கார்த்திக் வழக்கமாகச் செல்கிற அதே வழியில் தான் அன்றைக்கும் சென்று கொண்டிருந்தான்.
இன்னும் ஒரு மாதத்திற்குத்தான்.
அதன் பிறகு அவன் வேலை எங்கே எப்படி விதிக்கப்பட்டிருக்கிறதோ?
அவன் வேலை செய்கிற ஸ்டார் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை அடைய இன்னும் இரண்டு புளோக்குகளுக்குள் புகுந்து பேருந்து நிறுத்தத்தில் சற்று நின்று திரும்பிப் பார்த்துவிட்டுச் சாலையைக் கடக்க வேண்டும்.
‘புளோக்’குகளுக்கிடையே இருந்த முதியோர் உடற்பயிற்சி செய்கிற இடத்தில் பெரிசுகள் சிலர் கைகளைக் கால்களை நீட்டி மடக்கித் தங்கள் வாழ்நாளைக் கூட்டிக்கொண்டிருந்தார்கள்.
அங்கே ஒரு பலாமரம் உடம்பெங்கும் சிறிதும் பெரிதுமான காய்களுடன் சீனர்களைப் போலவே குள்ளமாக நின்று கொண்டிருந்தது.
கைக்கு எட்டுகிற தூரம்தான் என்றாலும் பலாக்காய்களை யாரும் பறிப்பதில்லை. பலா மட்டுமில்லை. வேறு எந்த மரமாக இருந்தாலும் அப்படித்தான். ஒருவேளை டுரியான் பழமாக இருந்தால் விட்டுவைக்க மாட்டார்களோ என்னவோ?
பக்கத்தில் இருந்த அந்த ‘புளோக்’கைச் சுற்றிலும் மாமரங்கள் நின்று கொண்டிருந்தன. அவற்றிலும் மாங்காய்கள் அங்கங்கே தொங்கிக் கொண்டிருந்தன. தரையிலும் சில விழுந்து கிடந்தன.
அவ்வழியே போகிறவர்கள் அவற்றை எடுக்கவோ அல்லது மரத்தைச் சற்று நின்று அண்ணாந்து பார்க்கவோ செய்யாமல் கடமையே என்று சென்று கொண்டிருப்பார்கள். அதெல்லாம் கார்த்திக்கிற்கு ஆச்சரியமாகவே இருக்கும்.
‘சிங்கப்பூரர்களின் பழக்கம்’ என்று பலரிடம் பெருமைப்பட்டிருக்கிறான். அவனுக்கும் அவர்களின் பழக்கம் தொற்றிக் கொண்டிருந்தாலும் அவற்றைக் கடக்கிற போது ஏற்படுகிற ஆச்சரியம் மட்டும் இன்னும் வற்றிப் போகாமலே இருந்தது.
அவன் ஆச்சரியப்பட்டுக் கொண்டே கண்களில் வடிகிற தூக்கத்தோடு நிறுவனத்தை அடைந்தான். அவன் தூக்கத்திற்குக் காரணம் அன்றைக்கு அதிகாலை அவன் கண்விழித்துப் பார்த்த கால்பந்து அரையிறுதி ஆட்டம்.
அவனுடைய ‘பேவரிட் டீம்’ நன்றாக ஆடியும் தோற்று போனார்களே என்று வருத்தமாகவே இருந்தது அவனுக்கு.
அவன் வேலையிடத்தை அடைந்த போது உடன் வேலை பார்க்கிற பேட்ரிக், ரமேஷ், சில்வியா ஏற்கனவே வந்திருந்தார்கள். இன்னும் சிலர் வந்து கொண்டிருந்தார்கள். சீன முதலாளி கம்பெனியை மூடப்போகிறான். நஷ்டம் வந்து விட்டதாம். ஓரிருவரை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு நாள் குறித்து வேறு வேலை தேடிக் கொள்ளச் சொல்லிவிட்டான்.
சில்வியா ஏற்கனெவே பகுதிநேர வீட்டு முகவர். இனி முழு நேரமாகச் செயல் படப் போகிறாளாம். அதற்குப் பரிட்சை எழுதப் போகிறாளாம். கார்த்திக்கையும் ரமேசையும் அவள்தான் வீட்டு முகவர் ஆகலாமே என்றாள்.
சின்சியரா உழைக்கணும்; ஒரு வீடு முடிச்சுக் கொடுத்தாலே சுளையாப் பணம் பாக்கலாம் என்று ஆசை காட்டினாள்.
அவள் சொல்லச் சொல்ல கார்த்திக்கும் வாரம் ஒரு வீடு முடித்துப் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுவது போலக் கனவு கண்டு மகிழ்ந்து போனான்.
ஆனால் உண்மையில் அப்படியில்லை என்பதை கடந்த மூன்று வாரங்களில் அவன் அனுபவித்துப் புரிந்து கொண்டிருக்கிறான்.
சென்ற மாதம் அவன் நண்பன் நடேசன் தான் இந்தியா சென்று செட்டில் ஆகப் போவதால் தன் வீட்டை வாடகைக்கு விடும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்துச் சென்றிருக்கிறான். ஏஜெண்டுக் கமிசனையும் மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லிச் சென்றிருக்கிறான். முதல் போனியே சுளையாக 2000 வெள்ளி கிடைக்கப் போகிறது என்ற நினைப்பு அவனுக்குச் சந்தோசம் தருவதாக இருந்தது. சில்வியாவின் நிறுவனத்திலேயே அவனையும் முகவராகப் பதிவு செய்து கொண்டான்.
சீக்கிரமே அதற்கான பரிட்சையையும் எழுதிவிட வேண்டும் என்று மனம் கணக்குப் போட்டது.
எப்படி விளம்பரம் கொடுப்பது, என்ன என்ன படிவங்கள் வேண்டும், எல்லாம் சில்வியா சொல்லிக் கொடுத்தாள். விளம்பரத்தில் ‘நோ கோ புரோக்’ என்று போட்டுவிடு. வாடகைக்கு எடுக்கிறவனுடைய கமிசனையும் சேர்த்து உனக்கு நாலாயிரம் கிடைக்கும் என்றாள். அவளுக்கும் அதில் ஏதாவது தரலாம் என்று தோன்றியது.
சனிக்கிழமை காலைப் பேப்பரில் விளம்பரம் சொன்னபடியே வந்திருந்தது.
காலை எட்டுமணி இருக்கும்,
முதல் அழைப்பு வந்தது.
என்ன வாடகை? நெகோசியப்ளா? எத்தனை அறைகள்?, பர்னிஸ்டா? எம்மார்ட்டி பக்கமா? எப்போது பார்க்கலாம்? என்று எதிர்முனைக் கேள்விகள். என்ன ரேஸ்? நிரந்தரவாசியா? குடும்பமா? எத்தனை நபர்கள்? எங்கே வேலை? என்று எதிர்க்கேள்விகளும் பதில்களுமாக முதல் அழைப்பு முடிய 15 மணிதுளிகள் ஆகியிருந்தது.
கைத்தொலைபேசி தன்னை ‘டாப்பப்’ செய்து கொள்ளும் படி எச்சரிப்பு மணி அடித்தது.
அதான் நாலாயிரம் கிடைக்கப் போகிறதே என்று நினைத்துக் கொண்டு ‘ப்ரிபெய்டு கார்டு’ வாங்கி ஏற்றிக் கொண்டான்.
அடுத்தத்துத் தொலைபேசி அழைப்புக்கள். கூட்டிப் பார்த்தான் – நாற்பது அழைப்புக்கள். ஒரே மாதிரியான கேள்விகள் வேறு வேறு வடிவங்களில். யாரிடம் என்ன பேசினோம் என்று ஒரே குழப்பமாக இருந்தது. வாடகை வீட்டுக்கு நல்ல கிராக்கி இருக்கிறது என்று நினைத்துக் கொண்டான்.
‘அப்பாயிண்ட்மெண்ட்’ வேறு – வீட்டைப் பார்க்க வருகிறவர்களுக்கு வெவ்வேறு நேரம் ஒதுக்கியிருந்தான்.
சொன்ன நேரத்துக்கு நண்பனின் வீட்டுக்குச் சென்று திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்க வேண்டியிருந்தது. இது முதல் அனுபவம் என்பதால் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வது சற்று சிரமமாக இருந்தது.
பலர் வந்தார்கள். வீட்டைப் பார்த்தார்கள். தங்களுக்குள் பேசிக் கொண்டு, கூப்பிடுவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்கள். சிலர் வாடகையைக் குறைத்து கேட்டுவிட்டுப் போனார்கள். இன்னும் சிலர் ‘பேச்சிலர்கள்’ 8 பேர் தங்கிக்கொள்கிறோம் என்று கேட்டார்கள். அது குடும்பங்களுக்கு மட்டுமே விடுவது என்கிற நடேசனின் கொள்கைக்கு எதிராக இருந்தது.
அழைப்பு வரும் என்று எதிர் பார்த்திருந்தவனுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. ஓரிரு அழைப்புகள் வந்தாலும் அவை கனியவில்லை.
சில்வியாவிடம் வந்து கொட்டினான், ‘என்ன சில்வியா, இப்படி ஆகி விட்டது? உழைப்பெல்லாம் வீணாகிவிட்டதே’ என்றான்.
அவள் சொன்னாள் ‘அது ஒருவேளை ‘நோ கோ புரோக்’ ன்னு போட்டதால நேரடியாப் பார்ட்டியே வந்துட்டதுனால இருக்கும். அவங்க ரெம்ப எதிர்பார்ப்போட இருப்பாங்க. இந்த வாரம் ‘கோ புரொக் உண்டு’ ன்னு போட்டுப் பாரு’ என்றாள்.
ஐயோ மறுபடியுமா? என்று தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது அவனுக்கு.
மறுபடியும் விளம்பரம், தொலைபேசி…கேள்விகள்…..
அழைப்பைத் தொடர்ந்து குறுந்தகவல் வேறு வந்து குவிந்து கொண்டே இருந்தது. அனைத்துக்கும் பதில் அனுப்ப வேண்டியிருந்தது.
இம்முறை எல்லாவற்றையும் கையாள்வதில் நம்பிக்கை கூடியிருந்தது. இம்முறை வீடு பார்க்க முகவர்கள் அவர்களின் வாடிக்கையாளர்களை அழைத்துக் கொண்டு வந்து வீட்டைக் காட்டினார்கள். சிலர் சிலவற்றை மாற்றித்தருமாறு கேட்டார்கள். சிலர் வாடகையைக் குறைக்கப் பார்த்தார்கள். சிரித்துக் கை குலுக்கி மீண்டும் பேசுவதாகச் சொல்லி விடைபெற்றுக் கொண்டார்கள்.
மறுநாள் யாரும் அழைக்கவில்லை. பேசுவதாகச் சொன்ன சிலரைக் கார்த்திக்கே அழைத்தான். அடுத்த மாதத்திலிருந்துதான் வீடு வேண்டும், வாடகையைக் குறைக்க முடியுமா? இப்படித்தான் பேசினார்கள். ஒன்றும் முடிந்த பாடில்லை.
நமக்கும் இந்தத் தொழிலுக்கும் ஒத்து வராது. பேசாமல் நடேசனிடமே ‘வேறு முகவர் பார்த்துக்கோ..என்னால முடியல’ என்று சொல்லிவிட நினைத்திருந்தான். அதனால் அடுத்த ஒருவாரம் ஒன்றும் செய்யாமலிருந்தான். ஆனால் புதுப்புது அழைப்புக்கள் நேரங்காலம் இல்லாமல் அழைத்து, வெட்டிப்பேச்சுப் பேசி விட்டுப் போனார்கள். தொலைபேசி அட்டைச்செலவு எகிறியது. வீடு காட்டப் போய்வர ‘டேக்சி’ எடுத்த வகையில் வேறு நிறைய செலவாகிவிட்டது.
கார்த்திக்கிற்குச் சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று ஓடிவிடலாமா என்று வந்தது. இது இப்படி ஒரு நிம்மதி இல்லாத பொழைப்பா? என்று கடந்த மூன்று வார அனுபவத்தையும் நினைத்துக் கொண்டிருந்தவனுக்குத் தூக்கம் கண்களைச் சுழற்றிக் கொண்டு வந்தது.
யாரோ அழைத்தது போல் இருக்கவே திரும்பிப் பார்த்தான்.
‘கார்த்திக் என்ன மேட்ச் பார்த்தியா?’ என்றான் ரமேஷ்.
‘ஆமாம். நல்லா டஃபாத்தேன் இருந்தது. தோற்ற டீம் நல்லாப் பாஸ் பன்னாங்க. ஆனா விட்டுட்டாங்கப்பா’ என்றான் கார்த்திக்.
‘சரி வா கோப்பி சாப்பிட்டு வரலாம்’ இருவரும் கோப்பிக் கடைக்குச் சென்றார்கள்.
‘நீயும் மேட்ச் பார்த்தியா?’ என்றான் கார்த்திக்.
‘ஆமாம், நானும்தான் பார்த்தேன். நல்லா பாஸ் பண்ணாப் பத்தாதுப்பா. முடிக்கத் தெரியிலியே? முடிக்கத்தெரியணும்ப்பா…’ என்றான் ரமேஷ்.
என்ன சொன்னே என்றான் கார்த்திக்.
‘பினிஸ் பண்ணனும்ப்பா’ என்றான் மறுபடியும்.
அது அவனுக்குச் சொன்ன மாதிரியே இருந்தது. அன்று மாலை வேலை முடிந்து வீடு திரும்புகிற வரை அது அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. வீடு திரும்பியதும் தன் குறிப்பில் இருந்து ஒரு நம்பரைத் தேடி எடுத்து அழைத்தான்.
அவனிடம் அறிமுகம் செய்துகொண்டு ‘உனக்கு என்ன மாற்றிக் கொடுத்தால் வீடு வாடகைக்கு எடுப்பாய்?’ – என்று கேட்டுக் குறித்துக் கொண்டான்.
‘சரி! நான் ஓனரிடம் பேசுகிறேன், என்ன சொல்கிறாய்?’
‘வாடகை என்னால் 2000 கொடுக்க முடியாது. 1900 என்றால் ஓகே’
‘அவ்வளவெல்லாம் குறைப்பது மிகமிகக் கடினம். இன்றைக்கு மார்க்கட் ரேட் அப்படியிருக்கு. நல்ல கிராக்கி இருக்கு. வேண்டுமானால் உனக்காக 1950க்குக் கேட்டுப்பார்க்கிறேன்,…சரியா?’
‘சரி’
உடனே நடேசனை அழைத்து ‘நல்ல பார்ட்டி ஒன்னு இருக்கு ஆனா வாடகை 1900த்துக்குக் கேக்குறான். வாட்ரோப், பெட் இரண்டையும் மாற்றிக் கொடுக்கச் சொல்றான். ரெம்பச் செலவு வராது. 500 வெள்ளிதான் செலவு வரும். வீட்டைச் சும்மா போட்டு வைத்தால் நமக்குத்தான் வாடகை நட்டம். என்ன சொல்கிறாய்? 1950க்கு முடிப்பமா?’ என்று கேட்டான்
நடேசன் கொஞ்ச நேரம் யோசித்துப் பின் சம்மதித்தான். உடனே பார்ட்டியிடம் சொன்னான். ஒப்பந்தம் கையெழுத்தானது. முதல் கமிசனை வாங்கிப் பையில் வைத்த போது மகிழ்ச்சியாக இருந்தது.
‘பினிஸ் பண்ணனும்ப்பா’ ரமேசின் குரல் இன்னும் ஒலித்துக் கொண்டே இருந்தது. ரமேஷிற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டே சென்றுகொண்டிருந்தான்.
பாடங்கள் வாழ்க்கையின் எல்லாக் கிளைகளிலும் காய்த்துக் கொண்டுதான் இருக்கின்றன. நாம்தான் அவற்றைப் பறித்துக் கொள்ளாமல் விட்டுவிடுகிறோம் பலாக் காய்களைப் போல.
– 23 ஜூலை, 2012
– நகர மறுத்த மேசை (சிறுகதைகள்), முதற்பதிப்பு: 2013, இராம.வயிரவன் வெளியீடு, சிங்கப்பூர்.