போன்சாய் மனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 6,378 
 

ரேவதி பள்ளிக்கூடம் விட்டு தூரத்தில் வந்து கொண்டிருந்தாள். அதைக் கவனித்த பக்கத்து வீட்டு பொன்னாத்தாள் மனதுக்குள் ஒரு முடிச்சு ஒன்றை போட்டவள் அதை பற்ற வைக்கவும் செய்தாள்.

“ ரேவதியம்மா…… என் மனசுக்குள்ளே ஒன்னு இருக்கு. அதை மறக்கவும் முடியல, உன்னக்கிட்டே சொல்லாம இருக்கவும் முடியல“

“ சொல்லிப்புடு பொன்னாத்தாள்“ என்றாள் சூடாமணி.

“ உன் வீட்டு பிரச்சனைங்கிறதுனாலே மேல்வாய் கிழ்வாய் மெல்ல வேண்டியிருக்கு”

சூடாமணிக்கு வயிற்றுக்குள் புளி கரைத்தது. “ என்னனுதான் சொல்லே பார்க்கலாம்?”

“ உண்மையோ பொய்யோ காதில விழுந்ததை சொல்றேன். உன் மவ ரேவதி பள்ளிக்கூடத்துல எவன் கூடவோ அடிக்கடி பேசிக்கிட்டு இருக்கிறதா கேள்விப்பட்டேன். எதுக்கும் உன் புள்ளய கொஞ்சம் கண்டிச்சு வை. இதை நான் சொன்னேனு உன் மவக்கிட்டே சொல்லிப்புடாதே . நான் வாறேன்……..” கிளம்பினாள்.

தன் மகள் திவ்யாவை விட சூடாமணி மகள் ரேவதி கூடுதலா மார்க் வாங்குவது பொன்னத்தாளுக்கு பிடிக்கவில்லை. பரீட்சை நேரத்தில் கண் ,மூக்கு ,காது வைத்து இப்படி எதையாவது கொழுத்திப் போட்டால் இறுதி தேர்வில் மார்க் குறைஞ்சிப்போகும் என்பது அவளது நினைப்பு.

ரேவதி புத்தகப்பையை வைத்துவிட்டு தாவணிக்கு மாறிக்கொண்டவள், வகுப்பில் தான் முதல் மதிப்பெண் எடுத்ததை சொல்லி அம்மாவை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற குஸ்தியில் ஓடி வந்தாள்.

“ ரேவதி ……”

” அம்மா?”

“நீ இனிமே பள்ளிக்கூடம் போக வேண்டாம்”

ரேவதி ஒடிந்த கீரைத்தண்டாட்டம் வாடி திண்ணையில் சரிந்தாள். அதற்குப்பிறகும் சூடாமணி எதை எதையோ வாய்க்கு வந்தப்படி பேசிக் கொண்டிருந்தாள்.

திவ்யா கன்னத்தில் கை வைத்தபடி சோகமாக உட்கார்ந்திருந்தாள்.

“நீ ஏன்டி குத்துக்கல்லாட்டம் எதையோ பரிக்கொடுத்தது மாதிரி உட்கார்ந்திருக்கே? ”

“ அம்மா … இனி ரேவதி பள்ளிக்கூடம் வர மாட்டாளாம். ”

“ அவள் வராட்டி உனக்கு என்னவாம்?”

“எனக்கே கணக்கு சரியா வரமாட்டங்குது. அடுத்தவாரம் அரசுப் பொதுத்தேர்வு. பரீட்சைக்கால்ல உனக்கு முன்னாடி ரேவதிதான். நீ ஒன்னும் கவலைப்படாதே உன்னை கணக்குல பாஸ் பண்ண வைக்கிறது என் பொறுப்புனு சொல்லிக்கிட்டிருந்தாள். இந்த நேரம் பார்த்து யாரோ அவள் அம்மாக்கிட்ட இல்லாததை பொல்லாததைச்சொல்லி பள்ளிக்கு வரவிடாம ஆக்கிட்டாங்க. அதான் என்ன பண்ணுறதுனு புரியாம முளிச்சிக்கிட்டுருக்கேன்.”

கிட்டத்தட்ட பிரக்ஞை தட்டிய நிலையில் சூடாமணி வீட்டை நோக்கி ஓடினாள் பொன்னாத்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *