“மெட்றாஸ் ரொம்பத்தான் மாறிப் போச்சு” என்றார் புதுமைப்பித்தன்.
புதுமைப்பித்தன்? ம். அவரேதான். கந்தசாமிப் பிள்ளையைப் பார்க்க கடவுள் அவர் கதைக்குள் வரலாம் என்றால், என் கதைக்குள் புதுமைப்பித்தன் வரமுடியாதா? கதைக்குக் கால் கிடையாது அண்ணாச்சி.
இப்போதும், ‘சாடி மோதித் தள்ளிக் கொண்டு நடமாடும் ஜனக்கூட்டம்’ பரபரப்புடன் விரைந்தோடிக் கொண்டிருந்த, ‘பிராட்வேயும் எஸ்பிளனேடும்’ கூடுகிற சந்தியில்தான் நாங்கள் நின்று கொண்டிருந்தோம்.ஒரு நதி மாதிரி போக்குவரத்து நகர்ந்து கொண்டிருந்தது. நகரை நகர்த்திப் போகும் நதி. எளிதில் இறங்கிக் கடந்துவிட முடியாத நதி.
நதியின் வேகம் தணிந்த ஒரு விநாடிப் பிளவில் எதிர்கரை நோக்கி நடக்கத் தலைப்பட்டோம். ஏறத்தாழ நடுச்சாலைக்கு வந்த போது, பாம்பை மிதித்த்து போல புதுமைப் பித்த்ன் எகிறித் துள்ளினர். துள்ளிப் பின் வாங்கினார். அவரை உரசினாற்போல் ஒரு ஆட்டோ நெளிந்து விரைந்தது.
“ரொம்பத்தான் மாறிப்போச்சு!” என்றார் மறுபடியும்
“பின்னே, உங்கள் காலம் போல இப்போதும் டிராமும், மனிதனை வைத்து மனிதன் இழுக்கும் ‘நரவாகனமான’ கை ரிக் ஷாவும் ஓடிக் கொண்டிருக்கும் என்று நினைத்தீர்களா? இப்போது எல்லாம் இயந்திரம்தான்”
புதுமைப்பித்தன் புன்னகைத்தார்
“நிஜமாகத்தான். நீங்கள் தொலைபேசியில் அழைத்தால் பதில் சொல்ல ஒரு இயந்திரம்.வாங்கியில் காசு எடுக்க ஓர் இயந்திரம். பால் பொழிய ஒரு இயந்திரம். பாத்திரம் தேய்க்கக் கூட இயந்திரங்கள் இருக்கின்றன.ஓட்டுப் போடுவதும் கூட ஓர் இயந்திரத்தில்தான்”.
“பிரமாதம்!.இப்போது எல்லாம் இயந்திரம்தான்” என்று திருப்பிச் சொல்லி என்னை நிமிர்ந்து பார்த்து சிரித்தார் புதுமைப்பித்தன், அந்த வாக்கியத்திற்கு வேறேதோ புதிதாய்ப் பொருள் கண்டது போல.
கடவுளும் கந்தாசாமிப் பிள்ளையும் காபி அருந்திய ஓட்டலுக்குள் நுழைந்தோம். அதே இடம்.அதே சுகாதாரம். அதே ஈ.அல்லது அதன் வழித் தோன்றல். அதே சிக்கரிக் காபி. கடையின் பெயரும் காபியின் விலையும் மாறியிருந்தன. அவர் காலத்தை விட விலை கூடுதல் ஆனால் அளவு குறைவு. டபரா செட் பிளாஸ்டிக் குப்பியாக மாறியிருந்தது.
குவளையைப் புதுமைப்பித்தன் வாயருகே கொண்டு சென்ற போது தெருவில் திடுதிடுவென்று நான்கைந்து பேராய் ஓடி வந்தார்கள். எல்லோர் முகத்திலும் ஏதோ ஒரு பதற்றம். ஓரிருவர் கையில் உருட்டுக்கட்டை. மூடு மூடு என்று கடைகளை நோக்கிக் கூவினார்கள்.
தற்செயலாக நிகழ்ந்ததா, அல்லது வேண்டுமென்றேதான் நடந்ததோ, ஓடுகிற அவர்களது கால் பட்டு நடைபாதைக் கடைகளில் பரத்தியிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறந்தன. அலுமினிய தேக்சாவைக் கவிழ்த்து அதன் மீது கீரைக் கட்டுக்களை அடுக்கி நீர் தெளித்து விற்றுக் கொண்டிருந்த ஒரு நடுவயதுப் பெண்மணி வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தாள். சடாரெனெ எழுந்ததால் கால் மடங்கிச் சரிந்தாள்.நல்ல பாரியான தேகம். அவள் சுதாரித்துக் கொண்டு எழுவதற்குள் அவளைக் குறுக்காகத் தாண்டிக் கொண்டு இன்னொருவன் ஓடினான்.
நான்கைந்து பேராய் இருந்த உருட்டுக்கட்டை ஆட்கள் பத்துப் பனிரெண்டாகப் பெருகினார்கள். மூடு, மூடு என்ற ஆணைகள் உரத்தன. ஆணைகள் அவர்களை எட்டும் முன்பே வியாபாரிகள் சரசரவென்று ஷட்டர்களை இறக்கினார்கள்.
புதுமைப்பித்தன் அருகில் வந்த ஒருவன் “யோவ் பெருசு. இந்த நேரத்தில் உனக்குக் காபி கேக்குதா?என்றதோடு என்று ஒரு கெட்டவார்த்தையையும் துப்பி அவர் கையிலிருந்த குவளையைத் தட்டி விட்டான். சட்டையிலும், தரையிலும் காபி விசிறி விழ குவளைத் தெருவிற்குப் பறந்தது. புதுமைப் பித்தன் மிரண்டு போனார். திகைத்து நின்ற அவரை நெட்டித்தள்ளிவிட்டு ஓடினான். புதுமைப்பித்தன் நிலைகுலைந்து போனார்.
இந்தக் காலித்தனத்தை அங்கு இருந்த யாரும் கவனிக்கவில்லை. கவனித்தவர்களும் பொருட்படுத்தவில்லை. எல்லோரும் அவசரமாக ஓட்டலில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர்.
“ஏய்!” என் எதிர்ப்பைக் கண்டு ஓடிக் கொண்டிருந்தவன் திரும்பிப்பார்த்தான்
“இன்னாம்மா எகிற்ற? ..பெரிசை பத்திரமா இட்டுக்குனு போ.பொட்னு பூடப்போறாரு!” அவன் எதிர்வினையில் எள்ளல் தெறித்தது.
நான் அவரை மெதுவாகப் படியிறக்கிக் கூட்டி வந்தேன்.
எதிர்சாரியில் இருந்த கல்லூரி வாசற் கதவருகே ஒரு மாணவனைப் போட்டு உருட்டுக்கட்டைப் படை துவைத்துக் கொண்டிருந்தது. அவன் அத்தனை அடிக்குப் பிறகும் எப்படியோ தப்பித்து எழுந்து நொண்டிக்கொண்டு ஓடினான். பார்த்துக் கொண்டிருக்கும் போதே தகதகவென்று எரிந்து கொண்டிருந்த ஒரு புட்டி பறந்து வந்து பஸ் அருகில் விழுந்து சிதறியது. அதிலிருந்த திரவம் தரையில் பரவ நெருப்பு பஸ்சைப் பிடிக்க விரைந்தது.
இனி இன்று பஸ் ஓடாது. நடக்க வேண்டியதுதான் எனப் புரிந்தது. எனக்குத் திருவல்லிக்க்கேணிதான் வீடு.பிரசினை இல்லை. ஆனால் பெருமைக்குரிய என் விருந்தினரையும் நடத்தித்தான் கூட்டிச் செல்ல வேண்டும்.
விருந்தினர் வழியில் அதிகம் பேசவில்லை. காபிக் கடை அதிர்ச்சி, கல்லூரி வாசல் காட்சி, அவரை அதிகம் தாக்கியிருந்தன. கடற்கரையில் வீசிய குளிர்ந்த காற்று கூட இதமளித்ததாகத் தெரியவில்லை. ” ஏன்/ என் இப்படி? “என்று வழியில் ஒரு முறை கேட்டார்.
என்ன சொல்வது? நான் அவரைக் கூர்ந்து நோக்கினேன். மையிட்டதுபோல் ஒருவிதக் கவர்ச்சியோடு இருக்கும் அவர் கண்கள் சற்றே கலங்கினது போல் தோன்றியது. தனது வாழ்வில் அவர் இது போன்ற சம்பங்களை அதிகம் சந்திருக்கமாட்டார். அவரது எதிரிகள் கூட அவரிடம் இப்படி நடந்து கொண்டிருக்கமாட்டார்கள். அவரது சண்டையெல்லாம் அச்சுப் பரப்பில். அவரது எள்ளல்கள் எல்லாம் எழுத்தில். இது வெறும் எள்ளல் மட்டுமல்ல. வன்முறை. அங்கீகரிக்கப்பட்ட வன்முறை. மக்களின் மெளனத்தால் அங்கீகரிக்கப்பட்ட வன்முறை.
“இப்போதெல்லாம் இப்படித்தான் திடீர் திடீர் என்று எதாவது நடந்து விடுகிறது.” என்றேன் மன்னிப்புக் கேட்கும் குரலில்.
“என்ன நடந்தது? ஏன் இத்தனை கலாட்டா?”
தெரியவில்லை. வழியில் இரண்டொருவரை நிறுத்தி என்ன பிரசினை என்று விசாரித்தேன். யாருக்கும் நின்று பதில் சொல்ல பொறுமை இல்லை. வீட்டிற்குத்
திரும்பி டெலிவிஷன் பார்த்தால் விவரம் தெரிந்துவிடும்.
**
மூ
ன்று மாடி ஏற சற்று சிரமப்பட்டார்.லேசாக மூச்சு வாங்கியது. அதைப் பொருட்படுத்தாமல் சன்னமான குரலில் கேட்டார்.” என்னவென்று சொல்லப்போகிறீர்? முன்னாலேயே என்னிடம் சொல்லிவிட்டால் நான் அதற்குத் தகுந்த மாதிரி சமாளித்துக் கொள்கிறேன்.”
“சமாளிக்க அவசியமில்லை. உங்கள் காலம் மாதிரி மாமா பெரியப்பா என்று கதை விட வேண்டியதில்லை.நீங்கள் எழுத்தாளர் என் சகா என்றுதான் சொல்லி அறிமுகப்படுத்தப் போகிறேன்”
“உம் மனைவி என்னைப் படித்திருக்கிறாளா?”
உதட்டைப் பிதுக்கினேன். ” தெரியாது. அவள் படித்ததெல்லாம் பாடப் புத்தகம் மட்டும்தான் என நினைக்கிறேன்”
வீட்டுக்குள் நுழைந்தபோது, படிக்கட்டு, தலைவாசல், முன் கூடம், சமையலறை எல்லா இடத்திலும் விளக்குள் எரிந்து கொண்டிருந்தன. மனைவி சமையலறையில் எதையோ உருட்டிக் கொண்டிருந்தாள்.நைட்டி நனைந்திருந்தது.
“என்ன இன்றைக்கு கார்த்திகையா?” என்றேன்.
“கேள்வியில் உள்ள உஷ்ணம் உறைக்காமல், “இல்லையே! இது ஆடி மாசம்னா?” என்றாள் மனைவி வெகுளித்தனமாய்.
“இல்லை, இத்தனை தீவட்டி எரிஞ்சிண்டிருக்கேனு கேட்டேன்”.
“சாயங்காலம் கொஞ்சம் லேட்டாதான் வந்தேன். வரும் போது பவர்கட். விடு இருளோனு கிடந்தது.சித்த நேரம் எரிஞ்சிண்டு இருக்கட்டுமேனு நாந்தான் போட்டு வைச்சேன். விளக்கு வைக்கிற நேரத்தில வாசல் இருட்டிக் கிடக்கணுமா?”
“உன் டிஜிட்டல் உலகம் இந்த நம்பிக்கைகளையெல்லாம் மாற்றவில்லை போலிருக்கே?” என்று முதுகுக்குப் பின்னிருந்து அடியெடுத்து வைத்தார் பு.பி.
புதிதாய் ஒரு மனிதனைப் பார்த்ததும் கோமதி. சற்றே மெலிதாக திடுக்கிட்டுப் போனாள் அனிச்சை செய்லாய் கை கூப்பி வணங்கினாள். மூன்றாம் மனிதர் முன் நைட்டியில் இருக்கக் கூச்சப்பட்டு, உடை மாற்றிக் கொண்டு வர உள்ளே நகரப் பரபரத்தாள்.
“புதுமைப்பித்தன், சக பத்திரிகையாளர், கோமதி, என் மனைவி” என் அறிமுகம் பு.பிக்குத் தேவைப்படவில்லை
” கையில் ஒரு வீணையைக் கொடுத்துவிட்டால் அப்படியே சரஸ்வதி” என்றபடியே பதிலுக்குக் கும்பிட்டார். அவர் கண்ணில் ஒரு கிண்டல் மின்னியதோ?
” ஆமாம் எம்.சி.ஏ படித்திருக்கிறாள்.”
” எம்.சி.ஏ?”
“கம்ப்யூட்டர்”
புரியலையே என்றன மறுபடியும் புதுமைப்பித்தன் கண்கள்.
கோமதி பரபரவென்று உடை மாற்றிக் கொண்டு காபி எடுத்து வந்தாள். சிக்கரி இல்லத நல்ல காபி. “உங்களுக்கு சர்க்கரை போடலாமா?” என்று என் விருந்தினரைக் கேட்டாள்.
“சர்க்கரை போட்டால்தான் காபி. இல்லையென்றால் அதற்குப் பெயர் கஷாயம்” என்று தன்னுடைய ஜோக்கிற்குத் தானே சிரித்துக் கொண்டார் பு.பி.
“இல்லை, இவர் சர்க்கரை போட்டுக் கொள்வதில்லை.சுகர்” என்றாள்
“இந்த வயதிலேயா?” என்று என்னைப் பார்த்தவர், “மிக இனிய மனிதர் என்று சொல்லுங்கள்” என்று இன்னொரு ஜோக்கைக் கொளுத்திப்போட்டார்.
*
“டெ
லிவிஷன்”
நான் சுட்டிக் காட்டிய பெட்டியை ஒருமுறை அருகில் சென்று பார்த்தார். “இதனா அது?” அவர் வாழ்ந்த காலத்தில் டிரான்சிஸ்டர் கூட அறிமுகமாகியிருக்கவில்லை. அதனால் இது அவருக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும் என்று நினைத்த நான் “செய்திகளைக் காட்சிகளாகப் பார்க்கலாம்” என்று சுருக்கமாக விளக்க முற்பட்டேன்.
“ம். படித்திருக்கிறேன். ஜான் பெயிட் இதைக் கண்டுபிடித்தபோது பிபிசியில் சொன்னார்கள். அந்தச் செய்தியைக் கேட்டுவிட்டு தமிழ் எழுத்தாளர் ஒருவர் ‘டெலிவிஷன்’ என்ற பெயரிலேயே ஒரு கதை எழுதினார்,நவசக்தியில். அது 1926ல். அப்போது அவருக்கு அதில் பாரதமாதாவின் தரிசனம் தெரிந்தது. ம்.பிபிசியைப் போடுங்கள். இன்னிக்கு பாரதமாதா எப்படி இருக்கிறாள் என்று பார்க்கலாம்” என்றார் அவருக்கே உண்டான கிண்டலுடன்.
அதிர்ச்சியிலிருந்து மீண்டு விட்டார் என்பதே எனக்கு ஆறுதலாக இருந்தது. டெலிவிஷனைப் போட்டேன், நாங்கள் கல்லூரி வாசலில் பார்த்த காட்சிகளை அது மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. மாணவர்களிடையே ஜாதிக் கலவரம் என விளக்கமளித்துக் கொண்டிருந்தார்கள்.
ம
றுநாள் அனந்தராமன் வீட்டிற்குப் புறப்பட்டோம் அனந்தராமன் ஓர் ஓய்வு பெற்ற பத்திரிகையாளர். ‘தி ஒப்பீனியன்’ பத்திரிகையில் நீண்டகாலமாக எழுதி வந்தார். எனக்கு ஒப்பீனியன் மீது பெரிய காதல் எதுவும் கிடையாது. ஆனால் அனந்தராமன் மீது பெரிய மரியாதை. என் கல்லூரி நாட்களில் அவரைப் படித்துத்தான் உலக விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். வேலை கிடைத்து சென்னைக்கு வந்ததும் நான் தேடிப் போய் பார்த்த சிலரில் அவரும் ஒருவர். நிறையப் பேசுவார். பேச்சுக்கு நடுவில் கேள்விகள் எழுப்புவார். அவரே பதிலும் சொல்வார். நம்மிடம்தான் பேசுகிறாரா அல்லது உரத்து சிந்திக்கிறாரா என்று நமக்கு பிரமிப்பாக இருக்கும்.
விடுமுறை நாட்களில் அல்லது அவரது வாயைக் கிளற வேண்டும் என்று நினைக்கிற தருணங்களில் அவரிடம் போய்ப் பேசிக் கொண்டிருப்பதுண்டு.
போகிற வழியில் நெடிதுயர்ந்த கண்ணாடிக் கோபுரங்கள் எதிர்ப்பட்டன. “அது என்ன இத்தனை தாஜ்மகால்கள்?” எனக் கேட்டார் பு.பி.
“இவை காதலின் சின்னங்கள் அல்ல. ஆசையின் மாளிகைகள்” என்றேன்.
புரியவில்லை என்பது போல் உதட்டைப் பிதுக்கினார்.
“இவையெல்லாம் எங்கள் நகரத்தின் துணிக்கடைகள், நகைக்கடைகள்”
“நாலு மாடியா?”
“ உண்பது நாழி, உடுப்பது இரண்டு என்றாலும் ஆசைக்கு வானமே எல்லை” பஸ்ஸில் இருப்பவர்கள் திரும்பிப் பார்ப்பது போல அதிரச் சிரித்தார் பு.பி.
நல்லவேளை அனந்தராமன் வீட்டில் இருந்தார். “அனந்தராமன். ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்” என அறிமுகப்படுத்தி வைத்தேன்
“பத்திரிகையாளருக்கு ஏது ஓய்வு? நான் இப்போது சுயேச்சைப் பத்திரிகையாளர்” என்று அவர் என்னைத் திருத்தினார். விருந்தினர் வருகையை முன்னிட்டு ஒடிக் கொண்டிருந்த தொலைக்காடசியை நிறுத்த எழுந்தார்.
.”இருக்கட்டும். இது எனக்குப் புதிதுதானே?” என்றார் பு.பி. அவரிடம் ஒரு குழந்தைத் தனமான ஆவல் தெரிந்தது.
‘எதிர்க்கட்சித் தலைவர் கைது’, என ஒரு செய்தி திரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.
“கைதா?” என நான் ஆச்சரியத்தோடு அனந்தராமனைப் பார்த்தேன்
ஏழாண்டுகளுக்கு முன் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது மாற்று மதத்தினரின் வழிபாட்டுத் தலம் ஒன்றைத் தகர்க்கும் கிளர்ச்சியில் ஈடுபட்டவர் அவர். வழக்கு நடந்து கொண்டிருந்தது. இன்று தீர்ப்பு வெளியானதும் கைது செய்து விட்டார்கள்.
“பெரிய தலைவரா?” என்றார் புதுமைப்பித்தன். என்ன சொல்வது? தலைவர் என்பதற்கு அவர் காலத்து இலக்கணங்கள் வேறு. “சர்ச்சைகளைக் கிளப்பியதாலும் சர்ச்சைகளில் இறங்கியதாலும் ஊடகங்களைக் கவர்ந்த தலைவர். ஜனங்களின் செய்திப் பசிக்குத் தீனி போட்டவர்.”
“ஜனங்களுக்குச் செய்திப் பசி என்ற ஒன்று இருக்கிற்தா?”
“இருக்கிறது.இல்லை என்றால் ஏன் இத்தனை தொலைக்காட்சிகள்.? 24 மணி நேரமும் செய்தி சொல்லும் தொலைக்காட்சிகள்?” என்ற என் வாதத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த புதுமைப் பித்தனிடம், “உங்கள் காலத்தில் நீங்கள் செய்திக்குக் காத்திருக்க வேண்டும். எட்டு மணியோ ஒன்பது மணியோ ஏதோ ஒரு நேரத்திற்கு வானொலியில் செய்தி வாசிப்பார்கள். இருக்கிற வேலையைப் போட்டுவிட்டு அதைக் காத்திருந்து கேட்க வேண்டும், தவறவிட்டால் போச்சு. இப்போது பாருங்கள் நீங்கள் செய்திக்காகக் காத்திருக்க வேண்டாம். செய்தி உங்களுக்காகக் காத்திருக்கிறது. இதுதான் ஜனநாயகம்” என்றேன்
“வெறும் வெள்ளைக் காகிதத்தைப் பெரிய அளவில் ஜனங்களிடம் விற்க முடியாது. ஆனால் அதில் செய்தி இலக்கியம் என்று கருப்பு மை பூசினால் ஆயிரக்கணக்கில் விற்கலாம் என திஜர ஒரு முறை எழுதியதாக எனக்கு ஞாபகம்” என்று இடைமறித்த அனந்தராமன், “அது போல வெறுமனே போய் விளம்பரம் பிடிக்க முடியாது. செய்தி பாட்டு என்று ரொப்பினால் விளம்பரம் வழி காசு கொட்டுமோ என்னவோ” என்றார்
“நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். டிவி என்ற ஒன்று வந்ததால்தான் பல திறமைகள் உலகின் கவனத்திற்கு வந்திருக்கின்றன” என்றேன் நான்
“அப்படியே இருக்கட்டும். ஆனால் புத்தகங்கள் கூட அதிகம் விற்கின்றனவே. டிவியோடு அதற்கு எந்த சம்பந்தமும் கிடையாதே. அது எப்படி?”
“அப்படியா? புத்தக விற்பனை சக்கைப் போடு போடுகிறதா? அப்படியானால் எழுத்தாளர்கள் காட்டில் மழை என்று சொல்லுங்கள்” என்றார் பு.பி.
“இணையத்திலிருந்து தகவல் இறக்கித் தமிழாக்கம் செய்து தலையணை தலையணையாப் புத்தகம் போடுவதற்கொன்றே ஒரு எழுத்தாளர் கூட்டம் கிளம்பியிருக்கிறது”
“பலே! பரவாயில்லையே! சினிமா கூட இலக்கிய ஆசிரியர்களை இழுத்துக் கொண்டிருக்கிறதாமே?”
“சொல்லுக்குச் சோர்வேது?
சோகக் கதை என்றால்
சோடி இரண்டு ரூபா
காதல் கதையென்றால்
கைநிறையத் தர வேணும்
ஆசாரக் கதையென்றால்
ஆளுக்கு ஏற்றது போல்
பேரம் குறையாது
பேச்சுக்கு மாறில்லை
ஆசை வைத்துப் பேசி எமை
ஆட்டி வைக்க முடியாது
காசை வையும் கீழே- பின்
கனவுதமை வாங்கும்”
அனந்தராமன் அச்சு மாறாமல் புதுமைப்பித்தன் கவிதை ஒன்றை அவரிடமே ஒப்பித்ததும் அரை நிமிடம் அசந்து போனார்.
“தாளிக்கிறீரே, கவிதை சமாசாரம் எப்படி?”
“ அண்ணாந்து கொட்டாவி விட்டதெல்லாம் கூறு தமிழ்ப் பாட்டாச்சே! முட்டாளே இன்னுமா பாட்டு?”
அன்று புதுமைப்பித்தன் சிரித்த சிரிப்பில் அந்தக் கட்டிடமே அதிர்ந்தது.
ஆ
னால் எனக்குப் புகைந்தது. திரும்பி வரும்போது மனம் குமைந்து குமைந்து குமுறிக் கொண்டிருந்தது. நாட்டில் எத்தனை புதுமைகள்! எவ்வளவு முன்னேற்றம்! அப்படியிருந்தும் ஏன் இந்த எள்ளல்? எகத்தாளம்? புதுமைப்பித்தனிடமே நேரடியாகப் பொருமிவிட்டேன்:
“நீங்கள் வாழ்ந்த காலத்தில் டிரான்சிஸ்டர் கூட அறிமுகமாகியிருக்கவில்லை. இன்று வீட்டுக்கு வீடு டெலிவிஷன். கந்தசாமிப் பிள்ளை வீட்டுக்குப் பழைய பரமசிவம் வந்த போது அங்கு முன் கூடத்தில் ஒரு தகர விளக்குத்தான் எரிந்து கொண்டிருந்தது. இன்று அறைக்கு அறை மின் விளக்குகள். உங்கள் காலத்தில் மனிதனை மனிதன் இழுக்கும் கை ரிக்ஷா இருந்தது. இன்று அந்தக் கொடுமை கிடையாது. நீங்கள் உட்பட எழுத்தாளர்கள் வறுமையில் வாடினார்கள். இன்று வருமானவரி கட்டுகிறார்கள்.
திருநெல்வேலியில் இருந்த ரகுநாதனை விருதுநகருக்கு அல்வா வாங்கி வரச் சொல்லிக் கேட்க நீங்கள் அன்று ஒரு கடிதம் வழி வெண்பா எழுதி அனுப்ப வேண்டியிருந்தது. இன்று அயல்நாட்டிலிருக்கும் மகளுடன் கணினி வழி, காசு செலவில்லாமல் பேசுகிறோம். போதும் போதாதற்குக் .கைக்குழந்தை போல் ஒரு தொலைபேசியை செல்லுமிடமெல்லாம் தூக்கிக் கொண்டு திரிகிறோம். உங்களுக்குக் கிடைத்தது கந்தசாமிப் பிள்ளையின் கை மருத்துவம். இன்று எங்கள் ஆஸ்பத்திரிகள் ஐந்து நட்சத்திர விடுதிகள் போலிருக்கின்றன. எத்தனை முன்னேற்றம்! எங்கு திரும்பினாலும் வளர்ச்சி. .அப்படியிருக்க ஏன் இந்த எள்ளல்? கேலி? ஏளனம்?”
புதுமைப்பித்தன் ஏதோ பதில் சொல்ல வாயெடுத்தார். ஆனால் அதற்குள் பின்னால் வேகமாக வந்த மோட்டர் சைக்கிள் ஒன்று, சாலையில் தேங்கிக் கிடந்த மழை நீரைத் தவிர்க்கத் திடீரென இடது ஓரத்திற்கு வந்தது. மின்னல் வேகத்தில் உரசுவது போல நெருங்கி வந்த அது, நல்லவேளை, மோதிவிடவில்லை. ஆனல் பின்புறம் உடகார்ந்திருந்தவரின் பாதம் கெண்டைக்காலில் தட்ட புதுமைப்பித்தன் ஈரத்தில் கால் சறுக்கி விழுந்தார்.
ஆ
ஸ்பத்ரியில் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தார்கள். எலும்பு முறிவு ஏதும் இல்லை. ஆனால் கணுக்கால் அருகே சுளுக்கு. இரண்டு நாளில் சரியாகிவிடும் என்றார்கள்.
வீட்டிற்குத் திரும்பிப் படுக்கையில் சாய்ந்து கொண்டு, உயரத்திற்காக அடுக்கிய தலையணைகள் மீது கால்களைக் கிடத்தியபடி புதுமைப்பித்தன் பேச ஆரம்பித்தார்.
“எங்கே விட்டோம். ம் இப்போது உம் கேள்வியைக் கேளும்”
“இல்லை இப்போது வேண்டாம்”
“ அட சுளுக்குத்தான்யா, முறிவு இல்லை” என்றவர், “உமக்கும்தான்” என்று என்னைப் பார்த்துக் கண் சிமிட்டினார். பின் புன்னகை மாறாமல் பேசத் தொடங்கினார்:
“உண்மைதான். சந்திரனுக்குப் போய் கொடியை நாட்டிவிட்டீர்கள். ஆனால் சாலையைக் கடப்பதற்குள் உயிர் போய் திரும்பி வருகிறது. ஆஸ்பத்ரிகள் பெருகியிருக்கின்றன. ஆனால் நாட்டில் இருப்பவர்களில் பாதிப்பேருக்கு மேல் உடல்நலம் கெட்டிருக்கிறது.படிப்புக்கும் கல்விக்கும் உங்களுக்கு வேறுபாடு புரியவில்லை. படைப்புக்கும் எழுத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லை.இலக்கிய வாசிப்பு அதிகரித்திருக்கிறது. ஆனால் ஒரு பாரதியை உங்களால் உருவாக்க முடியவில்லை”
.
அவர் புன்னகை என்னைச் சுட்டது.
“செய்திகள் இடைவிடாமல் பொழிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவை சிந்தனையில் தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரியவில்லை. அடுத்த நாட்டில் குண்டு விழுந்ததற்காகக் கூடி அழுகிறீர்கள். ஆனால் கூடப்படிப்பவனைக் கொலைவெறி கொண்டு ஒரு கூட்டம் தாக்குகிறது. ஆனால் அதைக் குறித்து எங்கும் எந்தச் சலனமும் காணோம். அரசியல் எங்கள் காலத்தில் தேசத்தை ஒன்று சேர்த்தது. இன்று அரசியல் உங்களைப் பிளவுபடுத்துகிறது. வாகனம், தொடர்பு, மருத்துவம், இலக்கியம், சினிமா, எங்கும் தொழில்நுட்பம் செழித்திருக்கிறது.ஆனால் மனிதர்கள் வற்றி விட்டார்கள். வீட்டுக்கு வீடு மின்சாரம் வந்து விட்டது. ஆனால் வெளியே கனத்த இருள் சூழ்ந்திருக்கிறது”
நான் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்
அவர் படுக்கையில் இருந்தபடியே என்னை அருகில் அழைத்து முதுகில் தட்டினார்.
“நாம் மாறியிருக்கிறோம். ஆனால் வளர்ந்திருக்கிறோமா?”
புதுமைப்பித்தன் என்னுடன் ஒரூ வாரம் தங்கியிருந்தார். உடல்நிலை காரணமாக அவரோடு ஏதும் படமெடுத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் அவரது எக்ஸ்ரே என்னிடம் பத்திரமாக இருக்கிறது.
*
ஆசிரியர் 1908 ஜூன், 1917 ஏப்ரல் கடைஅடைப்புப் பற்றித் தெரியாதிருக்கலாம் வயது, படிப்பறிவுக் குறைவால் ; புதுமைப் பித்தனுக்குத் தெரிந்திருக்கும்
வரலாறும் தெரியாமல் பத்திரிகையாளர்கள் அப்போது குறைவுதான்