நம்மிடையே பெரிய அனுபவ சாலிகளை “அவரா, அந்த ஆளு பழமும் தின்னு கொட்டையும் போட்டவன் ஆச்சே” என்று அடிக்கடி புகழ்வோம்.
அதையே சில சமயங்களில் எல்லார் பணத்தையும் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விட்ட ஆளையும் இதே சொற்றொடரால் இகழ்வதும் உண்டு. இவைகள் எப்படி வந்தது என்பது ஒரு பெரிய கதை.
ஆம். புத்த மதத்தின் விநய பிடகத்தில் ‘சுள்ள வக்கத்தில்’ உள்ள சுவாரசியமான கதைகள் அதிகம். அதில் ஒரு கதைதான் இது:
வெகு காலத்திற்கு முன்பு, குற்றால மலைச் சாரலில் ஒரு பெரிய ஆல மரம் இருந்தது. அதன் அருகே ஒரு யானை; ஒரு குரங்கு; ஒரு புறா, ஒரு நாகப் பாம்பு ஆகிய நான்கும் நண்பர்கள் போல வாழ்ந்தன.
ஆயினும் அவைகள் இடையே பரஸ்பர நம்பிக்கை இல்லை. ஒருவரை ஒருவர் மதிப்பதும் இல்லை. யார் பெரியவர், யார் மூத்தவர் என்கிற அகங்காரம் கூத்தாடியது. ஒருநாள் இந்தக் கூத்தை அவர்கள் அமர்ந்து வெளிப்படையாக பேசி தீர்த்துக்கொள்ள முடிவு செய்தனர்.
அதன்படி, “நம்முள் யார் பெரியவர் என்பதை பேசித் தீர்மானிப்போம். அதை மற்றவர்களும் ஏற்றுக்கொண்டு அதன்படி மதிப்போம். பெரியவரை மதித்து இனி நடந்து கொள்வோம்” என்று முடிவு செய்தன.
உடனே நாகப் பாம்பு “நான் இந்த ஆலமரத்திற்கு குடியேறி ஆறு மாதங்கள்தான் ஆகிறது. உங்கள் மூவரின் தயவால்தான் நான் இங்கு குடியேறினேன்… எனவே என்னை இதிலிருந்து விலக்கி விடுங்கள்” என்று பவ்யமாகச் சொன்னது.
“அப்படியா, அதுவும் சரிதான்…” என மற்ற மூவரும் பாம்பு சொன்னதை ஆமோதித்தனர். .
இதைத் தீர்மானித்தவுடன், குரங்கு, யானை, புறா மூவர் மட்டும் தனியாகச் சென்று அமர்ந்து கொண்டனர். முதலில் குரங்கும் புறாவும் சேர்ந்துகொண்டு யானையிடம் ஒரு கேள்வி கேட்டன.
“நண்பரே, உமது நினைவு எவ்வளவு பழைய காலம் வரை செல்கிறது? நன்றாக யோசித்து பதில் சொல்லும்…”
உடனே யானை, “நண்பர்களே நான் சிறுவனாக இருந்தபோது இந்த மகத்தான பெரிய ஆலமரம் அப்போது அதிகம் வளரவில்லை. அதன் மீதே நான் நடந்து சென்றது எனக்கு இன்றும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அதன் உயரம் என் கால்களுக்கும் கீழேதான் இருந்தது… அதன் உச்சிக் கொம்பே என் வயிற்றைத் தொடும் அளவே இருந்தது. அதனால் உங்கள் இருவரையும் விட நானே இந்த ஆலமரத்திற்கு அதிக பாத்யதை உடையவன். இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்…” என்று தன் காதுகளை ஆட்டியபடியே சொன்னது.
அதைத் தொடர்ந்து யானையும், புறாவும் இதே கேள்வியைக் குரங்கிடம் கேட்டன. அதற்குக் குரங்கு தன் நெஞ்சை நிமிர்த்திய படி,
“நண்பர்களே நான் சிறுவனாக இருந்தபோது ஒரு முறை தரையில் உட்கார்ந்து இருந்தேன். அப்போது தரையில் அமர்ந்தவாறே ஆலமரத்தின் உச்சிக் கொம்பை கடித்துத் தின்றது இன்றைக்கும் என் நினைவுக்கு வருகிறது.. “ என்று இறுமாப்புடன் சொன்னது.
கடைசியாக குரங்கும் யானையும் சேர்ந்து புறாவிடத்தில் இக்கேள்வியைக் கேட்டன. அதற்குப் புறா அமைதியாக, “நண்பர்களே, அதோ தெரிகிறதே தூரத்தில் ஒரு பொட்டல் காடு, அங்கே முன்னொரு காலத்தில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. ஒரு நாள் நான் அந்த மரத்தில் இருந்த கனிந்த பழம் ஒன்றைத் தின்றுவிட்டு அதன் கொட்டையை எச்சமாகக் கழித்தேன். அந்த விதையிலிருந்து உண்டானதே இந்தப் பெரிய ஆலமரம். ஆகையால் உங்கள் இருவரைக் காட்டிலும் நான்தான் மூத்தவன்” என்று புறா கூறியது.
இதைக் கேட்ட குரங்கும் யானையும் “அப்படியானால் நீயே மூத்தவன். இனிமேல் உன்னை மதித்து உன் சொற்படி நாங்கள் நடந்து கொள்வோம் என்று உறுதி அளித்தன.
இந்தக் கதையை புத்தர் சொன்னதாக விநய பிடகம் எழுதி வைத்துள்ளது. இதுதான் பழமும் தின்று கொட்டையும் போட்டவனின் கதை. பொதுவாக புத்த மதத்தில் உள்ள கதைகள் எல்லாம் பழங்கால பாரதத்தில் வழங்கிய கதைகள் ஆகும்.
அந்தக் கதைகளை புத்த மதத்தினர் எடுத்து புத்தர், போதி சத்துவர் என்ற பெயர்களை நுழைத்து தாராளமாக பயன் படுத்தினர் என்பதுதான் உண்மை.
நல்ல கருத்து. எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்….
புத்தரானாலும், பாரதமானலும், நம் மண்ணில் இதனை மதித்து வாழ்ந்தால் கோடி நன்மை!
லென்ஸ்