பெங்களூர் விமான நிலையம்.
இரவு எட்டரை மணி டெல்லி புறப்படும் தனியார் விமானத்திற்காகக் காத்திருந்தேன்.
விமானம் வந்து நின்றதும் அதில் ஏறி என் இருக்கையைத் தேடி அமர்ந்து கொண்டேன். விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்பு, ஒரு பதினைந்து இந்திய ராணுவ வீரர்கள் வேக வேகமாக வந்து என் இருக்கையைச் சுற்றிலும் அமர்ந்து கொண்டார்கள். ராணுவ உடையில் அனைவரும் கம்பீரமாகக் காட்சியளித்தனர்.
கதவுகள் சாத்தப்பட்டு விமானம் மெல்ல ஊர்ந்தபோது, விமான பணிப்பெண்கள் இரண்டுபேர் கடமையே என பாதுகாப்பு ஏற்பாடுகளை அபிநயத்துடன் சொல்லிக் காண்பித்தார்கள். அதைத் தொடர்ந்து விமானம் ஓடுதளத்தில் வேகமாக ஓடிச்சென்று மேலே எழும்பிப் பறந்தது.
நான் என் பக்கத்து ஸீட்டில் அமர்ந்திருந்த வீரருடன் பேச்சுக் கொடுத்தேன்.
“தாங்கள் அனைவரும் எந்த எல்லைக்கு பணி நிமித்தமாகச் செல்கிறீர்கள்?”
“இல்லை இல்லை… பணி முடிந்து டெல்லிக்குச் செல்கிறோம்… பெங்களூரில் நடந்த ஏரோ ஷோவிற்கு நம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வந்திருந்தார் அல்லவா? அவரின் பாதுகாப்பு நிமித்தம் கடந்த நான்கு நாட்களாக இங்குதான் இருந்தோம்…. அவர் தனி விமானத்தில் இன்று மாலையே டெல்லி சென்றுவிட்டார். நாங்கள் அனைவரும் இப்போது டெல்லி திரும்புகிறோம்…”
“ஓ ஆமாம்… புரிகிறது. நான்கூட என் பேத்தியை ஏரோ ஷோவிற்கு கூட்டிச் செல்ல ஆசைப்பட்டேன்… ஆனால் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள்…”
“ஆமாம், கொரோனாவினால் இந்த வருடம் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.”
விமானம் சீராக பறக்கத் தொடங்கிய பத்து நிமிடங்களில் ஒரு அறிவிப்பு…
“தற்போது இரவு உணவு வழங்கப்படத் தயார். தேவையானவர்கள் அதற்கு உண்டான பணத்தை செலுத்தி வாங்கிக் கொள்ளலாம்…”
நான் சாப்பிடுவதற்காக என் பர்ஸை எடுக்க முற்படும்போது, எனக்குப் பின்னால் இருந்த சில ராணுவ வீரர்களின் பேச்சைக் கேட்க நேரிட்டு மனம் உடைந்து போனேன்.
“ஏன் சாப்பாடு வாங்கலையா?”
“பசிக்கிறது. ஆனால் இங்கே விலை அதிகம். என்னால் அவ்வளவு காசு செலவழிக்க முடியாது. மூன்று மணி நேரங்கள் போனால் டெல்லி வந்து விடும். அங்கு இறங்கியதும் சாப்பிட்டுக் கொள்ளலாம்… விலையும் குறைவாக இருக்கும்.”
“டெல்லி போய்ச்சேரும் போது இரவு பதினொன்னரை ஆகிவிடும்… சாப்பிட எதுவுமே கிடைக்காது.”
“அதுவும் சரிதான்… டீ பிஸ்கெட் வாங்கிச் சமாளித்துக் கொள்ளலாம்…”
இதைக் கேட்டதும் எனக்கு மனது மிகவும் வலித்தது. பசிக்கும்போது நன்றாகச் சாப்பிடாமல், அதுவும் நம் நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள்…
உடனே எழுந்தேன். விமானத்தின் பின்புறம் உணவுடன் நின்றிருந்த அந்த பணிப் பெண்ணிடம் விரைந்து சென்றேன். அவளிடம் பதினைந்து உணவுக்கான பணத்தைக் எண்ணிக் கொடுத்துவிட்டு உடனே ராணுவ வீரர்களுக்கு உணவு பரிமாறச் சொன்னேன்.
அந்தப் பெண் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு என் கைகளை நன்றியுடன் பற்றிக் கொண்டாள். அவள் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.
“இது கார்கிலில் இருக்கும் என் சகோதரனுக்கும் சேர்த்து…” என்றாள்.
மளமளவென்று ராணுவ வீரர்கள் அனைவருக்கும் உடனே உணவு பரிமாறப் பட்டது.
நான் என் உணவை முடித்துக்கொண்டு கையை கழுவச் சென்றேன். அப்போது ஒரு முதியவர் என்னை தடுத்து நிறுத்தி, “நீங்கள் செய்ததை நான் பார்த்தேன். என்னிடம் தற்போது அவ்வளவு வீரர்களுக்கும் கொடுப்பதற்கு பணம் இல்லை… ஆனாலும் இந்தாருங்கள் என்னுடைய பங்கு” என்று கூறி என்னிடம் ஐந்நூறு ரூபாய் கொடுத்தார். நான் கையைக் கழுவியதும் என் இருக்கைக்குத் திரும்பினேன்.
சற்று நேரத்தில் அந்த விமானக் கேப்டன் என்னிடம் வந்து கண்களில் நீர் தழும்ப என் கைகளைப் பிடித்துக் குலுக்கி “இங்கு நடந்ததை பணிப்பெண் என்னிடம் வந்து சொன்னாள்…. இது ஒரு மிகப்பெரிய கருணை மிக்க செயல்… மிக்க சந்தோஷம். உங்களைப் போன்றவர்களைத் தாங்கி இந்த விமானம் பயணிப்பது எங்களின் அதிர்ஷ்டமே” என்று சொல்லிச் சென்றார்.
கேப்டன் சொன்னதும் விமானத்துக்குள் விண்ணுக்கு எட்டும்வரை ஒரே கைதட்டல்கள்…
என் முன்னால் இருந்த ஒரு பதினெட்டு வயது இளைஞன் எழுந்து நின்று என்னிடம் கை குலுக்கி, என் கைக்குள் சில நூறுரூபாய் நோட்டுக்களைத் திணித்தான்.
விமானம் தரை இறங்கி நின்றது.
நான் இறங்கும்போது ஒருவர் என் சட்டைப்பையில் சில நோட்டுக் கற்றைகளைத் திணித்தார்.
இறங்கி நடந்தேன். அந்த வீர்ர்கள் ஒரு குழுவாக என்னிடம் ஓடி வந்து எனக்கு நன்றி சொன்னார்கள். பிறகு விடை பெற்றுக்கொண்டு அவர்களின் ராணுவ ஊர்திக்காக அங்கேயே காத்திருந்தார்கள்.
திடீரென என்னுள் ஒரு உந்துதல்…
என்னிடம் மிச்சம் இருந்த பணம், தவிர தற்போது சேர்ந்த பணம் அனைத்தையும் அள்ளி எடுத்து, ஒரு வேண்டுதலை நிறைவேற்றியது போல் அவர்களிடம் பவ்யமாகக் கொடுத்தேன்.
“போகும் வழியில் நன்றாகச் சாப்பிடுங்கள்… கடவுள் உங்கள் எல்லோருக்கும் எப்போதும் துணை இருப்பார்…”
வெளியே வந்து எனக்காக காத்திருந்த காரில் ஏறி அமர்ந்துகொண்டு நிதானமாக யோசித்தேன்…
இந்த இளம் ராணுவ வீரர்கள் தங்களின் குடும்பப் பாசத்தோடு நம் நாட்டின் எல்லைகளையும் பாதுகாத்துக் கொண்டு; தன்னுடைய உயிரையும் துச்சமாக மதித்து எப்படி நம்மைப் பாதுகாக்கிறார்கள்!! இவர்களுக்கு இன்று நான் இரவு உணவு வழங்கியது இவர்களின் தியாகத்திற்கு முன்னால் ஒன்றுமேயில்லை… இவர்களின் தியாகத்தைப் புரிந்துகொள்ளத் தயாரில்லாத இவர்களின் வயதை ஒத்த நம் இளைஞர்கள் வெறும் பொழுது போக்கு அம்சங்களைத் தரும் சினிமா நடிகர்; நடிகைகளை மிகவும் போற்றிக் கொண்டாடுவதுடன், ரசிகர் மன்றங்கள் என்கிற பெயரில் அவர்களை தெய்வங்களாகவும் பூஜிப்பதுடன், அவர்களுக்கு கோயில் கட்டி வணங்குவது போன்ற செயல்களால் தங்களது இளம் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் மிகுந்த வேதனை…
ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றி ஏகப்பட்ட பணத்தை சுருட்டும் அரசியல்வாதிகள்; மற்றும் லஞ்சம் வாங்கும் அரசாங்க அதிகாரிகள் என்று பல பணக்காரர்கள் இந்த ராணுவ வீரர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை என்கிற வேதனை என்னை மிகவும் தாக்கியது.
எம் தேசத்து இளைஞனே, சகோதரனே… நம் தேசநலன் காக்க வெளியே வா… அல்லது குறைந்த பட்சம் அவர்களைப் புரிந்துகொள்…
this happened actually in US. The story writer just changed the scenario.