பாவத்தின் சம்பளம் மரணம்(!?)

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 6,981 
 
 

காலில் இருந்து உச்சந்தலை வரை எலும்பின் அதிர்வை உணர்ந்திருக்கிறீர்களா? டேவிட் உணர்ந்திருக்கிறான். ஒரு நொடி அல்லது நிமிடம் அல்ல. நேற்று இரவு முதல்… உடலெலும்பு அனைத்தும் அதிர்ந்துகொண்டேயிருந்தன.

கியரை மாற்றும் இடது கை மணிக்கட்டில் வலி பின்னியெடுத்தது. டேவிட்டுக்கு இருப்பு கொள்ளவில்லை. காலை 9 மணிக்கு தனத்தை வேலைக்கு அனுப்பிவிட்டு படுத்தவன்தான்… இன்னும் தூங்கவில்லை. வழக்கமாகத் தூங்கிவிடுவான்.. மகள் தமிழ் மாலை 3 மணிக்கு மேல் பள்ளியிலிருந்து திரும்பிவிடுவாள். அப்போதுதான் எழுந்து சாப்பிடுவான். ஒன்றுவிட்டு ஒரு நாள் இதுதான் வழக்கம். ஆனால், இன்று பாழாய்ப் போன தூக்கம் வரவில்லை. உடம்பு அதிர்ந்துகொண்டேயிருந்தது.

எழுந்து சட்டையை எடுத்து மாட்டப்போனவன் பாக்கெட்டை சோதித்துக்கொண்டான். பணமிருந்து. இரண்டாயிரத்து சில்லறை.. அந்தத் தொகையை இதுவரை ஒருநாளில் அவன் சம்பாதித்தில்லை. நேற்று காலை ஆட்டோ டியூட்டி எடுத்தபோது நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். மகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட வேண்டிய தேதி. ஆனால், அது மதியம் வரை நடக்கவில்லை.. காலை சவாரி பார்த்ததில் பெட்ரோல் போட்டுக்கொண்டு, அப்படியே டிரிப்ளிகேன் ஹை ரோட்டில் மதியம் சாப்பிட்டு முடித்தபோது பாக்கெட் காலியாகியிருந்தது.

மதிய சாப்பாட்டிற்குப் பின்பு ஒரு சிகெரெட் வேண்டும். சில்லறை தேடி எடுத்து வாங்கி பற்ற வைத்துக்கொண்டு அமர்ந்தான்..

அப்புறம் 5 மணிக்கு ஆரம்பித்து விடிய விடிய ஓட்டம். அந்தப் பணம்தான் பையில் இருந்தது. ஆனால், அது அவனுக்குப் பிடிக்கவில்லை. அது நல்ல பணம் இல்லை என்று தோன்றியது. ஒருவேளை அந்தப் பணத்தின் சுமைதான் தூக்கம் வராததற்குக் காரணமோ?

சட்டையை மாட்டிக்கொண்டு நடைபோட்டான். மணி பத்தரையைத் தாண்டியிருந்தது. இன்னேரம் கடை திறந்திருப்பார்கள். வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது..

குடையைப் பிடித்துக்கொண்டு சிவன் கோவில் தெருவில் நடந்தபோது கணுக்காலுக்கு மேல் தண்ணீர் ஓடியது. அது மழைநீர் மட்டுமல்ல.. சாக்கடையும்தான். அந்த நீர் பல வண்ணத்தில் மின்னியது. ஆயில்.. சென்னையில் வெயிலடித்தால் நாசிக்கும், மழை பெய்தால் கணுக்காலுக்கும் எண்ணெய் கிடைக்கும்.

அவன் ஊரில் அப்படியில்லை. மாரியம்மன் கோவில் குளத்திலிருந்து தண்ணீர் வழிந்தோடி வரும். இவன் பிறந்த மாதாகோவில் தெருவில் பெருக்கெடுக்கும். இவன் கணுக்கால் நனைய நடந்திருக்கிறான். காலுக்கிடையில் மீன் குஞ்சுகள் நீந்தும்.. விடாப்பிடியாக குளத்தை நோக்கி நீந்தும். இவனும் சோமுவும் துண்டு வைத்துக்கொண்டு மீன் பிடிப்பார்கள். இவன் பிடித்த மீனெல்லாம், இவன் தோட்டத்து குட்டைக்குப் போகும்.. அதிக மழை பெய்தால் குட்டையின் மீன்களும் பெருக்கெடுத்த நீரில் மறுபடியும் தெருவில் ஓடும் ஓடைக்கு வந்துவிடும். அதனாலென்ன..? மீன்கள் நீந்தும் அழகைப் பார்த்தால் போதுமே..

சென்னையின் நாற்றமெடுத்த வாழ்க்கைக்கு இவன் வந்ததே பெரிய கதை. அதில் நல்ல விஷயம் இவன் அங்குதான் தனத்தைக் கண்டான். தனம்.. அதாவது தனலட்சுமி. ஒல்லியாய், சற்று தூக்கிய முன்பல் தெரிய அவள் சிரித்தபடி இவனை முதன் முதலாகப் பார்த்த அந்த நாளில் இவனுக்கு ஒரு மாதிரி இருந்தது..

அவள் இவனுக்கு உதவியாள். உலோகத் தகடுகளைக் கொண்டு வந்து இவன் பக்கத்தில் வைக்க வேண்டியது அவள் வேலை. தகட்டில் பீர் அல்லது பிராந்தி கம்பெனி முத்திரைகள் படங்களாக அச்சாகியிருக்கும். இவன் வேலை உலோகத் தகட்டை எந்திரத்தில் சொருகி யந்திரத்தை இயக்குவது… டடக் டக் டடக் டக் என்று அந்தப் பக்கம் மூடிகளாக விழுந்து கொண்டிருக்கும். ஒரு நாள் சற்று ஏமாந்தபோது இவனது வலது கை நடுவிரலில் முன் பகுதி துண்டாகி அந்தப்பக்கம் விழுந்தது..

கையிலிருந்த பிளேட்டையெல்லாம் போட்டுவிட்டு தனம் ஓடிவந்தாள். துப்பட்டாவைக் கிழித்து இவன் விரலுக்குக் கட்டுப்போட்டாள். அதுதான் முதல் முடிச்சாகி காதலும் அப்புறம் கல்யாணமும் என்று நீண்டது.

நெடுநாள் அந்த வேலை நீடிக்கவில்லை. ரொம்பப் பெரிய அரசியல்வாதி ஆரம்பித்த சாரயாயக் கம்பெனிக்கு மூடி ஆர்டர் கிடைத்தபோது இவர்கள் சங்கமாகி ஸ்டிரைக் அடித்ததார்கள். ஈஎஸ்ஐ, பிஎப் சம்பள உயர்வு கேட்டார்கள். அது கிடைக்கவில்லை. ஒருநாள் அனைவரையும் வாரி வழித்து சிறையிலடைத்தார்கள். அப்புறம் கம்பெனி மூடிவிட்டது என்றார்கள். தனத்தின் வயிற்றில் பிள்ளை வளர்ந்துகொண்டிருக்க என்ன செய்ய முடியும்..? இவன் ஆட்டோ டிரைவர் ஆகிவிட்டான்.

இவன் ஆட்டோ ஸ்டாண்டைக் கடந்தபோது மாரி வண்டியுடன் நின்று கொண்டிருந்தார். இன்னமும் போனியாகவில்லையாம். ‘சரிண்ணே’ என்று விலகி நடந்தான். ‘டேய் டிப்பனுக்குப் பணம் கொடுத்துட்டுப் போடா’ என்றார். கொடுத்துவிட்டு நடந்தான்.

அவர்தான் அவனின் ஆட்டோ குரு. லைசென்ஸ் எடுத்து கொடுத்து, நம்பிக்கையோடு வண்டியில் முதல் டூட்டியும் கொடுத்தவர்.

கடையில் குவார்ட்டரை வாங்கி மறைத்துக்கொண்டு திரும்பி நடந்தான். நேற்று இரவு அந்த இரண்டு பேர் வண்டியில் தண்ணியடித்துக்கொண்டே வந்தது நினைவுக்கு வந்தது.

மகாராணி தியேட்டர் அருகே அவன் அப்போது வண்டியோடு வந்துகொண்டிருந்தான். கத்திவாக்கம் வரை ஒரு சவாரி கிடைத்துப் யோயிருந்தான். திரும்புவதற்கு சவாரி சிக்கவில்லை..

இதற்குமேல் உருட்டினால் பெட்ரோல் கணக்கு இடிக்குமே என்று யோசித்தபோது அவர்கள் கை போட்டார்கள். சரக்கென்று பிரேக் அடித்து நிறுத்தினான்.

ஒன்றுமே சொல்லாமல் ஏறிக்கொண்டார்கள். ‘எங்கண்ணா?’ என்ற கேள்விக்கு ‘ஸ்ட்ரைட்டுபா’ என்று பதில் கிடைத்தது. போனான்.

லெப்ட், ரைட், ஸ்ட்ரைட் என்று மட்டும் சொல்லிக்கொண்டு வந்தார்கள். வண்டி நின்றபோதுதான் தெரிந்தது அது ஒரு வடசென்னைக் குப்பம். ஒருவன் இறங்கி எதிரே இருந்த கடையில் போய் கைநீட்டினான். சிகெரெட் பாக்கெட் வந்தது.

டேவிட் டிரைவர் சீட்டைவிட்டு இறங்கவில்லை. காத்திருந்தான். அடுத்தவனும் இறங்கி அவனுடன் சேர்ந்துகொண்டான். அப்போதுதான் கடை விளக்கு வெளிச்சத்தில் டேவிட் கவனித்தான் இருவர் சட்டையிலும் இரத்தக் கறையிருந்தது. கறையில்லை… காயாத இரத்தம்.

டேவிட் முதுகுத் தண்டு சில்லிட்டது. ‘கொலைகாரங்களையா ஏத்திக்கிட்டு வந்திருக்கோம். யேசுவே.. திரும்பி ஓடிவிடலாம்’ என்று தோன்றியது. முடியாது வண்டியை எடுப்பதற்குள் வந்து பிடித்துவிடுவார்கள்.

அதற்குள் அந்த இரண்டு பேரைச் சுற்றியும் கூட்டம் கூடியிருந்தது. ஒருவன் மறைத்திருந்த கத்தியை எடுத்துக் காட்டினான். இவன் பயத்திலும் ஆர்வம் தாங்காமல் இறங்கி அருகே போனான்.

‘அவனப் போட்டுட்டோம்’ என்று ஆரம்பித்து அந்த இரண்டு பேரில் ஒருவன் நடந்ததைச் சொல்லிக்கொண்டிருந்தான். டேவிட்டுக்கு வயிற்றைக் கலக்கியது. ‘இப்படி மாட்டிக்கிட்டமே என்று கவலைப்பட்டான். நிச்சயம் அவனுகளை போலீஸ் பிடிக்கும்..நம்ம ஆட்டோவும் சிக்கும்.. அய்போ அப்புறம் தனத்தையும் தமிழையும் யார் பார்ப்பாங்க.. இவனுக்கு யாரும் இல்லை. தனம் வீட்டுக்காரங்க முதலிங்க. அவளை மீண்டும் சேர்த்துக்கொள்ள மாட்ட‌ங்களே…’

அந்த இரண்டு பேரும் மீண்டும் ஆட்டோவில் ஏறிக்கொண்டனர். ஒரு இளைஞர் கூட்டம் அவர்களை வழியனுப்பி வைத்தது.

‘தம்பி ஓட்டுடா’ என்றான் ஒருவன். அவனுக்கு இன்னும் மீசை கூட சரியாக முளைக்கவில்லை.

டேவிட்டைப் பயம் பிடித்து ஆட்டிக்கொண்டிருந்தது. ‘இவனுகள எப்புடியாவது இறக்கிட்டு ஓடிடனும்.. எப்புடி ஓட்றது..? இருவது இருவந்தைச்சு கிலோ மீட்டருக்கான பெட்ரோலை எப்படி சமாளிக்கிறது..?’

கொஞ்சம் கொஞ்சமாக டேவிட்டுக்கு மூளை வேலை செய்தது. முதலில் பெட்ரோல் போட்டுக்கொள்ள வேண்டும்… அப்புறம் அவன்களை கழற்றிவிட வேண்டும் என்ற முடிவு செய்தான்.

அவன் ஓட்டிக்கொண்டிருந்த ஆட்டோவின் டேஷ் போர்டின் கீழே மறைவாக ஒரு ஸ்விட்ச் வைத்திருந்தான். அதனை வைக்கும்போது மாரி ‘எதுக்கு செலவு’, என்று கேட்டிருந்தார்.. அந்த ஸ்விட்சுதான் உதவப் போகிறது..

பெட்ரோல் பங்க் ஒன்று கண்ணில் பட்டவுடன் அந்த சுவிட்சை கீழ் நோக்கி இழுத்தான். ஆட்டோ குலுங்கிக் குலுங்கி நின்றது. அந்த ஸ்விட்ச், சாவி பார்க்க வேண்டிய வேலையைப் பார்க்கும். இரவில் நிறுத்தும்போது வண்டியைக் கடத்திவிடாதிருக்க உதவும். கள்ள சாவி போட்டாலும் வண்டி ஸ்டார்ட் ஆகாது.

‘என்னடா ஆச்சு’ என்று கேட்டான் ஒருவன். அவனுக்கு நெட்டையன் என்று டேவிட் மனதுக்குள் பெயர் வைத்திருந்தான். மற்றவன் குட்டையன்.

‘அண்ணே பெட்ரோல் இன்லேண்ணே.. ஒங்க நேரம் பாருங்க.. பக்கத்துலயே பங்கு..’

‘சரி பெட்ரோல் போடு’

‘போடலாம்ணே… ஆனா, இப்பதான் டூட்டிக்கு வந்தண்ணே. நைட்டு டூட்டி.. போனி காசுதானே கையில இருக்கு..’

‘சாவு கிராக்கிடா.. டப்பு இல்லாதவன்லாம் வண்டிக்கு வந்துட்ரானுங்க..’

இவன் தலையைச் சொறிந்தபடி கை நீட்டினான்.

நெட்டையன் ‘குடுடா’ என்று சொன்ன பிறகு குட்டையன் உள்பாக்கெட்டில் கைவிட்டு எடுத்தான். அது 500 ரூபாய் நோட்டு.. புதுசு.

‘பெட்ரோல் போட்டுட்டு சேன்ஞ்ச குடு’ என்றபடி நீட்டினான்

இவன் பணத்தை வாங்கி கையில் பிடித்தபடி வண்டியைத் தள்ளினான். மூன்று எருமைகளை கட்டி இழுப்பதாக டேவிட்டுக்குப் பட்டது. ஆனால், வேறு வழியில்லை. வலது கையால் ஸ்டீரிங்கைப் பிடித்தபடி இடது கையால் ஆட்டோவை அணைத்து இழுத்தபடி வண்டியோடு நடந்தான். பசியெடுத்தது. இந்த எழவு பொழப்பில் பசி வேறு என்று நொந்துகொண்டான்.

‘டேய்.. மய வரம்போலருக்கு, ஸ்கீரின டவுன்பன்னு’ என்றான் குட்டையன். வண்டியை நிறுத்திவிட்டு சைடு துணிகளை டேவிட் இறக்கிவிட்டான். ஆமாம் மழை வரும்போலத்தான் இருந்தது.

மறுபடியும் வண்டியைத் தள்ளிக்கொண்டு பங்கில் நுழைந்து 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக்கொண்டான். வண்டியை மறுபடியும் ஸ்டார்ட் செய்வது போல நடித்தான். வலது தோள்பட்டை நொந்து போயிருந்தது.

அப்புறம் ஸ்விட்சை ஆப் செய்துவிட்டு அடிக்க வண்டி என்ஜின் ஓடத் துவங்கியது. பணத்தைக் கொடுக்க திரும்பியனுக்கு அதிர்ச்சி.. இரண்டு பேர் கையிலும் பிளாஸ்டிக் கப்பிருந்தது. தண்ணியடிக்கிறார்கள்.. சீட்டில் வாட்டர் பாக்கெட்டும் ஆஃப்பும் கிடந்தன. ‘எல்லாத்தையும் ஒடம்புலேயே வச்சிருப்பானுங்களோ..’ என்று யோசித்தபடி முதல் கியரைப்போட்டான். இடது கை மணிக்கட்டு வலித்தது. ஓயாத வண்டி ஓட்டத்தில் உடம்பின் எலும்புகள் அதிர ஆரம்பித்திருந்தன.

ஆட்டோ வள்ளலார் நகரைச் சமீபத்தபோது நிறுத்தச்சொன்னார்கள். நிறுத்தினான்.

நெட்டையன் எழுந்துசென்று தெருவோர பிரியாணி கடையில் பிரியாணி வாங்கினான். காசு தரவில்லை போலிருக்கிறது… தகராறு ஆரம்பித்தது. நேரம் இரவு 11 மணி ஆகியிருந்தது… தகராறு சூடுபிடிக்க நெட்டையன் கத்தியை எடுத்துக் காட்டினான். குட்டையனோ, ‘டே வண்டிய ஸ்டாட் பண்ணி ஸ்லோ ஸ்பீடுல வையி.. வந்துடறோம்’ என்றவாறு இறங்கினான்.

டேவிட் மனதில் மணி அடித்தது. குட்டையன் இறங்கினானோ இல்லையோ கியரைப் போட்டு டாப் ஸ்பீடில் பறந்தான். திரும்பிப் பார்த்தபோது குட்டையனும் அவன் பின்னால் நெட்டையனும் ஒடி வருவது தெரிந்தது. அப்புறம் சென்ட்ரல் தாண்டும் வரை இவன் நிறுத்தவும் இல்லை.. திரும்பவும் இல்லை. வேறு ஏதேனும் ஆட்டோவில் விரட்டுகிறார்களோ என்று மட்டும் ரியர் மிர்ரரில் பார்த்துக்கொண்டான்.

இரவுக் கதை நினைவுக்கு வந்ததால், பாட்டிலோடு திரும்பும்போது பத்திரிகை ஒன்றையும் வாங்கிக்கொண்டான். வீட்டுக்குத் திரும்பியவுடன் பத்திரிகையைப் பிரித்து கொலை செய்தி.. கைது செய்தி ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தான். இல்லை. கொஞ்சம் நிம்மதி வந்தது.

பாட்டிலைத் திறந்துகொண்டு, மகளுக்கு வாங்கி வைத்திருந்த மிக்சரையும் எடுத்து வைத்துக்கொண்டு அமர்ந்தான். அவன் பெண் தமிழுக்குப் பத்து வயது. பள்ளிக்குப் போய்க்கொண்டிருந்தாள். அவள் அம்மா மாதிரி அழகு.. ஒல்லி.. அவள்தான் இவனின் அனைத்துக் கனவும்..

மகளை நினைத்தவுடன் அவன் நேற்றிரவு சவாரியில் பார்த்த அந்தப் பெண் நினைவுக்கு வந்தாள். இவள் மகளை விட எட்டு அல்லது பத்து வயது கூட இருப்பாள். இவளை விட நிறம் அதிகம். பாட்டிலின் அடியில் ஓர் அடிகொடுத்து கழுத்தைத் திருகி.. கிறக்கென்று திறந்து டம்பளரில் ஊற்றிக்கொண்டான். மனம் அந்தப் பெண் பிள்ளையையே நினைத்துக்கொண்டிருந்தது..

நேற்று இரவு வள்ளலார் நகரில் பிடித்த ஓட்டம் கோடம்பாக்கம் பவர் அவிசில்தான் ஓய்ந்தது. பையில் அவர்களிடம் அடித்த 400 ரூபாயும் இவன் சம்பாத்தியத்துடன் சேர்ந்திருந்தது.

லேசாக மழை தூற்றல் விழுந்ததால், சைடை இறக்கிவிட்டு பின் சீட்டில் சுருண்டுகொண்டான். இவனது நீண்ட உடம்பு மடங்க மறுத்தது.. தொடைக்கிடையில் கைகளைப் புதைத்தபடி தூங்கிப் போனான்.

யாரோ காலில் தட்டுவது உணர்ந்து திடுக்கிட்டு எழுந்தான்.. போலீசோ.. வைத்திருக்கும் காசுக்கும் சோதனையோ.. அப்போதே பணத்தை எடுத்து சீட்டுக்கடியில் வைத்திருக்க வேண்டும்.. பதட்டத்தில் மறந்து போனது..

இறங்கிப் பார்த்தவனுக்கு நிம்மதி.. போலீஸ் இல்லை. யாரோ சவாரி கூப்பிடுகிறார்கள்.

அழைத்தவனுக்கு வயது 40க்கு மேல் இருக்கும். கரை வேட்டி கட்டியிருந்தான். அப்போதைய ஆளும் கட்சியின் கரைவேட்டி. நிச்சயம் நல்ல சவாரிதான் என்று பட்டது..

‘வாரியாப்பா?’ என்றவன் இவனை மேலும் கீழும் பார்த்தான். எதற்கு இந்தப் பார்வை என்று இவனுக்குப் புரியவில்லை.

‘எங்கண்ணா?’

அவன் வண்டியில் ஏறி அமர்ந்துகொண்டு ‘நேராப் போ’ என்றான்.

‘இன்னிக்கு எல்லாம் ஏடாகூடமா மாட்டுது’ என்று எண்ணியபடி, சரி. போய்த்தான் பார்ப்போமே என்று இவன் வண்டியில் ஏறி கிக்கரைத் தூக்கினான். மழையில் வண்டி அடி வாங்கியது. ஏறியவனோ பொறுமை இழந்துகொண்டிருந்தான்.

வேறு வழியில்லாமல் வண்டியை விட்டு இறங்கி வலது கையால் ஆக்சிலேட்டரைத் திருகிக்கொண்டு குனிந்து இடது கையால் கிக்கரைத் தூக்கினான். ஆட்டோவின் அடி வயிற்றில் அடிவிழுந்தாற்போல என்ஜின் உயிர் பெற்றது. ஏறி அமர்ந்தான். வடபழனி நோக்கி வண்டி பறந்தது.

திரும்பவும், ‘எங்கண்ணே?’ என்று கேட்டான்.

‘ஒரு வேல தம்பி.. போயிட்டு திரும்பி வரணும். அப்புடியே வெயிட்டிங் இருந்தின்னா.. அதே இடத்துக்கு போயிட்டு திரும்பி வரணும்’

இவன் மனது துள்ளிக் குதித்தது. ‘அப்புடின்ன விடியற வரைக்கும் வண்டி ஓடும். இன்னிக்கு நல்ல சம்பாத்தியந்தா’ என்று யோசித்தான்.

பின்னால் அமர்ந்திருந்தவன் குடித்திருப்பான் போல. ஓயாது பேசிக்கொண்டிருந்தான். அவனுடைய அண்ணனைப் பற்றி நிறையச் சொன்னான். மேலிடத்திற்கு அண்ணன் ரொம்ப நெருக்கமாம்.

‘அது சரிண்ணே.. எங்க போவனும்?’

‘அண்ணணுக்கு எப்ப்ப.. என்ன்ன வேணுன்னாலும் என்னத்தான் கேப்பாரு.. இப்ப வளர் வீட்டுக்குப் போறோம்..’

‘வளர்னா யாருண்ணே?’

‘தம்பி தொழிலுக்குப் புதுசா?’ என்றான் அவன்.

‘இல்லண்ணே, 10 வருஷம் ஆகப்போவுது..’

‘சொந்த ஊர் எது?’

‘தஞ்சாவூர்ணே…’

‘சரிதான்.. இதல்லாம் தெரியாம பத்து வருஷமா ஆட்டோ ஒட்டுனியா.. வெவரமில்லாமப் பையானா இருக்கிய..ம்..’ என்றான் கரைவேட்டி.

இப்படியாக அவர்கள் அந்த வீட்டுக்குப் போய் சேர்ந்தார்கள். ஏரிக்கரையைத் தாண்டி பார்க் ஒன்றின் பக்கத்தில் அந்த பெரிய வீடு இருந்தது. அந்த கரைவேட்டிக்காரன் இறங்கி உள்ளே சென்றான். பத்துப் பதினைந்து நிமிடம் கழித்து ஒரு பெண்ணோடு வந்தான்.

திரும்பும்போது எந்தப் பேச்சும் இல்லை. ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு அருகே நிற்கச் சொல்லிவிட்டு அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு கட்சிக்காரன் உள்ளே போய்விட்டான்.

இவன் மறுபடியும் ஆட்டோவுக்குள் முடங்கினான். என்ன வாழ்க்கை இது என்று தோன்றியது. அவன் ஊரில் இதனை ‘கூட்டிக்கொடுக்கும் வேல’ன்னு கேவலமாகச் சொல்வார்கள்.

மழையின் குளிரில் கைகால்கள் விறைத்திருந்தன. ஆனபோதும், எலும்புகள் அதிர்வது குறையவில்லை. எப்படியாவது ஷாக்சை மாற்ற வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். இல்லையென்றால் ஒடம்பு காயலாங்கடைக்குக் கூட போகாது என்று முனகிக்கொண்டான்.

தூங்க முடியாது. உள்ளே போனவர்கள் வெளியே வரும்வரை கண்கொத்திப் பாம்பாகப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். அந்த அப்பார்ட்மெண்ட் காம்பவுண்டில் எத்தனை வாசல் இருக்கிறது என்று பார்த்தான். நல்ல வேளை ஒன்றுதான். இரண்டிருந்தால் ‘நுழைந்த கேட்டை விட்டுட்ட இன்னொரு கேட்டுல எகிறிப் போயிடுவானுங்க. களவானிப் பசங்க’ என்று இவன் அனுபவம் சொன்னது..

ஏறக்குறைய நாலு மணிக்கு அவர்கள் வெளியில் வந்தார்கள். மழைக்காக இறக்கப்பட்ட படுதாவை நீக்கிவிட்டு அமர்ந்தார்கள். வண்டி புறப்பட்டது.

அவன் அவளிடம் வம்பு செய்துகொண்டே வந்தான். அவளின் ஆட்சேபணைகள் எடுபடவில்லை.

திடீரென அவள் வண்டியை நிறுத்தச் சொன்னாள். டேவிட்டுக்குப் புரியவில்லை. நகரத்தை விட்டு விலகி ஏரிக்கரைச் சாலையில் வண்டி போய் கொண்டிருந்தது.. இவன் நிறுத்தினான்.

‘வேணுன்னா ஒன்னு செய்.. டிரைவர எறங்கச் சொல்லிட்டு இங்கேயே ஒரு தடவ செய்யு..

‘நல்ல ஐடியா’, என்றது கரைவேட்டி

‘ஆனா, ஒரு கண்டிஷன்.. என்ன கோயம்பேட்டில எறக்கிட்டுப் போயிடனும் நான் ஊருக்கு ஓடிப்போய்ட்றேன்’

‘ஹை’, என்றது கரைவேட்டி.. ‘அப்புறம் அண்ணனுக்கும் வளருக்கும் யார் தல கொடுக்கிறது. அதல்லா வேணாம்.’

‘அப்ப கம்முனு வரனும்’, என்றவள், ‘டிரைவர் வண்டிய எடு’ என்றாள் அதிகாரத்துடன்.

இவன் கிக்கரில் கை வைக்கக் குனிந்தபோது, அவள் ‘ஏய் வேணாம்..’ என்றாள். நிமிர்ந்தான். இவனிடம் இல்லை என்ற தெரிந்ததால் மீண்டும் குனிந்தான்.

‘பளீர்’ என்று சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தபோது கரை வேட்டி கன்ன‌த்தைப் பிடித்தபடி அமர்ந்திருந்தது. இவனுக்கு ஏனோ சந்தோஷமாக இருந்தது.

அப்புறம் கரை வேட்டி பேசவில்லை. அவள் ஏதேதோ தானே பேசிக்கொண்டு வந்தாள்..

‘அது ஒரு கெழம்.. வெளியில அண்ணே.. பெத்தண்ணே உள்ளாற தொண்ண.. இது ஒரு எச்சக்கள.. சப்பிப்போட்ட எச்சிலை அப்புடியே சாப்பிடற நாயி இது…’ அவள் யாரைத் திட்டுகிறாள் என்று இவனுக்குப் புரியவில்லை. கரைவேட்டி, கரைவேட்டியின் அண்ணன் என்று யார் யாரையோ திட்டுகிறாள் என்று தெரிந்தது..

வளர் வீட்டு வாசலில் அவள் இறங்கிக்கொண்டாள். ஆட்டோவின் வலதுபுறம் இருந்த கம்பித் தடுப்பை ஆண்பிள்ளை போல தாண்டி இறங்கினாள்..

‘வளரக்கா கிட்ட சொல்லாத’ என்று கரைவேட்டி குழைந்தது. காரித் துப்பிவிட்டு அவள் நகர்ந்தாள்.

திரும்பினார்கள். பவர் அவுசில் அவன் இறங்கிக்கொண்டு ஆயிரம் ரூபாய் நோட்டை நீட்டினான், ‘யாருகிட்டயும் சொல்லாத’ என்றான்.

டேவிட்டுக்கு எதையெல்லாம் சொல்லக்கூடாது என்று கேட்கத் தோன்றியது.. அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க கரைவேட்டி இன்னொரு ஆயிரத்தை நீட்டியது.

டேவிட்டுக்கு ஆச்சரியம். ‘வேணாம்’னு சொல்ல வாய் வந்தது. ஆனால், அதற்கு முன்பு கை நீண்டிருந்தது.

டேவிட் வாங்கிக் கொண்டு புறப்பட்டான்.

அந்த காசுதான் இப்ப ‘தண்ணியாக’ உள்ளே இறங்கிக் கொண்டிருந்தது. அந்தப் பெண்ணும் இவன் மகளைப் போலவே இவனுக்குத் தோன்றினாள். டம்பளில் இருந்த கடைசி சொட்டையும் நாக்கில் உதறிக்கொண்டு அனைத்தையும் ஏறக்கட்டினான். மகள் வருவதற்குள் தூங்கிப் போகவேண்டும் என்று படுத்தான்.

எதிர் சுவற்றில் ஏசுவின் படம் மாட்டியிருந்தது. இவன் கிருத்துவன் என்பதற்கான ஒரே அடையாளம் அதுதான். படத்தைப் பார்த்தான். ஏசு பாவங்களுக்காகப் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார். பாவத்தின் சம்பளம் மரணம் என்று எழுதியிருந்தது.

‘சம்பளமே பாவம்னா என்ன செய்யிறது?’ என்று முனகியபடியே தூங்கிப்போனான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *