புதிய ஆரம்பங்கள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 19, 2014
பார்வையிட்டோர்: 9,614 
 

கதைக்கரு: இன்றும் வட இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் மன்சாம் மால்வா பகுதிகளில், அரியானா மாநிலத்தில் மேவாட் மாவட்டத்தில் இந்த நவயுக திரெளபதிகளின் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பஞ்சாப் மொழியின் மிகச் சிறந்த எழுத்தாளரான ஞானபீட விருதுபெற்ற பேராசிரியர் குர்தியல் சிங் (Gurdial Singh) தன்னுடைய புதினங்களில் நாடகங்களில் பெண்ணுக்கு இழைக்கப்படும் இக்கொடுமைகளைப் பற்றி நிறையவே எழுதியிருக்கிறார். அண்மையில் உத்திரபிரதேசத்தில் நடந்த இம்ரானாவின் செய்திக்குப் பிறகு இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இந்த அவலங்கள் நடப்பது தெரியவந்துள்ளது. திரெளபதி நாடகத்தைப் பார்த்து அந்தப் பெண்கள் கண்ணீர் விடும் செய்தியை ஓர் ஆய்வறிக்கை பதிவு செய்துள்ளது. இந்த உண்மைச் செய்திகளே இக்கதையின் கரு. நன்றி. –

அவள் கண்களில் இனம் புரியாத மருட்சி. எப்போதும் அவள் என்னையும் என் முகத்தையும் நேரில் பார்த்து பேசுவதே இல்லை.அது அவள் என்னிடம் வேலை செய்பவள் என்ற ஒரு காரணத்தினால் மட்டும் அல்ல என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இந்தப் பெண்கள் நல்ல கட்டுமஸ்தான உடல்வாகுடன் திடகாத்திரமாக இருப்பார்கள் என்பது நான் படித்தப் பாடம். அப்படி எந்த விதமான திடகாத்திரமும் இவளிடம் இல்லை. நான் கேட்பதற்கு மட்டுமே பதில் சொல்லுவாள். அதுவும் ஒன்றிரண்டு வார்த்தைகளில் இருக்கும் அவளுடைய பதில். இந்த மாவட்டத்திற்கு பணி மாற்றம் கிடைத்தவுடன் இந்திய வரைபடத்தை எடுத்து வைத்துக்கொண்டு எங்கே இருக்கிறது இந்த இடம் ? என்று தேடிப்பார்த்தேன். பஞ்சாபிலிருந்து பிரிந்து தனிமாநிலமாகிவிட்ட அரியானாவில் இருந்தது இந்த மாவட்டம்.மேவாட் மாவட்டம்.( Mewat district). எந்த விதமான தொழில் அபிவிருத்திகளும் இல்லை. விவசாயம் மட்டுந்தான். பெரும்பாலும் எல்லா ஆண்களும் வாகன ஓட்டுநர்களாக இருந்தார்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தது இரண்டு ஏக்கர் நிலமாவது இருந்தது. இரண்டு ஏக்கர் நிலத்திற்கும் குறைவாக இருப்பவனுக்கு யாரும் தன் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க மாட்டார்களாம். அவள் தான் ஒரு நாள் இந்தச் செய்தியைப் பேச்சுவாக்கில் சொன்னாள். இரண்டு மாதங்கள் ஆனது அவள் சகஜமாக என்னுடம் இரண்டொரு வார்த்தைகள் பேசுவதற்கு.

அவளுடைய கதையை அவள் சொன்னாள். அவள் பெயர் ரத்னா. அவள் சொந்த ஊர் அசாமில் இருந்தது. அடிக்கடி லாரி ஓட்டிக்கொண்டு வரும் அவள் கணவன் நெடுஞ்சாலையில் இருக்கும் இவர்களுடைய தேநீர்க்கடையில்தான் லாரியை நிறுத்துவான். நேநீருடன் சேர்ந்து சுடச்சுட சப்பாத்தியும் கிடைக்கும். அவனை முதன் முதலாக அவள் பார்த்தபோது அவளுக்கு பத்துவயது கூட ஆகவில்லை. அவன் எப்போதும் அதிகாலையில் அல்லது இரவில்தான் வருவான். வந்தால் லாரியை நிறுத்திவிட்டு அவர்கள் தேநீர்க்கடையில் வெளியில் போட்டிருக்கும் கட்டிலில் படுத்துக்கொள்வான். ரத்னாவின் அம்மா அவனை விழுந்து விழுந்து கவனிப்பாள். எல்லாம் சுடச்சுட அவனுக்கு கிடைக்கும். எப்போது வந்தாலும் அவன் அவளுடைய அம்மாவுக்கு ஏதாவது வாங்கி வருவது வழக்கமாக இருந்தது. அவன் வந்துவிட்டால் இவளுக்கும் ஏக குஷியாக இருக்கும். ஏதாவது திண்பதற்கு கிடைக்கும் என்பதால். இரவில் மட்டும் அவளுக்குப் பயமாக இருக்கும். அவளைத் தனியாக தூங்க வைத்துவிட்டு கதவை வெளிப்பக்கமாக தாளிட்டு விட்டு அவளுடைய அம்மா பாயிருப்பாள். தம்பி, தங்கைகள் எல்லோரும் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு படுத்திருப்பார்கள். ஒருநாள் அப்படித்தான் இரண்டு வயது கூட நிரம்பாத அவளுடைய தம்பி நடுராத்திரியில் விழித்து அழுதுகொண்டிருந்தான். அம்மாவைத் தேடி. அவள்தான் மூத்தப் பெண். அவளுக்கு தூக்கம் வரவில்லை. அவனை எவ்வளவோ சமாதானப்படுத்திப் பார்த்தாள். அவள் சமாதானப் படுத்துவதைக் கண்டு கோபத்தில் அவனுடைய சத்தம் இன்னும் அதிகமானது. அவள் எழுந்துபோய்க் கதவைத் தட்டினாள். அந்தச் சாலையில் அவர்கள் வீடு மட்டும்தான். மற்ற குடியிருப்புகள் எல்லாம் மலையடிவாரத்தில் இருந்தன. அவள் தம்பியின் சத்தமும் அவள் கதவை இடித்தச் சத்தமும் சேர்ந்து காற்றைக் கிழித்துக் கொண்டு கதவின் இடுக்குகள் வழியாக பேரிரைச்சலுடன் அந்த நடுஇரவை அலற வைத்தது.

கதவு திறக்கவே இல்லை. அழுது அழுது அந்தச் சத்தத்தில் தொண்டைக் கட்டிக்கொண்டது அந்தச் சின்னப் பையனுக்கு. அவள் மடியில் அவன் பெருவிரலைச் சூப்பிக்கொண்டு படுத்திருந்தான். அவள் விரித்திருந்த கிழிந்தப் போர்வை நனைந்தது. அவள் அவனுடைய ட்டிராயரைக் கழட்டி விட்டு அவனைச் சற்றுத்தள்ளிப் படுக்க வைத்தாள். அவளுடைய பைஜாமாவும் நனைந்து போனது. அதிகாலையில் எப்படியோ தூக்கம் வந்து தொலைத்தது, அவளுடைய அம்மா வந்து இவள் தலைமயிரைப் பிடித்து இழுக்கும்வரைத் தூக்கம் கலையவில்லை.

..நல்லா திங்கறியே.. சொரணை இல்லை உனக்கு..இந்த வயதில் இப்படி படுக்கையை நனைச்சிருக்கியே நாயே’ என்று கத்தினாள். அம்மாவின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை. ‘படுக்கையை நான் ஈரமாக்கவில்லை.. பெரிசா கத்த வந்திட்டியே..கதவை வெளிப்பக்கமா பூட்டிட்டு நீ எங்கே போய் தொலைஞ்சே’ என்று கத்த வேண்டும் போலிருந்தது. அம்மா வெறிப்பிடிச்சவள் போல் தம்பி தங்கைகள் எல்லோரையும் அடித்துக் கொண்டிருந்தாள். அவளிடம் இப்போது என்ன சொன்னாலும் பிரயோசனமில்லை.

வெளியில் வந்தவுடன் கடைக்கு வேண்டிய பாத்திரங்களை எடுத்து வேகமாக கழுவி வைத்தாள். தண்ணீர்ப் பிடித்து நிரப்பினாள். அதுவரை அந்த லாரிக்காரன் வெளியில் கிடந்தக் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் அம்மாவின் துப்பட்டா காற்றில் அசைந்து கொண்டிருந்தது. அந்த துப்பட்டாவைப் பார்க்க பார்க்க அவளுக்கு லாரிக்காரன் மீது கோபம் வந்தது. அப்பா கொடுத்த சாய்க் கப்பை எடுத்துக்கொண்டு அவனிடன் போனாள். அவன் கண்விழித்திருந்தான். இவள் கைகளில் இருந்து சாய்க் கப்பை வாங்கியவன் இவள் கன்னத்தில் தட்டினான். பட்டென்று அவன் கைகளைத் தட்டி விட்டாள். தூரத்திலிருந்த அம்மா அவர்கள்இருவரையும் பார்த்தாள். இப்போது அம்மாவின் பார்வையை எதிர்த்து நின்று அவள் பார்த்தபோது அம்மா அவள் பார்வையைத் தாங்காமல் வீட்டுக்குள் போய்விட்டாள். இப்படித்தான் இந்த லாரிக்காரனின் உறவு இவர்கள் குடும்பத்துடன் ஆரம்பித்தது. அடுத்து 6 மாதம் கழித்து வந்தவன் ரூபாய் 2700 கொடுத்துவிட்டு இவளை அவனுடன் அழைத்துவந்துவிட்டான். தம்பி தங்கைகளை விட்டுவிட்டு அவளுடைய அப்பாவை விட்டுவிட்டு அந்த மலையடிவாரத்து காற்றை விட்டுவிட்டு அவனுடன் தனியாகக் கிளம்பிவர முடியாது என்று அவள் அழுதப்போது அவளுடைய அம்மாவும் சேர்ந்து அழுதுக்கொண்டிருந்தாள். லாரிக்காரன் அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறான், அவனுக்கு சொந்தமாக நிலமிருக்கிறது, சாப்பாட்டுக்கு இந்த மலையடிவாரத்தில் லாரிக்காரனிடமும் காட்டு இலாக்கா காரர்களிடமும் மாறி மாறி படுக்க வேண்டிய அவஸ்தை இருக்காது என்று அவளுடைய அம்மா சொன்னபோது அவளால் மறுத்துப் பேச முடியவில்லை.

அம்மா சொன்னபடியே அவனுக்கு 3 ஏக்கர் நிலமிருந்தது. வீட்டில் எல்லோரும் அந்த நிலத்தில்தான் உழைத்தார்கள். அவனுடன் பிறந்தவர்கள் மூன்றுபேர். இவன் தான் மூத்தவன். அவனுடைய அப்பா வயது 60 தாண்டிவிட்டது. இருந்தாலும் நல்ல வாட்டச்சாட்டமாக இருந்தார். இவளுக்கு சாப்பாட்டுக்கு எந்தக் குறையுமில்லை.

வயிறு நிறைய மூன்று நேரமும் சாப்பிடும்போதெல்லாம் வீட்டு ஞாபகம் வரும்.

வீட்டு நினைவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அவள் குறைத்துக்கொண்டாள்.

வீட்டை நினைத்தவுடன் அம்மாவின் நினைவு வரும் அம்மாவை நினைத்தால் இப்போது தன் கணவனாக இருக்கும் இவன் பக்கத்தில் அம்மாவின் துப்பட்டா காற்றில் அசைவது தெரியும். சில சமயங்களில் அவனுடைய வார்த்தைகள் அவளை அப்படியே பொசுக்கும். உச்சக்கட்ட ஆலிங்கனத்தில் அவள் தன்னை மறக்கும்போது ‘உன்னோட அம்மாவும் இப்படித்தான்’ என்று உதிரும் அவன் உளறல்கள்.. ..ஒரு மலைப்பாம்பு தன்னை இறுக்கிப்பிடித்து மூச்சு மூட்ட வைப்பது போலிருக்கும். பலம் கொண்ட மட்டும் அவனைப் பிடித்து கீழே தள்ளிவிட்டு எழுந்திருக்க முயலும் ஒவ்வொரு முறையும் அவன் பிடி இறுகும்.கண்களை மூடி கால்களை விரித்து சருகளாய் அவள் இலை அவனுடைய வெட்ப மூச்சில் தீப்பிடித்து எரியும். அவள் கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து கொண்டிருந்தாள்.

ஒருநாள் அவனுடைய தம்பி அவனுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தான். அவர்களின் அப்பா வந்து சமாதானப்படுத்தினார். தம்பிகள் மூவரும் அப்பா சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசியது
அவள் காதிலும் விழத்தான் செய்தது. இந்த ஊரில் வீட்டுக்கு வீடு இந்தக் கதைதான் என்பது அவளுக்கும் தெரிந்தே இருந்தது. ஆனால் ஏதாவது மாற்றம் நம் வீட்டிலாவது நடக்காதா என்ற நப்பாசை இருக்கத்தான் செய்தது.

‘நீ இதற்கு ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இருக்கிற 3 ஏக்கர் நிலத்தை நாங்கள் நாலுபேர் பங்கிட்டுக்கொண்டால் என்ன தேறும்? 3 ஏக்கர் நிலத்திற்கு குறைவா இருந்தா எந்தப் பெண் எங்களைத் திருமணம் செய்து கொள்வாள்? ..யோசிச்சுப் பார். எங்கள் அண்ணன் தம்பிக்கே இதிலே ஒன்னும் சங்கடமில்லைன்னா உனக்கென்ன வந்தது.. நானா இருந்தா என்னா என் தம்பிமாரா இருந்தா என்ன சொல்லு. திரெளபதி இருக்கலையா ஐந்து பேருக்கூட..’ அவன் சொல்லிக்கொண்டே இருந்தான். அவள் அழுதுக்கொண்டிருந்தாள். மறுநாள் அவன் லாரியை எடுத்துக்கொண்டு லோடு ஏற்றிக்கொண்டு பீகார் போய்விட்டான். அவள் வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் அன்றிரவை எண்ணிப் பயந்து கொண்டிருந்தாள். அவனுடைய தம்பி இருட்டில் அவளை நெருங்கி அணைத்தப்போது உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதொன்றும் அவளுக்கு நினைவில் இல்லை. அவள் அருகில் அந்த ஊர்ப் பெண்களின் கூட்டம்.

‘என்ன ரத்னா பயந்திட்டியா.. மூத்தவனை விட சின்னவந்தான் ரொம்ப நல்லவன்.அதிர்ந்து பேச மாட்டான். இந்தப் பாரு ,, நீ கத்தி மயக்கப்போட்டு விழுந்ததிலிருந்து ஒன்னும் சாப்பிடாமா உன் பக்கத்திலெயே
உட்காந்திருக்கான். மேவாட்டுக்கு வந்துட்டு இதுக்கு மாட்டேன்னா எப்படி வாழமுடியும் சொல்லு..’ பக்கத்து வீட்டு அஞ்சு சொல்லிக்கொண்டிருந்தாள். அவர்கள் வீட்டில் அவள் கணவனுடன் பிறந்தவர்கள் 5 பேர். அவள் கணவன் தான் இவளைத் திருமணம் செய்து கொண்டு பீகார் மாநிலத்திலிருந்து அழைத்து வந்தான். அண்ணன், தம்பிகள் எல்லோருக்கும் சேர்த்து எட்டு பிள்ளைகளைப் பெற்றிருந்தாள்.

மெதுமெதுவாக சின்னவனின் அமைதியும் அன்பானக் கவனிப்பும் அவளைச் சமாதானப்படுத்தியது. லாரிக்காரனிடமிருந்த முரட்டுத்தனம் இவனிடமில்லை. எல்லா வற்றையும் விட இவளுக்கு மனநிம்மதி கொடுத்தது.. இவன் எந்த நேரத்திலும்..

‘உன்னோட அம்மாவும் இப்படித்தான்’ என்று சொல்வதில்லை. சின்னவனின் குழந்தை அவள் வயிற்றில் வளர்ந்தது. வீட்டில் எல்லோருக்கும் சந்தோஷமாகவே இருந்தது. லாரிக்காரன் வெளிப்படையாக சந்தோஷப்படுவது போல காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் அவன் குமைந்து கொண்டிருப்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அதைப் பார்க்க பார்க்க அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. மலைப்பாம்பைப் பிடித்து அதன் தலையில் ஏறி நாட்டியம் ஆடுவது போல சந்தோஷம். அவன் வீட்டுப்பக்கம் வருவதையே தவிர்ப்பதும் அவளுக்குப் புரிந்தது. அவள் அதற்காகவெல்லாம் கவலைப் பட்டுக்கொள்ளவில்லை. அவன் வீட்டிலிருக்கும்போது வேண்டும் என்றே சின்னவனை அழைத்து அவனருகில் உட்கார்ந்து கொண்டாள். அந்தக் குழந்தைப் பிறந்தப்பின் அடுத்தவன் முறை வந்தது.

அவள் எதிர்பார்த்தது தான் என்றாலும் வரும்போது அந்த வலியை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பக்கத்தில் குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது.

இவனிடம் லாரிக்காரனின் முரட்டுத்தனமில்லை. சின்னவனின் மென்மையுமில்லை.

ஓர் அவசரம்.. அவசரம் .. அவசரம்.. பத்துநாள் பட்டினிக் கிடந்தவன் கஞ்சியை ஒரே வாயில் ஊற்றி மேலும் கீழுமாகக் கொட்டிக்கொண்டு நிற்கும் அவசரம் இவனிடம்.

இவள் முகத்தை அவன் நேர்க்கொண்டு பார்ப்பதே இல்லை. இவளும் அவன் முகத்தைப் பார்ப்பதில்லை. நான்காவது முறை வந்தப்போது இவள் உடல் கிழிந்து கிடந்தது. தைக்க முடியாதக் கிழிசலாய் எந்த உடம்பையும் போத்திக்கொள்ள லாயக்கு இல்லாமல் தொங்கியது. ஆத்திரத்தில் அவன் இவள் கிழிசல்களைப் பிடித்து இழுத்து சிதைத்தான். ‘அந்த இருட்டில் அவள் கதறல்…. அவளுடைய தலைமுடிக் கலைந்து முன்னால் விழுந்து ஆடியது. அவள் கண்களில் வெறித்தனம்…டேய்.. நான் உன் அம்மாடா.. உங்க அப்பனை எங்கே கூப்பிடு.. உன் அண்ணன்மாரைக் கூப்பிடு.. அவள் உடல்வேகமாக முன்னும் பின்னும் ஆடியது. எங்கிருந்து அவள் குரலுக்கு இத்தனை கொடூர சத்தம் வந்தது என்பது தெரியவில்லை. மறுநாள் பூசாரி வந்து மந்திரித்தார். அவள் அமைதியாக கட்டிலில் படுத்திருந்தாள். பக்கத்தில் அவளுடைய மாமனார் விசிறியால் அவளுக்கு காற்று வீசிக்கொண்டிருந்தார்.

நல்ல வாட்டச்சாட்டமான 60 வயதுக்கிழம். அந்த வீட்டிலேயே அதிகமாக உடல் உழைப்பு செய்பவர்.அந்தக் கிழத்தின் பார்வையைச் சந்திக்க விருப்பமில்லாமல் அவள் கண்களை மூடிக்கொண்டாள். லாரிக்காரன் வந்து அவள் உடலைத் தொட்டுப்பார்த்தான். குளிர்ந்திருந்தது அவள் உடல். அவன் கவலையுடன் அங்கிருந்து நகர்ந்தான். சின்னவனும் அடுத்தவனும் வந்து எட்டிப்பார்த்தார்கள். அவள் பக்கத்தில் அவர்களுடைய அப்பா இருப்பதைக் கண்டவுடன் பக்கத்தில் வராமல் வெளியில் போய்விட்டார்கள். கிழம் அவள் பக்கத்திலேயே இருந்தது. அவளை விட்டு அங்கிருந்து நகர்வது மாதிரியே தெரியவில்லை. அவளுக்கு வந்திருப்பது கிழவனின் மனைவியின் ஆவி அல்லவா. மறுநாள் அவளைப் போலீஸ் கைது செய்தது.

‘மாமனாரை இரவில் அரிவாளில் வெட்டிக்கொலை செய்த மனநிலை சரியில்லாத மருமகள்’ என்று பத்திரிகைகள் மேவாட் மாவட்டத்தில் நடந்தக்கொலையைப் பற்றி எழுதின. முதல் முறையாக அந்த ஊருக்கு போலீஸ் வந்தது. பத்திரிகைகாரர்கள் வந்தார்கள். ‘அண்ணன் தம்பிகளுடன் வாழ்க்கை நடத்தும் நவயுக திரெளபதிகள்..

மாமனாரின் ஆசைக்கும் மறுப்பு சொல்லாமல் எரியும் குடும்பவிளக்குகள்..

ஊடகங்களுக்கு பெருந்தீனியாகப்போனது மேவாட் மாவட்டத்தின் கதைகள்.’

அன்று என்னைப் பார்க்க வந்திருந்த சேவா சங்கத்தின் காரியதரிசியுடன் பேசிக்கொண்டிருந்தேன். ரத்னாவின் கதை என்னை மிகவும் பாதித்தது.

‘என்ன மேடம்.. எத்தனை வருடமா இந்தக் கதை நடக்கிறது இங்கே’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். “போலீஸ், சட்டம், நீதி இதெல்லாம் இருந்துமா..?’

அந்தக் காரியதரிசி பெண் என்னைப் பார்த்து சிரித்தாள். எழுத்துமூலமாகவோ, சொல் மூலமாகவோ ஒரு புகாரும் இதுவரைக் கிடையாது. நானும் எவ்வளவோ முயற்சி செய்துவிட்டேன் மேடம். இந்த ரத்னா கூட மனநிலைச் சரியில்லாமல் கொலை செய்ததாகத்தான் ஒத்துக்கொண்டிருக்கிறாளே தவிர உண்மைக் காரணம்
எதையும் சொல்வதில்லை. சரி.. நாளை இவர்கள் ஊரில் நடக்க இருக்கும் எங்கள் திரெளபதி நாடகம் பார்க்க வாருங்கள் என்றழைத்தாள். ஊருக்கு ஏற்ற நாடகம்தான் என்று எண்ணிக் கொண்டே வருவதாக சம்மதம் தெரிவித்தேன்.

அந்த நாடகத்திற்கு பெண்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. ஊரின் முக்கியஸ்தர்களுக்கு மட்டும் நாற்காலிகள். மற்ற ஆண்களுன் பெண்களும் தரையில் உட்கார்ந்திருந்தார்கள். குழந்தைகளில் ஒன்றிரண்டு பெண் குழந்ததைகள் மட்டும்தான் இருந்தார்கள். அந்த தலைகீழ் விகிதத்தைப் பார்க்கும்போது அந்த ஊரின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை என்னால் கற்பனைச் செய்து கொள்ளவே பயமாக இருந்தது.

‘ திரெளபதியின் துகிலை உரியும்போது அங்கே கூட்டத்தில் மயான அமைதி..

பக்கத்தில் இருந்த மரத்தின் கிளையிலிருந்து சேலைகளை ஒருவர் முடிச்சுப் போட்டுக்கட்டி துச்சாதனன் இழுக்க இழுக்க அனுப்பிக்கொண்டிருந்தார். அதைப் பார்க்க சிரிப்பாக இருந்தது. ஆனால் அங்கிருந்த மக்கள் யாரும்
மரக்கிளையிலிருந்து வந்து கொண்டிருக்கும் சேலைகளைப் பார்க்காமல். .’க்ருஷ்ணா..க்ருஷ்ணா’ என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள். அடுத்தக் கட்டம்.. திரெளபதி சபதம் செய்துகொண்டிருந்தாள். ஆண்தான் பெண் வேடமிட்டிருந்தார். சபதம் செய்யும்போது திரெளபதியின் குரலில் ஆணின் சத்தம் தொனித்தது. அதுவரைப் பெண்குரலில் பேசிக்கொண்டிருந்தவர் வீரவசனம் பேசும்போது தன்னை மறந்து ஆண்குரலில் வீரத்துடன் அங்குமிங்கும் நடந்து கொண்டு சபதம் செய்யும் காட்சி எனக்கு வேடிக்கையாக
இருந்தது. பெண்களின் கூட்டத்திலிருந்து கேவி கேவி அவர்கள் அழும் குரல்கள் வந்தன. அந்தக் காட்சிக்கு அழாத ஒரே பெண் நான் மட்டும்தான் என்பது அதன் பின் நினைவுக்கு வந்தது.

மறுநாள் அந்தக் காரியதரிசி வந்திருந்தாள். நான் அவர்களின் நாடகத்தைப் பார்த்ததில் அவளுக்கு ரொம்பவே சந்தோஷம்.

நாடகம் எப்படி இருந்தது மேடம்’

அவள் கேள்விக்கு நான் நேரடி பதில் சொல்லாமல் ‘எத்தனை வருஷங்கள் இந்த நாடகம் நடத்துகிறீர்கள்?’ என்று கேட்டேன்.

’35 வருஷமா மேடம்’

‘ம்ம்ம் இந்த நாடகத்திலே இந்த ஊரு திரெளபதிகளுக்கு என்ன மெசஜ் கொடுக்கறீங்க?’ ‘என்ன மேடம் இப்படி கேட்டுட்டீங்க.. திரெளபதி வந்த ஒவ்வொரு காட்சியிலும் இந்த ஊரு பெண்கள் எப்படி அழுதார்கள்னு நீங்க நேரிலேயே பாத்தீங்களே..’

‘அப்போ 35 வருஷமா இந்த திரெளபதிகளை அழ வச்சதுதான் உங்க நாடகத்தின்
வெற்றின்னு சொல்ல வர்றிங்களா’

‘ அழ வச்சது மூலமா இந்த நாடகம் அவுங்களுக்கு ரொம்ப பெரிய உதவியைச் செய்திருக்கு மேடம்’

‘வாட் டூ யு மீன்’

‘யெஸ் மேடம். அழறப்போ மனசிலிருக்கும் பாரம் குறையுமில்லியா’

எனக்கு அவளுடைய பதிலைக் கேட்டு சிரிப்பு வந்தது.
‘அழறது மனப்பாரத்தைக் குறைக்கும்தான். ஒத்துக்கறேன். ஆனா அதுவே பிரச்சனைக்குத் தீர்வாகி விட முடியுமா’

‘எங்களால் என்ன செய்ய முடியும் சொல்லுங்க மேடம்..’

‘அட என்ன இப்படி சொல்லிட்டீங்க.. நீங்கள் எல்லாம் நினைச்சா நிறைய விஷயங்களை இந்த மக்களுக்குச் சொல்ல முடியும்.. இதே திரெளபதி கதையை பழைய பாண்டவர் சபதத்திலிருந்து மாத்துங்க. பாண்டவர்களே துகிலுரியும் இந்த திரெளபதிகளுக்கு பாண்டவர்களின் சபதம் சரிப்படுமா யோசியுங்க. புதுசா .. முடியும் உங்களால்.. இவுங்களுக்கு ஏத்த மாதிரி.. பாஞ்சாலி சபதத்தை மாத்துங்க..’

அந்தப் பெண் அமைதியாக நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

அதன் பின் நானும் வேலையில் பிஸியாக இருந்துவிட்டேன்.

அடுத்து ஆறுமாதங்கள் கழித்து பக்கத்து ஊரில் ‘நவயுகத் திரெளபதி’ நாடகம் போட்டார்கள். சேவாசங்கத்திலிருந்து நான் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்புக்கு மேல் அழைப்பு. நல்ல குளிர். சால்வையை இழுத்துப்போர்த்திக் கொண்டு நானே காரை ஓட்டிக்கொண்டு போனேன். வழக்கம்போல பெண்களின் கூட்டம். வழக்கம் போல காட்சிகள். கடைசிக் காட்சி திரெளபதி சபதம்…

‘எங்கே அந்த வில் விஜயன்..? என்னைத் தன் மனைவியென வென்றெடுத்து வந்தவன் வென்று வந்தப் பரிசு பெண் என்று சொல்லாமல் பொருள் என்று சொன்னானே!

ரத்தமும் சதையும் துடிப்பும் கொண்ட பெண் என்ன ஜடப்பொருளா? பொருள் என்பதால் அல்லவா அண்ணன் -தம்பிகள் அனைவருக்கும் உரியதென அன்னைகுந்தி அறியாமல் சொல்லிவிட்டாள். அறியாமல் சொல்லியதையே அறமாக்கி அண்ணன் தம்பிகள் பெண்டாள அனுமதித்த அந்தப் பாவி அர்ச்சுணன் எங்கே .. கொண்டு வாருங்கள் அவனை..காட்ட வேண்டும் அவனிடம் பெண்ணின் வீரம் என்ன என்பதை.’

‘அண்ணன், தம்பிகள். பெரியப்பா, ஆசான் எல்லா உறவுகளையும் தருமத்தின் முன்னால் வென்றெடுக்க போர்க்களத்தில் கீதை உபதேசித்த கண்ணன் எங்கே? கொண்டுவாருங்கள் அவனை. எங்கே போனது அவன் கீதையின் உபதேசம்..

என்னை ஐவருடன் படுக்க ஆணையிட்ட போது எங்கே போனது கண்ணனின் உபதேசம்..? கீதையை உபதேசித்த அவன் நாக்கைப் பிடித்து இழுத்து அறுக்கும்வரை என் குரல் அடங்காது.. கொண்டு வாருங்கள் அவனை…’

நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். பெண்கள் கூட்டத்தில் அமைதி.. அவர்கள் கண்ணீரைத்துடைத்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். கொஞ்ச நேரத்தில் அங்கே கல்லெறி,, நாடகத்தில் தொங்கிய தீரைச்சிலைகளில் தீ பற்றிக்கொண்டது. கலவரம் வெடித்தது.

மறுநாள் அங்கே 144 தடை யுத்தரவு அமுலுக்கு வந்தது.

சிலர் நாடகத்திற்கு ஆதாரவாகவும் பலர் எதிர்ப்பாகவும் மாறியதால் ஏற்பட்ட கலவரம்.
நாடகத்தைப் புதிதாகப் போடச்சொன்னது நான் தான் என்ற செய்தியை பெருமையுடம் அந்த சேவா சங்கத்தின் காரியதரிசி சொல்லப் போக அதுவே எனக்கு வினையாக வந்த வாய்த்தது.

மறுநாள் என் மேலதிகாரியிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது.

‘ உங்களுக்கு என்று புதிதாக ஒரு மாவட்டத்தைத் தான் இனிமேல் உருவாக்கனும்.

வாட் இஸ் திஸ் .. எங்கே போனாலும் ஒரு கலவரம்..அதில் கட்டாயம் நீங்க சம்மந்தப்பட்டிருக்கிறிர்கள்! பஞ்சமி நில மீட்புனு போவீங்க.. இருளர்களின் போராட்டம்னு கூட்டத்திற்கு தலைமைத்தாங்க போவீங்க.
ஆதிவாசிகளின் நில உரிமைப் போராட்டம்னு ஒரு சங்கத்தை ஆரம்பிச்சு விட்டுட்டு வந்திருவீங்க..! உங்களை எங்கே போஸ்டிங் பண்ணினாலும் அங்கே புதுசா நீங்க என்ன தலைவலியை எங்களுக்கு கொண்டு வரப்போறிங்களோனு பயமா இருக்கு..நீங்க அரசாங்க வேலை செய்யப் போறிங்களா இல்ல பொதுநலச்சேவை செய்யப் போறீங்களா..?’

‘இரண்டையும் நான் ஒன்னாத்தான் சார் நினைக்கேன்’

அவர் தலையப் பிடித்துகொண்டு நாற்காலியில் உட்கார்ந்தார்.

‘சாரி .. உங்களுக்குனு எந்த டிபார்ட்மெண்டையும் கொடுக்கற மாதிரி இல்லே.
எந்த மாவட்டத்திலும் போஸ்டிங் இல்லை.. டிபார்ட்மெண்ட் இல்லாத மாவட்டம் இல்லாத எந்த வேலையும் செய்யாத அரசாங்க அதிகாரியாக இருங்க..’

” நன்றி சார்..’ என்று நான் சொன்னவுடன் அவர் என்னை நிமிர்ந்துப் பார்த்தார்.

இப்போது நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் சிரித்தோம். அவருக்கும் தெரியும்
அவரால் முடியாதப் பல காரியங்களை நான் ஆரம்பித்து வைத்துவிட்டேன் என்பது.
அதில் அவருக்கும் பெருமைதான். ஆனால் அவருடைய நாற்காலி அதை ஏற்றுக்கொள்ள இடம் கொடுக்கவில்லை. நாற்காலிக்கு அருகில் அவரும் நாற்காலியை விட்டு ரொம்ப விலகி நானும் நின்று கொண்டிருந்தோம்.

– மார்ச் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *