நெருக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 5, 2024
பார்வையிட்டோர்: 228 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  

கல்லூரியிலிருந்து களைத்துவந்த பேராசிரியர் கமலநாதனுக்கு ஒரே கோபம். “வா என்று கேட்க நாதியுண்டா இந்த வீட்டிலே? என்றைக்குத்தான் இந்த வீட்டிலே விடிந்து தொலையுமோ, தெரியவில்லையே!….” என்று சற்று உரக்கப் பேசிக்கொண்டு கோட்டைக் கழற்றி ஒரு மூலையில் கிடந்த நாற்காலிமீது எறிந்தார். ஒரு சாய்வு நாற்காலியை இழுத்துப் போட்டு அதிலே உட்கார்ந்து, “உஸ்ஸ்….அப் பாடா! எல்லாம் நம் தலைவிதி! யாரைப்போய் நொந்து என்ன பண்ண?” என்று சொல்லிக் கொண்டே பூட்சைக் கழற்றி இன்னொரு மூலையில் எறிந்தார். 

வேலைக்காரன் காப்பி கொண்டுவந்தான். அவனை எரித்துவிடுவதுபோல் பார்த்தார். 

“ஏன்’டா, சனியனே! காப்பி, நீ கொண்டு வராதே, கொண்டுவராதே என்று எத்தனை தடவை’டா சொல்லித் தொலைவது? உன் மூஞ்சியும் நீயும் ! போடா….போ….” 

“அம்மா..வந்து.. உங்ககிட்ட..” 

“என்னடா, வந்து….போயி….அம்மாவுக்கு என்னடா வந்துவிட்டது இப்போ ? ஊரிலே காலரா கீலரா ஒன்றுமில்லையே….” 

“இல்லிங்க, அம்மா லேடீஸ் கிளப்புக்குப் போறதா உங்ககிட்டே….” 

“துரைசானியம்மா அங்கே போவதாகச் சொல்லச் சொன்னார்களா….அவர்கள் அங்கே போகவே, தாங்கள் காப்பி போட்டீர்களாக்கும்…. உங்களைச் சொல்லி என்ன’டா பண்ண ? காப்பியை மேசைமேலே வைத்துவிட்டு எங்கேயாவது போய்த்தொலை….” 

கமலநாதன் எழுந்து தம் வீட்டுத் தோட்டப் பக்கமாக இருந்த ஜன்னல் அருகில் போய் நின்றார். ஜன்னலில் கிடந்த சீப்பை அவர் கரம் எடுத்தது. வலக்கையில் இருந்த சீப்பின் பற்களை இடக்கரத்தின் கட்டை விரலால் நெருடினார். அவர் இவ்வுலகத்து நினைவிலே இல்லை…. எங்கோ நெடுந் தொலைவில்-எப்போதோ நிகழ்ந்த ஒரு பழங்காலத்தில்—அவர் மனம் ஈடு பட்டதை அச்செயல் காட்டிற்று. ‘ட்ர்ர்…..ட்ர்ர்’ என்று மீட்டப்பெற்ற இந்தச் சீப்பின் சுதியிலே இழைந்தது அவருடைய பெருமூச்சு. ஏதோ எண்ணத்தால் கவரப்பட்டவர் போலச் சீப்புப் பற்களின்மீது. தம் விரல் இயங்குவதைக் குனிந்து பார்த்தார். விரலோடு கண் ஒன்றிற்றே தவிர, கருத்து அங்கே இல்லை. ‘ட்ர்ர் ….ட்ர்ர்’ என்ற அந்தச் சுதிக்கேற்ற இதய ஒலியை-கனவுப் பாடலை-அவருடைய அறிவு எழுப்பிவிட்டது. நினைவு அலைகளிலே தோய்ந்து – அந்த அலைகளின் எழுச்சி தாழ்ச்சிகளிலே மிதந்து மிதந்து கமலநாதன் எங்கேயோ போய்க் கொண்டிருந்தார். கட்டைவிரல் சீப்பின் பற்களை நெருடிக் கொண்டேயிருந்தது. கமலநாதனோ கட்டைவிரல் எழுப்பிய சுருதியோடு இழைந்து இதய இசையோடு கலந்து எங்கேயோ…. 


“என்ன கமலநாதன்! ஆழ்ந்த சிந்தனையோ? தேர்வு வருகிறதே என்ற நினைவா?” 

“ம்ம்..என்ன?”

“என்ன’ப்பா! நீயே இப்படித் தேர்வை நினைத்து உருகினால் நாங்களெல்லாம் என்ன ஆவது ?” 

“அஅ! என்ன கேட்டாய் ? தேர்வா? அதெல்லாம் ஒன்றுமில்லையப்பா?” 

“பின்னே என்னவாம் ?….” 

“சஞ்சீவி! ‘பாரதி அறுபத்தாறு’ படித்திருக்கிறாயா?….” 

“அதற்கென்ன வந்தது? தேர்வுக்கு அதுவா வேண்டும்? நீ படிக்கிற தத்துவத் தேர்வுக்கும் பாரதி அறுபத்தாறுக்கும் என்னப்பா தொடர்பு?” 

“இல்லை, படித்திருக்கிறாயா என்று கேட்டேன், வேறு ஒன்றுமில்லை….வந்து….” 

“ஏன், என்னப்பா ? என்ன சமாச்சாரம்? என்னவோ மாதிரி மாதிரி பேசுகிறாயே! ஏதாவது இருந்தால் என்னிடம் சொல்லேன்…. என்னிடம் கூடவா….” 

“சஞ்சீவி! உன்னிடம் சொல்லக்கூடாததோ, மறைக்க வேண்டியதோ ஒன்றுமில்லை. என்ன அருமையான பாடல்கள் தெரியுமா?- உலகத்தைச் சரியானபடி உணர்ந்து பாடினவன் பாரதி. அதிலும் இன்றைய தமிழ்நாட்டைச் சாறாய்ப் பிழிந்துதான் வைத்திருக்கிறான். என்னமாய்ப் பாடுகிறான்.. நீதான் பாரேன்…. 

நாடகத்தில் காவியத்தில் காதலென்றால் 
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றா மென்பர்
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோ ரத்தே 
ஊரினிலே காதலென்றால் உறுமுகின்றார்
பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார் 
பாரினிலே காதலெனும் பயிரைமாய்க்க
மூடரெலாம் பொறாமையினால் விதிகள்செய்து
முறைதவறி இடரெய்திக் கெடுகின்றாரே. 

“என்ன…. சஞ்சீவி! பாட்டு எப்படியிருக்கிறது? இந்தத் தமிழ் நாடு உருப்படுமா ?…” 

“கமலநாதன்! உன் விஷயம் என்னவோ எனக்கொன்றும் புரியவில்லை. அன்றைக்கு உன் டைரியிலே ‘பூத்த சோதி வதனம் திரும்பு மேல் புலனழிந்தொரு புத்துயிர் எய்துவேன்’ என்று எழுதிவைத்திருந்தாய். இன்றைக்கு என்னமோ மனத்தையே பறக்க விட்டுவிட்டு ம்ம்.. ……என்ன’ப்பா, உன் போக்கு ஒன்றுமே புரியவில்லையே?” 

“சஞ்சீவி! என்மனம் சரியாயில்லை. ஊருக்கே போய்விடலாமா என்றுகூட எண்ணுகிறேன்”. 

பரீட்சையாவது ஒன்றாவது! மனித னுக்கு நிம்மதியில்லை யென்றால் இதெல்லாம்…. வீண்தானே !….’ 

“இதோ பார், கமலநாதன்! என்ன வென்று விஷயத்தைச் சொல்லாமல் புதிராகப் பேசிக் கொண்டே போனால் அர்த்தமென்ன ?….” 

“என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை, சஞ்சீவி. மனம் சரியாயில்லை. எல்லாம் நம்முடைய ஆசிரியரைக் கேள், சொல்லுவார்.” 

இந்த உரையாடல் நடந்து எவ்வளவோ காலம் ஆகிவிட்டது. இன்று ஏனோ அது கமலநாதனுடைய நினைவிலே எழுந்தது. சஞ்சீவியும் தாமும் தத்துவப் பட்டம் பெறப் படித்த காலம் – தேர்வு – கஷ்டப்பட்டுப் படித்தது – இதெல்லாம் பின்னணியாக அமைய அந்த உரையாடல் மட்டுமே மிகவும் முன்னின்று அவர் நினைவுத் திரையில் ஆதிக்கம் செலுத்திற்று. ஓங்கி நின்று நினைவில் எழுந்த அந்த உரையாடல் கமலநாதனுடைய வாழ்க்கையில் உண்மையிலேயே மிகவும் முக்கியமானதுதான். 


சஞ்சீவிக்குக் கமலநாதனுடைய போக்கு. ஒன்றும் புரியவில்லை. பேயடித்த மாதிரியாக வெறிச்சென்ற பார்வையோடு. எதிலும் ஊன் றிய கவனமில்லாமல்—வெறும் இயந்திரம்போல் இயங்கிவந்த போக்கு மிகவும் வருத்தத்தை விளைத்தது. தன்னுடைய தத்துவப் பேராசிரியர் திரு. வரதப்பரைச் சென்று கண்டான். காணாத கனவு காணுகிறான் உன் நண்பன். கவிதையுலகில் கண்ட காதலை, கல்லாய் மண் ணாய்க் கிடக்கிற இந்த உலகத்திலும் காண நினைக்கிறான். காணமுடியாது என்று உணர நேர்ந்தபோது கவலைப்படுகிறான். உலகம் வேறு; உணர்வு வேறு “இது அந்தப் பேராசிரியரிடமிருந்து சஞ்சீவிக்குக் கிடைத்த விளக்கம். 

சஞ்சீவிக்கு ஒரே கோபம். “இதென்ன, சார், புதுப்பாடமாய் இருக்கிறதே! உணர்வால் தான் இந்த உலகமே இயங்குகிறது என்று சொல்லிக் கொடுத்த பாடம் கல்லூரிக்கு மட்டும் தானா? இங்கே இப்படிச் சொல்லுகிறீர்களே! உலகம் வேறு – உணர்வு வேறு….! இதென்ன, சார், பெரு மயக்கமாக அல்லவா இருக்கிறது….” 

“சஞ்சீவி! இதிலே மயக்கம் ஒன்றும் இல்லை. இது பெரிய புதிர். மனித அறிவுக்கு எட்டாத புதிர் என்று சொல்ல முடியாது. ஆயினும் புதிர்தான். சிக்கலைத் தீர்த்துவிட லாம். ஆனால், இன்று, இந்த நாட்டில் இல்லை. இனி, எப்போதோ-என்றோ உதயமாகப் போகிற-புதிய தமிழகத்திலே வேண்டுமானால் இந்தச் சிக்கலும் புதிரும் இல்லாமலிருக்கலாம். ஆனால்—இன்று-இருள் சூழ்ந்த இந்தத் தமிழ் நாட்டில்-உலகம் வேறு, உணர்வு வேறுதான். காதல் என்பது காவியச் சரக்கு. இந்த நிலையில் உன் நண்பன் காணும் கனவு வெறும் கோட்டை -ஆகாயக் கோட்டை. தமிழ்நாட்டு நிலை தெரி யாமல் அவன் அலமருகிறான். பாரதி பாட்டைக் கேட்டதில்லையா? ‘நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்…’ பாட்டுத் தெரியுமல்லவா? காதல் என்பது ஆறாவது பாதகம் என்று எண்ணுகிறது இன்றைய தமிழர் மனம். கலப்பு மணம் என்பது கழுவாயில்லாத பெரும் பாவம் என்றெண்ணுவது இன்றைய தமிழ்த் தாயர் இயல்பு. இந்நிலையில் கமலநாதன் மனக்கவலைப் பட்டால் நாம் என்ன செய்ய முடியும்….?” 

“சார், நீங்கள் சொல்வதுபோலவே அவனும் பாரதி பாட்டைப் புலம்பிக்கொண்டு கொண்டுதான் இருக்கிறான். ஆனால்….”

“அதே பாட்டைத்தான சொல்லுகிறான்?” 

“ஆம்.” 

“பின்னே கவலை ஒன்றுமில்லை. அந்தப் பாட்டு அவன் உள்ளத்தில் இடம் பெற்றால் போதும். நாளடைவில் அறிவு தெளியும். நாட்டு நிலைதான் தன் மனத்தை மாய்த்ததற்குக் காரணம் என்று தெளிவான்….” 

“ஆனால், நான் சொல்லுவதை நீங்கள் முழுவதும் கேட்கவில்லையே! மனத்தெளிவை யூட்டும் என்று நீங்கள் சொல்லுகிற பாட்டே அவன் மனத்தைக் கலக்குகிறது ; மூளையைக் கலக்குகிறது. அவன் பேய் கொண்டவன்போல பித்தேறியவன் போல-போல் என்ன- பித்தேறியவனாகவே-இருக்கிறான், சார். ஏதா வது வழி தேடித்தான் ஆக வேண்டும். இல்லை யென்றால் என்ன ஆகுமென்று சொல்ல முடியாது….”


என்ன ஆகுமென்று முன்கூட்டித்தெரிந்து விட்டால் மனிதனே தெய்வ மாகிவிடுகிறான். அது தெரிந்துவிட்டால் வாழ்க்கையிலே வெறி இருக்க முடியாது. இன்பத்தை எதிர்நோக்கும் மனிதனுக்கு எதிர்காலம் தெரியக்கூடாது. தெரிந்தால் இன்பம் என்பதற்கு ஒன்றும் தனியான சிறப்பு இருக்கமுடியாது. கமலநாதன், சஞ்சீவி இவர்கள் யாவரும் சாதாரண மனிதர்கள்; எதிர்காலம் தெரியாத மனிதர்கள். எனவே, இன்பம் வந்தபோது நன்றாய்த் திளைத்து மகிழ்ந்தார்கள். துன்பத்துள் துன்பம் உழன்ற கமலநாதனுக்குத் திருமணம் இன்பத் துள் இன்பமாய் அமைந்தது; கண்டு மகிழ்ந் தான் சஞ்சீவி. அன்று, பேராசிரியரோடு பேசிய காலத்திலே கமலநாதன் வாழ்க்கை யிலே இத்தகைய மகிழ்ச்சியைக் காண முடியும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. ஆகையால் தான் “என்ன ஆகுமென்று தெரியாது என்று சொன்னான். 

பேராசிரியர் வரதப்பனுக்கும் மகிழ்ச்சி தான். ஆனால்; சஞ்சீவியின் மகிழ்ச்சி வேறு ; அவர் மகிழ்ச்சி வேறு. சஞ்சீவியின் மகிழ்ச்சி வெறும் மகிழ்ச்சி – நண்பன் இன்பத்தை எதிரொளி செய்யும் மகிழ்ச்சி. கதிரவன் ஒளியால் ஒளிரும் மதி போன்றது அவன் பெற்ற மகிழ்ச்சி. ஆனால், பேராசிரியர் மகிழ்ச்சி அறிவறிந்த மகிழ்ச்சி. கமலநாதனின் கலங்கிய நிலை-பின் தெளிவு- நாளடைவில் வந்துற்ற மண மகிழ்வு – இப்படியாகக் கமலநாதனுடைய வாழ்விலே மனித இயல்பு, தமிழின நிலை இவற்றை ஆய்ந்து தெளிந்து, அத் தெளிவால் பிறந்த மகிழ்ச்சிதான் பேராசிரியரின் மகிழ்ச்சி. 

இனிமேலாவது கமலநாதன் மகிழ்ச்சியோடு இருப்பான் என்று சஞ்சீவி ஐயமில்லாமல் மகிழ்ந்தான். “கமலநாதா, கமலினி வந்தா யிற்று; இனி, கலக்கமும் கவலையும் இல்லை” என்று தன் மகிழ்ச்சியைச் சொல்லியும் காட்டினான். 

“விழைவு என்பது இயற்கையுணர்வு; ஆனால் மிக மெல்லிது; எளிதிலே அழிந்துவிடக் கூடியது. அந்த உணர்வை அடிப்படையாக வைத்து ஒரு பெரிய மாளிகை எழுப்பவேண்டும். இந்தக் காரியம் மிகவும் கஷ்டமானது. ‘ ஒருவர் பொறை இருவர் நட்பு’ என்பதை மறவாதே. இதுதான் இருவரிடையே உள்ள விழைவைக் காதலாக மாற்றக் கூடிய ஆற்றல் வாய்ந்த மந்திரம். விழைவு வெறும் வித்து; காதல் பெரு மரம். வித்திலிருந்து மரம் தோன்றி வளர்ந்து விரிய வேண்டும். இடையே முறிப்புகளும் பல நேரிடலாம். எல்லாக் காலத்திலும் வழிகாட்டும் மந்திரம் இதுதான்: ஒருவர் பொறை இருவர் நட்பு” – இது பேராசிரியர் வரதப்பரின் அறிவுரை. 

கமலநாதனுக்கு வாய்த்த மனைவி நல்லவள் தான். அவருக்குப் பிடித்தமானவள்தான். அவரே தேர்ந்தெடுத்தார் என்று சொல்ல முடி யாது; என்றாலும் தாம் அவளைப் பெற்றதிலே பெரு மகிழ்ச்சிதான். ஆடம்பரமற்ற குடும்பத் திலே-ஆரவாரமற்ற வகையிலே வளர்ந்து வந்த அங்கயற்கண்ணி தன் வாழ்க்கைக்கு ஏற்ற துணையாக இருப்பாள் என்று அவர் எண்ணினார். ‘மனைவி படித்தவள்’ என்ற நினைவும் கமல நாதனுக்கு மகிழ்ச்சியை ஊட்டிற்று. 

கமலநாதன் இன்பப் பயணம் தொடங் கினார். அமைதியாய்த் தொடங்கினார். அமைதி யாய் வந்த அங்கயற்கண்ணி அவருக்குத் தக்க துணையாய் அமைந்தாள். ஆனால், அதெல்லாம் சில ஆண்டுகளே. அதன் பிறகு, கமலநா தன் விரும்பிய அமைதி வீட்டில் இல்லை. ஆடம்பர வாழ்வையே அங்கயற்கண்ணி விரும்புகிறாள் என்பதைக் கண்டார்; கலங்கினார். முதலில் இன்பங் கண்டவர் துன்பத்தையும் அனுபவித்தார். “வெளியார் மதிக்க வேண்டாமா” என்ற சாக்கிலே வேண்டாத ஆடம்பரங்களிலே தன் மனத்தைச் செலுத்தினாள் அங்கயற்கண்ணி. அவருடைய தத்துவ மனம் ஆராயத் தொடங் கிற்று. “பெற்றோர் உரிமை தராமல்-கட்டுப் பாடு செய்து வளர்த்திருக்கிறார்கள். உரிமையின்றி நசுங்கிக் கிடந்த அடிமை மனம் இங்கே ஆடுகிறது” என்று அவர் மனம் சொல்லிற்று. காரணம் கண்டதால் மட்டுமே அமைதி கிட்டவில்லை. தன் நிலையைச் சஞ்சீவிக்கு அறிவித்தார். அவன் வருந்தினான். நண்பர் மகிழ்ந்தால் மகிழ்கிறான்; வருந்தினால் வருந்துகிறான். இவ்வளவுதான் சஞ்சீவியால் முடிந்தது. கமல் நாதனுக்கு ஒரே வெறுப்பு; எதைப் பார்த்தாலும் சலிப்பு. இந்நிலையில்தான் மேலே கண்ட காப்பிக் கதை நடந்தது. 

காப்பி ஆறி அலர்ந்து கிடந்தது – யார் குடிக்க? எவர் எடுக்க? 

சஞ்சீவியின் நினைவெழுந்தது. அவனும், தாமும் பேசிய உரையாடல் நினைவிலெழுந்தது. எல்லாம் சீப்பின் ‘டர்ர்ர்” ஒலியிலேதான். பாரதி பாடல் இன்றும் அவர் நெஞ்சைக் கலக்கிற்று. ‘நான் நினைத்தபடி அவளைத் திருமணம் புரிந்திருந்தால்…’ என்ற எண்ணத்துக்கு வடிவம் கொடுக்க முயன்று ஒரு பெருமூச்சுப் பிறந்தது. 

“நன்றாயிருக்கிறது…” என்ற குரல் கேட்டுக் கமலநாதன் தம் நினைவு பெற்றார். 

அங்கயற்கண்ணி வந்துவிட்டாள். “ஆண் பிள்ளைகள் காரியமே இப்படித்தான். ஆமாம், காப்பி கிடந்து ஆறி அலர்ந்து போகிறதே! இதைக் குடிக்காமல் அப்படி என்ன குடிமுழுகிப் போகிற யோசனை, தெரியலையே! உங்கள் ‘வாத்தியார்’ காகிதம் எழுதியிருக்கிறார், பார்த்தீர்களோ?” 

காகிதம்….! ஆசிரியர் காகிதம்! அங்கயற் கண்ணி பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த கமலநாதனுக்கு அப்போதுதான் செவிப்புலன் வேலை செய்யலாயிற்று. 

“காகிதமா? எங்கே? பார்க்கலையே!” அவள் கடிதத்தைக் கொடுத்தாள். கமலநாதன் பிரித்துப் பார்த்தார். “மறக்க வேண்டாம். ஒருவர் பொறை இருவர் நட்பு- இது தான் மந்திரம். நெருங்கிப் பழகுவதால் நெருக்கடி ஏற்படும். அப்போது மந்திரத்தை மறக்க வேண்டாம்”-இவ்வளவுதான் கடிதம்.

– இடமதிப்பு, முதற் பதிப்பு: 1962, மல்லிகா வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *