போர்ஹெஸ்ஸின் செயலாளர்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 18, 2023
பார்வையிட்டோர்: 6,671 
 
 

போர்ச்சுகீசிய மூலம்:  லூசியா பெட்டான்கோர்ட்

ஆங்கிலத்தில்:  கிம்.எம்.ஹேஸ்டிங்ஸ்

தமிழில்: க. ரகுநாதன்

என்னால் இனி பார்க்க முடியாது என்பதை அவள் எப்பொழுது அறிந்தாளோ என்று எனக்குத் தெரியாது. இதை நானே முழுமையாக உணரவில்லை; நான் புத்தகங்களைப் பார்ப்பதால் அதன் பக்கங்களைப் பார்க்கவும், வாசிக்கவும், புரிந்து கொள்ளவும் முடியும் எனக் கருதினேன். அவள் இந்த உண்மையை அறிந்து, ஏற்கெனவே அவளது திட்டத்தை வகுத்திருந்தாள்.

போர்ஹெஸ்

புத்தகங்களிலிருந்து என்னை நானே விலக்கிக் கொள்வது பல ஆண்டுகளாக நீடித்தது. ஆனால் இன்னும் இன்னும் அவற்றுக்கு நெருக்கமாகவே உணர்ந்தேன். ஒவ்வொரு நாளும் குறைவாக வாசித்தாலும், நூலகத்தில் பணியாற்றியதால், என்னால் அவற்றை நாள்தோறும் தொட்டு உணரவும் முகரவும் புரட்டவும் முடிந்தது. நேரம் தாண்டி பணியாற்றியதை அறிந்த என் சார்நிலைப் பணியாளர்கள் வியப்படைந்தனர், ஆனால் என் மேல் கவிழும் அந்தியில் பகலும் இரவும் தெளிவற்று இருக்கும்போது அது விடியலா அந்திவேளையா என்பது எனக்கு ஒரு பொருட்டாக இல்லை. எனது நண்பர்கள் குழாமில் என்னை நானே இருத்திக் கொண்டேன். உன்னதமான பொக்கிஷங்கள் உறைந்திருந்த ஒய்யாரமான தோல் பைண்டிங்கில் மகிழ்ந்தேன். அவற்றின் மென் அட்டைகளால் நெகிழ்ந்தேன். என்றென்றும் அவர்களை அறிந்திருந்ததாக நான் நம்பினேன். வாசிக்கப் பழகிய பின் அதற்கான பலன் கிடைத்தது. ஒருவேளை கடந்த பிறவியில் அநேகமாக புதிர்வழியின் ஓரிடத்தில் இந்த அறிமுகம் ஏற்கெனவே செய்யப்பட்டிருக்கும். அவற்றுடன் கதைகளைப் பகிர்ந்து கொண்டதாக நினைத்தேன்; அதில் ஏற்கெனவே பதிக்கப்பட்டவை என் மனதில் இன்னும் கருக்கொண்டிருந்த கதைகளின் சகோதரி போலிருந்தன. பதிப்பிக்கப்பட்ட சொற்கள் தங்கள் சகோதரிகளுக்காக கூச்சலிட்டபடி, எழுதப்பட்ட பின் என் குறுகிய உள்ளத்தை விட்டு வெளியேறவும், வெல்ல முடியாத இராணுவம் போல இந்த உலகில் போரிடுவதற்காக ஒழுங்கமைத்திடவும் மன்றாடின. ‘வெளியிடு அல்லது அழி’ என்ற முதுமொழி புதிய பொருளை அளித்தது.

ஒவ்வொரு புத்தகத்தின் வாசனையையும் மடிப்பையும் எடையையும் வைத்தே அதனை அறிவேன். தெய்வீகமானது என அறியப்பட்டதும் மனிதநேயத்தை பெரிதும் வலியுறுத்துவதுமான தாந்தேவின் ‘டிவைன் காமெடி’யின் மாயச் சுழலை அறிவதற்கு அந்த தொகுதியின் தலைப்பை நான் வாசிக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. பயபக்தியுடன் நான் தாங்கும் அந்நூல் உருவாக்கிய அகத்தூண்டல்களின் கிளர்ச்சியை என் நரம்புகள் உணரும்; ஏமாற்றங்கள், நம்பிக்கைகள், அவமானங்கள், சிறிய வன்மங்கள் ஆகியவை அதன் அழகியல் மற்றும் முழுமைக்காக ஆசிரியனை  நற்கதி அடையச் செய்தன. இப்படைப்பில் எந்த அளவிற்கு மூடநம்பிக்கைகள் ஊடுருவியுள்ளன என்பதை நான் அறிவேன்; ஒரு வெறிகொண்ட பைத்தியம் போல் தாந்தேவின் தீவிரமான நடை வழி சென்று கொடிய தீமையின் சாத்தியங்களைத் தவிர்க்க நன்மையின் பக்கம் திரும்புவதைக் கற்பனை செய்வேன்.

மார்செல் புரூஸ்டின் தூசி படிந்த தொகுதிகளைத் துடைக்கும் போது ஒரு தேவாலயத்தின் வண்ணக் கண்ணாடி சன்னல்களில் பட்டு எதிரொலிப்பதைப் போன்ற அவரது சொற்களின் மிடுக்கான ஒலியில் என் சுவாசத்தை இழப்பேன். குவிக்ஸாட்டை கடக்க நேரும் போது அதன் மிகுபுனைவின் அரவணைப்பில் ஈர்க்கப்படுவதை உணர்ந்தபடி மது விடுதியின் ஒயின் மணத்தை முகர்ந்தவாறே மெல்லிய கிடாரின் கார்வையையும் மக்களின் நகைப்பொலியையும் செவியுறுவேன்.

பித்தும் தர்க்கமும் கலந்த வாசனையை வெளிப்படுத்தும் தத்துவ நூல்களையும் நான் அறிவேன். முடிவில்லாமல் தொடரும் பேகன் மதச் சடங்கில் பறை அதிரும் ஓசை புடைசூழ நீட்ஷே இடைவிடாது தெரிந்தார். ஸ்பினோசா, சார்த்தர், பிளேட்டோ ஆகியோர் புத்தக அடுக்குகளின் மறுமுனையில் உறங்காமல் வீற்றிருப்பதை நான் தொலைதூரத்தில் இருந்தே கண்டுகொள்ள அவர்களது தனித்துவமான குணங்கள் ஏதுவாக இருந்தன. தத்துவ நூல்களைப் போல அடுக்குகளில் ஓய்வெடுக்கும் நூல்கள் எவையும் இல்லை. அறியப்படாதவை முதல் கொண்டாடப்பட்டவை வரை, பிரபலமானவை முதல் அறிவாழம் மிக்கவை வரை அனைத்தையும் பிழையில்லாமல் என்னால் அடையாளம் காண முடிந்தது.

அவற்றைப் படிக்க எனக்குப் பார்வை தேவையாய் இருக்கவில்லை. என் மனக் கண்ணால் வாசிப்பதை உணராமலே நான் அவற்றை என் இதயத்தால் பின் தொடர்ந்தேன். அதனால்தான் என் குருட்டுத்தன்மையை உணர்ந்து கொள்ள இவ்வளவு காலம் ஆனதுடன் அது என் எழுத்திலேயே வெளிப்பட்டது, எதிர்பார்த்தபடி வாசிப்பில் அல்ல. ஒரு பயிற்சி அளிக்கப்பட்ட குரங்காகவும் அதிலும் தட்டச்சு செய்யும் பழக்கமும் உடையவனாகவும் நான் இருந்திருந்தால் உலகப் பேரிலக்கியங்களைப் படைத்திருப்பதுடன் குவிக்ஸாட்டை மட்டுமல்ல மேடம் பவாரியையும் கில்கமெசையும் என் ஆயிரத்தொரு இரவுகளில் மாற்றி எழுதியிருப்பேன். காகிதத்தில் பேனாவைப் பயன்படுத்தியே என்னால் எழுத முடியும் என்றபோதிலும் எதையும் மீண்டும் எழுத இயலாது என்பதால் நான் விரும்பும் அந்தப் படைப்புகளிலிருந்து அவற்றின் கருத்துகள் மற்றும் பேசுபொருளை எடுத்துப் பொருத்திப் பார்த்து அதற்கிடையேயான கண்ணோட்டத்தை சீராக்கி தோராயமாக விஞ்சி நிற்பதற்கு மெனக்கெட  வேண்டியிருந்தது.

என்னால் எழுத முடியவில்லை என்பதால்தான் அவளது சேவை தேவைப்பட்டது. அவள் ஏற்கெனவே என்னுடன் சிறிது காலம் பணியாற்றிக் கொண்டிருந்தாள். சமயோசிதமும் தெளிவில்லாதவளும் என்ற இந்த இரண்டு பெயரடைகளையே அவளைப் பற்றி விவரிக்க நான் பயன்படுத்த விரும்புகிறேன்; ஆனால் இதுபோன்ற விவரிப்புகளை நான் நீண்ட காலத்திற்கு முன்பே கைவிட்டுவிட்டேன். ஒரு உக்கிரமான சூரியக் கதிர் சுட்டெரிக்க முடிவு செய்யாத வரை என் குரலைப் பாதுகாக்கப் போகும் இந்த ஒலிப்பதிவுக் கருவியுடன் இணைந்துள்ள மைக்ரோபோனில் விநோதமான முறையில் எனது கடுந்துயரையும் சில காலமிருந்த உறுதியின்மையையும் கிசுகிசுக்கும் இவ்வேளையில்,  உண்மையில் என்ன நடந்தது என்பதை  என்னால் சொல்ல முடியும்.

அவள் தனது செயலாளர் பணியைத் துவங்கிய போது, ரசீதுகளையும் பதிவேடுகளையும் ஒழுங்கு செய்தல், தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்தல், பேனாவிற்கு மை நிரப்புதல், பல்வேறு வேலைகளுக்காக ஒரு நாளை தொகுதிகளாகப் பிரித்தல் என்று நாங்கள் செய்ய விரும்பாத  வேலைகளையும் அவள் செய்தாள். பதிப்பாளர்களிடம் இருந்து வரும் கடிதங்களுக்குப் பதிலளித்தல், பணத்தையும் வீட்டுத் தேவைகளையும் கையாள்வது என்பதெல்லாம் சிரமமாகிப் போன என் தாய்க்குப் பதிலாக உண்மையில் அவளே அவற்றை எல்லாம் செய்தாள். ஒரு அபாரமான பெண் என்பதால், தனது இடத்தை நிரப்பும் ஒரு பெண்ணை எனக்காக என் தாய் ஏற்பாடு செய்திருந்தாலும், அவர் காலமான பின், ஒரு குடும்பம் பாரம்பரியமாக சுவீகாரம் செய்வது போல இவளை நான் தத்தெடுத்துக் கொண்டேன். எப்பொழுதும் அமைதியானவளான அவளின் இருப்பு, காற்றின் அசைவினாலோ அல்லது ஒலியாலோ அன்றி அவளைச் சுற்றியுள்ள கனத்த மௌனத்தினாலும் அவள் உருவாக்கும் அவளது உடலின் மோனத்தாலுமே தெரிய வரும்.

எனது குருட்டுத்தன்மை வெளிப்படையாகத் தெரியும் முன்பே அதை அவள் உணர்ந்துவிட்டாள் என நான் நினைக்கிறேன். துல்லியமான கணித வித்தகர் போலவும், வாழ்வின் வடிவியலாளர் போலவும் அவள், தனது பணிக்குத் தயாரான நாளில் முதன்முதலில் ஒரு சாதாரணக் கடிதம் எழுதும்படி சொல்லத் துவங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக தன்னை என் அமைப்பின் ஒரு பகுதியாக உருவாக்கிக் கொண்டாள். அவள் துணை இல்லாமல் எழுதுவது என்பது எனக்கு முடியாத காரியமானது. எவ்வளவு வேகமாகச் சொற்களைக் கூறினாலும், எவ்வளவு மெதுவாக வார்த்தைகளை வெளிப்படுத்தினாலும் அது ஒரு பொருட்டே இல்லை என்பது போல அவள் எழுதுவது தவறாக இருந்ததே இல்லை. அவளது நுட்பமான மெல்லிய குரலில் துரிதமாக மீண்டும் மீண்டும் அதை வாசித்து என்னை நிம்மதியடையச் செய்வாள்.

அவள் என்னை நன்றாகப் பயிற்றுவித்தாள். பழக்கப்படாத ஒரு நபர் அருகிலிருப்பது போன்று நான் உணரவில்லை; என் பேனாவிற்கு மை போல, என் உடலின் ஒரு பகுதியாகவே அவளை உணர்ந்தேன். அது தேவையானது என்றாலும் அவ்வளவு முக்கியத்துவம் இல்லாதது.  தனது பணியை முடித்த  அவளை நான் நம்பினேன். அநேகமாக நான் கவனிக்காத போது அந்த முதல் இடறல் நிகழ்ந்தது. இடையூரற்ற சொல் ஒன்று ஒத்த பொருளுடைய சொல்லுக்கு மாற்றாக இருந்தது. “சொல்” என்பது அழிக்கப்பட்டு “கூற்று” என எழுதப்பட்டிருந்தது. ஏதாவது வேறுபாடு? முதலில் நான் அதைக் கவனிக்கவில்லை. அவள் எப்போதும் கவனமானவள், நல்ல சொற்சுவை உடையவள். எனது படைப்பின் ஓசை நயத்தைக் குலைக்கும் விதமான எந்த மாற்றத்தையும் அவள் ஒருபோதும் செய்யமாட்டாள்.  சொற்கட்டு எப்போதும் பின்பற்றப்பட்டாலும் நான் அதை உணராத வகையில் சில குறிப்பிட்ட நுணுக்கங்களே முதலில் மாறத் துவங்கின. 

ஒரு நாள் ஒரு சொல் மாறியிருந்ததை உணர்ந்தேன். அதற்கு முந்தைய நாள் மரபுச் சொற்றொடர் ஒன்றால் மகிழ்ச்சியற்று இருந்ததால் அந்த மாற்றத்தை உணர்ந்தேன். ஒரு சொல்லை வெளிப்படுத்தும் முன், வழக்கமாக அதன் ஒலியை என் தலைக்குள் ஒரு முறை, இரு முறை, பல முறைகள் என எதிரொலிக்க விடுவேன். ஆனால் மனம் அந்தப் பழமையான பண்டிதச் சொல்லைச் சுற்றியே தடுமாறியது என்னை அதிருப்தியுறச் செய்தது. கையறு நிலையில் பயனற்றுப் போன அந்த விடாப்பிடியான சொல்லையே ஏற்றுக் கொண்டேன். வழக்கம் போல அடுத்த நாள், எனது படைப்பு மனத்துடன் ஒன்றச் செய்திட கடைசியாக எழுதப்பட்ட பத்தியைப் படித்துக் காட்டினாள். உருக்குலைந்த சொற்றொடருக்குப் பதிலாக, நேர்த்தியான சொற்றொடர் இருந்தது, எதிர்பாராத முழுமையை அளித்ததால்  என் மூச்சு தடுமாறியது; நான் பிரமிப்பதைக் கண்டுகொண்டவள் நான் எதிர்வினையாற்றட்டும் என்று மௌனமாகக் காத்திருந்தாள். நான் கோழையைப் போல் கள்ள மௌனம் காத்தேன். எப்படியிருப்பினும் கரடுமுரடான இடத்தை செப்பனிட்டு என் படைப்பை மேம்படுத்தி முழுமையாக்கி இருந்தாள். நான் மௌனமாக இருந்தேன், மற்ற நேரங்களில் தொடச்சியாக அமைதி காத்தேன்.  திருத்தங்கள் பெருகின. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இந்தத் திருத்தங்கள் எனக்கு திருப்தியளிக்காத பத்திகளில் மட்டுமே நிகழவில்லை. ஒரு நாளில் எனது படைப்பில் கிடைத்த முடிவுகளால் திருப்தியடைந்து முடித்துக் கொண்டால் அடுத்த நாள் எனக்கு எது மனநிறைவடையச் செய்தததோ அது காணாமல் போய், அதற்குப் பதிலாக எனது வரிகளைவிட, புத்தம் புதிய ஒளிரும் ரத்தினக் கல்லைப் பட்டை தீட்டியதைப் போன்ற சிந்தனைகளை மேலும் கிளர்ச்சியாகவும் சிறப்பாகவும் வெளிப்படுத்தும் விதமான வடிவத்தில் இருந்தது.

அப்போதுதான் உண்மையான ஆட்டம் ஆரம்பமானது. துணிவு நிறைந்த அப் பெண், எனது படைப்பின் முதன்மைக் கருவையே மாற்றினாள். ஒரு முறை, இரு முறையல்ல, ஒவ்வொரு முறையும்.  விசித்திரமான கடவுளைப் போல நான் எழுதக் கூறியவற்றை ரத்து செய்வதன் மூலம் நான் புனையக் கருதிய கதாபாத்திரங்களை வீழச் செய்திருந்தாள்; அல்லது நான்  திட்டமிடாதவைக்கு அவற்றை உட்படுத்தியிருந்தாள். நான் அவற்றை சாகவிட்டால், அவள் அவற்றை காப்பாற்றினாள். காலத்தால் மாறாத முழுக் காவியத்தையும் கட்டமைத்திட முயன்றால் அதன் முடிவில் நான் சுடும் குண்டு உயிரை எடுக்கும்படி கதாபாத்திரங்களின் இதயத்தைச் சென்றடைந்தது. நான் அவர்களைக் காப்பாற்றினால், அவள் அவர்களை பயனற்ற வறண்ட தரிசைப் போல் அமைதியாக்கினாள்.

படைப்பு என்பது எனது மனதின் உற்பத்தி என்பதிலிருந்து மாறி ஒருவரையொருவர் விஞ்சும் எதிரெதிரான இரு மனங்களின் வேலையானது. பிரதி ஒரு சதுரங்க விளையாட்டு போலாகி மற்றவரின் அடுத்தடுத்த நகர்வுகளை எதிர்பார்க்க வைத்தது. நான் ஒரு வழியை அடைத்தால், அவள் ஒரு நடையைத் திறப்பாள். நான் ஒரு வழியைப் பின்பற்றினால் அவள் ஒரு பல்முனைத் தாக்குதலை அறிமுகம் செய்வாள். எனக்காக அவள் உருவாக்கிய புதிர்வழிகளில் இருந்து தப்புவதிலேயே எனது படைப்புகள் குறியாக இருந்ததால் என் நூல்கள் ஒருபோதும் சிக்கலானதாக இருந்தது இல்லை. நான் உருவாக்கும் படைப்பின் தரம் ஒருபோதும் என்னைச் சார்ந்ததாக இருக்கவில்லை என்பதை உணர்ந்து பொறாமைப்பட்டதுடன் ஒரு விளையாட்டில் நான் சிக்கிக் கொண்டதை கண்டுகொண்டேன். எரிச்சலடைந்த நான், எழுதச் சொல்வதை நிறுத்தினேன். எனது இரட்டை போல அவள் அறைகூவல் போடுவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாததால் அவளை மௌனிக்கவும் தோற்கடிக்கவும் விரும்பினேன். அவளை நிசப்தமாக்குவதுடன்  என்னை நானே தோற்கடிக்கவும் செய்தேன்.

நான் ஒரு யுக்தியை முயற்சித்தேன். எனக்கு எப்போதும் புதிய நூல்களை வாசித்துக் காட்டுபவனும் எனக்குப் பிடித்த நூல்களை மறுவாசிப்பு செய்பவனும் என்னைப் போற்றும் ஒரு வாசகரைப் படியெடுக்கும் பணிக்கு அமர்த்தினேன்.  எந்தப் பிரச்னையும் இல்லாமல் சொல்வதெழுதுதல் நடந்தாலும் அது மிகுந்த சோர்வை அளிப்பதாக இருந்தது. எனது கற்பனை நூலகத்தில் இருந்து எனது படைப்பைப் பற்றிக் கூறினால் குறிப்பிட்ட அந்தப் பக்கங்கள் எனது உலகில் மட்டுமே உள்ளன என நான் அவருக்கு விளக்க வேண்டியிருந்தது. நான் ஒரு சபிக்கப்பட்ட புலனாய்வாளன் அல்லது விதியால் வேட்டையாடப்பட்ட ஒரு குலத் தலைவனின் பெயரையோ ஒவ்வொரு எழுத்தாக உச்சரிக்கவும் அவர்களது பிறப்பிடத்தையும் பரம்பரை குறித்தும் குசலம் விசாரிப்பது போன்ற ஆர்வம் கொண்ட அவருக்கு விளக்கவும் வேண்டியிருந்தது. எதுவும் மாறவில்லை; எதிர்பாராத ஆச்சரியங்கள் எதுவும் நிகழவில்லை. எனது சொற்கள் தெளிவில்லாமலும் உயிரோட்டம் இல்லாமலும் வெளிவந்தால் அதைக் கூர்மையாக்கவும் மாற்றியமைக்கவும் யாருக்கும் துணிவில்லை; எனது சிந்தனை மழுங்கியும் சிதிலமாயும் இருந்தாலும் அதை தூசி தட்ட யாரும் இல்லை. அவளையும் அவளது அமைதியான உழைப்பையும் அவள் என்னை சிக்க வைத்த வலையால் ஏற்பட்ட ஆரம்ப ஆச்சரியத்திற்குப் பின்னர் ஊக்கமடைந்ததையும் நான் தவறவிட்டதாக உணர்ந்தேன்.

நான் அவளை மீண்டும் அழைத்தபோது இணக்கம் கொண்டவளாகத் தெரிந்தாள். ஒரு பக்கத்தை எழுதச் சொன்ன போது அவள் அதை அமைதியாக மறுவாசிப்புச் செய்தாள். நான் மதிக்கக் கற்றிருந்த அவளது பொறியில் சிக்கப் போவதை நினைத்து உணர்ச்சிப் பெருக்குடன் அவள் வாசிப்பதைக் கவனித்தேன். ஒரு மாற்றமும் இல்லை. உண்மையில் ஒரு சிறு மாற்றமும் செய்யப்படவில்லை. உடைந்த சொற்றொடர்களையும், கடினமானதும் ஓசை நயமற்றதுமான சொற்களை சொல்வதன் வழியாக அவற்றை மாற்றவும் திருத்தவும் அவளை எதிர்வினையாற்றச் செய்திட முயன்றும் எதுவும் நிகழவில்லை. நான் நிலை தடுமாறி சமநிலை குலைந்தேன்; எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. எங்களது விளையாட்டு எப்போதும் பேசப்படாததாகவும் மௌனம் சாதிப்பதாகவும் எந்தப் புள்ளியிலும் அதை விளையாடுவதாக நாங்கள் ஒத்துக் கொள்ளாததாகவும் இருந்தது. வரும் நாட்களில் எனது கட்டுரைகளில் சிறப்பான மாற்றங்களை அவள் ஏற்படுத்துவாள் என்ற நம்பிக்கையில் நான் அவளைப் போல பொறுமையாகக் காத்திருக்க முடிவு செய்தேன். இருந்தபோதிலும் அவள் உணர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல் இருந்தாள். ஒவ்வொரு நாளும் முந்தைய நாள் எழுதியவற்றை அவள் படித்துக் காண்பிக்கப் போவதையும் அதில் அவளது நியாயமான இடைச்செருகலையும் ஆவலோடு எதிர்நோக்கினேன்.  மாறாக நான் என்ன உச்சரித்தேனோ அதே சொற்களையே நான் கேட்டது என்னை பலவீனப்படுத்தவும் குழப்பமடையவும் தளர்ச்சியுறவுமே செய்தது. நான் திருத்தங்கள் செய்ய முயற்சித்தாலும் எதுவும் என்னை திருப்தியுறச் செய்யவில்லை; எனது கதை ஏராளமான சேர்த்தல் அடித்தல்களால் பாழ்பட்டது. இருந்தாலும் அவளை எதிர்கொள்ளும் துணிவு எனக்கு இருக்கவில்லை. எனது மௌனத்தை நீட்டித்தபடி, ஏமாற்றத்துடன் தினமும் குறைந்த அளவே எழுதச் செய்தேன். இப்படி எழுதினால்  எனது புதிய நூலை முடிக்க முடியாது என்பது எனக்குத் தெரியும். எனது தொகுப்பாசிரியருடன் நடத்திய சந்திப்பும் கூட புதிய கதைகளை எழுத ஊக்கம் தரவில்லை. அவள் எனக்குத் தேவையாக இருந்ததை நான் உணர்ந்த்தோடு, அவள் செய்யும் மாற்றங்களுக்கு அடிமையாகிவிட்டதுடன், எனது படைப்பு ஒழுங்கு செய்யப்பட்டு உரையாடல் வழி கட்டமைக்கப்பட்ட மேலும் மேலும் சிக்கலான புதிர்வழி நிறைந்ததாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினேன்.  

நான் பணிநீக்கம் செய்த எழுதுபவர் வந்து என்னைச் சந்திக்கும் வரை சில மாதங்கள் இது தொடர்ந்தது. எனது உற்சாகமான அபிமானியான அவர், புதிய நூலைப் பாராட்டி, புகழ் மாலைகளைச் சூட்டி ஏறத்தாழ புரியாத கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் எந்த புதிய நூலையும் நான் வெளியிட்டதாக அறிந்திருக்கவில்லை.  எனது கதைகள் சிதிலமாகவும் வடிவின்றியும் புதிர்களற்றும் இருப்பதையும் நான் நன்கறிவேன். என் கையெழுத்து இருந்தால் கூட எந்தவொரு  பதிப்பாளரும் அதை வெளியிடமாட்டார் என்பதும் எனக்குத் தெரியும். புதிய கதைகள் வருவதற்கு தாமதம் ஆவதால் அச்சில் இல்லாத  பழைய நூல்களை எனது பதிப்பாளர் புதிதாகப் பதிப்பித்திருப்பார் எனக் கற்பனை செய்திருந்த வேளையில் இந்த எழுதுபவர் சொல்வது முரண்பாடாக இருந்தது. அதுமட்டுமின்றி இந்தப் புதிய கதைகள் நான் இது வரை வெளியிட்டதிலேயே சிறப்பான கதைகள் என்றும் உறுதியாகக் கூறினார். இந்தக் கதைகளின் மாயாஜாலங்களைப் போன்று உருவாக்கிட டெடாலஸ்* கூட அறிந்திருக்க மாட்டார் என்று மிகைபடக் கூறினார். எது அவரை இந்த அளவு ரசிக்கச் செய்தது என்பதற்கு உதாரணமாக சில பத்திகளைப் படிக்கச் சொன்னேன். நான் அப்படியே உறைந்து போனேன். இனிமையும் பயங்கரமும் ஒன்றாக என்னைச் சூழ்ந்தது. அந்தக் கதை என்னுடையது, ஆனால் அதை நான் எழுதியிருக்கவில்லை. எனது கருவை அடையாளம் கண்டுகொண்டேன். என் செயலாளரிடம் நான் கொடுத்த தானியம் அவளது உள்ளத்தில் விதையாகி வேர்விட்டு முளைவிட்டு பசிய இலைகள் நிறைந்த மரமாக வளர்ந்து நிற்பதை  என்னால் கொஞ்சம் கூட அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை என்றாலும் அது என்னுடைய ஒரு பகுதியே என்பதை அறிவேன்.  என் வேண்டுகோளை ஏற்று என்னால் எழுதப்பட்ட  முழுப் புத்தகத்தையும் அவர் தொடர்ந்து படித்து முடித்தாலும் அப்புத்தகம் என்னால் கைகூடி வரப்பெற்றதல்ல என்பதும் எனக்குத் தெரியும். நான் அதைச் சொல்லியிருக்காவிட்டாலும் அந்தக் கதைகள் என்னுடையவையே. அந்த நடை என்னுடையதை ஒத்திருந்தாலும் அதில் உள்ள வேறுபாடுகளை அறிவது எனக்கே கடினமாக இருந்தது. ஒவ்வொரு சொல்லும் காட்டிய ஒளியும் மினுக்கமும் வெளிப்பாடும் அதன் எதிரொலிப்பும் எனது பிரதிகளுக்கு இல்லை என்பதையறிவேன்.

அவள் முழுமையாக என்னை அபகரித்தாள். துவக்கத்தில் என்னுடன் ஆடிய சதுரங்க விளையாட்டு போன்ற ஆட்டத்தைக் கூட விட்டுவிட்டாள். அவளைத் தோலுரித்துக் காட்ட நினைப்பது என்பது  என்னையே நான் அழித்துக் கொள்வது போன்றது. அதுவுமில்லாமல் எனது கடந்த காலப் படைப்புகள் அனைத்திற்கும் புதிய பரிமாணங்களையும் புதிய அர்த்தங்களையும் அளித்து முழுமையாக்குவதால் இந்தப் பிரதியையும் கதைகளையும்  எனது நூல் தான் என்று நான் ஒத்துக் கொள்கிறேன். இந்தப் புதிய வெளியீடு இல்லை எனில் எனது கடந்த காலப் படைப்புகள் குறைபாடுடையதாகவும் விளக்க முடியாததாகவுமே இருக்கும். 

என் நாட்டில் மிகவும் கொண்டாடப்பட்ட எழுத்தாளனாக  நான் உருவெடுத்தேன். என் வாழ்நாளிலேயே வெற்றியாளன் ஆகிவிட்ட நான் என் இறப்பிற்குப் பின் ஒரு காவியமாவேன். ஆனால் அவள் ஒரு நிழல் தான். அவளது படைப்புகளை வெளியிட அவள் என்னைத்தான் சார்ந்திருக்க வேண்டும். அவள்தான் எனது படைப்புகளின் உண்மையான ஆசிரியர் என்பதை அவளே ஒருநாள் சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். நான் தான் போர்ஹேஸ், கிரேட் போர்ஹேஸ், நேசிக்கப்பட்டவன், போற்றப்பட்டவன், ரசிக்கப்பட்டவன். பெயரும் இல்லாத, இருப்பும் அற்ற, இறுகிய மௌனத்தில் புதைந்த, என் கண்களை நிரந்தரமாக மூடியதும் இறந்துபோகப் போகிற அவள் வெறும் செயலாளர் தான். பார்வையற்றும் அமைதியாகவும் உள்ள நானே பூரணமாக பிரகாசிப்பதையும் எனது மகத்துவத்தால் அவள் சோர்ந்து போவதையும் கவனிக்கிறேன். அவள் தன்னை யாரென்று வெளிப்படுத்திக் கொண்டால் தகுதியற்ற போலி என்ற  தண்டனையை அடைவாள் என்பதால் நான் இறந்த பின்பு  எனது குரலை அவளால் அபகரிக்க இயலாது. அவளின் படைப்பைப் பாதுகாக்க அவள் அமைதியாக இருந்தாக வேண்டும். அதனால் அவள் எப்போதும் மறைந்து போவதால் நானும் கூட அமைதியாக இருப்பேன். எப்போதும் உருவாக்கப்படவே முடியாத ஆகச்சிறந்த புதிர்வழியில் என்றென்றும் கிடக்கும்படி அவளை நான் விட்டுவிட வேண்டும்:  அவளை அலட்சியப்படுத்தும் மௌனம் தான் அது.

*டெடாலஸ்- கிரேக்கத் தொன்மம். தனது மகன்  இகாரசுக்கு இறகுகள் மற்றும் மெழுகாலான இறக்கையைக் கட்டமைத்து அவர் பறப்பதற்குக் காரணமாயிருந்த மாயாஜாலக் கைவினைஞர்.

*****

மூல ஆசிரியர் லூசியா பெட்டான்கோர்ட்:  ரியோ டி ஜெனிரோவில் பிறந்த லூசியா பிரேசிலின் புகழ்மிக்க எழுத்தாளர் ஆவார். அவரது முதல் சிறுகதைத் தொகுதியான A secretária de Borges இலக்கியத்திற்கான SESC பரிசு பெற்றது. 

https://www.wordswithoutborders.org/article/borges-secretary இணைய இதழில் அக்டோபர், 2010ல் வெளியான சிறுகதை.

நன்றி: சொல்வனம்.காம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *