புரிந்துகொண்டவன் பிழை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 18, 2015
பார்வையிட்டோர்: 7,251 
 
 

முதலிலேயே சொல்லி விடுகிறோம், இந்த கதை ஒரு அறுபது எழுபது வருடங்களுக்கு முன்னர் நடந்தது.அது ஒரு அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமம், போக்குவரத்து வசதிகள் கூட அதிகம் காணப்படாத கிராமம்.

அந்த ஊரின் பெரிய மனிதரான பரமசிவத்திற்கு பாட்டு என்றால் உயிர், நன்கு பாட வேண்டும் என்று ஆசைப்பட்டவர். சரியான பாட்டு வாத்தியார் கிடைக்காததால் அவரின் ஆசை அற்ப ஆயுளிலே முடிந்துவிட்டது. இருந்தாலும் பாட்டு பாடும் ஆசை அவர் மனதில் நீறு பூத்த நெருப்பாக இருந்தது.

பரமசிவத்தின் மகள் வயிற்று பேத்திக்கு அன்று பிறந்த நாள்,ஒரே கோலாகலம்தான் அவர் வீட்டில், அன்றைய விருந்தை ஊர் முழுக்க சாப்பிட்டது.பக்கத்து வீட்டுக்காரர்கள் மட்டுமல்ல, பக்கத்து ஊர்காரர்கள் கூட வந்து விருந்து சாப்பிட்டு விட்டு அவரை பாராட்டி சென்று கொண்டே இருந்தார்கள்.

தடபுடல் அனைத்தும் ஓய்ந்து, மாலை வேளையில், திண்ணையின் தூண் ஒன்றில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தார் பரமசிவம். அருகில் அவரின் கணக்குப்பிள்ளை “ராம பிள்ளை” அவர் முகத்தை பார்த்தவாறு நின்று கொண்டிருந்தார்.கண்ணை மூடி ஏதோ யோசனையில் இருந்த பரமசிவம், மெல்ல கண் விழித்து “பிள்ளை” பேத்திக்கு அஞ்சு வயசு முடிஞ்சுடுச்சு, நம்ம கூட தான் அவளை வச்சுக்க போறோம், அதனால் அவளுக்கு இந்த வயசுலயே பாட்டு சொல்லி கொடுத்துட்டா பின்னாடி என்னை மாதிரி வருத்தப்படாமே இருப்பாள் இல்ல, ‘பிள்ளை’ அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை, ‘ஆமாங்கய்யா’ என்று ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார்.

நீ எப்படியாவது ஒரு பாட்டு வாத்தியாரை தேடி புடுச்சி கூட்டியா, இந்த புள்ளைக்கு எப்படியாவது பாட்டு சொல்லிக்கொடுத்துப்புடலாம்.

“சரிங்க” மறுபடியும் ஒற்றை வார்த்தையில் பதில் சொன்ன கணக்குப்புள்ளைக்கு பாட்டு, டான்ஸ், இவைகளைப்பற்றி ஸ்னானப்பிராப்தி கூட கிடையாது. அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது, ஆனால் அதை எப்படி பரமசிவத்திடம் கேட்பது, தலையைச் சொறிந்தார், ஐயா!, சுகமாய் திண்ணயில் சாய்ந்திருந்த பரமசிவத்துக்கு இவரின் அழைப்பு இடைஞ்சலாய் இருக்க, என்னவென்று கண்களாலே கேட்டார்.

பாட்டு வாத்தியாருன்னு எப்படி தெரிஞ்சுக்கறது? ஒவ்வொருத்தரயா நீ பாட்டு வாத்தியாரான்னு கேட்க முடியுங்களா?

இந்தக்கேள்வி நியாயமாகப்பட்டது பரமசிவத்துக்கு, ஒண்ணும் கவலைப்படாதே, டான்ஸ் கத்துகிட்டவன் காலும், பாட்டு கத்துகிட்டவன் வாயும் சும்மா இருக்காது அப்படீன்னு ஒரு பழமொழி இருக்கு, அதனால நீ எல்லா ஊர்லயும் போய் தேடிப்பாரு, பாட்டு தெரிஞ்சவன் நெத்தியில பட்டை போட்டுட்டு எங்கேயாவது உட்கார்ந்து பாடிக்கிட்டிருப்பான்,அப்படியே புடிச்சு கொண்டாந்திரு.

“சரிங்க” மீண்டும் ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பியவர் ஊர் ஊராக ஒரு பாட்டு வாத்தியாரை தேடி அலைய ஆரம்பித்தார்.

காலையில் பிள்ளையாரைப்பார்த்து பெரிய கும்பிடாய் போட்டு, நெற்றியில் பெரிய பட்டையும் போட்டு வந்திருந்த சாமியப்பனுக்கு அன்றைக்கு தொழில் ஒன்றும் சரியாக வரவில்லை, ஆலமரத்து அடியில் உட்கார்ந்திருந்ததால், சுகமான துக்கம் கண்ணைச்சுழற்றியது. எப்படியும் இநநேரத்துக்கு முடி வெட்டிக்கொள்ள பத்திருபது பேராவது வந்திருப்பார்கள், இன்றைக்கு பார்த்து ஒருவரும் வரவில்லை, சாமியப்பன் தூக்கம் வராமல் இருக்க அப்பொழுது வெளிவந்த தியாகராஜ பாகவதா¢ன் பாடல் ஒன்றை உச்ச ஸ்தாயில் பாட முடிவு செய்து ஆலாபனையை ஆரம்பித்துவிட்டான்.

அப்பொழுது அந்த வழியாக ஒரு பாடகனைத்தேடி ஊர் ஊராய் அலைந்து, ஓய்வு எடுத்துக்கொள்ள ஆலமரத்தடியை நோக்கி வந்து கொண்டிருந்த “பிள்ளைக்கு” சாமியப்பன் பாடிக்கொண்டிருந்த பாட்டைக்கேட்டதும் தெய்வமே நோ¢ல் வந்தது போலிருந்தது.

சாமியப்பன் பாடி முடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்த பிள்ளை அவனிடம் சென்று பணிவாக வணங்கினார். சாமியப்பனுக்கு பயமாகிவிட்டது. யாரிந்த ஆள்? பதட்டத்துடன் எழுந்தான், நல்லா பாடறீங்களே,கேட்ட சாமினாதனுக்கு வெட்கமாக போய்விட்டது, சும்மா பாடிபார்த்தேன், என்று நெளிந்தான்.சும்மா பாடி பார்த்ததே, இவ்வளவு நல்ல இருந்தா, இவர் நம்ம புள்ளைக்கு சொல்லிக்கொடுத்தா, எண்ணங்கள் ஓட,அவனை மா¢யாதையாக பார்த்தார். இங்கேயே உட்காராரிங்களா? ஆத்தோரமா போயிடலாமா?கேட்டவனின் கேள்வியை புரிந்துகொள்ள முடியாத “பிள்ளை” நீங்க எங்க ஐயா வீட்டுக்கு கண்டிப்பா வரணும்

வீட்டுக்கு எல்லாம் வரதில்லீங்களே, மெதுவாக சொன்ன சாமியப்பனிடம் நீங்க அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, இந்தக்கலையை நீங்க யாருக்காவது கத்துக்கொடுக்கனும்னு நினைக்கமாட்டீங்களா?

சாமியப்பனுக்கு தன்னுடைய தொழிலை அடுத்தவருக்கு கற்றுத்தருமளவுக்கு வயதாகிவிடவில்லை ,அதனால், அதெல்லாம் வயசானப்புறம் பார்த்துக்கலாம் என்று சொன்னான். சரி சரி நீங்க கிளம்புங்க வற்புறுத்த ஐயா வீட்டுக்கெல்லாம் வந்தா அதிக செலவாகுங்களே, நீங்க கவலையே படாதீங்க, எவ்வளவு கேட்டாலும் தரதுக்கு ஐயா தயாரா இருக்கறாரு. நிறைய கிடைக்கும் என்றவுடன், கிளம்ப தயாரான சாமியப்பன் கொஞ்சம் நில்லுங்க என்னுடைய சாமாங்களை எல்லாம் எடுத்தாந்துடறேன் என்றவாறு ஆற்றோரமாகச்சென்றான்.

வீட்டுக்கு கூட்டிவந்த சாமியப்பனை பார்த்து பரமசிவம் பையன் சிறு வயதாய் இருந்தாலும் பாட்டுக்காரனாக இருக்கிறானே, என எண்ணினார். சாமியப்பன் வேகமாக வேலையை முடித்துவிட்டு கிளம்பும் அவசரத்தில் இருந்த்தால் ஐயா உங்களுக்குங்களா என்று கேட்க, இல்லைப்பா என் பேத்திக்கு என சொல்ல சாமியப்பன் குழம்பினான், சரி பொண்ணுக்கு ஏதோ வேண்டியிருப்பார்கள் என முடிவு செய்து சீக்கிரமா வரச்சொல்லுங்க என்று சொல்லிக்கொண்டிருக்கும்பொழுது அந்த சிறு பெண் தட்டில் வெத்தலையுடன் பணம் கொஞ்சம் வைத்து இவனிடம் தர இவன் குழம்பிப்போய், இதெல்லாம் எதுக்குங்க என்று சொல்லி தயங்கினான்.

பரமசிவம் பாய்ந்து வந்து இப்படியெல்லாம் சொல்லக்கூடாது, கண்டிப்பா வாங்கிக்கணும், இன்னைக்கே ஆரம்பிக்கறீங்களா? என்று கேட்க இவன் இதுக்கெல்லாம் நாள் கிழமை பார்க்கமுடியுங்களா ?என்றவன் சரி பாப்பாவ உட்காரச்சொல்லுங்க, என்று சொல்ல, பரமசிவனின் பேத்தி பயபக்தியாய் உட்கார இவன் அந்த குழந்தையின் எதிரில் உட்கார்ந்து தான் கொண்டு வந்த பொருட்கள் ஒவ்வொன்றாய் எடுத்து வைத்து கத்தியை தீட்ட ஆரம்பித்தான்

அதற்குப்பின் என்ன நடந்திருக்கும் என்பதை வாசகர்களே ஊகித்துக்கொள்ளலாம்.

(இது ஒரு கற்பனையே)

Print Friendly, PDF & Email
பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *