பார்த்திபன்சார் காத்திருக்கிறார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 28, 2020
பார்வையிட்டோர்: 7,060 
 

அனல் உலையாய் கொதிநிலை பெற்றிருந்தது வீதி. மரத்தடி, கூரையடி, வீட்டு மனையின் நிழலவடிவம் எதிரேவந்து விருட்டென கடக்கும் பேருந்தின் புகைமலிந்த காற்று..என பேதமில்லாது எங்கெங்கும் வெப்பம் நிறைந்திருந்தது. சுவாசம் கூட இதமாய் இல்லை. நாசித்துவாரத்துள் சூடு புகுந்து கிடந்தது. கண்களிலும் காந்தல். தலையினில் எரிச்சல். மேனியெங்கும் வெந்நிலை.

தலையில் போட்டிருந்தகைக்குட்டையை எடுத்து, நெற்றியில் மேல்புறம் கசிந்த வியர்வையையை ஒற்றி எடுத்தபடி அந்த அலுவலக வாசலில் வந்து நின்றான் அவன். கண்ணாடியால் ஆகியிருந்த அதன்கதவைத் திறக்க ஒருநிமிடம் எடுத்து கொண்டான். மறுபடி கைக்குட்டையை மடித்து முகத்தில் சில இடங்களில் துடைத்துக் கொண்டான். குளிர்ந்த நீரால் முகத்தில் அறைந்தால் தேவலை. அதற் கெல்லாம் நேரமில்லை. பார்த்திபன் சார் காத்திருப்பார். அவருக்குப் பதில் சொல்ல வேண்டும். கைக்குட்டையை பைக்குள் திணித்துக் கொண்டு கதவை தள்ளியபடி உள்ளே நுழைந்தான்.

பெரியவீட்டு கல்யாண மண்டபத்தின் வாசலில் நிறுத்தியிருக்கும் பன்னீர் ஸ்ப்ரேயை ஒத்த குளுமையுடன் அந்த அலுவலகம் குளிர்ச்சியைக் கொண்டிருந்தது. செருப்பணியாத பாதத்தை தரையில் அழுத்திப்பதித்தான். ஜிலுஜிலு என சில்லிப்பு செல் அடுக்குகளில் வழியே தலைக்கு ஏறியது. எதிர்ப்பகுதியில் இடுப்பு உயரத்திற்கு மர வேலைப்படும் மேலே கண்ணாடிப் பலகைகளும் பொருத்தி இரண்டு கவுண்டர்கள் அமைத்திருந்தார்கள். ஆளுக்கொரு கம்ப்யூட்டரில் எதையோ எழுதிக் கொண்டிருந்தார்கள். இடதுபுறம் முழுக்க கண்ணாடிச் சுவர்களால் எழுப்பப்பட்ட அறை. இத்தனை குளுமைக்கு மேலும் கூடுதலாக ஒரு மின்விசிறியும், ஆடம்பரமான மேசை, இருக்கை வசதியுடனும் இருந்தது. அவன் நின்றிருந்த இடத்தின் பக்கமாய் மண்ணாலான ஒரு தண்ணீர்குடுவை வைக்கப்பட்டிருந்தது. தவிர அறை முழுவதும் வெண்ணிற வெளிச்சம் நிரப்பப்பட்டிருந்தது.

அவனது வருகையினைக் கண்ட வசு. – அவனுக்கு ஒன்றுவிட்ட சகோதரன். புன்னகை தவழ கைஉயர்த்தி அழைத்தான்.அவன் எல்லோருக்கும் போலசலாம் வைத்தபடி உள்க்கதவைத் தள்ளிக் கொண்டு எம்.டி. அறைக்குள் சென்றான்.. “என்னாங்கண்ணே எனக்குப் போய் வணக்கம் சொல்றீங்க..” என்றபடி கண்களை மூடி வண்க்கத்தை ஜீரணிக்க முடியாத செயலாய் தலையைக் குலுக்கிக் கொண்டான் வசு.

“ நல்லா இருக்கீங்களா..” ஏதோ ஒன்று வழக்கத்திற்கு மாறாய் ’டா’ போட்டு அழைக்கும் தம்பியை ங்க’ சொல்லி விளிக்க வைக்கிறதே..

அதற்கும் தலையசைத்த வசு, ” நீங்க.. எப்பிடியுருக்கீங்க..? ” என்றான்.

“ பிரமாதம் “

“ என்னா சாப்பிடுறீங்க..? “

“ ம்… தண்ணி.. ! “

“ ரெம்ப …. சிம்பிளா இருக்கீங்களேண்ணே… “

“தேவயானதத்தான கேக்க முடியும்..! – காரண காரிய மில்லாமல் இரண்டு பேருமே சிரித்தார்கள். சிரிப்பு முடிந்ததும், ”எதும் தேவை இல்லாம நீங்களும் வரமாட்டீங்க .. இல்லியாண்ணே..! இல்ல சும்மாதே பாக்க வந்தீகளா..? “ வசு

“உண்மதான் வசு. கொஞ்சம் பணம் தெவப் பட்டது அதான் ஒங்க கம்பெனில கேட்டுப் பாக்கலாம்னு.. “

பணம் என்றதும் வசு, எம் டி யாய் மாற வேண்டி வந்தது அடிப்படையில் தன் குடும்பத்தில் மூத்த உறுப்பினர் என்ற வகையிலும், ஏதோ ஒருஅமைப்பின் தலைவர் என்கிற நிலையிலும் மரியாதை தரவேண்டி இருந்ததால் எம் டி யை இப்போதைக்கு குரலில் மட்டும் ஏற்றிக்கொண்டான்.

” கொஞ்சம் .னா..? “

அவனுக்கும் தனது பேச்சு சரியில்லாததாகவே பட்டது. தொகையினைக் குறிப் பிடாமல் புதிர் போட்டுப் பேசியிருக்க கூடாது.

“ ஒரு…. ஒரு லட்சம் ரூபா !…” தம்பி என பெயர் சொல்லி கேட்பதா, உட்கார்ந்திருக்கும் இருக்கைக்கு மதிப்பளி த்துப் பேசுவதா குழப்பத்தில் பேச்சை பாதிலேயே விழுங்கிக் கொண்டான்.

இதே மாதிரிதான் பார்த்திபன் சாரும் அவனிடம் எச்சில் விழுங்கியவாறு பேச்சைத் துவக்கினார்.

பார்த்திபன்சார் ஒரு உயிர்காக்கும் மருந்து கபெனியின் விற்பனைப்பிரதிநிதி தனது அந்த தொழிலில் மெத்தப் பெருமை கொண்டவர். கழுத்தில் டை கட்டி கையினில் பெருத்தபை ஒன்றைச் சுமந்து, ஆடர் பிடித்து, சரக்கு அனுப்பி, பில் கொடுத்து வாங்கி கணக்கு முடித்த பிறகே பார்த்திபன்சார் கணக்கில் சம்பளம் என ஒருதொகை வந்து சேரும். இதில் ஊக்கத்தொகைக்காகவும், சில சமயத்தில் மாதாந்தர குறிக்கோளை முடிப்பதற்காகவும் அவர் படுகிற பாட்டில் உடனிருப்பவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிடும். எந்தரேரமும் கைபேசியும் பேச்சுமாய் .. வலிய வலியப் பேசுவார் ..சிரிப்பார்… கைகுலுக்குவார்..

விடுமுறை நாளென்று ஒன்று இருந்தாலும் அது நடைமுறையில் பெரிதாய் அவருக்கு உதவியதில்லை. ஆனாலும் மாதத்தில் ஒரு சில நாள் வீட்டில் இருப்பார். அந்த நாளில் அக்கம்பக்கத்து வீடெல்லாம் அவரை மொய்த்துவிடும் பிள்ளைக்கு சளி, எதைச் சாப்பிட்டாலும் ஒடனே வாயால எடுத்திருது, நாலு நாளைக்கி ஒருக்கா பேதியாயிருது. என பச்சிளங்குழந்தைகளைத் தூக்கி வருவார்கள். காத்திக மார்கழி மாசம்னு இல்லாம இப்ப பங்குனி சித்திரைலயும் தகிப்பு தாங்க முடீல.. என ஆண்களும், பிரச்ர், சுகர் என்று ஆங்கில்ம் பேசிக் கொண்டு வருகிற பெண்மணிகளுக்கும் இலவச ஆலோசனை மட்டுமல்லாமல், சாம்பிள் மருந்துக் குப்பிகளையும், மருந்து அட்டைகளையும் பத்திரப்படுத்திக் கொண்டுவந்து இருப்பு உள்ளவரைக்கும் இல்லையெனாமல் தந்து உதவுவார் தன்னிடம் கிடைக்காத மருதுகளை தன் சக பிரதிநிதிகளிடம் கோரிப்பெற்றும் தருகிற் உன்னத மனிதர் பார்த்திபன் சார். அறிவிக்கப்ப்டாத இலவச வைத்திய சாலையாகவே அவரது இல்லம் மாறிவிடும். அதேபோல குனத்திலும் தங்கம் அமைதியாய் அழகாய்ப் பேசுவார். அவர் பேசப்பேச இன்னும் பேசமாட்டாரா என அத்தனை இனிமையாய் இருக்கும்.ஆளும் பார்க்க சூப்பராய் இருப்பார்.

அந்த பார்த்திபன் சாருக்கு ஒரு சிறு தேவை. அவரோடு வேலைபார்க்கிற சக பிரதிநிதி நண்பர்கள் சேர்ந்து ஒருகாலிமனை வாங்கிப் போட்டிருந்தனர். அதில் கட்டிட வேலை நடைபெறுகிறது. கொஞ்சம் சேமிப்புப் பணத்தோடு வங்கிக் கடன் போட்டு வேலை ஆரம்பித்தார். தெரிந்த ஒரு எஞ்சீனியரிடம் மொத்தக் காண்ட்ராக்ட் விட்டிருந்தார். வேலைமுடிந்து விட்டது. அதிசயமாகவங்கியிலும் தவணை தாமதமில்லாமல் வந்துசேர்ந்துவிட்டது. கடைசித் தவணைமட்டிலுமே வரவேண்டி இருக்கிற்து. வேலை முடிவடைந்ததற்கான அத்தனை சான்றுகளும் கட்டிடத்தின் பூரணத்துவ புகைப்படம் உட்பட ஒப்படைத்தாயிற்று. பணம் ஒரு வாரகாலத்தில் வர வாய்ப்பிருக்கிறது.

ஆனால் அதற்கு முன்னதாக கிரகப்பிரவேசம் நடத்த குறித்த நாள் நெருங்கி விட்டது. நாளை மறுதினம் பால்க்காய்ச்சி புதுமனை புக உள்ளார். வங்கிப்பணம் விடுமுறைகளால் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. காண்ட்ராக்ட்ரிடம் மீதப் பண்ம் கொடுத்து வீட்டின் சாவியை வாங்க வேண்டும். சொல்லிக் கொள்ள லாம் தான். அதில் பார்த்திபன் சாருக்கு இஷ்டமில்லை. வியாபாரத்தில் கூட வார்த்தைப் பிசகு இருக்கலாம். வீடு என்பதும் ஆயிரங்காலத்துப் பயிர்தான். சொந்தக் காசைப்போட்டோ அல்லது கடன் வாங்கியோ தனது சந்ததியின ருக்காக காண்ட்ராக்டர் கட்டிமுடித்த வீட்டுக்குப் பாக்கி சொல்லி வீட்டுச்சாவி யினை வாங்குவதும் பெரிய துரோகம்தான். காண்ட்ராக்டர் சின்ன அளவில் மனச்ச்லனம் ஏற்பட்டாலும் அது வீட்டைப் பாதிக்கும்…. ஆகவே என்ன கண்டிசன் என்றாலும் சரி, வட்டி சொன்னாலும் சரி. ஒருலட்சம் ரூபாய் மட்டும் வேண்டும். ஒருவாரத்தில் வங்கிப்பணத்தை வாங்கி அந்தக் கடனைக் கொடுத்து விடலாம். என கேட்டார்.

ஒரே தெருக்காரர். ஊருக்கே ஓசிவைத்தியம் செய்யும் அப்பழுக்கில்லாத மனிதர். தன்னால் ஒரு முயற்சிசெய்து பார்ப்போமே என பார்த்திபன் சாரிடம் தானாகவே வாய் கொடுத்தான். அவன், “தேனில, எங்க பெரியப்ப மகெ ஒரு பைனான்ஸ் வச்சிருக்கான். ‘லானா’ கணக்கிலதான் வரவுசெலவு… கேட்டுப் பாக்கட்டுமா..!”

பார்த்திபன்சார் எந்த வார்த்தையும் பேசவில்லை. கண்களில் உணர்ச்சிமின்ன, கையெடுத்துக் கும்பிட்டர். “ ஓரேவாரம்தான் சார். நான்கூடுதலாத்தான் டைம் கேக்கறேன்.விஷேசம் முடிஞ்ச அடுத்தநாளே பணத்த செட்டில் பண்ணீரலாம் சார்.. ” என்றார்.

அவனுக்கு முன்னால் தடித்த உயரமான ஆனால் குறைந்த கொள்ளளவே கொள்ளும் கண்ணாடித்தம்ளரில் வெளிர்சிவப்பு நிறத்தாலான பானம் வைக்கப் பட்டது. தம்ளரின் வெளிப்புறம் கசகச்வென வியர்த்திருந்தது.

அது அன்னிய பானம் என உணர்ந்துகொண்டான். சற்றே விலகியவன்போல தன்னைப் பின்னுக்கிழுத்துக் கொண்டு, ”அய்யோ இதெல்லாம் வேணாம்..” மறுத்தான்.

“ண்ணே .. வெறும் பேண்ட்டா.. ண்ணே.. ! “ – வசு.

“ அதான்.. நா.. இதெல்லாஞ் சாப்பிட்றதில்ல..”

“ ஸு கரா.. ? “

அன்னியபானத்தை தொடாத தனது கொள்கையினை இங்கே சொல்லவிருப்ப மில்லை. அதன் காரணமாய் பேச்சு திசைமாறலாம். பார்த்திபன் சாரை ரெம்பவும் காக்க வைக்கவேண்டாமே… “ இல்ல வசு..! இந்த இடமே, குளுகுளு னு இருக்கு, இதுக்குமேல.. வெறும் தண்ணிதான் … வேணும்.. “

“ரைட்.. அண்ணனுக்கு தண்ணி கொண்டுவாப்பா.. “ உடனடியாய் பானம் அகற்றப்பட்டது.

“அப்ப்டின்னா லோன் உங்களுக்கு இல்லியா..? “

“ஆமா .. நம்ம பிரண்டுக்கு.. என்னியக் காட்டியும் ரெம்ப சுத்தமானவரு. பக்கா ஜெண்டில்மேன்..”

அவன் சொல்லிமுடித்ததும் வசு கடகடவெனச் சிரித்தான். அந்தநேரம் கதவைத் திறந்துகொண்டு மினிஸ்டர் வொய்ட்டில் உடையும், கழுத்திலும் கைமணிக்கட் டிலும் தங்கச்சங்கிலிகளும் புரள, ஒருத்தர் அவர்கள் இருந்த அறைக்குள் நுழைந்தார்., வசுவுக்கு பக்க இருக்கையில் அமர்ந்தார். கம்பெனியின் பங்குதாரா என யூகித்துக்கொண்டான் அவன். உடனே அவருக்கு வணக்கம் தெரிவித்தான்..

“அண்ணே.. ! – வசு , வந்தவ்ருக்கு அவனை அறிமுகம் செய்வித்தான்.

“சிரிச்சுப் பேசிட்டுருந்தீங்க.. எடையில நாம் புகுந்திட்டேன்..! “

“சிரிப்பா.. ? “ என்ற வசு, “ அண்ணே ஒரு ரெக்கமண்டேசனுக்கு வந்திருக்கார். பார்ட்டியப்பத்திச் சொன்னாரு.. ஜெண்டில்மேனாம் வார்த்தயக்கேட்டதும். தானா சிரிச்சிட்டேன்..”உடனே பங்குதாரரும் சிரித்தார், “தப்ப எடுத்துக்காதீங்கண்ணே.. எங்ககிட்ட வார பார்ட்டிக பூராமே சொல்ற மொதல்வார்த்த இதுதான். அதனாலதான் வசு சார் சிரிச்சிட்டார்.“ என விளக்கம் கொடுத்தவர் வசுவிடம் திரும்பி, “அந்த கோணாம்பட்டி பார்ட்டிய இழுத்திட்டு வந்திருக்கேன்.” மெல்லிய குரலில் சொன்னார்.

“அப்பிடியா… வரட்டும். “

“இல்ல.. நா எதயும் கூடுதலா சொல்ல் மாட்டே..” – சொல்லும்போதே அவன் தன் பேசுகிற வார்த்தையின் கனம் தேய்ந்து போவதாய் உணர்ந்தான். முன்முடிவில் இருப்பவர்களிடம் வார்த்தைகளை விரயம் செய்கிறோமோ எனவும்கூட எண்ணத் தோன்றியது.

“நாங்க ஒங்கள்யோ ஒங்க பிரண்டயோ சொல்றம்னு தப்பாநெனச்சிடவேணாம் பொதுவாவே எல்லார்க்குமே ஒரு தேவை இருக்குது. அத கைப்படுத்த சில அலங்காரமான வார்த்தைகள் போடுறதுக்கு யாரும் சங்கடப்படுறது கிடையாது. நாங்களுமே உங்க இடத்தில் இருந்தா அத்தத்தான் பேசப் போறம். இந்த சீட்டுக்கு வந்தப்பெறகுதே நிறையக் கத்துக்கிட்டாம். இப்ப ஒராள் வருவார் இங்க வருவார் பாருங்க. அவரு, கோணாம்பட்டில பெரிய்ய ஆளு, ஏகப்பட்ட நெலபுலம், ஊருக்கே அவர்தான் நாட்டாம – தீர்ப்பு சொல்றவரு. எங்ககிட்ட ஒரு சின்ன அமவுண்டு வாங்கிக்கிட்டு அஞ்சாறு மாசமா தவண கட்டாம தாயம் வெள்ளாடுறாரு.. கேட்டா ஆயிரம் காரணம்… அடுக்குறாரு”

“நாட்டாம யில்லியா…” வசு, பங்குதாரருக்கு இசைவாய் பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரெனகுரல் ஒரு உயரத்திற்குத் தாவுகிறது., “நாமல்லா சாப்பாடுதான சாப்பிடுறம்.. புல்லு, புண்ணாக்கு திங்கலியே..” என்றான்.

“சார்.. கொஞ்சம் பொறுமயா நாஞ் சொல்றதக் கேக்கணும்..” – அவனுக்குப் பின்னாலிருந்து ஒரு இரைஞ்சும் குரல் ஒலித்தது. அவன் திரும்பிப் பார்க்க, ஐம்பத்தைந்து வயதொத்த ஒருவர்- அவரும் வெள்ளை உடுப்புதான். கூடுதலாக தோளில் துண்டும், முகத்தில் கலவரமும் அணிந்திருந்தார்.

“நீங்க சொல்லவேண்டியதெல்லாம் கூடுதாலாவே சொல்லியாச்சு நாங்களும் கேட்டாச்சு. வண்டியத் தூக்காம இவரமட்டும் என்னாத்துக்கு கூட்டி வந்தீக சாணிபோடவா.” அருகிலிருந்த பங்குதாரரை விரசினான் வசு.

“வண்டியக் காமிக்க மாட்றார்ல..”

“வண்டிய வித்துட்டீகளா..? “

“அய்யோ, அது எங்க கொலசாமிசார்.. உழுது கஞ்சி ஊத்தற ட்ராக்டரப்போயி யாராச்சும் விப்பாகளா.. வாடகைக்கு மண்ணடிக்கப் போயிருக்கு. ரெண்டேநாள் டயம் குடுங்க.. தவணைய முடிச்சிடுறேன்..”

“ரெண்டு நிமிசம் கூட கிடையாது. வண்டி எங்க இருக்கு..? “

“வட்டியப் போட்டுக்கங்க சார்…! “

“யே.. நொட்டி நோனியெல்லா பேசவேண்டாம்யா.. வண்டி எங்கருக்கு..?” கேட்டவன், ஆபீஸ்பையனை அதேவேகத்தில் கூப்பிட்டான். “டே மகேசு, கார் எடுத்துக்கிட்டு அய்யாவ கூட்டிகிட்டுப் போ, வண்டியக் காட்டுவாரு லாக் பண்ணிக் கொண்டு வந்திரு போறவழில அய்யாவுக்கு சாப்ட நாகர் ஹோட்டல்ல ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி வாங்கிக் குடுத்திரு..”

அறைக்குள் அமிலமழை பெய்து ஓய்ந்த அவசம் தென்பட்டது.

”பார்ட்டியக் கூட்டிட்டு வராம அண்ணேமட்டும் வந்திருக்கிறாரு.“ வசுவிடம் பங்குதாரர் குறைபட்டார்.

“அண்ணே தன்பேரில் வாங்கித் தர வந்திருக்காரு. “

“ஓ… அத்தன நம்பிக்கையான ஆளா.. ?“ – அவரது அந்தக்கேள்வி அவனது உறுதியைக் குலைக்க வந்தது போலிருந்தது. ஆனாலும்கூட , ’ஆமாம்’ என தலையாட்டினான்

“கூடப் பொறந்தவனே கோர்ட்டுக்குப் போற காலம்…ணே..”

“ஜாமீன் கையெழுத்துப் போடவே ஆயிரம் யோசனை பண்ணூவாங்க.. நீங்க இவ்வளவு வெள்ளந்தியா இருக்கீங்களே.. “

“இல்ல… பார்த்திபன் ரெம்ப நல்லவர். ஆருக்கும் தீங்கு நெனையாத மனிசர். “

“உண்மதான் யாருக்கும் யாரும் தீங்கு நினைக்க மாட்டாங் கண்ணே ஆனா சூழ்நிலை மாறிடுச்சுன்னா…? அந்தப்பணத்துக்கு வேறசெலவு வந்திருச்சுன்னா? மனுசவாழ்க்கைல எத்தனையோ நல்லது கெட்டது நடக்கலாம்ல..”

“நா ஒங்க நல்லதுக்குத்தா சொல்றேன். நாங்க ஒங்களுக்கு ரூவா தந்திடலாம். பிரச்சனையில்ல. ஒரு செக்யூரிட்டி கேப்பம். அதயும் கூட நீங்க தந்திருவீங்க ஆனா சொன்னதேதி மாறுதுனா, போன் பண்ணுவம். நேர்ல வருவம். இது எல்லாத்தியுமே லெட்ஜர்லயும் குறிச்சுவச்சிருவம். போன்போட்ட நேரம், நீங்க சொன்ன பதில், நாங்ககேட்ட கேள்வி, பாத்துக்கங்க. அடுத்தாளுக்கு எப்பவுமே ரிஸ்க் எடுக்காதீங்க.. வாசுவோட அண்ணங்கறதுனால இவ்வளவும்சொல்றேன்.

”என்ன வட்டீன்னாலும் கண்டிசன்னாலும் வாங்கச் சொல்லீர்க்காராம் அந்த பார்த்திபனசார்” என இளக்காரமாய்ச் சிரித்த வசு, “அவருக்கு வாங்கிக் கொடுக் கறதுல ஒங்களுக்கு ஏதும் லாபம் இருக்கா..ண்ணே”

என்ன சொல்ல…? இடம் வலமாய் தலையாட்டினான் அவன்.

“அஞ்சுகாஸ் பிரயோசனம் இல்லாம எதுக்கு இப்பிடி வெட்டியா வந்து உங்கள கஷ்டப்படுத்திக்கிறீங்க.. நா ஒண்ணு சொல்றேண்ணே.. யாராச்சும் பணம்ணு கேட்டா நம்ம கைல என்னா இருக்கோ.. அதக்குடுத்து கையக்கழுவிக்கறணும். அது, வந்தாலும் போனாலும் அது நம்மோடவே போயிடும். இந்தமாதிரி ஜாமீன் போட்றது.. தம்பேர்ல பணம்வாங்கித் தற்ரது சிக்கல்ணே”

“பலபேரு உங்களமாதிரி ஜாமீன்போட்டே எத்தன சொத்த இழந்திருக்காங்க தெரியுமா.. ..வாங்குன ஆள் சந்தோசமா சவுக்கியமா இருப்பான்.. எவ்வளோ பேர் இதனால ஊரவிட்டு ஓடிருக்காங்க . . ஒங்களுக்குத்தெரியாததில்ல…”.

அதிகமான குளிர்ச்சியினாலோ என்னவோ அவனுக்குக் காதை அடைத்துக் கொண்டது. அவர்களின் பேச்சு எதுவும் விழவில்லை. பார்த்திபன் சார் காத்துக்கிடப்பார். உடனடியாய் அங்கிருந்து வெளியேறி வேறிடம் செல்ல்வே கால்கள் விரும்பின.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *