கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 9, 2021
பார்வையிட்டோர்: 6,520 
 
 

எட்டு வயதில் நேபாளத்திலிருந்து இந்தியாவிற்கு கடத்திகொண்டு வரப்பட்ட சிறுமிதான் பாபி.

“எனக்குத் தினமும் இரண்டு முறை சிவப்புநிற மருந்து கொடுப்பார்கள். அதைக் குடித்ததும் எனக்கு வாந்தி வரும். அந்த மருந்தைச் சாப்பிடவே பிடிக்காது. வேண்டாம் என்று மறுப்பேன், அழுவேன். ஆனால் என்னைக் கண்மூடித்தனமாக அடிப்பார்கள். கட்டாயப் படுத்துவார்கள்…

“இந்த மருந்தை நீ சாப்பிட்டால் விரைவில் பெரிய பெண்ணாகிவிடுவாய்… அப்போதுதான் சீக்கிரமாக வீட்டுக்குத் திரும்பிப் போகலாம்…” என்று பசப்புவார்கள்…”

நேபாளத்தின் வடக்குப் பகுதியில் வசித்த ஒரு குடும்பத்தின் எட்டு குழந்தைகளில் மூத்தபெண் பாபி. பெண்ணிற்கு நல்ல கல்வி காத்மாண்டுவில் கொடுக்கிறோம் என்று கூறி, குடும்பத்திற்கு நம்பிக்கை ஏற்படுத்திய ஒரு பெண்மணியின் பேச்சை நம்பிய பெற்றோர் தங்கள் மகளை அவளுடன் அனுப்பி வைத்தனர்.

ஆனால் காத்மாண்டுவில் பாபி அதிக நாட்கள் இல்லை. அங்கிருந்த மற்றொரு குடும்பத்துடன் அவள் இந்தியாவின் மும்பைக்கு அனுப்பப் பட்டாள். அங்கு எட்டு வயது சிறுமி பாபி வீட்டுவேலை செய்து வந்தாள். அப்போதுதான் அவர்கள் பாபியை மருந்து குடிக்க கட்டாயப் படுத்தினர்.

பன்னிரண்டு வயதிலேயே பாபி வயசுக்கு வந்துவிட்டாள். அதன்பிறகு அந்தக் குடும்பத்தினர் கூடிக்கூடி பாபியைப் பற்றி விவாதித்தனர். விவாதம் மராட்டியில் இருந்ததால் பாபிக்கு ஒன்றும் புரியவில்லை. சிவப்பு மருந்தை முற்றிலுமாக நிறுத்தி விட்டார்கள். பாபி சற்று நிம்மதியடைந்தாள். ஆனால் அந்த நிம்மதி சில நாட்களுக்கு மட்டுமே நீடித்தது.

ஆம்… அந்த வீட்டில் உள்ள ஆண்கள் அவளை மாறி மாறிக் கற்பழித்தனர். அடிக்கடி வற்புறுத்தி மது அருந்தச் செய்தனர். அவள் உடம்பில் வன்புணர்ச்சி செய்தனர். போததற்கு அவர்களுடைய கசின்களும் அவ்வப்போது அங்கு வந்து பங்கு போட்டனர்.

ஒருநாள் அவர்கள் பாபியை ஒரு நல்ல விலைக்கு தவறான இடத்தில் விற்று விட்டார்கள். அங்கு இருந்த பெண்களில் வயது குறைந்தவள் பாபிதான்,,,

“என்னை அவர்களுடன் அனுப்பவேண்டாம்…” என்று பாபி அந்தக் குடும்பத்தினரிடம் கெஞ்சினாள். ஆனால் அவர்கள் ஈவு இரக்கமின்றி, “உன்னை வாங்குவதற்காக நாங்கள் செலவழித்த பணத்தை யார் கொடுப்பார்கள்?” என்று சொல்லி அவளை விற்றனர்.

ஆறு மாதங்கள் மற்ற பெண்களுடன் பாபியும் மும்பையில் அந்த வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டாள். ஆனால் அவளுடைய நல்லநேரம் அந்த வீட்டின் மீது போலீஸ் ரெய்டு நடந்தது. அந்த மோசமான வீட்டிலிருந்து போலீஸ் அவளை மீட்டனர்.

உடனே காத்மண்டுவிற்கு தொடர்புகொண்டு பெண்கள் கடத்தலுக்கு எதிராகப் போராடும் அரசு அமைப்பான ‘மைதி நேபாள்’ இயக்குனர் பிஷ்வரம் கட்காவை மும்பைக்கு வரச்செய்தனர்.

அவர், “காவல் துறையினரும், கடத்தலுக்கு எதிராக செயல்படும் அமைப்பினரும் இந்திய-நேபாள எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். பல சோதனைச் சாவடிகளும் உள்ளன. இதனால் பெண்களைக் கடத்துவதற்குப் பதிலாக சிறுமிகளைக் கடத்துகிறார்கள்…”என்றார்.

மேலும் அவர், “இளம் பெண்களைக் கடத்தினால் சிக்கிக்கொள்ளும் ஆபத்து அதிகம் அதனால் குடும்பத்துடன் வரும் குழந்தைகள் என்றால் சந்தேகம் வராது என்பதால் சிறுமிகளைக் கடத்துவது அதிகரித்துவிட்டது… எனவே பெண் குழந்தைகளை நன்றாகப் பார்த்துக் கொள்கிறோம், படிக்க வைக்கிறோம் என்று ஏழைப் பெற்றோர்களிடம் சொல்லி அழைத்து வந்து சிறுமிகளை சுலபமாகக் கடத்துகின்றனர். எல்லைப் பகுதியை கடக்கும்போது விசாரிக்கப்பட்டால், தங்கள் குழந்தை என்று சொல்லி தப்பித்துக் கொள்வார்கள்…

“இதற்கென ஒரு பெரிய கடத்தல் கும்பலே இருக்கிறது. அவர்கள் ஏழைகள் மற்றும் பின்தங்கிய வளர்ச்சியடையாத பகுதிகளில் வசிக்கும் சிறுமிகளை இலக்காக வைத்துச் செயல்படுகின்றனர். குழந்தையை நன்றாக வளர்ப்போம், படிக்க வைப்போம் என்ற ஆசையைத் தூண்டும் பசப்பு வார்த்தைகளுக்கு ஏழைப் பெற்றோரின் பெண் குழந்தைகள் பலியாகின்றன…” என்று வேதனையுடன் சொல்கிறார் பிஷ்வரம் கட்கா.

“உடல் வளர்ச்சியைத் துரிதப் படுத்துவதற்காக சிறுமிகளை மிரட்டி ஹார்மோன் ஊசிகள் செலுத்துவார்கள்; மருந்து மாத்திரைகள் கொடுப்பார்கள்… நேபாளிப் பெண்கள் இயற்கையாகவே பார்க்க கோதுமை நிறத்தில் மெலிதாக இருப்பார்கள்…” என்கிறார் சுனிதா தானுவார். இவர் பெண்களின் நலனுக்காக பணி புரியும் ‘சக்தி சமுஹ்’ என்கிற இயக்கத்தின் மராட்டியப் பெண்மணி.

மேலும் அவர் “நாங்கள் வசித்துவந்த இடத்தில் இருந்த ஒன்பது வயதுச் சிறுமியை ஒரு பணக்காரர் காரில் வந்து அழைத்துச் சென்றார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு அந்தச் சிறுமி தன் பெற்றோர்களைப் பார்க்க வந்தபோது, அவள் மிக அசாதாரணமான முறையில் வளர்ச்சி அடைந்திருந்தாள். இரண்டு மாதங்களில் அந்த அளவு வளர்ச்சி ஏற்பட சாத்தியமே இல்லை. ஆனால் அவளின் குரல் மட்டும் மாறாமல் ஒரு குழந்தையின் குரலாகவே இருந்தது… பொதுவாக ஒன்பது முதல் பன்னிரண்டு வயது சிறுமிகளுக்கு ஹார்மோன் மருந்துகள் கொடுப்பார்கள். மாருத்துவர்களின் கருத்துப்படி, இந்த ஹார்மோன் மருந்துகள் கொடுக்கப்படும் சிறுமிகளின் மார்புகளும், பிட்டங்களும் பெரிதாகி இளம் வயதுப் பெண்ணாகத் தோற்றமளிப்பார்கள்…” என்கிறார் சுனிதா தானுவார் அதிர்ச்சியுடன்.

மும்பையைச் சேர்ந்த டாக்டர் புஷ்பலதா (தமிழர்), “ஹார்மோன் மருந்துகளை சிறுமிகளுக்குச் செலுத்தி, அவர்களை இளம் பெண்களாக மாற்றி விடலாம். ஆனால் இதன் பக்கவிளைவுகள் மிகவும் கொடுமையானது. அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஏகப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். ஆரோக்கியம் சீர்குலையும். அவர்களின் எலும்புகளும், கர்ப்பப்பையும் பாதிக்கப்படும்…

“சில ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்தேன். அங்கு மிகப்பெரிய மார்பகங்களுடன் இருந்த ஒரு பெண்ணைச் சந்தித்தேன். அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, சிறுமியாக இருந்தபோதே கடத்தப்பட்ட அவருக்கு ஹார்மோன்கள் கொடுக்கப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளிவிட்டார்கள் என்பதை அந்தப் பெண்ணிடம் பேசியபோது தெரிந்து கொண்டேன்…” என்றார் டாக்டர் புஷ்பலதா.

இப்படிப்பட்ட பெண்கள் இளமையாக இருக்கும்வரை அல்லது மவுசு இருக்கும்வரை அந்தத் தொழிலிலேயே இருக்க கட்டாயப் படுத்தப் படுவார்கள்.

நேபாள போலீசாரின் புள்ளி விவரங்களின்படி, சிறுமிகளின் கடத்தல் தற்போது மிக அதிகரித்துள்ளது. புகார்களும் அதிகரித்துள்ளன. வளைகுடா நாடுகள், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற வளமான நாடுகளின் குடியுரிமை பெற்றுத் தருவதாக ஆசைகாட்டி பெண்களைச் சிக்க வைக்கிறார்கள். இதுவும் பெண்களைக் கடத்துவதற்கான ஒரு வழிமுறை என்று விவரம் தெரிந்தவர்கள் வருந்தினார்கள்.

அண்மை ஆண்டுகளில் கடத்தலின் வழிமுறைகள் நிறைய மாறிவிட்டன. அரசுகளும் கடத்தலைத் தடுப்பதற்கான முயற்சிகளை பல்வேறு கோணங்களில் சிந்தித்து செயல்படுகின்றன. விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி, கடத்தலின் புதிய முறைகளையும், உத்திகளையும் எல்லோருக்கும் தெரியவைக்க வேண்டும் என்று கடத்தலைத் தடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

புதிய சட்டங்களையும், கொள்கைகளையும் இயற்றுவதன் மூலம் மட்டும் கடத்தலைத் தடுக்க முடியாது. விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் நடத்த வேண்டும்.

“திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால்…” என்கிற எம்ஜியார் பாடல்தான் நமக்கு நினைவுக்கு வருகிறது…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *