பேராசிரியரின் கிளி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 19, 2023
பார்வையிட்டோர்: 1,684 
 
 

ஆர்தர் ரேவனல் ஜூனியர் பாலத்தைத் தாண்டியபிறகு, 21ம் எக்ஸிட் எடுத்து டிராஃபிக் சிக்னலில் நின்றபோது இடது பக்கம் திரும்ப வேண்டுமா அல்லது வலது பக்கமா என்று ஸ்ருதிக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஸ்ருதி தன் காரை கோல்மன் புலவார்டுக்குள் திருப்பிய மறுகணமே திசைகாட்டும் கருவியின் பெண்குரல் அமைதியடைந்து, அவளது அலைபேசியின் தொடுதிரை கடைசியாகக் காட்டிய வரைபடத்துடன் உறைந்து விட்டது. கூகுள் வரைபடத்தில் கூட அவளது பேராசிரியரின் வீடு பட்டியலிட்டிருக்கப்படவில்லை! அனிச்சைச் செயலாக, விஷியஸ் பிஸ்கட் தாண்டி இருந்த லான்சிங் டிரைவில் திரும்பினாள். அந்தச் சாலையில் இருந்த பாம் வீதியின் வடக்கு முனையில்தான் டாக்டர் ராமச்சந்திரனின் வீடு இருப்பதாக லெய்ச்சி சொல்லியிருந்தான். அவனுக்கு கூகுள் வரைபடம் போன்ற புதிய தொழில் நுட்பங்களில் பெரிய நம்பிக்கையில்லை. என்னதான் அறிவியல் வளர்ச்சி பெற்றிருந்தாலும் நமது மூளைத்திறன்தான் கடைசியில் கைகொடுக்கும் என்பான். தனது உயிரித்தொழில்நுட்ப ஆராய்ச்சியில் கூட அவன் இதே போன்று மிக மெதுவாக நகரும், மரபார்ந்த வழிமுறைகளைத்தான் பின்பற்றுகிறான். ஸ்ருதிக்கு எதிலும் பலன் எவ்வளவு விரைவில் கிடைக்கிறதென்பது முக்கியம். அதற்குத் தொழில்நுட்பம் உதவுமெனில், அதை ஏன் சார்ந்திருக்கக் கூடாது?

நானூறு அடித் தொலைவிலேயே தன் பேராசிரியரின் வீட்டைப் பார்த்து விட்டாள். அந்தப் பகுதியிலேயே மொத்தம் நான்கு வீடுகள்தாம் இருந்தன. அவருடையது சிவப்புக்கூரையிட்ட பழைய மரவீடு. இரண்டு அடுக்குக் கட்டிடமாக மேலெழுந்து நின்றது. மேல் தளத்தின் இடதுபுறம் உள்ள அறையின் ஜன்னல் திறந்திருந்தது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ராமச்சந்திரனும், கல்லூரி இறுதியாண்டு மாணவியான ஸ்ருதியும் அந்த அறையில் அமர்ந்து அவரது உயிரித்தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான குறிப்புகளை வெறித்தனமான ஈடுபாட்டுடன் எடுத்துத் தொகுத்ததன் சித்திரம் ஸ்ருதியின் மனதில் தோன்றியது. இப்போதும் அங்குதான் அமர்ந்திருக்கிறாரா என்ன? ஜிபிஸ் உதவாது போனபோதிலும், குறிப்பிட்ட நேரத்துக்குப் பதினைந்து நிமிடங்கள் முன்பே வந்து விட்டதை நினைத்து நொந்து கொண்டாள். ஒருவேளை வேறு சக மாணவர்கள் யாரும் வந்திருக்காவிடில் அவரைத் தனியாக எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டதை நினைத்து அஞ்சினாள். காரை இங்கேயே ஓர் ஓரமாக நிறுத்தி விட்டு, எல்லாரும் வரும் வரை காத்திருக்கலாமா என்று நினைத்தாள். ஆனால் இந்தப் பகுதியில் அப்படித் தனியாக நிறுத்தினால் குடியிருப்பவர்களின் சந்தேகப்பார்வைக்கு ஆளாக நேரிடும் என்று கருதி, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு காரை வீட்டை நோக்கிச் செலுத்தினாள்.

வீட்டின் முன்பக்கப் புல்வெளியில் நின்றிருந்த ஹோண்டா அக்கார்டுக்கு அருகில் தனது லெக்ஸசை நிறுத்தினாள். சார்ல்ஸ்டன் கல்லூரியில் அவள் இளங்கலை உயிரித்தொழில் நுட்பம் பயின்று கொண்டிருந்த போது ராமச்சந்திரன் வைத்திருந்த அதே வாகனம். இத்தனை ஆண்டுகளில் அதை மாற்றவே இல்லை போலும். கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ஸ்ருதி மூன்று வண்டிகளை மாற்றி விட்டாள். இரண்டு வாரங்களுக்கு முன்பு டேங்கர் அவுட்லெட்டுக்குச் சென்றிருந்தபோது காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த டெஸ்லாவைக் காட்டி அதன் விற்பனையாளன் ஆசையைத் தூண்டி விட்டான். கிட்டத்தட்ட அந்த வண்டியை வாங்குகிற முடிவுக்கே போய் விட்டாள். அப்படி மாற்றியிருந்தால் ஆண்டுக்கு ஒரு கார் மாற்றிய கணக்காக இருந்திருக்கும். காரை விட்டிறங்கி வெளியே வந்தாள். புற்களின் உயரம் கூடக்குறைய இருந்ததிலிருந்து புல்வெளி அவசரமாக வெட்டப்பட்டிருந்தது தெரிந்தது. தாழ்வாரத்தில் பார்த்த காட்சிதான் ஸ்ருதி மனத்தில் சின்ன அதிர்வை உண்டாக்கியது. கதவுக்கு இருபுறமும் இருந்த மலர்ச்செடித் தொட்டிகளையும் மீறி, ஓர் ஓரமாக வைக்கப்பட்டிருந்த அவளது பேராசிரியரின் பழைய நாற்காலி அவள் கண்களில் பட்டு உறுத்தியது. கல்லூரியில் அவர் அந்த நாற்காலியில்தான் அமர்ந்திருப்பார். அவளுக்கு முன் பயின்ற அவளது சீனியர்களும், அண்மையில் அவரிடம் பயின்ற மாணவர்களும் கூட பேராசிரியர் ராமச்சந்திரன் அந்த நாற்காலியில் அமர்ந்து உயிரித்தொழில்நுட்பத்தின் ரகசியங்களை விளக்கும் சித்திரத்தை கண்கள் விரிய விதந்தோதுவதைக் கேட்டிருக்கிறாள். ஸ்ருதிக்கும் ராமச்சந்திரனை நினைத்தால் அந்த நாற்காலியில் அவர் அமர்ந்திருக்கும் சித்திரம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. அந்தச் சுழல் நாற்காலியில் அமர்ந்தபடியே வெள்ளைப்பலகையில் மனித டிஎன்ஏவின் படத்தையும், மரபணுவின் வரிசை முறையையும் வரைந்து காட்டி அவற்றின் இயங்கு முறைகள் பற்றி விவரிப்பார். அப்பேற்பட்ட புகழ் பெற்ற நாற்காலி இப்போது வீட்டுக்கு வெளியில் கிடந்தது. அதன் தோல் நிறம் மங்கித் தேய்ந்து, தலை சாய்க்குமிடம் உடைந்து, முதுகு சாயுமிடம் தொங்கிப் போய்…

அழைப்பு மணிக்கு பதிலளித்தது அவளது பேராசிரியரேதான். வாயிற்கதவைத் திறந்து, புயல் பாதுகாப்புக்கென இருந்த கண்ணாடிக்கதவு தானாகவே மூடி அவள் மேல் இடித்துவிடாமலிருக்க ஒருகையால் பிடித்துக்கொண்டு, அவளை ஏறிட்டுப் பார்த்தபடி நின்றார். ஸ்ருதி உள்ளே நுழையக்கூடத் தோன்றாமல் அதிர்ந்து நின்றிருந்தாள். எதிரில் நின்றது அவளது பேராசிரியரைப் போலவே இல்லை. ஏதோ நைந்த கிழவரைப் பார்க்கிற மாதிரி இருந்தது. பதினைந்தே ஆண்டுகள் ஒரு மனிதனை எப்படி முதுமை கொள்ள வைத்து விடுகின்றன? அதுவும் உடலில் குடியேறும் முதுமையை விரட்டும் உயிரித்தொழில் நுட்ப ஆராய்ச்சியில் வாழ்நாள் முழுக்க ஈடுபட்டவரைக்கூட அது விட்டு வைப்பதில்லை! தலை முழுக்க முடி நரைத்து, அடர்த்தி குறைந்து உள்மண்டை வழுக்கைத் தெரியுமளவுக்கு ஆகியிருந்தது. எப்போதும் போல முகத்தை நன்றாக மழித்திருந்தார். ஆனாலும் அவர் முகத்தில் ஸ்ருதி பார்த்த மிருதுவும், மென்மையும் காணாமல் போயிருந்தன. முகத்தில் ஆங்காங்கே பழுப்பு நிறத்தில் தேமல்கள். கண்களுக்குக் கீழே இரைப்பைகள் ஊதியிருந்தன. ஆனால் உடல் பெரிதாக எடைகூடாமல் அப்படியே இருந்தார். கசங்கல்களுடன் கூடிய, கோடுகள் போட்ட நீல வண்ணச் சட்டை அணிந்து, அதன் மேல் அவருக்குப் பிடித்தமான வெண்ணிற நேரு கோட்டை அணிந்திருந்தார். அவர் போட்டிருந்த கறுப்பு பேண்டும் கசங்கியிருந்தது. அன்றைய நிகழ்வுக்குப் பொருத்தமான உடை இல்லைதான். ஸ்ருதி தான் அணிந்திருந்த ஆடையை நினைத்துக் கொண்டாள். இவ்வார இறுதியில் சான் ஃப்ரான்ஸிஸ்கோவில் நடக்கவிருக்கும் ஜெரொண்டொஜீன்கள் குறித்த கருத்தரங்கில் தலைமையுரையாற்றுவதற்காக அவளுக்கு அழைப்பு வந்திருந்தது. அதற்கெனவே பிரத்யேகமாக புதிதாக வாங்கியிருந்த தொள்ளாயிரம் டாலர் மதிப்புடைய வெளிர்மஞ்சள் நிற ஆடையை அன்று அணிந்திருந்தாள். அன்றைய நிகழ்வு அவள் பொருட்டா அல்லது அவளது பேராசிரியரின் பொருட்டா என்று வியந்து கொண்டாள்.

ராமச்சந்திரன் சங்கடமாகப் புன்னகைத்து, “உள்ளே வா,” என்றார். ஸ்ருதி சுதாரித்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். நுழைகையில் கண்ணாடிக்கதவைப் பிடித்து நின்றிருந்தவரின் மீது மென்மையாக உரசியபடிச் செல்ல வேண்டியிருந்தது. அதே கணம் ராமச்சந்திரன் தனக்குள் சுருங்கி அவசரமாகப் பின்வாங்கியதையும் அவளால் உணர முடிந்தது.

ஸ்ருதி உள்ளே நுழைந்ததும் தன் ஷூக்களை கழற்றி விட்டுவிட்டு ஒதுங்கி, தயங்கியபடி நின்றாள். ராமச்சந்திரன் கதவை மூடிவிட்டு அவளெதிரில் வந்து நின்று புன்னகைத்தார். அவர் கண்களில் ஏதேனும் குற்ற உணர்ச்சி தென்படுகிறதா என்று தேடிப்பார்த்தாள் ஸ்ருதி. அவர் அவள் பார்வையைத் தவிர்த்து, “காயத்ரி!” என்றழைத்தார். உள்ளிருந்து அவர் மனைவி வந்தாள். பின்னாலேயே அவளது இரு மகள்களும் வந்தனர். அவரது மனைவியின் அதீத கவனிப்பு கொண்ட ஒப்பனைகூட அவள் வயதை மறைக்கமுடியவில்லை. அந்த அம்மாளின் முன் தன் இளமைத் திமிறலைப் பெருமையாக உணர்ந்தாள். அவளது இரு பெண்களும் தன்னையும், தங்கள் தாயையையும் ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்வார்களா என்று நினைத்துக் கொண்டாள். இந்தக் காலத்துப் பெண்களுக்கு அழகு என்பதன் அளவுகோலே வேறுதான். தொப்புளில் வளையம் மாட்டிக் கொண்டு, பஞ்சு மிட்டாய் நிறத்தில் தலைக்குச் சாயம் பூசியிருந்தால் ஒருவேளை அவர்களைக் கவரமுடியுமோ என்னவோ. முதல் பெண் சமந்தாவை ஸ்ருதிக்குத் தெரியும். ஸ்ருதி பேராசிரியரிடம் பயின்றபோது அவள் மூன்று வயது குழந்தை. இரண்டாவது பெண்ணுக்குப் பனிரெண்டு வயதிருக்கும் போல் தெரிந்தது. அவள் வலது கையில் ஒரு பெரிய சைஸ் கிளி அமர்ந்திருந்தது.

ஐவரும் ஒரு கணம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ஸ்ருதி ஒவ்வொருவரையும் மையமாகப் பார்த்துப் புன்னகைத்தாள். அந்தக் கிளி, “இடியட்!” என்று கத்தியது.

பேராசிரியரின் இரண்டாவது பெண் குலுங்கிச் சிரித்தாள். “அப்பாவைத்தான் கூப்பிடுது,” என்றாள்.

“ஹென்னா! சும்மா இரு. ஸ்ருதி, ப்ளீஸ், கம் இன்சைட்,” என்றபடி அவளை உள்ளே அழைத்துச் சென்றாள் பேராசிரியரின் மனைவி. அனைவரும் பின்தொடர்ந்தனர். வரவேற்பறையில் இருந்த சோஃபாக்களில் சுற்றியும் அமர்ந்தனர். ஸ்ருதிக்கு சட்டென்று காலயந்திரத்தில் பின்னே சென்ற மாதிரி இருந்தது. அந்த வீட்டில் எதுவுமே மாறவில்லை. அதே பழைய மைம்ஸ் சோஃபாக்கள். பிங்க் நிறத்தில் சுவர்கள். சுவற்றில், மலிவுப்பதிப்பில் வாங்கிய சால்வடார் டலியின் ஞாபகத்தின் நச்சரிப்பு. தலைக்கு மேல் மங்கலான மின்விளக்குடன், மெல்லிய ஒலியுடன் சுழலும் மின்விசிறி. உணவுக்கூடத்தின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த கடவுளர் சிலைகளைத் தாங்கி நின்ற சிறிய அலமாரி. வீடெங்கும் பரவியிருந்த மெல்லிய மசாலா வாசனை. அப்புறம் புத்தகங்கள், புத்தகங்கள்…அவளுக்கு அந்த வீட்டை விட்டுச் சென்றது போலவே இல்லை. ஸ்ருதிக்குப் பக்கத்தில் இரண்டாவது பெண் ஹென்னா அமர்ந்தாள். அவள் கையிலிருந்த கிளி, தலை குனிந்து சிறிய யானைத்தந்தம் போலிருந்த தன் அலகால் இறகுகளைக் கோதிவிட்டுக் கொண்டிருந்தது. உடல் முழுக்க சிவப்பு நிறம். இறகுப்பகுதியில் மட்டும் அடர் நீலமும், மஞ்சளும் இரண்டு பட்டைகளாய்ப் பரவியிருந்தன. நீண்டு வளைந்த நகங்கள் கொண்ட பாதங்கள் ஹென்னாவின் முழங்கையைக் கவ்விப் பிடித்துக் கொண்டிருந்தன. கிளி சட்டென்று கோதுவதை நிறுத்தி விட்டு இவளைப் பார்த்தமாதிரி இருந்தது. ஸ்ருதிக்கு அந்தக்கிளியைக் குறித்து ஏதோ அசூயையான உணர்வு தோன்றியது. என்னேரமும் அது அவள் மேல் தாவி விடும் போலிருந்தது.

“எப்படி இருக்கே ஸ்ருதி? பதினைஞ்சு வருஷமாச்சு பாத்து. ஆனா அப்ப பார்த்த மாதிரியே இருக்க,” என்றாள் காயத்ரி.

வெளிர்மஞ்சள் ஆடை இறுக்கிப் பிடித்திருந்த தன் உடலை ஒரு கணம் உணர்ந்தாள் ஸ்ருதி. வாரத்துக்கு நான்கு நாட்கள், ஒன்றரை மணி நேரம் உடற்பயிற்சிக் கூடத்தில் உழைப்பதும், அதீதமான உணவுக்கட்டுப்பாடும் கொடுத்த பலன். “ஐ’ம் ஆல்ரைட்!” என்றாள்.

அதற்குமேல் என்ன கேட்பதென்று காயத்ரிக்கும் தெரியவில்லை. “எல்லாரும் பேசிக் கொண்டிருங்கள். அவனில் பிரியாணி வைத்திருக்கிறேன். பார்த்து விட்டு வந்து விடுகிறேன்,” என்றபடி எழுந்தாள். அவளோடு முதல் மகளும் எழுந்து சென்று விட்டாள்.

ஹென்னா அவள் கிளியோடு இன்னும் பக்கத்திலேயேதான் அமர்ந்திருந்தாள். ராமச்சந்திரன் எதிரில் அமர்ந்திருந்தார். இருவருமே பார்வையைத் தவிர்த்துக் கொண்டிருந்தனர்.

“இது ஸ்கார்லட் மக்காவ்தானே?” என்று கேட்டாள் ஸ்ருதி.

“ஆமாம். அப்பாவோட மாணவர் அவருக்குப் பரிசளித்தது. ஸீட்டா என்று பெயர் வைத்திருக்கிறேன். பரவாயில்லை, பட்டுன்னு பேர் சொல்லிட்டீங்க. அப்பாக்கு நான் சொல்லித்தான் தெரிஞ்சுது,” என்றாள் ஹென்னா.

“இந்தியாவில இந்த மாதிரி உருவம் இருக்கிற எல்லாமே கிளிதான்,” என்றார் ராமச்சந்திரன்.

“பேசுமா?” என்றாள் ஸ்ருதி.

“நாலு மாசமா இருக்கு. ஒரு சில வார்த்தைகள்தான் பேசுது. ஆயிரத்து முன்னூறு டாலருக்குக் கொஞ்சம் கம்மிதான்.”

“தாமஸ் ஸ்ட்ரோபில் மெக்சிகோவிலிருந்து கொண்டு வந்தான். முதல்ல க்வேக்கர் என்கிற வகையைத்தான் வாங்கி வருகிறேன் என்று சொன்னான். நல்லாப் பேசுமாம். ஆனா இங்க நம்ம ஸ்டேட்ல அதை வைத்துக்கொள்ள அனுமதி இல்ல,” என்றார் ராமச்சந்திரன். அவளிடம் ஏதோ பேச வேண்டும் என்று ஆரம்பித்த மாதிரித் தோன்றியது. ஸ்ருதி அவரை ஏறிட்டுப் பார்த்தாள். தன்னிடம் பேசுவதற்குக்கூட அவருக்கு விஷயங்கள் இருக்கின்றனவா என்று அவளுக்கு வியப்பாக இருந்தது. ‘இத்தனை வருடங்கள் அப்படி எதுவுமே இல்லாது போனது ஏன்? பதினைந்து ஆண்டுகளுக்கு முன், அவரது மாடியறையில் ஆராய்ச்சிக் குறிப்புகளுக்கான வேட்டையில் இருந்தபோது தாவி அணைத்துக் கொண்டது அவர் தவறுதானே! அவர்தானே பதறி விலகினார்? பத்தொன்பதே வயதான என்னிடம், அவர்தானே மன்னிப்பு கோரினார்? நான்தான் அவரை மன்னித்து விட்டேனே. அதற்குப் பிறகும் ஏன் அவர் வட்டத்தில் என்னை அனுமதிக்க மறுத்தார்? மறுநாளே இனி வீட்டில் பணியைத் தொடர வேண்டாம் என்றார். ஆனால் அந்த வாரமே என்னை மொத்தமாக அவருடைய ஆராய்ச்சியில் உதவுவதிலிருந்து முழுக்கவே விலக்கி விட்டார். தவறிழைத்தது அவர், தண்டனை மட்டும் எனக்கா?’

“நீங்கள் கொஞ்ச நேரம் வைத்திருக்கிறீர்களா? இது ரொம்பவும் சாது,” என்றாள் ஹென்னா.

ஸ்ருதி பதிலுக்கு புன்னகைத்து விட்டு, அந்தக் கிளியைத் தடவிக் கொடுத்தாள். இலவம்பஞ்சு உருண்டையைத் தொடுவது போலிருந்தது. கிளியின் உடலில் மெல்லிய அதிர்வுகள் இருந்தது தெரிந்தது. பிறகு, தன் புன்னகை மாறாமல் தன் வலது கையை நீட்டினாள். கிளி தன் ஒரு காலைத் தூக்கி அவள் முழங்கையில் வைத்தது. ஸ்ருதி எதுவோ சிராய்ப்பது போன்ற வலியை உணர்ந்தாள். கையைப் பின்னிழுத்துக் கொள்ளலாமா என்று ஒரு கணம் நினைத்தாள். அவள் எண்ணத்தை அறிந்ததைப் போல கிளி தன் காலை இழுத்துக் கொண்டது. பின் ஹென்னாவின் முழங்கையிலிருந்து குதித்து தோளில் ஏறிக்கொண்டது. ஸ்ருதி சோஃபாவில் சற்று அசைந்து, நகர்ந்து அமர்ந்து கொண்டாள்.

அழைப்பு மணி ஒலித்தது. லெய்ச்சியும், மற்ற நண்பர்களும் வந்து விட்டார்கள். ராமச்சந்திரனே எழுந்து போய் கதவைத் திறந்தார். எல்லாரும் முகமன் கூறிக்கொள்வதும், அணைத்துக் கொண்டு விசாரிப்புகள் செய்வதும் கேட்டது. ஒவ்வொருவராக உள்ளே வந்தார்கள். லெய்ச்சி, டகாஷி, ஹிரோயுகி, சஞ்சய், ஷிவ் தேசாய். ஸ்ருதியுடன் கல்லூரியில் பேராசியரிடம் ஒன்றாகப் படித்தவர்கள். அவரே அவர்களது முனைவர் பட்டப்படிப்புக்கு வழிகாட்டியாகவும் இருந்தார். ஸ்ருதியை மட்டும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவளைக் கண்டதும் நண்பர்கள் முகம் மலர்ந்து விட்டனர். ஒவ்வொருவராக வந்து அவளை அணைத்துக் கொண்டனர். அவள் வருவாள் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. எல்லாரும் கொண்டு வந்திருந்த பரிசுப் பொருட்களை தொலைக்காட்சிக்கு அருகிலிருந்த மேஜையின் மீது கொண்டு வைத்தார்கள். அப்போதுதான் ஸ்ருதிக்குத் தான் வாங்கி வந்த பரிசுப்பொருள் நினைவுக்கு வந்தது. மெல்ல எழுந்து மேஜைக்கருகில் சென்று தன் கைப்பையிலிருந்து ஒரு சிறிய பரிசுப்பெட்டியை எடுத்து வைத்தாள்.

அனைவரும் உணவு மேஜையைச் சுற்றி அமர்ந்தார்கள். முதல் பெண் சமந்தா எல்லாருக்கும் என்ன வைன் வேண்டும் என்று கேட்டு மேஜையைச் சுற்றி சுற்றி வந்து ஊற்றிக் கொண்டிருந்தாள். ஸ்ருதி சிவப்பு வைன் கேட்டு வாங்கிக் கொண்டாள். பேராசிரியரின் மனைவியும், ஹென்னாவும், சமையலறையிலிருந்து உணவுப்பொருட்களை எடுத்து வந்து மேஜையில் வைத்துக் கொண்டிருந்தார்கள். அவளுடைய கிளி மாடிப்படியின் கைப்பிடியின் மீது அமர்ந்து கொண்டு, “ஹென்னா! ஹென்னா!” என்று கத்திக் கொண்டிருந்தது. ஒரு கணம் எல்லாரும் அதைத் திரும்பிப்பார்த்தார்கள்.

“எங்க வீட்டு சீதா,” என்றார் ராமச்சந்திரன், புன்னகையுடன்.

“அப்பா, அது பேர் ஸீட்டா, சீதா இல்ல,” என்றாள் ஹென்னா, மெல்லிய எரிச்சலுடன்.

“அது சரி, அது ஆணா, பெண்ணான்னு யாருக்குத் தெரியும்? வேணுமானா டிஎன்ஏ பரிசோதனை செய்துதான் கண்டுபிடிக்கணும்,” என்றான் ஷிவ் தேசாய், கிண்டலாக.

“அவ சொல்லிக் கொடுக்கறத மட்டும்தான் அது சொல்லும்,” என்றாள் அவளது அம்மா, குற்றம் சாட்டும் பாவனையில். “பின்னே! அதுவா எதுவும் சொந்தமா பேசும்னு நினைச்சியா?” என்று கேட்டு விட்டு மீண்டும் தன் குலுக்கல் சிரிப்பை வெளிப்படுத்தினாள் ஹென்னா. சில நிமிடங்களில் கிளியை எல்லாரும் மறந்து விட்டு தங்கள் உரையாடலில் ஈடுபட்டு விட்டார்கள். தாங்கள் இப்போது பணிபுரியும் துறையில் எதிர் கொள்ளும் சவால்கள், சாதித்த விஷயங்கள், பேராசிரியரின் வழிகாட்டுதல் அவர்கள் வாழ்க்கையில் உதவிய விதம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள். ஸ்ருதி அவ்வப்போது சிரித்தும், தலையசைத்தும், உரையாடலில் கலந்து கொள்வதைப் போல பாவனை செய்து கொண்டிருந்தாள். கிளி அமர்ந்திருந்த மாடிப்படியை நோக்கினாள். சட்டென்று நினைவு மீண்டும் அந்த நாளை நோக்கிச் சென்றது. அவளும், பேராசிரியரும் அருகருகில் அமர்ந்து, அவர் கொடுக்கும் குறிப்புகளை பரபரவென்று அவள் எழுதிக் கொண்டிருக்கும் சித்திரம். பக்கங்களுக்குள் அவள் விழுந்து வரைபடங்களினூடாகவும், அட்டவணைகளினூடாகவும் தவழ்ந்தும், வழுக்கியும் சென்று கொண்டிருக்கிறாள். சட்டென்று பேராசிரியரின் சூடான சுவாசம் அவளது பின் கழுத்தில் விழுகிறது. எழுதுவதை மெல்ல நிறுத்துகிறாள். பேராசியர் அவளை நோக்கிக் குனிவதை உணர்கிறாள். ஒரு கணம் உடலின் உறுப்புகள் அனைத்தும் உறைந்து விடுகின்றன. இதயம் ஒவ்வொரு துடிப்புக்கும் இடையில் நிறைய இடைவெளி விடுவதாகத் தோன்றுகிறது. அவர் அடுத்த கணம் செய்யவிருப்பதை உள்ளம் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

“டிங்க், டிங்க், டிங்க்! ப்ளீஸ், உங்கள் கவனத்தைக் கோருகிறேன்!” என்றான் லெய்ச்சி. “நாம் எல்லாரும் இன்று இங்கு குழுமியிருப்பதன் காரணம் என்ன? பேராசிரியர் திலீப் ராமச்சந்திரன் ஓய்வு பெற்றிருக்கிறார். அவருக்கு அவரது முன்னாள் மாணவர்கள் நாமெல்லாம் சேர்ந்து பிரியாவிடை கொடுக்கவே இங்கு இணைந்திருக்கிறோம். இவ்வளவு விரைவில் நீங்கள் ஓய்வு பெற்று விடுவீர்கள் என்று நாங்கள் நினைக்கவே இல்லை, ப்ரொஃபசர். நன்றி, எங்களை இந்த உயிரியல் துறையில் ஆற்றுப்படுத்தியதற்கும், எங்கள் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றியதற்கும். நன்றி, ப்ரொஃபசர், நன்றி. எல்லாவற்றுக்கும்.” அவன் குரல் உணர்ச்சி மேலிட்டு சற்றே உடைந்தது. தன்னைக் கட்டுப்படுத்தியவனாக, “டு த ப்ரொஃபசர்!” என்றான், தன் வைன் கோப்பையை உயர்த்தி. எல்லாரும் தங்கள் கோப்பைகளை உயர்த்தினார்கள். அவரது மாணவர்கள் “டு த ப்ரொஃபசர்,” என்று திரும்பச் சொன்னார்கள். பின் தங்கள் கோப்பையிலிருந்து ஒரு மிடறு விழுங்கினார்கள். உணவு மேஜையைச் சுற்றிலும் கலகலவென்று பேச்சு மீண்டும் ஆரம்பித்து விட்டது. சஞ்சயும், ஷிவ் தேசாயும் ஹிந்தியிலும், மற்ற மூன்று நண்பர்கள் ஜப்பானிய மொழியிலும், எல்லாருக்கும் பொதுவாக ஆங்கிலத்திலும் பேசினார்கள். அம்மாவும், இருபெண்களும் சுழன்று, சுழன்று உணவு வகைகளை எடுத்து வருவதும், காலிப் பாத்திரங்களை எடுத்துச் செல்வதுமாக இருந்தார்கள். ராமச்சந்திரன் மையமாகப் பார்த்து எல்லாருக்கும் ஓரிரு சொற்களில் பதில் கொடுத்துக் கொண்டிருந்தார். காயத்ரி ஸ்ருதியின் அருகில் வரும்போது மட்டும் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று தமிழில் விசாரித்துக் கொண்டிருந்தாள். பீங்கான் தட்டுகளில் முள்கரண்டிகளும், கத்திகளும் மோதும் ஒலி. நீ தந்தூரி சிக்கன் எடுத்துக் கொண்டாயா? இந்த பன்னீர் பட்டர் மசாலா நன்றாக இருக்கிறதல்லவா? என்ற விசாரிப்புகள். ஒருவருக்கொருவர் பார்த்துத் தலையசைப்புகள். புன்னகைகள்.

‘என்னை ஏன் தவிர்த்தீர்கள், ப்ரொஃபசர்? நான்தான் உங்களை மன்னித்து விட்டேனே? உங்கள் பதற்றத்தையும், அச்சத்தையும் நான் கண்டுகொள்ளவேயில்லையே? நான் உங்களோடே இருந்திருந்தால் உங்களுக்கு இந்த நிலை வர விட்டிருப்பேனா? நீங்களேதான் இந்தப் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறீர்களா? குடித்து விட்டுப் போய் வகுப்பெடுத்தால் யார் வேலைக்கு வைத்துக் கொள்வார்கள்? என்னைப் பழி வாங்கும் வகையில் நீங்கள் நடந்து கொள்வதற்கு என் பக்கமிருந்து நான் இழைத்த குற்றம் என்ன? ஏன் என் மீது இத்தனை வன்மம்?’

“டாக்டர் ஸ்ருதி ஈஸ்வரனுடன் நாம் பயின்றது நமக்கெல்லாம் பெருமை. இன்றைக்கு அவள் உலகம் புகழும் உயிரித்தொழில்நுட்ப அறிவியலாளர். நேச்சர் பயோடெக்னாலஜி இதழில் அவள் எழுதி வரும் கட்டுரைகளைப் பற்றி அறிவியல் உலகில் எல்லாரும் பேசி வருகிறார்கள். சென்ற ஆண்டு கைர்ட்னர் விருதை வாங்கியிருக்கிறாள். ப்ரொஃபசர் ராமின் மாணவர்கள் சோடை போவதில்லை என்பதற்கு ஸ்ருதி ஓர் உதாரணம்,” என்றான் டகாஷி.

‘ஒருவேளை நான் இப்படிப் புகழ் பெற்று வருவது உங்களுக்குப் பொறுக்கவில்லையா? இந்தத் துறையில் ஒவ்வொரு மைல்கல்லை எட்டும்போதும் குவியும் பாராட்டுகளுக்கிடையில் உங்களது சின்ன அங்கீகாரமாவது என்னை வந்து எட்டிவிடாதா என்று எத்தனை நாள் ஏங்கியிருப்பேன்? நீங்கள் கொடுத்த ஒரே ஒரு வானொலி நேர்காணலில் உங்களால் என்னைக் குறித்த கேள்வியைத் தவிர்க்க முடியாதபோது கூட, நான் செய்திருப்பது பெரிய சாதனை அல்ல என்பது போன்ற தொனியில்தானே பேசினீர்கள்? உங்களது வேறு மாணவர்கள் யாரேனும் இத்தகைய சாதனையை நிகழ்த்தியிருந்தால் இப்படி கண்டுகொள்ளாமல் இருந்திருப்பீர்களா? அன்று மாடியில், உங்கள் அறையில் நிகழ்ந்த அந்த நிகழ்வு உங்களுக்குள் குற்ற உணர்ச்சியாக நிலைத்தது மட்டுமல்லாமல், அதுவே என் மீதான ஆழ்ந்த வன்மமாக இப்போது மாறியிருக்கிறதா?’

ஷிவ் தேசாய் சொன்னான். “ப்ரொஃபசர் ராம் இதே போன்று புகழ் பெற்றிருக்க வேண்டியவர். வகுப்பறைகளுக்குள்ளேயே தன்னை இருத்திக் கொண்டார். அவர் மாணவர்கள் உயரம் செல்லச் செல்ல அதைப் பார்த்து மகிழ்வதிலேயே நிறைவு கொண்டார்.” ஸ்ருதிக்கு அவனது குரலில் சற்றே பரிகாசத் தொனி இருந்ததாகப் பட்டது. பேராசிரியர் மெல்ல, மெல்ல குடிக்குத் தன்னைப் பறி கொடுத்தவர். அதன் காரணமாகவே அவருடைய மதிப்பு கல்வி மற்றும் அறிவியல் வட்டாரங்களில் சரிந்து கொண்டே வந்தது. செனோலிடிஸில் அவர் செய்த ஆராய்ச்சி முடிவுகளைப் பதிப்பிப்பதற்குக் கூட யாரும் முன்வரவில்லை. அதே துறையில் ஸ்ருதி செய்த ஆராய்ச்சிக்காக ஜெர்மனியில் கீல்வாதத்திற்கு தீர்வு காண விழையும் நிறுவனம் ஒன்று அவளை மிகுந்த சன்மானம் கொடுத்துப் பணியில் அமர்த்தியிருக்கிறது. அந்த அளவுக்குப் பேராசிரியரால் சாதிக்க இயலவில்லை என்பதைத்தான் அவன் சுட்டிக் காட்டுகிறானா? சட்டென்று காரணம் புரியாமல் ஸ்ருதிக்குத் தன் பேராசிரியர் மீது அளவு கடந்த பரிவு ஏற்பட்டது. அவர் கைகளைப் பிடித்து, அவர் தலை கோதி அவருக்கு ஆறுதல் சொல்லவேண்டுமென்று அவளது மனம் விம்மியது.

ஹென்னாவின் கிளி, “இடியட்!” என்று கத்தியது.

கைர்ட்னர் விருது வாங்கியிருக்கும் ஸ்ருதி ஈஸ்வரன் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அவர் உங்களிடம் இளங்கலை பயின்றவர். கீல்வாதத்திற்குக் காரணமான செனிசெண்ட் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பது குறித்த அவரது ஆராய்ச்சிக்கு விருது கிடைத்திருக்கிறது. நீங்கள் கூட அந்தத் தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிடப் போவதாகச் சொல்லியிருந்தீர்கள்.

நம் ஆராய்ச்சியின் முடிவுகள் நம்மை அதீதமான தன்னம்பிக்கைக்கு இட்டுச் சென்று விடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். இதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தினால் செனிசெண்ட் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க முடிந்தபோதிலும், நோயாளிக்கு இதனால் உருவாகும் நிரந்தரமான வலியை நீக்குவதில் பல சிக்கல்களை நான் உணர்ந்திருந்தேன். அதனாலேயே அந்தப் புத்தகத்தை வெளியிடுவதில் தயக்கம் இருந்தது.

‘வாழ்த்துக்கள்? வாழ்த்துக்கள் எங்கே ப்ரொஃபசர்? என் விருது குறித்த கேள்விக்கான பதிலில் கூட உங்கள் ஆராய்ச்சியின் முடிவுகள்தாம் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த ஜெர்மனிக்காரன் இந்த ஆராய்ச்சிக்காக எங்களுக்குக் கொடுத்திருக்கிற தொகை என்ன தெரியுமா? நாலு மில்லியன் யூரோக்கள்!’

ஹென்னா இன்னொரு பாட்டில் சிவப்பு வைன் எடுத்துக் கொண்டு கோப்பைகளை நிரப்புவதற்காக அவர்களை நோக்கி வரும் போது, கிளி அவள் தோளில் தாவி ஏறிக்கொண்டது. அவள் மேஜையைச் சுற்றி வந்து வைன் ஊற்றினாள். ஸ்ருதியின் கோப்பையை நிரப்புவதற்காக அவளருகில் வந்தாள். ஸ்ருதி கோப்பையைக் கையில் எடுத்து நீட்டுகையில், கிளி ஹென்னாவின் தோளில் இருந்து கைக்கு இறங்கி, ஸ்ருதியின் கைக்குத் தாவியது. ஸ்ருதி அதிர்ந்து கோப்பையை நழுவ விட்டாள். வைன் கோப்பை சரிந்து, வைன் அவள் மடியில் கொட்டியது.

“ஓவ்!” என்றனர் பலர், ஒரே குரலில். வைன் ஹென்னாவின் வெளிர் மஞ்சள் ஆடையில் சிவப்பாகப் பரவிக்கொண்டிருந்தது. ஸ்ருதி அதிர்ச்சியில் எழ முடியாமல் அமர்ந்திருந்தாள். ஹென்னா கிளியைத் தூக்கிக் கொண்டு அப்புறம் சென்றாள். அவளது அம்மா அவளைப் பார்த்து முறைத்து விட்டு, “இதுக்குத்தான் அதைக் கொண்டு போய் மேலே விடுன்னு அப்பவே சொன்னேன்!” என்றாள். முதல் பெண் சமந்தா ஸ்ருதி அருகில் வந்து, “ஸ்ருதி, ஒன்னும் பிரச்னை இல்லை. வாஷர் டிரையர்ல போட்டு எடுத்துக் குடுத்துடறேன். வினிகர் போட்டு வாஷ் பண்ணினா உடனே போய்டும்,” என்றாள். ஸ்ருதி எல்லாரையும் ஒரு புன்னகையுடன் பார்த்து விட்டு எழுந்து சமந்தாவுடன் சென்றாள்.

குளியலறைக்குள் சமந்தா கொடுத்த அவளது துணிகளுடன் சென்றாள். அவளது மேலாடை ஸ்ருதிக்குச் சிறியதாக இருந்தது. கீழே டிராக் பேண்ட் போதுமான அளவு இருந்தது. கதவைச் சிறிது திறந்து சமந்தாவிடம் தகவலைச் சொன்னாள். அவள் உள்ளே சென்று ஒரு பெரிய நீல நிறச் சட்டையை எடுத்து வந்து தந்தாள். கதவை மூடி விட்டு சட்டையை போட்டுக் கொண்டு, நிலைக் கண்ணாடியில் தன்னைப் பார்த்தபோதுதான் கவனித்தாள். அது அவளது பேராசியரின் சட்டை. அதுவும் அன்று அவளை அவர் அணைத்துக் கொண்டபோது போட்டிருந்த சட்டை. ஸ்ருதிக்கு அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. கம்மோட் மேல் அமர்ந்து அழுகையை அடக்க முற்பட்டாள். சத்தம் வெளியே தெரிந்து விடக்கூடாதே என்று எச்சரிக்கையோடு, எழுந்த விசும்பல்களை அடக்கினாள். வெளியே உணவு முடித்து விட்டு எல்லாரும் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது தெரிந்தது. மீண்டும் காரணம் புரியாமல் அவளது பேராசிரியரின் மீது அவளுக்குக் கடும் சினம் பொங்கியது. தன்னிலை அடையும் வரை உள்ளேயே இருப்பதென்ற முடிவில் அமர்ந்திருந்தாள்.

ஒருவாறாக சுதாரித்துக் கொண்டு எழுந்தாள். நிலைக்கண்ணாடியில் தன் முகம் பார்த்து, கைப்பையிலிருந்து பொருட்களை எடுத்து ஒப்பனையைச் சரி செய்து கொண்டாள். மூச்சை ஆழமாக இழுத்து வெளியேற்றி, தன்னை நிதானப்படுத்திக் கொண்டு வெளியே வந்தாள்.

நண்பர்கள் எல்லாரும் கிளம்பத் தயாராகி விட்டனர். ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம். அவளது உடையை இப்போதுதான் டிரையரில் போட்டிருக்கிறேன், இன்னும் கொஞ்சம் நேரமாகும் என்று சமந்தா சொன்னாள். நண்பர்கள் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினர். சமந்தா சோஃபாவில் அமர்ந்தாள். நிமிர்ந்து பார்த்தபோது, ராமச்சந்திரன் மாடிப்படி ஏறிச் செல்வது தெரிந்தது. ஸ்ருதிக்கு அடக்கியிருந்த சினம் மீண்டும் கிளம்பியது. எழுந்து அவளும் மாடிப்படியேறினாள்.

“வாழ்நாள் முழுக்க என்னை உதாசீனம் செய்வதென்ற குறிக்கோளில் இருக்கிறீர்களா?” என்றாள், அவரது அறையின் வாயிலில் நின்றபடி.

ராமச்சந்திரன் தன் மேஜைக்கு முன்னால் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். நிமிர்ந்து பார்த்து, “ஸ்ருதி! வா, உட்கார்,” என்றார், பக்கத்து இருக்கையைக் காட்டி. “இப்போதுதான் உன் பரிசுப்பொருளைப் பார்த்தேன். எனக்குப் பிடித்தமான புலவா கைக்கடிகாரம். நன்றாக இருக்கிறது.”

தொம்மென்று இருக்கையில் அமர்ந்தாள். “இப்போது நான் தெரிந்து கொண்டேன். என்னை விட்டு நீங்கள் விலகி, விலகிச் சென்றது குற்ற உணர்ச்சியாலல்ல. முதலில் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் உண்மைக்காரணம் என் வளர்ச்சி. அதைக் காண உங்களுக்குப் பொறுக்கவில்லை. நீங்கள் செய்த தவறுக்கு என்னைத் தண்டிப்பதன் மூலம் ஆறுதலடைந்து கொண்டிருக்கிறீர்கள்,” என்றாள். மூச்சு வேகமாக இயங்கியதில் அவள் நெஞ்சு ஏறித்தாழ்ந்து கொண்டிருந்தது.

ராமச்சந்திரன் அவளை அதீதமான தெளிவு கொண்ட முகத்துடன் பார்த்தார். “ஸ்ருதி, என் மாணவர்களிலேயே நீதான் மிகுந்த அறிவுக்கூர்மையும், படைப்புத்திறனும் கொண்டவள். நீ இன்று அடைந்துள்ள உயரம் கூட உன் திறமைக்கு ஈடாகாது,” என்றார்.

“இப்போது என்னைப் பாராட்டி என்ன பிரயோஜனம்? நான் வெற்றியடைந்த தருணங்களில் என்னைப் புறக்கணித்தீர்களே?”

ராமச்சந்திரன் அமைதியாகத் தலைகுனிந்தார். பின் நிமிர்ந்து அவளைப் பார்த்தார். “நான் ஏன் உன்னைத் தவிர்த்தேன் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?” என்றார். மேஜையின் டிராயரை இழுத்து, ஒரு மொத்தமான நோட்டுப்புத்தகத்தை எடுத்து மேஜை மேல் போட்டார். புத்தகம் முழுக்க பழுப்படைந்து, மேலட்டையில் எழுதப்பட்டிருந்த அவரது பெயர் மசி படிந்து இருந்தது. “இது என்ன புத்தகம் என்று தெரிகிறதா?”

அது பேராசிரியர் சொல்ல, ஸ்ருதி குறிப்பெடுத்த புத்தகம். அதில் பெரும்பாலான பக்கங்களை அவளே கைப்பட எழுதியிருந்தாள். ஸ்ருதி மெல்ல அந்தப் புத்தகத்தை எடுத்து, அதன் பழுப்பு நிறப்பக்கங்களைப் புரட்டினாள். மரபணுவின் உறுதியற்ற தன்மை குறித்தும், எபிஜெனெடிக் மாற்றங்கள் குறித்தும் பேராசிரியர் எழுதியிருந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள். அக்கட்டுரைகளிலேயே இந்த ஆய்வுகளின் எல்லைகள் குறித்து அவர் விவரித்திருந்தது அவள் நினைவுக்கு வந்தது. பல பக்கங்கள் அவள் மனதில் அப்படியே பதிந்திருந்தன. ஏன் அவை மனதில் தெளிவான படங்களாக இருக்கின்றன என்று ஸ்ருதிக்கு உடனே தெரிந்து விட்டது. பேராசிரியர் எதை சுட்டிக்காட்ட விழைகிறார் என்றும்.

உடை காய்ந்தவுடன் மாற்றிக் கொண்டு கிளம்பத் தயாரானாள். எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு வெளியே வந்தபோது வாயில் வரை ராமச்சந்திரனும் வந்தார். பின்னால் சற்று தொலைவில் ஹென்னா கிளியை ஏந்திக் கொண்டு நின்றிருந்தாள்.

“நான் அன்று செய்ததற்கு மன்னிப்பே கிடையாது. உன்னிடம் மீண்டும் மன்னிப்பு கோருகிறேன், ஸ்ருதி. ஆனால் என் மாணவி ஸ்ருதி ஈஸ்வரன் சுயமான சிந்தனை கொண்டவள். அவள் அடைந்த உயரம் அல்ல எனக்கு முக்கியமானது. அவளது சுயசிந்தனையால் அவள் அடையக்கூடிய உயரம் இன்னும் பல மடங்கு அதிகம். அதை விட்டு விட்டு விரைவில் கிட்டும் வெற்றிகளின் பின்னால் நீ போய்விட்டாயோ என்ற ஏமாற்றமும், ஆதங்கமும்தான் நான் உன்னை இவ்வளவு நாள் தவிர்ப்பதற்குக் காரணங்களாக இருந்தன,” என்றார் ராமச்சந்திரன்.

ஸ்ருதி பதில் பேசாமல் திரும்பி, படியிறங்கினாள். காரை நோக்கிச் சென்று அதன் கதவைத் திறந்து, பின் ஏறிட்டு நோக்கினாள். ராமச்சந்திரன் வாயிலில் நின்றிருந்தார். மிகுந்த பலவீனமான மனிதராக, வாழ்வால் கைவிடப்பட்டவராக நின்று கொண்டிருந்தார். அவர் முகத்தில் ஒரு வறண்ட புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது. ஹென்னாவின் கையிலிருந்த கிளி, “இடியட்! இடியட்!” என்று கத்தியது.

– சொல்வனம் | இதழ் 284 |11 டிச 2022

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *