பட்டுப்பாவையர் உலகில் ஒரு பாவியின் நிழல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 3, 2021
பார்வையிட்டோர்: 16,348 
 

அந்தப் பிரபலமான மகளிர் கல்லூரி மாதுவை பொறுத்தவரை, அதில் அவளுக்கு படிப்பு வந்ததோஇல்லையோ, வேதத்தையே. கரைத்துக் குடிக்க அவளுக்கு, அது ஒரு தவச் சாலை போலவே விளங்கியது. வெறுமனே குடிக்கிற பொருளல்ல்ல அது. அதற்கும் மேலாய் எம்முள் என்றும் ஒரு சாட்சி புருஷனாகவே இருந்து ஒளிர்கின்ற, சத்தியத்தின் பிரதிபலிப்பாகவே அதை இனம் காண முடிந்தாலும், பாமர சனங்களைப் பொறுத்தவரை அது என்றும் மறை பொருள் தான். பன்னிரண்டே வயதாகியிருந்தாலும் மாதுவுக்கு அப்பாவின் வாய் மொழியாக இந்த வேத பிரகடன வாழ்க்கை நெறிகள் ஓரளவு பரிச்சயப்பட்டே இருந்தன.

அதர்மம் எங்கு தலை தூக்கினாலும். அவளுக்கு மனம் தாங்காது. கல்லூரி வாழ்வைப் பொறுத்தவரை இன்னும் அவள் துருவத்திலேயே இருக்கிறாள் முதல் நாள் அங்கு காலடி எடுத்து வைத்த போதே, அவளுக்குத் தலை சுற்றியது .முகப்பில் அலங்கார வளைவுகளோடு கல்லூரி கட்டடம் அழகான ஓர் அரண்மனை போல், வானளாவ உயர்ந்த கட்டடங்களோடு கம்பீரமாகக் காட்சி தந்தாலும், உள் நுழைந்து தன் வகுபறையைக் கண்ட போது தான் இது ஒரு மாறுபாடான அனுபவமாக இருந்தது அவளுக்கு. . ஒரு கிராமத்துப் பாடசாலை போலல்ல, அதிலும் தரம் தாழ்ந்ததாக கீற்றுக் கொட்டகைகளுடன் அவைகள் அவளை வரவேற்ற போது, அவள் ஒன்றும் இடிந்து போகவில்லை. ஏற்றத்தாழ்வும், மேடுபள்ளமும் வாழ்க்கையில் இருக்கத் தான் செய்யும். இது வாழ்கையல்ல. ஒரு தவச்சாலை. படிப்பே தவமாக வரவேண்டிய ,அநேக மாணவிகள் விலையுயர்ந்த உடையயலங்காரங்களுடன் மெருகூட்டப்பட்ட முக ஒப்பனைகளோடு காட்சி தந்ததை எதிர்கொள்ளும் திராணியற்றவளாய் அவள் கரை ஒதுங்கி நிற்க நேர்ந்தது..இப்படி எத்தனை நாட்களுக்குத் தான் நிற்க முடியும் அவளால்?

அவள் அங்கு வந்திருப்பது .படிக்க மட்டும் தான். அதை ஒரு தவம் மாதிரி ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று ,அப்பா அடிக்கடி கூறுவார். .அப்ப ஏன் என் மனம் சஞ்சலப்படுகிறது ?காலில் செருப்பு வேறு கடித்தது. .புதிதாகப் பெரியண்ணா வாங்கித் தந்த செருப்பு .கிராமத்துப் பாடசாலையில் படிக்கிற போது ,அவள் செருப்பே போட்டதில்லை. வெறும் காலுடனேயே இங்கும் வந்திருக்காலாம்.. அப்படி வந்திருந்தால், அவள் கண் எதிரே காட்சி தேவதைகளாய் உலா வரும் இந்த இந்த மாணவியர், அவளை உயிருடனேயே விழுங்கி ஏப்பம் விடவே செய்வர் என்று நினைக்கிற போது, அவளுக்கு அழுகை தான் குமுறிக் கொண்டு வந்தது…அவள் படிக்க வந்தது ஏழாம் வகுப்பிலே தான். அதில் ஏ பி சி என்று மூன்று பிரிவுகள்.. அவள் ஏ பிரிவில் தான் படித்துக் கொண்டிருந்தாள். அதற்கு டீச்சராக விளங்கியவர் ராஜ்லட்சுமி அக்கா. அந்தக் காலத்தில் அக் கல்லூரியில் டீச்சர்கள் அனவரையுமே ,அக்கா போட்டுத் தான் அழைப்பார்கள. ராஜலட்சுமி அக்கா பார்த்தால் தங்கப் பதுமை போல் இருப்பார். நிறம் மட்டுமல்ல, மனமும் அன்பு மயமான ஓர் ஒளிச் சூரியனைப் போலவே, எல்லோரையும் எந்தப் பிரதிபலனுமின்றி அன்பு செய்ய மட்டுமே முன் நிற்கும், ஒரு தர்ம தேவதை தான் அவர். இதை நேர் தரிசனமாக விளக்கக் கண்கூடாக விளக்குவதற்கு, மாதுவின் வாழ்க்கையிலேயே, பல சம்பவங்களுண்டு. எல்லாவற்றையும் விளக்குவதானால் கதையின் மையப் பொருள் கை நழுவியே போய் விடும்.

அவள் படிக்கும் ஏ வகுப்புக்கு அடுத்ததாகத் தான்பி பிரிவும் இருந்தது அதை அடக்கி ஆளும் மொனிட்டராகப் பத்மாசனி என்ற மாணவியே இருக்கிறாள். யாரோ சிவில் என்ஜினியரின் மகளாம் .அவள். அதற்கேற்ப பணக்கார வீட்டுச் செல்லப் பிள்ளையாய் அவ:ள் ஒரு பகட்டுத் தேவதையாகவே விளங்கினாள் அவளின் உடையலங்காரம் அப்படி இருந்தது முந்தைய தலைமறையில் மாது வாழ்ந்த காலத்தில் அக் கல்லூரியில் சீருடையெல்லாம் கிடையாது. பஞ்சாபி கூட இல்லை. இந்தியன் கெளசாரிதான். அதாவது பாவாடை சட்டை அணிந்து தாவணி போட்டுக் கொள்வது.

மாதுவின் அப்பாவோ ஓர் ஏழை வாத்தியார் என்பதால், மிக எளிமை. அதிலும் வரட்டுக் கெளரவத்துக்கு இடம் கொடாமல் , வருடம் முழுவதும் ஒரேயொரு உடுப்புத் தான் அவர்களுக்கு. அதிலும் பெரிய குடும்பம். கமலாசனிக்கு மாதுவைப் பார்த்தால் ஒரே இளக்காரம் தான். அதிலும் அவளுக்குப் பெரிய தொண்டை… மாது சிரோண்மணி என்ற மாதுவின் காதில் விழுப்படியாகவே, பல எரிச்சலூட்டும் கதைகளை அவள் கூறுவதை, வேறு வழியின்றி ஜீரணித்து உள் வாங்கியவாறே, மாது மெளனம் காப்பதே அங்கு ஒரு தவம் போல் நிகழ்ந்தது.

பத்மாசனி வாழும் உலகம் வேறு .பளிங்கு வார்ப்பாகவே தோன்றுகிற பட்டுப் பாவையர் உலகம். பட்டு என்றாலே மதுவுக்கு அலர்ஜி. எப்போதும் பருத்தி ஆடை தான் அவளுக்கு மிகவும் பிடிக்கும். அப்பா அதற்கு மேல் போக மாட்டார் என்பதையும், அவள் நன்கறிவாள். பணம் கை நிறையப் புரளத் தொடங்கினால், நல்ல வீடு வரும். கார் வரும். காட்சி உலகில் கொடிபறக்க எத்தனை வகையான நாகரீக சோடனைகள். .பட்டும் பொன்னுமாக வாழ்க்கை. ஜொலிப்பதற்கே பணம் மடி நிறைய அள்ள வேண்டியிருக்கிறது மது அவற்றுக்கெல்லாம் , ஆசைப்பட்டதில்லை .பெரிய அளவில் நகை நட்டுக்கு ஆசைப்பட்டதில்லை .அப்பாவின் வளர்ப்பு முறை அப்படிஅவர் ஓர் ஏழை தமிழ் உபாத்தியாராக இருப்பதால், விழிப்பு நிலையில் வாழ்க்கையின் கோட்பாடுகளை நன்கு கற்றுத் தேறிய ஒரு மேதை போன்றே,, அவர் ஒரு வார்த்தை கூறினாலும், மனதைச் செம்மைப்படுத்தக் கூடிய வேத பிரக்டனமாகவே, அதை உள் வாங்கி அனுசரித்துப் போகக் கூடிய மனப் பக்குவம் அவளுக்கு இயல்பாகவே வந்து வாய்த்திருந்தது. .அறிவு மந்தமாகிப் போன மனிதர்களினிடையே, அன்பை மட்டுமே வெளிப்படுத்தத் தெரிந்த ஓர் ஆதர்ஸ் தேவதையாகவே, அங்கும் அவள் விளங்கினாள். இதையெல்லாம் அறிய முடியாமல் போன மறு துருவத்திலேயே, அவர்கள். அந்தப் பட்டுப் பாவையரின் உலகம், தன்னை வீழ்த்தவே, கையில் கல் வைத்துக் கொண்டு, பவனி வருவதாக அவளுக்குப்படும்.

இதைப் பற்றி ராஜலட்சுமி அக்கா அறிய நேர்ந்தால், மிகவும் வருத்தப்படுவார். அப்படிக் கோள் மூட்டி சண்டை வளர்க்கும் வக்கிர புத்தி அவளுக்குக் கனவிலும் வருவதில்லை.

கல்லூரி யில் இடை வேளை விடும்போது .மாணவிகளுக்குக் கொண்டாட்டம் தான். கையில் காசு புரள்கிற மாணவிகளில் பலர் ஐஸ்கிறீம் வான் வந்தவுடன் ஒன்றுக்கு பத்தாய் ஐஸ்கோன் வாங்கித் தின்ன, நிலத்தில் கால்கள் நிலை கொள்ளாம;ல் பாய்ந்தோடிப் போவதை, வேடிக்கை பார்த்தவாறே அவள் தொடர்ந்து வரும் போது தான், அந்த விபரீதம் நடந்தேறியது. அந்தக் காலத்தில் ஒரு ரூபா நாணயக் குற்றி என்றாலே இக் காலத்து ஆயிரம் ரூபாய்க்குச் சமம். அப்பாவிடம் அதைப் பெறுவதே பெரும் பியத்தனமாகி விடும். தகுந்த காரணமின்றி அவர் காசு கொடுப்பதில்லை. அவள் பெரிதாக எதற்கும் ஆசைப்பட்டதில்லை .ஆனால் ஐஸ்கிறீம் மீது சிறு சபலம் அவளுக்குண்டு .அது அப்பாவுக்கும் தெரியும் . அன்று காலை ஒரு ரூபா நாணயக் குற்றிக்குப் பதிலாக அவரே மனம் விரும்பி ,இரண்டு ரூபா நாணயக் குற்றிகளை அவளிடம் கொடுத்திருந்தார் ஆக அவள் ஒரேயொரு ஐஸ்கோன் மட்டும் தான் வாங்க நினைத்தாள் அந்தக் காலத்தில் அதன் விலை இருபத்தைந்து சதம் மட்டும் தான்.

மரநிழலில் தங்கி நிற்கும் ,ஐஸ்கிறீம் வானைச் சுற்றி கூட்டம் மொய்த்தது பெரும் கூட்டம். அதிலும் பட்டுப் பாவையர் உலகமே அங்கு கொடி கட்டிப் பறப்பதாகத் தோன்றிற்று.. அந்தக் கொடி எழுச்சிக்கு முன்னால், அவள் எடுபடாத வெறும் நிழல் போல, ஆம் அவர்கள் அந்தப் பட்டுப் பாவையர் அவளை அப்படித் தான் பார்த்தார்கள்.

வா ராஜாத்தி! வந்து நீயும் வாங்கிக் குடிச்சிட்டு வெறி ஏத்திக் கொண்டு போ “என்று குரல் கேட்டது. குரல் வந்த திக்கை நோக்கி அவள் நிமிர்ந்து பார்த்த போது, பத்மாசனி முகத்தில் சிரிப்பு வழிய நின்று கொண்டிருப்பது தெரிந்தது. அவள் கரி பூசும் நோக்கத்துடன் தான் வந்திருக்கிறாள்..நலிந்தோரை நோக்கிக் கல் எறிகிற சந்தோஷம் அவளுக்கு,. ஒரு பாவப்பட்ட இழி நிலைப் பிறவியாகவே, மாது அவள் முன்னில்லையில், மெளன தவம் பூண்டு நின்றிருந்தாள்.

வெறி யாருக்கு என்பதைக் கடவுள் தான் கூறவேண்டும் . மாது பேசுவதைத் தவிர்த்து, ஒரேயொரு ஐஸ்கோன் மட்டும் வாங்கிக் கொண்டு, மர நிழலை நாடிப் போன போது, வெய்யில் சுட்டெரித்தது . அது நிஜ வெய்யிலல்ல கமலாசனிதான் வாய் திறந்து தீ வளர்க்கிற சுபாவம் மாறாமல் கொக்கரித்துக் கூறுகிறாள்.

அங்கை பார் அது போட்டிருகிற உடுப்பை. எப்ப பார்த்தாலும் ஒரே குபேரன் தான். சீ! நாறுது.

அவள் சொல்வதைக் கேட்டு,அவளைச் சூழ்ந்து நின்ற அனைவரும் மூக்கைப் பொத்திக் கொண்டு, மார்பு குலுங்கச் சிரித்த போது,, அவளுக்கு உலகமே வெறுத்தது.. அன்பைப் போதிக்க வேண்டுமென்று அவள் உளுணர்வு சொல்லிற்று . ஆனால் அது நடக்கிற காரியமல்ல. வகுப்புப் பாடத்தை விட இந்த வாழ்க்கை சித்தாந்தமே முக்கியமென்று, அவளுக்குப் பட்டாலும், ,அதை உணர்வு பூர்வமாகச் சொல்லி விளக்குகிற, மனப் பக்குவம் இன்னும் அவளுக்கு வரவில்லை. காலம் செல்ல ,வாழ்க்கை தடம் புரளும் நிலை வந்தால், அன்பின் ஆளுமை பெருக்கத்தின் நிஜமான கதிர் வீச்சை அவர்களாகவே, குறிப்பாக கமலாசனி தானாகவே, இதைப் புரிந்து கொண்டால், சந்தோஷம் தான். அது நடக்க வேண்டுமேயென்ற கவலை தான் இப்போது மாதுவிடம் மிஞ்சியிருந்தது. .அதையே பிரதிபலிப்பது போல, இருளில் வெறித்த அவள் முகமும், அது எடுபடாமல் போன சங்கதிகளும், வெறும் நிழல்களாகவே, அவர்கள் கண்களில் கரித்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *