போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புரொபஸர்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 26, 2012
பார்வையிட்டோர்: 10,898 
 
 

தூரத்தில் வரும்போதே பஸ் ஸ்டாப்பில் ஒரு கும்பல் தெரிந்தது. அது பஸ்சுக்காகக் காத்திருக்கும் வழக்கமான கும்பல் அல்ல என்பது சாரதிக்குப் புரிந்தது. மோட்டார் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டுத் தன் போலீஸ் மிடுக்குடன், ”ஏய்! நகரு, நகரு! என்ன இங்கே கூட்டம்?” என்றபடி நெருங்கினான்.

இப்போது அவர் பளிச்சென்று தெரிந்தார். குடுமி, செக்கச்செவேல் உடம்பு, நெற்றியில் பெரிய தென்கலை நாமம், ஒரு வார தாடி. முழுக்கை வெள்ளைச் சட்டை. வேட்டியைப் பஞ்சகச்சமாகக் கட்டியிருந்தார். அவர் பக்கத்தில் ஒரு பெண்மணி… அவரின் மனைவியாக இருக்க வேண்டும். கையில் ஒரு சூட்கேஸ். அவர் தலைகுனிந்து வருத்தம் தோய்ந்த முகத்துடன் நின்றிருந்தார். அந்தப் பெண்மணி, சாரதிக்கு முன்னால் வந்தாள்.

”வாங்க இன்ஸ்பெக்டர்! என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிண்டிருந்தோம். சாட்சாத் அந்தப் பெருமாளே பிரத்யட்சமானாப்ல நீங்க வந்திருக்கேள். நாங்க சிதம்பரத்துலேர்ந்து திருப்பதி வெங்கடாசலபதியைத் தரிசனம் பண்ணலாம்னு கௌம்பினோம். வேலூர் வரைக்கும் ஒரு பஸ்ல வந்து எறங்கி, பள்ளிகொண்டா ஸ்ரீரங்கநாதப் பெருமாளைச் சேவிக்க டவுன் பஸ்ல போயிட்டுத் திரும்பினோம். மறுபடியும் இங்கேருந்து புது பஸ் ஸ்டாண்டுக்குப் போய், திருமலைக்குப் பஸ் பிடிக்கலாம்னு நினைச்சுக் கௌம்பறதுக்குள்ள, இவர் சட்டைப் பையில் வெச்சிருந்த பர்ஸை யாரோ அபேஸ் பண்ணிட்டா. நாங்க வெளியூர்க்காரா. நீங்கதான் அந்தக் கட்டேல போறவனைப் பிடிச்சு, எங்க பணத்தை மீட்டுக் கொடுக்கணும்!” என்று அந்தப் பெண்மணி சொல் லும்போது, அந்தக் குடுமிப் பேர் வழி குறுக்கிட்டு, ”ஸ்… பாகீரதி, அப்படியெல்லாம் வையக்கூடாது!” என்றார் சன்னமான குரலில்.

சாரதி அந்தப் பெரியவரை நோக்கி இருகரம் கூப்பி வணங்கி, ”சார், நீங்க எம்.வி.ஆர். சார் தானே? என்னைத் தெரியலையா? சிதம்பரம் காலேஜ்ல நான் உங்க ஸ்டூடண்ட்! என் பேர் சாரதி. இங்கே நார்த் போலீஸ் ஸ்டே ஷன்ல எஸ்.ஐயா இருக்கேன்…”

அவர் நிமிர்ந்து சாரதியைப் பார்த்தார். கண்களில் ஒரு ஒளி பளிச்சிட்டது.

”ஒண்ணும் கவலைப்படாதீங்க சார்! அந்த ராஸ்கலைக் கண்டுபிடிச்சு பணத்தை மீட்டுடலாம். ஸ்டேஷன் வரைக்கும் வந்து ஒரு புகார் எழுதிக் கொடுங்க.”

அவர் கண்களில் சங்கடம் தெரிந்தது. ”எதுக்கப்பா கம்ப்ளைன்ட் கிம்ப்ளைன்ட் எல்லாம்..?”

”இல்லை சார், புகார் கொடுக் கிறதுக்காக மட்டுமில்லை. என் ‘கெஸ்ட்’டா வாங்க, ப்ளீஸ்! பை த பை, இந்த ஊர்ல உங்களுக்குத் தெரிஞ்சவங்க யாராவது இருக் காங்களா?”

”ஓ… இருக்காளே!”

சாரதி அவர் பக்கம் திரும்பி, ”இருக்காங்களா? யார் சார் அது?” என்று ஆவலுடன் கேட்டான்.

”நீங்கதான்!” என்று கூறி அவர் புன்னகைக்க, சாரதி வாய்விட்டுச் சிரித்தான்.

அந்தக் கல்லூரியில் ‘ஹீரோ’ என்று சொன்னால், அது பொருளாதாரப் பேராசிரியராகப் பணி யாற்றிய எம்.வி.ஆரைத்தான் குறிக்கும். எம்.வி.ராமாச்சாரி.

அவரையத்த பேராசிரியர்கள் காரிலோ ஸ்கூட்டரிலோ காலேஜுக்குப் போகும்போது, எம்.வி.ஆர். மட்டும் பஸ்ஸில்தான் போவார். தினமும் காலையில் சிதம்பரம் கஞ்சித்தொட்டி முனை ஸ்டாப்பில் பஸ் பிடிப்பார். சாரதியும் அதே பஸ் ஸ்டாப்பில்தான் ஏறுவான். டவுன் பஸ்ஸில் மேலே உள்ள உருளைக் கம்பியைப் பிடித்துக்கொண்டு நிற்பார் எம்.வி.ஆர். அவர் வாய் ஏதோ ஸ்லோகத்தை முணுமுணுத்தபடி இருக்கும். ‘குடுமி’ என்று எந்த மாணவனும் அவரை முதுகுக்குப் பின்னால்கூட கேலி செய்துவிட முடியாது. எம்.வி.ஆர். என்றாலே மாணவர்களுக்குக் குலைநடுக்கம். மிகவும் கண்டிப்பானவர். தப்பு செய்தால் அவர் கொடுக்கிற தண்டனை மிகவும் கடுமையாக இருக்கும். அவர் முகம் எப்போதும் கடுகடுவென்று இருக்கும். அவர் சிரித்து யாரும் பார்த்ததில்லை. ஆனால், பொருளாதாரப் பாடத்தை ஒரு குழந்தைக்குக்கூடப் புரிகிற மாதிரி மிக எளிமையான ஆங்கிலத்தில் அற்புதமாக நடத்துவார்.

‘ஹீரோ’வைப் பற்றி இன்னும் பல செய்திகள் உண்டு. தினமும் பகலில் கல்லூரியில் வேலை; மாலையில் பெருமாள் கோயிலில் அர்ச்சகராகத் தீபாராதனை காட்டி, பக்தர்களின் தலையில் சடாரிவைத்து ஆசீர்வதித்து அனுப்புவதை தெய்வத் தொண்டாகச் செய்வது அவருடைய இன்னொரு முகம்.

காலேஜில் ஒருநாள், ரவுடிக் கூட்டம் ஒன்று புகுந்தது. பி.ஏ., எகனாமிக்ஸ் இறுதி ஆண்டு மாணவன் பாலாஜியைத் தேடினார்கள். அவர்களின் முகங்களில் கொடூரமும் கோபமும் குடி கொண்டு இருந்தன. கைகளில் அரிவாள், தடி போன்ற ஆயுதங் கள்! மற்ற மாணவர்கள் நடுநடுங் கிப்போனார்கள். பேராசிரியர் களும் பதுங்கினார்கள். ஹீரோ எம்.வி.ஆர்தான் அவர்களைத் தைரியமாக எதிர்கொண்டார்.

”யாருய்யா நீங்கள்லாம்? எதுக்காக எங்க ஸ்டூடண்ட் பாலாஜியைத் தேடறேள்?”

”எதுக்கா? கத்தியால கூறு போடத்தான்!”

”கத்தியால் கூறு போடற அளவுக்கு பாலாஜி என்ன செய்தார்?”

சுற்றிலும் கூட்டமாக நின்ற மாணவர்களுக்கும் பேராசிரி யர்களுக்கும் எம்.வி.ஆரின் துணிச்சல் ஆச்சர்யத்தைத் தந்தது.

”என்ன செஞ்சான்னா கேக்கறே? யோவ்… அந்தப் பேமானி எங்க வூட்டுப் பொண்ணு அம்சவல்லியை லவ் பண்றேன் பேர்வழின்னு இழுத்துக்கிட்டு ஓடிட்டான்யா! அவன் மட்டும் எங்க கையில கெடைச்சான்னு வெய்யி… வகுந்துப்புடுவோம் வகுந்து!”

”பேஷாச் செய்யுங்கோ! ஆனா, அதையெல்லாம் வெளியிலே வெச்சுக்குங்கோ. காலேஜ் கேம்பசுக்குள்ளே வேணாம். மொதல்ல இங்கிருந்து கௌம்புங்கோ. ப்ளீஸ்… ஒங்களையெல்லாம் பார்த்து ஸ்டூடண்ட்ஸ் பயந்துண்டு நிக்கிறா பாருங்கோ!”

ஒரு மாதம் ஓடியது. பாலாஜியும் அம்சவல்லியும் மீண்டும் கல்லூரிக்கு வர ஆரம்பித்ததும் கல்லூரியே பரபரப்பாகி, வியப்பில் அதிர்ந்துபோனது. வியப்புக்குக் காரணம், திருப்பதியில் இருவரும் திருமணம் செய்து கொண்டது அல்ல; அவர்களுக்குத் தன் வீட்டில் மறைவாகத் தங்கியிருக்க அடைக்கலம் கொடுத்தவர் ஹீரோவான எம்.வி.ஆர். என்பதுதான்!

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவன் பாலாஜிக்கும் அவன் காதலியான அம்சவல்லிக்கும் தன் வீட்டில் புகலிடம் கொடுத்தது மட்டுமல்ல, பெண் வீட்டைச் சேர்ந்த பெரியவர்களிடம் எம்.வி.ஆரே நேரில் போய், ”மனதுக்குப் பிடித்தவனோடு வாழ்வதுதான் ஒரு பெண்ணுக்கு மகிழ்ச்சி. அதை சாதி என்ற பெயரில் கெடுக்காதீங்க!” என்கிற பாணியில் மணிக்கணக்கில் பேசி, பாலாஜியின் நல்ல குணத்தையும் புத்திசாலித்தனத்தையும் எடுத்துச் சொல்லி, மனதை மாற்றி, அவர்களின் திருமணத்தை ஏற்கவைத்தார் என்கிற செய்தி தெரிந்து, பேராசிரியர்களும் மாணவர்களும் ஹீரோவைத் தூக்கித் தலையில் வைத்துக்கொள்ளாத குறை!

ஆனால், திருமணத் தம்பதி யிடம் ஹீரோ எம்.வி.ஆர். தெளி வாகக் கூறிவிட்டார்… ”இதோ பாருங்கோ பாலாஜி, அம்சவல்லி!. படிக்கிற காலத்துல படிக்கணும். நீங்க கொஞ்சம் அவசரப்பட்டுட்டேள்! இப்பவும் ஒண்ணும் கெட் டுப்போயிடலே. கல்யாணம்தான் ஆயிடுத்தோன்னோ… இன்னும் ஒரு வருஷம் படிப்புல கான் சென்ட்ரேட் பண்ணி, நெறைய மார்க் எடுத்து, ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணுங்கோ! அப்பதான் நான் ஒங்க கல்யாணத்துக்குத் துணையா இருந்ததுக்கு ஒரு அர்த் தம் கெடைக்கும்! என்ன, எனக்குப் பேர் வாங்கித் தருவேளா?”

கண்களில் நீர் வழிய பாலாஜியும் அம்சவல்லியும் எம்.வி.ஆர். பாதங்களில் விழுந்து, ”நிச்சயம் ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணுவோம் சார்!” என்றார்கள்.

இரண்டு பேரையும் சேர்த்து வைத்ததன் பலனாக, ஹீரோவுக்கு அவர் தினமும் போய் இறைச்சேவை செய்து வந்த பெருமாள் கோயிலில் தடையுத்தரவு கிடைத்தது! கோயிலுக்கு வந்து பூஜை புனஸ்காரங்களில் அவர் இனி ஈடுபடக் கூடாது என்று கூறிவிட் டார்கள்.

எம்.வி.ஆர். மனம் கலங்கவில்லை. மாலை வேளைகளில் பெருமாள் கோயிலுக்குப் போய் வெளியில் நின்றபடியே மனமுருகிச் சேவித்துவிட்டுத் திரும்புவார்.

போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்ததும், க்ரைம் ரைட்டரைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னான் சாரதி. ”…இன்னும் டென் மினிட்ஸ்ல அந்த ராஸ்கல் இங்கே இருந்தாகணும். பர்ஸில் மொத்தம் 3,000 ரூபா இருந்திருக்கு. சார்தான் எனக்குக் காலேஜ்ல புரொபஸர். இன்னிக்கு நான் டிகிரி முடிச்சு, இந்த ஸீட்ல சப்இன்ஸ்பெக்டரா உக்காந்திருக்கேன்னா, அது சார் போட்ட பிச்சை!”

க்ரைம் ரைட்டர் சுறுசுறுப் பானார். ஏட்டு, கான்ஸ்டபிள் இருவரையும் கூப்பிட்டுப் பேசி னார். வெளியில் போய் ஒரு ஆட்டோ பிடித்தனர். அடுத்த அரை மணியில் திரும்பி வந்தனர். கூடவே, ஒரு ஆசாமி. பேன்ட், ஷர்ட், கழுத்தில் வெளியே தெரிகிற மாதிரி தொங்கிய ஒரு மைனர் செயின்.

ஏட்டு தங்கப்பன், மைனர் செயின் ஆசாமியின் கழுத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தார். ”அடிக்காத சார்! அதான் ஒப்புக் கிட்டேன்ல!” என்றபடி தன் பேன்ட் பாக்கெட்டிலிருந்து பர்ஸை எடுத்து பவ்யமாக சாரதி முன் வைத்தான் அவன்.

”இதான் என் பர்ஸ்!” என்றார் எம்.வி.ஆர். ”இதேதான்! படுபாவி, பெருமாளைச் சேவிக்கத் திருப்பதிக்குப் போற எங்ககிட்டேயா திருடணும்? நீ நல்லா இருப் பியா?” என்றார் எம்.வி. ஆரின் சகதர்மிணி.

”உஸ்.. பாகீரதி, பேசாம இருக்க மாட்டே?”

பர்ஸை எடுத்து எம்.வி.ஆரிடம் நீட்டினான் சாரதி. ”பணம் சரியா இருக்கானு பார்த்துக்குங்க சார்!”

நூறு ரூபாய் குறைந்தது. மீதிப் பணம் பத்திரமாக இருந்தது. எம்.வி.ஆரின் குரல் தழுதழுத்தது. ”ரொம்பத் தேங்க்ஸ் சாரதி! இந்தப் பணம் இல்லேன்னா திருப்பதிக்குப் போறது இருக்கட்டும், சிதம்பரத்துக்குக்கூடத் திரும்பிப் போக முடியாது. கையில வேற பைசா கிடையாது. தக்க சமயத்துல வந்து உதவி பண்ணினேப்பா!”

”அது என் பாக்கியம் சார்! இந்தப் புகார் மனுவில் ஒரு கையெழுத்துப் போடுங்க. எஃப்.ஐ.ஆர். போட்டு உள்ளே தள்ளினாதான் இந்த நாய்க்குப் புத்தி வரும்!”

”அச்சச்சோ! புகாரெல்லாம் ஒண்ணும் வேண்டாம். ஒங்களை மாதிரி நல்ல மனுஷாளைச் சந்திக்க பகவான் இவரைப் பயன்படுத்தியிருக்கார். அதுக்கு இவருக்கு நான் நன்றிதான் சொல்லணும்” என்ற எம்.வி.ஆர். அந்த பிக்பாக்கெட்டிடம் திரும்பினார். ”ஐயா, திருடறது பாவம் இல்லியா? என்னை விடுங்கோ, ஏன்டா திருப்பதிக்கு வந்து என்னைப் பார்க்கலேன்னு பெருமாள் என்னைக் கேட்க மாட்டார். ஆனா, ஏழைகள் வேர்வை சிந்த உழைச்சுக் கஷ்டப்பட்டுச் சேர்த்து, எவ்வளவோ அவசியமான செலவுக்காக வெச்சிண்டிருக்கிற பணத்தை இப்படி பிக்பாக்கெட் அடிச்சா, பாவம் அவா என்ன பண்ணுவா, சொல்லுங்கோ?” என்று கனிவாகக் கேட்டார்.

”பிழைக்க வழி தெரிஞ்சா நாங்க திருடுவோமா சாமி?” என்று தன் செயலுக்கு நியாயம் கற்பிக்கும்விதமாக, முறைப்புடன் சொன்னான் பர்ஸ் திருடியவன்.

பர்ஸிலிருந்த பணத்திலிருந்து ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை உருவினார் எம்.வி.ஆர். பின்னர், கொஞ்சம் யோசித்தார். இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை மட்டும் எடுத்துச் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு, மீதிப் பணத்தை பர்ஸில் வைத்தார். பர்ஸை அவனிடம் நீட்டினார்.

”ஐயா! இதுல 2,700 ரூபா இருக்கு. வாழைப்பழங்கள் வாங்கி, பிளாட்ஃபாரத்துல வெச்சு வித்தாக்கூட, திருட வேண்டிய அவசியம் இருக்காது. ஆனா, இனிமே நிச்சயமா நீங்க திருடவே கூடாது, சரிங்களா?”

”நாங்க சிதம்பரத்துக்குத் திரும்பிப் போக இந்த இருநூறு ரூபாய் போதும். திருப்பதிப் பயணத்தை இப்போதைக்குத் தள்ளிவெச்சிட்டேன். இந்தப் பயணம் இந்தப் பிள்ளையாண்டானுக்கு வழிகாட்டறதுக்காக நடந்ததா இருக்கட்டும். ஏழுமலை யானைச் சேவிச்சுக் கிடைக்கிற சந்தோஷத்தைவிட, ஒரு ஏழைக்கு உதவினதுல அதிக சந்தோஷமும் நிம்மதியும் எங்களுக்குக் கிடைக் கும்கிறது நிச்சயம்!”

பொத்தென்று அவர் காலில் விழுந்தான் அவன். கண்களில் நீர் வழிய, கேவிக் கேவி அழ ஆரம்பித்தான். ”சாமி, ஒன்னிய மாதிரி எனக்கு யாராவது நல்ல வழி காட்டியிருந்தா, நான் ஏங்க இந்த ஈனப் பொழைப்பு பொழைக்கப்போறேன்? இனிமே சாவுற வரைக்கும் தப்பு வழிக்கே போக மாட்டேன், சாமி!” என்று கதறினான்.

ஸ்டேஷனிலிருந்த எல்லோ ருக்கும் நன்றி சொல்லிவிட்டு எம்.வி.ஆர். தன் மனைவியோடு கிளம்பியபோது, சாரதி அவரைக் கைகூப்பி வழியனுப்பினான். ”எம்.வி.ஆர். எப்போதுமே ஹீரோதான்!” என்று அவன் வாய் முணுமுணுத்தது!

– 14th மே 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *