பருத்திப் பூ

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 1, 2017
பார்வையிட்டோர்: 10,636 
 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

“என் ராஜ்யத்திலுள்ள நாடு அநேக மலைகளாலும் அடர்ந்த காடுகளாலும், நீர்த்தேக்கங்களாலும் சூழப்பட்டு கவலைதரும் நெருக்கத்திலிருக்கிறது. இப்படியான நாட்டில் பெய்யும் மழையில் ஒரு துளியேனும் ஆற்றின் வழியேகி மனிதனுக்கு பயன்தராத வகையில் சமுத்திரத்தை அடைவது மகாபாபமாகும்.”

– இலங்கை அரசன் பராக்கிரமபாகு (கி.பி.1153-1186) சூளவம்சம்: அதிகாரம் LXVIII, செய்யுள் II.

அவருடைய நித்திரை திடீரென்று கலைந்தது. குழாயிலிருந்து தண்­ர் சொட்டும் சத்தம் நிதர்சனமாகக் கேட்டது. தண்­ர்க் குழாயைத் திறந்தால் வடிவாகப் பூட்டும்படி ஆயிரம் தடவை சொல்லியிருப்பார் யார் கேட்கிறார்கள்? அவர் ஆழ்ந்த நித்திரையாக இருக்கும்போது ‘புக்காறா’ விமானத்திலிருந்து குண்டு விழுந்தாலும் அவருக்க கேட்காது ஆனால் ஒரு சொட்டு தண்­ர் அநாதையாக விழும் சத்தத்தை மாத்திரம் அவரால் தாங்கமுடியாது. அவருடைய மனைவிக்கும் மகளுக்கும் இதுதான் பெரிய ஆச்சரியம்.

இதில் என்ன ஆச்சரியம்! தண்­ர்தான் அவருடைய உயிர்மூச்சு. தண்­ரென்றாலும் பொன்னென்றாலும் குணசிங்கத்துக்கு ஒன்றுதான். சுடானிலுள்ள கெஸ“ரா நீர்ப்பாசனத் துறையில் நீர்வள நிபுணராக அவர் கடந்த பன்னிரண்டு வருடங்களாக வேலை பார்க்கிறார். உயர்ந்த பதவி, ஒவ்வொரு சொட்டு நீர்க்கும் ஆலாய்ப் பறக்கும் அந்த நாட்டில் தண்­ர் பங்கீட்டைக் கவனிப்பது என்ன சாதாரண காரியமா?

பொறுப்பான அந்த வேலையை சரிவரச் செய்யும் யோக்கியதை அவரைத் தவிர வேறு யாருக்கு இருக்கிறது? ஆறேயில்லாத யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவர். உரும்பிராய் வாழைத் தோட்டத்தில் தான் அவருடைய ஆரம்ப தீட்சை. ஆயிரம் கன்று தோட்டம் அது. அவருடைய அப்பா பட்டையைப் பிடிக்க, சித்தப்பா துலா மிதிக்க, இவர் படபடவென்று பாத்தி கட்டிக்கொண்டே வருவார். தண்ணி வரவர வேகமாக ஈடுகொடுத்துக் கொண்டு வரவேண்டும். கொஞ்சம் சுணங்கினாலும் கிணற்று நீர் வற்றிவிடும்; நூறு வாழைக் கன்றுகள் அன்று தண்ணியில்லாமலே போக வேண்டியிருக்கும்.

அப்பா பாத்திபிடித்த கைகளில் இன்று சுடானின் பொருளாதார ஏற்ற இறக்கம் இருந்தது. எகிப்து நாட்டுடன் செய்த ஒப்பந்தப் பிரகாரம் நைல் நதியில் பிரவகித்து வரும் நீரில் 20,000 கோடி கன மீட்டர் தண்­ரை மட்டும் வைத்துக்கொண்டு மிகுதியை எகிப்து நாட்டுக்கு விட்டுவிட வேண்டும். சேமித்த நீரை சாதுர்யமாக அந்தந்தப் பகுதியிலுள்ள விவசாயிகளக்கு பருத்தி, கோதுமை, சோளம் என்று பயிருக்கு தக்கபடி தரவேண்டும். உயிர் நாடியான இந்த வேலையை குணசிங்கம் சூட்சுமமான விதிமுறைகளை வகுத்து வெற்றிகரமாகச் செய்துவந்தார். சிறுகக் கொடுத்து பெரிய வளம் சேர்க்கும் கலையில் குணசிங்கத்தை அடிக்க ஆளில்லை.

ஐந்துமணி அடித்தபோது படுக்கையை விட்டு எழுந்தார். மனைவியும் மகளும் இன்னும் ஆழ்ந்த தூக்கத்திலேயே இருந்தார்கள். சோம்பலை ஆராதிப்பவர்கள் அவர்கள். எனவே ஆச்சரியப்படுவதற்கில்லை. பரபரவென்று குளியல் வேலைகளை கவனிக்க முற்பட்டார். அந்த அதிகாலையிலேயே வெய்யில் சூடு ஏறத் தொடங்கி விட்டது. இன்னும் சிறிது நேரத்தில் பைப்பில் சூடு தண்­ர் மட்டும்தான் வரும். வீட்டின் மேலேயுள்ள தண்ணித்தொட்டி சூடாகத் தொடங்கி விட்டால் பிறகு பச்சைத் தண்­ரை காணவே முடியாது.

காலைநேரத்து அநுட்டானாதிகள் என்றால் அவருக்கு ஒரு ஒழுங்கின்படிதான் நடக்க வேண்டும். வழக்கம்போல ஷேவ் எடுக்கும்போது ஒரு பேணியில் தண்ணிபிடித்து வைத்து செய்வார். பைப்பை திறந்து போட்டு அது பாட்டுக்க தண்ணி ஓட ஷேவ்செய்ய மாட்டார். இந்த முறையில் தண்­ர் எவ்வளவு மிச்சப்படுகிறது என்பதற்கு கணக்கெல்லாம் வைத்திருக்கிறார். பூவிசிறல் குளியல் மிகவும் பிரியம் என்றாலும் தவிர்த்துவிடுவார். இரண்டு வாளியிலே தண்ணியை செய்டடாகப் பிடித்து வைத்து குளியலை முடித்துக் கொள்வார். அவருடைய மனைவிக்கு இது ஒரு வெட்கக் கேடு. இவருடைய முகத்துக்க முன்னாலேகூட சில சமயங்களில் சிரித்திருக்கிறாள்.

சுடான் வழக்கப்படி அவர் காலைவேளையில் வீட்டில் ஒன்றுமே சாப்பிடுவதில்லை. ஏழுமணிக்கெல்லாம் அலுவலகத்துக்கு போய் சேர்ந்துவிடும் முதல் ஆள் அவர்தான். பத்துமணிக்குத்தான் காலை உணவு. அப்துல்லாய் அவருடைய பஃத்தூரை எடுத்து வருவான். இப்ப பல வருடங்களாக அவருக்க ஃபூல்தான் காலை உணவு. இட்லியும், வடையும் போல இதுவும் ஒரு இன்றியமையாத தேவையாகிவிட்டது. இரண்டு கப் சாயும், ஃபூலும் சாப்பிட்ட பிறக மறுபடியும் அவர் தன்னுடைய வேலைகளில் மூழ்கி விடுவார்.

இப்ப சில காலமாக அவருக்கு ஒரு சமுசயம். உலோபி-கருமி என்றெல்லாம் மற்றவர்கள் நினைப்பதை அவர் பெரிதும் பொருட்படுத்தவில்லை. முதுகுக்கு பின்னால் அவர்கள் உள்ளூர நகைப்பதைத்தான் அவரால் தாங்க முடியவில்லை. சிக்கனமாக இருப்பதற்கும் கருமித்தனத்துக்கும் அவர்களுக்கு வித்தியாசம் தெரியவில்லையா? பொதுச் சொத்தை žரழியாமல் பார்ப்பதுகூட கருமித்தனமா? கோடிக்கணக்கான கன மீட்டர் தண்­ரை அவர் பங்கீடு செய்கிறார், ஆனால் ஓர் ஏழைக் கிழவிக்கு கொஞ்சம் தண்­ர் விட்டதற்க அவரை விசாரணை வரைக்கும் இழுத்து விட்டார்களே!

இங்கிலாந்திலிருந்து சுடானுக்கு வேலை பார்க்க வந்த இருபத்திநாலு என்ஜினியர்களில் குணசிங்கமும் ஒருவர். அவர் ஒருவரைத் தவிர மற்ற எல்லோரும் வெள்ளைக்காரர்கள். ஒப்பந்தம் பிரகாரம் ஒவ்வொருவராக கெஸஸ“ராத் திட்டத்தில் தங்கள் வேலைகளை முடித்து திரும்பவும் இங்கிலாந்து போய்விட்டார்கள். குணசிங்கம் மாத்திரம் எஞ்சிநின்றார். அவர் அவசரப்பட்டு திரும்பி போகாததற்கு இரண்டு காரணங்கள். முதலாவதாக, இந்த தண்­ர்ப் பங்கீட்டு வேலை அவருக்கு நிறைய ஆத்ம திருப்தியைக் கொடுத்தது. இரண்டாவது, அவருடைய ஒரே மகள் காய்த்திரி ஒரு நல்ல பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு இப்ப பதினாலு வயது; அடுத்த வருடம் அவள் இறுதியாண்டு சோதனை எடுத்து முடித்ததும் அவளுடைய மேற்படிப்பு விஷயமாக சுடானைவிட்டு ஓரேயடியாகப் போய்விடுவது என்று தீர்மானித்திருந்தார்.

உலகத்திலேயே மிகவும் பிரம்மாண்டமான நீர்ப்பாசனத் திட்டம் அது. நீல நைல் நதியும் வெள்ளை நைல் நதியும் சந்திக்கும் அந்த முக்கோணப் பிரதேசத்தில் 25 லட்சம் ஏக்கர் பரப்புகளைக் கொண்டது அந்தத் திட்டம். ஓர் எல்லையில் இருந்து மறு எல்லைக்கு ஜ“ப்பில் போவதற்கு அவருக்கு ஒருமுறை இரண்டு நாள் பிடித்தது. அன்னியச் செலாவணி கொண்டு வருவதில் முன்னிற்கும் கெஸ“ராவில் எண்பது வீதம் உற்பத்தி பருத்திதான்; மீதியில் சோளமும், கோதுமையும், வேர்க்கடலையும், காய்கறிவகையும் பயிரிடப்பட்டன.

சுடான் போன்ற பாலைவனப் பிரதேசத்தில் மழையை நம்பி பிரயோசனமில்லை. நைல் அவர்களுடைய ஜவ நதி. ஓர் இளங்கோ அடிகள் இங்கே இருந்திருந்தால் ‘உழவருடைய ஏரியின் ஓசையும், மதகிலே நீர் வடியும் ஒலியும், வரப்புகளை மீறிப் பாயும் நீரின் சலசலப்பும், மக்களின் மகிழ்ச்சி ஆரவாரமும் பின்னணியாகக் கொண்டு நடந்தாய் வாழி, நைல் நதி’ என்றல்லவோ பாடியிருப்பார்? ஆஹா! அதுதான் எவ்வளவு பொருத்தமாக இருந்திருக்கும். லைல் நதியில்லாவிட்டால் சர்வதேச அரங்கில் அவர்களை நிமிர்த்தி உட்கார வைத்திருக்கும் இந்த நீர்ப்பாசனத்திட்டமும் இல்லை; குணசிங்கம் போன்ற உலக அளவில் புகழ்பெற்ற நிபுணர்களும் இருந்திருக்க மாட்டார்கள்.

அலுவலகத்துக்க அணியும் ஆடையை அணிந்து வெளியே வந்தார் குணசிங்கம். வெய்யில் சுள்ளெனப் பாயத் தொடங்கி விட்டது! சுடானியர்கள் அணியும் ஜிலேபியா என்னும் நீண்ட வெள்ளை அங்கியைத்தான் இப்போதெல்லாம் அவர் அணிந்துகொள்வார். அது அவருக்கு வசதியாக இருந்தாலும் அவருடைய குள்ளமான உருவத்துக்கு பொருத்தமாக இல்லை. அவருடைய குரல் வேறு கீச்சென்று இருக்கும். உரத்துக் கத்தக்கூட அவருக்கு யாரும் பயிற்சி கொடுத்ததில்லை. கத்தினாலும் குருவி கத்தியது போலிருக்கும். மற்றவர்களுக்கு கைவராத இப்படியான அதிமுக்கிய வேலையை அவர் திறம்பட செய்தபோதிலும் அலுவலகத்தில் யாரும் அவரை மதிக்காததற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்.

வெளியே வந்து பார்த்தபோது கஃபீர் வாசலிலே குர்ஆர் ஒதியபடி இருந்தான். வழக்கம்போல இவர் குளித்த தண்­ரைப் பிடித்து பூமரங்களுக்கும், செடிகளுக்கும் பாய்ச்சியிருந்தான். ரோஜாச் செடிகளுடன் போட்டி போட்டு பருத்திச் செடி வைத்தது இவர் ஒருவர்தான். மண்ணில் மலரும் பூக்களிலேயே மிகவும் உன்னதமானதும், எளிமையானதும், ஆரவாரமில்லாததும் இந்தப் பருத்திதான் என்பது இவர் கருத்து. சிறுவனாக இருந்தபோது கத்தரித்தோட்டத்து வெருளியைக் கண்டால் அதைவிட்டு போகவே மனம்வராது அவருக்கு. அதுபோல இந்தப் பருத்தி எங்கே பூத்திருந்தாலும் அவர் அதன் அழகைப் பார்த்துக் கொண்டே மணிக்கணக்‘க இருப்பார்.

அவருக்கு பருத்தியை பிடித்ததற்கான காரணம் அதுவும் அவரைப்போல மிகவும் சிக்கனமான ஒரு செடி. குறைய எடுத்து நிறையத் தருவது அது. அளவோடு பருகும் தண்­ர் அவ்வளவையும் வெண்ணிறப் பூக்களாக மாற்றிவிடும். சூரியனுக்கும், மண்ணுக்கும் ஏற்பட்ட முப்பரிமாண ஒப்பந்தத்தில் பிறந்த இந்தப் பருத்திப்பூ ஐயாயிரம் வருடங்களாக அல்லவா மனிதனுடைய மானத்தைக் காத்துவந்திருக்கிறது!

மற்றவர்கள் இவரை அபூர்வப் பிறவி என்று கருதுவதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. இவர் வேலைக்குப் போய் வருவது ஒரு ‘லோக்ஸ் வாகன்’ காரில். அதுவும் இருபது வயதுப் பராயம் கடந்த கார். சுடானில் டொயோரா, நிஸான், ஹொண்டா போன்ற ஜப்பான் கார்கள் வண்ண வண்ணக் கலர்களில் ரோட்டுக்களை அடைத்துக் கொண்டு ஓடும். மிகவும் உயர் அதிகாரிகள் என்றால் பென்ஸ் கார்தான். அப்படிப்பட்ட நாட்டிலே இவர் ஒருத்தர்தான் இப்படியாக ஒரு குருவிக்கூட்டு காலை வைத்திருந்தார். இவருக்கு பின்னால் வந்த இளம் என்ஜினியர்கள்கூட விதம் விதமான புது கார்களில் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய பணம் எல்லாம் நேர்வழியில் வந்ததுதான் என்று நினைக்கும் அளவுக்கு இவர் ஓர் அப்பாவி.

இவருடைய கார் என்ஜினில் எண்ணெய் வெகு தீவிரமாக ஓரிடத்தில் ஒழுகிக் கொண்டிருக்கும். வரையாது கொடுக்கும் வள்ளல்போல இந்த என்ஜின் குறையாது ஒழுகும் வரம் பெற்றது. கஃபீர் கீழே குனிந்து மிகவும் லாவகமாக ஒழுக்குக்கு வைத்திருந்த டின்னை எடுத்தான். இவர் காலை பின்னுக்கு எடுத்து திருப்பினார். ஜெட்டா வீதியில் உள்ள எல்லோருக்கும் இவருடைய கார் ‘டுப், டுப்’ என்று கட்டியம் கூறிக் கொண்டு புறப்பட்டது கேட்டது. அவர்கள் தங்கள் கடிகாரங்களைச் சரி பார்த்துக் கொண்டார்கள்.

கல்லுக்கட்டி வளர்த்த புடலங்காய்போல நெடுஞ்சாலை வளைவே இல்லாமல் நேராகப் போய்க் கொண்டிருந்தது. ஒட்டகங்கள் வரிசை வரிசையாக ‘ஓம்டுர்மான்’ சந்தையை நோக்கி நடை போட்டன. பாதையோரங்களில் குவித்துக் குவித்து வெள்ளரிப் பழங்களை அடுக்கிவைத்து ‘தஹ்திர், தஹ்திர்’ என்று வியாபாரிகள் கத்திக்கொண்டு இருந்தார்கள். இவ்வளவு வெள்ளரிப் பழங்கள் சாப்பிடுவதற்கு இங்கே ஜனத்தொகை இருக்கிறதா? அவருக்கே ஆச்சரியமாக இருந்தது.

நீல உடையும், தாவணி போன்ற வெள்ளைத் ‘தோஃப்பும்’அணிந்த யுவதிகள் கூட்டமாகக் பள்ளிகளுக்கு சென்று கொண்டிருந்தனர். தாவணியின் ஒரு முனையை இடது அக்குளிலே சொருகிமீதியை சுற்றிக்கொண்டு வந்து தலையை மூடி தொங்க விட்டிருந்தனர். அசப்பிலே பார்த்தால் அவருடைய ஊர்ப்பெண்களைப்போலவே இருந்தார்கள். இதுவும் ஒரு அழகாகத்தான் இருந்தது. அவருடைய மகளும் இப்ப எழும்பி சோம்பல்முறித்து கொட்டாவி கொண்டாடி பள்ளிக்கு ஆயத்தம் செய்து கொண்டிருப்பாள். இவருடைய விசாரணை பாதகமாக முடிந்தால் அவளுடைய படிப்பு இந்நாட்டிலே தடைபட்டு போகும். இன்னும் ஒரே வருடம்தான் அவளுக்கு இருந்தது.

அவருடைய மனைவியைப்பற்றி ஒன்றும் சொல்ல முடியாது. அது பேசி வைத்த கல்யாணம்தான். ஆனபடியால் காதல் பிரவாகமாகக் கொட்டும் என்று எதிர்பார்க்க இயலாது. போன ஆனி மாசத்து பௌர்ணமியில் இருந்து சாவித்திரி விரதம் அநுஷ்டிக்கத் தொடங்கியிருக்கிறாள். வைதவ்யம் வராதிருக்க அவள் கண்டுபிடித்த சுருக்கு வழி. எதற்காக இந்த திடீர் மாற்றம்? வாரத்தில் இரண்டு நாள் ‘ஓம்டுர்மான்’ கடைகளை சேத்திராடனம் செய்து ஒன்றுக்கும் உதவாத பித்தளைப் பாத்திரங்களையும், வெள்ளிக் கொலுசுக்களையும் வாங்கிக் குவிப்பதை மட்டும் அவள் நிறுத்தவில்லை.

அவருடைய காரைப்பற்றி கூறும்போது ‘ஓட்டைக்கார்’ என்ற அடைமொழியையும் சேர்த்தே சொல்கிறாள். பொடி வைத்து பேசுவதை ஸ்பெஷல் சப்ஜெக்டாக எடுத்திருப்பாள் போலும். இப்பவெல்லாம் அவருடன் சேர்ந்து வெளியே வருவதற்குக்கூட கூசுகிறாள் போல பட்டது. அவளுக்கு அவமானமாக இருக்கிறதோ?

அலுவலகம் அமைதியாகத் தூங்கிக் கொண்டு இருந்தது. இவரைக் கண்டதும் வழக்கம்போல ஓடிப்போய் சாய் கொண்டுவந்து வைத்துவிட்டான் அப்துல்லாய். அவருக்காக ஏற்படுத்தப்பட்ட ‘மெர்ஸால்’, விசுவாசமான ஒரே வேலைக்காரன். உபயோகித்த கடித உறைகளை பின்பக்கமாகத் திருப்பி அளவான துண்டுகளாக வெட்டி அவர் மேசையிலே வைத்திருந்தான். அவருடைய சிறு குறிப்புகளுக்கு அவற்றை அவர் விருப்பத்தோடு பயன்படுத்துவார். ஒரு சிறு காகிதம்கூட விரயமாவதை அவர் சகிக்க மாட்டார். அப்துல்லாய்கூட இப்பவெல்லாம் அவரை அலட்சியப்படுத்துவது போல பட்டது. எல்லாம் அந்த விசாரணை வந்த பிறகுதான். ஒரு சின்ன விஷயம். அதை இப்படி ஈவுளியில் ஈர்பிடித்ததுபோல் கெட்டியாகப் பிடித்து கொண்டார்களே! விசாரணைக் குழுவினருடைய அறிக்கை அன்றுதான் போர்ட் மீட்டிங்கில் விவாதிக்கப்படப் போகிறதாம்.

தண்­ர் பக்கீட்டைச் சரியாகச் செய்தாலும் கடந்த நாலு வருடங்களாக அவருக்கு ஓர் ஆசை. தன்னுடைய சொட்டுநீர் பிரயோக முறையை எப்படியும் அறிமுகப்படுத்திவிட வேண்டுமென்று முயன்றார். சுடான் போன்ற தண்­ர் பற்றாக்குறை நாட்டில் சொட்டுநீர் பிரயோகம் எவ்வளவு அவசியம் என்று வாதாடினார். அவருடைய கரைச்சல் தாங்காமல் ஓர் இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தை சொட்டுநீர் முறைக்கு மாற்றினார்கள். பத்தில் ஒரு பங்கு தண்­ரில் இரட்டிப்பு மடங்கு விளைச்சல் காட்ட முடியும் என்று நிரூபித்தார். எல்லோரும் அவரைப் பாராட்டினார்கள். ஆனால் ஆயிரக்கணக்கான பேருக்கு வேலை போய்விடும் என்று இந்த திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டார்கள்.

சொட்டுநீர் முறையில் சிலாக்கியத்தை இவர் உணர்த்தியது உண்மைதான். ஆனால் அதே ஸ்மரணையாக, பிடாப்பிடியாக, அதை நிமிண்டிக் கொண்டிருப்பது சேர்மனுக்கு பிடிக்கவில்லை. தண்­ர் விநியோகம் பற்றி தலையிலே தூக்கிவைத்து காவடி ஆடுவதும் அவருக்கு வெறுப்பைக் கூட்டியது. இதன் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தண்­ர் விநியோகப் பிரிவில் இவருடைய பங்கு வெகுவாகக் குறைக்கப்பட்டு விட்டது. அந்த அவமானத்தை பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக் கொண்டார். புதிதாக வாய்க்கால் போடும் பிரிவுக்கு குணசிங்கத்தை மாற்றினார்கள். அந்த வருடத்து வாய்க்கால் ஐம்பது மைலும் அவர் பொறுப்பில் விடப்பட்டது. அப்போதுதான் இவ்வளவு காலமும் மிகவும் கவனமாகவும் பொறுப்பாகவும் வேலை பார்த்த குணசிங்கம் ஒரு பெரிய தவறு செய்ய நேர்ந்தது. கருமமே கண்ணான அவருக்கு இப்படியான ஒரு சோதனை ஏற்பட்டிருக்கவே கூடாது.

புதிய வாய்க்கால் வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்தபோது இவர் கண்ட ஒரு காட்சி இவரை பெரிதும் நெகிழ வைத்தது. பொட்டல் காட்டில் அந்தக் கிழவி ஒரு குடிசையில் தரித்திரத்தை மட்டும் துணையாக வைத்து வாழ்ந்து கொண்டிருந்தாள். ஒவ்வொரு நாளும் இரண்டு மைல் தூரம் நடந்துபோய் தண்­ர் பிடித்து வந்தாள். அந்தத் தள்ளாத வயதில் தன்னந்தனியாக அந்தக் கிழவி தண்­ருக்காகப் படும் இன்னல் இவர் மனதைத் தாக்கியது.

தெற்கே நடக்கும் போரின் உக்கிரம் தாங்காமல் குடி பெயர்ந்தவள் இந்தக் கிழவி. எல்லாவற்றையும் இழந்து நூற்றுக்கணக்கான மைல்கள் கால்நடையாகவே நடந்து வந்தவள். சொந்தபந்தம் எல்லோரையும் சண்டைக்கு பலிகொடுத்த இந்த ஜூபா இனத்துக் கிழவி இப்படி தனித்துப் போய் சாவோடு போராடிக் கொண்டு இருந்தாள்.

சுடான் கடைகளில் அமோக விற்பனையாவது ‘பாமியா’ என்ற வெய்யிலில் உலர்த்திய வெண்டைக்காய். அதைப் பொடிசெய்து கூழ்போலக் காய்ச்சி குடிப்பார்கள். அப்படியாக இந்த உலர்ந்த வெண்டைக்காய்போல இருந்தாள். இந்தக் கிழவி. கறுத்து மெலிந்த தேகம்; நெடிய உருவம். வயது ஐம்பதும் இருக்கலாம்; ஐந்நூறும் இருக்கலாம், அவள் முகம் எல்லாம் கெஸ“ரா ரயில்பாதை வரை படம்போல கோடுகள். அவளைப் பார்த்ததுமே குணசிங்கத்தின் மனசை என்னவோ செய்தது. அவருக்க தன்னுடைய ஊர் ஞாபகம் வந்திருக்கலாம். கிழவியை எடுத்த வீச்சே ‘எஃத்திராம்’ (பாட்டி) என்று அழைக்கத் தொடங்கினார்.

அவளுடைய கதையைக் கேட்டதும் அவர் உருகிவிட்டார். அப்பொழுதுதான் அவர் ஒரு முடிவு எடுத்தார். அது அவருடைய மனச்சாட்சிக்கு சரியான முடிவு என்று பட்டது. அவர்கள் போட்டு வந்த புதிய கால்வாயை வரைபடத்திலிருந்து சிறிது மாறுபடுத்தி கிழவியினுடைய குடிசைக்கு அண்மையாகப் போகுமாறு பண்ணினார். இந்த மாற்றத்தினால் கிழவிக்கு தண்­ர் வேண்டிய அளவு சுலபமாகக் கிடைத்தது.

கால்வாய் வேலைகள் முடிந்த பிற்பாடு அவர் கையைப் பிடித்துக்கொண்டு நன்றி கூறியது இன்னொரு மறக்கமுடியாத நிகழ்ச்சி. அவர் மனதை அது தொட்டுவிட்டது. கிழவியின் கண்களிலே இப்படி அருவிபோல தண்­ர் கொட்டும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. பூர்வஜென்மக் கணக்கை தீர்த்து போன்ற ஒரு நிம்மதி அவருக்கு ஏற்பட்டது.

ஆனால் அப்பொழுதுதான் ஒரு புதுப்பிரச்சினை முளைத்தது. இவருடைய கால்வாய் வெட்டும் பட்ஜெட் பதினாறு வீதம் கூரையை பிய்த்துக் கொண்டு மேலே போய்விட்டது. அதற்கான காரணத்தை காட்டும்படி இவருக்கு கடிதம் வந்தது. இப்படி அடிக்கடி கடிதம் வருவதும் பதில் எழுதுவதும் சாதாரணம்தான். ஆனால் இவர் எழுதிய பதில்தான் அசாதாரணம். இவர் நேர்மையாக விளக்கம் கொடுத்து பதிலை எழுதினார். அதிகாரிகள் திகைத்துவிட்டார்கள். கெஸ“ரா நிர்வாகத்தில் சரித்திரத்திலேயே காணாத விசாரணைக் குழு ஒன்று அப்போது அமைக்கப்பட்டது. இவருடைய அத்துமீறிய செயலை தீர்க்கமாக விசாரித்து அறிக்கை கொடுப்பதென்று தீர்மானமாகியது.

இவருடன் வேலை செய்த மற்ற என்ஜினீயர்கள் இவருக்கு ஆலோசனை வழங்கினார்கள். வரைபடத்திலுள்ள சில பிழைகளால் மேற்படி தவறு ஏற்பட்டதென்று காட்டும்படி சிலர் சொன்னார்கள். இன்னும் சிலர், பாதையிலே எதிர்பாராதவிதமாக குறுக்கிட்ட கற்பாறைகளின் விளைவாக கால்வாயை நகர்த்த வேண்டி வந்ததென்று எழுதும்படி கூறினார்கள். இவர் மறுத்துவிட்டார்.

விசாரணையில் கேட்டார்கள். இவர் நெஞ்சை நிமிர்த்தி, கண்களை நேராகப் பார்த்து சொன்னார்.

‘ஐயா, தண்­ருக்காக இரண்டு மைல் போகும் கொடுமையை என் கண்களாலே பார்த்தேன். தள்ளாத வயதுக் கிழவி, உங்கள் அம்மாவாகக்கூட இருக்கலாம். என்னால் அந்தக் கிழவி படும் கஷ்டத்தை பார்க்க முடியவில்லை. அதுதான் நான் கால்வாய் பாதையை சிறிது மாற்றி அமைக்கவேண்டி வந்தது. இது பாரதூரமான குற்றமா? இன்று அந்தக் கிழவி போட்டிருக்கம் பருத்தித் தோட்டத்தை பார்க்கும்போது என் கண்கள் குளிருகின்றன. கிழவியுடைய புன்னகை போல பருத்தி பூத்து நிறைந்திருக்கின்றது. கடவுளால் கைவிடப்பட்ட கதியில்லாத ஏழைக்கு இந்தக் கால்வாய் வாழ்வு கொடுத்துவிட்டது.’

அவருடைய தலைவிதியை நிரிணயிக்கு நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது. மணி ஒன்பது. சபை அங்கத்தினர்கள் ஒவ்வொருவராக வந்துகொண்டிருந்தனர். எல்லோருமே அவருக்கு தெரிந்தவர்கள்தான். இன்று அவரைக் கண்டுகொள்ளாத மாதிரி பரபரப்பாக போய்க்கொண்டிருந்தனர். அவருக்கு ‘எஃதிராமை’ பார்க்கவேண்டும் போல் தோன்றியது. இனிமேல் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதென்று அவர் உள்ளுணர்வு கூறியது.

குணசிங்கம் காரில் ஏறியதை யாரும் பார்க்கவில்லை. அவர் நடக்கும்போது நடப்பதுபோலவே தெரியாது. காரில் ஏறியதும் அதை ஸ்டார்ட் பண்ணியதும் கன வேகத்தில் நடந்தன. ஆனால் அது ஒரு அமைதியான வேகம். ‘டுப்,டுப்’ என்று அவருடைய கார் உயிர்பெற்றதும்தான் பல கண்கள் தன்னை பார்ப்பதை அவர் உணர்ந்தார். அந்த நேரத்தில் குணசிங்கம் காரை எடுத்துக்கொண்டு போவது அவர்களுக்கு அதிசயமாக இருந்தது, காரை நேராக எஃதிராமின் குடிசையை நோக்கிவிட்டார். அவளைப் பார்ப்பதினால் சிலவேளை அவருடைய மனப்பாரம் சிறிது குறையக்கூடும்.

எஃத்திராம் குணசிங்கத்தை கண்டவுடன் மகிழ்ச்சியால் பூரித்துப் போனாள். பருத்திச் செடி வளர்ந்து கொத்துக் கொத்தாக வெடித்து நின்றது. ஆயிரம் யுவதிகள் தலை நிறைய வெள்ளைப் பூ வைத்து குனிந்து நிற்பதுபோல் பருத்திச் செடிகள் மொலு மொலுவென்று பார்த்த இடமெங்கும் நிறைந்துகிடந்தன. இரண்டு வருடங்களுக்கு முன்பு அது பொட்டல் காடாக இருந்தது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா! காற்றுச் சுழன்று வீசியபோது அங்கு நிலவிய வெப்பம் தணிய பருத்திச் செடிகள் சிறிது ஆடின. வெள்ளிக்கிழமை காலை வேளையில் தலையில் முழுகிவிட்டு குமரிகள் தலையைச் சிலுப்பியது போன்ற அந்த காட்சியை பார்ப்பதற்கு குணசிங்கம் ஆயிரம் மைல்கள்கூட நடந்து போவதற்கு தயாராக இருந்தார்.

கிழவியின் முகம் ஒரு யௌவனப் பெண்ணின் குதூகலத்துடன் காட்சியளித்தது. “என்ன வால்டிஹ்! உன் முகம் இப்படி சோர்ந்துபோய் இருக்கிறதே?” என்றபடி எஃத்திராம், கெனானா சர்க்கரை நிறையப் போட்ட ‘கெக்கடே’ பானத்தை கொண்டு வந்து தந்தாள். கிழவி அவரை அதற்கு முன்பு ‘வால்டிஹ்’ (அருமை மகனே) என்று அழைத்து கிடையாது. அந்த வார்த்தை அவரை என்னவோ செய்துவிட்டது. பாரவண்டி இழுக்கிற மாடு வாயிலே நுரை தள்ளும்போது அந்த நுரையை வழித்து மாட்டின் முதுகிலே தேய்த்து விடுவார்கள். மாடு அப்போது ஒரு சிரிர்ப்புச் சிலிர்க்கும். அந்த மாதிரி குணசிங்கத்தின் உடம்பெல்லாம் சிலிர்த்தது. நிறைய அழவேண்டும்போல பட்டது. மறுபடியும் தனிமையை நாடியது அவருடைய மனம். அவசரமாக கிழவியிடம் விடை பெற்றுக்கொண்டு திரும்பினார்.

அவர்கள் பதினாறு வீதம் பட்ஜெட்டில் இடிக்கிறது என்று கூறியது அவருக்கு சிரிப்பாக வந்தது. அது என்ன அவ்வளவு பெரிய நஷ்டமா? நாலு வருடங்களுக்க முன்பு என்ன நடந்தது?

உலகம் எங்கணும் பகிஷ்கரிக்கப்பட்ட கிருமி நாசினியை இவர்கள் தவறுதலாக ஓடர் பண்ணிவிட்டார்கள். ஒரு வருடத்துக்கு தேவையான கிருமி நாசினி. ஆனால் கப்பலில் வந்து இறங்கிய பிற்பாடுதான் அவை உலக முழுவதிலும் புறக்கணிக்கப்பட்ட விஷயம் இவர்களுக்கு தெரிய வந்தது. சுற்றுச் சூழலை மிகவும் கொடூரமாகத் தாக்கம் விஷம் கொண்ட நாசினி அது இரண்டு லட்சம் டொலர் பெறுமதியான சரக்கு. அவ்வளவையும் தள்ளி வைக்க வேண்டி வந்து விட்டது. அதுமாத்திரமல்ல, அவற்றை அப்படியே அழிக்கவும் உத்தரவு வந்துவிட்டது. எப்படி அழிப்பது?

பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால விஷம் வெளிவந்தது. அந்த விஷத்தை தக்க வைப்பதற்கும் இடமில்லை; அழிப்பதற்கும் வழியில்லை அப்பொழுது சிவபெருமான் கருணை கூர்ந்து அந்த விஷத்தை எடுத்து விழுங்கி சகல ஜ“வராசிகளையும் இரட்சித்தார் அல்லவா? அதுபோலத்தான் இதுவும். இக்கட்டான நிலை. மேலும் எவ்வளவோ பணம் செலவு செய்து அந்த விஷத்தை அப்புறப்படுத்தினார்கள். அந்த நஷ்டத்தை எந்தக் கணக்கில் கட்டினார்கள்.

அதுதான் போகட்டும். சென்ற வருடம் விமானமூலம் கிருமிநாசினி அடிக்கும் ஒப்பந்தம் ஒரு பெல்ஜியம் கம்பனிக்குக் கிடைத்தது. அந்தக் கம்பனி ஒப்பந்தப்படி நாளுக்கு நாலு விமானங்களில் கிருமி நாசினியைத் தெளித்தபடியே வந்தார்கள். ஆனால் ஒருநாள் ஒரு விபரீதம் நடந்துவிட்டது. அன்று போட்ட முறைப்படி ஹவாஷா 189க்கு மருந்து தெளிக்கவேண்டும். தவறுதலாக விமானிக்கு ஹவாஷா 198 என்று செய்தி போய்விட்டது. ஹவாஷா 198ல் பயிர் செய்த விவசாயிகளுக்கு இந்த விஷயம் தெரியாது. அவர்கள் பாட்டுக்கு வழக்கம்போல தங்கள் வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். விமானி பத்தடி உயரத்துக்கு விமானத்தை இறக்கி மருந்தை அடித்துக்கொண்டு வந்தபோதுதான் அந்த சம்பவம் நடந்தது. சும்மா பருத்திக் காட்டுக்குள் படுத்துக் கொண்டிருந்த ஒட்டகம் ஒன்று சத்தம் கேட்டு அவசரமாய் எழும்பியது. இதை விமானி எதிர்பார்க்கவில்லை. விமானம் ஒட்டகத்தில் மோதி தீப்பிடித்தது. விமானியும் ஒட்டகமும் ஸ்தலத்திலேயே மரணம். இழப்பீடாக லட்சக்கணக்கில் அல்லவா கொடுக்கவேண்டி வந்தது? விசாரணை எங்கே நடந்தது? அந்த தவறான செய்தி அனுப்பிய அதிகாரிக்கு ஒன்றுமே நடக்கவில்லையே!

இவர் அலுவலகத்துக்கு திரும்பி வந்தபோது எல்லோருடைய கண்களும் இவரைத் தேடியபடியே இருந்தன. இவருக்கு முடிவு ஏற்கனவே தெரிந்துதான் இருந்தது என்றாலும் மனதை ஏதோ செய்தது. வயிறு எம்பிவந்து தொண்டைக் குழியை அடைத்துக்கொண்டது. சபை இவரைப் கூப்பிட்டனுப்பியது. உடல் சகலமும் சுருங்கிவிட்டது. துவண்டுபோன கால்களை நிமிர்த்தி வைத்து இவர் உள்ளே போனபோது சேர்மன் இவரைப் பார்த்து பேசினார்:

“போர்டின் முடிவை அறிவிக்கும் வருத்தமான பணியை என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்” என்று தொடங்கினார். அவருடைய வாய் அசைவு மாத்திரம் இவருக்கு தெரிந்தது. உதடுகள் விரிந்து விரிந்து பெருத்துப்போய் முழு அறையையும் அடைத்தது. ஒரு சத்தமும் கேட்கவில்லை. சிறிது நேரம் சென்றது. எல்லோரும் இவரையே பார்த்தார்கள். இறுக்கமான மௌனம் நிலவியது. சேர்மன் இன்னொரு முறை கேட்டார். “நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?”

“ஐயா, நான் சொல்ல என்ன இருக்கிறது? என்னுடைய வாழ்வில் பெரும்பகுதியை இந்த கூட்டுத் தாபனத்துக்காக அர்ப்பணித்தேன். நீங்கள் பதினொரு பேர் சேர்ந்து ஒரு முடிவை எடுத்திருக்கிறீர்கள். அந்த முடிவு சரியானதாகத்தான் இருக்கும். இதே வேலையை என்னிடம் இன்னொருமுறை ஒப்படைத்தால்கூட நான் எடுத்த முடிவில் ஒருவித மாற்றமும் செய்யமாட்டேன். நான் என் பணியை கடந்த பலவருடங்களாக திறம்படவே செய்துவந்திருக்கிறேன். நான் ஏமாற்றவில்லை; கையாடவில்லை; பொய் பேசவில்லை. நான் செய்ததெல்லாம் ஓர் ஏழைக் கிழவிக்கு தண்­ர் வழங்கியதுதான். தண்­ரை வகுத்துக் கொடுப்பதுதான் என் வேலையென்று நம்பினேன். அது மகா குற்றம் என்றால் அந்த மகத்தான குற்றத்தை நான் தொடர்ந்து செய்யவே விரும்புகிறேன். நான் கொடுத்த ஒவ்வொரு சொட்டு நீரும் இன்று பருத்திப்பூவாக வெடித்திருப்பதை காணும்போது என் கஷ்டமெல்லாம்….” என்று சொல்லும்போதே அவர் நா தழுதழுத்தது. குரல் கம்பியது. அப்படியே சபையை விட்டு வெளியேறினார்.

வெய்யில் அகோரமாக அடித்தது. அவருடைய மனத்தின் வெப்பமும் உக்கிரமாக அவரை வாட்டியது. அலுவலகத்தில் பாதியில் நின்றுபோன வேலைகளை முடித்துவிட்டு குணசிங்கம் தன் மேசையை துப்புரவு செய்தார். ஒன்றிரண்டு பேர் அவரிடம் வந்து அநுதாபம் தெரிவித்தார்கள். தன்னுடைய சொந்தப் பொருள்களையெல்லாம் சேகரித்து அவர் கயிறு கொண்டு கட்டியபோது அப்துல்லாய் ஒரு விசுவாசமான நாய்க்குட்டி போல அவற்றை அவற்றை தூக்கிக்கொண்டு அவர் பின்னே வந்தான். அவன் பக்குவமாக வெட்டிவைத்த கடித உறைத் துண்டுகளையும் மறக்காமல் காரில் வைத்தான். ‘மா ஸலாமா’ என்று விடைகூறியபோது அவன் கண்கள்கலங்கியிருந்தன. குணசிங்கம் தலையை பார்த்தபடி காரிலே ஏறி உட்கார்ந்து வீட்டை நோக்கி புறப்பட்டார்.

நாஸாவில் (NASA) ஏவுகணை ஒன்று புறப்படுவதற்கு தயார் நிலையில் இருந்தபோது ஆந்தையொன்று அங்கே கூடு கட்டியிருப்பதை விஞ்ஞானிகள் தற்செயலாகக் கண்டார்கள். ஆந்தையை அப்புறப்படுத்தி இன்னொரு முறை ஏவுகணையை தயார் செய்வதென்றால் இன்னும் பல நாட்கள் ஆகலாம்; லட்ச்சக்கணக்கான டாலர்கள் நட்டமேற்படும். ஆந்தையை பாராட்டாமல் ஏவுகனையை ஏவினாலோ ஒரு பாபமும் அறியாத ஆந்தை உயிர் இழக்க நேரிடும். ஆனால் அந்த விஞ்ஞானிகள் தயக்கமில்லாமல் அவ்வளவு பெரிய நட்டத்தை ஏற்று அந்த ஆந்தையின் உயிரை காப்பாற்றினார்களாம். இங்கே என்னவென்றால் ஓர் ஏழைக்கிழவிக்கு தண்­ர் வழங்கியதை பாபச் செயல் என்று தீர்மானித்து விட்டார்களே!

அர்ஜுனன் சரக்கூடம் போட்டதுபோல புழுதிப் படலம் எழும்பி சூரியனை மறைத்து ரத்தச் சிவப்பாக்கி விட்டது. புயல் வரும்போன்ற அறிகுறி தென்பட்டது. காரை வேகமாக இயக்கினார். ஆமையை விரட்டியடித்து அறுபது மைல் வேகம் ஓடவைக்க முடியுமா? இவருடைய கார் என்னவோ அதற்கு வசதியான ஸ்பீடிலேயே போய்க் கொண்டிருந்தது. அகோரமான மண்புயல் உருவாகியது. சுழன்று சுழன்று ஆக்ரோஷத்துடன் வீசிய காற்று கெட்டியான மண் படலம் ஒன்றை ஆகாயத்திலே தூக்கி எறிந்து முழு உலகத்தையுமே கண நேரத்தில் மூடிவிட்டது. வாகனங்கள் எல்லாம் மெல்ல மெல்ல ஊர்ந்து இறுதியில் ஒரேயடியாக ஸ்தம்பித்து நின்று விட்டன. அவருடைய வாய் கந்தசஷ்டி கவசத்தை முணுமுணுக்கத் தொடங்கியது.

இதற்கு முன்பு எத்தனையோ தடவை மணற்புயல் பார்த்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் அவருடைய மனத்தை பயம் வந்து கவ்விக்கொள்ளும். குணசிங்கம் லைட்டை போட்டுவிட்டு காரை ஒரு ஓரத்திலே நிற்பாட்டினார். இவருக்குப் பக்கத்தில் ஒரு ஒட்டக ஒட்டியும் ஒட்டகத்தை நிறுத்திவிட்டு தன்னுடைய தலையிலே சுற்றியிருந்த ஈமாஹ் துணியை எடுத்து வாயையும் மூக்கையும் காதுகளையும் மூடிக்கொண்டு ஒட்டகத்தின் கீழே குந்திக் கொண்டான். ஒட்டகத்திற்க அந்தக்கவலை இல்லை. வசந்த மண்டபத்தில் இருப்பதுபோல் சாவதானமாக இளைப்பாறியது. நீண்ட தடித்த இமைகளால் கண்களை இறுக்கிக் கொண்டும், மூக்குத்துவாரங்களை சவ்வுகளினால் மூடிக்கொண்டும் மணற்புயலை நன்றாக அநுபவித்தது.

குணசிங்கத்தின் மனதிலே அடித்த சூறாவளி போல புயல் நீண்ட நேரம் தொடர்ந்தது. பன்னிரெண்டு வருடத்து விசுவாசமான சேவைக்கு ஒரு முடிவு வந்துவிட்டது. அவருடைய மனதிலே கொந்தளிக்கும் புயலுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இது சாதாரண புயல்தான். பருத்தியில் அவர் கொண்ட மோகத்துக்கும் தண்­ரில் அவர் வைத்திருக்கம் பக்திக்கும் இப்படியாக ஒரு புயல் வந்து முற்றுப்புள்ளி வைப்பதும் நியாயம்தான்.

கார் முழுக்க புழுதி மயமாக மாறிவிட்டது. ஒன்றுமே தெரியவில்லை. கந்தசஷ்டி கவசத்தில் ‘மெத்த மெத்தாக வேலாயுதனார்’ சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க’ என்ற அடிகள் வந்ததும் புயல் ஒரு žற்றம் குறைந்தது. வாகனங்கள் ஒவ்வொன்றாக மறுபடியும் ஊரைத் தொடங்கின. இவர் வெளியே இறங்கி கார்க் கண்ணாடிகளைத் துடைத்துவிட்டு காரை மறுபடியும் எடுத்தார். கச்சான் காற்றில் சிக்கிய கிடுகு வேலிபோல ஒரு சில நிமிடங்களில் மரக்கிளைகள், கொப்புகள், கூரைகள், குப்பைகள் என்று வீதியெல்லாம் மாறிய விந்தையை நினைத்துப் பார்த்தார்.

அன்று வழக்கத்திலும் பார்க்க ஒரு மணி நேரம் முன்பாகவே வீட்டுக்கு வந்துவிட்டார். கஃபீரை காண வில்லை. தானே கேட்டை திறந்து காரை உள்ளே செலுத்தி பார்க் பண்ணிவிட்டு தகரப் பேணியை எடுத்து காரின் கீழே எண்ணெய் சொட்டும் இடத்தில் சரி பார்த்து வைத்தார்.

வீட்டுக் கதவைத் திறப்புபோட்டு திறந்து உள்ளே தள்ளினார். புயலுக்காக வைக்கும் மண் நிரப்பிய சாக்கு கதவு நீக்கலை அடைத்துக் கொண்டு கிடந்தது. மெதுவாக காலை நு€‘த்து அதை நகர்த்தி உள்ளே வந்து கதிரையில் அமர்ந்தார். கைகளை முழங்காலில் வைத்து நாரியை நிமிர்த்தி அண்ணாந்து பார்த்தார். மனைவியையும் மகளையும் காணவில்லை.

பாத்ரூமில் சத்தம் கேட்டது; தண்­ர் ஓடும் சப்தம். தாய் மகளுக்கு தலையில் ஹென்னா போட்டுக் கொண்டிருக்க வேண்டும். தலை கழுவும் ஆரவாரம் தொடர்ந்தது.

“தெதியாய் கழுவடி” அப்பா வந்து கத்தப் போறார்.”

“எரியுது அம்மா! மெள்ளப் போடுங்கோ.”

தண்­ர் சளசளவென்று கொட்டிக் கொண்டிருந்தது. அந்தச் சத்தத்தை அவரால் தாங்க முடியவில்லை.

ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். புயலினுடைய அக்கிரமத்தினால் மணல் குளித்து அவருடைய பருத்திச் செடிகள் சோர்ந்துபோய் நின்றன. அதிலே ஒரே ஒரு செடி மாத்திரம் அவசரப்பட்டு பூத்திருந்தது. அவர் பார்க்கும்போதே பஞ்சுத் துகள் ஒன்று காற்றுக்கு பிய்த்துக்கொண்டு மேலே மேலே போய்க்கொண்டிருந்தது.

– 1995, வம்ச விருத்தி, மித்ரா வெளியீடு, முதல் பதிப்பு 1996

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

Print Friendly, PDF & Email

1 thought on “பருத்திப் பூ

  1. சொற்கள் இல்லை … தொலைந்துபோய்விட்டது .விஜயன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *