புண்ணியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 22, 2022
பார்வையிட்டோர்: 2,402 
 
 

அவ்வளவு பெரிய கடைக்குப் போகும் எண்ணமே ராகவாச்சார்யுலுக்கு இல்லை. அவரிடம் இருந்தது மூவாயிரம் ரூபாய்தான். மூவாயிரம் ரூபாய்க்குள் ஒர் உணவருந்தும் மேஜையை வாங்கமுடியுமா என்று அவருக்குத் தெரியாது; முடியாது என்றுதான் தோன்றிற்று. இருந்தாலும் ஏதாவது ஒரு சிறிய மரச்சாமான் கடைக்குப் போய்த்தான் பார்க்காலமே என்று கிளம்பிவிட்டார். ஆனால் பெசன்ட் சாலை நிறுத்தத்தில் பஸ் நின்றபோது ‘ஃபர்னிச்சர் எம்பயர்’ என்ற பெயர்ப்பலகையைப் பார்த்தார். என்னமோ தோன்றியது, இறங்கிவிட்டார். சாலையைக்கடந்து அந்தக் கடையின் முன்னால் நின்று பார்த்தபோது பிரம்மிப்பாக இருந்தது. கண்ணாடிக் கதவுகளுடன் கூடிய அந்த மூன்று மாடிக்கட்டிடம் அலங்காரத்துடன் மைசூர் அரண்மனை மாதிரி விளக்கு வெளிச்சத்தில் ஜொலித்தது. உள்ளே காட்சியாக வைக்கப்பட்டிருந்த கட்டில்களும், சோஃபா வரிசைகளும், மேஜை நாற்காலிகளும் ராஜரீகமாக இருந்தன. அவர் நடைபாதையில் நின்று பார்த்துக்கொண்டிருக்கும்போது கடையின் கண்ணாடிக்கதவு திறந்து குளிர்ச்சியான காற்று அவர்மேல் வீசியது. கதவு தனக்காகத்தான் திறக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர் புரிந்துகொள்ளும் முன்பே, ‘ரண்டி, ஸார்’ என்றான் கதவைத் திறந்து வைத்துக்கொண்டிருந்த சீருடையில் இருந்த காவலன். உள்ளே நுழைந்துவிட்டார்.

கரோனா தொற்றுநோயின் தாக்கம் கொஞ்சம் குறைந்திருந்த சமயம் அது. ஆனாலும் முகக்கவசம், சமூக இடைவெளி என்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் காவல்துறையினரின் கெடுபிடி இருக்கும் இடங்களில் இன்னும் ஓரளவுக்குப் பின்பற்றப்பட்டன. ராகவாச்சார்யுலு உள்ளே நுழைந்தவுடன் சீருடையிலுருந்த ஒரு பெண் அவர் கைகளில் கிருமிநீக்கியைத் தெளித்து சுத்தம் செய்தாள். கடையில் ஐந்தாறு இளம் விற்பனைப் பணியாளர்கள் தயாரிப்புகளின் தரத்தைப் பற்றி உற்சாகத்துடன் வாடிக்கையாளர்களுக்கு இங்கிலீஷிலும் தெலுங்கிலும் எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். தவறான இடத்துக்கு வந்துவிட்டோம் என்று ராகவாச்சார்யுலுக்குப் புரிந்தது. சந்தடியில்லாமல் வெளியில் சென்று விடலாம் என்று அவர் திரும்பும்போது, ஒரு பெண் விற்பனைப் பணியாளர் அவர் எதிரில் வந்து நின்றாள். ‘செப்பண்டி ஸார், ஏங்காவலி?’ என்று இனிமையாகக் கேட்டாள்.

‘டை…டைனிங் டேபில்.’

‘டைனிங் டேபில்ஸ்ல நல்ல வெரைட்டி இருக்கு, ஸார்; தேர்ந்தெடுப்பதற்கு நல்ல வாய்ப்பு. காமிக்கிறேன், வாங்க,’ என்று அவர் தடுமாற்றத்தைக் கண்டுகொள்ளாதமாதிரி இடதுபுறம் அழைத்துச் சென்றாள்.

‘என்னோட பட்ஜெட்டு…’

‘எல்லாத்தையும் பாருங்க ஸார். பாத்துட்டு உங்க பட்ஜெட்டுக்கு ஏத்தபடி முடிவு பண்ணுங்க. மரத்தாலான மேஜை வேணும்னா, தேக்கு, வால்நட், ரோஸ்உட், மல்பெரி — இதெல்லாம் இருக்கு. ரோஸ்வுட்ல தசரா சித்திர வேலைப்பாடுகளோட ஒரு செட்டு இன்னிக்குக் காலையிலதான் வந்தது, ஸார். அதை நீங்க கட்டாயம் பாக்கணும். பேங்க்வெட் டேபில் மாதிரி இருக்கு. அது நாலுநாள்கூட கடையில் இருப்பது கஷ்டம்….’ அந்தப்பெண் உற்சாகமாகப் பேசிக்கொண்டே போனாள்.

அவருக்கு வேடிக்கையாக இருந்தது. ‘என்ன விலைம்மா?’ என்று சிரிப்பை அடக்கிக்கொண்டு கேட்டார்.

‘மூணு லக்ஷம்தான், ஸார்.’

மூன்று லக்ஷம்! அவருடைய ஒரு வருட சம்பளம்! ராகவாச்சார்யுலு ஒருமுறை மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டார். இந்த அசட்டுப்பெண்ணை விற்பனைப் பணியாளராக எப்படி நியமித்தார்கள்? என் தரித்திர கோலத்துக்கும் மூன்று லக்ஷ ரூபாய் பெறுமானமுள்ள, தசரா சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய ரோஸ்வுட் பெருவிருந்து மேஜை செட்டுக்கும் எந்த சம்பந்தமும் இருக்க சாத்தியம் இல்லை என்பது ஒரு குழந்தைக்குக்கூடத் தெரியக்கூடிய விஷயம் அல்லவா? என்ன ஒரு முட்டாள்தனமான மதிப்பீடு!

‘ரொம்ப சந்தோஷம்மா. ஆனா என் பட்ஜெட் மூவாயிரம்தான். மூவாயிரத்துக்கு டைனிங் டேபில் செட் ஏதாவது இருக்குதா?’

அந்தப்பெண் இப்போது ராகவாச்சார்யுலுவை ஏற இறங்கப் பார்த்தாள். ‘பட்ஜெட் என்னன்னு சொன்னீங்க, ஸார்? முப்பதாயிரமா?’

‘மூவாயிரம், அம்மா.’ ராகவாச்சார்யுலுவின் குரல் அவருக்கே பரிதாபமாக ஒலித்தது.

‘த்ரீ தௌஸண்ட் ரூபீஸ்!’ அவளுடைய புருவம் உயர்ந்தது. ‘மூவாயிரம் ரூபாய்க்கு இங்க எதுவுமே இல்ல. ஷீஷம் மரத்துல ஒரு செட் இருக்கு. அதுதான் இருப்பதிலேயே மலிவானது. அதோட விலையே இருபத்தஞ்சாயிரம்.’ “ஸார்” என்ற மரியாதை வெளிப்பாட்டை ஜாக்கிரதையாகத் தவிர்த்துப் பேசினாள்.

‘மன்னிக்கணும்மா. உங்களுக்குத் தொந்தரவு கொடுத்துட்டேன்.’ ராகவாச்சார்யுலு திரும்பி வாசலை நோக்கி நடந்தார்.

‘அண்ணா, எங்க இப்படி?’ பின்னாலிருந்து குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தார். யாரோ வைதீக காரியங்கள் செய்யும் வாத்தியார். தெரிந்த முகம். யாராக இருக்கும்?

கூப்பிட்டவர் முகக்கவசத்தை நீக்கினார். ‘என்னண்ணா, அதுக்குள்ளயா மறந்துட்டேள்? நான்தான் சாம்பசிவம்.’

‘அடேடே, சாம்பசிவராவா? ஒரு வருஷத்தில அடையாளமே தெரியாம மாறிப்போயிட்டயே, அப்பா! பஞ்சக்கச்சம் வேஷ்டி, குடுமி, விபூதிப்பட்டை, குங்குமம் — இது என்ன வேதபண்டிதர் கோலம்?’

அவரும் சாம்பசிவராவும் தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் பத்து வருடங்களுக்குமேல் ஒன்றாக வேலை செய்தவர்கள். அவர் தெலுங்கு வாத்தியார், சாம்பு சம்ஸ்க்ருத ஆசிரியர். கரோனா ஆரம்பித்து நான்கு மாதங்களுக்குள் சாம்புவுக்கு வேலை போய்விட்டது. ஆன்லைன் போதனை வந்தது; இவ்வளவு ஆசிரியர்கள் அவசியமில்லை என்று ஆட்குறைப்பு செய்தார்கள். ராகவாச்சார்யுலு பதவியில் மூத்தவர்; இருபத்தைந்து வருடங்களாக அதே பள்ளியில் இருப்பவர். அதனால் தப்பித்தார். சாம்பசிவராவ் எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தார்; கல்லில் நார் உரிப்பவர்களிடம் அது எடுபடவில்லை.

‘இது என்ன வேத பண்டிதர் கோலம், சாம்பு?’

‘உக்காண்டு பேசலாம், அண்ணா.’ வாத்ஸல்யத்துடன் அவர் கையைப் பிடித்துக்கொண்டு லௌஞ்சுக்கு அழைத்துச்சென்றார். இருவரும் ஒரு சோஃபாவில் உட்கார்ந்துகொண்டனர்.

‘நன்னா இருக்கேளா, அண்ணா?’

‘ஒருகுறையும் இல்லை, சாம்பு. உன்னை இப்படிப் பாக்கறத்துக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.’

‘நானும் சந்தோஷமாத்தான் இருக்கேன், அண்ணா. ஆனா, பள்ளிக்கூட வேலை போனபிறகு ரெண்டு மாசம் ரொம்ப கஷ்டப்பட்டேன். எந்த ஸ்கூலிலும் பணிநியமனம் என்பதே கிடையாது. இருக்கும் வாத்தியார்களுக்கே அரை சம்பளம்; சில ஸ்கூல்களில் அந்த அரை சம்பளம்கூட ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை. அப்படி இருக்கச்சே, புதுசா வாத்தியார்களை ஏன் நியமிக்கப்போறா? அஞ்சுபேரு — அம்மா, ஆம்படையா, ரெண்டு குழந்தைகள், நான் — ரெண்டு வேளையாவது சாப்பிடணும் இல்லையா?’ குரல் உடைந்தது. கொஞ்சம் நிதானித்துவிட்டு தொடர்ந்தார். ‘ஒரு நாள் சாயங்காலம். மனசு உடைஞ்சுபோய் நதிக்கரையிலே உக்காந்திண்டிருந்தேன். கரோனா கட்டுப்பாடு காரணமா படித்துறை வெறிச்சோடிக் கிடந்தது. எதிரே கிருஷ்ணவேணி; யாத்ரீகர்களோட தொல்லை இல்லாம அமைதியா, பரிசுத்தமா ஓடிண்டிருந்தா. ஆறேகால், ஆறரை இருக்கும். மேலே கனக துர்கா அம்மவாரு கோவில்லேந்து பஞ்ச ஹாரத்தி மணி அடிக்கறது. டங்குடங்குன்னு என் மண்டையில அடிக்கறமாதிரி இருந்தது. அம்மவாரு கேக்கறா: “ஏண்டா, சாம்பு, முட்டாளாடா நீ? எம். ஏ. வரைக்கும் சம்ஸ்க்ருதம் படிச்சிருக்கே; கொஞ்சகாலம் சீதா நகரத்திலே வேத அத்யயனம் வேற பண்ணியிருக்கே. அது போடாதாடா உனக்கும் உன் குடும்பத்துக்கும் சாப்பாடு? இங்க எதுக்கு வெட்டியா உக்காந்திண்டிருக்கே?” ஏதோ பொட்டில் அறைஞ்சு சொன்னமாதிரி இருந்தது, அண்ணா. நிமிர்ந்து பாக்கிறேன். இந்த்ரகீலாத்ரி உச்சியில அம்மாவாரு கோவில் விமானம் பங்காரமா ஜொலிக்கறது. தவடையிலே போட்டுண்டேன். கிருஷ்ணாவில ஒரு முழுக்கு போட்டுட்டு கிளம்பினேன். பதினைஞ்சு நாள் அசுரப் பயிற்சி பண்ணினேன். பிறகு வைதீக காரியங்களிலே இறங்கிட்டேன்.’

‘ஒரு பௌராணிகன் ப்ரவசனம் பண்ற மாதிரி அற்புதமாச் சொன்னே, சாம்பு. தாயார் உன் நாக்கிலேயும் இருக்காப்பா. நீ வகுப்பறையில் இருந்து குழந்தைகளுக்குக் கற்பித்து எழுச்சி ஊட்டவேண்டியவன். என்ன பண்றது, அவாளுக்கு அதிர்ஷ்டமில்லை! சரி, இப்ப நன்னா இருக்கியோல்லியோ?’

‘ஒரு குறைவும் இல்லை, அண்ணா. ஒன் டௌன் பாத்தசிவன் கோவில் தெரியுமோல்லியோ? அங்க பூஜாரியா இருக்கேன். ஒருவேளை நான், இன்னொருவேளை வேறொருத்தர். தவிர, கல்யாணம், ஆப்தீகம் எல்லாம் பண்ணி வைக்கிறேன். தினமும் சாயங்காலம் இந்த மாதிரி நாலு பெரிய கடைகளில் பூஜை… ஸ்கூல்ல வாங்கின சம்பளத்தைவிட அஞ்சுமடங்கு அதிகமா வரது, அண்ணா. அதைவிட மனசில தைர்யம் நிறைய இருக்கு — என் தாயார் கனக துர்கா கூட இருக்கான்ற தைர்யம். சரி, உங்களைப்பத்தி சொல்லுங்கோ. அதே ஸ்கூலா? ஒழுங்கா சம்பளம் கொடுக்கிறாளா?’

ராகவாச்சார்யுலு தலையசைத்தார். ‘கிட்டத்தட்ட ஒரு வருஷம் பாதி சம்பளம் கொடுத்தா. இப்ப எழுபத்தஞ்சு சதவீதம் கொடுக்கறா. ஆறு மாசம் கழிச்சு முழு சம்பளமா கொடுக்கிறேன்னு சொல்லியிருக்கா. எல்லாம் சரியாயிடும்; கரோனா பலவீனமாயிண்டிருக்குது இல்லையா?’

‘எப்படி சமாளிக்கிறேள், அண்ணா? நான்…’

‘ஒரு குறைவும் இல்லே, சாம்பு. பாரதி நகர் தெரியுமோல்லியோ? அங்க மார்வாடிகள் அதிகம். அவா ஒரு சின்ன ராமர் கோவில் கட்டியிருக்கா. அங்க அர்ச்சகம் பண்றேன். அதுக்காக திரிதண்டி சின்ன ஜீயர் ஸ்வாமிகிட்டே போய் சமாஷ்ரயணம் பண்ணிண்டேன். கார்த்தால ஆறுலேந்து எட்டு வரைக்கும் கோவில். அப்புறம் ஸ்கூல். திரும்பவும் சாயங்காலம் கோவில். மார்வாடிகள் பெரியமனசோட மாசம் பத்தாயிரம் கொடுக்கிறா. ஸ்கூல் சம்பளமும் வரது. ரெண்டுபேருக்கு யதேஷ்டம். கிட்டத்தட்ட அறுபது வயசில பெருமாளுக்குக் கைங்கர்யம் பண்றதுக்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கு பாரேன்!’

‘எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. சரி, இங்கே எதுக்கு வந்தேள், அண்ணா? ஏதாவது வாங்கணுமா?’

‘ஒரு மூவாயிரம் ரூபாய சட்டைப்பையில் போட்டுண்டு டைனிங் டேபில் வாங்க வந்தேன். இது எனக்கு ஏத்த இடம் இல்லேன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் உள்ள நுழைஞ்சேன். இப்ப தெரியறது, எதுக்கு வந்தேன்னு. இங்க வரலேன்னா உன்னைப் பாத்திருக்கமுடியுமா, சாம்பு?’

‘டைனிங் டேபிலா?’

‘ஆமாம், சாம்பு, எங்க ரெண்டுபேருக்குமே மூட்டு வலி வந்துடுத்து. தரையில உக்காந்துண்டு சாப்பிடமுடியலே.’

‘நமக்கெல்லாம் பட்ஜெட் சந்தைதான் சரியான இடம், அண்ணா. சல்லபல்லி பங்களா தாண்டி பழைய பஸ் நிலையம் எதிரில் ஒண்ணு இருக்கு. அங்க பாக்கலாம். இல்லேன்னா, ஓஎல்எக்ஸ்.’

‘ஓஎல்எக்ஸா? அப்படீன்னா?’

‘பழைய சாமான்கள் கடைன்னு வெச்சுக்கோங்களேன். ஆனா, ஆன்லைன் கடை. நன்னா கிடைக்கும்.’

இந்த உரையாடல் ஆரம்பித்த சில வினாடிகளில், முகக்கவசம் அணியாத ஒரு நடுத்தர வயது மனிதர் தன் பெரிய உடலைத் தூக்கமாட்டாமல் தூக்கிக்கொண்டு மாடியிலிருந்து இறங்கி வந்தார். மாடிப்படியிலிருந்தே இந்த இருவரையும் பார்த்துவிட்ட அவர், அமைதியாக அவர்கள் பின்னால் இருந்த ஒரு சோஃபாவில் அமர்ந்தார். உரையாடல் முடியும் சமயத்தில் பொறுமையிழந்து எழுந்திருந்தார். ‘அபய், ரமாதேவி பிலுவு,’ என்று உரத்தகுரலில் ஓர் விற்பனைப் பணியாளருக்கு உத்தரவிட்டார்.

சாம்பசிவராவ் சாவிகொடுத்த பொம்மைபோல் டக்கென்று எழுந்து நின்றார். ‘நமஸ்காரம், ஸார். பூஜை முடிஞ்சாச்சு. நீங்க ஏதோ காத்திருக்கச் சொன்னேளாம்; பாப்பா சொல்லித்து. இங்க வந்தா, என் பழைய நண்பர் ராகவாச்சார்யுலுகாரு இருந்தார். அவரோட பேசிண்டிருந்தேன்.’

ராகவாச்சார்யுலு எழுந்துநின்று கைகூப்பினார். ‘அண்ணா, இவா கடைக்குச் சொந்தக்காரா,’ என்று சாம்பசிவராவ் அறிமுகப்படுத்தி வைத்தார். ‘வங்கதாரு ராம்மோஹன்ராவ்காருன்னா எல்லாருக்கும் தெரியும். எம். ஜி. ரோட்ல ‘வங்கதாரு ஜ்வெல்லர்ஸ்’ பாத்திருப்பேளே; இவாளோட கடைதான். தவிர…’

‘சாலு, பந்துலுகாரு, சாலண்டி,’ என்று அவரை இடைமறித்தார் ராம்மோஹன்ராவ். ‘நா புராணம் எந்துகு? சத்யநாராயணஸ்வாமி புராணம் சொன்னாலும், சொல்ற உமக்குப் புண்ணியம், கேட்கிற எனக்கும் புண்ணியம். சரி, ஆச்சார்யுலுகாரு ஏஞ்சேஸ்துன்னாரு?’ கேட்டுவிட்டு ராகவாச்சார்யுலுவை அளவெடுப்பதுமாதிரி பார்த்தார்.

‘அண்ணா ஸ்கூல் வாத்தியார். தெலுங்கு, சம்ஸ்க்ருதம் ரெண்டிலும் பண்டிதர்.’

இதற்குள் ராம்மோஹன்ராவின் மகள் ரமாதேவி அங்கு வந்து சேர்ந்தாள். ‘பந்துலுகாரு, புதுசா ஒரு யூனிட் ஆரம்பிக்கறோம். டாப் ஃப்ளோர். ஒரு சின்ன பூஜை பண்ணி திறக்கலாம்னு உத்தேசம்,’ என்றார் ராம்மோஹன்.

‘அதுக்கென்ன, பண்ணிட்டாப் போச்சு.’

‘தீஸ்க்கெல்லம்மா,’ என்றார்.

‘மீருகூட ரண்டி,’ என்றார் சாம்பு.

‘ரமா செய்யட்டும், ஸ்வாமி. மொத்தக்கடைக்கும் அதுதானே சொந்தக்காரி ஆவப்போவுது? நீங்க போய் ஆரம்பியுங்கோ. பதி நிமிஷால்லே வந்து கலந்துக்கிறேன்.’

அவர்கள் சென்றதும் ராகவாச்சார்யுலு பக்கம் திரும்பினார். ‘செப்பண்டி, ஆச்சார்யுலுகாரு, என்ன வாங்க வந்தீர்?’ இப்போது கடை மேனேஜர் சாஸ்த்ரியும், ராகவாச்சார்யுலுவுக்கு உதவி செய்யவந்த பெண்ணும் முதலாளியின் பின்னால் வந்து நின்றார்கள்.

‘ஏமி லேதண்டி. சும்மா…’ மென்று விழுங்கினார் ராகவாச்சார்யுலு.

‘டைனிங் டேபில் வாங்க வந்தார், ஸார்,’ என்றாள் அந்தப்பெண்.

‘அப்படியா? தேர்ந்தெடுச்சாச்சா?’

‘இல்லை…’ என்று இழுத்தாள்.

‘இன்னும் இல்லையா? உங்க பட்ஜெட் என்ன, ஸார்?’

ராகவாச்சார்யுலு வாய் திறக்கவில்லை. ‘மூவாயிரம், ஸார்,’ என்று தணிந்த குரலில் அந்தப் பெண்ணே சொன்னாள். மேனேஜர் சாஸ்த்ரி ராகவாச்சார்யுலுவை ஆச்சர்யத்துடன் பார்த்தார்.

ராம்மோஹன்ராவ் சட்டைப்பையிலிருந்து ஒரு முகக்கவசத்தை எடுத்து அணிந்துகொண்டு ராகவாச்சார்யுலுவின் அருகில் வந்தார். ‘ஆச்சார்யுலுகாரு, எங்கிட்ட ரெண்டு வருஷமா ஒரு செட்டு டைனிங் டேபில் விக்காத இருக்குது. பொருள் நல்லதுதான். ஷீஷம் மரம்; நல்ல வேலைப்பாடு. ஏனோ விக்கல. வெல மூவாயிரம்தான். காமிக்கிறேன், பாருங்க. புடிச்சிருந்தா எடுத்துக்கங்க.’ எப்போதும் இருக்கும் கறார்த்தனம் இப்போதும் ஒலித்தது அவர் குரலில்.

மேனேஜரும், விற்பனைப் பணியாளரும் அவரை ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். அவருடைய கறார்த்தனமான குரலைக்கேட்டு அவர்கள் ஏமாந்து விடவில்லை. என்ன ஆகிவிட்டது முதலாளிக்கு இன்று என்று கேட்பது மாதிரி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். இவ்வளவு தாராளகுணம் திடீரென்று எங்கிருந்து வந்தது இவருக்கு?

‘அம்மா, காலம்பற அந்த ரோஸ்வுட் டேபிலுக்குப் பின்னாலே ஒரு ஷீஷம் செட்டை நகர்த்தினோம் இல்லையா, அதை ஆச்சார்யுலுகாருக்குக் காமி.’

‘ஸார், அது…’ அவருடைய கடுமையான பார்வையில் அவளுடைய வார்த்தைகள் உதடுகளுக்குப் பின்னாலேயே நின்றன. ஆச்சார்யுலுகாருவிடம் வேறு ஒன்றும் பேசவேண்டாம் என்றும் அந்தப் பார்வை எச்சரித்தது. ஒரு தலையசைப்புடன் அவள் ராகவாச்சார்யுலுவை மிகவும் பணிவுடன் அழைத்துச்சென்றாள்.

‘என்ன ஒய், தெகைச்சுப்போய் நிக்கிறீரு?’ என்று முகக்கவசத்தை எடுத்துக்கொண்டே மேனேஜரைப் பார்த்துக் கேட்டார் ராம்மோஹன்ராவ். பிறகு திரும்பி, லௌஞ்சைக் கடந்து, தன அறையை நோக்கி நடந்தார்.

‘அது இல்லைய்யா, அந்த டேபில் வந்து ரெண்டு வருஷமெல்லாம் ஆகல. போனவாரம்தானே வந்தது? வெல கூட… இருபத்தஞ்சாயிரம் இல்லையா?’

எனக்குத் தெரியாதா, ஒய்? ஆச்சார்யுலுகாருகிட்ட மூவாயிரம் ரூபா வாங்கிகிட்டு அந்த செட்டைக் குடும். டெலிவரி நம்ம செலவு, என்ன?’

‘அப்படியே ஆகட்டும்,’ என்று தலையசைத்தார் மேனேஜர். கால் நூற்றாண்டுகளாக அந்தக் கடையில் வேலை செய்து வருபவர் அவர். முதலாளியின் இந்த வியாபாரப்பாணி அவருக்குப் புதிதாக இருந்தது.

‘என்ன முழிக்கிறீர், சாஸ்த்ரிகாரு? புண்ணியம் மொத்தம் மார்வாடிங்களுக்கே எதுக்கய்யா போகணும்? நமக்கும் கொஞ்சம் வரட்டுமே.’

மேனேஜருக்குப் புரியவில்லை. ஆனாலும் எப்போதும்போலத் தலையாட்டினார்.

– நன்றி: https://solvanam.com, 28 November 2021

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *