கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 19, 2012
பார்வையிட்டோர்: 7,442 
 

தேர்தல் 2060
——–

இந்த ஆண்டும் தமிழக தேர்தலுக்கு தேர்தல் கமிஷன் போட்டியிடும் கட்சிகளுக்கு ஆட்சி செய்ய உதவும் வகையில் வழிகாட்டுதலாக

1. கல்வி / மனித வளம்,

2. இயந்திரம் / வியாபாரம்,

3 . விஞ்ஞானம் / விவசாயம்,

4. செயலாக்கம்

என்ற பிரிவுகளில் செயல் திட்ட முன் வடிவங்களைக் கேட்டுப் பெற்றுள்ளது.
இதில் இலவசம், முந்தைய கடன் ரத்து, ஒருசாராருக்கு உதவும்படிக்கு வாக்குறுதிகள் முதலியன தவிர்க்கப்பட்டுள்ளன.
நாலாவது அம்சமான செயலாக்கத்தில் செலவினங்கள் குறைப்பு என்பது முக்கிய அம்சமாக கவனிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு 2060ல், திட்ட முன்வடிவங்கள் அரசு அனுமதி பெற்ற தேன்கூடு இணைய தளத்தில் மட்டும் மக்கள் விவாதத்திற்கு வலைப்பூவாக வெளியிடப்படும். மக்கள் தங்கள் யோசனைகளைப்

பின்னூட்டமாக அளித்து அரசியல் கட்சிகளை ஊக்குவிக்கலாம். தேர்தலில் வெற்றி தேன் கூடு இணைய தளத்தில் பின்னூட்டமாக அளிக்கப்படும் மக்களின் ஆதரவைக் கொண்டு தேர்தல் கமிஷனால்

தீர்மானிக்கப்படும். கில்லி இணையத் தளம் இந்தமுடிவெடுப்பிற்கு உதவும்படி தேர்தல் கமிஷனால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழோவியம் இணைய தளத்திற்கு இறுதி முடிவுகளை வெளியிடும்

அதிகாரம் தேர்தல் கமிஷனால் வழங்கப்பட்டுள்ளது.

வழக்கம் போல தனிநபர் வாக்கெடுப்பு இந்த முறையும் இல்லை.

தமிழகத்தின் இரண்டு முக்கிய கூட்டணிக் கட்சிகளான
1.மறுமலர்ச்சி ஜனநாயகக் கூட்டணிக் கட்சியும் (ம.ஜ.கூ.க),
(தற்போதைய ஆளும் கூட்டணிக் கட்சி)

2.மக்கள் நண்பர்கள் கூட்டணிக் கட்சியும் (ம.ந.கூ.க)
(தற்போதைய எதிர்க் கூட்டணிக் கட்சி)

வெளியிட்ட தேர்தல் அறிக்கைகள் இங்கு அவர்களின் அனுமதியோடு பதிவிடப்பட்டுள்ளது.

இவர்களின் தேர்தல் அறிக்கை இந்தத் தேர்தல் சமயத்தில் நமது தமிழகத்தில் சமீபத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் பின்னணியில் வாசிக்கப்படவேண்டிய ஒன்று.

தமிழகத்தில் சமீபத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் சுருக்கமாக:
======================================

1. இளம் வயது குற்றவாளிகள் பெருகிவிட்ட இந்த சூழ்நிலையில் அவர்களுக்கான நவீன வசதி படைத்த சிறைச்சாலைகள் தமிழக மாவட்டம் தோறும் ஏற்படுத்தப்படும் என்று முதலமைச்சர் இன்று

அறிவித்துள்ளார்.

2. சிறைத்தண்டனைக் கைதி இன்று விடுதலை ஆனாலும், சிறைச்சாலையைவிட்டு போக முடியாது, இங்கு உள்ளது போன்ற ஒரு வசதியான வாழ்க்கை வெளி உலகில் உழைக்காமல் வாழ தன்னால்

இயலாது என்று சொல்லி சிறையிலேயே தம் மீதி நாட்களைக் கழிக்க விரும்புவதாகச் சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3. அரசுத்துறை சார்ந்த தனியார் நிறுவனம் வழங்கிய குடிநீரில் மாசு கலந்து நூற்றுக்கணக்கானோர் மரணம் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வாந்தி பேதி. ம.ஜ.கூ.க அரசு இச்செய்தியை மறுத்து, இது

ம.ந.கூ.கவின் சதி என்று குற்றம் சாட்டியுள்ளது.

4. தமிழக தென் மாவட்டங்களில் இளம்பெண்கள் கூட்டமாக திடீரென காணாமல் போகும் மாயம். வெளிநாடுகளுக்கு நல்ல விலைக்கு விற்கப்படுவதாகச் செய்தி. ஆனால், இது குறித்து புகார் ஏதும் பதிவு

செய்யப்படாதது குறித்துக் காவல்துறை வியப்பு தெரிவித்து பிச்சை எடுப்பதையும், விபசாரம் செய்வதையும் எங்கு செய்தால் என்ன ? என்று
கேள்வியெழுப்பியது.

5. சென்ற ஆண்டில் மட்டும் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டோரின் பதிவுசெய்யப்பட்ட எண்ணிக்கை 11300 ஆகும். இவர்களில் 7700 பேர் ஆண்கள், 3600 பேர் பெண்கள். மொத்தமாக தற்கொலை

செய்து கொண்டவர்களில் 8341 பேர் நகரத்திலும், 2959 பேர் கிராமங்களிலும் வசித்தவர்கள்.

**********************************************************************************

மறுமலர்ச்சி ஜனநாயகக் கூட்டணிக் கட்சி (ம.ஜ.கூ.க)
தேர்தல் அறிக்கை – 2060.

உலகத்திற்கு தமிழகத்தை விளக்குவதற்கும், முன்னிலும் சிறந்ததாக அமைக்கவும் தமிழன் அழைக்கப்பட்டிருக்கும் காலகட்டத்தில் நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வரலாறு என்பது கடந்த

காலத்துக்கும் நிகழ்காலத்திற்கும் நடக்கும் உரையாடல். மேலும் கடந்தகால சம்பவங்களுக்கும், எதிர்கால நோக்கங்களுக்கும் ஒரு பாலம் கூட. கடந்த காலத்தை ஆராய்கிறபோது ‘சிறப்பாக இயங்குவது’

என்பது மட்டுமே அளவுகோலாக எடுத்துக் கொள்ளப்படும். சமூகம் தனிமனிதனுக்கு மாட்டும் கைவிலங்கை உடைத்தெரிவது நமது கொள்கை. ஒரு கருத்து போலியாக இருப்பது என்றும் ஆட்சேபத்துக்கு

உரியதல்ல. ஆனால், எந்த அளவிற்கு போலித்தன்மையுடைய அக்கருத்து வடிவம் தமிழனின் வாழ்க்கையை ஊக்குவிக்க, பாதுகாக்க உதவும் என்பது நாம் எழுப்பும் கேள்வி?

கடமையைச் செய். பலனை எதிர்பார்க்காதே – பகவத் கீதை
———————————————————————————–

1. சுக்கிர நீதியின்படி சட்டபூர்வமான நில உரிமையும், செல்வமும் முற்பிறப்பின் தவப்பயன். அடிமைத்தனமும், வறுமையும் முற்பிறப்பில் செய்த பாவத்தின் பயன். எனவே நிலத்தின் மீதான பொது

உடமை சரித்திரபூர்வமானதல்ல.ஒரு பெண் இயற்கையாகப் படைக்கப் பட்டாலும் அவள் பெற்றோருக்கு மட்டுமே உரிமையாகிறாள். அதுபோல நிலம்
என்பது நிலச் சொந்தக்காரனுக்கு மட்டுமே உடமையானது. தனியுடமையால் தான் விவசாயம் வளர்ந்தது. இனிமேலும் அப்படியே தான் வளர்ச்சியடைய வேண்டும்.

2. தனிச் சொத்துரிமை சுரண்டல் சித்தாந்தமாகாது. ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்பது அமலுக்கு வர முடியாதது. ஒழுக்கம் என்பது பொதுவானது. ஏழை ஏழ்மையினால் திருடுகிறான் என்பது

அபத்தமானது. அவனிடம் ஒழுக்கம் போதிக்கப்படவில்லை என்பதே ஒரு பிரச்சினை. தனிமனித ஒழுக்கம் என்பது பணக்காரனுக்கும் பொதுவானதே. அவன் திருடாமல் இருக்கக் காரணம் அவனிடம்

உள்ள பணம் அல்ல, அவனது ஒழுக்கமே.

3. ஒருவன் இலட்சாதிபதியாகவும், கோடீஸ்வரனாகவும் இருக்கக் காரணம் முற்பிறவியில் செய்த நற்பயனே. மேலும், சட்டரீதியாக ஒருவன் பணக்கரானாக முயற்சித்தால் அதற்குத் தடை ஏதும் இல்லை.

எங்கள் கட்சி அதற்கான ஊக்குவிப்பு முயற்சியில் பல வகையில் ஈடுபடும்.

4.எல்லாவற்றையும் தேசீயமயமாக்குவது என்பது சாஸ்திரங்களுக்கும், மதத்திற்கும் எதிரான ஒன்று. இதனால், நிலம், செல்வம், வணிகம், தொழிற்சாலை எல்லாம் அரசுக்குச் சொந்தமாகிவிடுகின்றன. தனி

நபர்கள் அரசின் மதிப்பில்லா உறுப்பினர்கள் ஆகிவிடும் அபாயம் ஏற்படுகிறது. அரசு கொடுங்கோன்மையாகிவிடும் சாத்தியமும் ஏற்படுகிறது.

5. பெண்களுக்குச் சுதந்திரம், தன்னம்பிக்கையுடன் வாழ்தல் என்ற கவர்ச்சிகரமான கோஷம் எழுப்பி அவர்களையும் பல தொழில்களில் ஈடுபடுத்தும் ம.ந.கூ.க வின் போக்கு பெண்ணினத்திற்கு அநீதி

இழைப்பதாகும். அவர்களின் பார்வையில் பெண் என்பவளும் உழைப்பவளாகவே கருதப்படுகிறாள். அரசுக்கு அடிமையாக இருப்பதையும், கூலி வேலை செய்வதையும் எங்கள் கட்சி என்றும்

கண்டித்துவருவது நீங்கள் அறிந்ததே. மனித வாழ்விற்கு இனிமை கூட்டி, இல்லத்திற்குச் சுவை கூட்டும் பெண்ணின் தலையில் சம்பாதிக்கும் சுமை இருக்கவே கூடாது. எங்கள் ஆட்சியில் பெண் என்பவள்

இல்லத்தரசியாக விளங்குவாள். குடும்பம் என்ற நிறுவன அமைப்பு சிதைந்த இன்றைய சூழலில் சேர்ந்து வாழ்வதும், வேலை என்ற பெயரில் பெண் பல ஆண்களோடு திரிவதும் கண்டிக்கத்தக்கது.

6. மண் வெட்டியால் நிலத்தைச் சமன் செய்வது மட்டும் வேலை அல்ல. பெரிய வியாபாரத்தை நடத்துவதும் ஒரு வேலையே. உற்பத்தி சாதனங்களிலும், உற்பத்தி முறைகளிலும் பெரும் மாற்றம்

கொண்டுவரும் முதலாளிகளுக்கு கவுரவமும், மரியாதையும் எங்கள் ஆட்சியில் செய்யப்படும்.

7.வேலை இல்லாமல் அலைந்து கொண்டிருப்பவர்க்கு வேலை கொடுக்கும் தனிநபர் நிறுவனத்திடம் லாபம் கேட்டு வேலை நிறுத்தம், ஊர்வலம், பொதுக்கூட்டம் எனச் செயல்படுவது, அவ்விதம் செய்யத்

தூண்டுவது ம.ந.கூ.க வின் முக்கிய வேலையாக இருந்துவருவது உள்ளங்கை நெல்லிக்கனி. தமது எஜமானர்களுக்காக உயிரையே பயணம்
வைக்கும் தொழிலாளர்கள் வாழ்ந்து மறைந்த, சரித்திரம் படைத்தத் தமிழகம் இது.

8. மறுமலர்ச்சி ஜனநாயக அமைப்பில் வேதங்கள், குரான், பைபிள், ஆலயம், மாதா கோவில், பள்ளிவாசல் எல்லாம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எல்லோருக்கும் அவரவர் மதத்தில் உள்ள உரிமையும்

பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது தொடர வேண்டும் என்பதே அனைத்து மதத்தினரின் விருப்பம். அது இந்தத் தேர்தலின் முடிவில் எல்லோருக்கும்
தெரிய வரும்.

9. அரசனில்லாத நாடு அராஜக நாடாகும். எங்கள் கட்சித் தலைவர் சினிமாவில் செய்த நற்செயல்கள் உங்கள் நினைவுக்கு மறுபடிச் சொல்லவும் வேண்டுமா ? எங்களைப்போல ஒரு தலைவனை

எதிர்க்கட்சியால் முன்னிறுத்த முடியுமா? அவர்கள் ஆட்சிக்கு வருவது அராஜகம் ஆட்சிக்கு வருவது போலான ஒன்று.

10. பெரும்பான்மைக்கு மதிப்பில்லை. கண்ணில்லாத குருடர்கள் எவ்வளவு பேர் இருந்தாலும் அவர்களுக்குக் காட்சி தரிசனம் கிடைக்காது. அங்கத்தினர் எண்ணிக்கையால் எந்தப் பயனும் இல்லை. படித்த

அறிவாளர்கள் அங்கத்தினர்களில் எவ்வளவு பேர் என்பதே கணக்கு. நமது முந்தைய ஆட்சியாளர்களை நாம் பார்த்தால் நமது தமிழக மக்கள், மக்கள் நலனை நாடும், ஆசாபாசமற்ற நடிகர், நடிகைகளின்

கைகளில் தான் ஆளும் பொறுப்பைத் தந்துள்ளார்கள் என்று சரித்திரம் தெரிவிக்கிறது. அந்த வழியில் வகையில் எங்கள் வேட்பாளர் சினிமா நடிகர்,ஆட்சிக்கு மிகப் பொருத்தமானவர்.

**********************************************************************************
**********************************************************************************
**********************************************************************************

மக்கள் நண்பர்கள் கூட்டணிக் கட்சி (ம.ந.கூ.க)
தேர்தல் அறிக்கை – 2060

வரப்போகும் தேர்தலில் ஏகாதிபத்திய அமைப்பின் வீழ்ச்சிக்கு நாள் குறிக்கப்பட வேண்டும். இந்தத் தேர்தலில் இவர்களுக்குக் வெற்றி கிடைத்தால் அது அவர்களின் வீழ்ச்சியை ஒத்திப் போட மட்டுமே

உதவும். நமது கோட்பாடுகள் இதனால் மேலும் தீவிரமடைந்து, பல வடிவங்களில் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும்.வாழ்க்கைச் சிக்கல்களுக்கு இதுவரை நமக்கு வழிகாட்டியாக இருந்து வந்த ம.ஜ.கூ.க

யின் சூத்திரங்கள் நம்மைக் கைவிடும்போது, அச்சூத்திரங்கள் தரும் பாதையில் பயணிப்பது கடலில் நாமே மூழ்குவது போல. நாம் ஒற்றுமைக்காகவும், ஒழுங்கமைப்புக்காகவும் பாடுபட்டு, இத்தேர்தலில்

வெற்றியடைவது என்பது சோதனைகளைத் தாண்டி எதிர்காலம் என்பது நமது என்று ஏற்படுத்திக்கொள்ள மட்டுமே.

ஆகவே தேனீக்களாகிய நீங்கள் உங்களுக்காக மட்டும் தேனை உருவாக்குவதில்லை. – வர்ஜில்.
————————————————————–

1. அரசு என்பது உடைமை வர்க்கத்தின் ஸ்தாபனம், உடைமையற்ற வர்க்கத்தின் மூலமாக அந்த வர்க்கத்தைப் பாதுகாப்பதற்கே அது இதுவரை இருந்துவருகிறது. மேலும், ஒவ்வொரு சகாப்தத்திலும்

ஆளும் வர்க்கத்தின் கருத்துகள் தான் ஆதிக்கம் செலுத்தும் கருத்துக்களாக இருந்து வருகின்றன. சமூகப் புரட்சி ஏற்பட்டலொழிய இத்தகைய அரசினை ஒழிக்க முடியாது.

2. மூலதனம், உற்பத்திச் சாதனங்கள் ஒரு சிலரிடமே குவிந்திருப்பதை ஒழிக்க வேண்டும். அவ்விதம் செய்தால் மக்கள் விரோத அரசு என்பது தானாக அழிந்துவிடும். உலர்ந்து உதிர்ந்துவிடும்.

3.பண்ணையடிமை முறை, கூலி உழைப்பு முறை என்பது ஒழிய பாட்டாளி வர்க்கம் அரசியல் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். தொழிலாளிவர்க்கம் தான் எல்லா மதிப்புகளையும் உற்பத்திச்

செய்கிறது. மதிப்பு என்பது உழைப்பைக் குறிக்கும் ஒரு மறுபெயரே.

4.வர்க்க வேறுபாடுகள் ஒழிக்கப்படும்போது எல்லா அரசியல் சமூக ஏற்றத் தாழ்வுகளும் மறைந்துவிடும்.

5. இறையியலைப் பற்றிய விமரிசனங்களை, அரசியலைப் பற்றிய விமரிசனமாக மாற்றும் ம.ஜ.கூ.கவின் சதி இந்தத் தேர்தலில் முறியடிக்கப்பட வேண்டும்.

6. இன்று தமிழகத்தில் ஏழ்மையைக் குறைக்காமல் செல்வத்தைப் பெருக்கும் வேலையில் ஒரு அரசு ஈடுபடுவது மக்கள்தொகையை விட குற்றங்கள் அதிகரிக்க வழி செய்கிறது என்பது தெளிவு.

7. அளவுக்கு மீறிய செல்வம் படைத்தோர் சிறுபான்மையினராகவும், சொத்தில்லாத கூலித் தொழிலாளர்கள் பெரும்பான்மையினராகவும் உள்ள இன்றைய நிலை ஒழிக்கப் பட வேண்டும். இது எங்களால்

ஒழிக்கவும் முடியும்.

8. வரலாறு என்பது தனித்தனி தலைமுறைகளின் தொடர்வரிசை. சமுதாய வரலாறு என்பது வர்க்கப் போராட்ட வரலாறே. வரலாறு நீதிபதி, தண்டனையை நிறைவேற்றுபவர் பாட்டாளி வர்க்கம்.

அவர்களுக்குத் தேவை ஆட்சியதிகாரம்.

9. நகர்ப்புறத்தில் உள்ள முதலாளி, தொழிலாளி பிரிவினையும், கிராமங்களில் உள்ள நிலவுடமையாளர்கள், கைவினைஞர்கள், பஞ்சமர்கள் பிரிவினையும் ஒழிய ம.ந.கூ.கவிற்கு வாக்களியுங்கள்.

10. புரட்சி சட்டங்களால் செய்யப்படுவதில்லை. நமது புரட்சிக் குமுறலின் பின் உள்ள சமுதாயத் தேவை அவசியமான ஒன்று. நமது விருப்பம் சமூகத்தில் உள்ள தனிநபர்களின் நலன்கள் ஒன்றுக்கொன்று

எதிராக இருப்பதை மாற்றி

இணைந்திருக்கும்படிச் செய்வதே. அப்படிப்பட்ட சமூகத்தில் போட்டி என்பதே இருப்பதில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *