கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 3, 2021
பார்வையிட்டோர்: 2,403 
 

பசுபதிக்கு வயது முப்பத்தியிரண்டு.

சொந்த ஊர் திசையன்விளை, திருநெல்வேலி. திருமணமாகவில்லை.

படித்தது பத்தாம் வகுப்பு வரைதான். படிப்பு ஏறவில்லை என்பதால் வேலை தேடி பெங்களூர் வந்தான்.

பைக் ஓட்டத் தெரிந்ததால் Swiggy நிறுவனத்தில் டெலிவரி பையனாகச் சேர்ந்தான். மூன்றே மாதங்களில் சொந்தமாக ஒரு பைக் வாங்கினான். அது அவனுடைய வேலைக்கு ரொம்ப உதவியாக இருந்தது.

பசுபதி நேர்மையானவன். எல்லோரிடமும் மரியாதையாக நடப்பான். நல்ல கறுப்பு நிறம். தினமும் காலையில் லோக்கல் ஜிம்முக்கு சென்று உடம்பை கட்டுமஸ்தாக வைத்திருந்தான். சிகரெட், குடி போன்ற கெட்ட பழக்கங்கள் எதுவும் கிடையாது. சுயமரியாதை உள்ளவன்.

மாதம் பதினைந்தாயிரம் வரை சம்பாதித்துக் கொண்டிருந்தான். நகரின் ஒரு மூத்திரச் சந்தில் இரண்டாயிரம் வாடகையில் தகர ஷீட் கூரையுடன் இருக்கும் ஒரு மாடிவீட்டில் வாசம்.

நேரந்தவறாமை, கஸ்டமர்களிடம் மரியாதை, சுறுசுறுப்பு, அமைதியான புன்னகை போன்ற சிறப்பு குணங்கள் அவனிடம் ஏராளமாக இருந்ததால் நிறுவனத்தில் அவனுக்கு மிக நல்ல பெயர்.

அதே நேரம் பீஸா ஹட்டில் வேலை செய்யும் நீலாவுக்கு பசுபதி மேல் ஒரு இனந்தெரியாத ஆனால் வெறியான காதல். சொந்த ஊர் திண்டுக்கல். பருத்திவீரன் ப்ரியாமணி மாதிரி அவனிடம் அடிக்கடி “ நீ சொன்னா சாவும் இந்தப் புள்ள, நீ கொன்னாக்கூட குத்தமில்ல…“ என்று காதலில் அவனிடம் அடிக்கடி பொங்குவாள்.

ஆனால் பசுபதி அவளிடம் எதுவும் பேசாமல் ஒரு மரியாதையான புன்னகையுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவான். அவனுக்கு இந்தக் காதல், கத்தரிக்காய் என்பதெல்லாம் அறவே பிடிப்பதில்லை.

பெங்களூர் கோரமங்களா வீனஸ் அபார்ட்மெண்டின் ஒன்பதாவது மாடியில் திவ்யா தன் கணவன் சுமனுடன் குடியிருக்கிறாள். இருவரும் பீகாரைச் சேர்ந்தவர்கள். சுமன் கம்பெனி விஷயமாக மூன்று நாட்களுக்கு நயோடா போயிருந்தான். திவ்யா தனியாக இருந்தாள்.

அன்று காலையில் மெதுவாக பத்து மணிக்கு எழுந்து சோம்பல் முறித்தாள். டீ மட்டும் போட்டுக் குடித்தாள். ஷவரில் நிதானமாகக் குளித்தாள். கண்ணாடி முன் நின்றுகொண்டு கூந்தலை நடு வகிடு எடுத்து அழகாக பிரஷ் செய்து கொண்டாள். அகோரப் பசி. பன்னிரண்டரை மணி வாக்கில் மதியச் சாப்பாட்டிற்கு Swiggi யில் ஒரு ஸ்லீக் மல்டிபிள் வெஜ் க்ரிஸ்பி பீட்ஸாவும், கார்லிக் ப்ரெட்டும் ஆர்டர் செய்தாள். காத்திருந்தாள். பீட்ஸா இருபது நிமிடத்தில் டெலிவரி செய்யப் பட்டிருக்க வேண்டும்…

ஆனால் மழை பிசு பிசுத்துக் கொண்டிருந்ததால், பசுபதி உள்ளே நுழைய இருபத்திநான்கு நிமிடங்கள் ஆகிவிட்டது.

திவ்யா பொறுமை இல்லாது பயங்கரக் கோபத்தில் பசுபதியிடம், “நீ ரொம்ப லேட். கேன்ஸல் த ஆர்டர்…டேக் தம் ஆல் வித் யூ…” என்று கத்தினாள்.

“மை அப்பாலஜீஸ் மேடம். திடீரென மழை பெய்ய ஆரம்பித்ததால் லேட்டாகி விட்டது மேடம். ப்ளீஸ் மேடம் டோன்ட் கேன்ஸல் த ஆர்டர்…”

“யூ டோன்ட் நோ டைம் வேல்யூ, யூ கன்ட்ரி புரூட்…”

“மேடம் ப்ளீஸ் நீங்க கேன்ஸல் செய்தால் எனக்குதான் நஷ்டம் மேடம்…”

“ஐ டோன்ட் கேர்… கெட் லாஸ்ட்.”

“சரி மேடம். இங்கேயே இவைகளை விட்டுவிட்டுப் போகிறேன். பட் டோன்ட் பே மி மேடம்….”

பக்கவாட்டில் இருந்த டேபிளின் மீது அந்தச் சதுரப் பெட்டியை வைத்தான்.

“நீ என்ன எனக்கு பிச்சை போடுகிறாயா? டீஸல் கறுப்பில் நீயே ஒரு அசிங்கம்…” ஆத்திரத்தில் பசுபதியை அவன் கன்னத்தில் அறைய தன் வலது கையை வீசினாள்.

பசுபதி அவளின் வீசிய கையை தடுத்து தன்னுடைய இரும்புக் கையால் பற்றினான்.

சுயமரியாதை பீறிட ‘டீசல் கறுப்பு’ என்று அவள் சொன்னதை நினைத்து அவள் கையை மேலும் கோபத்தில் இறுக்கினான்.

அவள் “ஐயோ…” என்று அலறித் துடிக்க ஆரம்பித்தாள்.

பசுபதி அவள் கையை உதறிவிட்டு வெளியேறினான்.

திவ்யா உடனே அருகில் இருந்த போலீஸ் ஸ்டேஷன் சென்று எழுத்து மூலம் புகார் செய்தாள். போலீஸ் Swiggi Management க்கு போன் செய்தவுடன் அடுத்த அரைமணி நேரத்தில் பசுபதி இன்ஸ்பெக்டர் முன் நின்றான்.

பசுபதி நடந்த உண்மைகளைச் சொன்னான். கேமிராவில் பதிவானதை வைத்து எவ்வளவு முடியுமோ அதை இன்ஸ்பெக்டர் கிரகித்துக் கொண்டார். பசுபதியின் கண்களில் தெரிந்த நேர்மையை புரிந்துகொண்டார்.

அவனிடம் ஒரு மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு அவனை போகச் சொன்னார். ஆனால் அவனை ஜெயிலில் தள்ள வேண்டும் என்று திவ்யா பிடிவாதம் பிடித்தாள். அவள் திமிர் பிடித்தவள் என்பதை இன்ஸ் புரிந்துகொண்டார். விஷயம் பெரிதாகி மறுநாள் பெங்களூர் தினசரிகளில் கண் காதுகள் ஒட்டப்பட்டு பசுபதி திவ்யாவைக் கட்டிப்பிடிக்க முயன்றதாக செய்திகள் வெளியாகின. மாதர் சங்கங்கள் சுறுசுறுப்பாகின.

விஷயம் கைமீறிப் போகவே உடனே Swiggi நிறுவனம் பசுபதியை வேலையை விட்டு நிறுத்திவிட்டது.

வேலை பறிபோய் கேவலமும் அடைந்த பசுபதி கடந்த இரண்டு வாரங்களாக ஒரு அடிபட்ட புலி போல தனிமையில் குமைந்து கொண்டிருந்தான்.

அப்போதுதான் நீலா அவனை ஒருநாள் பார்க்க வந்தாள். திடீரென பசுபதிக்கு அந்த எண்ணம் தீயாய் மூண்டது. அதை உடனே ரகசியமாக நீலாவிடம் சொல்லி அவளின் ஆதரவைக் கேட்டான். அவள் உடனே “ஒனக்காக என் உயிரையே விடுவேண்டா…” என்றாள்.

காத்திருந்தார்கள்…

அன்று சுமனை பெங்களூர் ஏர்போர்ட்டில் பார்த்ததாக யாரோ சொன்னார்கள். அவன் டெல்லி சென்றுள்ளதை பசுபதி விசாரித்து உறுதிப் படுத்திக்கொண்டான்.

மறுநாளே நீலாவை லீவு போடச் சொன்னான்.

காலை பத்துமணி வாக்கில் நீலா திவ்யாவிற்கு அவள் மொபைலில் போன் செய்து கனிவுடன், “மேடம் நான் Zomato விலிருந்து பேசுகிறேன். என் பெயர் மாயா… ஒரு ஸ்பெஷல் ஆபர் விஷயமாக நான் தங்களிடம் நேரில் விளக்கிப் பேச ஆசைப்படுகிறேன்….” என்றாள்.

திவ்யா அவளை பகல் பன்னிரண்டு மணிக்கு வரச்சொன்னாள்.

ரொம்ப ஸ்டைலான ஒப்பனையுடன் ப்ளூ ஜீன்ஸ், யெல்லோ டீ ஷர்ட்டில் நீலா சென்றாள்.

திவ்யா அவளை வீட்டினுள் வரவேற்று அங்கிருந்த சோபாவில் அமரச்செய்து தானும் எதிரே அமர்ந்துகொண்டாள்.

“சொல்லுங்க மாயா….”

அடுத்தநொடி, சற்றும் எதிர் பாராமல் நீலா ஒரு ஸ்பிரேயை எடுத்து திவ்யாவின் முகத்தில் அடித்தாள். திவ்யா சோபாவில் மயங்கிச் சரிந்தாள்.

நிதானமாக தன்னுடைய மொபைலை எடுத்து வெளியே காத்திருந்த பசுபதியிடம், “பசு, அம்மா எந்திரிக்க இன்னமும் ஒருமணி நேரம் ஆகும்… நீ உள்ளே வா” என்றாள்.

பசுபதி அடுத்த இரண்டு நிமிடங்களில் லிப்ட் மூலமாக விரைந்து வந்தான்.

மெயின்டோரை உடனே நன்கு சாத்திவிட்டு, பளபளவென தன்னுடன் கொண்டு வந்திருந்த சவரக்கத்தியை வெளியே எடுத்தான். அவனுக்கு ரத்தம் கொதித்தது. ‘பாவி ஒழுங்காக இருந்த என்னை நாறடித்து விட்டாயே… பொம்பளையா நீ?’ பழி உணர்ச்சி லேலோங்கியது.

சோபாவில் காலை மடித்து வைத்துக்கொண்டு திவ்யாவை தன் மடிமீது வசதியாக படுக்க வைத்துக்கொண்டாள் நீலா.

பசுபதி அலையலையான திவ்யாவின் தலைமயிரை நடு வகிடிலிருந்து பிரித்து பாதி தலைமயிரை மட்டும் நிதானமாக வழித்து எடுத்தான். மீதியை அப்படியே விட்டு விட்டான்.

“ஏண்டா, மொட்டை அடிக்கலை?”

“அட நீ வேற, நான் கணவருக்காக திருப்பதிக்கு போய் மொட்டை அடித்துக்கொண்டேன் என்று பிளேட்டை திருப்பிவிடுவாள் கிராதகி. இப்படியே விட்டால் அசிங்கமான தோற்றத்துடன் யாரிடமாவது ரகசியமாகச் சென்று அவளே தன்னுடைய மொட்டைக்குச் செலவழிப்பாள்…”

இருவரும் இடத்தைக் காலி செய்தனர்.

ஒன்றரை மணிநேரம் கழித்து திவ்யா முழித்துப் பார்த்தாள். சோபா முழுதும் ஏகப்பட்ட தலை மயிர்கள்… இடது கையால் தன் தலைமயிரை நீவியபோது சற்று நிம்மதியடைந்தவள், பின் எப்படி இவ்வளவு தலைமயிர்? என்று சந்தேகம் எழ உடனே ஹாலில் இருந்த ஆளுயுர கண்ணாடி முன் போய் நின்றாள்.

தான் பாதி மொட்டையடிக்கப் பட்டிருப்பது புரிய, கதறி அழுதாள். அன்று இரவே சுமன் பெங்களூர் திரும்பினான்.

அடுத்த ஒரு வாரம் பசுபதி தலைமறைவாக இருந்தான். பெங்களூர் எப்போதும்போல அமைதியாக இயங்கிக் கொண்டிருந்தது. போலீஸ் புகார் எதுவும் இதுகுறித்து தரப்படவில்லை…

பசுபதி தன்னுடைய அடுத்த வேலைக்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கினான். முதன் முதலாக நீலா மீது அவனுக்கு காதல் அரும்பியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *