ன செய்வதனெத் தெரியவில்லை. பக்கத்தில் யாரிடம் என்ன பேச முடியும்? அமைதியாய் வெளியில் சாலையைக் கவனித்தான். சுவார்ஸ்யம் இல்லை. பேருந்தில் சொல்லிக் கொள்கிற மாதிரியான யுவதிகளும் இல்லை. கடைசியாய் தனது மச்சத்தின் நினைவு வந்தது, காலையில் பார்த்ததற்கு கொஞ்சம் வளர்ந்திருக்குமோ என சந்தேம். கண்ணை மூடித் தொட்டுப் பார்த்தான். மூடிய கண்களுக்குள் கணக்கிட எத்தனிக்கும் பிரயத்தனம்.
இன்னும் அதே அளவில் இருப்பதாகத்தான் பட்டது. அவனுக்கு திருப்தியாய் இல்லை. தனது அலைபேசியை எடுத்துக் கொண்டவன் முகத்தை வெவ்வேறான நிலைகளில் வைத்து படம் எடுத்தான். சுற்றி இருந்த ஒன்றிரண்டு பேர் அவன் நடவடிக்கைகளை சில நிமிடங்களாகவே கவனித்தபடியிருந்தனர்… இவன் நின்று கொண்டிருந்ததற்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த நாற்பது வயது மதிக்கத்தக்க பெண் எதிர்பாராததொரு நொடியில் தனது காலணியால் அவனை சராமாரியாய் அடிக்கத் துவங்கிவிட்டாள்.
“யூ ராஸ்கல்… பாத்தா படிச்சவன் மாதிரி இருக்க… போற வார பொம்பளைங்கள போஃட்டோ எடுக்கற… உன் அக்கா தங்கச்சிய எடுடா… பிளடி பாஸ்டர்ட்,….”
அந்தப் பெண் அடிக்கத் துவங்கியதுமே சுற்றி இருந்த இன்னும் சிலரும் அந்த்த் திடீர் தாக்குதலில் சேர்ந்து கொண்டனர்.
எதிர்பாராதவிதமாய் அடிவாங்கின அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாதவனாய் தாமு “மேடம் ..நான் யாரையும் போஃட்டோ எடுக்கல.. ப்ளீஸ்.. நம்புங்க.. நான் எடுக்கல…” முதலில் கொஞ்சம் சத்தமாக முனகினான். பிறகு அவன் கேட்க முடியாத அளவிற்கு அவனை அடித்தனர்… சட்டை கிழிய நின்றவனைப் பார்க்கையில் நடத்துனருக்க்குக் கொஞ்சம் பரிதாபமாகவே இருந்தது,
“இன்னாய்யா மன்ஷன் நீ… பாத்தா டீசண்ட்டாக்கீற… இன்னா வேல இதெல்லாம்…”
கொஞ்சம் கோபமாகவே அவன் கேட்டான். தாமு ,மூஞ்சியில் ரத்தம் கட்டிப் போனதை அமுக்கிப் பிடித்தபடியே தனது அலைபேசியை நடத்துனரிடம் குடுத்து
“இதுல நீங்களே பாருங்க ஸார்… என் மூஞ்சியத் தவிர வேற யார் மூஞ்சியாவது இருந்தா என்னய செருப்பாலயே அடிங்க…..”
நடத்துனர் அலைபேசியை வாங்கிப் பார்த்தான். தாமுவின் வெவ்வேறு கோண முகங்கள் அப்படியும் இப்படியுமாக இருந்தது. வேறு யாரின் போஃட்டோவும் இல்லை. நடத்துனரோடு சேர்த்து இன்னும் சிலரும் வாங்கிப் பார்த்தனர்.
“இன்னா மெண்டலாய்யா நீ… பஸல சூத்த மூடினு வர வேண்டிதான.. உன் மூஞ்சப் போஃட்டோ புடிக்கிறதுன்னா வூட்ல வெச்சிப் புட்ச்சிக்கோ… பஸ்ல புட்ச்சா எல்லாம் தப்பாத்தான் பூவும்ம்…”
சுற்றி இருந்த ஒன்றிரண்டு பேர் இறங்கி வர
“அது இல்லைங்ண்ணா… இதோ இருக்குது பாருங்க… ( தனது மச்சத்தைத் தொட்டுக் காட்டியவன் ) இந்த மச்சம் மூணு நாளா கொஞ்சம் கொஞ்சமா வளந்துட்டே இருக்கு… அதனாலதான் அப்பப்ப செல்போஃன்ல போஃட்டோ எடுத்துப் பாக்கறேன்…”
எல்லோரும் தன்னை சந்தேகத்தோடு பார்ப்பதைப் பார்த்து நாள் வாரியாக தனது முகத்தை அவர்களுக்குக் காட்டினான்… பத்து நாட்களுக்கு முன் மச்சமே இல்லாத ஒரு இடத்தில் திடீரென மச்சம் இருப்பதைப் பார்த்து எல்லோருக்குமே ஆச்சர்யம். இவனிடம் என்ன சொல்வதெனத் தெரியவில்லை.
தாமுவிற்கு நடந்த எதுவும் ஒரு பிரச்சனையே இல்லை. அந்தப் பெண்ணிடமே அலைபேசியைக் குடுத்து
“நீங்களே கொஞ்சம் பாருங்க மேடம் ப்ளீஸ்.. காலைல இருந்ததுக்கு இப்பக் கொஞ்சம் பெருசாகிடுச்சுல்ல…”
அந்தப் பெண் மலங்க மலங்கப் பார்த்தாள். என்ன சொல்வதெனத் தெரியாத பதட்டம் வேறு… வரிசையாய் மூன்று நான்கு குசுக்கள் விட்டாள். சத்தமான குசு… இவன் விடாமல் கேட்டான் “சொல்லுங்க மேடம் ப்ளீஸ்…”
அவள் இவனிடமே அலைபேசியைக் குடுத்துவிட்டு அவசரமாய் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டாள்.
வனாந்திரத்தின் எல்லையில் தெரியும் அபூர்வமான வெளிச்சமென அவன் தனது தனித்த அடையாளமாய் அந்த மச்சத்தை நினைத்துக் கொண்டான்.
அவன் நண்பர்கள் தாமுவை மச்சக்காரன் என்றுதான் அழைத்தனர்//
அவனது நண்பர்கள் அந்த மச்சத்திற்கு ஆயிரம் காரணங்களை தங்களுக்குள் அவர்கள் சொல்லிக் கொண்டாலும் நந்து இது வெறும் ஏமாற்று வேலை என்று தெளிவாக நம்பினான். “see guys .. அதெப்படி ஒருத்தனுக்கு மச்சம் தன்னப் போல வரும்… வந்ததோடு இல்லாம தினமும் பெரிசாகும்?… சுத்த ஏமாத்து வேல…. இவன் ஏதோ பண்றான்…:”
“இதில என்னடா கெடச்சிடப் போகுது…”
நந்து இந்தக் கேள்விக்கு சாமர்த்யமான ஓரளவு உண்மையுமான பதிலைச் சொன்னான்.
“இந்த மச்சம் மேட்டர் வர்றதுக்கு முன்னால் நம்ம ஆஃபிஸ்ல அவனப் பத்தி எதாவது யாராவது பேசி இருக்கமா? அவன் center of attaraction க்காக இப்படி எல்லாம் செய்றான்… ராஸ்கல்..”
நந்து இப்படி கோபமாக பேசும் சில சமயங்களில் மட்டும் அவனோடு சிலர் ஒத்துப்போயினர். மற்றபடி அவர்களைப் பொறுத்தவரை அது நிஜமான மச்சந்தான். ஆனால் அதற்குப் பின்னால் ஏதோ பிரச்சனை இருக்கிறது. அப்படியானதொரு பிரச்சனை அவனுக்கு இருப்பதற்காய் சிலர் வருத்தப்படவும் செய்தனர். ஒருவரும் அது குறித்து தாமுவிடம் நேரடியாய்ப் பேசியிருக்கவில்லை,. குறுஞ்செய்தி அனுப்பும்போது மட்டும் எல்லோரும் சொல்லி வைத்தாற்போல் “ஹாய் மச்சக்காரா என நலம் விசரித்தனர்..” தனக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரமாய் அதை எடுத்துக் கொண்டான். அந்த மச்சம் வளர்வதை தனது குழந்தை தன்மீதே வளரும் பூரிப்போடு கவனித்ததோடு அழகழகான படங்களும் எடுத்துக் கொண்டான்.
மனம் பூரிக்க பூரிக்க மச்சமும் பூரித்தது. இதழ்களிலிருந்து சற்றுத் தள்ளி இருந்த மச்சம் இதழைத் தொடுகிற அளவிற்கு வளர்ந்த நாளில்
தனது நெருக்கமான நண்பர்களுக்கு மட்டும் விருந்து வைத்தான். யாரிடமும் விருந்திற்கான காரணத்தை சொல்லி இருக்கவில்லை.
2
ஒரு சனிக்கிழமை மாலை தன்னோடு பணியாற்றும் அலுவலக நண்பர்களுடன் அந்த விருந்து வைபவம் நிகழ்ந்தது. கிழக்கு கடற்கரை சாலையிலிருக்கும் ஒரு கடலோர விடுதியில் குடித்துக் கொண்டாடினார்கள். பதிமூன்று ஆண்களும் பனிரெண்டு பெண்களுமாய் மிக வழக்கமான இசை மிக வழக்கமாய் அருந்தும் மது… உணவுகளும் முத்தங்களும் கூட அப்படி வழக்கமானதொன்றே… ஆச்சர்யமான புதிய விசயம் தாமுவின் மச்சம் மட்டுமே. அவன் தனது நண்பர்களுக்குத் தரும் முதல் விருந்து அதுதான். அதற்கு முன் அவன் ஒன்றிரண்டு விருந்துகளுக்கு சென்றதுண்டு. அதில் பெரிய ஆர்வமெல்லாம் இருந்ததில்லை. ஆனாலும் யாராவது தன்னிடம் பேசிப் பழகி நண்பர்கள் ஆகிவிடமாட்டார்களா என்கிற ஏக்கம் தான். அவனைக் கொஞ்சம் பட்டிக் காட்டுக்காரனாகவேதான் மற்றவர்கள் எப்போதும் கவனித்தனர். இந்த மச்சம் வளர்ந்த நாளிலிருந்துதான் அவன் எல்லோராலும் கவனிக்கப்பட்டான். அவனிடமும் பேச அவர்களுக்கெல்லாம் விசயமிருந்தது. விருந்து முடிந்து எல்லோரையும் அனுப்பி வைத்தபின் இரவு தனது மச்சத்தைப் பெருமையோடு பார்த்துக் கொண்டிருந்தான். உறக்கம் வந்த கனம் தெரியாமல் படுக்கயில் கண்ணாடியோடு சரிந்து கிடந்தவனுக்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் எந்தக் கவலையும் இருந்திருக்கவில்லை. பிற்பகல் வரையிலும் பேச்சு சத்தம் இல்லாமல் அவன் அறையைத் திறந்த நண்பர்கள் முகம் வரை இழுத்துப் போர்த்தி தூங்கிக் கொண்டிருந்த அவனை எழுப்பினர். அசந்து உறங்கிக் கொண்டிருந்தவன் போர்வையை விலக்கிப் பார்க்க எதிரிலிருந்தவன் பயந்து இரண்டு அடிகள் தள்ளி நின்றான்…
கண்கள் விரிய “என்னடா ஆச்சு தாமு?…”
தூக்கத்தில் தாமுவுக்கு ஒன்னும் புரியவில்லை.
‘எனக்கென்னடா நல்லாத்தான இருக்கேன்…”
படுக்கையில் கிடந்த கண்ணாடியை எடுத்து தாமுவிடம் அவன் காட்டினான். தாமு கண்களைத் துடைத்தபடி ஆசையாக தனது மச்சத்தைப் பார்க்கப் போக தனது முகத்தின் இடது கன்னம் முழுக்க மச்சம் விரவி கருப்பு நிறமாயிருந்தது. அது கருப்பு நிறமா? மச்சமா என சந்தேகம் கொள்ளும்படியான ஒன்று. நிஜத்தில் என்ன நடந்திருக்கிறது என்பதை அவனால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. அவசரமாக மூஞ்சியை துணியால் அழுத்தித் துடைத்தான். எந்த மாற்றமுமில்லை. ஓடிப்போய் கழிவரையில் சோப் போட்டு ஒரு முறைக்கு மூன்று முறை முகத்தைக் கழுவினான். மச்சம் கொஞ்சம் பளபளப்பான கருப்போடு அப்படியே இருந்தது, முதல் முறையாகத் தனது மச்சம் குறித்த அச்சம் அவனுக்குள் எழுந்தது. இது வெறும் மச்சம்தானா? தன்னையே அருவருப்போடு பார்த்தான். சத் சத்தென முகத்தில் அறைந்து கொண்டான். அவன் அடித்துக் கொள்ளும் சத்தங் கேட்டு அவனை எழுப்பிய நண்பன் ஓடிவந்தான்…
“என்னடா ஆச்சு… தாமு… கதவத் தொறடா… தாமு…”
கழிவறைக் கதவைத் திறந்து வெளியில் வந்த தாமுவின் முகத்தில் அடித்துக் கொண்டதில் ரத்தம் கட்டிப் போயிருந்தது.
“லூசாடா நீ..இது ஏதோ ஸ்கின் பிராப்ளம்… டாக்டரப் பாத்தா சரியாயிடும்… நீ பேசாம இரு… இன்னைக்கு ஈவ்னிங் ஹாஸ்பிடல் போகலாம்..”
தாமு எதுவும் பேசவில்லை. தனக்குத் தானே பேசிக் கொண்டான்.
“இந்த மூஞ்சிய வெச்சுக்கிட்டு எப்படி ஆஃபிஸ் போவேன்… நாலு பேர் எப்பிடி எங்கிட்ட பேசுவாங்க…”
அவன் புலம்புவது நிற்கிறமாதிரியில்லை. அவன் அறை நண்பர்கள் ஒவ்வொருவராய் வந்து துக்கம் விசாரித்துச் சென்றனர். அவர்கள் விசாரிக்க விசாரிக்க இவனுக்குத் துக்கம் அதிகமானது. தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும்?.. இத்தனை நாட்களாய் மற்றவர்கள் தன்னிடம் கேட்ட அதே கேள்வியை முதல் முறையாய்த் தனக்குத் தானே கேட்டுக் கொண்டான்..
“அதெப்படி ஒரு மனிதனுக்கு மச்சம் தானாய் வளரும்?…”
குழப்பம் முதலில் அச்சமாகவும் அந்த அச்சம் சம்பந்தமே இல்லாமல் யாரோ சிலரின் மீதான வெளிப்படுத்த முடியாத கோபமாகவும் அவனுக்குள் வளர்ந்த்து.
மெளனமாய் இருந்து விடுவதின் வழி இந்த அச்சத்தையும் கோபத்தையும் கடந்துவிட நினைத்தவனுக்கு பெருக்கெடுத்த வெள்ளமென துவக்கத்தில் இருந்த தனது அழகிய மச்சம் குறித்த ஏக்கம் அதிகமானது. முகத்திற்கு பூசும் சிகப்பழகு க்ரீம்… இன்னும் சில முறை சோப் போட்டு அலசல் எல்லாம் நிகழ்ந்த பிறகும் மச்சம் அதே கம்பீரமான கருப்புடனும் ஒருவித கர்வத்துடனும் இருந்தது. ஒரு மாற்றுக்காக முகநூல் பக்கம் போனவனுக்கு அவனது மச்சம் குறித்து மற்றவர்கள் போட்டிருந்த பழைய பின்னூட்டங்களைப் பார்க்க எரிச்சல் இன்னும் அதிகமானது.
“என்ன மயிருக்கு ஒரு மனுசனுக்கு மூஞ்சில இருக்க மச்சத்த எல்லாம் பாக்கனும்.. கண்ணு இருக்கு.. மூக்கு இருக்கு… மீச இருக்கு… அதை எல்லாமப் பாக்கறானுக.. இதோ இவ்ளோ சின்னதா ஒரு மச்சம்… அத ஆளாளுக்கு கண்ணு வெச்சி இப்போ இப்டி ஆகிடுச்சு… எல்லாம் என் விதி…”
தனக்குள்ளேயே சொல்லி சொல்லி அழுது கொண்டான். நண்பர்களின் ஆறுதல் அவனை சரி செய்திருக்கவில்லை. பேசியபடி மாலை மருத்துவமனைக்கு செல்வது மட்டும் முடிவானது.
‘இந்த முகத்தோடு எப்படிப் போவதெனப் புரியாமல் நெளிந்தான்…’ முகத்தை எப்படி மறைக்க?… ஒருவன் தன்னிடமிருந்த அகலமானக் கைக்குட்டையைக் கொடுத்தான். பாதி படுக்கை விரிப்பைக் கைக்குட்டையாய்ப் பயன்படுத்தும் ரசனை ஆண்களுக்கே பிரத்யேகமான ஒன்றுபோல. அதுவும் இப்போதை நல்லதுக்குத்தான். அவன் முகத்தை மறைக்க தாரளமானதாய் இருந்தது. போதாக்குறைக்கு குளிர் கண்ணாடி வேறு. வழி முழுக்க வளர்ந்து கொண்டிருக்கும் தனது மச்சம் குறித்தே யோசித்துக் கொண்டிருந்தேன். இலக்கற்று எல்லா நினைவுகளையும் துண்டித்துக் கொண்டு ஒன்றைக் குறித்துச் சிந்தித்தல் என்பது பல சமயங்களில் வினோதமானதொரு துயரம்தான். தாமு மனதிற்குள்ளாகவே மச்சக்காரன் மச்சக்காரன் என்று சொல்லிப் பார்த்துக் கொண்டதின் அருவருப்பை இப்பொழுது முழுமையாக உணரத் துவங்கி இருந்தான்.
மருத்துவமனை நீண்ட அமைதியில் விழித்திருந்தது. அமைதியாய் இருக்கச் சொல்லி வாயில் விரல் வைத்திருக்கும் குழந்தைகளின் படம் வேறு… நான்கு அங்குலம் ஹீல்ஸ் அணிந்த ஜெல்லி மீன் செவிலிகளின் கால்களிலிருந்து சின்னதொரு சத்தம் கூட இல்லை, நடை கூட மனிதனுக்கு தேவைக்கேற்றபடி பழக்கப்பட்டுவிடுகிறது. அவன் வளர்ந்து நிற்கும் தன் மச்சத்தை வருடிப் பார்த்தான். அதில் எந்த விதமான தனித்த உணர்வும் இல்லை. உண்மையில் சுரணையே இல்லையோ எனப் பயந்தான். கிள்ளினான். வலித்தது. ஆக இது தோல்தான். உயிரோட்டமுள்ள அவனது தோல்தான்.. ஆனாலும் இப்பொழுது அவனோடு விளையாடிப் பார்க்கிறது. அதைத் தழுவிக் கொண்டே இருந்த கையில் உடன் வந்த அவன் நண்பன் சொத்தென அடித்தான்…
“சும்மா சும்ம்மா நோண்டாம பேசாம இருடா…”
தாமுவுக்குப் புரியவில்லை, இதென்ன சீழ் கட்டியா தடவினால் உடைவதற்கு? அதுவும் இல்லாமல் இவன் யார் மச்சத்தைத் தடவக் கூடாதென சொல்வதற்கு?..”
சுண்டிய தனது முகத்தில் மச்சத்தை வம்புக்காகவே மீண்டும் தடவினான். அவன் தடவ தடவ மினுங்கும் கருப்போடு அந்த மச்சம் நெளிந்து வளைந்து கொடுத்தது.
அவன் நண்பன் இவனைத் திருத்தமுடியாதென விட்டுவிட்டான்.
இவர்களுக்கான அழைப்பு வந்தபோது தாமுவுக்கு ஒரே ஒரு குழப்பம் மட்டும் இருந்தது. தனக்கு இருப்பது நிஜமாகவே ஒரு தோல் சம்பந்தப்பட்ட வியாதிதானா?… அந்த குழப்பத்திற்கு தெளிவான முடிவு கிடைக்கும் முன்பாகவே இருக்கையில் அமரச் சொன்ன மருத்துவரின் செயற்கையான புன்னகையப்பிய முகம் அவனை வசீகரித்துக் கொண்டது, இது மாதிரியான முகங்கள் அவனுக்கு நிறையவே தெரியும். அலுவலகத்தில், நண்பர்களின் வீடுகளில், இந்த மருத்துவர் இந்த நகரின் சலனமற்ற ஒரு பகுதியில் நன்கு வடிவமைக்கப்பட்ட ஒரு வீட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். அவர் முகத்திலிருக்கும் அமைதியும் செயற்கைத்தனமும் தற்செயலாகவோ அல்லது ஒரு நாளிலோ வந்துவிடக்கூடியதில்லை. அவரின் முகத்தில் மச்சம் இருப்பதற்கான தடயங்களைத் தேடினான்… அவன் பார்வையையும் முகத்திலிருக்கும் சலனத்தையும் கண்டு ஒருவிதமான அயர்ச்சியோடும் சிரமத்துடன் கொண்டு வந்த புன்னகையோடும்
“எஸ்…”\
என முறுவலித்தார்..
“எஸ்…? “
இரண்டாவது முறைக் கேட்கும்போது அந்த வாயில் ஒரு குத்துவிடலாமா என கை நீண்டது. அவன் இன்னொரு கையால் அதைப் பிடித்துக் கொண்டான். அவன் நண்பன் இவனுக்கு இருக்கும் பிரச்சனைகளைச் சொல்லச் சொல்ல அந்த மருத்துவர் கேட்டபடியே தனது டேபிளில் இருக்கும் சாம்ஸங் /டேப்லட்டில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார்… கார் ரேஸ் சத்தம் சின்னதாய்க் கேட்டது, தாமுவின் மச்சம் வளர்வதாய் அவன் சொன்னதைக் கேட்ட முதல் நொடியில் அவரின் கார் ஒரு வீதியிலிருந்த போஸ்ட் மரத்தில் மோதி நின்றது. அவர் இரண்டிலும் ஒரே நேரத்தில் கவனத்தோடு தலையைத் திருப்பிக் கொண்டார்.
“வளரும் மச்சம்…” இந்தப் பதம் தான் அவன் பேசியதிலேயே மருத்துவருக்குப் பிடித்தது.
எளிமையாக துவங்கினார்.
“கல்யாணம் ஆகிடுச்சுங்களா?…”
தாமு எதிர்பாராத இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் “இல்லையெனத் தலையை மட்டும் ஆட்டினான். அவர் வெறுமையோடு உதட்டைப் பிதுக்கினார்….
“did u fuck some one?…”
அவன் முகம் இன்னும் இறுக்கமானது…
“அது என்னோட அந்தரங்கம்…. ஸாரி…”
மருத்துவர் சிரித்தார். “this is not an enqiuery… ஸோ ப்ளீஸ்…”
தாமு “எஸ்…”
மருத்துவர் மீண்டும் விளையாட்டில் கவனத்தைத் திருப்பியபடியே
“எத்தனை முறை?….”
அவனுக்கு இந்தக் கேள்வி இன்னும் எரிச்சலூட்டியது///
“ஸார்… நீங்க ஸ்கின் டாக்டரா… இல்ல செக்ஸாலஜிஸ்ட்டா…?”
மருத்துவர் சிரித்தார்… “may be both… கமான் சொல்லுங்க….”
“ஆறு முறை…”
அவர் கேமில் அங்கு எல்லையைத் தொட்ட பரவசம்…. முகத்தில் இயல்பாகி சிரித்தபடி இவன் பக்கமாய்த் திரும்பி
“ஸோ உங்களவிட எல்டரா ஒரு தோழி இருக்காங்க…”
தாமு அதிர்ந்து போய் தலையைக் குனிந்து இருக்க அவன் நண்பனுக்கே ஆச்சர்யம்… மருத்துவர் அவனை நம்பிக்கை கொள்ளச்செய்யும் படி இன்னும் நெருக்கமாக பேச நினைத்தார்.
அவன் மறுத்தான். அங்கிருந்து எழுந்து சென்று விட்டால் போதுமென்றிருந்தது. இந்த மருத்துவர் தன்னை மனநோயாளியாய் மாற்றிவிடுவானோ என மனம் தடுமாறியது. விரல்களால் அந்த மேஜையில் இடது வலதுமாகவும் வலது இடமாகவும் கோடுகள் இழுப்பதும் அந்தக் கோட்டைத் தொடர்வதுமாய் இருந்தான்..
“ஓ.. அவங்க கொஞ்சம் குண்டா…. மாநிறமா இருப்பாங்க… அதிகம் இல்ல… இப்போ சில மாதங்களாத்தான் உங்களுக்குப் பழக்கம் இல்லையா?..”
தாமுவுக்கு இந்த முறை இன்னும் அதிர்ச்சி.
இவன் உண்மையில் மருத்துவனா? அலல்து மந்திரவாதியா?…
தாமுவின் நண்பனுக்கு எல்லாமும் ஆச்சர்யம்.. அவன் அந்த அறையில்தான் இருக்கிறானா என்றே சந்தேகம் வந்துவிட்டது.
“ஸார் நீங்க சொல்றதெல்லாம் கேட்டா ஆச்சர்யமா இருக்கு… அவன் ரொம்ப ஷை டைப்… எங்ககிட்டயே தயங்கித் தயங்கித்தான் பேசுவான்…. பொண்ணுங்ககிட்ட சான்ஸே இல்ல…”
திரும்பி தாமுவைப் பார்த்தான்…
“என்னடா தாமு… இதெல்லாம் நிஜமா?.. யார்டா அது?…”
தாமு சலனமே இல்லாமல் இன்னும் தீவிரமாய்க் கோட்டை இழுத்துக் கொண்டிருந்தான். ஒரு விரலை மட்டும் எடுத்து மச்சத்தை வருடினான்… அது மினுங்கியது. மருத்துவரின் கண்களைத் தவிர்க்க வேண்டி தலையைக் குனிந்திருந்தவனை அந்த அறை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.
“நீங்க கொஞ்சம் வெளில இருக்கீங்களா?… நான் அவர் கிட்ட பெர்சனலா பேசனும்…”
தாமுவின் நண்பன் தயக்கத்தோடு எழுந்து வெளியில் வந்தான்… தாமு வெளியில் செல்லும் அவனை தலையைத் தூக்காமலே பார்த்தான்.
“இப்போ சொல்லுங்க தாமு… அந்தப் பெண்ணை மறக்கறது பிரச்சனையா? இல்ல அந்தப் பெண்ணே பிரச்சனையா?..”
தாமுவுக்கு தன் அந்தரங்கம் குறித்து யாரிடமும் பேசுவதில் விருப்பமில்லை, சின்னதொரு மச்சம் தனது அந்தரங்கத்தோடு தொடர்புடைய ஒன்றாய் எப்படி மாற முடியும். அவன் என்னவானாலும் இந்த ஆளிடம் வாயைத் திறக்கூடாதென்கிற இறுக்கத்துடன் அப்படியே அமர்ந்திருந்தான்.
“நீங்க சொல்ற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல டாக்டர்…”
அந்த மருத்துவர் சிரித்துக் கொண்டார்.
“நீஙக உறவு வெச்சிருக்கது அவங்களோட கணவருக்குத் தெரியுமா?..”
தாமு இதை மருத்துவமாக எடுத்துக் கொள்வதா அல்லது ஒரு தனிமனிதனின் அந்தரங்கத்திற்குள் நுழையும் அராஜகமாய் எடுத்துக் கொள்வதா என புரியாமல் அவரிடமிருந்து பார்வையை விலக்கினான்.
“ தெரியல… ஆனா, இப்போ என்னுடல்ல சாத்தான் புகுந்துட்ட மாதிரி இருக்கு…”
மருத்துவருக்கு முகம் மலர்ந்தது.
“ஸோ… அந்தப் பெண் உங்க நண்பரோட மனைவி அல்லது காதலி…”
தாமு சிரித்தான்.
“ஸார்… நீங்க டாக்டரா?… இல்ல சோதிட நிபுணரா?…. இது எல்லாம் உங்களோட ஊர்ஜிதம் தான்… உண்மை இல்ல.. அந்தப் பெண் ஒரு ரயில் பயணத்துல சந்திக்க நேர்ந்த பெண்…”
“இஸ் இட்… வாழ்க்கை அவ்வளவு தற்செயலானதா தாமு… இண்ட்ரஸ்ட்டிங்..”
தாமுவுக்கு இந்த உரையாடலின் இறுதி கணம் நோக்கி நகர மனம் ஊர்ந்தது.
“டாக்டர். போதும்… உங்களால என்னோட பிரச்சனைக்கு வழி சொல்ல முடியலைன்னா விடுங்க… நான் வேற கிளினிக் போறேன்… இப்போ எனக்கு உங்க கிட்ட பேசவே பயமா இருக்கு./”
டாக்டர் எழுந்து தண்ணீர் பிடித்துக் குடித்தார். அவனது தோள்களில் கையை வைத்து அவனை எழுப்பி விட்டு தீர்க்கமாய்ப் பார்த்துக் கொண்டபின்
“இதுக்கு ட்ரீட்மெண்ட் இல்ல… நீங்க உங்க துரதிர்ஸ்டவசமான விருப்பங்கள்ல இருந்து உங்களத் துண்டிச்சுக்கங்க… தானா சரியாகிடும்… போயிட்டு வாங்க..”
தாமு அவருக்குக் கை கொடுத்துவிட்டு வேகமாக அவ்வறையிலிருந்து வெளியேறினான். ஒரு மனிதன் தனது விருப்பத்தின் அடிப்படையிலிருப்பது எப்படி சமூகத்திற்கு புறம்பானதாகிவிடும். பழக்கப்படுத்தப்பட்ட எல்லா வகைமைகளிலிருந்தும் தன்னைத் துண்டித்துக் கொள்ள நினைப்பது ஒரு மனிதனின் அடிப்படை உரிமை… இதில் மீறல் எங்கிருக்கிறது.
அறைக்குத் திரும்பும் வழியெங்கும் தாமு நண்பனுடன் பேசிக்கொள்ளவே இல்லை. எப்போதும் போல் தனது அறையில் ஒடுங்கிக் கொண்டான். ஆனால் தனது அந்தரங்கம் குறித்து மெல்லியதொரு பரவசத்தை உணர முடிந்தது. மூன்றாவதாக ஒரு மனிதனுக்குத் தெரியும் போது தன்மீது குவிந்த ஆச்சர்யமிக்க கவனிப்பை ரசித்தான். கண்ணாடி பார்த்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. குளியலறையிலிருந்த கண்ணாடியை தனது தலைமாட்டிலேயே வைத்துக் கொண்டு அவ்வப்போது எடுத்துப் பார்த்தான். அந்தக் கண்ணாடியில் அவனது முகமும் அந்தப் பெண்ணின் முகமும் மாறி மாறி வந்து போனது. நீர்மையின் உடல் கொண்ட அவளின் முகம். இந்த அறை இந்த நண்பர்கள் வேலை எல்லாவற்றையும் மறந்த சமீபமான நினைவுகள் முழுக்க அவளைச் சுற்றியே சென்று கொண்டிருந்தது…. வழக்கமாக அவனைச் சாப்பிடக் கூப்பிடும் நண்பர்கள் யாரும் கூப்பிடவில்லை. அவன் கண்ணாடியை இறுக்கி அணைத்துக் கொண்டபடி உறங்கிப் போனான். மீண்டும் விழித்துக் கொண்டபோது விளக்கைப் போட்டுவிட்டு இயல்பாக அவன் கை கண்ணாடியை எடுக்கச் சென்றது.
முதலில் அது தனது முகம்தானா எனப் புரியாமலேயே பார்த்துக் கொண்டவன் அந்த மாதிரியான முகம் வேறு யாருக்கும் இருந்ததில்லை என்பதுபோல் கலக்கத்துடன் பார்த்தான். ஒருவேளை தான் தூங்கிக் கொண்டிருக்கும் போது யாராவது இந்த மாதிரி ஒப்பனை செய்துவிட்டிருக்கலாம்.. ஓடிப்போய் முகத்தைக் கழுவினான். ஆனால் மாறவே இல்லை. முகத்தைத் துடைத்துவிட்டு கண்ணாடியைப் பார்த்தான் முகத்தில் அவன் தோலில் சீரான இடைவெளியில் குட்டி குட்டியாம் கரும் புள்ளிகள். ஊர்த்திருவிழாவில் நேத்திக்கடன் இருப்பவர்கள் போட்டிருக்கும் வேஷம் போலிருந்தது முகம். இவையும் குழப்பங்கள் தானா?…
கண்ணாடியைத் தூக்கி எறிந்தான். உடைந்து நொறுங்கும் சத்தம் கேட்டுக் கூட யாரும் வந்து எதுவும் கேட்கவில்லை. அறையிலிருந்து வேகமாக அவன் வெளியேறியபோது அவனது புதிய முகத்தைப் பார்த்து அவன் நண்பர்களுக்கு அருவருப்பாய் இருந்தது.
பேருந்தில் ஏறிக்கொண்டான். கண்டக்டர் இவனுக்கு டிக்கட் குடுக்கும்போது ஒரு வேற்றுக்கிரக வாசியைப் பார்ப்பது போல் பார்த்தான்… அவன் மூஞ்சியில் ஒரு குத்துவிட கை நீண்டு திரும்பியது. ’என்ன புதுசா இருக்கு இந்த முகத்துல?…;’ கண்டக்டரை முறைத்துப் பார்க்க அவன் பேசாமல் நகர்ந்து போனான்.
போட்கிளப்பில் நீண்ட அமைதியில் உறங்கும் ஒரு வீதிக்குள் நடந்து சென்றவன் தனக்குப் பழக்கமான அந்த வீட்டின் முன் தனது வருகையை அறிவித்துவிட்டுக் காத்திருந்தான். அவள் அவன் அழைப்பை ஏற்க மறுத்தாள். இன்னொரு நாள் வரச்சொன்னாள். தனது முகம் அவளால் மாறிப்போனதாய் அவன் சொன்னபோது ‘நீ தவறானதொரு மருத்துவனைச் சந்தித்திருக்கிறாய்…”
இறுக்கமான தனது குரலோடு இணைப்பைத் துண்டித்தாள். எப்படியும் திரும்ப அழைப்பாளென அவளுக்காக அந்த வீட்டின் எதிரில் காத்திருந்தான். இருள் மிக வேகமாய் ஓடி அந்த வீதியை கடந்து போய்க்கொண்டிருக்க தனது முகத்தின் மாற்றம் குறித்த கவலை ஒருவிதமான தனித்துவமோ என அவனை நினைக்கச் செய்து கொண்டிருந்தது. கண்களை மூடி சில மணிநேரங்களுக்கு முன்னால் பார்க்க நேர்ந்த புதிய முகத்தை மனதிற்குள் கொண்டுவர முயன்றபோது தனது பழைய முகத்தோடு பழைய நினைவுகளும் துயரங்களும் கரைந்து போவதாய் இருந்தது. அசந்தர்ப்பவசமாய் ஒரு தினத்தில் வினோதமான மச்சங்களால் மாற்றம் கொண்ட தனது முகம் குறித்து இவ்வளவிற்கு இருந்த குழப்பங்கள் போய் நிதானமானான். தனது சிகரெட் பெட்டியிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் புகைக்கத் துவங்கிய போது சுவாசம் சீரானதுடன் முழு திருப்தியுடன் நிகழ்ந்திருக்கும் ஒரு மாற்றமாய் உணர்ந்தான்.
அந்த வீட்டிற்குள்ளிருந்து ஒரு கார் வெளியேறிப்போனபோது குனிந்து கவனமாக வண்டியைப் பார்த்தான். வழக்கமாய் இவன் நிற்கும் இடம் தெரிந்து அவளும் பார்க்க இருவரும் சில நொடிகள் பார்த்துக் கொண்டனர்… அவளுக்குப் பக்கத்தில் ஓட்டுநரின் இருக்கையிலிருந்தவனையும் அவளையும் பார்த்தான்.
“வாழ்க்கை அவ்வளவு தற்செயலானதா…” என ஒரு குரல் அவனுக்குள் ஓடி மறைந்தது. “தற்செயலானதுதானென” சிரித்தான்.