ஒரு ஜனவரி மாதக் காலை வேளையில், கோபால் பிள்ளையார் கோவில் தெருவில் இருந்த கணேஷ் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து நானும், அவனும் கணித வகுப்புத் தேர்வுக்காக பயிற்சி கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த கணக்கு கூட இன்னமும் எனக்கு நினைவில் இருக்கிறது. கால்குலஸ் (Second Order Differential Equation)! கணக்கில் புலி என்று எங்களை நாங்களே அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருந்த காலம். இன்னும் சற்று நேரத்தில் சம்பத் சாரிடம் நாங்கள் கேட்டு வாங்கியிருந்த மாதிரித் தேர்வு ஒன்று ஆரம்பிக்கப் பட இருந்தது.
பத்து மணித் தேர்வுக்கு, எட்டு மணிக்கே வந்து டியூஷனுக்கு அடுத்தத் தெருவில் இருக்கும் கணேஷ் வீட்டுத் திண்ணையில் கணக்கு நோட்டில் மூழ்கிப் போயிருந்தேன். கால்குலஸின் அடியாழத்திற்கு சென்று தியரம் ஒன்றினை நான் நிரூபித்துக் கொண்டிருந்த வேளையில், யாரோ ஒருவர் வந்து எங்கோ செல்வதற்கு வழி கேட்டார்! அல்லது கேட்டது போன்ற ஒரு பிரமை! தலையை குனிந்து வழியைச் சொல்லிக் கொண்டே, கால்குலஸையும் போட்டு முடித்து விட்டு, நிமிர்ந்து பார்த்தால், என் எதிரே நான் நிறுத்தி வைத்திருந்த எனது சைக்கிளைக் காணோம்!
கணேஷ்! என் சைக்கிளை பார்த்தியா?
நீ சைக்கிள்யா வந்தே?
அவன் இன்னமும் தனது நோட்டிலிருந்து தலையை நிமிர்த்த வில்லை.
போடாங்க….
நான் எழுந்து, வெளியில் வந்து தெருவைப் பார்த்தேன். இரண்டு பக்கமும் ஒரு சைக்கிளும் செல்லவில்லை! நான் கணேஷ் வீட்டுப் படியில் வழக்கமாக என் சைக்கிளை சாய்த்து நிறுத்தும் இடத்தைப் பார்த்தேன்! அங்கே, எனது சைக்கிள் பெடல் தொடர்ந்து உராய்ந்ததில் சிமெண்ட் பெயர்ந்து தூள் உதிர்ந்திருந்து. எனது சைக்கிள் அற்ற அந்த வெற்றிடத்தைப் பார்க்கும் போது கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது.
அடுத்த சில மணிநேரங்கள் அங்கும் இங்குமாக ஓடிச் சென்று பார்த்தோம். சரியான நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த இளங்கோவின் சைக்கிளில் இன்னும் ஒரு முறை தேடல். எனது சைக்கிள் சென்றதற்கான ஒரு தடயமும் இல்லை. வீட்டு முன் கூட்டமாக இருந்ததைப் பார்த்த பால்காரர் வந்து விசாரித்தவுடன், நடந்ததை சொன்னோம்.
அட! ஆமா! நான் கூட ஒருத்தன் உன் சைக்கிளை எடுத்துப் போவதை பார்த்தேனே! என்று முதல் க்ளூ கொடுத்தார்.
யாருண்ணே! என்றேன் ஆவலுடன்.
எனக்கெப்படிப்பா தெரியும்? உன் கிட்ட உள்ளே வந்து பேசிட்டு இருந்தான். அப்புறம், வெளியில் வந்து உன் சைக்கிளை எடுத்துட்டு பொறப்பட்டுப் போனான். அதான் நான் பார்த்தேன் என்றார்.
ஆக, ஒருத்தன் வந்து வழி கேட்டது பிரமையல்ல! நிஜமாலுமே வந்திருக்கான்! எங்களின் விழிப்புணர்வை சோதிச்சுப் பார்த்திருக்கான். போகும் போது என்னோட சைக்கிளை ஓட்டிட்டுப் போயிருக்கான்.
அதெப்படிடா! ஒருத்தன் வந்து உங்க கண் முன்னாடியே சைக்கிளை எடுத்துட்டு, உங்க கிட்டயே வழி கேட்டு போறது கூட தெரியாமல், கணக்குப் போட்டுட்டு இருந்தீங்க? என்றார் கணேஷோட அம்மா!
சொல்றதுக்கு பதில் எதுவும் இல்லை! ஆனால், சத்தியமா, சர்.ஐசக் நியூட்டன் இருந்திருந்தால், என்னோட கால்குலஸ் ஆர்வம் கண்டு ரொம்ப பெருமைப் பட்டிருப்பார்!
மதியம் பன்னிரெண்டு மணி வாக்கில எனக்கு புரிஞ்சுடுச்சு! இனி என்னோட சைக்கிளை நான் பார்க்கப் போவதில்லை! சோகமாக உட்கார்ந்திருந்தவனிடம், டேய்! போய் ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளெய்ண்ட் கொடுத்துடா! மொத்தமாக சிக்கும் போது உன்னோட சைக்கிளும் கிடைக்கும் என்றார் அருள் அண்ணன். நானும், இளங்கோவும் ஸ்டேஷனுக்குப் போனோம்.
நகர காவல் நிலையத்தின் வாசலிலேயே ஏட்டையா நின்று கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன், என்னப்பா? என்ன இந்தப் பக்கம்? என்றார்.
என்னோட சைக்கிள் திருடு போயிடுச்சு சார்!
என்னது? உன்னோட சைக்கிளா? எது அந்த நீலக் கலர் சைக்கிளா? சக்கரத்தில் கூட மணி எல்லாம் மாட்டி வச்சிருப்பியே? அட! ரொம்ப அழகான சைக்கிளாச்சேப்பா?
இதுவரையில் கண்களில் முட்டிக் கொண்டு நின்றிருந்த கண்ணீர் பீறிட்டுக் கொண்டு வெளியே வந்தது. ஏட்டைய்யா வரைக்கும் என்னோட சைக்கிளைப் பற்றித் தெரிஞ்சிருக்கு!
சரி! சரி! அழாதே! உள்ளே வந்து ஒரு கம்ப்ளெய்ண்ட் எழுதிக் கொடு. கண்டு பிடிச்சடலாம் என்றார்.
சார்! கம்ப்ளெய்ண்ட் எழுதி கொடுக்கறதுக்குள்ளே அவன் என் சைக்கிளை ஊரை விட்டே ஓட்டிட்டுப் போயிடுவான். சீக்கிரம் வந்து கண்டு பிடிங்க என்றேன்.
ஒரு சைக்கிளைக் காணோம் என்றவுடன், போலீஸ் ஸ்டேஷனே பரபரப்பாகி, உடனே வயர்லெஸ்ஸில் அனைவரையும் உஷார் படுத்தி, ஊரை விட்டு வெளியே செல்லும் ஒன்பது ரோட்டிலும் செக் போஸ்ட் போட்டு, சைக்கிள் திருடியவனைப் பிடிப்பார்கள் என்று அதுவரையிலும் நம்பிக் கொண்டிருந்தேன்!
ஆனால், ஏட்டைய்யா பதட்டப் படவில்லை! நிதானமாக சிகரெட்டை இழுத்து முடித்து விட்டு, சேகர்! உன் சைக்கிளை எடு! என்னன்னு போய் பார்த்துட்டு வரலாம்! என்று இன்னொரு போலீஸ்காரரை அழைத்துக் கொண்டு எங்களுடன் கிளம்பினார்.
சிலப்பதிகார காலத்திலிருந்து நமது நீதி விசாரணை முறையில் ஒரு வழக்கம் இருக்கிறது. ஏதேனும் காணவில்லை என்று புகார் கொடுத்தால், முதலில் புகார் கொடுத்தவரைத்தான் சந்தேகத்துடன் விசாரிப்பார்கள். எப்படி காணாமல் போனது? அப்போது நீ எங்கே இருந்தே? உனக்கு வெளியில் ஏதாவது கடன் இருக்கா? உன் மனைவியோட சுமுகமா இருக்கியா? என்ற கேள்விகளை அவர்கள் கேட்கும் போது, தொண்ணூறு சதவீதம் பேர், ஐயா! என்னோட ஆடே காணாமல் போகலைய்யா! நாந்தான் தூக்கத்தில களவு போயிட்ட மாதிரி கனவு கண்டேன்! என்று சொல்லி விட்டு போய் விடுவார்கள்.
நான் எனது சைக்கிள் விஷயத்தில் பிடிவாதமாக இருந்ததால், ஏட்டைய்யாவின் விசாரணை கணேஷ் வீட்டுத் திண்ணையில் இருந்து ஆரம்பித்தது.
முதலில் பால்காரர்.
யோவ்! பால்கார்ரே! அந்த சைக்கிளை எடுத்துட்டுப் போவும் போது நீ பார்த்தியா?
பார்த்தேங்க!
அப்படியா? எந்தப் பக்கம் போனான்?
இந்தப் பக்கம்தான் போனாங்க!
அப்படியா? சரி! எடுத்துட்டு போனவன் உனக்கு எப்படி பழக்கம்?
சரியாக, மூணாவது கேள்வியில் பால்காரரை பீதியடையச் செய்து விட்டார் ஏட்டைய்யா.
அதற்குள் அங்கே சின்ன கூட்டம் கூடி விட்டது. கூட்டத்தை விலக்கியபடி, கணேஷோட அப்பா கடையில் இருந்து சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்தார். வெள்ளை வெளேரென்று உடையணிந்த அந்த உயரமான உருவம், அங்கு நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டு மவுனமாக வீட்டினுள் சென்றது.
இப்போ உள்ளே போறாரே? யாரு அவரு? என்றார் ஏட்டைய்யா!
இந்த முறை நான் பீதியடைந்து விட்டேன்.
சார்! அவரு எங்க அப்பா என்றான் கணேஷ்!
ஏட்டைய்யா, மேற்கொண்டு அந்த திசையில் செல்லாமல், விசாரணையை என் பக்கம் திருப்பினார்.
சரி! ஒரு திருடன் வந்து உன் சைக்கிளை எடுத்துட்டு போறவரைக்கும் நீ என்ன செஞ்சுட்டு இருந்தே?
கணக்கு போட்டு பார்த்துட்டு இருந்தேன் சார்! கணக்கு நோட்டைக் காட்டினேன்.
அதை கையில் வாங்கி புரட்டிப் பார்த்தார். கால்குலஸ் தெரிஞ்ச எங்க வாத்தியார் கூட அவ்வளவு நேரம் அதை பார்த்திருக்க மாட்டார். நாங்கள் எல்லோரும் ஏட்டைய்யாவையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தோம். ஏட்டைய்யாவின் கண்ணு மட்டும்தான் நோட்டை பார்த்தது! சிந்தனை எல்லாம் எப்படி என்னிடம் இருந்து தப்பிக்கிறது என்று இருந்திருக்கிறது.
நோட்டை என் கையில் கொடுத்து விட்டு, சரி! வா! போய் தேடிப் பார்க்கலாம் என்று கிளம்பினார்.
அப்பாடா! ஸ்டேஷன்ல இருந்து கிளம்பினதில் இருந்து அவர் செய்த முதல் உருப்படியான காரியம் இதுதான். அவரும், சேகர் போலீஸும் ஒரு சைக்கிளிலும், நானும், இளங்கோவும் அவனோட சைக்கிளிலும் கிளம்பிய முதல் பத்தடியிலேயே அவர் வண்டி நின்றது. திரும்பிப் பார்த்து இளங்கோவை அழைத்தார்.
ஆமா! நீ யாரு?
இவனோட கிளாஸ் மேட் சார்!
இது உன் சைக்கிளா?
ஆமா சார்!
சரி! நீ ஏன் இவங்க கூட கணக்கு போடலை!
எனக்கு கணக்கு டெஸ்ட் இல்லை சார்! அதனால நான் அப்போ வரலை!
அப்போ! இவன் சைக்கிள் காணாமல் போவும் போது, நீ அங்க இல்லை?
எதற்கும் அசராத இளங்கோவே லேசாக ஆடிட்டான்!
டேய்! என்னை வீட்ல தேடுவாங்க! நான் போறேன்! என் சைக்கிளை நீ வச்சுக்கோ! என்று சொல்லி விட்டு சென்றான்.
எதையோ சாதித்த திருப்தியில், ஏட்டைய்யா சைக்கிள் பின்னல் உட்கார்ந்து கொண்டு புறப்பட அவருடைய சைக்கிளின் பின்னால் நான் சென்றேன். அங்குமிங்கும் அலையாமல், நேராக திருடனின் வீட்டுக்கே செல்லும் துல்லியத்துடன், ஏட்டைய்யாவின் சைக்கிள் சன்னதி தெருவில் வழியே தேரடி வீதிக்குச் சென்று, காவல் நிலையத்தையும் கடந்து திருவூடல் தெருவுக்குள் நுழைந்தது.
அந்தத் தெருவின் மத்தியில் இருந்த புகழ் பெற்ற ஸ்டார் பிரியாணி ஓட்டலில் அவர் சைக்கிள் நின்றது. பின்னாடியே சென்ற என்னைப் பார்த்து, வா! என்றபடி ஓட்டலுக்குள் சென்றார். நானும், சேகரும் (போலீஸ்காரர்) எங்கள் சைக்கிளை பூட்டிக் கொண்டு உள்ளே செல்வதற்குள், மூன்று இலை போடப் பட்டு, அதில் மட்டன் பிரியாணி வைக்கப் பட்டிருந்தது.
நல்ல பசி நேரம்! என் சைக்கிளைக் கூட கொஞ்சம் நேரம் மறந்து பிரியாணியை சாப்பிடத் துவங்கினேன். அவர்கள் ஏதேதோ கேஸ்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தவர்கள், திடீரென, ” சைக்கிளை திருடன் எடுத்துட்டு போறதைக் கூட கவனிக்காமல், இந்த பையன் கணக்குப் போடுறான். என் புள்ள என்னடா என்றால், கணக்கு புத்தகம் பக்கமே போவ மாட்டேங்கிறான். படிக்கிற பையன்னா இப்படித்தான் இருக்கணும்!” என்று என்னையும் புகழ்ந்தார்கள்.
எப்படியோ, என்னை விட இரண்டு மடங்கு அதிகம் சாப்பிட்டாலும், எனக்கு முன்னால் எழுந்து வெளியில் சென்று விட்டார்கள். பில் என்னிடம் வந்தது. அதை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தால், ஏட்டைய்யா, கேஷ் கவுண்டர் அருகில் நின்று கொண்டு பல் குத்திக் கொண்டிருந்தார்.
பில் வைத்துக் கொண்டு நின்றிருந்த என்னைப் பார்த்து தம்பி! பில் கொடுத்துரு! என்றார். பில் தொகை தொண்ணூறு ரூபாய். 1984ஆம் ஆண்டில் ஒரு மட்டன் பிரியாணி முட்டையுடன், பன்னிரெண்டு ரூபாய் என்று நினைவு.
சார்! என் கிட்ட ரூபா இல்லை!
பாய்! தம்பிகிட்ட பணம் இல்லையாம்! அப்புறமா வந்து கொடுத்துருவாரு! தம்பியை தெரியுமில்லை? என்றார் ஏட்டைய்யா.
ஏன் தெரியாம? நல்லா தெரியுமே! அதுக்கென்னப்பா! நீ அப்புறமா வந்து கொடு! என்றபடி ஒரு நோட்டைப் பிரித்து கணக்கை எழுதிக் கொண்டார்.
இப்படியாக, நான் சைக்கிளைத் தொலைத்த ஐந்து மணி நேரத்தில் ஏட்டைய்யா எனக்கு பிரியாணி வாங்கித் தந்து, பிரியாணி கடையில் எனக்கென ஒரு அக்கவுண்ட்டும் துவக்கி வைத்தார்.
அன்றைய தேடல், பிரியாணிக் கடையுடன் முடிந்து விட்டது. நீ வீட்டுக்குப் போ! அங்க இங்க அலையாதே தம்பி! யார் எடுத்துட்டுப் போயிருப்பான்னு எங்களுக்குத் தெரியும். இப்போ போனா வீட்ல இருக்க மாட்டான்! ராத்திரி போய் அள்ளிட்டு வந்திர்ரோம்! நீ போய் கணக்குப் போடு! என்று சொல்லி விட்டுச் சென்றனர்.
மறுநாள் பள்ளிக்கூட முதல் இண்டெர்வெல்லில், உடன் இளங்கோவையும் அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றேன். நான் வரலேடா! என்றான். திரும்பி வரும்போது என்னோட சைக்கிளையும் எடுத்துட்டு வரவேணாமா? வாடா! என நம்பிக்கையுடன் கிளம்பினேன்.
நேற்றுப் பார்த்த அதே இடத்தில் ஏட்டைய்யா நின்று கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். பள்ளிக்கூட யூனிஃபார்முடன் அவர் முன் சென்று நின்றவுடன், அடையாளம் கண்டு பிடிக்க சற்றுத் திணறித்தான் போனார். பிறகு, நேத்து அவன் சிக்கலப்பா! இன்னைக்கு கொண்டு வந்துடலாம். நீ ஸ்கூலுக்குப் போ! என்றார்.
எப்படியும் திரும்பி வரும்போது என்னோட சைக்கிளில்தான் வருவேன் என்று நினைத்துச் சென்றிருந்த எனக்குப் பெரிய ஏமாற்றம். என் முகவாட்டத்தைக் கண்டதாலோ, அல்லது பிரியாணி கடை திறந்து விட்டிருக்கும் என்பதாலோ, ஏட்டைய்யா மனசை மாற்றிக் கொண்டார். மீண்டும் பள்ளிக்குச் செல்லத் திரும்பும் போது, தம்பி! இரு!இரு! இப்பவே போய் பார்க்கலாம் என்றார்.
வழக்கம் போல, இளங்கோவை அனுப்பி விட்டு, இன்னொரு புதிய போலீஸ்காரரை உடன் அழைத்துக் கொண்டார். இந்த முறை நேராக மண்டித் தெருவில் நுழைந்து கல்நகர், சமுத்திரம் காலனி வழியே காமராஜர் சிலைக்கு வந்து சேர்ந்தோம். வழியில் அங்கங்கே நிறுத்தி யாரையாவது அழைத்து ஏதோ விசாரிப்பார். பின்பு அங்கிருந்து நேராக புறப்பட்டு ஸ்டார் பிரியாணி ஹோட்டல்.
பள்ளிக்கூட மாணவனாக இருந்தாலும் கூட, கையில் பணப்புழக்கத்துக்கு ஒன்றும் பஞ்சமில்லாத காலம் அது. தினமும் இருபது ரூபாய் எங்க பஸ் கம்பெனி கணக்கில் இருந்து நான் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப் பட்டிருந்தேன். அந்தப் பணம் நண்பர்கள் நான்கு பேர் அருணா ரெஸ்டாரண்டில் மசாலா தோசை சாப்பிடும் அளவுக்கு போதுமாயிருந்தது. சைக்கிள் தொலைந்ததில் இருந்து என்னுடைய தினப்படி நேராக ஸ்டார் ஹோட்டலுக்குச் சென்று கொண்டிருந்தது.
ஒரு வாரம் கழிந்த பின்பு, ஸ்டார் ஹோட்டலில் எனது கணக்கில் 400 ரூபாய் பாக்கி இருந்தது. இன்னும் 400 ரூபாய் போட்டால், புது சைக்கிளே வாங்கி விடலாம். இனியும், தண்ட செலவு செய்யாதே என்று நண்பர்கள் கண்டிப்பாக சொல்லி விட்டார்கள். மனசு களவு போன எனது சைக்கிள் பின்னாலேயே இருந்தாலும், உண்மை நிலையை உணர்ந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்வதை நிறுத்தியிருந்தேன்.
ஏதோ ஒரு நாளில், ஹெட்மாஸ்டர் அழைப்பதாக எனது வகுப்பறைக்கு ஹெச்.எம் பியூன் சாலமன் வந்தார். எதற்கு எனத் தெரியாமல் குழப்பமாக ஹெட்மாஸ்டர் அறைக்குச் சென்றால், அங்கு ஏட்டைய்யாவும் சேகர் போலிஸ்காரரும் சிரித்தபடி அமர்ந்திருந்தனர். அருள்தாஸ் சார்தான் ஹெட்மாஸ்டர். மிகவும் அமைதியான சுபாவம் கொண்ட அவர், போலீஸ்காரர்கள் முன்னாடி பதட்டத்துடன் உட்கார்ந்திருந்தார்.
உன்னைப் பார்க்கத்தான் வந்திருக்காங்க! என்றார் கோபமாக.
நான் ஏட்டையாவை பரிதாபமாகப் பார்த்தேன்.
என்ன தம்பி! அப்புறம் ஸ்டேஷன் பக்கம் ஆளையேக் காணோம்? நான் தினமும் உன்னோட கேஸைத்தான் பார்த்துட்டு இருக்கேன். ஒரு துப்பு கிடைச்சுருக்கு! கொஞ்சம் வரியா? போய் பார்த்துட்டு வந்துடலாம்! என்றார்.
நான் கைகடிகாரத்தைப் பார்த்தேன். சரியாக மதியம் 12.00. ஸ்டார் ஹோட்டல் திறந்து விட்டிருப்பார்கள். ஹெச்எம் என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்க, நான் அமைதியாக பலியாடு போல அவர்களுடன் வெளியே சென்றேன்.
இந்த முறை எங்களின் தேடல், புதுத் தெருவில் ஆரம்பித்து, அப்படியே விக்டோரியா பள்ளிக் கூடம் வழியாக பெரியத் தெரு மேட்டுக்கு வந்து, வழக்கம் போல ஸ்டார் ஹோட்டலுக்கு வந்து முடிவடைந்தது. நடுவில் ஆங்காங்கே விசாரணைகள். இதற்கிடையே என்னுடைய சைக்கிள் காணாமல் போய் விட்டது என்பதும், அது ஒரு நீலக் கலர் சைக்கிள் என்பதும், அந்த சைக்கிள் சக்கரத்தில் கலர்கலராக மணிகள் கோர்த்திருக்கும் என்பதும் எங்கள் ஊருக்கே தெரிந்து விட்டது.
இதற்கிடையே எனக்கும், ஏட்டைய்யாவுக்கும் இடையே ஒரு விநோதமான நட்பு உருவாகி விட்டிருந்தது. பின்னாளில், அந்த நட்பைதான் ‘ஸ்டாக்ஹோம் ஸிண்ட்ரோம்’ (Stockholm Syndrome) என்று பெயரிட்டு அழைத்தது இந்த சமூகம். ஒரு சமயம் என்னை அவருடைய வீட்டுக்குக்கூட அழைத்துச் சென்று, அவர் மனைவியிடம் அறிமுகம் செய்து வைத்தார். சில சமயங்களில் அங்கேயே காஃபி சாப்பிட்டு விட்டு எங்கள் தேடலைத் தொடருவோம்.
மிகவும் அமைதியான ஊர் எங்கள் ஊர். ஆனால்,ரஜினி படமும், டி.ராஜேந்தர் படமும் ரிலீஸ் ஆகும் அன்றைக்கு மட்டும், நிச்சயம் எங்கள் ஊர் தியேட்டர்களில் லேசான தடியடிப் பிரயோகம் நடக்கும். எனக்கு அந்தக் கவலையெல்லாம் கிடையாது. ஏட்டைய்யாவுடன் நான் தியேட்டருக்குச் செல்ல, அங்கிருக்கும் போலீஸ்காரர்கள் கூட்டத்தை ஒதுக்கி வழி விடச் செய்ய, மெல்ல இருபுறமும் தலையசைத்துப் பார்த்தபடி உள்ளே நுழைந்து சினிமா பார்த்த அந்தக் காலம்தான் எனது வாழ்வின் வசந்த காலம்.
மாலை வேளைகளில், மெட்ராஸ் டீக்கடையில் ஏட்டைய்யாவுடன் எனது நண்பர்களுடன் டீ சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வேளைகளில், பெரும்பாலான உரையாடல்கள் இப்படித்தான் இருக்கும்.
நம்ம ஊரில் சட்டம் ஒழுங்கே சரியில்லை ஏட்டைய்யா? என்பான் இளங்கோ.
ஏன் இளங்கோ? ஏன் இப்படி சொல்றே?
பின்ன என்ன ஏட்டைய்யா? பயாலஜி ரெக்கார்ட் முழுசா எழுதித் தந்தாதான் மார்க் கொடுப்பேன் சொல்லிட்டாங்க! அதில ஏகப்பட்ட படம் வேற வரைய வேண்டியிருக்கு! நான் படம் வரையறதா? இல்லை! உங்ககூட வந்து இவன் சைக்கிளைத் தேடறதா?
ஏம்பா! இதுக்குப் போயா கவலைப் படுவாங்க! நாளைக்கு வந்து உங்க வாத்தியாருகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போறேன். சரியா?
என்னமோ ஏட்டைய்யா! எனக்கு ஃபுல் மார்க் கிடைக்க வேண்டியது உங்கப் பொறுப்பு!
அதை நான் பாத்துக்கிறேன் தம்பி! நீ ஒண்ணுக்கும் கவலைப் படாதே!
மறுநாள், பயலாஜி டீச்சர் என்னை ஸ்டாஃப் ரூமுக்கு அழைத்ததாக ஒரு பையன் வந்து சொன்னான். கோபம் வந்தால், பிரம்பை எடுத்து கண்டபடி அடிப்பதில் பிரபலமானவர் அவர். ஏட்டைய்யா ஏதாவது சொல்லி குழப்பி வச்சுருக்காரோ என்று யோசித்தபடி சென்றேன். என்னை உள்ளே வரும்படி அழைத்தார். அப்போது அங்கு வேறு யாரும் இல்லை.
டேய்! போன வாரம் எங்க வீட்டு ஜன்னலோரம் கழற்றி வச்ச என்னோட கம்மலை காணோம்டா! ரெண்டு கம்மல்! மொத்தம் நாலு பவுனு! சார்கிட்ட (அவங்க வீட்டுக்காரர்) போய் போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் கொடுங்கன்னு சொன்னால், போலீஸ் ஸ்டேஷன் போகவே பயப்படுறாருடா! உனக்குதான் போலீஸ் எல்லாம் ஃப்ரெண்டாமே? நீ கொஞ்சம் சொல்லி கண்டுபிடிச்சுக் கொடுக்க சொல்றியா?!!
சைக்கிள் காணமல் போனதில் இருந்து எனது வாழ்க்கை மாறி விட்டிருந்தது.
வீட்டுக்கும், பள்ளிக்கும் இடையே சரிபாதியில் போலீஸ் ஸ்டேஷன். போகும் போது ஒரு முறை, வரும் போது ஒரு முறை என்று உள்ளே ஒரு விசிட் அடித்து விட்டு வருவது வழக்கமாகப் போயிற்று. இதில் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் பாதி நாள் ஸ்டேஷனுக்குள்ளேதான். ஏட்டைய்யாவின் நாற்காலிக்கு அருகில் எனக்கென தனியாக ஒரு ஸ்டூல் போடப் பட்டாயிற்று. போலீஸ் ஸ்டேஷன் நடைமுறைகள் மெல்ல பரிச்சயமாகத் துவங்கியது.
அமைதியாக இருக்கும் காவல் நிலையம். திடீரென்று ஒரு கும்பல் ஓடி வந்து சப்தமிடும். ஒரு பெண்மணி தலையை விரித்துப் போட்டுக் கொண்டு அழுவாள். இரத்தக் காயத்துடன் ஒருவன் சைக்கிளில் வந்து இறங்குவான். அவனை ஆஸ்பிட்டலுக்கு ஏற்றி அனுப்பிய சற்று நேரத்தில், கையில் அரிவாளுடன் அவனை வெட்டியவன் வந்து சேர்வான். யாரும் எங்கும் நகராமல், உட்கார்ந்த இடத்தில் கேஸ் முடிந்து விடும். சில நிமிடங்களில், காவல் நிலையம் மீண்டும் அமைதியாகி விடும்.
யாருக்கு எங்கே ட்யூட்டி! நகரத்தில் எங்கு, எப்போது கூட்டங்கள், ஊர்வலங்கள் நடக்கின்றன! எல்லாம் எனக்கு அத்துப்படியாகி இருந்தது. பல நேரங்களில் கட்சிக்காரர்களின் பொதுக்கூட்ட அனுமதிக் கடிதங்கள் எல்லாம் என்னைத்தான் எழுதித் தரச் சொல்வார்கள். நானும் எழுதி, அப்படியே ஸ்டேஷன் நோட்டில் குறித்துக் கொண்டு, சென்ற முறை எந்தக் கட்சிக்கு எந்த இடத்தில் கூட்டம் நடத்த அனுமதித் தரப் பட்டிருந்தது என்ற குறிப்பினையும் எழுதி வைப்பேன்.
புகார் மனு எழுதத் துவங்கி, விசாரணையின் போது ஸ்டேட்மெண்ட் எழுதுவது வரை தேர்ச்சி பெற்றிருந்தேன். போலீஸ் ஸ்டேஷனில் ஒரு அங்கமாகவே மாறி விட்டிருந்த என்னை எப்படி இன்ஸ்பெக்டரும் மற்ற அதிகாரிகளும் கண்டு கொள்ளாமலே விட்டிருந்தார்கள் என்பது இப்போது வரை ஒரு புதிர்தான். ஆனால், பரபரப்பற்ற அமைதியான ஒரு சின்ன நகரத்தில் எதுவுமே சாத்தியம்தான்.
போலீஸ் ஸ்டேஷனுடனான என்னுடைய தேனிலவு முடிவுக்கு வரும் காலம் வந்தது. என்னை அடிக்கடி ஏட்டைய்யாவிடம் சுற்றுவதைப் பார்த்த எனது அண்ணனின் நண்பர்கள் அவரிடம் சொல்லி விட, என்னை அழைத்து போலீஸ் ஸ்டேஷன்ல என்னடா வேலை? என்றார். எனது சைக்கிள் காணாமல் போய் விட்டதை அவரிடம் சொன்னேன். அவர், இன்ஸ்பெக்டரை அழைத்து விஷயத்தை சொன்னவுடன், அடுத்த நாள் என்னை வந்து பார்க்க சொல்லியிருந்தார். நானும் மறுநாள் இன்ஸ்பெக்டர் அறைக்குச் சென்றேன்.
இன்ஸ்பெக்டர் அவருடைய அறையில் இல்லை. சற்று நேரம் காத்திருந்து பார்த்து விட்டு, வழக்கம்போல ஏட்டைய்யாவின் அருகில் இருக்கும் என்னுடைய இருக்கைக்குப் போய் விட்டேன். சற்று நேரத்தில் அழைப்பு மணிச் சத்தம்.
உள்ளே சென்று பார்த்தால், இன்ஸ்பெக்டர் கையில் என்னுடைய மேத்ஸ் நோட் புக். அவரோட மேசையிலேயே வைத்து விட்டு வந்து விட்டேன் போலிருக்கு.
என்னை உட்காரச் சொன்னவர், ஏட்டைய்யாவை மணியடித்து அழைத்தார். உள்ளே வந்து பெரிய சல்யூட் அடித்த ஏட்டைய்யாவிடம் என் நோட்டை காண்பித்து
என்ன இது? என்றார்.
ஏட்டைய்யாவுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பின்பு, சுதாரித்துக் கொண்டு தம்பியோட நோட்டுபுக்கு சார்!
அது தெரியுது! இது என்ன? என்று எனது நோட்டின் கடைசிப் பக்கத்தைக் காண்பித்தார்.
அதைப் பார்த்து நான் அதிர்ந்து போனேன். அங்குதான், நான் என்னுடைய செலவுக் கணக்கை எழுதி வைத்திருந்தேன்.
ஏட்டைய்யா தன்னிடம் நீட்டப்பட்ட நோட்டை வாங்கிப் பார்த்தார். அதில், அட்டவணை வடிவில், அழகாகக் கோடு போட்டு எனது செலவுக் கணக்கை எழுதியிருந்தேன். அந்தக் கணக்கு முதல் நாள் ஏட்டைய்யாவுக்கு ஸ்டார் ஹோட்டல் பிரியாணி வாங்கித் தந்ததில் துவங்கியிருந்தது.
படிக்க, படிக்க ஏட்டைய்யாவுக்கு வியர்த்துக் கொட்டத் துவங்கியது. பிரியாணி கணக்கு முதல் டீக் கடை கணக்கு வரை, தேதி, நேரம், உடன் வந்த போலீஸ்காரர் பெயர் வரை எனது அழகான கையெழுத்தில் பதியப் பட்டிருந்தது. தமிழகக் காவல் துறை வரலாற்றில், இது போன்றதொரு முத்தான எவிடென்ஸ் இதற்கு முன்பு எப்போதும், யாருக்கும் கிடைத்ததில்லை.
ஏட்டைய்யா பரிதாபமாக என்னைப் பார்த்தார். சத்தியமா, நான் என்னோட செலவுக் கணக்குக்காகத்தான் எழுதி வச்சிருக்கேன். அது என்னோட பழக்கம்! என்பதை நான் எப்படி அவருக்குச் சொல்வது? அதுவும் கண்களிலேயே?
ஆக, ஒரு ஸ்கூல் பையனிடம், மாசக்கணக்கிலே பிரியாணி வாங்கித் தின்னிருக்க? கொஞ்சம் கூட வெட்கமா இல்லையா உனக்கு? இன்ஸ்பெக்டர் திட்ட ஆரம்பித்தார். ஏட்டைய்யாவுக்கு அடுத்த பல நிமிடங்களுக்கு இடைவெளி இல்லாமல் திட்டு விழுந்தது. எதிரில் அமைதியாக தலைக்குனிந்தபடி அமர்ந்திருந்த என்னை ஒரு வார்த்தைக் கூட கேட்கவில்லை. எனக்கும் அவரிடம் சொல்ல எதுவும் இல்லை.
எல்லாம் முடிந்து, இன்ஸ்பெக்டர் என்னை ஸ்டேஷனில் பின்புறம் அழைத்துச் சென்றார். உடன் ஏட்டைய்யாவும்! ஒரு போலீஸ்காரரை அழைத்து அங்கே மூடப்பட்டிருந்த பெரிய தார்பாலின் போர்வையை விலக்கச் சொன்னார். விலக்கினால், அங்கே சிறியதும் பெரியதுமாய், புதுசும் பழசுமாய் பல நூறு சைக்கிள்கள் நிறுத்தப் பட்டிருந்தன.
இதிலே உன்னோட சைக்கிள் இருக்கா? பார்த்து சொல்! என்றார் இன்ஸ்பெக்டர்.
பொறுமையாக, ஒவ்வொரு வரிசையாகப் பார்த்தேன்! எதிலும் என்னோட சைக்கிள் இல்லை!
இல்லை சார்! என்றேன்.
இன்ஸ்பெக்டரே மறுபடியும் ஒரு முறை பார்த்தார். பிறகு, உள்ளே ஒரு வரிசையில் இருந்து ஒரு சைக்கிளை வெளியே எடுக்கச் சொன்னார். எடுத்து, அதை துடைத்துப் பார்த்தப் பின்புத் தெரிந்தது அது ஒரு புத்தம் புதிய ஹீரோ சைக்கிள்.
உன்னோட சைக்கிள் கிடைக்கும் வரை, நீ இந்த சைக்கிளை வச்சுக்கோ! என்றார் இன்ஸ்பெக்டர்.
ஏட்டைய்யாவைப் பார்த்தேன். இப்போது அவர் தனது கண்களிலேயே தயவு செய்து அந்த சைக்கிளை எடுத்துக்கோ என்று கெஞ்சினார்.
நான் புரியாமல் இன்ஸ்பெக்டரைப் பார்த்தேன்.
பரவாயில்லை! உன்னோட சைக்கிள் கிடைச்சாலும், இதை நீயே வச்சுக்கலாம் என்றார் இன்ஸ்பெக்டர்.
அப்புறம் என்ன ஆச்சு? எங்கேடா அந்த சைக்கிள்? என்றான் இளங்கோ.
திடீர்னு ஒரு புது சைக்கிளை கொடுத்து எடுத்துக்கோன்னு சொன்னவுடன், எனக்கு ஒண்ணும் புரியலைடா! அப்புறமா வரேன் சார்னு சொல்லிட்டு வந்துட்டேன்! எனக்கென்னமோ அது சரியாப் படலை! திருட்டு சைக்கிளை வாங்கிட்டு வந்துருக்கேன்னு தெரிஞ்சா வீட்டில பின்னிடுவாங்க!
போடாங்க! வாங்கிட்டு வந்து வேற யாருக்காவது கொடுத்திருக்கலாமே? அட! அந்த சைக்கிளை வித்துட்டு, உனக்கு வேற ஒரு புது சைக்கிள் வாங்கியிருக்கலாமே? ஏண்டா வேணாம்னு வந்துட்டே?
இன்ஸ்பெக்டர் கொடுத்த அந்த சைக்கிளை ஏன் நான் வாங்க மறுத்து விட்டேன் என்பதற்கு அன்று என்னிடம் சரியான விடையில்லை! ஆனால், நிச்சயம் என்னுடைய அந்த முடிவுக்கும், பிரியாணிக்கும் ஏதோ சம்பந்தம் இருந்திருக்கும் என இப்போது தோன்றுகிறது.
– ஜனவரி 2014