(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மாடித் தாழ்வாரத்தில் கிடந்த சசி சேரில் சாய்ந்து கிடந்தார், பண வீக்கம் என்று பட்டப் பெயர்பெற்ற பிரமநாயகம் பிள்ளை. அவர் சிந்தனையிலே ஆழ்ந்திருந்தார்.
காபி டம்ளரைக் கையிலேந்தியபடியே வந்து சேர்ந்தாள் பர்வதம்மாள்-அவரின் தர்ம பத்தினி!
“ஏனுங்க! இப்படி முகம் வாடிக் கிடக்கிறீங்க!” என்ன யோசிக்கிறீங்க! என்று வழக்கமான கேள்வியின் மூலம், அன்றைய பேச்சைத் தொடங்கி வைத்தாள்!
“என்னடி, பர்வதம் நான் என்ன செய்வதென்று புரியாமல்தான் முழிக்கிறேன். யோசித்து யோசித்துப் பார்க் கிறேன். ஒரு வழியும் தோண மாட்டேன்குது” என்றார் பிரமநாயகம்.
“என்ன அப்படி வராத சங்கடம் வந்து வாட்டுது!” அவள் கேட்டாள் இப்படி, அடுத்தபடியாக! –
“உன்னிடம் சொன்னேனே. . . நான் ஒரு முட்டாள் – நீ படியாத பட்டிக்காட்டு மாடு! மனுசன் எக்கச்சக்கத்திலே மாட்டிகிட் டுத் தவிக்கிறான். . . என்ன சங்கடம் வந்துட்டுதுன்னு கொஞ்சுறாள் குழையறாள்.’
“ஆமாண்டி, ஆமாம்! வாயை மூடு…எவனாவது கேட்டுக்கிட்டே வரப் போகிறான்!” என்று அதட்டி மனைவியின் ஓட்டை வாய்க்கு மூடிபோட்டார்.
“அம்மா… அம்மா!” என்று கீழிருந்து குரல் வந்தது.
“சரி, குழந்தை கோமளம் பள்ளிக்கூடம் விட்டு வந்து விட்டாள், நான் போய் காபிக் கொடுக்கிறேன்” என்று கூறிக் கொண்டே மாடிப் படிகளில் வேகமாக இறங்கிச் சென்றாள் பர்வதம்மாள்.
பிரமநாயகம், ஊரிலேயே முதல் பணக்காரர். பெரிய நூலாலைக்குச் சொந்தக்காரர். பர்வத மில்ஸ் என்றால் அந்தப் பகுதியில் பேர் வாங்கிய மில்! அவருக்கு அந்த ஆண்டு கிடைத்த இலாபம் அதிகம் – ஆகவே வேலை செய்த கூலிகள், கூலியை உயர்த்தியும் போனஸ் வேறு தர வேண்டும் என்றும் கேட்டு விட் உார்கள்! கூலியும் உயர்த்தாமல், ஆலையும் ஓடச் செய்ய வேண்டும் என்பது அவரது திட்டம். மில் தொழிலாளிகளின் மிரட்டலிலிருந்து தப்புவிக்க வழி என்னவென்று சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்பொழுதுதான் அவர் மனைவி இடை விடையே வந்து அவருக்கு இருக்கும் வேதனையை அதிகப் படுத்தி விட்டுச் சென்றாள்.
அப்பா மாடியிலிருக்கிறார் என்றறிந்த கோமளம், காபியைப் பாதி குடித்து விட்டு ஓடிவந்தாள். தந்தையைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
“அப்பா, அடுத்த வாரம் காங்கிரஸ் தலைவர் எங்க பள்ளிக் கூடத்திற்கு வறாராம்! வந்தால் நம்ம வீட்டிலேதானே தங்குவார்!”
“ஏம்மா!”
“நீங்கதானே நகரக் கமிட்டித் தலைவர்-அப்படியானால் இங்கேதானே தங்குவார்.”
“ஆமாம்.”
“முதல்லேயெல்லாம், நீங்க காங்கிரசைத் திட்டுவீங் களப்பா!”
“இல்லையே, யாரம்மா அப்படி சொன்னா…”
‘எங்கூடப் படிக்கிறானே சோமு அவன் சொல்றான் அப்பா!”
“அந்தக் காலிப்பய மகன் அப்படித்தான் சொல்வான்.”
“ஆமாப்பா, இது மட்டுமில்லே இன்னும் என்னென்னவோ சொல்றான், அந்தக் கருப்புக்கட்சிக்கார மகன்! நீங்க போன வருசந்தான் இதிலே சேர்ந்தீங்களாம்… எல்லாரையும் ஏமாத்த இது ஒரு வழியாம். மில் தொழிலாளிகளுக்குக் கூலி கூடச் சரியாக கொடுப்பதில்லையாம். நீங்க அட்டையாம் – ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சிடு வீங்களாம். பணத்தை மூட்டை மூட்டையாக்க கட்டி வைச்சிருக்கீங்களாம்!” கோமளம் சிறு பெண் இருந்தாலும் கொஞ்சம் துருதுருத்தவள். வெடுக் வெடுக்கென்று பேசுவாள் தன் பள்ளித் தோழன் சோமு சொன்னதையெல்லாம் ஒரு மூச்சு சொல்லி முடித்தாள் தன் தந்தையிடம்! அவருக்கு பெரிய தலைவேதனையாகப் போய்விட்டது!
“போய் விளையாடம்மா” எனக் கூறி வெளியில் அனுப்ப முயற்சி செய்தார். அவள் அடம் பிடித்தாள். அங்கேயே விளையாடுவதாக ஓட்டம் செய்தாள்! அதட்டிக் கொண்டு வந்த பர்வதம்மாளின் குரலைக் கேட்டு பயந்து நடுங்கி ஓட வழிபார்த்து. பர்வதத்தின் குரலைக் கேட்டால் பிரமநாயகமே மிரண்டு விடுவார் என்றால், ‘துளிர்’ என்ன செய்யும் ?
வெளியில் சென்று விளையாடிக் கொண்டிருந்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் மீண்டும் மாடிக்கு வந்தாள்.
சனியன், எங்கே வந்தே திரும்பபோய் விளையாடென்றால் உள்ளே வந்து தொல்லை பண்றியே!” குமுறி விழுந்தார்.
“அப்பா, நானா வரல்லே, காங்கிரசு கமிட்டிக் காரியதரிசி கன்னியப்பன் அவர் உங்களைப் பார்க்கணுமாம்!”
“போய் வரச் சொல், மாடிக்கு!” மங்களம் ஓடினாள். கன்னியப்பன் மாடிப்படி ஏறினான். “வந்தே மாதரம்!”
“நல்லா வந்தீங்க நல்லா ஏமாத்துங்க!”
“ஏன் அவ்வளவு சலிப்பு என்றைக்குமில்லாத கோபம்! என்மேல் சொல்லுங்க!”
“காங்கிரசிலே சேர்ந்துட்டா மலையை புரட்டுவோம் – வானத்தை அளக்கலாம் மணலைத் திரிக்கலாம் – உலகத்தையே அடக்கிடலாம்னு சொன்னிங்க!”
“மன்னிக்க வேண்டும்! காங்கிரசுக்கு எதிரா நின்னு ஒரு முனிசிபால் கவுன்சிலர் பதவிக்கு வரத் ததிங்கிணத்தோம் போட்டீங்க!”
“கொஞ்சம் வாயை அடக்கித்தான் பேசும்.”
“காங்கிரசிலே சேர்ந்தீங்க, கட்சி போர்டு மெம்பர்…பார்லிமெண்ட மெம்பரும் ஆயிட்டிங்க!”
“சும்மா, கிடைத்துடலை, தம்பி, என் வீட்டுப் பணம் எழுபதாயிரம்!”
“இருக்கட்டுமே! இதிலே சேராமல் இந்தப் பணத்தைச் செலவு செஞ்சாலும் இந்தப் பதவியை அடைய முடியாதே!”
“கொசு செய்கிற வேலை, உங்க காங்கிரசாலே கூட முடியாது ஓய்! உம்மைக் கண்டால் உங்க காங்கிரசும் வாயைப் பிளந்து கிட்டுது!”
“சேர்ந்து ஒரு வருசத்திலே உங்களைப் பார்லிமெண்ட் மெம்பர் ஆக்கியிருக்கு – மறக்க வேண்டாம்!”
“சரி, அது தொலையட்டும் – இப்போ எங்கே வந்தீங்க?” என்று பிரமநாயகம், பேச்சை வேறு பக்கம் திருப்பினார்.
“வந்ததை மறந்துவிட்டு வீண் வார்த்தையாடி விட்டேன். நம் காங்கிரசுத் தலைவர் நம்ம ஊருக்கு வருவதாக எழுதி யிருக்கிறார். எலக்ஷன் நெருங்கிடுச்சில்லே! இனிமேல் சுற்றுப் பிரயாணமும் கூட்டமும். மாநாடும் போட்டுத்தானே ஆகணும்!”
“ஆமாம், அதற்கு!”
“இங்கே, ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யலாம்னு இருக்கேன் உங்க தலைமையில்.”
“ஆமாம், அவர்தான்-உங்க தலைவர் ஊருக்கு ஊர். பணக்காரன்களை என் உயிர் உள்ளளவும் காங்கிரசிலே சேரவிடமாட்டேன்னு பேசுகிறாராம், நான் தலைமை வகித்தால் ஊர் மக்கள் சிரிக்காரோ!”
“இன்னும் உங்களுக்கு அனுபவம் போதல்லேன்னுதான் சொல்லுவேன் – ஊர் மக்களுக்கு அப்படித்தான்னே பேசணும். நீங்க பேசினாலும் வேறு எப்படிப் பேசுவீங்க? அடுத்த தேர்தலுக்கு இப்பொழுதிருந்தே ஆயத்தம் செய்து வந்தால்தான் ஏதோ நடக்கும். பழைய நிலைமைப் போயிடுத்து. ஓட்டுரிமையும் அதிக அளவு பண்ணியாச்சு! பணங் கொடுத்தும் கட்டாது! ஜனங்கோ முழிச்சிக்கிட்டாங்க. காங்கிரசோ விநாடிக்கு விநாடி இடியும் அடியும் நோங்கி சரிந்து விழும் பாழ்மண்டபம் போலிருக்கு! அடுத்தபடி தேர்தலுக்கு நிக்கப் போறவங்க நீங்க – ஏழைக் கன்னியப்பன் எண்ணைக்கும் கொடி தூக்குவான்! வயிறு வலிக்கக் கூவுவான்! அதனால்தான் சொல்றேன்!”
“சரி, கிடக்குது குப்பை-தள்ளு! அவர் வந்தால், இந்த மில்லிலே தொழிலாளிகள் கூடிக்கிட்டு தொல்லை கொடுக்கிறானு கில்லே, அதைக் கொஞ்சம் காரசாரமாகப் பேசணுமின்னு சொல்லி வை! நானே சொல்றது அவ்வளவு நல்லாயில்லே! கொஞ்சம் நீதானே சொல்லி வை! பயல்களைக் கொஞ்சம் பயப்படுத்தி வைத்தால்தான் நல்லது! இருக்கவே இருக்குது எல்லாம் கம்யூனிஸ்டுகளின் குறும்புன்னு சொல்லேன்.”
“இந்தச் சீட்டைக் கொடுத்துக் கேசியரிடம் ரூ. 200 வாங்கிக் கொள்ளுங்க ஆகவேண்டியதைச் செய்யுங்க! அண்ணைக்கு நம்ம கார் வேலை செய்யும். சாப்பாட்டிற்கு, தங்குவதற்கு நம்ம வீட்டி லேயே ஏற்பாடு பண்ணிப்பிடுவம்” என்று பிரமநாயகம் அடுக்கிக்கொண்டே போனார். கன்னியப்பன் முப்பத்திரண்டு பற்களும் தெரியக் காட்டினான்!
கன்னியப்பன் சென்றவு டன் பர்வதம்மாள் மீண்டும் வந்தாள்!
“பார்த்தியாடி…பணம் பேசுற பேச்சை! போகப் போகிறது நம்ம கார், கூட்டத்திற்குச் செலவுக்கு நம்ம பணம், விருந்து சாப்பாடும், திண்டு மெத்தையோடே படுக்கை நம்ம வீட்டிலே, தலைமை வகிக்கிறது நான், பேசப் போகிற தலைவர் சொல்லி வருவது பணக்காரர்களை நுழைய விடமாட்டேன் என்ற சவடால்! உண்மையில் என் மில்லிலே வேலை செய்கிறவன்களைக் கண்டித்துப் பேசப் போகிறார்! ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி கண்ணே . . ன்னு சொல்வாங்கல்லே, அப்படித்தான் இந்தக் கதையும்!”
பிரமநாயகம் சிரித்தார். சிரிக்காமல் என்ன செய்வார்? பர்வதம் ஒன்றும் புரியாமல் விழித்தாள் – நாமுந்தான் விழிக்கிறோம். புரியாமலல்ல, புரிவதால், தெளிவாகத் தெரிவதால், ஆச்சர்யம் அகல விரிக்கிறது நம் விழிகளை!
– 02.07.1950, திராவிடநாடு.