பயணிகள் நிழற்குடை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 17, 2022
பார்வையிட்டோர்: 4,084 
 
 

மூச்சிரைக்க மெல்ல நடந்து வந்து தனது வீட்டின் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்ற போது என்றைக்கும் இல்லாத அளவிற்கு கரியமுதனுக்கு வியர்த்துக் கொட்டியது. தனது சட்டையின் இடது கீழ்புறத்தில் வைத்திருந்த பையில் இருந்த கர்சீப்பை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டார். காலை நேரத்து வெயிலும், இதமான குளிரும் கலந்து அவருடைய உடலுக்குள் வினோத உணர்வுகளை தோற்றுவித்தது. அவர் நிமிர்ந்து பார்த்தார். மிகப் பெரிய மைதானத்தைப் போன்ற அகன்ற வீதியுடைய நான்கு வழிச்சாலை பரந்து அவரது கண்முன் விரிந்தது. சரசரவென வேகவேகமாக கார்களும், லாரிகளும், பஸ்களும் அடிவானத்தை நோக்கி பாய்ந்து செல்வதைப் போல அவருக்குத் தோன்றியது. அவர் மெல்ல நிமிர்ந்து தனது பேருந்து வரும் திசையை நோக்கிப் பார்த்தார். அதற்கான அடையாளங்கள் எதுவும் புலப்படவில்லை. கரியமுதன். வயது 60. இன்றைக்கு நினைத்துப் பார்த்தாலும் அவருக்கு வியப்பாக இருக்கிறது. சுமார் 20 வருடங்கள். காலண்டர் தாளை குழந்தை மடமடவென விளையாட்டுக்கு கிழிக்கும் வேகத்தில் ஆண்டுகள் பறந்தோடியதை நினைத்துப் பார்த்துக் கொண்டார். சென்ற விநாடியில் தான் அனைத்துமே நிகழ்ந்து முடிந்தது போலவும், காலம் உறைந்து நிற்பதைப் போலவும் அவர் ஒரு கணம் கற்பனை செய்து கொண்டார். அப்போது அவர் மீது குளிர்ந்த காற்று வீசியது. உடல் லேசாக தள்ளாடியது. தான் தளர்ந்து விட்டோமோ என்று தனக்குத் தானே நினைத்துக் கொண்டார். எல்லாமே மாறிக் கொண்டிருக்கிறது. இங்கே மிகப் பெரிதாக வளர்ந்து இருந்த அரச மரத்தை நெடுஞ்சாலைத்துறையினர் உயிருள்ள யானையை ஒவ்வொரு பாகமாக வெட்டிச் சாய்ப்பது போல் சாய்த்து சாலையை அகலப்படுத்தியதை நினைத்துப் பார்த்த போது அவருக்கு இப்போதும் கூட உடலுக்குள் நடுக்கம் ஏற்பட்டது. சாதாரண கிராமச் சாலையாக இருந்த இந்த பாதை இன்றைக்கு மிகப் பிரம்மாண்டமான யந்திரத்தை போல நான்குவழிச்சாலையாக உருமாறி நிற்பதைக் கண்ட போது கரியமுதனுக்கு லேசாக பயம் கூடிக் கொண்டதைப் போல தோன்றியது. சில்வர் கூரைகள் பதிக்கப்பட்ட நிழற்குடையின் கீழ் இரும்பு நாற்காலிகள் துருப்பிடித்து இருந்ததைப் பார்த்தார். லேசாக ஆசுவாசப்படுத்திக் கொள்ள அதில் அமர்ந்து கொள்ளலாம் என அதை நோக்கி நடந்தார். சாலையின் இருபுறமும் மஞ்சள் கோடுகளும், அதிலிருந்து சற்று தள்ளி வெள்ளைக் கோடுகளும் முடிவின்றி வரைந்திருப்பதை பார்த்தபடியே அந்த துருப்பிடித்த நாற்காலியில் போய் அமர்ந்தார். நேற்றுத்தான் எல்லாமே நடந்து முடிந்து இன்றைக்கு புதிதாக தான் பணிக்குப் போவதைப் போல நினைத்துக் கொண்டார். 20 வருடங்களாக அவருக்கு இப்படி ஒரு எண்ணம் தோன்றுவது தவிர்க்க முடியாததாக இருந்த போதிலும், இன்றைக்கு தனக்கு ஏனோ சற்று வித்தியாசமாக இந்த எண்ணம் தோன்றுவதையும், அது மனத்திற்குள் புகுந்து ஏதோ தொந்தரவு செய்வது போலவும் உணர்ந்தார். காலையில் என்ன சாப்பிட்டோம், என்று நினைத்தபடி உணவும் வழக்கம் போல கஞ்சி குடித்துவிட்டுத்தான் கிளம்பினோம் என்று நினைத்த போது அவருக்கு ஆயாசம் கூடியது. தனக்கு மூப்பு தோன்றி தள்ளாமை வந்துவிட்டதாக கரியமுதன் நினைக்கத் தொடங்கினார்.

அவர் அந்த நாளை நினைத்துப் பார்த்தார். அப்பொழுது அவர் மிகவும் துடிப்பாக ஒரு பத்திரிக்கையாளனாக அந்த அலுவலகத்திற்குள் நுழைந்தது அவருக்குள் நிழலாடியது. தான் ஏதோ ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனை ஒன்றை நிகழ்த்த போவதாக அவருக்குள் அப்போது ஒரு கற்பனை ஓடியதை இப்போது நினைத்துப் பார்த்த போது அவருடைய இதழில் அவரையும் அறியாமல் தோன்றிய சிரிப்பை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. மிகவும் சுருங்கிய அந்த முகத்தின் ஊடாக சிரிப்பு வரிக்கோடுகளாக அவரது முகத்தை மேலும் ஒரு ஓவியமாக மாற்றிக் கொண்டிருந்தது. இன்றைக்குத்தான் என்னவாக இருக்கிறோம் என்று அவர் நினைத்துப் பார்ப்பதற்கான அனைத்து சாத்தியங்களும் இருப்பதாக அவர் தன்னைத் தானே சுயபரிசோதனை செய்து கொண்டார். அவருக்கு பேருந்து வருவதற்கு இன்னும் சற்று நேரம் இருப்பதாக அவருக்குப் பட்டது. மேலும் அந்த வழியில் செல்லும் ஏறக்குறைய அனைத்து டவுண் பஸ் டிரைவர்களும், நடத்துனர்களும் அவருக்கு பரிச்சயமானவர்களாகவே இருந்தனர். எனவே இவர் நிழற்குடையில் இருப்பதைக் கண்டாலே தானாகவே பேருந்தை நிறுத்தி ‘அய்யா, வணக்கம். என்ன இன்னைக்கு வரலையா?’ என்பது போல் கரிசனையாக கேட்பர். புதிய சில இளைஞர்களுக்கு அவர் ஏதோ முக்கியமான பிரமுகர் போல என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். மற்ற சிலருக்கோ இவருக்கு மட்டும் என்ன பெரிய சலுகை, நாம் கையை காண்பித்தால் கூட நிற்காமல் செலுத்தும் திமிர் பிடித்தவர்கள் என்ற வயிற்றெரிச்சலை உண்டாக்கும்.

இத்தனை வருடங்களில் ஒருசிலர் இதற்காக நடத்துனர்களிடமும், ஓட்டுனர்களிடமும் சண்டைக்கு சென்ற அனுபவங்களைக் கூட அவர் பார்த்திருக்கிறார். அதற்கெல்லாம் அந்த ஓட்டுனர்களும், நடத்துனர்களும் அன்றைன்றைக்கு ஏதேதோ காரணங்களைக் கூறி பயணிகளை சமாதானப்படுத்தி இவரையும் அழைத்துச் செல்வர். இவருக்காக ஒரு இருக்கை எப்போதும் அந்த பேருந்துக்குள் காத்திருப்பது போல் அவருக்குத் தோன்றும். எத்தனை கூட்டம் இருந்தாலும் பரிச்சயமுள்ள எவரேனும் ‘இங்க உட்காருங்க’ என்று அவருக்கு ஒரு இருக்கையை ஒதுக்கித் தருவர். மிகப் பெரிய நகரத்தை ஒட்டி ஒரு சிறு நகரமாக மாறிவிட்ட தனது நகரில் இன்றும் மக்கள் மனதில் மன ஈரம் வற்றிவிடவில்லை என்று நினைத்துக் கொள்ளும் வண்ணம் அந்த செயல்கள் இருக்கும். ஆனால் 20 வருடங்களுக்கு முன்பு அப்படியா இருந்தது இந்த பேருந்து பயணம்.

கரியமுதன் தினசரி அந்தவழியாக செல்லும் நடத்துனர்களிடமும், ஓட்டுநர்களிடமும் சண்டை போடாத நாட்களே இல்லை என்னுமளவிற்கு அந்த பயணம் ரணகளப்படும். அவர் தனது இளவயதில் பத்திரிக்கை அலுவலகத்தில் வேலை கிடைத்தவுடன் உண்டான உற்சாகமும், இளமைத் துடிப்பும், இந்த சமூகத்தின் மீதான அவனது கற்பனை கலந்த கோபமும் அவனை எப்போதும் ஒரு துடுக்கு நிலையிலேயே வைத்திருக்க வைத்திருந்தது. மிகவும் நடுத்தரக் குடும்பத்தில் வளர்ந்து விட்ட சொகுசு ஒருவிதத்தில் சின்ன சின்ன குறைகளுக்கெல்லாம் அவனை உடனடியாக கோபப்பட வைத்தது. மேலும் சிறிய பிசகு எதுவுமின்றி அனைத்தும் கச்சித ஒழுங்குக்குள் இருக்க வேண்டும் என்று தினசரி அவனுக்குள் வளர்ந்த கற்பனை அவனை இவ்வாறாக மாற்றியிருந்தது. ஆனால் அவனது வேலையோ முற்றிலும் வேறுவிதமாக இருந்ததால் உள்ளுக்குள் அவன் சதா முரண்டு கொண்டு, முரண்பட்ட மன பிளவுகளால் அவதிப்பட்டான். அவனுக்கு இதிலிருந்து மீளும் வழியும் தெரியவில்லை. ஆனால் தினசரி இந்த ரணகள பயணத்தை அவனுக்கு தொடர வேண்டிய நிலை இருந்தது.

அவனது பத்திரிக்கை அலுவலகம் நகரின் மத்திய பகுதியில் மிகவும் பரபரப்பான இடத்தில் இருந்தது. அதைப் போலவே தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற, அதிகம் விற்பனையாகும் ஒரு பத்திரிக்கை என்ற பெயரையும் பெற்றிருந்தது. ஒரே நேரத்தில் சமூகத்தில் அந்த பத்திரிக்கையின் மீதான பயமும், கசப்பும் மக்கள் மத்தியில் சம அளவில் பரவியிருந்ததை அவனால் எளிதில் கண்டு கொள்ள முடிந்தது. அவன் அங்கு சேர்ந்த புதிதில் தனக்கு கிடைத்த இந்த வழியின் மூலம் சமூகத்தை தலைகீழாக புரட்டிப் போட்டு அங்கு சமத்துவ பூங்காவாக மாற்றிவிடலாம் என்ற கற்பனைகள் பீறிட்டு எழுந்தது. ஆனால் நாள் ஆக ஆக தான் என்ன நினைத்தோமோ அதற்கு முற்றிலுமாக எதிர் திசையில் செய்திகள் உருவாவதும் அதற்கு அவனே பலியாவதும் தொடர்ந்து நிகழக் கூடியதாக மாறியது. கரியமுதனுக்கு இதிலிருந்து எப்படியாவது மீள வேண்டும் என்ற எண்ணம் எழுந்ததை போலவே இதன் மூலம் உருப்படியாக எதையாவது சாதிக்க வேண்டும் என்ற பதற்றமும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தபடி இருந்தது.

கரியமுதன் இன்றைக்கு நினைத்து பார்த்தால் அனைத்துமே கண நேர கனவு போல சட்டென்று தோன்றி மறைந்து விட்ட கண தரிசனக் காட்சியைப் போல மாறியிருந்தை நினைத்து நினைத்து ஏக்கப் பெருமூச்சு விட்டார். அப்பொழுது அவர் பத்திரிக்கை அலுவலகத்திற்கு செல்லும் வழியில் பேருந்திலும், வழியிலும் அவனுக்கு நேர்ந்த அனுபவங்களை அலசுவதற்கோ, அதனை வெளிப்படுத்திக் கொள்வதற்கோ, அது குறித்து ஏதேனும் தனது கருத்துக்களை உருவாக்கி பதிவு செய்து கொள்வதற்கோ அவனது பணியில் இடமே இல்லாது போனது அவனுக்கு சில வருடங்களுக்குப் பிறகுதான் பிடிபட்டது. தான் மிகவும் மந்தமான மூளை உடையவன் என்று தன்னைத்தானே நினைத்துப் பார்த்துக் கொண்டார் கரியமுதன். மிகவேகமாகவும், நு£தனமாகவும் சிந்திக்கவும், செயல்படக்கூடியவர்களையும் அவர் சந்தித்திருக்கிறார். ஒரு பொய்யை உருவாக்கி அதன் வழியாக ஒரு செயலை கட்டமைத்து பின்பு அதன்வழியே ஒரு நாடகத்தை நிகழ்த்தி பிறகு அதனையே உண்மை என பிறரை நம்பவும் செய்வித்து அதன் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு அதன் வழியே ஏராளமான பொருளை ஈட்டவும், அதனை நியாயப்படுத்திக் கொள்வதற்குமான அறங்களை தேடியவர்களையும் அவர் சந்தித்திருக்கிறார். ஒருசமயம் திறமையுடன் பொருளீட்டும் தன்மை தனக்கு இல்லாததால் அதனை பொறாமைக் கண் கொண்டு பார்த்து, நீதி, நேர்மை, பூனை பூச்சாண்டி என்று நமக்கு நாமே கடைதேற்றிக் கொள்கிறோமோ என்றெல்லாம் கரியமுதனுக்கு தோன்றாமல் இல்லை. மேலும் அது போல செயல்களை செய்வதற்கான திறமையும் தனக்கு இல்லை என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்.

மிகவும் நேரடியாகவும், பட்டென்றும் பேசுவதால் உண்டான மிகப் பெரிய தொல்லைகளில் சிக்கிக் கொண்ட அனுபவங்களும் அவருக்கு இருக்கத்தான் செய்தன. மிகவும் நுட்பமாகவும், மிகப் பரவலான தொடர்புகளையும் கொண்ட மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் ஒவ்வொரு சமயத்திலும் அவனை காப்பாற்றி தப்பச் செய்திருக்கிறார். ஒரு சமயம் அவர் அந்த இடத்தில் தனக்கு வாய்க்காமல் போயிருந்தால் தான் இன்னேரம் ஒரு சமயம் சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை கைதியாகக் கூட காலத்தை கடத்திக் கொண்டிருக்கலாம் என்று கூட கற்பனை தோன்றியது. கரியமுதனைப் பொறுத்த வரையில் எதையும் மிகவும் மெலிதாக எண்ணிப்பார்க்காமால் மிகவும் பிரமாண்டமான கற்பனையாக எண்ணி அச்சமடைவதும், அல்லது அதற்கு முன்னேற்பாடாக சில விசயங்களை செய்ய நினைப்பதும், அல்லது சாகசமாக அவற்றை சந்திக்க நினைப்பதும் உண்டு.

ஒருமுறை அமைச்சர் ஒருவர் விழா ஒன்றில் கலந்து கொள்ள வர இருந்த நிகழ்வை கவனிக்க இவனுக்கு ஒதுக்கப்பட்டது. விழா அழைப்பிதழை பார்த்த போது அவனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. மிகவும் பிரபலமான அந்த அமைச்சர் ஊர் முழுவதும் கழிப்பறை திரிந்து வைப்பதாக அது காணப்பட்டது. அவன் அன்று முழுவதும் தனது வேலையை நினைத்தும், அமைச்சரின் விழாவை நினைத்தும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தான். அலுவலகத்தில் அனைவரும் அவன்மீது மிகவும் கோபத்துடன் காணப்பட்டனர். ஆனால் ஒன்றும் செய்ய முடியாது மூத்த அலுவலர் அவனை நம்பி அந்த காரியத்தை அவனிடம் ஒப்படைத்துள்ளார். இருதினங்களாக நடந்த நிகழ்வுகளையும், நடக்க போகும் நிகழ்வுகளையும் எழுதியவரையில் அனைத்தும் பிரச்சினையின்றி போய்க் கொண்டிருந்தது. ஆனால் இறுதி நாளில் தான் அந்த பிரச்சினை முளைத்தது. ஒரு பொழுதும் பத்திரிக்கையில் கழிவறை என்று எழுதக் கூடாது என்றும், சுகாதார வளாகம் என்றுதான் எழுத வேண்டும் என்றும் எழுதப்படாத அலுவலக விதியிருந்தது.

அன்றைக்கு பரப்பரப்பாக போட்டோ கிராபர்களும், நிருபர்களும் அங்கிங்கும் ஓடி அந்த நிகழ்ச்சியை படம்பிடித்து இவனிடம் தந்து கொண்டிருந்தனர். அதில் பல்வேறு மத்திய அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அதில் பெண் அமைச்சர் ஒருவரும் கலந்து கொண்டார். அவன் செய்தியை வடிவமைத்த போது அவனையும் அறியாமல் ‘கக்கூஸ்சை பெண் மந்திரி திறந்தார்’ என்று எழுதி அது அவன் மீதிருந்த ஆசிரியரின் நம்பிக்கையால் பதிப்பிக்கப்பட்டும் வந்து விட்டது. அதன் பிறகுதான் பிரச்சினை ஆரம்பித்தது. அன்றை மாலையே பத்திரிக்கை அலுவலகத்திற்கு ஏராளமான போன்கள் வந்தன. யார்யாரெல்லாமோ மிரட்டத் தொடங்கினர். உடனடியாக நிர்வாக இயக்குநர் போலீஸ் உயரதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு தனது அலுவலகத்திற்கு சீருடை காவலர்களை அனுப்பி வைக்க கேட்டுக் கொண்டார். இரண்டு காவலர்கள் அலுவலக செலவில் டீ, டிபன் சாப்பிட்டு அவனது பத்திரிக்கை அலுவலகம் சார்பில் வரும் வார, மாத இதழ்களை கொறித்துக் கொண்டிருந்தனர். அதன் பிறகு இவனுக்கு நிர்வாக இயக்குனர் அறைக்கு தனியாக அழைப்பு வந்தது. ஆசிரியரும் வரவழைக்கப்பட்டார். அதன்பிறகு நடந்தவைகளை நினைக்கவோ, பேசவோ அவனுக்கு கூசியது. அதை நினைத்த போது அவருக்குள் வியர்த்து கொட்டியது. காலை நேரத்து வெயில் மெல்ல மெல்ல ஏறிக் கொண்டிருந்தது. அவருக்கு ஆயாசம் கூடியது. இன்றைக்கு நீண்ட நேரமாக பேருந்து வராததைப் போல அவருக்கு தோன்றியது.

அதன் பிறகு அவன் மூன்று நாட்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டான். அரை மாத சம்பளம் பிடிக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்கு கூடுதல் பணிக்கு எந்த Ôஅலவன்சும்Õ தரப்பட மாட்டாது என்று மறைமுகமாக எச்சரிக்கப்பட்டான். அவனால் ஒன்றும் செய்ய இயலாமல் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தான். பிற்பகல் சூரியன் சுள்ளென அவனது முகத்தில் அடித்தது. தனக்கு பாதுகாப்பில்லை என அஞ்சினான். அலுவலகத்தில் ஒவ்வொருவரும் ரகசியமாக சந்தோசமடைந்தது அவனுக்கு தெரிந்தது. மெல்ல படியிறங்கினான். சீருடை காவலர் புன்னகையுடன் ஒரு இயந்திர சலியூட்டை வீசினார். அவன் வாட்ச் மேனிடம் அலுவலக செல்போனை ஒப்படைத்து விட்டு எதிரில் பேக்கரிக்கு சென்றான். அந்த பையன் ‘என்னா சார் இப்போதான் உங்க செக்சனுக்கு 15 டீ கொடுத்து அனுப்பியிருக்கிறேன், நீங்க குடிக்க வந்திருக்கீங்க’ என்றான் கொஞ்சம் மழலை கலந்து. அவனைப் பார்த்து மந்தகாசமாக சிரித்து விட்டு சூடாக ஒரு டீயை மிடறு மிடறாக நிதானமாக குடித்தான். அதன்பின்பு அந்த இடத்தை விட்டு நீங்கினான்.

கிட்டத்தட்ட ஒருவாரங்களுக்கு விடுப்பை நீட்டிப்பு செய்து விட்டு அன்றைக்குத் தான் அலுவலகம் திரும்பினான். அன்றைக்கு அலுவலகம் முற்றிலுமாக புதியதாக இருந்ததைப் போல உணர்ந்தான். செக்சனில் அனைவரும் சம்பிரதாயமாக ÔசாரிÕ என்றனர். யாரும் எதைக் குறித்தும் விவாதிக்கவோ, கருத்துச் சொல்லவோ தயாராக இல்லை. அவன் தனது இருக்கையை அன்றுதான் புதிதாக சுத்தம் செய்வது போல சுத்தம் செய்தான். தனக்கான தொலைபேசியையும் சுத்தம் செய்தான். ஏசியை இயக்கிக் கொள்ளவா என மற்றவர்களிடம் ஒப்புக் கேட்டு விட்டு அதனை மிகவும் குளிராக வைத்தான். பிரபல ஆங்கில நாளேட்டை எடுத்து ஒரு வரிவிடாமல் படிக்கத் தொடங்கினான். அன்றைக்கு அவனுக்கு பணியேதும் ஒதுக்கப்படவில்லை. தான் தனிமையில் இருக்கக் கூடும் மற்றவர்கள் கருதியிருக்கலாம் என கற்பனை செய்து கொண்டான். தனக்கு பணி அன்றைக்கு ஒதுக்கப்படாதது சற்று ஆசுவாசமாக இருந்ததாக அவன் கருதினான். சத்தீஸ்கரில் போலீசார் கொல்லப்பட்டனர், உசிலம்பட்டியில் பைக் மீது பேருந்து மோதி இரண்டு பேர் இறந்தனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் சாதி கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டார் என செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அலுவலகம் அவனிடமிருந்து கழன்று வேகமாக சுழல்வதைப் போல தோன்றியது. ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து பத்ரகுமார் கட்டுரை ஒன்றை ஆழமாக படித்தான். நிதானமாக இரண்டுமுறை தேநீர் வரவழைத்துக் குடித்தான். அலுவலக பையன் மட்டும் அவனிடம் வந்து தான் புதிய செல்போன் ஒன்று வந்திருப்பதாக கூறி அதிலிருந்து பாட்டு ஒன்றை இயக்கிக் காண்பித்தான். தன்னிடம் ஏதாவது பாட்டு இருந்தால் அதனை புளூடூத் மூலம் அனுப்பித்தர முடியுமா என்று கேட்டான். அவனிடம் எதையும் காண்பித்துக் கொள்ளாமல் பாரதி படத்தில் இருந்த நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே என்ற பாடலை அனுப்பினான். அவன் அலுப்பாக என்னைப் பார்த்து சிரித்து விட்டு மறைந்தான்.

மறுதினம் அவன் அலுவகம் செல்ல தனது வீட்டின் அருகே பேருந்து நிறுத்தத்திற்கு சென்றான். பிதுங்கி வழியும் கூட்டத்திற்குள் தன்னை திணித்துக் கொண்டு பேருந்தின் நடுப்பகுதிக்கு நசுங்கி, நசுங்கி சென்று நின்று கொண்டான். அவன் நகரத்தை அடைய இன்னும் சில கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. அது வரை படிக்கட்டுகளின் அருகே நிற்பது அத்தனை சவுகரியமான ஒன்று அல்ல. பெரும்பாலும் பேருந்தின் நடுப்பகுதி சற்றேறக்குறைய ஒரு நபர் அல்லது இரண்டு பேர் நிற்கும் அளவுக்கு காலியாகவே இருக்கும் என்பதை தனது இத்தனை நாள் பயணத்தில் கண்டுபிடித்து வைத்திருந்தான். சிலரின் வசவுகளை கடந்து மையப்பகுதிக்கு சென்று விட்டால் நகரத்தை அடையும் வரை நிம்மதியாக நின்று கொண்டு பயணம் செய்யலாம் என்பது அவனுக்கு நிச்சயமாக தெரியும். நடத்துநர் அவனை பார்த்து நட்பு புன்னகையை வீசிவிட்டு வழக்கமான டிக்கெட்டை கிழித்துக் கொடுத்துவிட்டு கூட்டத்திற்குள் மறைந்தார். அவன் இன்னும் டிக்கெட்டிற்கான பணத்தை அவரிடம் தரவில்லை. கூட்டம் கரைந்ததும் பெற்றுக் கொள்ளலாம் என அவர் எண்ணியிருப்பதை அவரது புன்னகை அவனுக்கு உணர்த்தியது.

ஒருவழியாக அவன் அலுவலகத்தை அடைந்தான். எல்லாம் நிதானமாக போய்க் கொண்டிருந்தது. அவனுக்குள் முன்பிருந்த படபடப்பு, ஆர்வம், எல்லாம் வற்றி போயிருந்தது. தினசரி அவ்வாறு சென்று கொண்டிருந்தது. தனது பயணவழியில் அவன் ஒரு கிராமத்தையும், ஒரு கண்பார்வையற்றோர் பள்ளி நிறுத்ததையும் கடந்து செல்ல வேண்டியிருந்தது. இத்தனை வருடங்களாக அவ்வாறு சென்ற அவனுக்கு அப்போதுதான் அது மெல்ல புலப்பட தொடங்கியது. இத்தனை கூட்டத்திற்கு நடுவில் அவர்கள் எவ்வாறு இந்த பேருந்தில் பயணம் செய்வார்கள்? அவர்கள் எவ்வாறு சாலையை கடந்து இந்த நிறுத்தத்தில் ஏறி செல்வார்கள்? அவர்களுக்கு வழிகாட்டி என்று எதுவும் கிடையாதா? குறைந்த பட்சம் அந்த நிறுத்தத்தில் ஒரு நிழற்குடை கூட இல்லை என்பதுகூட அவனுக்கு அப்போதுதான் உறைத்தது. தன் மேல் வெட்கமும், அசூயையும், வெறுப்பும் தோன்றியது. தான் ஏதோ பத்திரிக்கை துறையில் நுழைந்து எதையோ சாதிக்கப் போவதைப் போல வெற்றுமமதையிலும், தேவையில்லாத காரியங்களில் கவனத்தையும் செலுத்தி இத்தனை காலத்தை வீணடித்து விட்டோமே? என்று தன்னைத் தானே நொந்து கொண்டான். அவனுக்குள் பல்வேறு மேகங்கள் சுழன்று ஓடின. அவன் பல்வாறாக சிந்தித்தப்படி நகரத்தை வந்தடைந்தான்.

அவன் தனது தலைமை ஆசிரியரை அணுகி இது போன்ற விபரத்தை சொன்னான். கண்பார்வையற்றோர் வழித்தடத்தில் பேருந்து சரியாக நின்று செல்வதில்லை என்றும், அங்கு நிழற்குடை கூட கிடையாது என்றும், ஆனால் அனைத்து பேருந்துகளும் அவ்வழியாகத் தான் செல்கின்றன, அவர்கள் எவ்வாறு ஏறி, இறங்கிச் செல்வார்கள் என்றும் நீண்ட பிரசங்கத்தைப் போல கூறினான். அவர் அந்த காலை அவசரத்திலும் மெலுவாக அதனைக் கேட்டுக் கொண்டார். அவர் இவன் மேலும் ஒரு பிரச்சினையை உருவாக்க பார்க்கிறான் என்று கூட நினைத்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான். விவாத நேரத்தில் வைத்துக் கொள்வோம் என்றும் இப்போது ராமேசுவரத்தில் தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் பலர் காயமடைந்து விட்டனர் எனவே அது குறித்த விபரங்களை திரட்டவும், அது தொடர்பான படங்களை சேகரிக்கவும் சம்பந்தப்பட்ட பகுதிகளை தொடர்பு கொள்ளவும் கூறினார். அவனும் வேறுவழியின்றி செய்தியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பரபரவென வேலையில் இறங்கினான். எல்லாவற்றையும் முடித்து நிமிர்ந்த போது மாலைச் சூரியன் மெல்ல மெல்ல நாகமலை காடுகளுக்குள் சரியத் தொடங்கியதைக் கண்டான். பிறகு நிதானமாக ஒரு தேனீரை வரவழைத்து குடித்தான்.

மீண்டும் ஆயாசமாக தலைமை ஆசிரியரைப் பார்த்தான். நாளைக்கு போட்டோ கிராபரை அனுப்பி ஒரு புகைப்படம் எடுக்கச் சொல்லுங்கள். நாளைக்கு அதனை தயார் செய்யுங்கள் என அதனையும் ஒரு செய்தியை உருவாக்கும் தொனியில் எந்திர கதியில் அவனிடம் தெரிவித்தார். அவன் அனைவரையும் சுற்று முற்றும் பார்த்தான். அனைவரும் அவரவர் வேலையில் இருந்தனர். ஒருவர் பரபரப்பு வார நாளேட்டை படித்து சிரித்துக் கொண்டிருந்தார். ஒருவர் டிவியை மௌனமாக்கி காட்சிவழியாக செய்தி நடவடிக்கையை கவனித்துக் கொண்டிருந்தார். ஒருவர் நாளைக்கான செய்தியில் ஆழ்ந்து எழுத்துப்பிழைகளை செய்து கொண்டிருந்தார். அனைவரின் அமைதியையும் ஒரு சீரான லயத்தில் கொண்டு செல்லும் வகையில் ஏசி தன்பாட்டுக்கு ஓடிக் கொண்டிருந்தது. அவன் தன்னையும் சேர்த்து அனைவருமே செய்திகளை தயாரிக்கும் இயந்திரங்களோ என கற்பனை செய்து கொண்டான். ஒரு தொலைபேசியோ, ஒரு டிவி துணுக்கோ ஏதேனும் கிடைத்தால் பரபரவென அந்த இயந்திரங்கள் அன்றைக்கான செய்திகளை உருவாக்கி தள்ளும் என நினைத்துப் பார்த்த போது அவனுக்கு பயமாக இருந்தது.

மறுநாள் 3 பத்தி அளவிற்கு போட்டோவுடன் செய்தி வெளியானது. சமூகம் மந்திரிகளுக்கு விழா எடுப்பதில் உற்சாகமாக இருந்தது. அதன்பின்பு மீண்டும் சில தினங்கள் கழித்து போட்டோவுடன் இரண்டு பத்தி செய்தி வெளியானது. அன்றைக்கு முதல்வரின் பேத்தியின் இசை நிகழ்ச்சி இருப்பதாக அனைவரும் பரபரப்பில் இருந்தனர். மக்கள் டிவி முன்பாக அமர்ந்து இசை வெள்ளத்தை பருகிக் கொண்டிருந்தனர். மெல்ல மெல்ல அந்த செய்திக்கான முக்கியத்துவம் தனது அலுவலகத்திலேயே குறைந்து இனி வெளியிட முடியாது என்ற நிலையை எட்டிவிடும் என்பது அவனுக்கு திட்டவட்டமாக புரிந்து விட்டது. தான் செய்ய வேண்டியது என்ன? என்பது குறித்து ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க அவனை அவனது மனசாட்சி உந்தித் தள்ளியது. அப்போதுதான் அவன் ஒரு திரைப்படத்தில் பார்த்த நவீன வசதிகள் கொண்ட பயணிகள் நிழற்குடையில் நாயகனும் நாயகியும் கனவு காட்சியில் காதல் பாட்டு பாடி நடித்தது அவனுக்கு நினைவில் தட்டியது. அந்த 36 விநாடிகள் காட்சிக்காக சில கோடிகளை செலவிட்டதாக அந்த இயக்குநர் அவனுடைய பத்திரிக்கையிலேயே பேட்டி ஒன்றில் வெளியிட்டதை நினைத்து அவனுக்கு குமட்டல் எடுத்தது. தான் ஒன்றும் செய்ய முடியாத இக்கட்டில் மாட்டிக் கொண்டதாக அவன் பதற்றம் அடைந்தான். ஆனால் அவனுக்குள் மெல்ல மெல்ல ஒரு கரு உருவாகி வடிவம் எடுத்து வருவதை அவனால் பார்க்க முடிந்தது. அப்போதுதான் அவனுக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. இது நின்று நிதானமாக செய்ய வேண்டிய ஒரு வேலை என்றும், படிப்படியாக கற்களை நகர்த்தி தனிமனிதனாக மலையை சாய்க்கும் வேலை என்றும் அவனுக்கு புரிந்தது. அவனுக்கு எண்ணத்திற்கு ஏற்ப ஒரு நாள் வந்தது.

அன்று அந்த பகுதி மந்திரி ஒருவரின் நேர்முக பேட்டிக்கு அவனையும், மூத்த நிருபர் ஒருவரையும் அனுப்ப அலுவலகத்தில் முடிவானது. நிருபருக்கு அவனுடன் செல்வதில் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. ஆனால் அலுவலக நடைமுறையை தட்டிக் கழிக்க முடியாது என்பதால் பல்லைக் கடித்துக் கொண்டு அவனை அவருடன் வர சம்மதித்தார். போவதற்கு முன்பாக தேநீர்கடையில் எந்த காரணத்தைக் கொண்டும் கசப்பான சூழல் உருவாகும் வகையில் நடந்து கொள்ள கூடாது என மறைமுகமாக எச்சரிக்கை தரப்பட்டது. அது அவருடையது அல்ல என்றும், அது நிர்வாகத்தின் மறைமுக உத்தரவு என்பதுமாக அவனுக்கு புலப்பட்டது.

அவன் தனது சகல புலன்களையும் அடக்கிக் கொண்டு அங்கே சென்றுவர முடிவு செய்தான். அது போலவே அனைத்தும் நல்ல விதமாக முடிந்தது. அப்போதுதான் அந்த அசம்பாவிதம் நடந்தது. அப்போது அந்த அமைச்சர் உங்களுக்கு ஏதாவது வேண்டுமா? என்றார். உடனே அந்த மூத்த நிருபர் சம்பிரதாயமாக எதுவும் வேண்டாம் என்பதாக சொன்னார். ஆனால் இவனோ ஒரு காரியம் ஆக வேண்டும் என்றான். நிருபருக்கு முகம் செந்தாரையாக மாறியது. ஆனால் அங்கு ஒன்றும் செய்ய முடியாத நிலை. அவர் என்ன? என்றார். அவன் நிதானமாக தனது வழியில் செல்லும் போது உள்ள பார்வையற்றோர் பள்ளி குறித்தும் அங்கு நவீன நிழற்குடை அமைப்பது குறித்தும் அவரிடம் தெளிவாக விளக்கினான். அவர் என்ன நினைத்துக் கொண்டாரோ தெரியவில்லை அது குறித்து எழுதித்தாருங்கள் மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்கிறேன் என்றார். அவன் அங்கேயே தனது பையிலிருந்து ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்து மாண்புமிகு…. எனத் தொடங்கி சரசரவென எழுதி இப்படிக்கு பொதுமக்கள் என அவரிடம் கொடுத்தான். அவர் அங்கேயே அதனை கையெழுத்திட்டு அங்கிருந்த மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கொடுத்தார். ‘உடனே இதைப் பாருங்கள்’ என்று விட்டு சட்டென்று எழுந்து நின்று ‘வணக்கம்’ என்றார். அப்படியென்றால் நீங்கள் கிளம்பலாம் எனப் பொருள். இருவரும் அவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு வெளியே வந்தோம். அவர் மிகவும் கோபத்துடன் பைக்கை உதைத்து அவனை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். வேகமாக சென்ற பைக்கின் முதுகு புறத்தில் அமர்ந்திருந்த அவனது முகத்தில் காற்று படுவேகமாக வீசியது. கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. செல்லும் வழியெங்கும் இது கனவா? நிஜமா? என்று அவன் தனக்குத் தானே கேட்டுக் கொண்டிருந்தான்.

15 தினங்களில் அவன் கொடுத்த மனுவின் முகவரிக்கு அமைச்சரகத்திலிருந்து கடிதம் ஒன்று வந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இது தொடர்பாக சென்று சந்திக்கும்படி அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இது போன்ற நடைமுறைகளை தனது பத்திரிக்கை அதிகாரத்தை கொண்டு எளிதில் சாதித்துவிட முடியும் என்பதை அவன் நன்றாக அறிவான். அவன் விபரம் எதையும் கூறாமல் மற்றொரு நிருபரை அழைத்துக் கொண்டு அந்த கடிதத்தில் குறிப்பிட்ட நாளன்று கலெக்டரை சந்திக்க சென்றான். எந்த அரசு அலுவலகமும் குறிப்பிட்ட நாளில் தான் அறிவித்ததை செய்து முடித்ததாக சரித்திரம் கிடையாது. இவர்கள் பத்திரிக்கை அலுவலகத்தில் இருந்து வருவதாக தெரிவித்ததால் இரு தினங்கள் கழித்து ஒரு காலை நேரத்தில் நேரம் ஒதுக்கித் தரப்பட்டது. அன்றைக்கு அவனுக்கு வேலை தினம். தனது அலுவலக சூழலில் விடுப்பு எடுத்தால் அன்றைக்கு தனது சம்பளம் பிடிக்கப்படும் என்பது சிறுவனுக்குக் கூட தெரியும். ஆனால் வேறு வழியின்றி அவன் அதனை மேற்கொண்டான். அதே நிருபருடன் அன்றைக்கு சென்றான். நிருபர் அவனை மாவட்ட ஆட்சியர் அறை அருகே விட்டு விட்டு அருகில் தீவிபத்து ஒன்று நடந்து விட்டது அதனை பார்த்து விட்டு வருவதாக கூறிச் சென்றார். மாவட்ட ஆட்சியர் அவனை சம்பிரதாயமாக வரவேற்று அவனை அமரச் செய்தார்.

அந்த மனுவில் குறிப்பிட்ட இடத்தில் நிழற்குடை அமைக்க ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட துறைக்கு ஆள் அனுப்பியுள்ளதாகவும், அது முடிந்து வந்ததும் அது குறித்த நிதி ஒதுக்கீடு செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும் அது தொடர்பான கடிதம் விரைவில் தங்களுக்கு வரும் என்றும் தெரிவித்தார். ஒரு தேனீரை குடித்து விட்டு அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு வெளியேறினான். நிருபருக்கு போனில் தகவல் தெரிவித்துவிட்டு அவன் தனது வீட்டிற்கு சென்றான். அதன்பிறகு மளமளவென காரியங்கள் நடந்தன. அந்த வேளையில் அதே பகுதியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா வருவதால் மத்திய அரசின் உத்தரவின் பேரில் சாலை அகலப்படுத்தும் பணிகள் தொடங்கின. அதே இடத்தில் இருந்த சில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. படிப்படியான கடிதங்கள் சில மாத இடைவெளிகளில் அவனுக்கு வந்தன. விரைவில் தேர்தல் வர இருப்பதால் இதனை காரணம் காட்டி அந்த பகுதியில் ஓட்டுகளை பெற்றுவிட வேண்டும் என்பதால் மத்திய அரசும், மாநில அரசும் அவற்றில் அக்கறை செலுத்தின. நாட்கள் உருண்டு சென்றன.

பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கான வடிவமைப்பு ஆலோசனை கூட்டத்திற்கு அவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஒரே நேரத்தில் பத்திரிக்கையாளன் என்ற முறையிலும், அந்த பகுதியில் இது அமைப்பதற்கு மனு செய்தவன் என்ற முறையிலும் அவனுக்கு ஒரு இடம் ஆலோசனை கூட்டத்தில் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு சென்றதும் அதிகாரிகள் தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு பேச்சையும் அனைத்து ஊடகங்களும் நேரிடையாக பதிவு செய்துகொண்டிருந்தன. அப்போதுதான் அவனிடம் சம்பிரதாயமாக ஆலோசனை கேட்க கலெக்டர் அவனை மைக் முன் அழைத்தார். அவன் தன்னுள் திடமாக இருந்த அதனை எப்படியும் சொல்லிவிட வேண்டும் என்று ஆயத்தமானான். ஒரு பாட்டில் தண்ணீரை மடமடவென குடித்து விட்டு வியர்த்து விறுவிறுக்க மேடைக்கு ஓடினான்.

அனைவருக்கும் வணக்கம் எனத் தட்டுத்தடுமாறினான். அதன் பின்பு இந்த நிழற் குடை மற்ற பயணிகள் நிழற் குடை போலல்லாமல் கண்பார்வையற்றோர்களுக்கு என்பதால் சிறப்பாக வடிவமைக்க வேண்டும் என்றும், அவற்றில் நவீன வசதிகள், சென்சர்கள், தொலைதொடர்பு சாதனங்கள், கண்பார்வையற்றோர் தாங்களே விரல்களால் பலவற்றை செய்து அதனை புரிந்து கொள்ளுதல், அவர்கள் அந்த பகுதியில் சாலையை கடக்கும் போது சாலையில் அமைக்கப்படும் மின் சென்சர்கள் மூலம் தானாகவே ஒளிரும் சிக்னல் விளக்குகள், நிழற்குடையின் மேற்புறமாக இவை சிறப்பாக தெரியும் வகையில் தெரியக் கூடிய விளக்குகள், தொலைதுரத்திலிருந்தும் வாகனங்களும், பிறரும் இந்த நிழற்குடையை புரிந்து கொள்ளும் வகையில் அமைப்பு போன்றவற்றை விளக்கமாக அங்கே அவன் கூறினான். அனைவரும் அப்படியே உறைந்து போய் காணப்பட்டனர். சிலர் இது சாத்தியமான என வழக்கம் போல் முணுமுணுத்தனர். அவன் பேசிய ஒவ்வொன்றும் மத்திய அரசின் வல்லுனர் குழுவால் குறிப்பெடுக்கப்பட்டது. அவன் அவற்றை தெளிவாக விளக்கிவிட்டு, இது போன்ற ஒன்று அமைக்காவிட்டால் அந்த நிழற் குடையால் யாதொரும் பயனும் இல்லை என்பதுடன் அரசின் நிதி வீணாக போகும் என்றும் முடித்தான். அவனது பேச்சு அனைத்தும் மத்திய மனித வள அமைச்சகத்திற்கும், தொழில் நுட்ப அமைச்சகத்திற்கும் சென்றது. பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது தன்னை நிரூபித்துக் கொள்ள விரும்பும் அவனது மாநில உறுப்பினர் ஒருவர் அதனை எடுத்துக் கொண்டு சரமாரியாக விளாசினார். வேறு வழியின்றி அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதற்கான நிபுணர்கள் குழு வெளிநாட்டிலிருந்து வரவழைக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் மிகவும் தந்திரமாக ஊடகங்கள் அனைத்தும் இந்த யோசனையை அந்த மாநில எம்பி தெரிவித்ததை போல பூதாகரப்படுத்தி எழுதின. இவனும் அந்த செய்தியை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது. அவன் தனக்குத் தானே புன்னகைத்துக் கொண்டு எழுதினான்.

நாட்கள் சென்றன. மரங்கள் வெட்டப்பட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சாலை அகலப்படுத்தப்பட்டது. எல்லாம் படிப்படியாக மாறியது. அந்த கண்பார்வையற்ற பள்ளியின் எதிர்புறத்தில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் கூடிய நவீன பயணிகள் நிழற்குடை படிப்படியாக உருவாகிக் கொண்டிருந்தது. அவன் தினமும் அதன் வழியாக பேருந்தில் கடந்து சென்றான். சாலையின் இருபுறமும் சென்சர்கள் பொறுத்தப்பட்டன. அங்கு பார்வையற்றோர் வந்தாலே தானாகவே ஒளிரும் சிக்னல் விளக்குகள் எரிந்தன. அவை பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அந்த நிழற்குடையில் பார்வையற்றோர் உள்ளே நுழைந்தவுடன் அவர்களை வழிநடத்தும் குரல் பதிக்கப்பட்ட சென்சர்கள் இயங்கின. அது குறித்து தெரியாத பார்வையற்றோர் உள்ளே நுழைந்தால் அவரது கேள்விக்கு அந்த சென்சர் மூலம் வழிகாட்டுதல் பெறப்பட்டது. அங்கு மூலையில் 24 மணிநேரமும் இயங்கக் கூடிய இலவச பார்வையற்றோர் புரிந்து கொள்ளும் வகையில் பிரையில் மொழியில் எழுதப்பட்ட தொலைபேசி வைக்ப்பட்டது. அதன் மற்றொரு மூலையில் நவீன எரியூட்டும் கழிப்பறை பார்வையற்றோர் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டது. தேவைப்பட்டால் மெல்லிய ஒலியில் இயங்கும் செய்தி பெட்டியும் வைக்கப்பட்டது. அதன் மற்றொரு புறத்தில் சிறிய அலமாரி அமைக்கப்பட்டு அதில் அந்த தேசத்தின் மிக முக்கியமான நு£ல்கள் சில பிரெயில் மொழீயில் உருவாக்கப்பட்டு வைக்கப்பட்டது. அதன் மற்றொரு அடுக்கில் எளிதில் அவர்கள் எடுக்கும் வகையில் முதலுதவி பெட்டிகள், ஒருபுறத்தில் தண்ணீர் டம்ளரை வைத்தால் தானாக நிரம்பி, அதன் பிறகு நிறைந்தவுடன் நின்றுவிடும் மின்சார நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. அந்த நிழற்குடை முற்றிலுமாக கண்ணாடி கூடுபோல் அமைக்கப்பட்டு அதற்குள் போதுமான வெளிச்சம் வரும் வகையில் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. பகலில் வெளிச்சம் வரும் வகையிலும் இரவில் சூரிய ஒளி மூலம் சேமிக்கப்பட்ட மின்கலத்தின் மூலம் தானாக இயங்கும் மின்சாரமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது பகலில் தானாக அணைந்து விடுவதற்கும், இரவில் தானாக ஒளிரும் வகையிலும் அமைக்கப்பட்டிருந்தது. அறைக்குள் யாரேனும் நுழைந்தவுடன் அதனை உணர்ந்து கொள்ளும் வகையில் சென்சர்கள் பொருத்தப்பட்டிருந்தன. நுழைந்து சிறிது நேரம் வரை எதுவும் நிகழவில்லை யென்றாலோ, வேறு ஏதேனும் அசம்பாவிதம் என்றாலோ தானாகவே சைரன் ஒலி எழுப்பும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் அவற்றில் ஒருவர் இருந்து அதனை இயக்கும் வகையிலும் செய்யப்பட்டிருந்தது. ஒரு வகையில் அந்த நிழற்குடைக்குள் செல்லும் பார்வையற்றவர் தான் பார்வையற்றவர் என்பதை உணரமுடியாத வகையில் முற்றிலும் நவீன தொழில் நுட்பங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும் அவர் செல்ல வேண்டிய பேருந்தை குறித்து அவர் அங்கு கொடுக்கப்பட்ட இயந்திரத்தில் தனது பிரெயில் மொழி மூலம் பதிவு செய்தால் குறிப்பிட்ட பேருந்து வரும் பொழுது குரல் பதிவு இயந்திரம் இயங்கி அவரை வழிகாட்டும் வகையில் செய்யப்பட்டிருந்தது. மேலும் பேருந்து சரியாக நிழற்குடையில் அருகில் வரையப்பட்ட கட்டத்திற்குள் நின்றால் தான் கதவுகள் நிழற்குடையின் கதவுகள் திறக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. பேருந்து நின்றவுடன் கதவு திறந்தவுடன் பார்வையற்றவர் எந்தவித தயக்கமும் இன்றி நேராக சென்று பேருந்தில் ஏறிவிடும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

கிட்டத்தட்ட அதன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. அமைச்சர் திறப்பு விழாவிற்காக நிழற்குடை நீண்டகாலம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதன்பிறகு ஒரு நல்ல நாள் பொல்லாத நாளாக பார்த்து அமைச்சர் அதனை திறந்து வைத்து விட்டு அந்த மாநில எம்பியை வாயார வாழ்த்தி விட்டு தனது படை பட்டாளங்களுடன் சென்று விட்டார். அதையும் ஒரு செய்தியாக அவன் தான் எழுத வேண்டியிருந்தது. அதன் பிறகும் நீண்ட நாட்களாக அந்த நிழற் குடை செயல்படவில்லை. காரணம் எதுவும் அதன்பிறகு அவனுக்கு தெரிவிக்கப்படவில்லை. ஒரு நாள் வலுக்கட்டாயமாக விடுப்பு எடுத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தவிக்க தவிக்க காத்திருந்து அவரை சந்திக்க முயன்றான். அவர் எரிச்சலுடன் என்ன? என்றார். விபரத்தைச் சொன்னான். ‘அதுக்கு நாங்க என்னங்க பண்றது? அதனை பராமரிக்க ஒரு வேலையாளை போட வேண்டும் என்று அரசு ஆணையில் உள்ளது? ஆனால் அதனை பார்த்துக் கொள்ள மேற்பார்வையாளர் வேலைக்கு ஒருவரும் விண்ணப்பிக்க வில்லை. யாரும் அதற்கு வரத் தயாராக இல்லை. அதனை பெரிய சுமையாக கருதுகின்றனர். எனவே என்ன செய்ய சொல்றீங்க?’ என அவனிடம் காய்ந்தார்.

அவன் மிகவும் நடுக்கமடைந்தான். ஒரு இலட்சியம் பாழடைந்து போய் கொண்டிருக்கிறதே என உள்ளுக்குள் அழத் தொடங்கினான். அவன் முகம் கருத்தது. அவர் இவ்வளவு பேசறீங்களே நீங்க பார்ப்பீங்களா? அந்த வேலையை? உங்களுக்கு பத்திரிக்கை, அதிகாரம், அந்தஸ்து இதெல்லாம் வேண்டியிருக்குல்ல, அது மாதிரிதான் மற்றவர்களும், சும்மா எந்த இதுவும் இல்லாமா வெறும் சம்பளத்தை மட்டும் வாங்கிக் கொண்டு அந்த வேலைய நீங்க பார்ப்பீங்களா? சொல்லுங்க சார்? சும்மா நேரத்தை வீணடிக்காம போய் அடுத்த வேலையப் பாருங்க? உப்பு நீரை குடிநீராக மாற்றுவது தொடர்பாக ஒரு பிரஸ்மீட் நாளைக்கு இருக்கு அதுக்கு உங்க ஆளுகளை வரச் சொல்லுங்க, கிளம்புங்க எனக்கு வேலை ஏராளமா கிடக்கு.’ என்றார்.

இவன் சன்னமான குரலில் ‘எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள்’என்றான்.

‘எதற்கு?’

‘அந்த வேலையை நா ஏத்துக்கறது தொடர்பா யோசனை பண்ணிட்டு சொல்றேன்’ என்றான் கற்பனை கலந்த உணர்ச்சி மிகுதியுடன்.

மாவட்ட ஆட்சியர் தனது பெரிய உடலைக் கொண்டு கடகடவென சிரித்தார். பார்க்க சகிக்கவில்லை. சரிசரி அடுத்த வாரம் என்னை மீட் பண்ணுங்கள் என்றபடி அழைப்பு மணியை அழுத்தினார்.

அதன்பிறகு நடந்தவைகளை நினைத்து பார்த்தால் கரியமுதனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் ஓரிரு தினங்களிலேயே தனது வேலையை ராஜினாமா செய்வதாக நிர்வாகத்திற்கு தெரிவித்தான். வழக்கத்திற்கு மாறாக மிகுந்த உற்சாகத்துடன் அலுவலகத்தில் அவனுக்கு அவனது அலுவலக நண்பர்கள் விழா எடுத்தனர். தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர். அதற்கிடையில் தான் அந்த பணியை ஏற்பதாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து அனுமதி வாங்கித்தர தனது அலுவலக தொடர்புகளை பயன்படுத்திக் கொண்டான்.

முதல்நாள் அந்த பயணிகள் நிழற்குடைக்குள் நுழைந்த அவன்மீது அந்த நிழற்குடையின் ஏசி குளிர் அவனை தாக்கியது. இப்பொழுது அந்த நிழற்குடையை சுற்றி சிறிய செடிகள் ஏராளம் அழகுற அமைக்கப்பட்டுவிட்டது. அங்கு பளிங்கு நிறத் து£ய்மை பராமரிக்கப்படுவதைக் கண்டு இரண்டு அரசின் தேசிய விருது கரியமுதனுக்கு வழங்கப்பட்டுவிட்டது. வழக்கம் போல் ஊடகங்கள் அன்றைக்கு ஒரு நாள் மட்டும் அவனை செய்தியாக்கி விட்டு இலங்கைக்கு சென்ற நடிகையின் படத்தை வெளியிட தடைசெய்வது குறித்து விவாதிக்கத் தொடங்கிவிட்டன. அது எதுவும் அவனுக்கு தெரியாது. அவன் பத்திரிக்கைகளை படிப்பதை நிறுத்தி 20 வருடங்களுக்கும் மேலாகி விட்டது. அவன் அந்த நிழற்குடையில் தனக்கு ஒதுக்கப்பட்ட மேசை இழுப்பறையில் தனக்கு பிடித்தமான சில இலக்கியப் புத்தகங்களையும், திருக்குறளையும் வைத்திருந்தான். நாளொன்றுக்கு ஒரு புத்தகம் வீதம் அவன் தொடர்ச்சியாக படித்து வந்தான். கரையான் புத்தகங்களை தின்று உயிர்வாழ்வதைப் போல அவன் புத்தகங்களை தின்றுதான் இத்தனை காலத்தையும் நகர்த்தினான் என்று சொல்லும்படிக்கு இருந்தது. அங்கு வரும் பார்வையற்ற பயணிகள் அவனது தீண்டுதலின் கரங்களின் வரிக்கோடுகளால் அவன் அவர்களுக்கு வடிவமற்ற ஓவியமாக புதைந்தான். அதிகமாக பேசுவதை தவிர்த்தான்.

ஏறக்குறைய ஆண்டுகள் பல கடந்தன. கரியமுதன் மீது காலம் தனது வரைகோடுகளை தீட்டி அவனை முதியவனாக தோற்றம் கொள்ள செய்து விட்டது. அவன் மெல்ல மெல்ல உருமாறி, உருமாறி கரையத் தொடங்கினான். அவனைப் போலவே அவனது ஊரும் நகரமும் மாறியது. அவனது ஊர் நீண்டு பெருத்த நகரத்தின் உடலுக்குள் ஒரு உறுப்பாக மாறிவிட்டது. சாலைகளில் நவீன ரக கார்களும், வாகனங்களும் பவனி வந்தன. நகரத்திற்கு இயக்கப்படும் பேருந்துகளின் வடிவங்களும், வண்ணங்களும் மாறின. ஆனால் புத்தம் புதிதாக அன்றைக்கு உருவாக்கிய அந்த நிழற்குடை நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் இவரது கைவண்ணத்தால் அப்படியே இருந்தது. ஏறக்குறைய வெளிநாட்டு பயணிகளுக்கு அது சுற்றுலா தளமாகவும், பார்வையிடும் இடமாகவும் மாறியது. ஆனால் உள்ளுர் வாசிகளுக்கு அது குறித்த எந்த கவலையுமின்றி தங்கள் போக்கில் நகரத்தின் வேலையில் தங்கள் வாழ்வை கரைத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அதைவிட முக்கியமான ஏராளாமான விசயங்கள் இருந்தன.

கரியமுதன் பெருமூச்சு விட்ட படி தனது காலம் கரைந்த விதத்தை குறித்து மின்னல் வேகத்தில் எண்ணங்கள் ஓடியது குறித்து நினைத்துப் பார்த்தார். பழைய விசயங்கள் எப்போதும் ஏக்கம் ததும்பும் கனமான நினைவுகளாக மாறிவிடுகின்றன என தனக்குத் தானே கூறிக் கொண்டார். இன்றைக்கு தனக்குத் தோன்றும் எல்லா எண்ணங்களும் முற்றிலும் மாறுபட்டதாகவும், தனக்கு ஏதோ ஒரு அவஸ்தையை ஏற்படுத்துவதாகவும் அவருக்குத் தோன்றியது. அவர் செல்ல வேண்டிய வழக்கமான டவுண் பஸ் அதிக கூட்டமின்றி வந்தது. புன்னகையுடன் ஏறினார். அவர் இறங்க வேண்டிய பயணிகள் நிழற்குடை நிறுத்தம் வந்ததும் அந்த குளிருட்டப்பட்ட நிழற்குடை அவரை உள்வாங்கிக் கொள்வது போல் தானாக திறந்தது. அவர் வந்த டவுண் பஸ் நகர்ந்ததும், அவர் உள்ளே நுழைந்ததும் அந்த தானியங்கி கதவு தானாக மூடிக் கொண்டது. அவர் தனது மேசையில் போய் அமர்ந்தார். அவருக்குள் சொல்ல முடியாத உணர்ச்சிகள் அலைக்கழித்தன. அவரை அறியாமல் அவருக்குள் கண்ணீர் பெருக்கெடுத்தது. அன்றைக்கு அவ்வளவாக பயணிகள் யாரும் அங்கு வரவில்லை என அந்த நிழற்குடை அவருக்குச் சொல்வதைப் போல இருந்தது. அவருக்கு இன்றைக்கு எதையும் படிக்கத் தோன்றவில்லை. கண்ணாடிக் கூண்டுக்கு வெளியே உலகம் சத்தமின்றி மௌனமாக காட்சியாக இயங்குவதை முதன்முறையாக அவர் உணர்ந்தார். சிறிது நேரத்தில் அந்த நிழற்குடையில் அபாய சைரன் விடாமல் நீண்ட நேரம் ஒலிக்கத் தொடங்கியது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கிளிமானூரில் 1970-ல் பிறந்தார். இவரது இயற்பெயர் ஹரிக்குமார். ஹவி, போதிபாலன் என்ற பெயரில் தொண்ணூறுகள் தொடங்கி, கடந்த முப்பதாண்டுகளாக கவிதை, கதை, கட்டுரை எழுதிவருகிறார். கணையாழி தொடங்கி இன்றைய நவீன இணைய இதழ்கள் வரை இவரது படைப்புகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அப்பா - சுப்பிரமணியன், அம்மா – லட்சுமி. மனைவி – இந்திராகாந்தி. இடறல், தொரட்டி, புதியதடம் ஆகிய இலக்கிய இதழ்களின் ஆசிரியர்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *