டாக்சி ஓட்டி பிடித்த மட்டமான சிகரெட் வாடை அவ்வதிகாலையின் சாந்தத்தைக் கெடுத்தது. சீபு விமான நிலையத்தில் இருந்து ‘காப்பிட்’ அழைத்து செல்வதாக ஏற்றியவரின் டாக்சி, முப்பது நிமிட நேர பயணத்திற்குப்பின் சாலை விளக்குகள் இல்லாத கம்பத்துப்பாதையில் குலுங்கியபடி நகர்ந்தது. ஓர் ஆற்றின் துறைமுகத்தில் என்னை இறக்கியப்பின் கிளம்பிவிட்டார். சட்டென குளிர் சூழ்ந்துகொண்டது. நான் ஆற்றங்கரையோரம் பள்ளிக்கூடத்தைத் தேடுவதைப் பார்த்த படகோட்டி ‘என்ன’ என்பதுபோல தலையை ஆட்ட கைகள் இரண்டாலும் கூம்புபோல இணைத்துக்காட்டி “ஸ்கோலா” எனக்கத்தினேன். ஏறும்படி சைகை காட்டினார். படகின் ஒரு முனை கயிற்றால் கரையில் இருந்த கட்டையில் பிணைக்கப்பட்டிருந்தது. மிதந்துகொண்டிருந்த படகில் அவர் அவ்வளவு நேரம் உறங்கியதற்கான தடயங்கள் முகத்தில் எஞ்சி இருந்தன.
படகை அருகில் நகர்த்திவந்தபோது உள்ளே ஓர் ஓராங் ஊத்தான் இருந்தது. அது அவன் வளர்ப்புப் பிராணியாக எண்ணிக்கொண்டேன். அந்தச் சின்னப்படகின் முக்கால்வாசி இடங்களை நிரப்பி விஸ்தாரமாகப் படுத்திருந்தது. வேறுவழியில்லாமல் ஓராங் ஊத்தான் நிரப்பாத இடமாகப்பார்த்து தயக்கத்துடன் அமர்ந்துகொண்டேன். அவன் ஈபான் மொழியில் ஏதேதோ பேசியபடி வந்தான். நீரைக்காட்டி கைகள் இரண்டையும் அகலமாகத் திறந்து திறந்து மூடினான். ஒன்றும் புரியவில்லை. நான் பதில் கூறாமல் இருக்கவும் அவன் அமைதியானான். துடுப்பு ஆற்றில் முங்கி எழும்போது சங்கிலி கோவையாக நீர் ஒழுகும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. அவ்வதிகாலை பனிமூட்டத்தைக் கிழித்துக்கொண்டு பயணிக்கும் படகைத்தவிர எதையும் பார்க்க முடியவில்லை. அவனிடம் ஏதும் கேட்டால் ஓராங் ஊத்தான் அருகில் வந்துவிடுமோ என பயமாக இருந்தது. மெல்லிய காற்றில் அசைந்துகொண்டிருந்த அதன் பழுப்பு நிற உரோமங்களுக்குள் விரலைவிட்டு சொறிவதும், ஏதாவது கிடைத்தால் வாயில் போட்டுக்கொள்வதுமாக இருந்தது. நான் ஒருவன் இருப்பதை அது சட்டை செய்யவே இல்லை. காப்பிட்டில் இறக்கிவிட்டு அவன் காது துவார வளைவில் திணித்து வைத்திருந்த ஒருவெள்ளி தங்க நிற நாணயத்தை எடுத்துக் காட்டினான். முதலில் என்ன சொல்கிறான் எனப்புரியவில்லை. பின்னர் என்னிடமிருந்த ஒரு ரிங்கிட் தங்க நிற நாணயத்தைக் கொடுத்தபோது ஓராங் ஊத்தான் ஓடிவந்து பெற்றுக்கொண்டது. பணி உதவியாளரை வளர்ப்புப்பிராணி எனத் தவறாகக் கணித்திருந்தேன். படகோட்டி கையை உள் நோக்கிக் காட்டி போகச்சொன்னான். சேற்றில் காலணி பெரும்பாலும் புதைந்து நடக்கச் சிரமமாய் இருந்தது.
அரசாங்கத்திடம் இருந்து கடிதம் வந்த நாள் முதல் அறிமுகமில்லாத ஒரு மாநிலத்தில் தனியாக எப்படிக் கஷ்டப்படுவேனோ என்று அம்மா அழுது நோயுற்றாள். அப்பா எப்போதும்போல உணர்வுகளைக் காட்டாமல் மௌனமாக இருந்தார். கல்வி அமைச்சில் இடமாற்றம் கேட்டு காலில் விழாதக் குறையாக மன்றாடினேன். தீபகற்பத்தைத் தாண்டி உள்ள சரவாக் மாநிலத்தில் ஆங்கிலக்கல்வி மிகவும் பின் தங்கியுள்ளது என எல்லா அதிகாரிகளும் ஒரே காரணத்தைக் கூறி என் சிறப்புத்தேர்ச்சியைப் பாராட்டினர். நல்ல முறையில் எடுத்துக்கூறினர். அப்போதும் போகமாட்டேன் எனப் பிடிவாதம் பிடித்தபோது எல்லா நிபந்தனைகளுக்கும் ஒப்புக்கொண்டே அரசின் அலவன்ஸில் மேற்கல்வியை முடித்தேன் என எனது ஒப்புதல் கையொப்பத்தை முகத்தில் தூக்கி வீசினர். நான் மசியவில்லை. மூன்று வருடங்கள் கிடைத்த மொத்த அலவன்ஸையும் வைத்துவிட்டு வேலையில் இருந்து விலகிக்கொள்ளலாம் என கடிதம் வந்தபோது நன்றாகப் படித்ததற்காக நொந்துகொண்டேன்.
பள்ளியை வெகு எளிதாகவே கண்டுப்பிடித்துவிட்டேன். மாணவர்கள் பள்ளியின் வெளிப்புறம் நின்றபடி எதன்மீதோ கல்லெடுத்து வீசுவதும் பின்னர் உற்சாகமாகக் கூச்சலிட்டவாரும் இருந்தனர். அருகில் சென்றுப்பார்த்தபோது வகுப்பறையில் இரு முதலைகள் படுத்திருப்பது தெரிந்தது. அதை விரட்ட நேர்த்தியான உடையுடன் தோற்றமளித்த இருவருடன் ஈபான் பூர்வக்குடிகள் மூவர் போராடிக்கொண்டிருந்தனர். முதலைகள் வாயைப் பிளந்தபடி நகர்வேனா என கொஞ்சம் கொஞ்சமாக உக்கிரமாகிக்கொண்டிருந்தன. ஊர்வாசிகள் ஈட்டியை அருகில் எடுத்துப்போகும்போதெல்லாம் திரும்பி எதிர்த்தாக்குதல் நடத்தின. அனேகமாக நான் மயங்கிவிழும் நிலைக்குச் சென்றிருந்தேன். ஒரு வகுப்பறைக்குள் முதலைகள் இருப்பது நான் எதிர்ப்பாராதது. ஈபான் பூர்வக்குடி ஒருவர் கொடுத்த பலமான ஈட்டிக்குத்தை வாங்கிக்கொண்டு ஒரு முதலை வேகமாக ஓடியது. மாணவர்கள் ஒதுங்கி அதற்கு வழி விட்டனர். ஆற்றில் போய் ஒரு பாறை விழுவதுபோல சத்தமெழுப்பி பாய்ந்தது. மற்றுமொரு முதலையை மூன்று ஈபானியர்கள் சேர்ந்து வலைத்துப்பிடித்தனர். முதலில் வலையை அதன்மீது வீசி நகர்ச்சியைக் கட்டுப்படுத்தினர். ஒருவன் அதன் வாலில் முழு பலத்துடன் படுக்க மற்றவன் வாயைப் பிடித்து அழுத்திக்கொண்டான். மூன்றாமவன் அதன் நான்கு சிறிய கால்களையும் மடக்கி உடலுடன் சேர்த்துக்கட்டினான். வாயை திறக்க முடியாதபடி அதன் நுனியைக் கயிற்றால் இறுக்கினான்.
“பயந்துவிட்டாயா?” தோளைத்தட்டியபடி கேட்டவர் தன்னை ‘லயாவ்’ என அறிமுகப்படுத்திக்கொண்டார். நான் அனுமானித்ததுபோலவே ஆசிரியர்தான்.
“நேற்று இரவு நல்ல மழை. பள்ளி விடுமுறை வேறு. முதலைகள் இப்படிதான் வந்து தங்கிக்கொள்ளும். இரண்டு வாரமாக உனக்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறோம்.” என்றார். பெரிய அறிமுகமெல்லாம் இல்லாமல் என்னை அவர்கள் அடையாளம் கண்டுக்கொண்டது கொஞ்சம் பதற்றத்தைத் தனித்தது. நான் எல்லாவற்றுக்கும் சிரித்து வைத்தேன். உண்மையில் என் கால்களில் நடுக்கம் பரவியிருந்தது. ஆங்கிலப்படங்கள் போல மீண்டும் ஆற்றிலிருந்து பாய்ந்து வந்து முதலை என்னை இழுத்துக்கொண்டு போய்விடுமோ என பயமாக இருந்தது. முதுகுத் தண்டில் பயம்பரவி பின்னால் ஏதோ நிற்பதுபோல உள்ளுணர்வு தூண்ட அவ்வப்போது திரும்பிப்பார்த்துக்கொண்டேன்.
முதலையை இழுத்துச் செல்ல மேலும் ஆறு பேர் வந்திருந்தனர்.
“இன்றைக்கு இரவு சாப்பாட்டுக்குதான்.” என்றுக் கண்ணடித்தார் லயாவ். எனக்கு உமட்டிக்கொண்டு வந்தது. முதலைகள் உணவை அழுகிப்போகவைத்தே திண்ணும் எனப் படித்தது நினைவுக்கு வந்தது. ஒன்றும் சொல்லாமல் முதல் நாளே முதலை குடித்தனம் நடத்திய வகுப்பறையைச் சுத்தம் செய்யும் பணியில் இணைந்துகொண்டேன். பூர்வக்குடிகள் பள்ளிக்குப் பக்கத்திலேயே முதலையை வெட்டி ஆயத் தொடங்கினர். மிகவும் போராடி அதன் உடம்பைப் புரட்டினர். ஒரு முதலை மல்லாக்காப் படுத்திருப்பதைப் பார்க்க வினோதமாக இருந்தது. வெண்மை நிறமான அதன் வயிற்றுப்பகுதி மெத்தைபோல இருந்தது. ஒரு பூர்வக்குடி இளைஞர் சிறிய கோடரியால் அதன் வயிற்றை வெட்டத்தொடங்கினான். யாருமே அந்தப்பக்கம் கவனம் செலுத்தவில்லை. வெட்டப்பட்ட வயிற்றிலிருந்து வெளிபட்ட வெண்மையான கொழுப்புப்பகுதியை ஓர் இளைஞன் கையைவிட்டு வெளியே இழுத்தபோது நான் பார்வையைத் திருப்பிக்கொண்டேன்.
அந்தப் பள்ளியில் என்னுடன் சேர்த்து மூவர் மட்டுமே ஆசிரியர்கள். மொத்தமே பதினான்கு மாணவர்கள். அது பன்மை வகுப்புப் பள்ளி. முதல் படிவ மாணவர்கள் ஒரு வகுப்பிலும் இரண்டாம் படிவ மாணவர்கள் ஒரு வகுப்பிலும் பயின்றனர். தலைமை ஆசிரியர் ஜேத்தாவிடம் ஆங்கிலத்தில் என்னை அறிமுகம் செய்துக்கொண்டேன். அவரும் முன்பு துடிப்புடன் முதலைப்பிடிப்பதில் ஈடுப்பட்டிருந்தார். முகத்தில் நிறைய சுருக்கங்களுடன் முதுமை தெரிந்தது. கடைவாயின் கடைசி பல்வரை சிரித்தார். கையைக் குலுக்கும்போது வயதுக்குப் பொறுந்திவராத உறுதி இருந்தது. அவர் கையைத் தொட்டுக்காட்டி “பலமாக உள்ளது” என்றேன். மீண்டும் கடைவாய் பல் வரைக் காட்டியவாறு “போயாக்” என்றுக்கூறி புஜங்களை மடக்கிக் காட்டினார். ‘போயாக்’ என்றால் முதலை என ஆசிரியர் லயாவ் விளக்கியபோது என் கை ஒரு முதலையின் வாயில் மாட்டிக்கொண்டிருப்பதைபோன்று உணர்ந்து விடுவித்துக்கொண்டேன்.
அன்று மதியம் எனக்காக ஒரு சிறப்பு விருந்தொன்று ரூமா பஞ்சாங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜேத்தாவும் லயாவும் என் கரம் பற்றி அழைத்துச்சென்றனர். அவர்கள் இருவருக்குமே என்னைப் பாரமாரிக்க வேண்டும் என்பதில் அக்கறை இருந்தது. எனக்கு அந்த ஊரைப் பிடிக்க வைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்கள். ஏற்கனவே ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கவந்த ஆசிரியர்கள் இந்தச் சூழல் பிடிக்காமல் பள்ளி மாறி போனதால் மாணவர்கள் மிகவும் பின்தங்கிவிட்ட வருத்தம் இருவருக்கும் இருந்தது. ஈபானியர்களான இருவருக்குமே தங்கள் இன குழந்தைகளுக்குக் கல்வியின் வழியே விடுதலை கிடைக்கும் என்ற உணர்வு இருந்தது. ஆங்கிலம் வராத அவர்களுக்கு என் வருகையும் இருப்பும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என ஒவ்வொரு செயலிலும் உணர்த்திக்கொண்டே இருந்தனர்.
தொலைவிலேயே எங்களைப் பார்த்துவிட்ட நாய்கள் குரைத்துக்கொண்டே வந்தன. நாங்கள் அவற்றைக் கடந்ததும் பின்னாலேயே குரைத்தபடி தொடர்ந்தன. வெளிப்புறம் ஒன்றிரண்டு காட்டுப்பன்றிகள் ஆடுகளுடன் கட்டிவைக்கப்பட்டுக் கிடந்தன. ரூமா பாஞ்சாங்கைச் சுற்றி மூங்கில்களால் வேலி அமைக்கப்பட்டிருந்தது. வேலிகளின் மேலே சேவல்களும் பெட்டைகளும் ஓய்வாக அமர்ந்திருந்தன. ரூமா பாஞ்சாங் வாசலில் சில பெண்கள் தென்னை ஓலையைச் சீவி விளக்கமாறு தயாரித்துக்கொண்டிருந்தனர். பெரும்பாலான பெண்கள் மார்புவரை கைலியைக் குறுக்காக அணிந்திருந்தனர். ஆண்கள் கோமணத்துடன் இருந்தனர். நான் சகஜமாக இருப்பதாக முகத்தை வைத்திருந்தும் கண்கள் ஆங்காங்கே மேய்ந்துகொண்டே இருந்தன. அப்போதுதான் மனித மண்டை ஓடுகள் நீண்ட குச்சிகளில் ஊன்றப்பட்டுள்ளதைப் பார்த்தேன். லயாவின் தொடையை அழுத்திப்பிடிக்கவும் அவர் புரிந்துகொண்டார். “அது வீரத்தின் அடையாளம். பிற இனக்குழுவின் தலையைக் கொய்து இப்படி வீட்டின் முன் வைத்துக்கொண்டால் அவர்களின் ஆண்மைக்கு அடையாளமாகப் பெண் கொடுப்பார்கள். செத்தவனின் ஆவியும் அவர்களுக்கு அடிமையாக இருந்து பாதுகாக்கும்.” எனக்கு அழுகை வாந்திபோல தொண்டையில் அடைத்துக்கிடந்தது. வாயைத் திறந்து கதறி அழ வேண்டும் என அழுத்தமாக உணர்ந்தேன். அந்த அழுத்தம் அதிகரிக்க தலை கனமாகி கண்கள் பிதுங்கின.
“ஆசிரியர்களுக்காக அரசு கட்டிக்கொடுத்த வீடு பழுதடைந்து இருக்கிறது. கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். பணிகள் முடிந்துவிடும். அதுவரை நமது துவாய் ரூமா உங்களை இந்தக் கிராமத்திலேயே தங்க அனுமதித்துள்ளார்,” என கடைவாய்ப்பல் தெரிய ஜேத்தா எனக்கு மாபெரும் உதவி கிடைத்திருப்பதுபோல பேசி முடித்தார். நான் கிராமத்து வீடுகள் எங்கே இருக்கிறது எனக்கேட்டேன். நாங்கள் அமர்ந்திருந்த மரத்தின் பின்புறம் அமைந்திருந்த ரூமா பாஞ்சாங்கைக் காட்டினர். ஒரு கிராமத்தில் வாழும் மொத்த சமூகமுமே ஒரு மாபெரும் நீண்ட வரிசை வீடுகளில்தான் வசிப்பர் என விளக்கிய லயாவ் என்னை எழுந்து சென்று துவாய் ரூமாவின் அனுமதிக்கு நன்றி கூற சொன்னார். துவாய் ரூமா மரத்தோலால் ஆன ஆடை அணிந்திருந்தார். காட்டுப்பன்றியின் கூறிய பற்கள் ஆபரணமாகக் கழுத்தில் தவழ்ந்தன. மரங்கொத்தி பறவையின் இறகுகள் மணிகளால் செய்த கிரீடத்தில் செருகப்பட்டிருந்தன. துவாய் ரூமாவின் கைகளைப் பற்றி குலுக்கியபோது சுற்றிலும் சிரிப்பொழி கேட்டது. துவாய் ரூமா நான் அவரது கைகளை ஏதோ செய்கிறேன் என முதலில் கலவரத்துடன் பார்த்தார். புரிந்துகொண்டவர் என் கைகளைப் பற்றி மற்றுமொரு கையில் சிறிய மண் பானையைத் தூக்கி ஏதோ சொல்ல கிராமவாசிகள் உற்சாகமானார்கள்.
எல்லோருக்கும் சிறிய மண்பானையில் துவாக் வழங்கப்பட்டது. முதலில் அதை ஏதோ பழரசம் என நினைத்தே அருந்தினேன். பாதி பானை இறங்கியப்பின் தலை கிறுகிறுக்கத் தொடங்கியது. மரவள்ளிக்கிழங்கைப் பதப்படுத்தி தயாரிக்கப்பட்ட சாராயம். அதிக கசப்பில்லாமல் உடலுக்கு மிதமான சூட்டைக் கொடுத்தது. லயாவ் கைகளைத் தோளில் போட்டு “எப்படி இருக்கிறது?” என்றார். நான் சிரித்தேன். எனக்கு அதன் சுவை பிடித்திருந்தது. குவளையை மீண்டும் நிரப்பி குடி என்பதுபோல சைகைக் காட்டினான். யாரும் எதையும் கண்டுக்கொள்ளவில்லை. ஜேத்தா குதூகலமாகச் சிரித்தபடி இருந்தார். போதையில் அவ்விடம் அற்புதமாக இருந்தது. திறந்தவெளியில் அதிகமும் சூரியனை அனுமதிக்காத மரங்களுக்கு மத்தியில் நான் வேலிகளில் அமர்ந்திருக்கும் சேவலில் இறகுபோல அவசரமின்றி பூமிக்கு இறங்குவதும் பின்னர் நானே சிறகாக மாறி பறப்பதுமாக இருந்தேன். கொஞ்ச நேரத்தில் பசித்தது. சேவலை மிளகிட்டு வாட்டித் தின்னவேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கும்போதே சுடச்சுட தட்டில் வறுத்த இறைச்சிவர வாயில் போட்டுக்கொண்டேன். அவ்வளவு மிருதுவான இறைச்சியை அதுவரை நான் உண்டதில்லை. தட்டு காலியாகும்போதுதான் “போயாக்” எனத் ஜேத்தா புஜங்களை மடக்கிக்காட்டிச் சொன்னார். நான் மொத்த துவாக்குடன் முதலை மாமிசத்தையும் வாந்தி எடுத்தேன்.
கண் விழித்தபோது லயாவும் ஜேத்தாவும் அருகில் இருந்தனர். நான் ஒரு கயிற்றுக்கட்டிலில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தேன். என் உடைகள் களையப்பட்டு புதிய உடைக்குள் இருக்கிறேன் என அறிந்துகொள்ள நேரம்பிடிக்கவில்லை. கூச்சமாக இருந்தது. அம்மாவைப் பார்க்கவேண்டும்போல வருத்தியது. ஜேத்தா முகத்தில் இப்போது சிரிப்பில்லை. அவர் என் கைகளைப் பற்றியபடி பேசினார். “உன்னை ஏமாற்ற வேண்டும் என நினைத்து முதலை இறைச்சியைக் கொடுக்கவில்லை. மனிதர்களும் முதலைகளும் இங்கு ஒன்றாகத்தான் வாழ்கின்றோம். எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் உண்டு. நாங்கள் ஆற்றுக்குச் சென்றால் அவை எங்களைப் பிடித்துச் சாப்பிடும். அவை தரைக்கு வந்தால் நாங்கள் அதனைப் பிடித்துச் சாப்பிடுவோம். நாங்கள் ஆற்றை நம்பி வாழ்கிறவர்கள். எனது மகன் ஆற்றில் குளித்தபோதுதான் முதலை பிடித்துக்கொண்டுச் சென்றது. நான் அழவில்லை. ஒப்பந்தம் அப்படி. இங்கு ஒவ்வொருவர் வீட்டிலும் யாராவது ஒருவர் முதலையால் திண்ணப்பட்டிருப்பர். நான் இதுவரை சாப்பிட்ட முதலைகளில் ஏதாவது ஒன்று என் மகனைத் தின்றதாகக்கூட இருக்கலாம். என்ன செய்வது. தரைக்கு வந்தால் அது மனிதனுக்கு உணவுதானே. அந்தக் கணம்தானே அதை முடிவு செய்கிறது.”
இரவு நெருங்கும்வரை லயாவ் உடன் இருந்தார்.
“உண்மையிலேயே ஜேத்தாவின் மகனை முதலை கொன்றதா? “
“கொல்லவில்லை. தரைக்கு வந்து தாக்கினால்தானே அது கொலை. அத்துமீறல். தண்ணீருக்குள் மனிதன் போனால் அது முதலையின் உணவுதானே. அது அந்தக் கணத்தில் நடந்தது. அவ்வளவுதான்.”
சரவாக்கில் பல்லைக்கடித்துக்கொண்டு வாழ்ந்துவிடலாம் என்ற நம்பிக்கை, முதல் நாளே கொஞ்சம் கொஞ்சமாக கரையத்தொடங்கியிருந்தது. மரங்களால், மூங்கில்களால் மட்டைகளால் ஆன மாபெரும் வீடுதான் ஒரு கிராமத்தின் மொத்தக் குடியிருப்பு என்பதும் அதற்குள் நான் இருக்கிறேன் என்பதும் மனதைச் சுருங்கச் செய்தது. வயிற்றில் எஞ்சி இருந்த முதலை இறைச்சியோ துவாக் பானமோ வெளியில் அடித்த சாரல் காற்றின் குளிரைத் தாங்க உடலை சூடாக வைத்திருந்தது. பசுமையின் வாசனையுடன் சுவாசம் உள்ளே செல்வது கொஞ்சம் புத்துணர்ச்சியைக் கொடுத்தது. ஓயாத பூச்சிகளின் சத்தம் நான் காட்டுக்குள் இருப்பதை அவ்வப்போது நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது. அன்றைய இரவு எப்போது விடியும் எனக்காத்திருந்தேன். கூச்சிங் நகரம் சென்று கல்வி இலாக்காவில் முதலையைக் காரணம் காட்டி மீண்டும் இடமாற்றத்துக்கு முயலலாம் என திட்டமிட்டேன். அந்த அறியத் திட்டத்தை ஒத்திப்போடக் காரணமாக இருந்தது சீமாதான்.
சிம்பாவை வீட்டுக்கு அழைத்துப்போக வந்தபோதுதான் நான் சீமாவைப் பார்த்தேன். வைத்தக் கண் வாங்காமல் அப்படியே நின்றுக்கொண்டிருந்தாள். நான் புருவங்களை உயர்த்தி என்ன என்பதுபோல கேட்டபோதும் அவளிடம் அசைவில்லை. நான் என் பார்வையைத் திருப்பிக்கொண்டேன். வகுப்பு முடிந்துபோகும்போது சிம்பாவின் கைகளைப் பற்றி நிதானமாக அழைத்துச்சென்றாள். பின் கழுத்துக்குக்கீழ் முதுகுத்தண்டின் நேர்க்கோட்டின் இடைவெளி அவளது முதுகை கவர்ச்சியாகக் காட்டியது. ஆற்றுமணல் பரவிகிடந்த அந்நிலத்தில் அவளால் நேர்த்தியுடன் நடக்க முடிந்தது. அவர்களும் அதே ரூமா பாஞ்சாங்கில்தான் வசித்தனர். அந்த வீட்டில் இருந்த பதின்மூன்று குடும்பங்களில் சீமா எந்தக்குடும்பத்தில் இருக்கிறாள் என்று கண்டுப்பிடிப்பது சிரமமாக இருந்தது. நான் என் வீட்டுக்கு வெளியே எட்டிப்பார்த்தாலே யாராவது ஒருவர் ஓடி வந்து ஏதும் உதவி வேண்டுமா எனக் கேட்பது எனக்குச் சங்கடமாக இருந்தது. ஏதாவது வேலை சொன்னால் செய்துமுடித்துவிட்டு பணம் ஏதும் கொடுப்பேனா எனச் சுற்றி சுற்றி வந்தனர். உண்மையில் என் ஒருவனின் வருகையால் அந்தக் கிராம மக்களின் சராசரி வருமானம் கிடுகிடுவென உயர்ந்தது. என் துணிகளைத் துவைக்க ஒருவர், எனக்கு உணவு சமைத்துக்கொடுக்க ஒருவர், தேவையானபோது துவாக் பானம் கொண்டுவர ஒருவர் என சகலமும் சொற்பமான கூலியில் கிடைத்தது. அவர்களுக்கு மலாயும் எனக்கு ஈபானும் தெரியாததால் பல சமயங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஏதாவது ஒன்றைச் சொல்லி புரியவைக்கும் முயற்சிகளில் என் நேரம் நல்ல முறையில் செலவானது. மொத்த ரூமா பஞ்சாங் வாசிகளும் எனக்கு வேலை செய்துக்கொடுக்கவே அங்கிருப்பதுபோல நடத்துகொண்டது சந்தோசமாக இருந்தாலும் சுதந்திரமாகச் சுற்றித்திரிய முடியாமல் இருந்தேன்.
அந்த ஊருக்கு வந்த முதல் தமிழன் நான்தான் என லயாவ் சொல்லியிருந்தார். பல ஆண்டுகளுக்கு முன் அக்கிராமத்துக்கு வெள்ளைக்காரர்கள் வந்ததாக லயாவின் தாத்தா சொல்லியிருக்கிறாராம். வேற்று இனத்தவர்களைப் பார்க்காத ஊரில் கறுப்பு நிறத்தோலுடன் இருக்கும் நான் சீமாவின் பார்வைக்கு வினோதமாகத் தெரியலாம் என்றே முதலில் நினைத்திருந்தேன். அவள் பார்வையில் ஆச்சரியம் மட்டும் இல்லை. அவளால் கண்களில் சிரிக்க முடிந்தது. சீமா பள்ளிக்குப் போகாதவள். ஈபானைத் தவிர வேறு ஒன்றும் பேசத்தெரியாதவள். எனவே சைகையால் பாராட்டுவேன். சீமாவிடம் எனக்குப் பிடிக்காதது ஒன்றுதான். அவள் எந்நேரமும் தடித்த வெள்ளைப்புழுக்களை வாயில் போட்டு மென்றுக்கொண்டே இருப்பாள். அந்தப்புழுவை அங்குள்ள பெண்கள் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். ஈபான் இனப் பெண்களின் தோல் மென்மைக்கு அந்தப் புழுதான் காரணம் என லயாவ் சொன்னபோதும் சீமாவின் வாயினுள் அவை போவதைச் சகிக்கமுடியவில்லை.
நான் சிம்பாவின் கல்வியில் கூடுதல் அக்கறைக்காட்ட ஆரம்பித்தேன். பதினான்கு மாணவர்களில் அவள்தான் கெட்டிக்காரி. சீக்கிரமாகவே ஆங்கில உச்சரிப்பு முறைகளைப் பிடித்துக்கொண்டாள். வளர்ந்து பெரியவள் ஆனால் சீமாவைவிட அழகியாகிவிடுவாள் என்பதற்கான எல்லா அடையாளங்களும் அவளிடம் இருந்தன. பாடம் சொல்லித்தருவதாக அவளை வீட்டுக்கு அனுப்பத் தாமதப்படுத்தி சீமாவைக் காக்க வைத்தேன். சீமாவும் சலிக்காமல் காத்திருப்பாள். அவளால் ஒரு கொக்குபோல அசையாமல் அப்படியே நிற்க முடிந்தது. இமைக்காமல் என்னையே பார்த்துக்கொண்டிருக்க முடிந்தது. தன் பார்வையை ஒரு பூச்சிபோல என் உடலில் ஊர செய்ய முடிந்தது. ஒவ்வொரு முறையும் நான் அவளிடம் எதிர்ப்பார்வை பார்ப்பேன். எவ்வளவு நேரம் உற்றுப்பார்த்தாலும் அவள் நாணப்படுவதில்லை. ஒவ்வொருமுறையும் நானே போட்டியை உருவாக்கி தோற்றபடி இருந்தேன்.
சிம்பாவை என்னிடம் நெருக்கமாக்குவதன் வழி சீமாவை அடிக்கடி பார்க்கும் வாய்ப்பை உருவாக்கினேன். பள்ளி முடிந்ததும் அவளை வீட்டுக்கு வரச்சொல்வேன். பாடம் சொல்லிக்கொடுப்பேன். அவசியம் இல்லாவிட்டாலும் சீமா அவளை அழைத்துப்போகும் சாக்கில் வருவாள். அவளை வைத்துக்கொண்டே பாடத்தை நடத்துவேன். அவள் நுழைந்ததும் அறையே பிரகாசமாகிவிடும். தூய வெள்ளையில் இளஞ்சிவப்பை கலந்ததுபோல் நிறம் அவளுக்கு.
சீமாவின் நினைவுகள் என்னை முழுக்கவே வீட்டு ஏக்கத்தை மறக்கடித்திருந்தது. நான் சீமாவின் வீட்டைக் கண்டுப்பிடிக்கத் தீவிரம் காட்டினேன். அது ருவாயில் இருந்து நேராக நடந்தால் வலதுபுறத்தில் நான்காவதாக இருந்தது. சிம்பா தன் வீட்டைக் காட்டக்கூடாது என்பது தன் அக்காளின் கட்டளை என்றுவிட்டபடியால் நானே ரூமா பாஞ்சாங் முழுக்க சில நாள்கள் அலைந்தேன். தொடக்கத்தில் ரூமா பாஞ்சாங்கில் நடந்துசெல்வது வினோத அனுபவமாக இருந்தது. நடக்கும்போது ஏற்படும் மூங்கிலின் உரசல் சத்தம் உடைந்துவிழும் அச்சத்தை உருவாக்கியது. ஆனால் எல்லா வீடுகளைப் போல அதுவும் உறுதியாக கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டிருப்பதை தாமதமாகவே அறிந்தேன். உறுதியான மரத்தூண்களுடன் சுனை நீக்கப்பட்டு பிளக்கப்பட்ட மூக்கில்கள் சுவராக இருந்தன. கூரையாக இருந்த ரும்பியா மட்டைகள் காற்றடிக்கும்போது சிலிர்க்கும்வகையில் சத்தமிட்டன. அவரவருக்கான வீடுகள் இருந்தாலும் ஆண்கள் எல்லோரும் இரவில் ருவாயில் படுத்துக்கொள்வர். ருவாய் மொத்த ரூமா பஞ்சாங்கின் வரவேற்பறையாக இருந்தது. பகல் நேரங்களில் நான் வராண்டாவில் இருந்தேன். அங்கிருந்து வெளியிலும் உள்ளும் நடக்கும் வேலைகளை வேடிக்கைப்பார்ப்பது சுவாரசியமானது. வெக்கையான பொழுதுகளில் கிழவிகள் கைலியை இடுப்புடன் கட்டிக்கொண்டு தளர்ந்துபோன மார்புடன் திரிவது தொடக்கத்தில் எனக்குக் கூச்சமாக இருந்தாலும் கால ஓட்டத்தில் பழகிவிட்டது. மேல்மாடியில் பெரும்பாலும் சிறுவர்களின் படுக்கை அறை இருந்தது. என் மாணவர்கள் அங்கு அமர்ந்துதான் வீட்டுப்பாடம் செய்வர். சந்தேகங்களை மேலே இருந்தபடியே என்னிடம் கேட்க நான் வராண்டாவில் இருந்தபடி விளக்கம் கொடுப்பேன். சிம்பா அப்படியல்ல. அவளது வீட்டுப்பாடங்களை என்னுடன் அமர்ந்துதான் செய்வாள்.
சிம்பா ஒருவகையில் என் தனிமையைப் போக்கினாள். அவளிடம் சொல்ல ஏராளமான கதைகள் இருந்தன. ஒரு கதையைச் சொல்லும்போது அதில் உள்ள ஏதாவது ஒரு சொல்லுக்கு ஆங்கிலத்தில் கேட்பாள். நானும் கூறுவேன். அந்தக் கதையில் அந்தச் சொல் மட்டும் ஆங்கிலத்தில் வரும். நான் ஒரு சமயம் அவளிடம் அவள் அப்பா எங்கே எனக்கேட்டேன். அவரை நான் ருவாயில் பார்த்ததே இல்லை. காட்டில் தவம் செய்யப்போயிருக்கிறார் என்றாள். ஏன் என்றேன். கெட்டவர்களைப் பழிதீர்க்க என்றாள். அப்படிச் சொல்லும்போது அவள் உடலை இறுக்கிக்கொண்டாள். கெட்டவர்களை ஆங்கிலத்தில் எப்படி அழைப்பது என்றாள். சொன்னேன். அவர்கள் எல்லோரும் அப்பாவால் அழியப்போகிறார்கள் என்றாள். எப்படி என்றேன். அவளது அப்பா பெரிய மாந்திரீகவாதியென்றும் கிராமத்தில் புகுந்து சச்சரவு செய்யும் பிற இனக்குழு ஆண்களை ரத்தம் கக்கி சாகடிப்பார் என்றும் கிராமத்துக்குமரிகளைத் தொந்தரவு செய்தால் நெற்றியில் ஆண்குறியை வளர வைத்துவிடுவார் என்றும் கூறிச் சிரித்தாள். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. நான் மீண்டும் கேட்டு மறு உறுதி செய்தேன். அவள் உறுதியாகத் தன் அப்பாவிடம் அந்தச் சக்தி உள்ளதாகவும் அதன் மூலம் கிராமத்தைப் பாதுகாத்து வைத்திருப்பதாகவும் கூறினாள். நான் அன்று இரவு சீமாவின் கண்களைச் சந்திக்கவே இல்லை. அவள் வீடு செல்லும் வரை திரும்பித்திரும்பி பார்ப்பதை உணரமுடிந்தாலும் வீட்டுக்குள்ளேயே முடங்கிவிட்டேன்.
மறுநாள் லயாவிடம் சிம்பா சொன்னது பற்றி விசாரித்தேன். சரவாக்கில் தீர்க்கமுடியாத பிரச்சனைக்கெல்லாம் மாந்திரீகம்தான் உதவுவதாகவும் சிம்பாவுடைய அப்பா பெரிய மாந்திரீகவாதிதான் என்றும் அதனால் அவர் அடிக்கடி தேவதைகளை வழிப்பட உள் காட்டுக்குச் செல்வார் என்றார். அவர் இருப்பதால்தான் வேறு இனக்குழு யாரும் இங்கு வாலாட்டுவதில்லை என்று லயாவ் சொன்னபோது எச்சிலை விழுங்கிக்கொண்டேன்.
நெற்றியில் குறி வளருவதைப்பற்றிக் கேட்டேன். சாதாரணமாக அவரால் எல்லாம் முடியும் என்றார். எனக்கு அந்தப் பதில் போதவில்லை. அதுபற்றியே கேட்டுக்குடைந்தேன். “இங்குக் கலப்புத்திருமணம் சகஜம் நண்பனே. அதேபோல உறவு வைத்துக்கொண்டால் கட்டாயம் கல்யாணம் செய்துக்கொள்ள வேண்டும். கல்யாணம் செய்தால் எங்களுடன் தங்கிவிட வேண்டும். இது தாய்வழி சமூகம். பூப்பெய்தியப் பெண்களுக்கு இங்கு மரியாதை அதிகம். பாதுகாப்பும் அதிகம். பொதுவாக இங்குள்ள பெண்கள் இவ்விடத்தை விட்டு வர விரும்ப மாட்டார்கள். அவர்களுடன் உறவை வைத்துக்கொண்டு ஏமாற்றி ஓட நினைத்தால்தான் தண்டனை நிச்சயம். சிம்பாவின் அப்பாவைப்போல இங்கு ஏராளமான மாந்திரீகவாதிகள் உள்ளனர்.”
நான் அதற்குப்பின் உஷாரானேன். நான் ஒரு தப்பும் செய்யவில்லை என காலையில் கண்ணாடியில் நெற்றியைப் பார்க்கும்போதெல்லாம் சொல்லிக்கொண்டேன். சீமா அசையாமல் நின்று பார்த்தாலும் சிறு புன்னகையுடன் அவளைத் தவிர்த்துவிட்டேன். சிம்பா மட்டும் முன்னிலும் ஆங்கிலத்தில் தேறியிருந்தாள். அவள் சொல்லும் கதைகளில் அதிகமும் ஆங்கிலச்சொற்கள் கலந்திருந்தன. சீமாவைப் போலவே அவளும் தூய வெள்ளையில் இளஞ்சிவப்பை கலந்த வண்ணத்தைக் கொண்டிருந்ததாள்.
சிம்பா இல்லாத ஓர் அதிகாலையில்தான் சீமா என் அறைக்கு வந்தாள். நான் அப்போது ஷெக்ஸ்பியரின் ‘டார்க் லேடி’ படித்துக்கொண்டிருந்தேன். அவள் வருகை எனக்கு ஆச்சரியத்தை மூட்டவில்லை. ஏதோ தயாராக இருந்தவன் போல எழுந்து அமர்ந்தேன். அவளும் என் அருகில் நெருங்கி அமர்ந்தாள். அவள் கையில் மண்ணெண்ணை விளக்குப் பிடித்திருந்தாள். குறைந்த ஒளியிலும் அவர் முகத்தின் நேர்த்தி துள்ளியமாகத் தெரிந்தது. கண்களில் என் புறக்கணிப்பினால் உண்டான ஏக்கம் இருந்தது. நான் முதன்முறையாக அவளை அவ்வளவு அருகில் பார்த்தேன். ஏதோ காட்டு மலரைச் சூடியிருந்தாள். அவ்வதிகாலையில் அதன் மனம் கிறங்க வைத்தது. எப்போதும் போல இல்லாமல் நடுவகிடெடுத்து தலை வாரியிருந்தாள். வகிடிலிருந்து கோடு வரைந்தால் மார்பின் மையம் வரை சரிசமமாகப் பிரியும். அவளது தோள்ப்பட்டையும் கைகளும் இடுப்பு சிறுத்திருந்தன. அதற்குச் சற்றும் சம்பந்தமே இல்லாத மார்புகள். மென்மையை தொடாமலேயே பார்வையின் வழி அறிய முடியும் என எனக்கு அப்போதுதான் தெரிந்தது. அசையாமல் அப்படியே இருந்தாள். நான் அவளைப் போகச் சொன்னேன். அவள் அசையவில்லை. அவளுக்குப் புரியவில்லை என தோள்களைப் பற்றி மெல்ல தள்ள முயன்றேன். அது அவ்வளவு மிருதுவானது. வலுவான எலும்புகளை உடைய தோளில் அவள் எங்கிருந்து அவ்வளவு மென்மையையும் சதைப்பற்றையும் சேகரித்து வைத்தாள் என்பது தெரியவில்லை. நான் கைகளை எடுக்கவில்லை. வாய் மட்டும் போகச்சொல்லிக்கொண்டே இருந்தது. நான் விரல்களை அவள் அங்கம் முழுவதும் அலையவிட்டேன். கைலியை இறுக்கிக் கட்டியதில் அழுத்தம் பெற்று, இருமார்புகளுக்குமான இடைவெளி குறைந்திருந்தது. நான் அந்த குறைந்த இடைவெளியில் விரலை வைத்தபோது அறிவும் எழுந்துகொண்டது. நெற்றியைப் பிடித்துக்கொண்டு ஓடினேன். கண்ணாடியைப் பார்த்தேன். தூரத்தில் நின்றே அவளைப் போகச்சொல்லி சைகை செய்தேன். அவள் ஒன்றும் புரியாமல் நின்றுக்கொண்டிருந்தாள். நான் சத்தமே வராமல் உரக்கக் கத்தும் பாவனையில் கழுத்து நரம்புகள் புடைக்க போய்விடும்படி குதித்தேன். மூங்கில் தரையின் உரசல் அதிகாலை மௌனத்தில் வன்மமாக ஒலித்தது. அவள் அதே நிதானமான பார்வையுடன் திரும்பி நடந்தாள். நான் ஒரு துணியை எடுத்து நெற்றியைச் சுற்றி இறுக்கக் கட்டினேன். சிம்பா அப்பாவிடம் மனதார மன்னிப்புக்கேட்டு அழுதபடி தூங்கியும்விட்டேன்.
விடிவதற்குள் வந்த கனவில் என் நெற்றியில் குறி இருந்தது. குறி இருக்க வேண்டிய இடம் காலியாக இருந்தது. நான் அதில் ஒரு கைக்குட்டையைச் சுற்றி வைத்திருந்தேன். சிறுநீர் கழிக்கும்போது முகத்தைக் கழுவுவதுபோல குனிந்துகொண்டேன். சீமா அப்போது என் அருகில் வந்து பின்புறமிருந்து கட்டிப்பிடித்துக்கொண்டாள். மார்புகளால் உரசியபடி முன்னே வந்தவள் நான் இப்போதுதான் அழகாக இருக்கிறேன் எனக்கூறி உதட்டில் முத்தமிட்டாள். கைலியை நழுவச்செய்து முலைகளைப் பருகக்கொடுத்தாள். என் நெற்றியில் ஒற்றைக்கொம்பொன்று முளைக்கத் தொடங்கியது. அது சுற்றப்பட்டிருந்த கைக்குட்டையையின் முடிச்சி பிரியும் வேகத்தில் விரைத்து உயர்ந்து நின்றது. அன்று முழுவதும் நிமிடத்திற்கொருந்தரம் கண்ணாடியையே பார்த்துக்கொண்டிருந்தேன். சீமா அன்று சிம்பாவை அழைத்துச்செல்ல வரவில்லை.
முழுமையாகத் தயாராகாவிட்டாலும் எனக்கான குடியிருப்பில் மறுநாளே நுழைந்தவுடன் நிம்மதியாக இருந்தது. ஆங்காங்கே பெரிய வண்டுகள் கவிழ்ந்து கிடந்தன. மூலையில் கூடு அமைத்திருந்த புறா என்னைக்கண்டதும் குனுகியது. கீழே அதன் எச்சங்கள். பள்ளிக்கும் ரூமா பஞ்சாங்கிற்கும் நடுவில் இருந்தது வீடு. பலகைகளால் ஆன தடுப்புகளும் மூங்கில் தரையும் கூரையும் கொண்ட எளிய குடியிருப்பு. எனக்குத் தேவையான மேசை, நாற்காலிகளுடன் நல்ல வெளிச்சம் வர மண் எண்ணெய் விளக்குகளும் பொருத்தப்பட்டிருந்தன. மண்டை ஓடுகள் இல்லாமல், வீட்டைப்பாதுகாக்கும் ஆவிகள் இல்லாமல் தனித்த வீடு ஒன்று கிடைத்திருப்பது மனதுக்கு நிறைவாக இருந்தது. ரூமா பாஞ்சாங்கில் இருந்து ஈபான் மக்கள் பாடும் ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது. சட்டையைக் கழற்றி ஆசுவாசமானபோதுதான் தந்தியை ஒருவன் கொடுத்துவிட்டுச் சென்றான்.
முதலில் சிம்பாவின் அப்பா என்னை மன்னித்துவிட்டார் என்றே நினைத்தேன். ஒரு விபத்தில் பேச்சுமூச்சில்லாமல் மருத்துவமனையில் அப்பா இருக்கிறார் என சுருக்கமான அறிவிப்பு அது. தகவல் இருநாள்கள் தாமதமாக வந்து கிடைத்திருந்தது. நான் அவசர அவசரமாக விமானத்துக்கு டிக்கெட் எடுத்தேன். மறுநாள் அதிகாலை விமானம் மட்டுமே இருந்தது. இருக்கும் எல்லாவற்றையும் பெட்டியில் சுருட்டி வைத்துக்கொண்டேன். லயாவும் ஜேத்தாவும் எனக்கு ஆறுதல் கூறியபடி இருந்தனர். எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் விடுப்பு எடுத்துக்கொண்டு திரும்ப வரும்படிக்கூறினர். அரசுக்குத் தெரியாமல் தங்களால் என் விடுமுறையை மறைக்கமுடியும் என உறுதிக்கொடுத்தனர். என் வீட்டிலேயே முடங்கிக்கிடந்தேன். எனக்கு ஏற்பட்ட சின்ன தடுமாற்றத்திற்காக அப்பாவை தண்டிப்பது நியாயமாகப் படவில்லை. சீமாவைப் பார்க்க வேண்டும்போல இருந்தது. அவளிடம் மன்னிப்புக்கேட்டால் அப்பா பிழைத்துக்கொள்வார் என உள்ளூர ஒரு நம்பிக்கைத் துளிர்விட்டது. அவள் என்னை முழு முற்றுமாகத் தவிர்த்திருந்தாள்.
மாலை நெருங்க நெருங்க தனிமை ஒருவித அச்சத்தை உருவாக்கியபடி இருந்தது. இரு சிறிய பானைகளில் துவாக்கை கேட்டு வாங்கி குடித்தேன். சிம்பாவை வரச்சொல்லி அவள் சொல்லும் கதைகளைக் கேட்கத் தொடங்கினேன். ஒருவேளை சிம்பாவை அழைத்துச் செல்ல சீமா வரலாம் என நம்பினேன். மழைப்பெய்யத் தொடங்கவும் வீட்டைவிட்டு யாரும் வெளியேறவில்லை. நான் வந்த முதல் நாளுக்குப் பிறகு பெய்த இரண்டாவது பெரும் மழை அது. ஆற்றில் நீர் நிறையும். நாளை வகுப்பில் முதலைகள் வரலாம் என நினைத்துக்கொண்டேன். யாரேனும் அதை வேட்டையாடி உண்பார்கள். சீமாவும் சிம்பாவும் கூட சாப்பிடலாம். சிம்பா காட்டின் கதைகளை சொல்லிக்கொண்டே இருந்தாள். அக்காளைப் போலவே நேர்வகிடு எடுத்திருந்தாள். கதையின் ஒவ்வொரு உணர்ச்சியையும் குரலிலும் கண்களிலும் வெளிக்காட்டியபடி இருந்தாள். நெடுநேரம் காத்திருந்தும் சீமா வரவே இல்லை.
காலையில் தூறல் இருந்தது. கூரை மட்டைகளில் இருந்து நீர் சொட்டிக்கொண்டிருந்தன. சிம்பாவை தூக்கிச்சென்று அவள் வீட்டில் படுக்கவைத்தேன். உறக்கம் களையாமல் இருந்தாள். கண்ணீரின் உப்பு நத்தை விட்டுச்செல்லும் தடம்போல அவள் கன்னங்களில் பிசுபிசுத்தது. ஒரு மொட்டு காலையில் மலர்வதற்கு முன் எந்த அறிகுறியும் காட்டாதது போல ஆழ்ந்த உறக்கம் அவளது. சீமாவைப் பார்க்கத் தோன்றவில்லை. பார்த்தாலும் மன்னிப்புக்கேட்கப்போவதில்லை. பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஆற்றங்கரையை நோக்கி நடந்தேன். மொத்தப்பொருள்களும் சேர்ந்து கனத்தது. அப்பாவின் நிலையைக் காரணம் காட்டினால் இடமாற்ற கோரிக்கைக்கு நிச்சயம் அரசு அனுமதிக்கும். கட்டப்பட்டுக்கிடந்த காட்டுப்பன்றிகள் என்னவோ ஏதோ என உறுமத்தொடங்கின. அவற்றின் பதறிய கண்கள் நள்ளிரவில் பார்த்த சிம்பாவின் கண்கள் போல மிரண்டிருந்தன. காலணிகள் சேற்றில் சிக்கினாலும் பாதை அவ்வளவு கடினமாக இல்லை. சீக்கிரம் ஊரைக்கடந்துவிடவேண்டும் என்ற பதற்றம் வழியில் கிடந்த எதையும் பொருட்படுத்தவிடவில்லை. படகோட்டி படகை கவிழ்த்துவைத்து அதன் மேலே படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான். ஓராங் ஊத்தான் கையில் கிடைத்த ஏதோ ஒன்றை ஆராய்ந்தபடி இருந்தது. படகை இருவருமாக ஆற்றில் இறக்கினோம். முதலில் ஓராங் ஊத்தான் ஏறி தனக்கான இடத்தை தாராளமாக்கிக்கொண்டது. ஆற்றில் நீரோட்டம் அதிகம் இருந்தது. படகோட்டி ஏதோ ஈபானில் பேசியபடி நீரைக்காட்டி கைகள் இரண்டையும் திறந்து திறந்து மூடினான்.
சிம்பாவின் அப்பா இளம்குமரிகளுடன் உறவு வைத்துக்கொள்பவனுக்கு மட்டும்தானே நெற்றியில் ஆண்குறி வளர வைப்பார் எனும் குழப்பம் அச்சமாக எழுந்தபோது ஒப்பந்தப்படி ஆற்றில் இருப்பதால் நாங்கள் முதலைகளின் இரையாகலாம் எனப்படகோட்டி சொல்வதாகப் புரிந்துகொண்டேன்.
– ஜனவரி 2018 (நன்றி: http://vallinam.com.my)