பதினோராம் அவதாரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 10,966 
 
 

(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த முத்தையா ‘ஊம்.. ஊம்… ஊம்” என்று ஈச்சம் பாயில் படுத்தபடி ‘ஊம்’ கொட்டிக் கொண்டிருந்தான்.

அடுத்த வீட்டுக்காரியிடமிருந்து அப்பொழுதுதான் வாங்கி வந்த அரைப்படி நெல்லை உரலில் போட்டு ‘உக்கும்…உக்கும்…உக்கும்’ என்று குத்திக் கொண்டிருந்தாள் அவன் மனைவி மாரியாயி.

முத்தையாவின் முணுமுணுப்பு வரவர அதிகமாகிக் கொண்டு வரவே, அவள் உரலிலேயே உலக்கையை நாட்டி விட்டு உள்ளே ஒடினாள்.

அப்படியும் இப்படியுமாக அவன் புரண்டு புரண்டு படித்தான். பாயின் மேல் விரிக்கப்பட்டிருந்த பழைய புடவைத்துண்டு – அதாவது பஞ்சைமகள் படுக்கும் பஞ்சு மெத்தை – நழுவித் தரையில் விழுந்து கிடந்தது. கடந்த கால வாழ்க்கையைப் பற்றி மனத்தில் எழுந்த கடைசி எண்ணங்களின் பயனாக, அவன் கடைக்கண்களில் நீர்த் துளிகள் அரும்பியிருந்தன.

“என்ன குத்துதா?”

“ஆமாம், நெஞ்சை எண்ணம் குத்துது; உடம்பைப் பாய் குத்துது: வயிற்றைப் பசி குத்துது!”

“இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ, கஞ்சி காய்ச்சி எடுத்துக்கிட்டு வந்துட்றேன்!” என்று சொல்லிக் கொண்டே மறுபடியும் நடைக்கு வந்தாள் மாரியாயி.

“என்னமோ, அதுவரை என் உயிரும் பொறுத்துகிட்டு இருந்தால் சரி!” என்று குப்புறப் படுத்தான் முத்தையா.

“சிறது நேரத்திற்கெல்லாம் முத்தையனுக்கு எதிரே கஞ்சிக் கலயம் காட்சியளித்தது. அதைக் கண்டதும் முகத்திலே கோடி சூரியப் பிரகாசத்தை வரவழைத்துக் கொண்டு எழுந்து உட்கார முயன்றான் முத்தையா. ஆனால் அவனது உடல் நலம் அதற்கு இடம் கொடுக்கவில்லை.
கலயத்தைக் கீழே வைத்துவிட்டு அவனைத் தூக்கி உட்கார வைத்தாள் மாரியாயி. ‘முருகா! முருகா’ என்று முனகிக் கொண்டே எழுந்து உட்கார்ந்தான் முத்தையா.

“நாமெல்லாம் கூப்பிட்டா முருகரு வருவாரா? வள்ளி கூப்பிட்டா வருவாரு!” என்று சொல்லிக் கொண்டே, ஒரு தகரக் குவளை நிறையக் கஞ்சியை ஊற்றி அவனிடம் கொடுத்தாள் மாரியாயி.

அந்தக் கஞ்சி உள்ளே போனபிறகு, “ஏன், மாரி காத்தாலே வைத்தியரைக் கூட்டிக்கிட்டு வரலே?” என்று கேட்டான் முத்தையா.

“அவரு வந்தாத்தானே? ‘வர முடியாது போ!’ என்று சொல்லிப்பிட்டாரு!”

“அப்புறம்…?”

“கையிலே யிருந்த நாலணாக் காசை எடுத்து உண்டியிலே போட்டேன்; ‘உன் புருசன் உடம்புக்கு என்ன’ன்னு கேட்டாரு; ‘சுரம்’னு சொன்னேன். நாலு பொட்டணம் மருந்தை மடித்துக் கொடுத்து, ‘இதைத் தினம் ரெண்டு வேளை தேனிலே கொடு; ஆகாரம் பார்லி கஞ்சி மட்டுந்தான் கொடுக்கணும்’னு சொன்னாரு. நீ தான் பாயிலே படுத்துப் பத்து நாளாச்சே, கையிலே ஒரு சல்லிக் காசு ஏது? தேன் வாங்கிறதற்கும் காசில்லே, பார்லி வாங்கிறதற்கும் காசில்லே! அதாலேதான் உனக்கு இன்னிக்கு மருந்து கொடுக்கல்லே!” என்றாள் மாரியாயி.

“அப்படின்னா, நீ என்ன பண்ணப் போறே, மாரியாயி?”

“என்னத்தைப் பண்றது. இந்தக் கஞ்சிக்கலயத்தையும் தகரக் குவளையையும் நான் உன் தலை மாட்டிலேயே வைத்து விட்டுப் போறேன். பசிக்கிற போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஊத்திக் குடிச்சுக்கோ. நான் காட்டுக்குப் போய் ஒரு சுமை கட்டையாச்சும் வெட்டி பட்டணத்துப் பக்கமாய் போய் வித்துப்பிட்டு வரேன். வரும்போது தேனும் பார்லியும் வாங்கிக்கிட்டு வரேன். அப்படிச் செஞ்சாத்தான் அடுத்த வீட்டுக்காரிட்டே வாங்சின அரைப்படி நெல்லையும் நாளைக்குத் திருப்பிக் கொடுக்க முடியும்; அவள் வாயிலிருந்தும் தப்பித்துக் கொள்ளமுடியும். சும்மா வீட்டிலே உட்கார்ந்துகிட்டு, உன்னை நானும், என்னை நீயும் பார்த்துக்கிட்டு இருந்தா உன் உடம்பு தேறுகிற வழிதான் எப்படி?”

“மாரியாயி; நீ சாதாரண மாரியாயி இல்லை; இந்த மகமாயி மாரியாயிதான்! இல்லாட்டிப் போனா இந்த ஒண்ணுமில்லாத பயலுக்கு இப்படியெல்லாம் கஷ்டப்படுவியா. சீமையிலே இந்த வெள்ளைகாரப் பயலுங்க இருக்கிறாங்களாமே, அவனுங்க பெண்டாட்டிமாருங்க ‘ஊம்’ என்கிறதற்கு ‘ஆம்’ என்கிறதற்கெல்லாம் கட்டிக்கிட்ட புருஷனை விட்டுட்டு, வேறே எவனாச்சையும் கூட்டிக்கிட்டு ஓடிப் போயிடுவாளுங்களாம்! ராசங்கங்கூட அது தான் ஞாயம்னு சட்டம் செஞ்சு வச்சிருக்குதாம்! – போனமாசம் நம்ம ஊருக்கு வந்திருந்துச்சே ஒரு பட்டணத்துப் பிள்ளை, அது சொல்லிச்சு. அந்த வெள்ளைக்காரிங்க என்ன தான் படிச்சுக் கிழிச்சவங்களாயிருந்தாலும் உனக்கு ஈடாவ முடியுமா? – என்னவோ, போ! கடவுள் விட்டவழி போய்ப் பார்த்துக் கிட்டுப் பொழுதோடே வந்துடு!” என்று மிக்க வேதனையுடன் சொல்லிக் கொண்டே மீண்டும் படுத்து விட்டான் முத்தையா.

மாரியாயியும் கையில் வெட்டுக் கத்தியைப் பிடித்துக் கொண்டு காட்டை நோக்கிக் கிளம்பி விட்டாள்.

கல்லிலும் முள்ளிலும் கால் கடுக்க நடந்து, காட்டை அடைந்தாள் மாரியாயி. கட்டையும் வெட்டினாள் கட்டும் கட்டினாள். அப்பாடி ஒரு ரூபாயாவது போகும்!” என்று நினைத்த போது, அவள் உள்ளம் இழுத்துச்சிம்மாடு சுத்தித்தலையில் வைத்துக் கொண்டே, காட்டிலாகா அதிகாரிகள் யாராவது தன்னைக் கவனிக்கிறார்களா என்று ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்தாள்; யாரையும் காணவில்லை. பிறகு, சுமையைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டு சுறுசுறுப்புடன் நடந்தாள்.

