சென்னை இரயில் நிலையம் ஜே ஜே என்று கூட்டம் வழிந்தது,
ஈரோடு செல்ல காத்திருந்தாள் யாழினி. இன்னும் பத்து நிமிடம் இருக்கிறது இரயில் கிளம்ப என்றாலும் தனக்கு என்று எப்படியோ ஒரு இடத்தை பொது பிரிவில் பிடித்து விட்ட திருப்தியில் பக்கத்தில் இருந்த பெண்ணிடம் சொல்லி விட்டு இறங்கி ஜன்னல் ஓரமாக நின்றாள்.
இரயில் பெட்டிக்குள் காணப்பட்ட மக்கள் நெருக்கடியின் கசகசப்பு குறைந்து சற்று வெளிகாற்றை சுவாசித்தவள், ‘அப்பாடி’ என்று பெருமூச்சு விட்டாள். அவசர வேலையாய் சென்னை வர வேண்டியதாயிற்று, டிக்கட் பதிவு பண்னமுடியாமல் இப்படி பொது பிரிவில் மிகுந்த சிரம படவேண்டியிருக்கிறது மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தவளின் கவனத்தை கவர்வதாக ஒரு பெரியவர், சாதாரன வெள்ளை வேட்டியும், ஒரு ஜிப்பா போன்ற சட்டையும் அணிந்து கொண்டு ஒவ்வொரு பெட்டியாக இடமிருக்கா என்று தேடி தேடி வருவது கண்ணில் பட்டது. இவள் அவரை தன் பெட்டிக்கு கூப்பிடலாமா என்று நினைப்பதற்குள், படியில் நின்று பேசிக்கொண்டிருந்த இரு இளைஞர்கள் ஓடி வந்து அவரை கையை பிடித்து ஐயா வாங்க இந்த பெட்டியில இடம் இருக்கு, என்று அழைத்து ஏற்றினர்.
பெரியவர் திடீரென்று இவர்கள் கையை பிடித்தவுடன் சற்று மிரண்டாலும் அவர்கள் பெட்டியில்தான் ஏற சொல்ல கூப்பிட்டார்கள் என்று தெரிந்தவுடன் நிம்மதியானார். ரொம்ப நன்றி தம்பிகளா? நான் ஈரோடு வரைக்கும் போகணும், ஏறப்போனவர் சட்டென ஐயோ இரயிலுக்கு வர்ற அவசரத்துல டிக்கெட் வாங்க மறந்துட்டேன், அலறினார்.
இளைஞர்களில் ஒருவன் கவலைப்படாதீங்க, பணம் கொடுங்க, நான் போய் வாங்கிட்டு வர்றேன், கையை நீட்டினான்.
யாழினிக்கு ஆச்சர்யமாக இருந்தது, பரவாயில்லையே இன்றைய இளைஞர்கள், இப்படியெல்லாம் கூட உதவி செய்கிறார்களே?
பெரியவர் தன் கைப்பையை கீழே வைத்து விட்டு தனது வேட்டியை சற்று தூக்கி கால்சராயுக்குள் கையை விட்டு ஒரு கட்டு பழைய நோட்டுக்களை எடுத்து எண்ணியவர் ஒரு நூறு ரூபாய் தாளை அந்த இளைஞைனிடம் கொடுத்தார். அவன் பெரியவரே முதல்ல பணத்தை பத்திரமா வையுங்க, நான் போயிட்டு வாங்கிட்டு வாறேன் கீழ் தளத்துக்கு ஓடினான். மற்றொருவன் அந்த பெரியவரிடம் பேச்சு கொடுத்தான்.
தம்பி நமக்கு விவசாயம்தான் தொழிலு, இங்க பொண்ணு வீட்டுக்கு வந்தேன். மாப்பிள்ளை என்னை இறக்கி விட்டுட்டு போயிடுவீங்களான்னு கேட்டாரு. நானும் அதெல்லாம் போயிக்குவேன்னு சொல்லிட்டேன், வந்து பார்த்து கண்டு பிடிச்சு இங்க வர்றதுக்குள்ளெ அப்ப்ப்பா.. ரொம்ப தொல்லையா போச்சு..அலுத்துக்கொண்டார்.
அவரு கூட சொல்லலியா இரயிலுக்கு டிக்கெட் வாங்கணும்னு? அவனின் கேள்விக்கு அவர் அதெல்லாம் சொல்லுச்சு, நான்தான் கூறு கெட்ட தனமா மறந்து மேலேறி வந்துட்டேன்.
அந்த இளைஞன் அதற்குள் டிக்கெட் வாங்கி வந்து நிற்க, அவனுக்கு நன்றி சொன்ன பெரியவர் ஆமா தம்பி நீங்க எது வரைக்கும்?
ஒருவன் வாயை திறப்பதற்குள் மற்றவன் நாங்களும் ஈரோடு வரைக்கும் வரணும். அப்ப ரொம்ப ‘எசைவா போச்சு’ கூட்டம் அதற்குள் திமு திமுவென ஏற இரு இளைஞர்களும், அந்த நீளமான சீட்டில் ஓரத்தில் உட்கார்ந்திருந்தவரிடம் கெஞ்சி கிடைத்த துணுக்கூண்டு இடத்தில் பெரியவரை உட்காரவைத்தனர்.
யாழினி இரயில் கிளம்ப நேரமாகிவிட்டதை அறிந்தவள், இரயிலுக்குள் ஏறி தனது இடத்துக்கு முண்டியடித்து வந்தாள். தனது பையை வைத்த இடத்திலிருந்ததை எடுத்து மடியில் வைத்து கொண்டு அந்த இடத்தில் உட்கார்ந்தாள்.
இரயிலின் ஆட்டம் ஒவ்வொருவருக்கும் தாலாட்டாய் இருக்க அவரவர்கள் நின்ற, உட்கார்ந்த நிலையிலேயே தூக்கத்துக்கு போனார்கள். ட்டக்..ட்டக்..ட்டக்..ஆட்டம் அவர்களை தூங்கிய நிலையிலிருந்து கவிழும் நிலைக்கு கொண்டு போனது. ஒரு மணி நேரத்திற்குள் இடத்துக்காக அடித்து கொண்டவர்கள் இப்பொழுது குவியலாய் ஒருவர் மேல் ஒருவராய் சாய்ந்து மோன நிலையில் இருக்க, .
ஆறு மணி நேரம் கடந்திருக்கலாம், தட தடவென நான்கைந்து பேர் அந்த பெட்டியில் எழ சேலம்..சேலம் வரப்போகுது, கொஞ்சம் தள்ளுய்யா, அட கொஞ்சம் நகரு, மனுசன் போகணுமா வேண்டாமா? இப்படி கூச்சல்கள் அந்த பெட்டியை தூக்கத்திலிருந்து விழிக்க வைத்தது. இருந்தாலும் அதையும் தாண்டி போகவேண்டியவர்கள், விழித்து பார்த்து மீண்டும் தன் தூக்கத்தை தொடர நினைத்து கண்ணை மூடினர்.
திடீரென ஒரு சச்சரவு, சட்சட்டென அனவரும் திரும்பி பார்க்க ஒரு முரடன் அந்த பெரிவரிடம் சண்டையிட்டு கொண்டிருந்தான். அவனின் சத்தம் அனைவரையும் எழுந்து வேடிக்கை பார்க்க வைத்தது.
ஏய்யா பெரிசு, இப்படி தூங்கி வழிய மறிச்சுட்டு படுத்துகிட்டிருந்துட்டு, இலேசா கால் பட்டதுக்கு குதிக்கறே? அந்த பெரியவரை கட்டி பிடித்து அமர வைத்து கொண்டிருநதான். சற்று தள்ளி நின்று கொண்டிருந்த இளைஞர்கள், விடுங்க, அவரு பெரியவரு, இதை போய் பெரிசு பண்ணிட்டு, அந்த முரட்டு மனிதனை தாஜா செய்து அமைதி படுத்தினர்.
அதற்குள் சேலம் நிலையத்துக்குள் இரயில் வந்து நிற்கவும், திடுதிடுவென ஆட்கள் இறங்கவும் ஏறவும் இருக்க இந்த நிகழ்வு மறந்து போய் விட்டது. அந்த முரட்டு மனிதன் எல்லோரையும் தள்ளி விட்டு கொண்டு அவசரமாய் இறங்கினான்.
இரயிலின் தாலாட்டு மீண்டும் சேலத்திலிருந்து தொடங்க, திடீரென்று ஒரு கூக்குரல் ஐயோ என் பணம், என் பணம்.. இப்பொழுது சட் சட்டென அனைவரும் திரும்பி பார்க்க..
அந்த பெரியவர் ஓலமிட்டு கொண்டிருந்தார். அவர் தனது கால்சராய் பையில் வைத்திருந்த பணக்கட்டை அப்படியே கத்தரித்து விட்டிருக்கிறார்கள். ஐயோ பத்தாயிரம் ரூபாய் பக்கம் வச்சிருந்தேனே, அப்படியே கொண்டு போயிட்டாங்களே… அவரின் அழுகை அங்கிருந்த அனைவரின் மனதையும் கரைய வைத்தது.
பயிருக்கு மருந்து வாங்கணும்னு மாப்பிள்ளை கிட்டே கடன் வாங்கி வந்தேனே, இப்படி அநியாயமா போயிடுச்சே.. அவரின் தோளை தொட்டு அந்த இளைஞர்கள் சமாதானப்படுத்தினர். ஐயா மனசு விட்டிறாதீங்க, இங்க தேடி பாருங்க, கண்டிப்பா இங்க எங்கயாவதுதான் விழுந்திருக்கும்,
பக்கத்தில் இருந்த ஒருவர் அதெப்படி இங்கிருக்கும், இந்நேரத்துக்கு சேலத்துக்குள்ள இல்லை இருக்கும், சொன்னவரை அனைவரும் பார்க்க ஆமாயா அந்த முரட்டு ஆளு இந்த பெரியவரை கட்டி பிடிச்சு உடகார வச்சுட்டு போனானே, ஞாபகமிருக்கா? அப்பொழுதுதான் அங்கிருந்தவர்களுக்கு உரைத்தது, ஆமா ஆமா, அந்த முரடன் கையில பணம் சிக்கியிருக்கணும், இல்லையின்னா கடைசியில எல்லாத்தையும் தள்ளிட்டில்ல இறங்கி போனான், கண்டிப்பா அவன்தான் எடுத்திருக்கணும். இவர்கள் முடிவு செய்தாலும் என்ன பயன்? போனது போனதுதானே.
ஈரோடு இரயில் நிலையத்துக்குள் இரயில் வந்து நிற்க இறங்க வேண்டியவர்கள் இறங்கினர். யாழினியும் இறங்கியவள் அந்த பெரியவரை இரக்கத்துடன் பார்த்தாள். அப்படியே கண்களில் நீர் வழிய பணத்தை இழந்த துக்கத்துடன் தள்ளாடி தள்ளாடி இறங்கினார். அவரை கைத்தாங்கலாய் இறக்கி மெல்ல வெளியே கூட்டி வந்தவர்கள் ஐயா எந்த ஊர் போகணும்? ஊரை சொல்ல ஒரு ஆட்டோவை கூப்பிட்டு அந்த ஊருக்கு போற பஸ் நிறுத்த்துல கொண்டு போய் இறக்கி, முடிஞ்சா பஸ்ல ஏத்தி விடுங்கள், பாவம் என்று சொல்லியது மட்டுமில்லாமல் ஆட்டோ டிரைவரிடம் இதுக்கு எவ்வளவு ஆகும் என்று கேட்டு தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து ஆட்டோ டிரைவரிடம் கொடுத்தனர்.
ஆட்டோ மறையும் வரை பார்த்து கொண்டிருந்தவர்கள் மீண்டும் இரயில் நிலையத்துக்குள் நுழைய முற்பட அவர்களின் தோளை ஒரு கரம் தொட்டது. திரும்பி பார்த்தனர். யாழினி நின்று கொண்டிருந்தாள்.
மரியாதையா அந்த பெரியவர்கிட்டேயிருந்து அடிச்ச பணத்தை கொடுத்துட்டு அப்படியே இரயில் ஏறிடுங்க, நான் ஒண்ணும் செய்ய மாட்டேன். இல்லையின்னா, இப்ப என்ன சுத்தி நிக்கற போலீஸ் அப்படியே உங்களை அள்ளிகிட்டு போயிடும், வசதி எப்படி?
மெதுவாக சொன்னாலும் அவளின் உறுதி அவர்களை திணற வைக்க ஒருவன் வாயை திறக்க முயற்சித்தான். இந்த போலீஸ் அடியை இத்தனை பேர் முன்னாடி இப்ப நீ வாங்கனும்னு நினைக்கிறியா?
இருவர் முகமும் வெளிறி தன் பனியனுக்குள் வைத்திருந்த அந்த பெரியவரின் அண்டர்வேர் முடிச்சுடன் இணைந்திருந்த பணக்கட்டை அவளிடம் எடுத்து கொடுத்தனர்.
இவள் தன் பாக்கெட்டிலிருந்து ஐநூறு ரூபாயை எடுத்து அவர்களிடம் கொடுத்து, இது அந்த பெரியவருக்கு நீங்க கொடுத்த ஆட்டோ காசு, அப்புறம் அவருக்கு செஞ்ச உதவிக்கு என்னோட சன்மானம், நான் அவர் முன்னாடி உங்க இரண்டு பேரையும் அடிச்சு அவர் பணத்தை புடுங்கி கொடுத்திருக்க முடியும், ஆனா பெரியவர் உங்க மேலே வச்சிருந்த மரியாதையை கெடுக்க விரும்பலை. புரிஞ்சுதா?
அவர்கள் மெள்னமாய் தலையசைத்து அந்த பணத்தை வாங்கி சென்றனர்.
அதற்குள் பெரியவர் சென்ற ஆட்டோவை வழி மறித்து கூட்டி வந்த போலீஸ் விறைப்பாய் நின்று யாழினிக்கு சல்யூட் வைத்தார்.