‘பச்சை’ மணிக்கிளியே!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 4, 2023
பார்வையிட்டோர்: 2,258 
 
 

சூப் விரும்பிகளின் புனைபெயர்தான் ‘சூஃபி ‘ என்று ரொம்பகாலத்திற்கு முன்பு நினைத்திருந்தேன். இதன்படி என் பழைய காதலி மர்யம் கூட மஹாசூஃபியாகிவிடுவாளே..(திணறி விடுவேன்!) , உண்மையான சூஃபி என்பது யாரைத்தான் குறிக்கும் என்ற கேள்வியும் குழப்பமும் எனக்கு நீங்காமலேயே போயிருக்கும் – அஷ்ரஃப் மட்டும் இல்லையென்றால்.

முஹம்மது அஷ்ரஃப் , ‘பாக். ஒரு கதிரின் உதிரம் ‘ நூலில் காட்டப்படாத பாகிஸ்தானி. (இந்த ‘னி ‘ நிஜமாகவே ஒரு தமாஷ். ஆஃப்கானி , சூடானி, சுல்தானி , பேஈமானி….இரண்டு கேள்விக்கு பதில் சொல்லும் ஒரே சொல். ‘நீ எங்கே போகிறாய் ? தலையில் எப்படி காயம் வந்தது ? ‘ என்ற கேள்விகளுக்கு ‘செங்கல்பட்டு ‘ என்பது மாதிரி!).

அவன் பெரிய சூஃபியாகவே எனக்குத் தெரிந்தான். யார் சூஃபி ? தண்டனை கொடுக்கும் தெய்வத்தைச் சொல்லித் திகைப்பூட்டாமல் அன்பின் வடிவாக ஆண்டவனைக் காட்டுபவன் சூஃபி. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடுபவன் ‘ சூஃபி. சிலர் சூஃபிக்கு ‘இஸ்லாமிய இறைஞானி ‘ என்று பொருள் சொல்வார்கள். சூஃப், சஃப் , ஸஃபா , சஃபூ என்று நமக்கு ஷிஃபா தேவைப்படுமளவுக்கு வார்த்தையில் விளையாடுவார்கள். தேவையற்ற குத்தகை. சுத்தமான இறைஞானி என்று புரிந்து கொள்வதே சரி.

உலகின் முதல் நல்ல மனிதப் பிறவியை சூஃபியென்று வைத்துக் கொள்ளுங்களேன். அவனது /அவளது பரம்பரை பரவாத இடமுண்டா ? எண்ணிக்கையில் குறைவான அவர்கள் எல்லோரையும் எல்லாவற்றையும் ஒன்றுபோல் பார்க்கும் பெருந்தன்மையுள்ளவர்கள். அதனால்தான் ‘தூய்மை ‘ என்று ஸ்பெஷல் இறைவனுக்காக பெருக்கியும் கூட்டியும் கூட அதைத் ‘தூமை ‘யென்று கழித்து மகான்களின் காலடியில் மலர்கள் தூவப்படுகின்றன இன்றும். அது நிஜாமுதீன் அவுலியாவாக இருந்தால் என்ன நிஜம் சொன்ன ரமணமஹரிஷியாக இருந்தால் என்ன ?

யமுனையின் கரையில் சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணைப் பார்த்து சீடர் ஒருவர் பரிகாசமாகச் சொன்னபோது அவரைக் கண்டித்த அந்த அவுலியா , ‘வலி குல்லின் விஜ்ஹத்துன் ஹூவ முவல்லிஹா ‘ என்று ஓதினார்களாம். ‘ஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும் , (வணங்குவதற்கான) ஒரு திசையுண்டு. அவர்கள் அதன் பக்கம் திரும்புபவர்களாக உள்ளனர் ‘ என்று அர்த்தம் (2:148). To each is a goal to which he turns என்றும் சொல்லலாம் என்பார் குழப்பம் தரும் அடைப்புகள் தவிர்க்கிற யூசுஃப் அலி.

பேதமில்லாத மனத்தோடு சமூகத்தின் மேன்மைக்கு உழைக்கும் சகலரும் சூஃபிதான். சத்தியமாக நான் சூஃபி இல்லை. சட்டை போட்ட சாதாரணன். முஸ்லீம் என்றாலே பச்சை சட்டையை சில எழுத்தாளர்கள் அணிவித்து விடுவதால் அதே வண்ணத்தையே போட்டுக் கொள்கிறேன். இதிலென்ன இருக்கிறது ? உங்களுக்கு சந்தோஷம் வந்தால் சரிதான்.

அஷ்ரஃப் ஒரு சூஃபிதான் என்பதற்குக் காரணம் அவன் தன்னை சூஃபியென்று சொல்லிக் கொள்ளாதது மட்டுமல்ல, துக்கத்தையே காட்டாத தூய முகத்தால். அந்த முகம் சூஃபிக்கு மட்டுமே வரும். உலகின் துக்கம் அத்தனையையும் கவனித்து வாங்கிக் கொண்டாலும் அதைமாற்ற அமைதியாகச் செயல்படுவதால் தேவையற்ற பதட்டம் இருக்காது. அதேசமயம் சந்தோஷமும் தெரியாது! உப்புமில்லாமல் உறைப்புமில்லாமல்….மல்லாக்கொட்டை மாதிரி..

கண்ணில் அன்பு எப்போதும் வழியும் கனிவாக.

அஷ்ரஃபுக்கு அப்படி ஒரு கண்கள்.

பாகிஸ்தானியென்றாலே படிக்காத முட்டாள்கள் என்பது மாதிரி முட்டாள்தனமான ஒரு கருத்து இருக்கிறது அரபு நாடுகளில். . முட்டாள்களுக்கு நாடு வித்தியாசம்தான் ஏது ? விமர்சிக்கும் நாட்டவன் ஒருவன் இந்த துபாய் கம்பெனியில் முன்பு ஆஃபீஸ்பாயாக இருந்தவன்தான். அப்போது முதலாளிகள் வியாபாரத்திற்கு பதிலாக ராஜ்ஹன்ஸ் (வங்குஸ்தான்) இரண்டு வளர்த்துக் கொண்டிருந்த காலம். அதிலொன்றைக் காட்டி அது பெண்ணா ஆணா என்று முதலாளி கேட்டபோது அவன் சொன்னானாம் குழம்பியபடி:

‘மாலும் நஹீஹைங் அர்பாப். கபிகபி அண்டா தேத்தாஹை..! ‘ ( ‘தெரியலே முதலாளி, அப்பப்போ முட்டை மட்டும் போடுது.. ‘)

இப்போது அவன் ஏதோ ஒரு நாட்டில் பெரிய வேலையில் இருக்கிறான். படு தெளிவாக அறிவாளிபோலவே பழமொழிகளெல்லாம் பேசுகிறானாம். அதுவும் அதே ராஜ்ஹன்ஸ் பற்றி.

‘கவ்வா ஹன்ஸ்கி ச்சால் ச்சலா

அப்னி பீ பூல்கயா! ‘

‘கானமயிலாட ‘ வின் உருதுப் பதிப்பு. முட்டாள் வளர்வான் ஐயா…!

வளராத தன் நாட்டு முட்டாள்கள் பற்றி பில்லியன்களாக சுருட்டிய பேய்நசீரும் என்ன சொன்னாள் – பத்திரிக்கைகள் அவளை திருட்டைக் கிழித்தபோது ? ‘லிக்கே ஜாவோ..! ‘. படித்தால்தானே ஜனங்களுக்குத் தெரியும் ?. ‘சத்தம் போடாதே! ‘ என்று நான் அலுவலகத்தில் , உருதுவில் எழுதிவைத்த கதைதான்! அலுவலகத்து வரும் பாகிஸ்தானி டிரைவர்கள் நான் எழுதியதைப் பார்த்தபடியே பயங்கரமாக சத்தம் போடுவது மட்டுமல்ல, என் டேபிளில் ஏறி , இரு கைகைளையும் கால்முட்டியில் தேக்கியபடி குந்திக்கொண்டு உட்கார்ந்து கொண்டுதான் செலவுக் கணக்கே சொல்வார்கள்!

ஆனால் என் பாகிஸ்தானி மேனேஜர் நிஜமாகவே படித்தவர். யாருக்கும் தெரியாத இந்த உண்மையை (அவருக்கே தெரியாது!) நான் உரக்கவே சொல்கிறேன். குர்ஆனை வைத்து அற்புதமாக அவர் அரபாப்-ஐக் கவிழ்க்கும் கலை ஒன்று போதுமே!

இந்த மாதிரி ஆட்களைப் பற்றித்தான் பாடங்கள் என்ற பெயரில் சாம்புசார் பயமுறுத்தினாரா ? பாகிஸ்தான்= பகைநாடு, பாகிஸ்தானி= பயங்கர பூதம். இந்த வாத்தியார்களுக்கு முஸ்லிம் மாணவர்களைப் பார்த்தாலே தனியொரு முறுவலிப்பு! நிறையச் சொல்லலாம், இல்லையா ? இதேபோலத்தானே பாகிஸ்தானிலும் பாரதம் பற்றி அங்குள்ள உஸ்தாதுகள் சொல்வார்கள் ? வாழ்க கல்வி! வளர்ந்த பிறகு , பாகிஸ்தான் என்ற நாடு இருப்பதால்தான் பாரதத் திரு(நா)ட்டு அரசியல்வாதிகளுக்கும் அதன் ராட்சத ராணுவத்திற்கும் பிழைப்பு ஓடுகிறதென்று புரிந்து போனது. இதேபோலத்தான் பாகிஸ்தானுக்கு பாரதம் தேவையாக இருப்பதும் இந்த இரண்டு ‘பா ‘னாக்களின் தேவை வல்லரசு நானாவிற்கு என்பதும் புரிந்தது.

அப்புறம்…முதன்முதலாக பாகிஸ்தானிகளை செளதியில்தான் பார்த்தேன். பெரும் பலசாலிகள். உடல்வலிமை எந்த வேலையை செய்யச் சொல்லுமோ அதைத்தான் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் அரபிகள் என்றாலே இந்தியர்கள் நடுங்கிக் கழியும்போது தாங்கள் விட்ட அறைகளால் கர்வமிக்க செளதிகளை நடுங்க வைத்தார்கள். ‘Oneway ‘ என்று ஊருக்கு உதைத்துத் தள்ளப்படும்போதும் ஒரு துளி கூடக் கண்கலங்காமல் ‘குதா..! ‘ என்று ஒற்றை வார்த்தை சொல்லியபடி ஒருவிரலை மேல்நோக்கிக் காட்டிவிட்டு அலட்சியமாகப் போனார்கள். இது வெறும் உடல்பலம் மட்டுமல்லவே என்று தெரிந்தது. தனக்குள் எப்படி அடித்துக்கொண்டாலும் விருந்தோம்பலில் வியக்க வைக்கும் அவர்கள் மேல் மரியாதையும் வந்தது. என்ன ஒன்று, அவர்கள் தினம் குளிக்கலாம்..! ஒரு நண்பர் எழுதியதுபோல ஒரே மைதாமாவு வாடை! வேடிக்க என்னவென்றால் நண்பன் ஒருவனைப் பார்க்க அவன் வேலைசெய்யும் துபாய் ஏவியேஷன் கிளப் ரெஸ்டாரண்ட் போனால் அங்குள்ள கஜகிஸ்தான்காரிகள் ஓடுவார்கள் என்னைப்பார்த்து. மசாலாமணம்! பாகிஸ்தானியானாலும் இந்தியனாலும் அந்த நாற்றத்திற்குப் பெயர் ‘Indian Smell ‘! நாற்றத்திலாவது ஒற்றுமை வந்தால் சரிதான்.

என்னுடைய கீழான உலகத்தில் , பார்த்த மிகச்சில அதிகாரிகளைத் தவிர்த்து அரபுநாட்டு பாகிஸ்தானிக் கூலிகளின் வாழ்க்கை லட்சியம் ஹெவிடிரைவிங் லைசன்ஸ். கிடைத்து விட்டால் எல்லாமே கிடைத்த மாதிரிதான் என்ற நினைப்பு. மாறாது வீசும் வெப்பக் காற்றுக்கும் மடைதிறந்த வெள்ளமாய் ஊற்றும் வியர்வைக்கும் ஒன்றும் ஆகாத உடல்வாகு.

‘பச்சை ‘ என்றால் பாகிஸ்தானிகளைக் குறிக்கும் என்றும் செளதியில்தான் முதலில் தெரிந்தேன். எங்கள் ஊரிலெல்லாம் அமெரிக்க டாலரைத்தான் பஜாரில் ‘பச்சை ‘ என்று சொல்வது வழக்கம். பாக்.பச்சை, தேசியக் கொடியைப் பார்த்து வந்ததாக இருந்தால் ‘பிறை ‘ என்று கூப்பிடலாமே ? வளரும். உடனே தேய ஆரம்பித்து விடும்! அல்லது ‘நட்சத்ரா ‘. லட்சோபலட்சம் மைல் தூரத்திலுள்ள அதிசயம். முழுதாக கண்ணுக்குத் தெரியாமல் சிமிட்டும் – நம் உள்ளொளியைப் போல! கொடியின் நிறம்தான் காரணமாக இருக்கும் போலும். பச்சை , தியாகத்தின் வர்ணமென்பார்கள் சிலர். ‘பச்சை பச்சையாக ‘ என்பது வேறொன்றையல்லவா குறிக்கும் ? அல்லது ‘பச்சைக் குழந்தை ‘ என்பார்களே, அதற்கா ? பச்சைத்தண்ணீர் ? ஆனால் பச்சை வண்ணம் உஸ்மானியர்களின் ஆட்சிகாலத்தில்தான் இஸ்லாமியர்களின் சின்னம்போல் சித்தரிக்கப்பட்டது என்று வரலாறு கூறுகிறது. வரலாற்றுக்கு எத்தனை வர்ணம் உண்டென்று நம் எல்லோருக்கும் தெரியும்.

புடவை விற்பவன் , ‘இது கிளிப்பச்சை. அது இலைப்பச்சை ‘ என்று விவரிக்கும்போது ஒரு தமிழ் கதாநாயகிதான் கேட்பாள் இரண்டுக்கும் என்ன வித்யாஸம் என்று. அவன் சொல்வான் : ‘இது இலைமாதிரி இருக்கும். அது கிளிமாதிரி இருக்கும் ‘ என்று. ஞாபகம் வருகிறது.

வண்ணங்கள் நம் உணர்ச்சிகளை மாற்றவல்லவையென்று விஞ்ஞானமும் சொல்கிறது. பச்சை , மனதை அமைதியாக்கும், குணப்படுத்தும் வண்ணம் என்பார்கள். ஆன்மீகபலம் சேர்க்க பசுமையான மலையை கற்பனை செய்ய அல்லது பார்த்துக் கொண்டிருக்கச் சொல்வது சில தரீக்காக்களில் உண்டு. தரீக்கா என்றால் ஞானப்பாதை.

ஆனால் ‘சாபுநானா தரீக்கா ‘வில் பச்சை வண்ணம் , திங்கட்கிழமை அணியவேண்டிய அல்லது வெளிப்படுத்த வேண்டிய வர்ணத்தைக் குறிக்கும். ஆடை நல்லது. இயலாதவர்கள் பச்சை வர்ண பேனா, கைக்குட்டை (பெண்களாயின் வளையல் ) என்று எதையாவது வைத்துக் கொள்ளலாம். அதற்காக 5லிட்டர் பச்சை பெயிண்ட் டின்னை தூக்கிக்கொண்டு போகக் கூடாது! சொல்வதை ஒழுங்காகப் புரிந்து கொள்ள வேண்டும். செவ்வாய் – சிகப்பு ; புதன் – நீலம் ; வியாழன் – மஞ்சள் ; வெள்ளி – வெள்ளை ; சனி – கருப்பு ; ஞாயிறு – தங்க மஞ்சள் !

முட்டாள்தனமாக இருக்கிறது இல்லையா ?

சூஃபிகள் சொல்றது முட்டாள்தனமாகத்தான் இருக்கும்! அதாவது அப்படித் தெரியும். தனி உடை, வண்ணம் என்ற கட்டுப்பாடுகளெல்லாம் குருவுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும், சொந்த புத்திக்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதற்காக என்று நினைக்கிறேன். பனாஃபே ஷேக்! குருவே எல்லாம். No Arguments!

‘இல்முல் ஜஃபர் ‘ பற்றிப் பேசும்போது, ‘ ‘Soundக்கு ஒரு Vibration இக்கிறமாதிரி colorக்கும் இக்கிது. மாத்திப்போட்டா ? உங்களுக்கு நல்லா இக்கிற மாதிரி தோணலாம். ஆனா ‘அட பைத்தியமே.. ‘ண்டு சூஃபியாக்கள் சிரிப்பாஹா. வர்ற ரிசல்ட்-ஐ அனுபவிச்சிக்க வேண்டியதுதான்! ‘ என்ற ஹஜ்ரத்தின் குரல் கேட்கிறது.

ஒரு சீடர் , அடிக்கும் ராமராஜ சிகப்பு நிறத்தில் சட்டையணிந்து திங்கள்கிழமை வந்ததோடு மட்டுமல்லாமல் அது பச்சைதான் என்றும் வாதித்தார். ஹஜ்ரத்திற்கே இலேசாக சிரிப்பு வந்து விட்டது. அப்போதுதான் ‘முதல்லெயிலாம் அடலைபுடலையா வரும் ஹஜ்ரத், ஒங்க கிட்டெ சேந்தபொறவு பாதி குறைச்சிபோச்சி ‘ என்று ஒரு சீடர் சொன்னதற்கு ‘ அதாவது.. அடலையா மட்டும்தான் வரும்ங்குறா ?! ‘ என்று கேட்டு தன் ஜமாவை சிரிக்க வைத்திருந்தார்கள்.

‘நல்லா உருப்பட்டுடுவே! ‘ என்று கிண்டல் செய்தார்கள். உண்மையிலேயே அவன் உருப்படத்தான் செய்தான் கார்களும் பங்களாக்களுமாக.

கட்டுப்பட்டு நடந்தவனெல்லாம் காணாமல் போய்விட்டான்.

நானும் காணாமல் போய்விட்டேன் என்று கூறமாட்டேன். கதைகள் சொல்லத்தான் சாலேமாலிக் டிரேடிங்-ல் வந்து சேர்ந்து விட்டேனே… முழுக்க முழுக்க பாகிஸ்தானிகளே உள்ள கம்பெனி. சரளமாக ஹிந்தி பேசிய அரபி முதலாளியும் எனக்கு பாகிஸ்தானிபோலவே தெரிந்தார். அவர் உடை மட்டும்தான் வித்தியாசம். அதுவும் விரைவில் மாறிவிடும் போல்தான் தெரிந்தது. அத்தனை பாகிஸ்தானிகளும் வஜீர்-ஏ-ஆலம்கள். மலபாரி தோற்றான்! மார்க்கமற்ற நான் எப்படி திறமையைக் காண்பிப்பது ? தவிர நான் தென்நாட்டுத் தெருப்புழுதிவேறு. படு!

அஷ்ரஃப் இங்கேதான் பழக்கமானான்.

பறக்கும் தட்டு சைஸூக்கு கோதுமை ரொட்டிகள் சுட்டு அதையும் ஒரேநேரத்தில் ஒன்பது சாப்பிடும் பீமன்களுக்கு இடையில் மூன்று மெல்லிய சப்பாத்திகள் தானே பிசைந்து சுட்டு அதில் ஒன்றை எனக்குக் கொடுத்த அஷ்ரஃப் எனக்கு மிகவும் பிடித்துப் போனான்.

இவனைக் கவர்வதற்காக மெஹ்தி ஹஸனின் ‘அப்கே பிச்டே ‘யை மெலிதாகப்பாடி நிறுத்தி அவன் முகத்தை உற்சாகமாக நோக்கியபோது ‘மிகவும் நன்றி ‘ என்றான். நிறுத்தியதற்காகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன்.

‘எங்கள் நாட்டில்தான் 24மணி நேரமும் இவன்களையே காட்டிக் கொண்டிருப்பார்களே, நீ வேறேயா ? ஹரிஹரன் தெரியுமா ? ‘

அட, நம்ம ஆள்! அதுவும் குறிப்பாக ஹரியின் முதல் ஆல்பமான ‘கஜல்கா மெளஸ ‘த்தை தனக்கு ரொம்பவும் பிடித்ததாக அவன் சொன்னதுமே எனக்குப் பரவசமாகிப்போனது. எவ்வளவு அலைந்து நான் வாங்கிய ரிகார்டு! இப்போது அந்தப் பயல் ரஹ்மான் புண்ணியத்தில் ‘அஜக்..அஜக் ‘ பாடுகிறான் ( ‘நிலா காய்கிறது.. ‘ விதிவிலக்கு). இதைச் சொல்லி அஷ்ரஃபின் முகத்தை மாற்ற விரும்பவில்லை. எப்போது பார்த்தாலும் அமைதியும் நிம்மதியும் தரும் முகமும், சுத்தமாக தன் அறையை வைத்திருக்கும் பாங்கும், மரியாதையான பேச்சும்.. ஸோஹன் ஹல்வாவை சுடச்சுட சாப்பிடும் அனுபவம்! மார்க்கம் புரியாத மூர்க்கமே இருக்காது. பாகிஸ்தானிதானா இவன் ?

ஒருவேளை இன்னும் கல்யாணமாகாமல் இருப்பதால்தான் அந்த முகம் இப்படி இருக்கிறதா ? ஏன் சொல்கிறேன் என்றால் பஜாரில் போன ஒரு ஜோடியைப் பார்த்து ‘இது சரக்கு ‘ என்று முடிவுக்கு வந்தான் ஒரு நண்பன்.

‘எப்படி சொல்றா ? ‘

‘கூட்டிக்கிட்டு போறவன்ற மூஞ்சியைப் பாரு. எவ்வளவு சந்தோஷம்! பொண்டாட்டியா இந்தா மூஞ்சி ‘பொரிச்ச வாடா ‘ மாதிரி இக்கிம்! ‘

பெண்களுக்கும் அந்த அவஸ்தை உண்டுதான். அதனால்தான் கல்யாணமானபிறகு அவர்களும் சூஃபியாகி விடுகிறார்கள் என்று கேள்வி! வேறு மாதிரி சொல்லப்போனால் மெளலானா ரூமி போல நிறுத்தா அருவியாகக் கொட்டாமல் , கவிதை எழுதாததாலேயே சூஃபியாகிவிடுதல்!

எனக்கு ஆச்சரியமோ ஆச்சரியம். 38 வயது வரை அவன் கல்யாணமாகாமல் இருப்பதால் அல்ல, துபாய்க்கு வந்து ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் தன் ‘அம்மிக்குழவி ‘க்கு வேலை கொடுக்காமல் அழ வைத்திருக்கிறானே..!

பெண் துணைக்குத் தவிக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் ஒரே மாற்று வழி கை (கரசேவை என்று எழுத கை நடுங்குகிறது!). செலவுக்கு யோசனை செய்யாதவர்கள் பஜாருக்குப் போய்விடுகிறார்கள். இப்போதெல்லாம் வெறும் பத்து திர்ஹத்திற்குக் கூட கிடைக்கிறது என்கிறார்கள்.

புழுத்து நாறுகிறது துபாய். ரஷ்யா, உகாண்டா, சீனா, லெபானான்….அதுதான் போலித்தனமில்லாத மாண்புமிகு எழவரசரே சொல்லிவிட்டாரே – ‘மஸ்ஜிதுகளும் கட்டியிருக்கிறோம். ‘மற்றது ‘ம் வைத்திருக்கிறோம். விரும்புகிற இடத்திற்கு அவரவர்கள் போய்க் கொள்ளுங்கள் – மற்றவர்களுக்கு தொந்தரவு தராமல். இது எண்ணெய் வளமில்லாத நாடு ‘

என்ன வளம் இல்லை ? மண் முதல் விண் வரை பணம் எதையும் கொண்டு வரும். அது இன்னும் அதிகமிருந்தால் ஆண்டவனையே விலைக்கு வாங்கி ஆட்சிக்கேற்ற அத்தியாயங்களையும் இறைமறையில் சொருகி விடும் மன்னர்கள்…

அபிப்ராயங்கள் மாறுபடலாம். ஆனால் குடும்ப சொத்தாகவே ஒரு நாடு இருந்தாலும் அதை முன்னேற்ற நாயாய் உழைத்து செலவும் செய்கிறார்களே..பாராட்டாமல் இருக்க முடியுமா ?

ஆமாம், இத்தனைபணம் எங்கேயிருந்து வருகிறது ? பில்லியன் பில்லியன்களாக ‘ப்ராஜக்ட் ‘கள்! கொடுத்து வைத்த துபாய்தான்.

‘சப் ரண்டிகா பரக்கத் ஹை! ‘ என்றார் மானேஜர் சிரிக்காமல். துபாயின் C.I.Dமூஸாக்களுக்கு பாலியல் தொழிலாளிகள்தான் பலமாம். வர வர ரொம்ப தமாஷ்தான் செய்கிறார் இவர். ஆனால் ஒவ்வொரு தமாஷூம் என் சம்பளத்தில் சருக்கல் ஏற்படுத்தும் வல்லமை வாய்ந்ததாக இருக்கிறது.

அவரிடம் கேட்டேன் : ‘ எப்படி சாப் , லாட்ஜில் தங்க வழியில்லாதவள் கூடத்தான் விசிட்விசாவில் வருகிறாள் – ஏழை நாட்டிலிருந்து. பஜாரில் எங்கே கூட்டிக்கொண்டு போவாள் ஆட்களை ? ‘

அவர் பதில் சொன்ன பதிலை உருதுவில் சொன்னால் அழகாகத்தான் இருக்கும். குஸ்பிலாத்தாக்கள் குறை சொல்வார்கள். வேண்டாம்.

ID கார்டு கொடுத்து அப்படியே அம்பது திர்ஹமும் லாட்ஜில் கொடுத்து விட்டால் அழகழகாய் பங்காளியும் பம்பாய்காரியும் கிடைக்கிற செய்தியில் என் மனைவியை மிரட்டியிருக்கிறேன்.

‘ரொம்ப துள்ளாதடி கச்சடா. இங்கே வெறும் அம்பது ரூவாதான். தெரியும்லெ ? ‘

‘கசங்கொண்டது . வெளக்கமாறு பிஞ்சிப்போவும் ‘ – அஸ்மா ஃபோனை வைக்கும் சப்தம் துபாய்க்கு கேட்கும்.

யாரை அடிக்கிறாள் ? என்னையா அல்லது கசங்கொண்டவள்களையா ?.பூடகமாகப் பேசுவதை விடவேயில்லை இவள் இன்னும் . அப்படித்தான் ஊரில் ஒருநாள் வீட்டில் நுழையும்போது ‘வாங்க..! ‘ என்று என்னைக் கூப்பிட்டுவிட்டு , அடுத்த நொடி ‘அட நாயி! ‘ என்றாள். திடுக்கிட்டுப் பார்த்தேன். மடியில் அனீஸ் பால்குடித்துக் கொண்டிருக்கிறான்!

‘வெடைக்கிறியாடி நீ ? ‘ – கத்தினேன் ஆங்காரமாக. வம்சம் அப்படி.

‘நாயி கடிக்குது ‘ – அனீஸை சொல்கிறாளாம்!

சும்மா அவளை துபாயிலிருந்து ஃபோனில் மிரட்டியிருக்கிறேனே தவிர நான் எவளிடமும் போனவனல்ல. தேவை அதிகம்தான். ஆனால் தலைகாணியைக் கிழிப்பதோடு தாண்டவம் முடிந்து விடும்! தவிர அதிகம் மிரட்டி, ‘இங்கே காசில்லாமலேயே கிடைக்கிது ‘ அங்கேயிருந்து ஒரு பதில் வந்தால் என்னாவது ? தியாகம் என்பது இரண்டு பக்கமும் இருக்க வேண்டுமென்ற தத்துவம் பேசி நம்மை ஏமாற்றிக் கொள்வதிலும் ஒரு ஆனந்தம் இருக்கத்தான் செய்கிறது.

பெண்கள் விஷயத்தில் நாட்டமில்லாதவனாக இருந்தான் அஷ்ரஃப். மற்றபடி ‘விஷயம் ‘ புரியாதவனெல்லாம் இல்லை. சின்னவயதில் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் கவர்வதற்காக தன் குறியின் முனையில் மெஹந்தி (மருதானி) தடவிக் காண்பித்தவன். அந்தப்பெண் பயந்துபோய் ஆனால் கண்சிமிட்டாமல் பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறது! பயலுக்கு இப்போது ஏனோ நாட்டமில்லை. அவ்வளவுதான். ‘ரஹ்மானியத் ‘ ஐ அதிகம் சேர்ப்பதற்காக இருக்கும்! இவனது ரூமில் இருக்கும் ரிசீவர் விலையுயர்ந்த வில்லங்கம். கார்டு போடாமலேயே கண்டதும் தெரியும் . செளதியிலெல்லாம் முத்தவாக்கள் டிஷ்ஷின் மேல் கல் வீசுகிறார்களாம் கலாச்சாரம் காப்பாற்ற. இது ‘இஸ்லாமிய ‘ துபாயென்றுதானோ என்னவோ அஷ்ரஃப் மட்டும் ரேடியோ கேட்பான் அதில். எப்போதாவது – நகைச்சுவை தேவைப்படும் சமயத்தில் – mute போட்டுவிட்டு இந்திய, பாகிஸ்தானி படங்களின் டான்ஸ்கள் . ‘இந்தியா யா பாகிஸ்தான் சப்ஸே படா சல்மான்கான் ! ‘ என்கிறது துபாய் சேனல் 33.

செளதியிலிருந்து எங்கள் கம்பெனிக்கு லோட் (புல் கட்டுகள்) எடுத்துவரும் பட்டான்கள் அவன் அறையில் தங்கும்போது பொழுதன்னைக்கும் ‘தோநம்பர் ‘ சேனல்கள்தான் ஓடும். அவர்களிடம் ஏதாவது கம்பெனி விஷயமாகச் சொல்ல அறைக்குப் போனால் வலது கையால் தாடியையும் இடது கையால் தடியையும் உருவியபடி டிவி பார்த்துக் கொண்டிருப்பார்கள். தோ நம்பருக்குள்ளும் ஒரு தோ ! பிருஷ்டப்ரியர்களின் அந்த வேலையை ‘துவாங்பியாங் ‘ என்பார்கள் ஊரில். நாக்கில் எச்சில் ஊறச் சொல்வார்கள். என் ஊர் இதில் பிரபலம்தான். ‘பையனூர் ‘ என்று ஊர்பெயரைச் சொன்னாலே சக எழுத்தாளர்கள் நகர்ந்துதான் உட்காருவார்கள். ஓய், இதில் எத்தனை பிரபலமான ஆட்கள் இருக்கிறார்கள், தெரியாதா ? அல்லது ஆணுக்குள் பெண்ணும் பெண்ணுக்குள் ஆணும் இருக்கும் ரகசியம் புரியாதா ? உங்களையெல்லாம் அழைத்துவந்து அரபுநாட்டில் அடிமை வேலை செய்யச் சொல்ல வேண்டும். சுவர் துவாரமும் சுகந்தமுள்ளதாகப்படும் அப்போது!

ஆனாலும் பட்டான்களை சலித்துக் கொள்வேன் : ‘என்னாப்பா காலங்கார்த்தாலேயே..சே! ‘

‘ஹமாரா நாஷ்டா யேயீஹைநா பாய்! ‘. பதில் சரிதான். நாஷ்டாவாக பாயாவில் ரொட்டியை ஊறவைத்து தின்பது பாக்-ல் பிரபலம்.

அஷ்ரஃப் மட்டும் ஏன் மாற்றம் ? இப்போது முடியாதா ? முயற்சி எடுக்கவில்லையா அவன் பெற்றோர்கள் – கல்யாணம் செய்துவைக்க ?

இவன் போனால் அல்லவா கல்யாண முயற்சி! வந்தபுதிதில் ஒருமுறைதான் போனானாம் ஊருக்கு. இங்கே என்னதான் வேலை ?

கீசஸ் குடவுனிலிருந்து இரவு திரும்பியதுமே அலுவலகத்தில் என்னிடம் கணக்கை ஒப்படைத்துவிட்டு, அறைக்குப்போய் குளித்து விட்டு , வெளியில் வந்து குடவுனின் மேற்குமூலையில் உள்ள பெரும் கூண்டுக்கு வெளியில் நின்று , புறாக்களுக்கு தீணி போட்டுக் கொண்டிருப்பான். முதலாளியின் புறாக்கள். அஷ்ரஃபைச் சுற்றிப் பூனைகள். சொறி மட்டும் பிடித்தது, கறி மட்டும் பிடித்ததென்று நான்கு. ஒன்று மட்டும் அழகு.

ஒருவேளை , இவைகள் அவன் ஆசையைத் தணிக்க உதவுகின்றனவோ ? எப்படிக் கொஞ்சுவான் ? செல்லமாக வாலைத் தடவியா ? அஸ்தஃபிருல்லா! மறைவான விஷயங்களை ஆண்டவனே அறிந்தவன்தான். அதற்காக வீண்பழி போடக் கூடாது. வல்லாஹூல் அழீம்…!

பூனைக்கு அவன் காட்டும் அன்பையே எடுத்துக் கொள்வோமே… அந்தப் பூனைகள் முதலில் என் அறை வாசலுக்கும் வந்ததுண்டு. கேம்பிற்கு எதிரிலுள்ள மலையாளி கடைக்குப் போய் சாப்பிடாமல், அந்த கடையிலிருந்து 2 m.m ‘மத்தி ‘மீன் இருக்கும் மோட்டாசெட்-ஐ ஒருநாள் விட்டு ஒருநாள் வாங்கிவரும் என் உத்தியையைத் தெரிந்துகொண்டபோது என் அறைப்பக்கம் வருவதை அவைகள் நிறுத்தியே விட்டன!

போயேன், யாருக்கு நஷ்டம் ? தனியாக வருடக்கணக்கில் , முக்கியமாக வீட்டு விசேஷ தினங்களில், மகனும் மகளும் ஓவியமாய் இருக்கும் சுவரைப் பார்த்துக் கொண்டே நான் சாப்பிடும் அந்த உன்னத வைபவத்தைப் பார்க்க உனக்கு கொடுத்த வைக்கவில்லை. போ! (அஸ்மா, முன்னூறாவது பட்டுப் புடவையை மு.ரா சன்ஸில் எடுத்து விட்டாயா ?)

பூனைகள் என்னைவிட்டு வெறுத்து ஓடியதற்கு இன்னொரு காரணமும் உண்டு. எல்லா உயிர்களின் உணவுப்பிரச்சனைக்காகவும் கவலைப்படும் உன்னத மனம். ஒருநாள் ஒ….ரு திர்ஹத்திற்கு bread வாங்கிவந்து அதை உலகுக்குப் பறைசாற்ற ஓடி ஓடி சொன்னதைப் பார்த்தபோது அவைகள் அதிர்ச்சி அடைந்து விட்டன. ‘உதவியைச் சொல்லிக்காட்டுபவர்களுக்கு நரகம்தான் ‘ என்ற ஹதீஸ்-ஐ எப்படி இவன் மறந்தான் ?

‘பூனைகளை நாம் நேசிக்க வேண்…. ‘

‘சைஸூக்குத் தகுந்த மாதிரி பேசு பாய்! ‘

கடைசியாக அஷ்ரஃப்தான் பாக்கி. அவனிடம் சொல்வதற்குப் போனால் அப்போதுதான் அவன் கீஸஸிலிருந்து வரும்வழியில் carrefourக்கும் போய் பெரிய பார்சலோடு வருகிறான். பணிரெண்டு திர்ஹத்திற்கு விற்கும் பெரிய முழுக்கோழி ரோஸ்ட் இரண்டு – பூனைகளுக்கு!

வாயைப் பொத்திக்கொண்டு வந்து விட்டேன். அதற்குப்பிறகு எந்தப் பூனைகளையும் கண்டாலும் பயமாக இருக்கும்.

பூனைக்கு கோழியை மட்டுமல்ல தன்னையே கொடுப்பான். அத்தனை பிரியம். ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் வைத்திருக்கிறான். மூன்றுக்கும் வெவ்வேறு கடவுள்களின் பெயர்கள் , அழகான கடைசிப் பூனையின் பெயர் மட்டும் அருள் என்று பொருள்படும் ரஹ்மத்…! ஒரு சபராளிகூட தன் பெண்டாட்டியின் ஒரிஜினல் பெயர் ‘ரஹ்மத் ‘ என்றிருந்ததை ஜவஹர்நிஷா என்று மாற்றிவிட்டார் – யாராவது பார்க்கவரும்போது மனைவி வீட்டில் இல்லையென்றால் ‘ரஹ்மத் வீட்டில் இல்லை.. ‘ என்று எவராவது சொல்லிவிடக் கூடாதேயென்று. இவர் ஊர் போகும்போதெல்லாம் அவள் இல்லாதது ஞாபகம் வருகிறது.

ஆனால் அஷ்ரஃபின் ‘ரஹ்மத் ‘ எங்கேயும் போகாது. அவனையே சுற்றிச் சுற்றி வரும். வரும்வரை வாசலிலேயே காத்திருக்கும். புறாக்கள் சிறகடிக்கிறதென்றால் அஷ்ரஃப் கீஸஸிலிருந்து கிளம்பிவிட்டான் என்று அர்த்தம். புரிந்து கொள்ளும். மார்க்கம் சம்பந்தமாகக் கேட்கலாமா ? பூனையிடமல்ல, அஷ்ரஃபிடம் ! தாராளமாக.

பதில் எப்போதாவது கிடைக்கும். சூஃபிகள் அப்படித்தான்.

‘எல்லா காலத்திற்கும் ஏற்ற என்று புகழப்படும் இறைமறை அடிமை முறை பற்றிப் பேசுகிறதே.. இப்போது அடிமை எங்கே இருக்கிறான் ? அடிமைகள் சேர்ப்பு, விடுதலைகள்….வேடிக்கை! ‘ என்று கேட்டேன்.

‘இந்த ‘விசா ‘க்களையெல்லாம் என்னவென்று நினைக்கிறாய் பின்னே ? ‘ என்றான். அட, ஆமாம்! ஆனால் ஒன்று சந்தோஷப்படலாம். அரபிக்கு நாம் அடிமை; அவர்கள் மன்னருக்கு அடிமை; மன்னர்கள் Uncle Samக்கு. அவர் ஆயுதவியாபாரிகளுக்கு (நன்றி:ஞாநி). ஆக அவர்கள்தான் உலகை ஆளுபவர்கள். பின் ஆண்டவன் என்னதான் செய்கிறான் அஷ்ரஃப் ? ஆயுதமாக இருக்கிறானா ? அடிவயிறு காயுமளவு வறுமையில் உழலும் ஆயிரம்கோடிப்பேர்களுக்கு பதில் சொல்ல முடியாமலா ?

கேட்கலாம். ஆனால் நான் தவிர்த்து விடுவேன். ‘கேள்வி கேட்பவன்லாம் பதிலை வாங்குற ஞானமுள்ளவனல்ல. அதுக்கு ‘விலாயத் ‘ வேணும். ‘விலாயத் ‘ண்டா தகுதி. விலாயத்கான்-டு ஞாபகம் வச்சிக்குங்க. ம்..விலாயத் இருந்தா கேள்வியே கேட்க வராது. பதில்தான் already கிடைச்சிடுச்சே..! ‘ என்பார்கள் ஹஜ்ரத். ஒரு ஆயத்-ஐயும் சொல்வார்கள். ‘(வீண்) கேள்வி கேட்டதனால்தான் உங்களுக்கு முன்னுள்ள சமுதாயமெல்லாம் அழிந்தது ‘ என்று வரும் வசனம்.

அப்படியென்றால் பதில் சொல்வதற்கும் ஒரு ‘விலாயத் ‘ வேண்டாமா ? வசனம் சொல்லி வாயை அடைப்பதுதான் விலாயத்-ஆ ?

அஷ்ரஃபின் பதில்-ஐப் பார்ப்பதில்லை நான். அவன் தன்மையைத்தான். பொறாமை , பொச்சரிப்பு அவனிடம் கொஞ்சம் கூட இல்லையென்பது என்னைப் பொறாமைப்பட வைத்தது. ‘விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் ‘. அழுக்காறு. கூவத்திற்கு சரியான பெயர்! ஆனால் நல்லவைகளுக்காக பொறாமைப்படலாம். படவேண்டும்.

நான் அப்படியில்லை. கம்பெனியில் ஒவ்வொருத்தவனுக்கும் கிடைக்கும் வசதிகளை, அன்பளிப்பைக் கண்டு மனம் சுருங்கிப் பிணமாகும். காய்ந்த பீயின் புளித்த நாற்றம் என்னைச் சுற்றிப் பரவும்.

அஷ்ரஃபுக்கு அந்தப் பிரச்சனையே இல்லை. ‘எப்படி நிம்மதியா இருக்கே ? ‘ என்று ஒருவனைச் சுற்றிச்சுற்றி வந்து ஒருபடத்தில் நாகேஷ் வயிற்றெரிச்சலில் சாவான். அதுமாதிரிதான் எனக்கும் வந்தது. ஏதாவது கேட்டுக் கொண்டே இருப்பேன் அவனிடம்.

‘என்னடா இது. உன் கூட இருக்கிற முதீர் (பொறுப்பாளர்) கம்தாத் ஷஃபிக்கு கைரேகை கூட வைக்கத் தெரியாது. வாரக்கடைசியில் கூலிகளுக்கு சம்பளம் போடும்போது அவன் தன் பெயரையும் இணைத்துக் கொள்கிறான் அந்த பலுச்சி. கூடவே வாராவாரம் அரபாப் கொடுத்த அன்பளிப்பென்று ஐநூறு திர்ஹமும் போட்டு வாங்கிக் கொள்கிறான். புல்கட்டுகளுக்காக வாங்கும் கயிறுக்கு கமிஷன் வேறு. இதையெல்லாம் பார்த்தால் எங்கேயோ போய் நிற்கிறது. நீ என்னடாவென்றால் பில்போடுவதிலிருந்து கஸ்டமர் வரைக்கிம் பார்ப்பவன். என்ன, நான் சொல்வது காதில் விழுகிறதா இல்லையா ? கூலியை விட சம்பளம் குறைவாகக் கிடைக்கிறது உனக்கு! ‘

‘எனக்கு இது போதும் பாய். எனக்கு என்னா செலவு ? ‘

எக்ஸ்ட்ராவாக கிடைக்கிற தருணத்தையும் தவிர்த்து விடுவான். கேம்ப்பில் உள்ள சாதா டிஷ்களை விடுவோம், முதலாளிகளின் வீடுகளிலுள்ள சுழலும் மிகப்பெரிய டிஷ்கள் அவன் செட் செய்து கொடுத்தவை. Frequencyஐ ரிஸீவரில் கொடுத்துவிட்டு டிஷ்ஷின் திசை பார்க்க சிரமமே படுவது கிடையாது. வேறு எந்த மந்திரக் கருவிகளும் இல்லை. கைவைத்து ஒரே ஒரு திருப்பு. திசை கிடைத்து விடும்! இவனுக்கான டிஷ் வேறு ஏதோ நாம் அறியாத சேனலில் தொடர்பு வைத்திருக்கிறது! பிரமிப்பு தோன்றும்.

மூவாயிரத்து மூன்று சேனல்களைக் கொடுக்கும் டிஜிடல் டிஷ்களை செட் செய்வதற்கு சாட்டிலைட் கம்பெனிகளை தொடர்பு கொண்டால் கிழிந்து விடும். முதலாளிகளோ முப்பது திர்ஹம் நீட்டுவார்கள். அதையும் வாங்காமல் வந்து விடுவான். தான் மற்றவர்களை மகிழ்வித்ததுதான் வெகுமதியாம்.

‘அப்போ சம்பளத்தை எனக்குக் கொடுத்துடு! ‘

‘எடுத்துக்கயேன்! எனக்கும் பூனைகளுக்கும் மட்டும் தெனம் சாப்பாடு கொடுத்துடு ‘

‘அதுக்கில்லே அஷ்ரஃப். வீட்டுக்கு அனுப்பலாமே நீ ? ‘

‘வாலிதா (அம்மா) கராச்சியில் இருக்கிறார்கள் தம்பிகளோடு. அவர்கள் அவளை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள் ‘

‘வாப்பாவுக்காவது தனியா அனுப்பலாமில்லையா ? ‘

‘வாப்பா ? வஃபாத்தானவங்களுக்கு பணம் தேவைப்படாது என்று உனக்குத் தெரியும் ‘

எனக்கு சொல்லிச் சொல்லி அலுத்துப் போயிற்று. போகிறபோக்கைப் பார்த்தால் இவன் தன் சம்பளத்தைக் குறைக்கச் சொல்லி முதலாளிக்கு கடிதம் எழுதிவிடுவானோ என்று வந்தது. அப்படி ஒருத்தனை எனக்குத் தெரியும் செளதியில். கஃபிலிடம் அப்படிச் சொல்லியே நூறு ரியால் சம்பளத்தில் ஏற்றிக் கொள்வான் ஒவ்வொருமுறையும். சொல்லாமல் தானே ஏற்றுவது தனி. அநேகமாக அவனும் இப்போது சூஃபியாகத்தான் இருப்பான் என்று நினைக்கிறேன்.

வாழத்தெரிந்தவன்தான் சூஃபியோ ?

எனக்கு சொல்லத் தெரியவில்லை.

அஷ்ரஃபைப் பார்த்து என் பொறாமை அதிகமானதுதான் மிச்சம். வேறொன்றும் கேள்விப்பட்டேன். அவன் பெரிய கோடாஸ்வர வீட்டுப் பிள்ளை! அரபாப் முஹம்மதோடு நூல் தொழிற்சாலை தொடங்கலாம் என்று செளத் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த யூசுபுபாய் – அஷ்ரஃபின் வாலித்(அப்பா) – இங்குள்ள வேறு பாகிஸ்தானிகள் மில்லியன் கணக்கில் துரோகம் செய்ததில்தான் ஹார்ட் அட்டாக்கில் போய்ச் சேர்ந்திருக்கிறார். நல்லவர்களை ஆண்டவன் சீக்கிரம் கூப்பிட்டுக் கொள்வானாமே…

அஷ்ரஃப் மட்டும் இங்கேயே தங்கிவிட்டான்.

‘அப்படி சொல்லுங்க..ஊர்ல பணக்கார குடும்பம் இருக்கிற திமிர்லெதான் இவன் எளிமையா இருக்கிறானா ? ‘ என்றேன் மேனேஜரிடம்.

‘அப்படி சொல்லாதே. இப்போ பிச்சைக்காரன் அவன். கொஞ்சநஞ்சம் தனக்கிருந்த பங்கையும் அங்கேயுள்ள அனாதை இல்லத்திற்கு கொடுத்துவிட்டு வந்துட்டான், தெரியுமா ? ‘

இது பரவாயில்லை. ஹிந்து வாடிக்கையாளர்களைப் பார்த்தால் கம்பெனி பாகிஸ்தானிகள் ‘சலாம் ‘ என்று மட்டும்தான் சொல்வார்கள். இவன் மட்டும்தான் ‘அஸ்ஸலாமு அலைக்கும் ‘ என்று பிரார்த்தனையோடு முழுதாகச் சொல்வான்.

வெறிபிடித்த ஒரு பட்டான் டிரைவர் , ‘காஃபிர் எதாச்சும் கொடுத்தா அவன் கொடுக்குற திண்பண்டங்களை பாத்து சொல்லனும் : ‘குத்தா, ஜா யஹாங்ஸே! ‘ண்ட்டு. மூணு முறை ஒரு குச்சியாலே அடிச்சி விரட்டனுமாம் ‘ என்றபோது அஷ்ரஃப் மட்டும்தான் எதிர்த்துக் கேட்டது. நான் பயந்துகொண்டுதான் நின்றிருந்தேன்.

‘உனக்கு இஸ்லாத்தை சொல்லிக்கொடுத்த முட்டாள் மெளலவியை அப்படி விரட்டு மக்பூல். நீ ஓட்டுறீயே கார்… இது , இந்த பெட்ரோல் , முஸ்லீம் கண்டுபிடிக்கலே! காஃபிரோடண்டு வேலையை விட்டுட்டுப் போய்டிவியா ? ‘

இப்போது சொல்லுங்கள், ஏன் நான் அஷ்ரஃபை சூஃபியாக சொல்லக் கூடாது ? இப்பேர்ப்பட்டவனிடம் போய் தறுதலை தாவுத்இபுறாஹிமுக்கு தஞ்சம் கொடுத்த – பயங்கரவாதிகளை அழிப்பதாக பாவ்லா காட்டுகிற – தர்வேஷ் ‘ஜெனரல் ‘ஐயும் அவன் அணுசதி விஞ்ஞானியின் மேல் ஆகாயத்திலிருந்து தூக்கிப்போட்ட குற்றத்தையும் பேசலாமா ? எந்த அதிபரையும் தூக்கில் போடாத நாடு என் நாடென்றாலும் , குஜராத் இரத்தம் காயாத அதன் திருமுகத்தைக் கிழித்தால் எங்கே நான் போவேன் ? . ‘உங்கள் ராணுவம் மட்டுமென்ன ஆன்மீகக் கொழுந்தா ? ‘ என்று amnesty அறிக்கைகளை காட்டினால் என்ன பதில் சொல்ல ? காலத்தின் முடிவில் கூட தீர்க்கப்படாத காஷ்மீர் பிரச்சனைகள் வேறு இருக்கிறது. இன்னும் எத்தனைபோர் வரும் ? ‘ஊரைக் கொள்ளையடிச்சி உம்மா பெயர்லெ ஃபாத்திஹா ஒதிய கதை ‘யாக ஜனங்களின் பணம் இன்னும் எத்தனை செலவாகும் ? சொல்ல முடியவில்லை. அருந்ததிராய் இஸ்லாமாபாத்தில் சொன்னதுபோல இரு அரசுகளும் தன்நாட்டில் பிரச்சனைகள் ஏற்படும்போதெல்லாம் தொப்பிக்குள்ளிருந்து மாயமுயலை வரவழைக்கிறார்களோ ? இல்லை , தொப்பியே இல்லாமல் வரவழைப்பார்கள் – தங்கள் ‘தலை ‘க்குள்ளிருந்து. வருவதும் முயல் அல்ல, பன்றிகள்..!

என்ன செய்யலாம் ? காஷ்மீர் என்ற பெயரை ‘குஷிமீர் ‘ என்று மாற்றிவிடும் அசட்டு யோசனையிலிருந்து இரண்டு நாடுகளும் இணைவது சம்பந்தமான (இறைவா, இது உலகயுத்தத்தில் விடாது என்று உறுதி அளிப்பாயாக!) நல்ல யோசனைகள் வரை என்னிடம் பல உண்டு. மஹா ஜனங்கள்தான் கேட்டால் மேலும் சொல்லலாம். ஆனால் காஷ்மீருக்கும் இந்தக் கதைக்கும் சம்பந்தமில்லையே.. எனவே வேறு கேட்கலாம் அஷ்ரஃபிடம். முக்கியமாக சாந்திமார்க்கம் பேணும் நாட்டில் சுன்னியை ஷியாவும் ஷியாவை சுன்னியும் – அதுவும் பள்ளியிலேயே- கொல்வது அங்குதான் அதிகம். அனைத்துமே அரசியல்வாதிகளின் விளையாட்டென்று நம்ப நான் தயாராக இல்லை. ஆனால் மனிதவாயில் மலம் திணித்த என் நாட்டைக் கேட்பானே..! இதனால் அபூர்வமாக மலர்ந்த ஒரே உறவும் மக்கி மடிந்து விடாதா ? ‘மத்ஹப் நஹீன் சிகாதா ஆபஸ் மே பேர் ரக்னா ‘ என்று அல்லாமா இக்பால் கவிதை பாடுபவனிடமா ? வேண்டாம்.

அவன் சூஃபியாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.

நான் கட்டிப்பிடித்து முத்தமிடுமளவு அவன் ஒரு பதில் சொன்னதுதான் அவனை நான் நிஜ சூஃபியாகக் கொண்டாடுவதின் காரணம்.

சூஃபியைப் பற்றி பேசுகிறாயே , ‘அனல்ஹக் ‘ தெரியுமா என்று அனல் கக்காதீர்கள். ஒரு கனத்த இரும்புத் திரை, குறைந்துகொண்டே வந்து மெல்லிய திரையாக மாறி , ‘டக்.. ‘கென்று கிழியும் நிலையைத்தானே சொல்கிறீர்கள் ? இறைநாமத்தை ‘திக்ர் ‘ (ஜெபித்தல்) செய்யும்போது வார்த்தை தன் பொருள் இழந்து போய் வெறும் நாக்கசைவாக மாறி , அது இறைவனின் கண்ணாடியாக நம் மனதை மாற்றுவதில் தெறித்து விழும் பேருண்மை என்பீர்கள் பெருமையாக. சரிதானே ? இதனால் யாருக்கு என்ன நன்மை – ஒரு வாள் வீச்சைத் தவிர ? சூஃபிகள் அற்புதங்கள் புரிய வேண்டாம். முகம்பார்க்கிற கண்ணாடியை கரையிலிருந்து முப்பது கி.மீ தூரத்திற்கு தூக்கியெறிந்து மூழ்கப்போன கப்பலின் ஓட்டையை அடைக்க வேண்டாம். நன்றி சொல்லவந்தவனின் சந்தேகத்தைப் போக்க நாகூர் ஜோப்பில் கைவிட்டு ஹாலந்திலிருந்த பச்சைக்கிராம்புக் கொத்தை கொண்டுவர வேண்டாம். வேண்டுவது, இதைச்சொல்லியே பிழைக்கிற கூட்டத்தை உருவாக்காமலிருப்பது.

‘முஹாசபா ‘ , ‘முராக்கபா ‘ என்று முர்தபா போடாமல் இயல்பாக இரு. இன்றே நீ சூஃபி. அவன்தான் அப்படி ஒரு பதில் கொடுக்க முடியும்.

‘கல்யாணம் செய்யாமலிருக்கிறாய் சரி. குழந்தை ? அதுவும் உன் குழந்தை. எப்பேர்ப்பட்ட சொத்து, சந்தோஷம்! அதை இழக்கிறாயே அஷ்ரஃப் ‘ என்பது என் கேள்வி.

‘கல்யாணம் செஞ்சா , ஏன் தத்தெடுத்தால் கூட , என் குழந்தை மட்டும்தான் குழந்தையா படும். இப்போ எல்லார் குழந்தையும்லெ என் குழந்தையா படுது! ‘ என்றான்.

அற்புதமில்லையா இந்த பதில் ? கேட்கும்போதே சூஃபிகளின் ‘ஜெதபு ‘ வரவில்லையா ? ‘அவன் முஸ்லீம் என்பதால் புகழ்கிறாய் ‘ என்று கொச்சைப்படுத்தாதீர்கள். சந்தேகமிருந்தால் மறுபடி ஆரம்பத்திலிருந்து , அவனது குணங்களாக நான் விவரித்ததைப் படியுங்கள் தயவுசெய்து.

அப்பேர்ப்பட்ட சூஃபி இரண்டு நாளாக என்னிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. முகம் சகிக்கவில்லை. ‘ஏன் ‘ என்று கேட்டால் பதில் சொல்லாமல் வெறுப்போடு தன் அறைக்குள் போய்விடுகிறான். வெளியேயும் வரவில்லை. தட்டினாலும் திறப்பதில்லை. என்னாயிற்றென்று மேனேஜரிடம் கேட்கலாமென்றால் கண்கெட்ட பிறகு காந்தராவ் படம் பார்க்க அவர் அரபாபுடன் ஈரானுக்கு போய்விட்டார். வியாபாரம் படுத்திருந்ததில் கூலிகளும் முடங்கிக் கிடந்தார்கள். சோகமான முகத்தோடு வானத்தை நோக்கியபடி இருந்தார்கள். இவர்களை விடுவோம், அஷ்ரஃபுக்கு என்னாயிற்று ? ‘அப்க்யா சோச்சே க்யா ஹோனாஹை ஜோ ஹோகா அச்சா ஹோகா! ‘ – நுஸ்ரத்தின் ஓலம் உரக்கக் கேட்கிறது அவன் அறையிலிருந்து. கேட்கும்போதெல்லாம் கண்ணீரை வரவழைக்கும் பாட்டு. தன்னைத் தேற்றிக்கொள்ள இசையைவிட ஒன்றும் இல்லைதான்.

முன்னூறு யுகங்களுக்குப் பிறகு நமது நாடுகள் செவ்வாய் கிரகத்தில் முதல் ஒற்றுமைமாநாடு நடத்தி அதைக் கொண்டாட மேட்சுகளும் நடத்துகிறதே..! இந்த இனிய பொழுதில் ஒரு சூஃபி நீ இப்படி இருக்கலாமா ? என்ன நடந்து விட்டது இப்போது ? தோல்வியும் வெற்றியுமில்லாத மைதானம் அங்கேயும் இல்லை என்ற வருத்தமா ?

பூனையிடம் கேட்பதுதான் வழி!

கேம்ப்பை விட்டு மற்ற பூனைகள் ஓடியே போய்விட்டபோது அழகான அந்த ‘ரஹ்மத் ‘ மட்டும் என்னைப் பார்த்து நின்றது. கேட்டேன்.

பதில் சொல்லாமல் அது என் அறைக்குள் நுழைந்தது.

அருஞ்சொற்பொருள்

ஷிஃபா – நிவாரணம்

அரபாப் , கஃபில் – முதலாளி

இல்முல் ஜஃபர் – அரபு எழுத்துக்களின் சக்தி சம்பந்தமான அறிவு

குஸ்பிலாத்தா – பெண்களை கிண்டலாகச் சொல்வது

ரஹ்மானியத் – அருள் , நல்ல எண்ணங்கள்

அஸ்தஃபிருல்லா! – ‘இறைவா, பிழைபொறுப்பாயாக! ‘

வல்லாஹூல் அழீம் – இறைவன் மேல் சத்தியமாக!

‘அனல்ஹக் ‘ – நானே இறைவன் [கொல்லப்பட்ட மன்சூர் அல் ஹல்லாஜ் ரஹ்மத்துலாஹி சொன்ன வார்த்தை (உபநிஷத்தின் ‘அகம்பிரம்மாஸ்மி ‘ போன்றது)]

முஹாசபா , முராக்கபா – மெய்ஞ்ஞான நிலைகள்

ஜெதபு – பரவசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *