புக்பேஸ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 16, 2023
பார்வையிட்டோர்: 1,201 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“இப்படியே போனால் இன்னும் இரு வருடங்களில் இந்தியா வல்லரசு ஆகி விடும், ஏதாவது செய்து அவர்களை பிரச்சினைக்குட்படுத்த வேண்டும், உங்கள் யோசனைகளை சொல்லலாம்” என அமெரிக்க – ஐரோப்பிய – சீன கூட்டு அமைப்பின் தலைவர் கூடியிருந்த உயர்மட்ட உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.

“வழமைப்போல, சாதி கலவரம் மத கலவரங்களைத் தூண்டி விட்டு விடுவோமா” என்றாள் சீனாக்காரி.

“பல வருடங்களுக்கு முன்பு அது மிகவும் எளிது, அன்று தமிழ்நாட்டில் மட்டும் பெரியாரியத்தினால் இருந்த சகிப்புத் தன்மை, இன்று நாடு முழுவதும் இருக்கின்றது…. நாடே பெரியார் பெயரை உச்சரிப்பதால் அதற்கான வாய்ப்பு இல்லை” என்றான் சுவீடனின் ஆண்டர்சன்.

“இந்தியாவின் மீது படை எடுக்கலாமா?

“வேண்டாம்… அது மூன்றாம் உலகப் போரில் கொண்டு வந்து விட்டு விடும். நாம் விற்ற ஆயுதங்களாலேயே இன்று அவர்கள் பலமாக இருக்கின்றார்கள் கூடங்குளம் அணு உலை கூட சிறப்பாக செயற்பட்டு கொண்டு இருக்கின்றது”

“மருத்துவ ரீதியாக, ஏதேனும் நோய்களை உருவாக்கி விடலாமா

“மூட நம்பிக்கைகளை ஒழித்த கையோடு, போலி மருத்துவம் எல்லாம் ஒழித்து, தடுப்பூசிகள், சிறப்பான அறிவியல் மருத்துவத்தினால் பாதுகாப்பான நம்மை விட சுகாதார வளமான சமுதாயமாக இருக்கின்றது .. ” என்றான் ஒரு ஜெர்மானியன்.

கடைசியாக “என்னிடம் கத்தியின்றி இரத்தமின்றி இந்தியாவில் ஒரே இரவில் பிரச்சினைகளைக் கொண்டு வர ஒரு வழி இருக்கின்றது என சொல்லியபடி எழுந்தான் அமெரிக்காவின் ஆரஞ்சுபிட்டர்.

ஆவல் மேலிட அவனை எல்லோரும் பார்க்க, ஆரஞ்சுபிட்டர் தொடர்ந்தான்.

“என்னுடைய புக்பேஸ் சமூக இணைய தளத்தில் இந்தியாவிற்கு மட்டும் பயனாளர்களுக்கு தகவல் பாதுகாப்பு பாக்கியங்களை நீக்கி விடுகின்றேன்”

“புரியவில்லை ” என்பது போல அனைவரும் ஒரே சேர புருவம் உயர்த்தினர்

“புக்பேஸ் இந்திய பயன்பாட்டாளர்களுக்கு மட்டும் சக இந்திய பயன்பாட்டாளர்களின் தனித் தகவல்கள் பரிமாற்றங்கள், தனி அரட்டை பரிமாற்றங்கள், புகைப்படங்கள் இவற்றை எந்தவித கட்டுப்பாடு இன்றி யார் வேண்டுமானாலும் யாருடையதை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ள முடியும், இந்தியர்கள் யாரும் தகவல்களை அழிக்கவோ மாற்றவோ முடியாது, மேலும் அவர்கள் கணக்கை முடக்கவோ தற்காலிகமாக நிறுத்தி வைக்கவோ முடியாது.. ஒவ்வொரு இந்தியரின் ரகசியமும் எல்லா இந்தியர்களுக்கும் சொந்தம்”

உயர் மட்ட கூட்டம் வெற்றிச் சிரிப்புடன் கலைந்தது. அடுத்த சில நாட்களில் இந்தியா பற்றி எரிந்தது.

– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு:http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *