பாம்பு வேட்டை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 15, 2023
பார்வையிட்டோர்: 1,678 
 
 

உணர்வு வரும்போது முதலில் ஞாபகம் வந்தது ஆற்றுமணலில் வரைந்த‌ சித்திரம்போல் அந்தப் பெண்ணின் முதுகிலிருந்து இடைவரை வழிந்தோடிய மெல்லிய‌ பூனை முடிகளின் நடனம்தான். அவள் யாரென்று நினைவிற்கு வரவில்லை. அடிக்கடி சந்திப்பவளாக‌ இருக்கலாம் என நினைத்துக்கொண்டான் பாஸ்கர். எப்படி அழைத்து வரப்பட்டான் என்பதும் நினைவில் இல்லை. இரண்டு மணிநேரம் கழித்தே ஓர் ஆட்டோக்காரர் கொண்டு வந்ததாக சொல்லக் கேட்டான். தாறுமாறாக வண்டி ஓட்டுபவன்தான், இதுவரை எங்கும் விபத்து நடந்ததில்லை. ஆனால் அன்று மின்கம்பத்தில் இடித்தபோது இரவு 3 மணிக்குமேல் இருக்கும். போதையில் இருந்ததால் சரியாக நினைவில்லை. வலதுபக்க கண்ணாடி கழுத்தில் குத்தியதால் ஏற்பட்ட‌‌ அதிர்ச்சி நினைவிருக்கிறது. அதில் இருந்த‌ ஏதோ ஒரு ப்ளாஸ்டிக் பொருள் உடைந்து கண் அருகில் குத்தியதும் தோள்களை சுருக்கித் தலைசாய்த்து கண்களை இறுக மூடிக்கொண்டான். அப்போது ஒரு திருப்பத்தில் வலப்பக்கமாக‌ சாய்ந்து ரோட்டை தேய்த்தபடி அவன் வண்டி சறுக்கி ஓடிக் கொண்டிருந்தது நினைவிருக்கிறது. அந்த வேகத்தில் முன்னால் இருந்த பம்பர் வளைந்து வலது காலை குத்தி அவனை நிலை தடுமாற வைத்து கீழே தள்ளியது. கையை ஊன்றிய‌போது கிளிக் என்று ஒரு சத்தம். கால்களில் முட்டி தேய்ந்து உருண்டு உருண்டி ஓரமாக இருந்த இரண்டு கருங்கல் கப்பிகளின் மீது தாறுமாறாய் விழுந்தான்.

இவைகள் அனைத்தையும் சிறு சிறுகாட்சிகளாக மாற்றி மனதில் இருத்திக் கொள்ள முடியும். இடித்ததும் குதம் முதல் க‌ழுத்துவரை சுள்ளென்ற வலி மேல்நோக்கி ஒரு இழுப்பு இழுத்து அவனை நினைவிழ‌க்க வைத்துவிட்டது. கடந்துச் செல்லும் வண்டிகளின் ஓசைகள் மட்டுமே கேட்டன‌. ஒவ்வொரு ஒலியும் அதிரவைத்து அவன் நினைவை மீட்டெடுக்க முயற்சித்தும்கூட‌ பயனளிக்கவில்லை. மயக்கத்திலும் அப்போது வீசிய‌ மெல்லிய ஈரக்காற்று நினைவிற்கு வருவதுதான் ஆச்சரியமாக இருந்தது.

உத்திரத்தில் தொங்கிக்கொண்டிருந்த விளக்கின் நீள நிழலையும் பக்கவாட்டுச் சுவரில் விழும் வெய்யிலின் நிழலையும் கவனிப்பதுமாக இருந்தான் பாஸ்கர். கழுத்து, கைகள், கால்களுக்கு கட்டு போட்டிருந்ததால் அவனால் சரியாகத் திரும்ப முடியவில்லை. மயில்வாகனம் வந்திருந்தார். டீ விற்கும் பெட்டிக்கடை பாலு தன் அதே அழுக்கு சட்டையுடன் வந்திருந்தார். சிங்காரம் அண்ணன் வந்தது தெளிவாக‌ நினைவிருக்கிறது. அவர் என்ன சொன்னார் என்பது நினைவில்லாமல் அவரின் உதட்டசைவுகளாகதான் இப்போது மனதில் இருக்கிறது.
தன் உடல் இருப்பதை உணர்வது அதன் வலிகளை கொண்டுதான் என நினைத்தபோது சந்தோஷமாக இருந்தது. உடல் முழுவதும் கீறல்கள், காயங்கள், கட்டுகளுடன் தோல்நிறம் பழுப்பு கறுப்புமாகக் காய்ந்து கிடந்தது. வயிற்று கீறல்களை தொட்டுப்பார்க்க வேண்டும் என நினைத்தான். அது முடியாது என உணர்ந்த போது வயிற்றை எக்கி மெல்ல இருமிக் கொண்டான்.

சென்னை சைதாப்பேட்டையில் இறங்கியதிலிருந்து இதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லையே என்ற நினைப்பு வந்துகொண்டேயிருந்தது. பட்டண‌ம் அவன் பார்க்கவேண்டிய ஒரு முக்கிய சம்பவமாகவும், ஒரு அதிசய நிகழ்வாகவும் இருக்கும் எனவும் நினைத்திருந்தான். காலை ஏழுமணிக்கு இவ்வளவு வெய்யிலின் கடுமையை அவன் எதிர்ப்பார்க்கவில்லை. பனியன் இல்லா அவனது பழைய பாலியஸ்டர் சட்டை உடலோடு ஒட்டிக் கொண்டு வேர்வையில் எல்லா இடங்களிலும் முட்களால் குத்தியது போலிருந்தது. முன்பே அப்பா சொல்லியிருந்தபடி எதிர்சாரிக்கு சாலை கடந்து மாநகர‌ பஸ் ஏறினான்.

நகரத்தின் நெரிசல்களை முதலில் பார்க்கிறான். அதன்பின் நெரிசல்களை பலசமயங்களில் விபத்து என்றே எண்ணிக்கொண்டான். விபத்தாக தெரிந்த தூரத்து நெரிசல்களை பக்கத்தில் செல்லும்போது அது பேருந்திற்கான காத்திருப்பு என அறியும்போது அளவிடமுடியாத ஆச்சரியமாக‌‌ இருந்தது. ஒரு சமயம் நிஜமான விபத்து நடந்தபோது அது எப்போதும் போன்றதொரு காத்திருப்பு கூட்டம் போலிருந்ததுதான் விந்தை.

தஞ்சாவூர் பக்கத்தில் அய்யம்பேட்டை பக்கத்தில் பசுபதிகோயில் என்கிற சின்ன கிராமம் அவனது ஊர். பிளஸ்டூ முடித்து வீட்டுக் கஷ்டத்திற்காக விடுமுறையில் வேலை செய்ய அப்பா அனுப்பியதும் சென்னைக்கு ப‌ஸ் ஏறியது சாதாரணமாகத்தான் இருந்தது. கையிலிருந்த கொஞ்சம் காசையும் ஒரு கடிதத்துடன் சேர்த்து அப்பா கொடுத்ததும்‌ அவரின் நல்ல பிள்ளையாக‌ ஒரு பையைத் தூக்கிக்கொண்டு பஸ் ஏறிவிட்டான்.
பழக்கமில்லாத வெய்யிலும் எதையும் கவனிக்காத மனிதர்களும் அவனுக்கு மிக அன்னியமாக இருந்தன. யாருக்கும் நகரத்தின் தெருப்பெயர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனக் கண்டடைந்தவுடன் தெரு முனையில் இருந்த பெயர்ப் பலகைகளைக் கொண்டு அவனே தேடி அடையாரில் இருந்த ஒரு சின்னக் கடைக்கு வந்தான். தட்டச்சு செய்து கொடுக்கும் கடைமுதலாளி சிங்காரம் அண்ணன் அவன் நினைத்ததைவிட அந்த நகரத்திற்குப் பொருத்தமில்லாமல் வேட்டியிலும் பனியனிலும் முறுக்கிய வெள்ளை மீசையுடன் பார்க்க‌ ஒரு விவசாயி போல‌ நின்றிருந்தார். அப்பாவின் பால்ய நண்பர். இருவரும் சந்தேகமாக ஒருவரை ஒருவர் பார்ப்பதுபோல உணர்ந்தான். அவன் அளித்த கடிதத்தைப் பார்த்தது அவர் அடைந்தது மகிழ்ச்சியா இல்லையா என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் முகமே அப்படித்தான் எனப் பின்னாளில் புரிந்தது.

அவர் தோற்றத்தையும் கடுகடு முகத்தையும் பார்த்தபோது அவர் வேலை இல்லை என்று சொல்லிவிடுவார் எனத் தோன்றியது. ஆனால் அப்படி ஒருபோதும் சொல்ல முடியாத அளவிற்கு வேலைகள் அவருக்கு இருந்தன‌. அவருக்கு கீழ் வேலை செய்ய நிறையப் பேர்கள் இருந்தார்கள். டைப் அடிக்க, அடிப்பவர்களுக்கு விஷயங்களை எடுத்துக்கொடுக்க அதைப் பதிவுஅலுவலகரிடம் கொடுக்க, வாடிக்கையாள‌ர்களை கவனிக்க, அழைத்துச் சென்று அவர் செய்யும் ரியல் எஸ்டேட் இடங்களைக் காட்ட என்று எத்தனையோ வேலைகள் இருந்தன. தட்டச்சு வேலை கொடுத்தால் போதும் அந்த பணம் வீட்டிற்கு அனுப்பவும், விடுமுறைக்காலம் முடிந்ததும் பின் ஊர் சென்று கல்லூரி சேர்ந்து படிப்பை தொடர ஏதுவாக பணப்பிரச்சனை கொஞ்சம் இல்லாமல் இருக்கும் என்று எளிய கணக்கு ஒன்றை நினைத்து வைத்திருந்தான்.

அவன் நினைத்தது போல தட்டச்சு வேலைதான் கிடைத்தது. ஆனால் அவனை வேண்டுமென்றே எப்போதும் கவனிக்காதவர் போலிருந்தார் சிங்காரம் அண்ணன். அவன் அவரைப் பார்க்கும்போது அவன் செய்யும் வேலை தனக்கு பிடிக்கவில்லை என்பதுபோல் அவர் முகம் இருந்தது. அவர் முன்னால் த‌ன்முகத்தை எப்படி வைத்துக் கொள்ளவேண்டும் என தெரியாமல் தடுமாறினான். அவர் செய்வது ஒரு பாவனைதான் என்பது புரிய கொஞ்ச‌நாள் ஆகியது. ஒரு மாத‌த்தில் பாஸ்கரின் வேகத்தை புரிந்துகொண்டவர் போல தெரிந்தார். மேல் சிந்தனைகள் ஏதுமில்லாமல் கொடுக்கப்படும் வேலைகளை கொடுப்பவரின் நன்மை மட்டுமே கருதி செய்பவன் என புரிந்துகொண்ட அல்லது அதை புரியவைத்த கணத்திற்குபின் பாஸ்கர் மீதான‌ கவனத்தை அதிகப்படுத்தினார்.

‘தம்பி சாப்பிட்டாரா.. இல்லன்னா சாப்பிட்டு வரசொல்லுங்க…’ ‘தம்பி சும்மா இருந்தா அவரையும் கூட்டிகிட்டு போங்க..’ என்பது போன்றவைகளாக இருக்கும். அப்போதெல்லாம் கண்கள் மின்ன அவரைப் பார்ப்பான். அவரும் அவன் அப்படி பார்ப்பதை உள்வாங்கிக்கொள்வார்.

அவன் செய்யக்கூடிய வேலைகளின் எல்லையை அவன் தீர்மானிப்பதைவிட ஒரு அவசரம் அல்லது ஆபத்தை கொண்டு தீர்க்க வைத்து அவனின் பரவச சாத்தியங்களை அதிகப்படுத்தினார் சிங்காரம் அண்ணன். அவரின் புத்திசாலிதனமான முன்னெடுப்புகள் அவனை அதிகம் கவர்ந்தன. அவரின் கீழிருந்த எட்டு பேரில் அவனை பிரத்தியேக கவனிப்பில், அன்பு தோய்ந்த வார்த்தைகளின் மூலம் அவனை உயர்த்தி பிடித்து ‘நம்ம பையன்..’ என்று மற்றவர்களிடம் காட்டியதாக அவனுக்குத் தோன்றியது. இதனால் அவரின் கீழிருந்த‌ இரண்டு பேர் அவன்மேல் பொறாமையுடனும், கோபத்துடனும் இருந்தார்கள். அது அவருக்கும் தெரிந்துதான் இருந்தது. ஒரு நமட்டு சிரிப்பு சிரித்துக் கொள்வார் எட்டுபேரில் சிலர் கொஞ்சம் படித்தவர்கள், சிலர் படிக்காதவர்களும் இருந்தார்கள். அவர்களுக்கு அனுபவமும் அறிவும் இருந்தாலும் சூழலறிவு புரியவில்லை என்று சிலசமயம் அவனுக்கு தோன்றியது உண்டு.

ஒரு மாதம் முடிந்ததும் இன்னும் ஒரு மாதம் இருந்துவிட்டு ஊருக்குபோய்விடும் அவசரத்தில் இருந்தான். ஆனால் அவன் ஊருக்கு போவதை சிங்காரம் அண்ணன் ரசிக்கவில்லை. அதேவேளையில் இன்னும் அனுபவம் பெறும்போது வாய்ப்புகள், மக்கள் தொடர்பு போன்றவைகளைப் பெறமுடியும் என்பதையும், அதன் மூலம் நிறைய பணம் சம்பாதிக்க முடியும் என்பதையும் பலசமயங்களில் மறைமுகமாக சொல்லிவந்தார். அடுத்த ஆண்டு படிக்க‌ வைக்க தன்னால் முடியும் என்றும் இங்குள்ள கல்லூரிகளில் தன‌க்கு சிறந்த தொடர்பு இருக்கிறது என்றும் கூறிவந்தார்.

இவைகளை எதையும் நேரடியாக அல்லது ஒரே நேரத்தில் யாரிடமும் அவர் கூறுவதில்லை. அவசரமான வேலைகளின் இடையே மற்றவர்கள் மூலம் அதுவும் சாதாரண பேச்சில் உரையாடல் வாயிலாக வெளிப்படுத்துவார். ஆனால் அது அவனை வந்தடையும்போது சாதாரணப் பேச்சாக இல்லாமல் ஒரு ஆணை போல் இருக்கும். அதை மீறுவது அவரை அவமதிப்பது போல் எடுத்துக் கொள்ளப்பட்டது.

சிங்காரம் அண்ணன் குடும்பத்துடன் திருவான்மியூரில் இருந்தார். வேலை செய்பவர்களுக்காக தங்க ஒரு சின்ன வீடு அடையாரில் எடுத்துக் கொடுத்திருந்தார். பாஸ்கர் அங்குதான் தங்கினான். அவர்களுக்கு ஒரு பெண்மணி சமைத்துவிட்டுபோவார். ஒருவேளை அவரை விட்டுப் போனால் இந்த இரண்டும் போய்விடும். அவருடன் இருக்கும்வரை இந்த பெரிய நகரத்தில் தங்கவும், உணவிற்கும் அவனுக்கு பிரச்சனை வர‌வில்லை.
முதலில் சாதாரண வேலையாளாக அவருக்கு கீழ் வேலை செய்பவனாகதான் சேர்ந்தான். சில மாதங்களில் அவரின் சிஷ்யனாக அவர் செய்யும் வேலைகளை தீர்மானிக்கும் காரியதரிசிபோல மாற ஆரம்பித்தான். அவருக்கான காரியதரிசி என்பதைவிட அவனுக்கான முதலாளியாக இருந்தார். அவர் தேடும், தொழில் கற்றுக்கொள்ள விரும்பும், ஆதர்ஷ்ய சிஷ்யனாக தன்னை மாற்றிக்கொண்டான். அவன் உருவாக்கி கொள்ள ஆரம்பித்திருந்த கனவுகளில் லட்சியங்களில் அவர் இருந்தார். நடைகளில், உச்சரிப்பில், அவரைப்போல இருக்க முயற்சி செய்தான். அவருடன் இருக்கும் வரையில் அவன் வாழ்வில் தோல்வியடைய வாய்ப்பே இல்லை என்று நினைத்துக் கொண்டான்.

நர்ஸ் வந்து மணிப் பார்த்து டிரிப்ஸை சரி செய்தார். வெள்ளைபுடவையின் முந்தானையை இடப்பக்கம் இழுப்பதும் டிரிப்ஸை சரி செய்வதுமாக இருந்த ந‌ர்ஸைப் பார்த்து சிரிக்க முயற்சித்தான். அவளிடம் அடுத்தடுத்த நோயாளிகளைப் பார்க்கும் அவசரம் இருந்தது. சட்டென ஒரு சிரிப்பு சிரித்து “எதாவதுன்னா சொல்லுங்க” என்றபடி வெளியேறினாள்.

சிங்காரம் அண்ணன் பொதுவாக மந்தமான‌வர் போலத் தெரிவார். ஆனால் அவரது வேகம் ஒரு புலியின் பாய்ச்சல் போன்றது. இன்ன மனிதர்களிடம் இப்படிப் பேசவேண்டும் இப்படிப் பேசக்கூடாது என்று பல அவருக்கு அத்துபடி. ஓர் அரசு அதிகாரியிடம், ஒரு தொழிலதிபரிடம், ஒரு பிரபல்யரிடம் எப்படி பேசவேண்டுமென்கிற வேறு வேறு தோரணைகள் அவருக்குத் தெரிந்திருந்தன. ஒரு சின்ன பிசிறு இல்லாமல் அவரால் பேசமுடியும். அவர்களை எப்படி தன்வழிக்கு கொண்டு வருகிறார் என்பதைப் புரிந்துகொள்வதும் கடினம். அவரைப் பின் தொடர்வதில் வெற்றி கண்டான். அவரே அவனுக்குச் சொல்லிக்கொடுத்தார் என்றாலும் பெரிய பிரச்சனைகளின் போது அவனை அறியாமல் அவரிடம் வந்துவிடுவான். இல்லையென்றால் எட்டு ஆண்டுகளாக‌ அவரிடம் வேலை செய்வது கடினம்.

தொடர்ந்து படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தது ந‌டக்கவில்லை என்பது உறுத்தலாக இருந்ததாலும், புதிய உலகை தெரிந்து கொள்வதில் இருந்த ஆர்வம் சற்றும் மழுங்கிவிடவில்லை. ஒவ்வொரு ஆண்டிலும் புதிய ப்ராஜக்ட்டுகள் வந்துகொண்டே இருந்தன‌. நினைவு வந்தவராக சிங்காரம் அண்ணன் அடுத்த ஆண்டும் பாத்துக்கொள்ளலாம் என்பார். அவனே மறந்துபோனதை அவ்வப்போது இப்படி நினைவு படுத்துவார்.

பொதுவாக சிங்காரம் அண்ணன் வேலை சம்பந்தமற்ற மற்ற விஷயங்களை வேலை ஆட்கள் யாரிடமும் அதிகம் பேசமாட்டார். சரக்கு அடித்திருக்கும் நாட்களில் மட்டும் பேசுவார். அப்போது பக்கத்தில் இருக்கும் யாரிடமும் அவருக்கு எதையாவது சொல்ல நிறைய இருக்கும். தன் அனுபவங்களைப் பற்றி தன் திறமைகளைப் பற்றி தான் எப்படி இந்த ஊருக்கு வந்தேன் எப்படி மனிதர்களை புரிந்துக் கொண்டேன் என்ப‌தைச் சொல்ல ஆரம்பிப்பார்.

பணம் இல்லாதவனை கையாள்வதுதான் கடினம், பணம் உள்ளவனை கையாள்வது எளிது என்பார். ஒருவனுக்கு கொஞ்சம் பணம் வந்ததும் உலகத்தை நோக்கி பயப்பட ஆரம்பிப்பான் என்பார். கதைகளையும் அனுபவக்கதைகளையும் கூறுவார். ஒரு முறை ஒரு பாம்பு கதை ஒன்றை கூறினார். எலியை சாரைப் பாம்பு வேட்டையாட நினைத்தது அது சென்ற மேடுபள்ளமெல்லாம் பின் தொடர்ந்து அது தப்பித்துவிடாமல் இருக்க ஓசை எழுப்பாமல் சென்றது. மிக அருகில் வந்து அதை பிடிக்க பாய்ந்தபோது அதன் பின்னால் வந்த நல்லபாம்பு சாரைப்பாம்பை பிடித்துவிட்டது. பின்பு அந்த சாரைப்பாம்பை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கியது. உண்மையில் எலியை பின் தொடர்ந்தது சாரைப்பாம்பு அல்ல நல்ல பாம்புதான் என்றார்.

நல்லபாம்பு எலியை வைத்து தனக்கு தேவையான சாரைப் பாம்பை பிடித்தது என்பார். அந்த கதை அவனுக்கு பிடித்திருந்தது. அவரின் செய்கைகள் எல்லாம் அவர் தேடும் எப்போது சின்ன இரையை அல்ல, சின்ன இரையை தேடும் பெரிய இரையை என்றார்.

அவருக்கு ஒருவ‌ரை பிடித்துவிட்டது என்றால் எதையும் செய்வார். பிடித்த லிஸ்டில் அவனும் இருக்கிறான். அடிபட்டதிலிருந்து மூன்று மாதத்திற்கு மேலாக இந்த உயர்ந்தரக மருத்துவமனையில் செலவு பார்க்காது அவனுக்கு மருத்துவம் செய்து வருகிறார்.

அறை நண்பர்கள் ரவியும் வெங்கட்டும் கைகளில் சாப்பாடோடு செருப்புகளின் சரசரப்போடு உள்ளே வந்தார்கள். புதுமனிதர்கள் இப்போதுதான் கொஞ்ச நாளாக வேலைக்கு சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் வந்தபோது யாரோ அவரசமாக அவர்களை உள்ளே தள்ளியதுபோல் வந்தார்கள். அவனை அண்ணன் என அழைக்க ஆரம்ப‌த்திருந்தார்கள். அவர்களும் அவன் வயதினர்கள்தான் என்றாலும் அத்தனை புத்திசாலிகள் இல்லை என்று அடிக்கடி தோன்றும். அதே வேளையில் தன்னைப் பற்றி அவர்கள் நினைப்பதுவும் அதுவாகத்தான் இருக்குமென நினைத்து சிரிந்துக் கொண்டான்.

வந்ததும் எல்லாவற்றையும் தள்ளிவைத்துவிட்டு அவன் முன்னே சோறு ப‌ரிமாறினார்கள். லேசாக நடுங்கும் கைகளால் ஸ்பூனின் உதவியால் சாப்பிட்டுமுடித்தான்.

வெளியே வந்த போது வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது போலிருந்தது. மூன்று மாதம் தொடர்ந்து உள்ளே இருந்ததால் அப்படி இருந்திருக்கலாம். கைகட்டு இன்னும் எடுக்கவில்லை. இனி வண்டிஓட்டுவது சற்று சிரமம்தான். இடது காலில் பலமாக பட்டுள்ளதால் கியர் மாற்றமுடியாது. வலதுகையில் விரல்களில் அடிப்பட்டுள்ளதால் கியர் இல்லாவண்டியை வேகம்கொடுக்க சிரமம் இருக்கவே செய்யும். கொஞ்ச நாள் ஊரில் இருந்துவிட்டு வரவேண்டும். மீண்டும் அவருடன் சேர்ந்து பெரிய அளவில் எல்லா புராஜட்டுகளையும் அவருக்கு முடித்துக் காட்டவேண்டும் என நினைத்துக் கொண்டான்.

டிஸ்சார்ஜ் பணம் வெங்கட்தான் கட்டியிருந்தான். இருண்ணே மிச்ச பணத்த வாங்கிட்டு வந்திடறேன் என்றான். ‘ரொம்ப நேரம் ஆவுமா?’ ‘இல்லண்ணே இதோ முடிஞ்சுரும், ஆட்டோ சொல்லிருக்கேன், வந்தோன்ன போயிறவேண்டியதுதான்’ அவன் சென்று வரும்வரை ரவி கைகளை கட்டிக் கொண்டு அவன் முன்னே பவ்யமாக நின்றிருந்தான்.

ஆட்டோவில் வரும்போது ரவி அலுவலக விஷயங்களை சகஜமாக பேசிக்கொண்டுவந்தான். வெங்கட் கூறும்போது ‘அண்ணன் உங்களை இந்த வருசம் படிக்கச் சொன்னாருண்ணே. நீங்க படிக்கணும் ரொம்ப பிரியப்பட்டிங்களாம். படிப்புதான் வாழ்க்கைக்கு தேவைன்னாலாம் சொன்னாருண்ணே. முக்கியமா சொல்ல சொன்னாருண்ணே.’ அதுவரை அவன் சிந்தனையில் இருந்த வேகமெல்லாம் கரைந்து காலியான பாத்திரம் போன்று மாறி அடிவயிறு வலித்தது போலிருந்தது. எந்த யோசிப்பும் இல்லாமல் பாஸ்கர் அவன் சொல்வதைக் கவனிக்காததுபோல ரோட்டையே கவனித்தான்.

– சொல்வனம், இதழ்-149, ஏப்ரல் 23, 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *