பிச்சை சோறு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 18, 2023
பார்வையிட்டோர்: 2,525 
 

பெரிய நகரத்தில் உள்ள பெரிய நட்சத்திர விடுதி. மாலை ஐந்து மணி இருக்கும் நிலையில் உயர் ரக கார்களின் அணிவகுப்பால் அலுவலகங்களில் வேலை முடித்து இரண்டு சக்கர வாகனங்களிலும், கார்களிலும் வீடு நோக்கி செல்பவர்களும் ஊர்ந்து செல்லுமளவுக்கு பாதையில் வாகன நெருக்கடி.

தனியார் மண்டபத்தில் நடந்த அந்த ஊர் பெரிய மனிதரின் மகன் திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சியில் பிரபல இசையமைப்பாளரின் இசைக்கச்சேரி நடப்பது பாதையில் நடந்து செல்வோர் பேசுவது புரியாத அளவுக்கு ஒலிக்கிறதென்றால், உள்ளே இருப்பவர்கள் ஒருவர் பேசுவதை மற்றவர் புரிந்து விட்டதாக நடித்து சிரிக்கும் காட்சிகள் நாடகம் போல் அரங்கேறுவது அங்கு வந்திருந்த அறிவாளிகள் சிலருக்கு ஆச்சரியமாக பட்டது.

முன்பெல்லாம் மண்டபத்தில் நிகழ்ச்சி முடிந்த பின் நடு இரவு வரை பாத்திரங்களுடன் பல ஏழைகள் காத்திருந்து மீதமாகும் உணவை வாங்கிச்செல்வர். இப்போது யாரும் வராததால் அனாதை விடுதிகளுக்கு அனுப்பி விடுகின்றனர். விடுதி முன் பசியோடு காத்திருக்கும் ஒருசிலருக்கு கூட உணவு கிடைப்பதில்லை.

அன்றாடம் அப்பகுதியில் பிச்சை எடுத்து உண்டு வாழும் நான்கு பேரில் ஒருவன் இன்று எப்படியாவது மண்டபத்தில் நடக்கும் விசேச நிகழ்ச்சியின் ஆடம்பர விருந்து உணவை சுவைத்து விட வேண்டும் என பகீரதப்பிரயத்தனம் எடுத்து உணவு வழங்கும் பகுதிக்கு அருகில் சென்றவன், பசி மறந்து அங்கு நடப்பதை முதன் முறையாக கண்டு ஆச்சரியப்பட்டு கண் கலங்கினான்.

பலர் பாதி உணவை மட்டும் சாப்பிட்டு மூடி வைத்ததும், மூடி வைக்கப்பட்ட உணவு குப்பைக்கு செல்வதும், குழந்தைகள் உணவு பிடிக்காமல் தட்டி விடுவதும், ஐம்பது வகை உணவு பரிமாறப்பட்டதும், தண்ணீர் பாட்டில்கள் திறக்கப்படாமலேயே குப்பைக்குச்செல்வதும் அதிர்ச்சியாக இருந்தது.

‘பலர் பிச்சையெடுத்து எச்சை சோற்றுக்கு அலைவது யாருடைய தவறு? நமக்கும் இவர்களைப்போல் தானே கைகால்கள் உள்ளன? பின் நாம் ஏன் இவர்களிடம் எச்சை சோற்றுக்கு காத்திருந்து பிச்சை வாங்க கையேந்த வேண்டும்?’ என யோசித்ததில் உடல் பசி மறந்து, தற்போது மனம் பசித்ததை புரிந்து கொண்டு மண்டபத்தை விட்டு உண்ணாமலேயே வெளியேறினான் பிச்சைக்காரன்.

அடுத்த நாள் அந்த பகுதியில் பிச்சை எடுப்பவர்களைக்காணாமல் கொண்டு வந்த பரிகாரப்பலன் கருதி வழங்க வந்த உணவு பொட்டலங்களை திருப்பிக்கொண்டு சென்றாள் பணக்கார பெண்.

பிச்சைக்காசில் சேர்த்த பணத்தில் உடனிருப்போரும் தானும் முடி வெட்டி, குளித்து விட்டு நேற்று விருந்து நடந்த விடுதியை சுத்தம் செய்யும் வேலைக்கு உழைக்கச்சென்று, அதற்கு கிடைத்த சம்பளத்தில் அரிசி வாங்கிச்சென்று கஞ்சி வைத்து குடித்தபோது உடல் நிம்மதி, திருப்தி பெறாவிட்டாலும் மனம் நிம்மதி பெற்றது இது வரை பிச்சைக்காரனாக இருந்து தற்போது வேலைக்காரனாக உயர்ந்திருக்கும் நீலகண்டனுக்கு.

பத்து வருடங்களுக்கு பின் அதே மண்டபத்தில் தன் மகனுக்கு வரவேற்ப்பு, விருந்து நடத்திய பழைய பிச்சைக்காரன் நீலகண்டனின் அழைப்பை ஏற்று பல செல்வந்தர்கள் வந்திருந்தனர். ஆனால் உணவு அங்கு சேதப்படுத்தப்படவில்லை, குப்பைக்கு செல்லவில்லை!

திருமண மண்டபத்தில் நுழையும் போது மணமக்களின் புகைப்படம் போட்ட பேனர் படங்களுக்கு பதிலாக உணவுக்காக பிச்சையெடுப்போரின் படங்களைப்போட்டு, ‘விழாவிற்கு வருகை தரும் உங்களுக்கு பசியில்லையேல் வெளியில் பசியோடு வாழ்பவர்களுக்காக விருந்து உண்ணாமல் மணமக்களை மட்டும் வாழ்த்தி விட்டுச்செல்லுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என போடப்பட்டு இருந்தது.

பசியில்லாதவர்கள், வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கேயே சாப்பிட்டுவிட்டு வந்தவர்கள் மணமக்களை வாழ்த்தி விட்டு, விருந்து நடக்கும் பகுதிக்கு செல்லாமலேயே செல்வதை பார்க்க முடிந்தது. இந்தப்புதிய பழக்கம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்ததோடு, ‘தங்களது விழாக்களிலும் இந்த முறையை கடைப்பிடிக்க வேண்டும்’ என பலர் எண்ணிச்சென்றது, பேசிச்சென்றது வித்தியாசமாகவும், புதுமையாகவும் அதே சமயம் நன்மையாகவும் இருந்ததை விழா நடத்திய நீலகண்டன் எண்ணி மகிழ்ந்ததோடு, அதே நட்சத்திர விடுதியில் அனாதை ஏழைகளுக்கென, பிச்சையெடுப்போருக்கென தனி விருந்திடும் பகுதி ஒதுக்கப்பட்டு மற்ற விருந்தினர்களுக்கு போலவே டேபிளில் விருந்து பறிமாறியது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்ததோடு பாராட்டுக்களையும் பெற வைத்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *