தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,284 
 
 

ஐஸ்வர்யாராயின் நீலக் கருவிழிகள் போன்ற வானத்தில், கேத்ரினா கைப் புன்னகை நிற மேகங்கள் மிதந்து கொண்டிருந்தன. லேசர் கற்றைகள், மேகங்களின் மீது பாய்ந்தன. நவ., 13, 2052 காலை, 10:01 என, நாளும், நேரமும் காட்டியது.
பறிமுதல்காந்திகிரி புரட்சி நடந்து, இந்தியா தலைகீழாய் புரட்டிப் போடப்பட்டிருந்தது. குறுக்கு வழிகளில் பணம் சம்பாதித்திருந்த அரசியல்வாதிகளின், போலி ஆன்மிகவாதிகளின் இதரர், இதரர்களின் சொத்துக்கள், முழுக்க முழுக்க பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.
வெளிநாட்டு வங்கிகளில் முடங்கியிருந்த, 21 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம், இந்திய ரிசர்வ் வங்கிக்கு திரும்பியிருந்தது. அனைத்து ரூபாய் நோட்டுகளும் செல்லாது என, அறிவிக்கப்பட்டு, கணக்கு காட்டிய நோட்டுகளுக்கு, புது வாழைநார் ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டன.
ஒரு குடும்பம், அதிகபட்சம், 80 கிராமிற்கு மேல் தங்கம் வைத்துக்கொள்ளக் கூடாதென்று, தங்க உச்சவரம்பு சட்டம் கொண்டு வரப்பட்டிருந்தது.
இந்திய தேர்தல் முறையில், மெகா சீர்த்திருத்தம் கொண்டு வரப்பட்டிருந்தது. ஓட்டு வங்கி உள்ள, முதல் ஐந்து தேசிய கட்சிகளுக்குத்தான், தேர்தல் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. தேர்தலில், அரசியல் கட்சி பெறும் ஓட்டுகளின் எண்ணிக்கையை பொறுத்து, அவர்களே அனுமதிக்கப்படும் எண்ணிக்கையில், உறுப்பினர்களை நியமித்துக் கொள்ளலாம். சட்டசபை உறுப்பினர்களுக்கு, இளங்கலை பட்டம்; பார்லிமென்ட் உறுப்பினர்களுக்கு, முதுகலைப் பட்டம் கல்வித் தகுதி கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
நாடெங்கும், அரசியல் பள்ளிகளும், அதிநவீன விளையாட்டு பள்ளிகளும் திறக்கப்பட்டிருந்தன. அரசியல்வாதிகளுக்கு ஓய்வு வயது, 60 என, நிர்ணயிக்கப்பட்டது. கவர்னர் பதவி ஒழிக்கப்பட்டது. ஐகோர்ட் நீதிபதி, சட்டசபை சபாநாயகராகவும், சுப்ரீம் கோர்ட் நீதிபதி, பார்லிமென்ட் சபாநாயகராகவும் நியமிக்கப்பட்டனர்.
கிரிக்கெட் ஆட்டம், மாற்றியமைக்கப்பட்டது. டெஸ்ட் மேட்ச்களுக்கு பதில், 150 ஓவர் மேட்ச்சுகள் ஆடப்பட்டன. 50 ஓவர், 20 ஓவர் மேட்ச்களும் உண்டு. கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டால், மரண தண்டனை விதிக்கப்படும்.
இந்தியாவின், 3,000 பில்லியன் க்யூபிக் மீட்டர்கள், நீர் தேவையை தன்னிறைவு செய்யும் வண்ணம், நாடெங்கும் நதிகள் இணைக்கப்பட்டன. நதிகளுடன் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிக்க நிலையங்கள் அமைக்கப்பட்டன. கடல் நீரில், குடிநீர் தயாரிக்கப்பட்டது.
கடலோர நீரில், மனிதக் கழிவுகள் கலக்காமலிருக்க, மீனவர் குடியிருப்புகள், கழிவறை வசதியுடன் கடற்கரையிலிருந்து, ஐந்து கி.மீ., தூரத்தில் கட்டிக் கொடுக்கப்பட்டன. விவசாயிகள், அரசின் சார்பில், விவசாயத்தில் ஈடுபட்டனர். சிவில் சப்ளை தானிய சேமிப்பு கிடங்குகள், நவீன மயமாக்கப்பட்டன.
காவல்துறையிலும், நீதித்துறையிலும், ஏராளமான சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தன. ஒரு வழக்கில் எத்தனை மேல்முறையீடுகள் இருந்தாலும், அதிகபட்சம் ஒரு வருடத்திற்குள் முடிந்து விடும் நிலை வந்திருந்தது. வழக்கறிஞர் பணிக்கு, ஐ.ஏ.எஸ்., தரத்தில் தேர்வு வைக்கப்பட்டது. குறைந்தபட்சம், 15 வருடங்கள் நன்னடத்தை உள்ள வழக்கறிஞர்களே, நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
பாகிஸ்தான் பயங்கரவாத நாடாக அறிவிக்கப்பட்டு, அதன்மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால், இந்திய ராணுவ செலவில், 75 சதவீதம் குறைந்திருந்தது.
அனைவருக்கும் எந்த வயதிலும், முற்றிலும் இலவசமாய் விரும்பிய கல்வி தரப்பட்டது. பொருளாதார ரீதியாய் இட ஒதுக்கீடு மாற்றி அமைக்கப்பட்டது.
மகா பிரமாண்டமான மக்கள் நீதிமன்றம் கூடியிருந்தது. நீதிமன்ற நடவடிக்கைகளை காண, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குழுமியிருந்தனர். நீதிமன்ற செயல்பாடுகளை, நேரலையாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர் தொலைக்காட்சி மக்கள். ஐந்து மக்கள் நீதிபதிகளும், ஐந்து நீதித்துறை நீதிபதிகளும், அரைவட்டமாய் சிம்மாசன இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். ஒவ்வொரு நீதிபதியின் முன்னும் கணினிகள்.
மக்கள் நீதிமன்ற விசாரணைக்கு, லஞ்ச ஊழல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட லஞ்ச ஊழல்வாதிகள் இழுத்து வரப்பட்டிருந்தனர். அனைவரின் தலையும், மொட்டையடிக்கப் பட்டிருந்தன. அனைவரும் நாவல்பழ நிற சீருடை அணிந்திருந்தனர். ஒவ்வொருவரின் கடைவாய் பல்லிலும், ஒட்டுக் கேட்கும் மைக்ரோ கருவி பொருத்தப்பட்டிருந்தது. கால்களில் கண்காணிப்பு எலக்ட்ரானிக் பட்டை பூட்டப்பட்டிருந்தது. உண்மைகளை கக்க, அனைவருக்கும் விசேஷ மருந்து செலுத்தப்பட்டிருந்தது.
வரிசையில் முதலாவது ஆளாக, மாநில அரசியல்வாதி காத்தவராயன் நின்றிருந்தார். அவருக்கு வயது, 75. வாயைத் திறந்தால், பொய்தான். தமிழ் தமிழ் என்று பேசியே, தமிழனை பூமி உருண்டையின் மையம் வரை குழி தோண்டி புதைத்தவர். மூட நம்பிக்கை கூடாது என சொல்லி, மூட நம்பிக்கையில் நீச்சலடித்தவர்.
இரண்டாவது ஆளாக, தேசிய அரசியல்வாதி சில்வியா. மூன்றாவது ஆளாக, மாநில அரசியல்வாதி படாபட் பாஸ்கர்.
முதலில் காத்தவராயன் பெயர், மும்முறை அழைக்கப்பட்டது. தலைக்கு மேல், இரு கை குவித்து, சகல திசைகளிலும் கும்பிட்டபடியே போய் நின்றார்.
“”உம் எண் த.நா / மா.அ.*****6866 ஏ தானே?”
“”இருக்கலாம்!”
“”உம் பெயர் என்ன?”
“”எனக்கு எண்பதுக்கும் மேற்பட்ட பட்டங்களும், சிறப்புப்பெயர்களும் உள்ளன. எதைச் சொல்ல; எதை விட?”
“”உம் பெற்றோர் வைத்த பெயர்?”
“”மறந்து விட்டேன்!”
“”கும்மிடிப்பூண்டியில் பிறந்தவர் நீர். உம் பெற்றோர் பெயர் சடையப்பன் – ஓச்சாயீ. ஐந்தாம் வகுப்பை, மூன்று ஆண்டுகள் படித்தும், முடிக்காதவர் நீர். உம் பெயர் காத்தவராயன். சரிதானே?”
“”ஆமாம்!”
“”அரசியல் பிரவேசத்திற்கு முன், உம் சொத்தென்ன, மாத வருமானம் என்ன?”
“”இருந்துச்சுன்னு சொன்னா நம்பவா போறீங்க… சொத்து இல்லை, சல்லிக்காசு வருமானமும் இல்லை. நான் ஓர் அன்னக்காவடி!”
“”தற்போது, உம் சொத்து மதிப்பு என்ன?”
“”அதையும் நீங்களே சொல்லி விடுங்களேன்…”
அசையும், அசையா சொத்துகளை பட்டியலிட்டு, “”உம் சொத்து மதிப்பு, 40 ஆயிரம் கோடி. உம் குடும்ப அங்கத்தினர்கள், 128 பேரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு, 1 லட்சத்து, 36 ஆயிரம் கோடி. அனைத்தையும் பறிமுதல் செய்து விட்டோம்.”
“”பாவிகளா… தமிழினத் துரோகிகளா…. நீங்க நாசமா போவீங்கடா. சில இதயமில்லாத ஆண்களை போல் செயல்படுகிறீர்கள். ஊழல் செய்றது ஒரு கலைன்னு உங்களுக்குத் தெரியுமா, தெரியாதா?” வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டார் காத்தவராயன்.
“”வசவு வார்த்தைகளை வாய்க்குள் பூட்டி வைத்துக்கொள்ளும் நீர், அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால், என்ன பணி செய்திருப்பீர்… மாத சம்பளம் என்ன வாங்கியிருப்பீர்… ஓய்வூதியம் இப்ப எவ்வளவு கிடைக்கும் என்பனவற்றை, வி.ஆர்.பி., மூலம் பார்ப்போம்.”
மாய உண்மைக்காட்சி இயந்திரத்துடன், காத்தவராயன் இணைக்கப் பட்டார். காத்தவராயனின், 15 வயது, 30 வயது, 50 வயது, 75 வயது புகைப்படங்களை, சலனப்படங்களை, பேச்சுகளை, டி.என்.ஏ., அறிக்கையை, ரத்த பரிசோதனை, இதய பரிசோதனை அறிக்கைகளை, சுயசரிதைகளை, குடும்ப பின்னணியை, இயந்திரத்துக்குள் திணித்தனர்.
காத்தவராயனின் பிறந்த தேதி: 1977, மார்ச், 15.
எட்டாம் வகுப்புவரை படித்திருந் தால், கிடைத்திருக்கக் கூடிய அரசுப்பணி: பியூன்.
பணி சேர்ந்திருக்க கூடிய தேதி: 1998, ஜூலை, 1.
உத்தேச ஓய்வு தேதி: 2037, மார்ச், 15.
பணிக்காலத்தில் அவருக்கு கிடைத்திருக்கக் கூடிய மொத்த சம்பளம்: 24 லட்சம் ரூபாய்.
ஓய்வூதியம்: மாதம் எட்டாயிரம் ரூபாய்.
மாய உண்மைக்காட்சியில், பியூன் காத்தவராயன் தெரிந்தார். லஞ்சமாக ஐந்து ரூபாய், பத்து ரூபாய் வாங்கினார். துடுக்காக பேசி, மேலதிகாரியிடம் திட்டு வாங்கினார். சக பியூன்களை, மேலதிகாரிகளிடம் போட்டுக் கொடுத்தார். ஸ்வீப்பர் பெண்களை, “செட்-அப்’ செய்ய முயற்சித்தார்.
மக்கள் நீதிபதி, “”ப்யூனா இருந்திருந்தாலும், உன் கொட்டம் குறைந்திருக்காது போல…”
“”ஹி… ஹி!” இளித்தார் காத்தவராயன்.
“”மிஸ்டர் காத்தவராயன்… உமக்கு மாதக் கருணைத்தொகையாக பத்தாயிரம் ரூபாய் நிர்ணயித்துள்ளோம். இனி, சாப்பிடுவதற்கு தவிர, வேறெதற்கும், நீர் வாய் திறக்கக்கூடாது. உம் நெற்றியில், “ஊழல்வாதி’ என பச்சை குத்தப் போகிறோம்.”
“”தமிழில் தானே… இந்தியில் அல்லவே?”
“”உமக்கு மாதா மாதாம் கருணைத்தொகை வழங்கும்போது, நாற்பது கசையடிகள் உட்காருமிடத்தில் தரப் போகிறோம்!”
“”கசையடி எதற்கு?” பதறினார் காத்தவராயன். “”ஏழை மக்களிடம் பணம் கடனாய் வாங்கினேன். இப்போது, உங்கள் புண்ணியத்தால், பணத்தை திருப்பிக்கட்டி விட்டேன். அப்புறமும் எதற்கு தண்டனை?”
“”இந்த பேச்சு சாதுர்யம்தான், தமிழ் மக்களின் குடியைக் கெடுத்தது. நீர் மிதமிஞ்சிப் பேசினால், கசையடி அதிகமாகும்; கருணைத்தொகை குறையும்; பரவாயில்லையா?”
“”தன்மானம், இனமானம் எங்களுக்கு ரொம்ப ரொம்ப அதிகம் தம்பீ. ஐநூறு தடவைகள், அவமானப்படுத்தினால் பொறுத்துக் கொள்வோம். ஆனால், ஐநூத்தியோராவது தடவை பொங்கி வழிவோம். தர்மருக்கு தர்மச்சங்கடம் ஏற்படுத்தி விடாதே அப்பனே!”
“”இதற்கு மேல் ஒரு வார்த்தை பேசக்கூடாது!”
“”ஒரு விண்ணப்பம்…”
“”என்ன?”
“”மக்கள் நீதிமன்ற நீதிபதிகள், பத்துபேரின் புகைப்படங்கள், சலனப்படங்கள், ஆவணப்படங்கள் முதலியனவற்றை மாய உண்மைக்காட்சி இயந்திரத்துக்குள் திணியுங்கள். இன்னும், 30 ஆண்டு கழித்து, இந்த மக்கள் நீதிமன்றம் எப்படி இயங்கும் என்பதைக் காட்டுங்கள்.”
மாய உண்மைக்காட்சி இயந்திரத்துடன், மக்கள் நீதிபதிகள் இணைக்கப்பட்டனர். காட்சிகள் பரபரப்பாய் ஓடின. சில நீதிபதிகள், சுட்டுக் கொல்லப்பட்டனர். சில நீதிபதிகள், தற்கொலை செய்து கொண்டனர். ஆனாலும், மக்கள் நீதிமன்றம் அமைந்த குறிக்கோளுக்கு சிறிதும் பங்கம் வராமல், சிறப்பாகவே இயங்கியது. தொடர்ந்து ஊழலும், லஞ்சமும் நசுக்கப்பட்டன.
“”ம்ப்ச்… உங்க மாய உண்மைக் காட்சி இயந்திரத்துக்குள், ஏதேதோ கோளாறு இருக்கு!”
“”நீர் போவதற்கு முன் கடைசி கேள்வி. கடவுள் உண்டா, இல்லையா?”
“”இவ்வளவு நாள் கடவுள் உண்டுன்னு மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டு, வெளில இல்லைன்னு சொல்லிக்கிட்டிருந்தேன். இப்ப மனம் வெதும்பி உரக்க சொல்றேன், கடவுள் இல்லை; கடவுள் இல்லைன்னு. இருந்திருந்தா, இந்நேரம் மக்கள் நீதிமன்றத்திற்குள் பிளவை ஏற்படுத்தி இருப்பார். தற்காலிகமாக ஜெயித்த புரட்சி, மீண்டும் நிரந்தரமாக தோற்றுப் போயிருக்கும். பறிமுதல் ஆன சொத்துப்பத்துகள், கிலோ மீட்டர் வட்டியுடன் கைக்கு வந்திருக்கும்.”
“”உம் லாஜிக் குழப்பமான லாஜிக்,” மக்கள் நீதிபதி, காவல்துறை தலைவரிடம் திரும்பினார்.
“”காத்தவராயனை இழுத்துப் போய் கசையடி கொடுங்கள்!”
தண்டனை நிறைவேறும் அறைக்கு இழுத்துச் செல்லப்பட்டார் காத்தவராயன். உட்காருமிடம் ஆடை அகற்றப்பட்டது. கிருமி நாசினி நனைத்த பஞ்சால், கசையடி இடத்தை துடைத்தெடுத்தனர். பல்வேறு நிறங்களில், தடிமன்களில், நீளங்களில் சாட்டைகள் இருந்தன.
“”இதில் எந்த கசையால், கசையடி தரப்பட வேண்டும்?”
“”சிவப்பு நிற கசை…”
“”கசையடியின் போது, வலி தெரியாமல் இருக்க, ஏதாவது பாடுகிறீர்களா?”
“”நான் பாடி யார் கேட்பது, நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்!” ஒவ்வொரு கசையடிக்கும், “”அம்மா…” என கூவினார். “அம்மா’ என்ற வார்த்தையை, 39 வெவ்வேறு மாடுலேஷன்களில் கதறிய அவர், நாற்பதாவது, “அம்மா’வில் விழுந்து விழுந்து சிரித்தார்.
“”என்ன சிரிப்பு காத்து?”
“”தேசிய கட்சித் தலைவி சில்வியாவிடமிருந்து, 80 ஆயிரம் கோடி ரூபாய் பறிமுதல் செய்திருக்கீங்க இல்லையா?”
“”ஆமா!”
“”சில்வியாவுக்கு கசையடி கொடுக்கும் போது, “அம்மா’ எனும் அர்த்தமுள்ள ஜெர்மன் மொழி வார்த்தையைத் தான் கிரீச்சிடும். அந்த வார்த்தையை சில்வியா என்னென்ன மாடுலேஷன்களில் கூவும் என, கற்பனை செய்து பார்த்தேன்; சிரித்தேன்!”
கசையடி அதிகாரிகளும் கற்பனை செய்து, விழுந்து விழுந்து சிரித்தனர்.
இருந்தாலும், கசையடியின் போது, சில்வியா இந்தியில், “”மா…மா…” என்றுதான் கத்தினார்.

– சுப.கார்த்திகேயன் (மே 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *