இந்திரன்,மட்சூ,கந்தா,விமல்.மூர்த்தி …ஒன்றாய் சேர்ந்தே திரிகிற வகுப்பு. அவர்களுடன் சம வயதிலிருந்த சாரதா ஆளுமை கூடியவளாக இருந்தாள்.’அக்கா’போன்ற நிலை. கந்தா, அவளிடம் நிறைய கேள்விகளை கேட்டு திணறடித்துக் கொண்டிருந்தான்.”நீங்களும் சாதாரணப் பெண் தானே.வெளியில் எங்களைப் பார்த்தால் ,பார்க்கக் கூடாத ஐந்துவைப் பார்ப்பது போல முகத்தை வேற பக்கம் திருப்பிக் கொண்டு பார்காதது போல போவீர்கள்;திரிவீர்கள்”என்றான்.சாரதா உடனடியாக மறுத்து”நான் அப்படி எல்லாம் இருக்க மாட்டேன்”என்றாள்.”இந்த வருசம் படம் வரைஞர் கோஎஸ் முடிந்த பிறகு பார்க்கத் தானே போறோம்.ரிவேர்ட் பாடங்களுக்கு இரவலாக பாடக் குறிப்புக்களை உங்க வீட்டுக்கு வந்து கேட்க முடியுமா,என்ன?உண்மையைப் பேசுங்கள்”என்றான்.அதற்கும் அவள் பதில் சொன்னாள்.”எங்க கிராமத்துக்கு வந்து கைலை வீடு எங்கே இருக்கிறது?என்று கேளுங்கள்.வீட்டுக்கே கூட்டி வந்து விடுவார்கள்.வீட்டுக்காரர்கள் கொஞ்சம் பழைய ஆட்கள் தான்.விபரம் கேட்பார்கள்.வழியில் என்னை சந்தித்தாலும் தைரியமாகக் கேட்கலாம்.நான் இரவலாகத் தருவேன்.அதைப் போல திருப்பித் தரவும் மறக்கக் கூடாது”என்றாள்.
அவளுக்கு பக்கத்திலிருந்த ஜேர்வியும் முத்திரிகைக் கொட்டையாக ” நானும் ஒ.கே ! என்னிடமும் வந்து நீங்கள் கேட்கலாம் “என்றாள்.தொடர்ந்து”எங்க வீட்டுக்குப் பெயர் கிடையாது.அன்டன் கோபால் என அப்பாவின் பெயரைச் சொல்லித் தான் கேட்க வேண்டும்.அம்மாவின் பெயர் யாருக்குமே தெரியாது”சிரித்தாள்.”உங்களை சந்திக்க வேண்டும் என்றால் அடிக்க மாட்டாரா?அதற்கு முதல் மேடம் என்ன உத்தியோகம் அவர் என்று சொல்லுங்கள்.சிவகவியிட அப்பா பொலிஸ் எனக் கேள்வி,இந்த சிங்களவன் பயங்கரவாதச்சட்டம் போட்டு வைத்திருக்கிறான்,தமிழன்ர குணம் தெரியும் தானே.எங்கடயள்களும் பழி வாங்க ஃப்.ஐ.ஆர் போடுறது மாதிரி அதற்குள்ளே போட்டு மாட்டி வைத்து விடுவார்கள்”என்றான் விமல்.
அவனுடைய குடும்பம் அநுராதப்புரத்திலேயே இருந்தது.83 இல் இல்லை,77 இல் இடம் பெற்ற இனக்கலவரத்தில் கடை எரிக்கப்பட்டு உயிர் தப்பி யாழ் வந்து சேர்ந்தவர்கள்.அவனுடைய அப்பா,கடையில் மூலதனம்,பிழைப்பு எல்லாம் கொட்டி நேர்மையாக ..நடத்தி வந்தவர்.சிங்கள அரசியல்வாதிகள் காடையர் என்ற குழுவைக் கூட்டி வந்து எரித்து விட்டார்கள்.ஊர்ச்சனம் ஏழை பாழைகள்.அவர்களால் உயிராபத்து ஏற்படாமல் தான் காப்பாற்ற முடிந்தது.”நீ சிங்களவனா?”என்ற ஏச்சுப் பேச்சுக்களை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கவே முடிந்தது. இரண்டு தேரர்களும் கூட நின்றிருந்தார்கள்.”ஆட்களைத் தொட முடியாது”என்று ஆவேசத்துடன் நிற்கத் தான் செய்தார்கள்.ஆனால் நிதி சேர்த்து திரும்ப கடையை ஏற்படுத்த ,பாதுகாப்பானது என்று சொல்ல …எல்லாம் முடியவில்லை.”மாத்தைய்யா யாழ்ப்பாணம் போறது தான் பாதுகாப்பானது ,அங்கேயே போய் விடுங்களுங்கள். வீடு வளவு விற்க மட்டும் வந்து போங்கள்.நாங்கள் பணத்தை வாங்கித் தருவோம்”என்று கண்ணீர் மல்க பேசிய அயலவர்கள் இருந்தார்க்கள்.ஆனால், கொழும்பில் சொத்தைத் தொடக் கூட முடியவில்லை.கழன்றது கழன்றதாகவே இருந்தது.இங்கே வித்தது மலிவு விலையில் இருந்தாலும் இவர்களுடைய சொத்து என்ற நிலை இருந்தது.எப்படி இருந்து என்ன?அதோடு மன அழுத்ததிற்குள்ளும்,நோய்யிலும் வீழ்ந்த அப்பாவிடம் பழைய உசார் இல்லை.யாழில் கஸ்ட ஜீவனம்.அந்த வீட்டுப் பொடியன் விமல்
விமலின் பேச்சு ஜேர்வியை சிறிது சீண்டியிருக்க வேண்டும்”நாங்கள் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள்.எங்க ஆள்கள் நல்லபடியே நடத்துவார்கள்.நானும் இரவலாகத் தருவேன்.சாரதா சொன்னது போல எங்களால் உங்களைப் போல திரிய முடியாது.திருப்பித் தர வேண்டியது அவசியம்.நேர்மையை காண்பிக்க வேண்டும்.பெடியள் தரவலிகளிடம் அது தானே மிஸ்சிங்”என்றாள்.இந்திரன் “நாங்கள் ஐவரும் சொன்னப் பேச்சைக் காப்பாற்றுவோம்.மற்றவர்கள் பற்றி எங்களுக்குத் தெரியாது”என்றான் .வியப்புடன் இவர்கள் பேசுவதை மற்றைய பெண்கள்அவதானிக்கவேச் செய்தார்கள்.ஆனால் எதுவும் பேசவில்லை..வகுப்பில் அரைக்கரைவாசி பேர்கள் பெண்கள்.சேர்ச்சைச் சேர்ந்த வட்டத்தில் கத்தோலிக்கர்கள் கர்வம் அற்றவர்கள் தான்.மற்றப்பிரிவினர் மாறுபட்டவர்கள்.இருந்தாலும் எல்லோரும் யாழ்ப்பாணிகள்.எப்ப என்ன மாதிரி மாறுவார்கள் என்பதை அனுமானிக்க முடியாது.இருந்தாலும் சைவசமயிகளை விட சகோதரத்துவம் அந்தப்பக்கம் இருப்பதை ஒப்புக் கொள்ளவே வேண்டும்.
உரிமை மறுப்புகளைப் பற்றி வெளிப்படையாக அகிம்ஸைரீதியில் முதலில் கதைத்தவர்கள் கத்தோலிக்க ஆயர்கள் தான். இலத்தின் அமெரிக்காவில் ஏற்பட்டப் பொறி பரவலாகி இங்கேயும் வந்திருக்கிறது.ஆனால் மதமாற்றம் என்று வருகிற போது சைவத்தை பீட் பண்ண பவர் காணாது தான்.மனிதனை மனிதன் வணங்கிற பக்குவம் மனிதனுக்கு அறவே கிடையாது.மற்ற எல்லாச் சமயங்களிலும் மனிதனைக் கடவுளாக்கிற போது செயற்கைத் தனம் தட்டுகிறது. சைவம் அதற்கு கண்டறிந்த வழி தான் தேவலோகம். தெய்வப்பரம்பரைகள். யாரையுமே மனிதனில் தேடிக் கண்டு பிடிக்க முடியாது. நாலாம் பரிணாம வெளியில் அவர்களைக் கொண்டு போய் நிறுத்தி விட்டார்கள். இவர்களை வணங்கிற மனிதர்கள் தொண்டர்களாகத் தான் இருக்க முடியும் .கடவுளாக மாற முடியாது.எனவே மருத்துவம்,விஞ்ஞானம்,தத்துவம் எல்லாவற்றையுமே சாதூரியமாக நாலாம் பரம்பரைக் கூடாகவே வருவது போல புகுத்தி விழிப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.பழையனவற்றில் தேடுதலைச் செய்யும் ஆர்வம் ஜேர்மன்காரர்களிடம் மட்டுமே இருந்தது . மற்றய எந்த மேற்குலகத்தாரிடமும் இருக்கவில்லை. இந்தியாவிலிருந்தே பல புதுப் புதுப் மதங்கள் ஆசியாவெங்கும் பரவின.இந்திய வேர்.இந்துமதம் என்பதும் ஆதி மனிதரின் மதம் என்பதே . மற்ற மதங்கள் ஊன்றி நிற்பதற்காக இந்துமதத்தையும் அவர்களைப் போல ஒரு மதமாக குறுக்கி விட்டார்கள். சிங்கள தேசியம் போன்ற படு குறுக்கலான புத்தி . இவையில், கத்தோலிக்கர்களை நாம் பொதுபடையாக நல்லவர்கள் எனச் சொல்லலாம். இலங்கையில் இனக்கலவரத்தை நிகழ்த்தி வருவதால் புத்தசமயிகளை அப்படி பொதுப்படையாக கூற முடியாதிருக்கிறது.
மதத்தையும் அரச மதமாக்கி அவமரியாதைப் படுத்தியும் வைத்திருக்கிறார்கள். அது இந்த மதத்திற்கு கை,கால் உடைந்த ஒரு ஊனப் பிறவி போன்ற நிலையைச் செப்புகிறது. புத்தரின் தத்துவம் நல்லாய் இருக்கலாம்.அவை சைவ சமயிகளின் தத்துவங்கள் தாம்.அவர் ஓரிரண்டை எடுத்து ஆய்வு செய்திருக்கிறார்,அவ்வளவு தான்.இவர்களுக்கு இந்திய வெறுப்பு..தொட்டு எல்லாக் கெட்ட குணங்களும் கிடக்கின்றன.புத்தர் “நான் ஒரு இந்தியன்”என்று கூறினால் அவரையும் கூட தூக்கி எறிந்து விடுவார்கள்.அதாவது அத்திவாரம் இல்லாத மதவாதிகள்.புத்தர் ,மனித அமைதிக்கும்,சமாதானத்திற்குமாக தத்துவங்களை பட்டை தீட்டியே வாழ்வைக் கரைத்தவர்.இந்திய தமிழக அரசியலில் நடிகர்களின் குறுக்கீடுகள் இருப்பது போல புத்த சமயத்திலும் இலங்கையரின் குறுகீடுகள் இருக்கின்றன. நல்லதுகளை எதிர்பார்த்தோம் என்றால் குறுக்கீடுகள் ஒதுங்கி இருக்கிறது தான் நல்லது.
திரைந்து போன பால் புளிப்பது போல இன்று மதங்களில் புளிப்பு கூடி விட்டிருக்கின்றது.ஒரு வித வாசனையும் வீசத் தொடங்கி விட்டிருகின்றன.எங்குமே இரத்த வாடையை எழுப்புற பைராகிகளாகவே மாறி விட்டிருக்கிறார்கள்.இலங்கையில் சிங்கள அரசு ஒன்று எழுந்தனால் மக்கள் எதிரிகளாக்கப்பட்டு விட்டார்கள். இனக்கலவரம்,பேரவலம் ….இன்னும் என்னென்ன கர்ம கண்ராவிகளை எல்லாம் ஒப்பேறக் காத்திருக்கின்றதோ?
இவர்கள் நல்ல நிலையில் சுதந்திரமான போக்கில் சாதனைகளைப் படைக்க ஆசைப்படுவதோடு , வாழ்நாள் முழுதும் நல்ல நண்பர்களாக இருக்கவும் ஆசைப்படுகிறார்கள்.அட்டமத்துச் சனி வட்டத்தில் இலங்கை சதா அகப்பட்டிக் கிடக்கிறதால் வண்ணாத்திப்பூச்சிகளின் சுதந்திரமும் கூடப் பறிக்கப்பட்டு இருள் சூழ்ந்ததாகி போய் விட்டிருக்கிறது.அதையே பேணியே வருகிறார்கள் என்பது தான் வருத்தமளிக்கின்றன.
ஈழத்தமிழர்கள் அகதிகளாக அஞ்ஞானவாசத்திற்குள் தள்ளப்படுகிறார்கள். இப்படி எத்தனை நாள் தான் காத்திருப்பில் (திரும்பலுக்கு)கிடக்கப் போறார்களோ?சென்ற நாட்டில் முதலாளித்துவ ஈர்ப்பும் நிகழ்கின்றது.அகதிகளின் ஒத்துழைப்புடன் தான் ஈழமும் மலர இருக்கின்றது .அந்தக் காலத்தில் தான் சினிமா தியேற்றர்களில் “பாலைவனச்சோலை”என்ற திரைப்படமும் ஓடி விட்டிருந்தது.அந்தப்படம் ஆண் தரப்பை காதலை விட நட்பை இன்னொரு கோணத்தில் புரிய வைத்து ஒரு புரட்டு புரட்டி போட்டு விட்டிருந்தது.பரந்து பட்ட மாணவர்களை வெகுஜனரீதியாகவும் விழிப்படைய வைத்திருந்தது.இயக்குனர், அதில் அசத்தலாக சுகாசினி மூலமாக இதுவரையில் பார்த்து வந்த மலினப் பார்வையை மாற்றி ,பெண்களையும் ஒரு மரியாதையான பார்வையை பார்க்க வைத்து விட்டிருந்தார்.அதன் வெளிப்பாடாகவே கந்தா சாரதாவை கேள்விகளால் வறுத்தெடுத்தான்.விடுதலைப் போராட்டத்திலும் கூட மகளிர் அமைப்புக்கான அத்திவாரம் போட்டதும் அப்படம் தான்.ஒரு சினிமாப்படம் ,ஒரு நல்லப்படம் ஒரு புரட்டு போட்டு விடும் என்ற உண்மை தெரிகிறது. இதேமாதிரி ஒரு ஊடகமும் சரியாக அமையுமானால் சிங்கள இனபூதத்தை சூரன் வீழ்த்தியது போல ஒரேயடியாய் சாய்த்தும் விடலாம் என்ற நம்பிக்கைக் கீற்றும் வெளிப்படுகிறது.
பல்கலைக்கழகங்களில், கலைநிகழ்வுகள் எழுச்சியாக வரத் தொடங்கின.தெருக்கூத்து,கவிதைப்பொறிகள்….புது வடி வடிவங்களில்.பழைய நாடக, நாட்டியங்கள் இந்திய விடுதலையை ஊக்குவித்தன .இன்றைக்கு அவை உதவவில்லை. பெண்களை ஒரு அணியாக பார்க்கும் பார்வையில் பழைய பலவீனப்பார்வை இடையூறு செய்யத் தான் செய்தன.இருந்தாலும் அதை மீறி வெளிப்பட்ட ஒரு ஆற்றல் முந்திய பெண்களிடம் இருக்கவில்லை.
எதிரிகளான சிங்கள அரசியல்வாதிகளும்,படையினரும் பெண்லோலர்களாகவும் காம இச்சைகளுடன் கிடந்தார்கள்.இயக்கங்களில் சேர்ந்த தோழர்கள் “கனவுகள் வருவதில்லை”என்று சொன்னார்கள்.பெண் மனைவியில்லை,சகோதரம்,தாய்யில்லை அதற்கும் மேலேயும் இருப்பவளாகத் தெரிந்தாள்.அந்த நிலையை கட்டிக் கொள்ளுறதில் சிரமப்பட்டார்கள் தான்.ஏனேனில் இதுவரையிலிருந்த பார்வைகள் சறுக்கலானவை.ஆனால்,இது கட்டிக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று என்பதை இனம் கண்டு விட்டிருந்தனர்.இயக்கங்களில், எதிரிகளுக்கு இந்த மகளிரே பாலப்பாடம் உட்பட பல பாடங்களைப் படிப்பிப்பார்கள் என்றளவில் மகளிர் அமைப்பு கட்டல்கள் தொடங்கி விட்டிருந்தன.
மூர்த்தி இந்த வகுப்பிற்கு வருவதற்கு முதல் “தர்ம ஒளி”என்ற கையெழுத்துப் பத்திரிகை ஒன்றை சுயமாக எழுதி ஏதோ ஒரு விதத்தில் ஒப்பேற்றி வந்திருந்தான்.அவன் அதை மொடலாக வகுப்பில் காண்பிக்க ஐவர், வகுப்பிலும் ஒரு கையெழுத்துப் பத்திரிக்கை தயாரிப்பது என முடிவெடுத்தார்கள்.இந்த ஐவரைவிட வகுப்பில் அச்சில் எழுதுவது போன்று எழுதுற வல்லமையுடன் நந்தன் இருந்தான்.தெளிவாக எழுதுகிறவர்களிற்கு மற்றவர்களுக்கு தெரியாததெல்லாம் கண்ணில் படும் என்பார்கள்.
இந்திரன் வகுப்பிற்கு வரமுதலே படங்களை அசத்தலாக வரையும் திறமையுடையவன்.மைக்கிலே பேசும் திறமை என வேறு கிடந்தது.பாடசாலையில் உயர்வகுப்பில் மாணவ அமைப்பிற்கு தலைவனாக இருந்தவன்.வகுப்பிலே எல்லாரையுமே எழுதித் தரும்படிக் கேட்டான். மைக் இல்லாட்டியும் இன்பம் குறிப்புக் கொப்பியை புனல் போல சுருட்டிக் கொடுக்க, சிரித்துக் கொண்டு வாங்கி பெரும் அறிவித்தலைச் செய்தான்.”தயாரிக்கப் போகிற பத்திரிகைக்கு ‘பாலைவனம்’என்ற பெயரைத் தெரிந்திருக்கிறோம்” என்பதையும் அறிவித்தான்.பெரும்பாலான பெண்களிடமிருந்து எந்தவித ஆக்கமும் வரவில்லை.சாரதாவும், ஜேர்வியுமே கட்டுரைகளை எழுதித் தந்தார்கள்.ஐவரும் ,மற்றும் வகுப்பில் சில மாணவர்களும் கவிதை,கட்டுரை எனத் தர ,மட்சூ நகைச்சுவைத் துணுக்குகளை சேகரித்து தொகுத்துக் கொடுக்க ,இந்திரன் கேலிச்சித்திரங்களை வரைய ,நந்தனின் அழகிய எழுத்தில் வகுப்பே சொக்கிப் போனது.இந்திரன் முகப்பு மட்டையில் கலரில் வரந்த ஓவியமும் ,லே அவுட்டும் முதல் தரமாகவே கிடந்தன.எல்லார்ர கட்டுரைகளையும் சலிக்காது பொறுமையுடன் எழுதிய நந்தனை பாராட்டியே ஆக வேண்டும்.ஒவ்வொருவரின் எழுத்திலும் பேச்சிலும் கிடக்கிற மனரிசங்களையும் குறிப்பிட்டு ஒரு நல்ல விளக்க கட்டுரையும் அவன் எழுதிச் சேர்த்தான்.
அதுவரையில் மூர்த்திக்கு தான் எடுத்திற்கும் ‘ஐசி’போட்டுக் கதைப்பது தெரிந்திருக்கவில்லை.அவன் எழுத்திலும் இடம் பெற்று வருகிறது.மட்சூ,”என்ன,என்ன ..”என்ற சொல்லை பேச்சில் அடிக்கடி பாவித்திருக்கிறான்.”பிரதர்,மனிதர்..” என’ர்’ போட்டு இந்திரன் கதைக்கிறவன்.அது அவனுடைய பெரியண்ணையிடமிருந்து சின்னண்ணைக்கு தொற்றி,அவனுக்கும் தொற்றி இருக்கிறது. நந்தன் குறிப்பிடும் வரையிலெவருக்குமே இப்படித் தான் பேசி வருகிறோம் என்பது சரிவர தெரியாமலே இருந்திருக்கிறது.அழகாக எழுதுகிறவர்களிற்கு “எக்ஸ் ரே” பார்வையும் கிடக்கிறது. இன்பத்தின் ‘ மாணவர் அணியும் விடுதலைப் போராட்டத்தில் பங்கு பற்ற வேண்டும்’ என்ற கட்டுரையும் நல்லாய் இருந்தது.
தொழினுட்பக்கல்லூரியில் இவர்கள் வகுப்பு மட்டுமே இப்படி கையெழுத்துப் புத்தகத்தைத் தயாரித்திருக்கிறது. அதை மேலோட்டமாக கண்டீனில் நிற்கிற போது வாங்கி வாசித்த மற்றய வகுப்பைச் சேர்ந்தவர்கள் “அழகாக வந்திருக்கிறது”எனப் பாராட்டி “எங்களுக்கும் வாசிக்கத் தருவீர்களா?”எனக் கேட்டார்கள்.”வகுப்பிலே முதலில் வாசிக்கக் கொடுத்து எடுத்த பிறகு தாரோம்”என்று பதில் அளித்தார்கள்.அதற்குப் பிறகு தொழினுட்ப மாணவர் அமைப்புக் கூட்டத்திற்கு அவர்கள் வகுப்பு பிரதிநிதியாக இந்திரனை வரும்படி அழைக்கிறது ஏற்பட்டது. பள்ளி விடுமுறை நாள்களைப் போல தொழினுட்பக்கல்லூரிக்கும் விடுதலை விட இருந்தது.மாணவர்கள் “விடுதலை”என பெரிதாக குத்தாட்டம் போடுவார்கள்.மட்சூவிடம் எழுந்த சிந்தனை நால்வருக்கும் பிடித்துப் போக விடுதலையை கழிப்பதற்கு திட்டமிட்டார்கள்.அதாவது வகுப்பில் படிக்கிற அனைத்து மாணவர்கள் வீடுகளிற்கும் ஒருவேளை விசிட் பண்ணுறது.பாடசாலை நாள்களில் நகரப்பள்ளியில் படித்திருந்தவர்களிற்கு பக்கத்து இருக்கையில் இருந்தவனின் கிராமம் என்ன என்பதே தெரிந்திருக்கவில்லை. வீட்டிலே அவன் எத்தனையாவது ஆள் என்ற விபரம் கூடத் தெரியாது.பேரூந்துப் பயணத்திலே வார போது அந்த கால நேரத்தில் சந்திக்கிறார்கள்;கதைக்கிறார்கள்.வேளை முடிய கழன்று விடுகிறார்கள். என்ன நிலையில் கிடக்கிறார்கள் என்றது விடுப்பாக வந்தாலும் பொதுப்படையாகக் கூடத் தெரியாமல் வீடு,பள்ளி, உறவுகளின் பொறுப்பற்றச் சண்டைகளால் ஏற்பட்ட விலகல் குறைபாடுகள், விளையாட்டுப் போட்டிகளும் அந்தப்பள்ளியில் மட்டும் நடந்ததாக குறுக்கித் தெரிந்த…கிணற்றுத் தவளைகளாகவே கடந்திருக்கிறோம் என்றது பலமாக உறைத்தது.அது மட்சூவை மட்டுமில்லை மற்றவர்களிற்கும் தொற்றியே கிடந்தது.இந்திரன் அறிவிப்புச் செய்வதில் சமர்த்தன் என்பதால் வகுப்பில் இன்பமின் புனலில் பேச அதிசயமாக பெண் தரப்பில் இருந்து பலர் தமது விலாசங்களை எழுதி,எழுதிக் கொடுத்தார்கள்.”நீங்கள் வார நாளையும் நேர சூசிகைப் போல தயாரித்து ஓரளவிற்கு சொல்ல வேண்டும்.குறைந்த பட்சம் வடை,அல்லது…. கடையில் வாங்கியாவது வைத்திருக்க வேண்டாமா”என சிவகவி சிரித்தாள். “படிக்கிறதை விட மிச்ச எல்லாம் எங்களுக்கு நல்லாவே ஓடுகிறதில்லை ” என இடையில் மட்சூவும் பகிடி விட்டான்
கையெழுத்துப் பத்திரிகையோடு நட்பில் ஒருவித விரிவு ஏற்பட்டு விட்டதை ஆண்த் தரப்பும் உணரவேச் செய்தது .சாவேச்சேரி,புன்னாலைக்கட்டுவான்,ஊரேழு,உறுபிராய்,இருபாலை,கோப்பாய்…என ‘ஒவ்வொரு இடத்திற்கும் போற போது கிட்டத்தில் இருக்கிறவர்கள் வீட்டையும் சேர்த்து விசிட் பண்ணலாம்’என அவர்களைக் கொண்டே உங்க கிராமம் எந்த ஊரில் எங்கே இருக்கிறது என்றதையும் கேட்டு குறித்துக் கொள்ள நந்தன்,அட்டவணையையும் அழகாகத் தயாரித்தான்.அதை போட்டோ கொப்பி எடுத்து ஒவ்வொருவரிடமும் கொடுக்கப்பட்டது.கிட்டடிக்காரர்கள் கூட்டிப் போறதை செய்வதாகக் கூறினார்கள்.போறவர் இன்ன நாளுக்கு தொழினுட்பக்கல்லூரியில்,பெரிய மேருந்து நிலையத்தில்…,அங்க,இங்க என வந்து சேர வேண்டும் .ஒரு நேரம் வரையில் காத்திருப்போம்.பிறகு வந்தவர்களோடு கிளம்பி விடுவோம் எனத் தீர்மானிக்கப்பட்டது.சிலவேளை சைக்கிளிலில் போறது.சிலவேளை பேரூந்தில் பயணம்.இப்படி வெட்டிக் கொட்டித் திருத்தம் எல்லாம் நடைபெற்றன.
.ஒவ்வொரு முறைச் செல்கிற போதும் எட்டு ,ஒன்பது,பத்து பேராவது சேர்ந்தார்கள்.பெண்களால் இவர்களுடன் வர முடியவில்லை . காரைநகர்,பண்டத்தரிப்பு,வடமராட்சி,தென்மராட்சி..என பல இடங்களிற்கு பேரூந்திலே பயணித்தார்கள்.சில இடங்களிற்கு சைக்கிளில் பயணம்.அப்படி அவர்கள் சென்ற போதே நிறைய புதிய,புதிய செய்திகளை அறிந்தார்கள்.பல நெகிழும்படியாக இருந்தன..அவர்களுள்ளிருந்து கூட ஒவ்வொரு புத்தர்கள் வெளிய வந்து கொண்டிருந்தார்கள்.புவியை அந்த வகுப்பிற்கு பேரூந்திலே அனுப்பி விட்டுத் திரும்பிய அவனுடைய அப்பா அன்று இரண்டு மணி போல கத்தியால் குத்தப்பட்டு இறந்திருக்கிறார். இவன் வீட்டிற்கு வகுப்பு முடிந்து போன பிறகே தெரிந்திருக்கிறது.அந்த செய்தியை வகுப்பிலே அவன் தெரிவித்திருக்கவில்லை.முகிலன் இந்த வகுப்பிற்குச் சேர்ந்த பிறகே, ஒரு தடவை சிங்களப்படை நடத்திய சூட்டுச் சம்பவத்தில் வீதியில் கடைக்குப் போய்க் கொண்டிருந்த அவனுடைய தம்பி சூடு பட்டு இறந்திருக்கிறான்.அவனும் வகுப்பில் அதைக் கூறவில்லை.வீட்டிலே அவர்கள் எத்தனையாவது ஆள்,தம்பி,அண்ணர்,அக்கா..இருப்பது என்ற விபரத்தை தெரிகிற போது தாமும் அந்த குடும்பத்தில் ஒரு ஆள் என்ற உணர்வையும் அடைந்தார்கள்.ஒரு சக மாணவனை தெரியாமல் இப்படி இருந்தது. எவ்வளவு அவமானகரமானது என்ற மட்சூவின் பேச்சு எவ்வளவு அரத்தபுஸ்டியானது என்பது புரிகிறது.
ஜெனியின் அப்பாவும் முரட்டு மீசையை வைத்திருந்த ஒரு பொலிஸ்காரர்.தோற்றத்தால் வெகுவாகவே பயமுறுத்தி விட்டார்.ஆனால் ,அன்பாக நல்லபடியாக வரவேற்று உபசரித்தார்;பழகினார்.
மகேஸுக்கு கோர்ஸ் முடிய கல்யாணம் நடக்கவிருந்தது.மச்சாள் முறைப் பெண் தான்.வீட்டிலேயும் ,அயலிலேயும் “மாப்பிள்ளை, மாப்பிள்ளை”என கேலியாக அவனை அழைக்கிறார்கள்.இவர்களும் அவனை”மாப்பிள்ளை..”என வாய்க்கு வாய் அழைத்து பேசினார்கள். இன்பத்தின் பெற்றோர் கலப்புத் திருமணம் புரிந்தவர்கள்.தமக்கேற்பட்ட எதிர்ப்புகளைப் பற்றி வெளிப்படையாக முஸ்பாத்தியாகக் கதைத்தார்கள்.பெண்பிள்ளை இருந்தால்…இப்படிக் கதைக்க முடியாது என்பதையும் ஒப்புக் கொண்டார்கள். தாய்க்கு பெண்பிள்ளை இல்லாத ஏக்கம் இருக்கிறது என்பது புரிந்தது. யார் ?, பிறந்தாலும் கூடவே ஒரு தெய்வமும் பொடிகார்ட் போலவே கூடவே வருகிறது .ஆண்,பெண் ..இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்வதற்காகவே அர்த்தநாரீஸ்வரன் என்ற கடவுளின் கதைக்கள் எல்லாம் எழுதி வைத்து இருக்கிறார்கள். நாகரீகத்தை புரிந்து கொண்ட மனிதர்கள் உலகமெல்லாம் இருந்திருக்கிறார்கள் தான்.நாகரீகமற்ற அரசுகளால் அவர்களின் விளக்கங்கள் பொது மக்களுக்கு சரிவர போய்ச் சேராமல் கிடக்கின்றன .உலகில் எழுபது வீதமான நாடுகள் அங்கிருக்கிற அரசுகளால் தான் முன்னேறாமல் முட்டாளாகக் கிடக்கின்றன.ஆண் வேண்டும்,பெண் வேண்டும் என விளைவதும் கூட ஒரு வித மாயை தான்.எவர் பிறந்தாலும் குடும்பத்திற்கு மகிழ்ச்சியை கொண்டு வரவேச் செய்கின்றன.ஆண் பிறந்தால்,பெண் வேண்டும் என்றும்,பெண் பிறந்தால் ஆண் வேண்டும் என்றும் பலவீனப்பட்ட மனசாவும் கிடக்கின்றது “மாறவே மாட்டோம் என பிடிவாதம் பிடிப்பவர்களை, மாற்றுவதற்கு, நெளிவுகளை நேராக்குவதற்கு இன்னமும் புரட்சிகள் வேண்டி தானிருக்கின்றன “என்றார்கள்.அவர்களுள்ளும் சமூகத்தின் ,சமுதாயத்தின் மீதுள்ள கோபம் அப்படியே தான் இருக்கின்றது.அதையும் பகிடியாகச் சொன்னார்கள்.அது சபாஸ் தான் .
எல்லா வீடுகளிலும் பெண்கள் தம் கையாலே சமைத்திருந்தது ஆச்சரியமாய் இருந்தது. சாப்பிட்டார்கள்.ருசியாயும் இருந்தன .வீட்டிலுள்ள அனைவருமே உபசரித்து அன்புடன் இவர்களையும் விசாரித்தார்கள்.சில வீடுகளில் டீ பிஸ்கட்,வடை… போன்றவற்றையே சாப்பாட்டைத் தவிர்த்து இவர்களால் சாப்பிட முடிந்தது.கிட்ட ,கிட்ட வீடுகள் இருந்து விட்டால் என்ன செய்வது?.இன்னொருநாள் என வர முடியாது.வருகிற போது அவர்களையும் புறக்கணிக்க முடியாது. கூடவே, ” ஊரிலேயும் சிறுநடை நடக்கவும் தவறக் கூடாது. சிறுநடை அவசியம் ” என இந்திரன் வலியுறுத்தியே இருந்தான்.சும்மா கடைத்தெரு மட்டும்,அல்லது குளம் ,குட்டை வயல்புறம்..என உலாத்தல்.சிலர் பிரதானமாக விவசாயமும் செய்றவர்களாகவும் இருந்தார்கள்.
அந்த நாள்களில் அந்தரப்படவேயில்லை .சில தடவை வீடு திரும்புற போது இருளவும் தொடங்கி விட்டிருந்தது தான் .பள்ளிக்காலங்களில் இந்த அந்தரங்களால் தான் அறியாப்பிறவிகளாக தொலைத்தவர்களாக இருந்தோம் என்ற காயம் இந்தச் சந்தர்ப்பத்தை சிதறடிக்க வைக்கவில்லை.
அன்று எல்லா வீடுகளிலுமே பெற்றோர் வீட்டிலே நின்றார்கள்.சிலர் விடுப்பு எழுதி கொடுத்து விட்டு கூட நின்றிருந்தார்கள்.
கிட்டத் தட்ட அப்படி வகுப்பில் அரைவாசி வீடுகளிற்காவது சென்று வந்திருந்தார்கள். அந்த விடுதலை நாள்கள் சந்திப்புக்கு போதியதாகவே இருந்தன.
சென்று வந்ததால் ஒவ்வொருவருள்ளுமிருந்து ஒரு கண் திறந்து விட , சிலருக்கு இயகங்களிற்கு போய்ச் சேர்வதற்கும் கூட தூண்டுகோலாகவும் இருந்திருக்கிறது.