கிராமத்தின் எல்லையைக் கடந்து பட்டணத்தின் எல்லையை அடைந்ததும் “விறகு அம்மா, விறகு!” என்று கூவிக் கொண்டே அவள் தெருத் தெருவாக அலைந்தாள்.

அங்கே ஒரு தெருவில் இருவர் குடிவெறியில் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். வாய்ச்சண்டை முற்றி கைச்சண்டையில் இறங்கும் சமயம்; அந்த வழியே இரண்டு போலீஸ்காரர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் அந்த இடத்துக்கு வந்து சேர்வதற்கும், குடியர்கள் இருவரும் ஒருவரையொருவர் தங்களால் ஆன மட்டும் குத்திக் கொள்வதற்கும் சரியா யிருந்தது.
“முதல் தேதி நெருங்கிப் போச்சு; என்னடா நீ இன்னும் ஒரு கேசும் பிடிச்சுகிட்டு வரலேன்னு இன்ச்சிபெட்டரு ஐயா கேக்கறாரு! இவனுங்களையாச்சும் இன்னிக்குப் பிடிச்சுக்கிட்டுப் போவோமா?” என்றான் 101.

“அடே! அவனுங்கக் கிட்ட யாருடா போவான்? அவனுங்களுக்கு இருக்கிற கோவத்திலே நம்மையும் ஒரு போடு போட்டு வச்சா என்ன பண்றது?” என்றான் 202.

“அதாஅண்ணே, நானும் பார்க்கிறேன்! அவனுங்கக்கிட்ட உதை பட்டா நம்ம உடம்பு தானே நோவப் போவுது? இன்ச்சிபெட்டரு ஐயாவுடைய உடம்பா நோவப் போவுது?”

“இங்கே நம்ம நிக்கிறதுகூடத் தப்பு எவனாச்சும் ஒரு பித்துக்குளிப் பய வந்து, போலீஸ் போலீஸ் என்று கத்துவான். அப்படிக் கத்தர வரைக்கும் நாம ஏன் இங்கே நின்னுக்கிட்டு இருக்கணும்? நீ வந்தாவா, வராவிட்டாப் போ! நான் போரேப்பா!” என்று சொல்லிக் கொண்டே 202 அந்த இடத்தை விட்டு நழுவி விட்டான்.

101 எதற்கும் துணியாமல், சிறிது நேரம் அங்கேயே நின்று தவித்துக் கொண்டிருந்தான். அதற்குள் அந்தக் குடியர்களில் ஒருவன் கைச் சண்டையை விட்டுக் கத்தியை எடுத்துக் கொண்டான். அவ்வளவுதான்; கல்லைக் கண்ட நாயைப் போல் 101 இருந்த இடம் தெரியவில்லை!

அடுத்த நிமிஷம் அவன் அந்தத் தெருக்கோடியில் திரும்பிக் கொண்டிருந்தான்.

மாரியாயி அந்த சூரப்புலியின் கண்ணில்பட்டாள்!

“ஏய்”:என்று அவளை அதிகாரத்துடன் அதட்டி அழைத்தான் 101.

“நேரமாச்சுங்கோ, சும்மா பேரம் பண்ணி பொழுதை ஒட்டாதீங்கோ ஒரே விலை ஒரு ரூபாய் தானுங்க!” என்றாள் அப்பாவி மாரியாயி.

101 ‘இடி இடி’ என்று சிரித்தான்.

“ஏம்மா, என்னைக் கட்டை வாங்க வந்தவன்னா நினைச்சுக்கிட்டே?… ஹஹ்ஹிஹ்ஹி… ” என்று தன் மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டே அவன் மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான்.
மாரியாயிக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் தன்முகத்தில் அசடு வழிய, ‘நீங்க கட்டை வாங்க வரலையா? அப்படின்னா நான் போய்விட்டு வரேனுங்க!” என்று சொல்லி விட்டுத் திரும்பினாள்.

மீசைக்காரனுக்குக் கோபம் வந்து விட்டது. “ஏய்! கட்டையை இறக்கு, கீழே!” என்று கட்டளை யிட்டான்.

“ஏன் சாமி?”

“ஐயே! ஏ…ன்..சா…மி? – கேள்வியைப் பாருடா, கேள்வியை!” என்று கிண்டல் செய்து கொண்டே, “இறக்கும்மே, கீழே! இப்போ பட்டணத்திலேயே கட்டையை ‘ரேஷன்’ செய்திருக்காங்கன்னு உனக்குத் தெரியாதா?” என்று அதட்டினான் 101.

“என்ன சாமி! என்ன செய்திருக்காங்க? ஏசனா? அப்படின்னா என்ன சாமி?

“உன் தலையைச் செய்திருக்காங்க இறக்கு கீழே!” என்றான் 101 வெறுப்புடன்.

இப்பொழுதும் மாரியாயிக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் பயந்து கொண்டு, தலையிலிருந்த சுமையை இறக்கிக் கீழே வைத்து விட்டாள்.

“சரி, இங்கேயே கொஞ்சநேரம் நின்னுக்கிட்டு இரு. என் ‘டூட்டி’ முடிஞ்சதும் உன்னைப் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிக்கிட்டுப் போறேன்!”

“நான் வீட்டுக்குப் போவனும், சாமி! அவரு காயலாப் படுத்துக்கிட்டு இருக்காரே!”

“எவரு காயலாப் படுத்துக்கிட்டு இருக்கா? …சீ… சும்மாயிரு!” என்று அவுள் தலையில் தட்டினான் 101.

மாரியாயி அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை. ‘கலகல’ கண்ணிரைத் தரையில் கொட்டிக் கொண்டு பேசாமல் உட்கார்ந்து விட்டாள்.

சிறிது நேரத்திற்கெல்லாம் நூற்றியொன்றுக்கு ‘டூட்டி’ முடிந்துவிட்டது. அவன் மாரியாயியைக் கூட்டிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றான்.

மறுநாள் நீதி மன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டாள் மாரியாயி. தீர்ப்பு என்ன? அவள் செய்த மகத்தான குற்றத்திற்கு இரண்டு வாசச் சிறைவாசம்!

“வேணும்னா கட்டையை மட்டும் எடுத்துக்கிட்டு என்னை விட்டு விடுங்களேன், சாமி! காயலாப் படுத்துக்கிட்டுக் கிடக்கும் என் புருஷனுக்கு என்னை விட்டா வேறே கதியில்லையே!” என்று கதறிப் பார்த்தாள் மாரியாயி.

சட்டம் அப்படிச் சொல்லவில்லையோ என்னவோ, “ஸைலன்ஸ்!” என்று இரைந்து, அங்கே நிலவியிருந்த நிசப்தத்தைக் கலைத்தான் ‘கோர்ட்’ சேவகன்!


காட்டில் ஒரு யானை நோய்வாய்ப்பட்டு இரை தேடித் தின்பதற்குச்சக்தியற்றுப் போனால், மற்ற யானைகள் அதற்கு இரங்கி இரை தேடிக் கொண்டு வந்து கொடுத்து அதைக் காப்பாற்றுமாம். அம்மாதிரியான கெட்ட வழக்கம் ஒன்றும் மனித வர்க்கத்தினிடம் கிடையாதல்லவா? ஆகவே தன் குடிசையில் நாதியற்றுக் கிடந்த முத்தையனை அந்த ஊரார் யாரும் கவனிக்கவில்லை. தன் மனைவி மாரியாயி ஒரு சுமை விறகைக் கொண்டு போய் இந்தியாவின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவித்ததற்காக, இரண்டு வாரச் சிறை வாசம் கிடைக்கப் பெற்றாள் என்பதும் அன்று மாலை வரை அவனுக்குத் தெரியவில்லை!

இந்நிலையில் அவன் அடிக்கடி ‘மாரி மாரி’ என்று அரற்றுவதும், கஞ்சிக் கலயத்தைக் கொஞ்சங் கொஞ்சமாகக் காலி செய்வதுமாகப் பொழுதைக் கழித்து வந்தான்.

சிறிது நேரத்திற்கெல்லாம் அந்தக் குடிசை முழுவதும் இருள் கவிழ்ந்தது. விளக்கையாவது பொருத்தி வைக்கலாம் என்ற நோக்கத்துடன் அவன் அடுப்பங்கரையை நோக்கி நகர்ந்தான்.

இந்தச் சமயத்தில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒருத்தி பரபரப்புடன் உள்ளே ஓடி வந்து, “முத்தையன் அண்ணே உன் பெண்சாதியைப் பட்டணத்திலே ஒரு போலீஸ்கார ஐயன் பிடிச்சிக் கிட்டான்!” என்று இரைந்தாள்.

அவள், மாரியாயியுடன் பட்டணத்திற்குக் காய்கறி விற்கச் சென்றவள்.

அவள் சொன்னதைக் கேட்டதும், “ஆ!” என்று அலறிய முத்தையா, அடுத்த நிமிஷம் மூர்ச்சையானான்!
சிறிது நேரத்திற்கெல்லாம் அண்ட சராசரங்களும் ‘கிடுகிடு’ வென்று நடுங்குவது போன்ற ஒரு பேரோசை அவன் காதில் விழுந்தது.

தூக்கிவாரிப்போட்டுக் கொண்டு எழுந்தான். ‘திருதிரு’ வென்று விழித்துக் கொண்டு மேலும் கீழும் பார்த்தான்.

‘படீர்’ என்று ஒரு வெடி, பளிச்சென்று ஒரு மின்னல் பகவான் பிரத்தியட்சமானார்!

“நீங்க யாரு, சாமி ?” என்று வினயத்துடன் கேட்டான் முத்தையா. ஏனெனில், அதற்குமுன் அவன் பகவானைப் பார்த்ததில்லையல்லவா?

“தீனதயாளன் நான்; கருணாமூர்த்தி நான்; ஏழை பங்காளன் நான்…” என்று பகவான் ஆரம்பித்தார்.

“அப்படின்னா இந்த ஏழையைக் காப்பத்தத் தான் இப்போ…”

“ஆமாம்; இதற்கு முன் நான் பல உயிர்களைக் காப்பதற்காகப் பத்து அவதாரங்கள் எடுத்திருக்கிறேன்; இப்போது அந்த ஈவிரக்கமற்ற அதிகார வர்க்கத்தினிடமிருந்து உன் மனைவியை மீட்டு வருவதற்காகச் ‘சிறை வார்டராய்ப் பதினோராம் அவதாரம் எடுத்தேன், இதோ உன் மனைவி; இனி உங்களுக்குத் தீங்கு செய்பவர்கள் யாராயிருந்தாலும் சரி, அவர்களுடைய தலைகள் என் சக்ராயுதத்துக்கு இரையாகும்…”

“என்ன சாமி, என்ன சொன்னிங்க அந்த எமப் பயலுங்கக்கிட்ட இருந்து என் மாரியை மீட்டுக்கிட்டா வந்துட்டீங்க! ஆ! என் மாரி, மாரி!” என்று கூவிக் கொண்டே தன் மனைவியைக் கட்டி அணைத்தான் முத்தையா.

அவனுடைய அணைப்பில் யாரும் பிடிபடவில்லை! வெறித்துப் பார்த்தான் முத்தையா. எல்லாம் வெறும் கனவு!

– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.

விந்தன் என்று அறியப்படும் கோவிந்தன் (செப்டம்பர் 22, 1916 - ஜூன் 30, 1975) புதின எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார். கோவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்குப் பிறந்தார். சென்னை சூளைப் பகுதியில் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார். இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *