மச்சம் உள்ள ஆளு…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 25, 2019
பார்வையிட்டோர்: 5,206 
 

என் நண்பனின் அப்பா சந்திரசேகரனுடன் நான் பேசிக் கொண்டிருக்கும்போதுதான் துணிப் பையுடன் என் பழைய தலைமை ஆசிரியர் வெங்கடசுப்ரமணியன் அவரிடம் வந்தார்.

இருவரும் நண்பர்கள். ஒன்றாக வேலை பார்த்தவர்கள். வெவ்வேறு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாய் இருந்தவர்கள். இரண்டாண்டுகளுக்கு முன் இருவரும் ஒய்வு. சந்திரசேகரன் வெட்டி கதை பேசாமல் பெட்டிக் கடை வைத்துக் கொண்டு பொழுதைக் கழிக்கிறார். இவர் என்ன செய்கிறார் தெரியவில்லை.

சந்திரசேகரன் நண்பனை…..

” வாடா. ..! ” என்று உரிமையாய் வரவேற்றார்.

எனக்கு வெங்கடசுப்ரமணியனைப் பிடிக்காது. இருந்தாலும் எனக்கு வாத்தியார், தலைமை ஆசிரியர் என்பதினால். ..

” வணக்கம் ஐயா ! ” சொல்லி மரியாதை நிமித்தம் எழுந்து நின்றேன்.

” வணக்கம். உட்காருப்பா. .! ” அவர் என் தோளில் அன்பாய் கை வைத்து அழுத்தி உட்கார வைத்து பக்கத்து நாற்காலியில் அமர்ந்தார்.

‘ சரி சார். நான் அப்புறமா வர்றேன். ! ‘ என்று சந்திரசேகனிடம் சொல்லிவிட்டு போக முடியாத நிலை. காரணம். .. நானும் அவரும் ஒரு முக்கியமான விசயம் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.

‘ பால்ய நண்பர்கள் ஏதாவது பேசுவார்கள். இடைஞ்சலாய் நாம் எதற்கு சிறு பிள்ளை என்று எண்ணிய நான். ..

” நான் போறேன் சார் ! ” எழுந்தேன்.

சந்திரசேகரன். ..” இரு ..” கையமர்த்தினார்.

அவர் சொல்லை மீறி என்னால் போக முடியாது. அந்த அளவிற்கு அவர் மேல் எனக்கு மதிப்பு மரியாதை.

அமர்ந்தேன்.

நான் இருப்பது உறுதியான பிறகு. ..

” என்ன விசயம் வெங்கிட்டு. .?” அவர் தன் நண்பனை விசாரித்தார்.

” ஒன்னும் விஷயமில்லை சந்துரு. கடைத்தெரு பக்கம் வந்தேன். நீ உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். ரெண்டு வார்த்தை நலம் விசாரிச்சுட்டுப் போகலாம்ன்னு வந்தேன் .” அவர் சொன்னார்.

” நல்லது. அது என்ன கையில பை. . ? ” சந்திரசேகரன் அவரிடம் அடுத்த விசாரணையைத் தொடங்கினார்.

” பையன்கள் தொந்தரவு. .! ” அவர் பதில்.

” என்னடா சொல்றே. .? !”

” நேத்து பள்ளிக்கூடம் போன சின்னப்பையன் செருப்பைத் தொலைச்சிட்டு வந்துட்டான். காலையில செருப்பு இருந்தால்தான் பள்ளிக்கூடம் போவேன்னு ஒரே அடம். போகவே இல்லே. ஓடி வர்றேன். ‘

” செருப்பு வாங்கிட்டியா. .? ”

” வாங்கியாச்சு. ” எடுத்துக் காட்டினார்.

நான்கு வயது சிறுவன் போடும் அளவு.

” அடுத்து என்ன. .? ” சேந்திரசேகரன் அவர் பையை எட்டிப் பார்த்தார்.

” புது தோல் பை ஒன்னு. பொண்ணு நாலு நாளாய் பையைக் கிழிச்சுட்டு தொந்தரவு. வாங்கினேன். ” என்றவர் கொஞ்சம் தயங்கி. .. ” சின்ன உதவி. .? ” என்றார்.

” என்ன. .? ”

” பள்ளிக்கூடத்துல சுற்றுலா போறாங்க. பெரிய பையன் போக விருப்பப்படுறான். என்கிட்ட பணம் இல்லே. கை மாத்தா ஆயிரம் ரூபாய் பணம் வேணும். ….”

” தர்றேன். எப்போ திருப்புவே. .? ”

” அடுத்த மாசம் ஓய்வூதியம் எடுத்து தர்றேன். ”

” சரி. இந்தா. .” – சந்திரசேகரன் மேசை டிராயரைத் திறந்து இரண்டு ஐநூறு தாட்களை எடுத்து நீட்டினார்.

” நன்றிப்பா. .” வெங்கடசுப்ரமணியன் வாங்கி சட்டைப் பையில் வைத்துக் கொண்டார்.

” எத்தினிப் பசங்க. ..? ” சந்திரசேகரன் திரும்ப அவரிடம் விசாரணை.

” மொத்தம் ஆறு. பொண்ணுங்க ரெண்டு. பையன்கள் நாலு. ”

” என்ன படிக்கிறாங்க. .? ”

” ஒருத்தன் யு. கே. ஜி. மத்த மூணு பசங்க ஆறு, எட்டு, ஏழு. பொண்ணுங்க ரெண்டும் நாலு, அஞ்சு. ”

‘ இந்த வயதில் இத்தனைப் பசங்களா? ! பிள்ளை இல்லாத ஆள். மனைவி இறந்த பிறகு மறுமணம் புரிந்து கொண்டாரா…?! பிள்ளை ஏக்கம்….. வரிசையாக பெற்றுத் தள்ளி விட்டாரா. .? இரண்டு வளர்க்கவே தகிடுதித்தோம் போடும் இந்நாளில் ஆசைக்கு அளவில்லையா. .? ஏக்கத்திற்கு எல்லை இல்லையா. .? ‘ எனக்குள் ஓடியது.

ஆனாலும் இவர்….. பெற்றுக் கொள்ள கூடியவர்தான்.!

நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சமயம். நான் பள்ளிக்குத் தாமதமாய் வந்ததுதான் சாக்கு.

” டேய் ! இங்கே வா. .! ” அதட்டல் அதிகாரத் தொணியில் தன் அறையில் இருந்தபடியே அழைத்தார்.

தலைமை ஆசிரியர் அறை பள்ளி வாசலில் முதல் அறை. தனியறை.

” பேர் என்ன. ..? ”

” ரா…..ராமு. ….”

” ஏன் லேட்டு. .? ”

” அம்மாவுக்கு உடம்பு முடியல. உதவி செஞ்சுட்டு வர்றேன். ”

” பொய் சொல்லலையே. ..?! ”

” இல்லே. .”

” சரி. பையை அப்படியே மூலையில வை. ” சுவர் ஓரம் காட்டினார்.

‘ எதுக்கு. .? ‘ – திக்கென்றது.

வைத்தேன்.

” அடுத்த அறையில் பானு ஆசிரியை இருக்காங்க. அவுங்களுக்கு உடம்பு சரியில்லையாம். டாக்டர் வீட்டுக்குப் போகணுமாம். துணைக்குப் போய் வா. ”

‘ ச. .. சரி சார். ” – உதை கிடைக்காததில் எனக்கு மகிழ்ச்சி.

” இந்தா பணம். வெளியில போய் ஒரு ஆட்டோ புடி. டீச்சர் எங்கே போகணுமோ. . அங்கே கூட்டிப் போ. ” இரண்டு ஐநூறு தாட்களை நீட்டினார்.

வாங்கிக்கொண்டு அடுத்த அறைக்குச் சென்றேன்.

பக்கத்து அறையில் இவர் சொன்னதை டீச்சர் கேட்டிருப்பார் போல. இல்லை. .. ‘ பையனைத் துணைக்கு அனுப்பறேன். அழைச்சுப் போ. ‘ – என்று இவர் சொல்லி இருப்பார் போல. நான் அறையில் நுழைந்ததுமே. ..

” வா. போகலாம். ” சொல்லி எழுந்து நடந்தாள்.

வெளியில் நான் வந்து ஆட்டோ பிடிக்க. .. அவள்….

” டாக்டர் அம்சவள்ளி கிளினிக் போ ” சொன்னாள்.

போய் வந்த பிறகுதான் பையன்கள் விசயத்தை உடைத்தார்கள்.

வகுப்பில் தலை காட்டியதும். ..

” இன்னைக்கு நீ மாட்டிக்கிட்டியா. .? ” நண்பர்கள் சூழ்ந்தார்கள்.

” என்னடா. .? …”

” டாக்டர் அம்சவள்ளிகிட்டத்தானே போனீங்க. .? ”

” ஆமாம் .”

”ஏன் தெரியுமா. .? ”

” தெரியாது ! ”

” நான் சொல்றேன். தலைமை ஆசிரியருக்கும் பானு டீச்சருக்கும் கசமுசா. கருக்கலைப்பு செய்ய கூட்டிப்போனே. ”

” அடப்பாவி ! ” எனக்கு அதிர்ச்சி.

” நான் கெமிஸ்ட்ரி வகுப்பு சந்திர டீச்சருக்குத் துணைக்குப் போனேன். இவன் கலா டீச்சருக்குப் போனான். அவன். ..” சொன்னவன் அடுக்கினான்.

எனக்குத் தலை கிறுகிறுத்தது.

” உங்களுக்கு எப்படி விஷயம் தெரியும். .?”

” நம்ம வாத்தியார் புதுசா வர்ற டீச்சருங்களைச் சட்டுன்னு மடக்கிடுவாரு. ”

” எப்படி. .? ”

” தலைமை ஆசிரியர் இல்லியா. அதனால. .. பேசுற விதத்துல பேசி, பயமுறுத்தி. ..பலவழிகளில. ”

” இதுக்கு ஆம்பளைப் புள்ளைங்களான நாமதான் கிடைச்சோமா. பொட்டப்புள்ளைங்களைத் துணைக்கு அனுப்ப வேண்டியதுதானே. .! ”

” இங்கேதான் சூட்சம ரகசியம் இருக்கு. ஆம்பளப் புள்ளையான நீ டீச்சரை டாக்டர் வீட்டுக்குள்ளே விட்டுட்டு வெளியே உட்கார்ந்திருப்பே. பொட்டைப் புள்ளைங்களான்னா. . டீச்சர் கூடவே உள்ளே கூட்டிப் போகணும். வெளியே விட்டுப் போனா. . பொம்பளைக்குப் பொம்பளை என் ரகசியம்னு வெளியில நிக்கிறதுக்கு கேள்வி வரும். சந்தேகமும் எழும். அடுத்து. .பெத்தவங்க பார்த்தா வம்பு. இப்படி பல காரணங்கள் இருக்கு. ”

” டீச்சர் உள்ளே போனதும் உடனே திரும்பிட்டாங்க. ”

” ஒரு ஊசி. இல்லேன்னா. .. மாத்திரை. சரியாய்ப் போச்சு. ஆனா. .. கலா டீச்சர்த்தான் மயங்கிட்டாங்க. இவன் தோள்ல சாய. .. ஆட்டோவுல ரத்தம். அப்போதான் விஷயம் புரிஞ்சுது. ”

வெங்கடசுப்ரமணியன் மீது எனக்கு அப்போது எழுந்த வெறுப்பு இன்னும் அடங்கவில்லை.

” சரி. புறப்படுறேன் !” அவர் விடை பெற்று எழுந்தார்.

அவர் தலை மறைந்ததும். ..

” இவன் உனக்கும் வாத்திதானே. .?! ” சந்திரசேகரன் என்னைக் கேட்டார்.

” எ. .. ஆமாம் சார். ”

” பள்ளிக்கூடத்துல ரொம்ப ஆட்டமாமே. ..! ”

” தெ. . தெரியாது சார். ”

” டேய் ! பொய் சொல்லாதே. எனக்கு இவனைப் பத்தி நல்லாத் தெரியும். ரொம்ப ஆடினான். இப்போ அடங்கிட்டான். அந்த ஆட்டமும் இவனா ஆடல. பாதி தானாய் வந்தாளுங்க. மீதி இவனாத் தேடித் போனான். அப்போ கலைச்ச உசுருக்கெல்லாம் இப்போ பிராயச்சித்தம் தேடுறான். ஆறு அனாதைப் புள்ளைங்களை எடுத்து தன் சொந்த பொறுப்புள்ள வளர்க்கிறான். படிக்க வைக்கிறான். ”

” ராமு ! மனுசன் தவறு செய்வது சகஜம். ஆனா. .. அதுக்கு வருந்தி, திருந்தி, பிராயச்சித்தம் தேடுறான் பார் அதிலே இருக்கு அவன் புத்தியும் புத்திசாலித்தனமும். வீண் வெட்டியாய் கோயில், குளம்னு அலையாம, இவன் ஆறு அனாதைகளை எடுத்து தன் புள்ளைங்களாய் வளர்க்கிறானே. .. லேசு பட்ட காரியமா. .? இங்கேதான் இவன் மலையாய் நிக்கிறான். ”

” ராமு ! புள்ளைங்க இல்லாத ஏக்கம். இப்புடி தீர்த்துக்கிறான்னு பல பேர்கள் மனசுல தோணலாம், குறை சொல்லாம். ஆனா. .. இவன் என்கிட்டே மட்டும்தான் உண்மையைச் சொன்னான். அதனாலதான் அவன் கஷ்டம்ன்னு வரும்போதெல்லாம் நானும் தயங்காம உதவி பண்ணுறேன். ” முடித்தார்.

என் மனதின் முலையில் சிறுசாய் வெறுப்பாய்க் கிடந்த வெங்கடசுப்ரமணியன் மடமடவென்று உயர்ந்து வானத்திற்கும் பூமிக்குமாய் நின்றார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *