நெஞ்சு கொதிக்குதையோ – இந்த நீசத் தனங்களை நினைத்துவிட்டால்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 25, 2022
பார்வையிட்டோர்: 1,715 
 
 

(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“தா தெய்; தரிகிட – தரிகிட…” என்று தாளக்காரர் ஆரவாரித்தார். பிள்ளையார் கோயிலின் வெளி மண்டபத்திலே சின்ன மேளக்காரி துகள் பறக்க ஆடிக்கொண்டிருந்தாள். பெண்களும், குழந்தைகளும் அந்த வேடிக்கையைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவளோ அடிக்கடி கண்ணை வெட்டி, பல்லைக் காட்டி வெளிச் சம் போட்டுக்கொண்டிருந்தாள், ஆண்பிள்ளைகள் இருந்த பக்கத்தைப் பார்த்து! கிழவர்களுக்கு மனத்துள்ளே வாலிபம் துளிர்த்துக்கொண்டிருந் தது. நிகழ்கால வாலிபர்கள் – குறிப்பிடத்தக்க புள்ளிகள் – பின்னாலே வரிசையாக – ஸ்டைலாக – நின்று கொண்டிருந்தார்கள். அந்த வரிசை யிலே பெற்றோ மாக்ஸ் லைற்றின் ஒளிமோத, அங்கிருந்து மோதிரக் கற்கள் டாலடித்தன; கைக்கடிகாரங்கள் பளிச்சிட்டன. இடையிடையே கழுத்துச் சங்கிலிகளும் மின்னின.

“உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ ” என்ற பாட்டின் அடியைப் படித்துவிட்டுச் சின்ன மேளக்காரி ஜிகுஜிகு என்று ஜில் வட்டம் சுழன்று வந்துகொண்டிருந்தாள்…ஆதிமூலத்திலே, அழுது வடிந்து கொண்டிருந்த தேங்காயெண்ணெய் விளக்குகளும் தானுமாய்ப் பிள்ளையார் கவனிப்பாரற்றுக் கிடந்தார்!

பிள்ளையாருக்கும் பெரியவராய், கண்கண்ட கல்நெஞ்சராய்ப் பிரசித்தி பெற்ற டொக்ரர் சுந்தரமூர்த்தி அவர்களுக்கு இந்த அசலான சந்தர்ப்பத்திலே ஒரு நப்பாசை தோன்றிற்று. சதிராட்டம் நடந்துகொண்டிருந்த பாதைவழியே சின்ன மேளக்காரியின் பக்கமாக இங்கிருந்து மறுபக்கம் போய்ச்சேரவேண்டு மென்பதுதான் அந்த ஆசை. அந்த ஆசையின் வேகத்திலே முகம் பூரிக்க. அங்குமிங்குமாய் நரைத்துக்கொண்டிருந்த மீசையைக் கையினால் தடவி விட்டுக்கொண்டு எழுந்தார். இடுப்பிலே மல்வேட்டி கசமுசக்க, பட்டையாக மடித்து அரையிலே சுற்றியிருந்த சேலம் பட்டுச் சால்வையின் அகலச் சரிகை தகதகக்க, ஒரு ராஜநடை போட்டுக் கொண்டு வந்தார். உடலெங்கும் ஒரு வித புல்லரிப்பும், ஆயிரக்கணக்கான கண்கள் தம் மையே நோக்குவதுபோன்ற உணர்ச்சியினால் ஒரு தளதளப்பும் மோதிக்கொள்ள ஒரு விதமாகச் சின்ன மேளக்காரியின் சமீபத்தில் வந்து சேர்ந்தார். அவள் வட்டம் போட்டுச் சுழன்று வந்து இவரோடு மோதிக்கொள்ளப் போனவள். மெல்ல மரியாதையாக ஒதுங்கி. ஒரு மோனகப் புன்னகையை உதிரிந்துவிட்டு ஆட்டத்தைத் தொடர்ந்தாள். கூட்டத்தின் ஓரத் திலிருந்து “உஸ்ஸ்” என்று ஒரு மெல்லிய சிரிப்பொலி இலேசாகத் தலைதூக்கிற்று. டொக்ரரும் அசட்டுச் சிரிப்புடன் லட்சியத்தை எட்டிப் பிடித்துவிட்ட மனநிறைவுடன் அக்கரை போய்ச் சேர்ந்தார்.

சின்னமேளக்காரியின் இந்த மோஹனமான ஒயிலாட்டத்தையும், அதன் காரண கர்த்தாவான – திருவிழா உபயகாரரான டொக்ரர் சுந்தரமூர்த்தி யின் பக்திப் பெருக்கையும் பற்றி எழுதிக்கொண்டிருப்பதன்றால் – ஆஹா, ஆனந்தந்தான்! அதை எழுதிய எனக்கும், படிக் கிற உங்களுக்கும், படிப்பதைக் கேட்கிற உங்கள் நண்பர்களுக்கும் கூட மோட்ச லோகத்திலே இடமொதுக்கப்பட்டிருக்கலாம். ஆனால்….

சுந்தரமூர்த்தி அவர்களின் பக்திச் செல்வம் இந்த வருடம் ஏன் இவ்வளவு தூரம் கடல் மடை திறந்தாற்போலப் பெருக்கெடுத்து இருக்கிறது என்ற விஷயத்தைக் கொஞ்சம் ஆராயப் புகுந்தால் – ஐயோ, நெஞ்சுசு துடிக்குதையோ, இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்து விட்டால்!

பரவாயில்லை . தயவுசெய்து இதைப் படியுங்கள். இதைப் படிப்பதனால் மோட்சலோகத் திலே இடம் கிடைக்காவிட்டாலும், இந்தலோகத்து ஊழல்களிடையே சற்றுநேரம் நீந்தும் பாக்கியமாவது கிடைக்கலாம்!

அன்று ஒரு வெள்ளிக்கிழமை. சுந்தரமூர்த்தி அதிகாலையில் எழுந்து ஸ்நானம் செய்து. அனுஷ்டானம் பார்த்து விபூதியைத் தண்ணீரிலே குழைத்துப் பட்டை பட்டையாகக் குறிகளை இழுத்துக்கொண்டு வீட்டுக்குள்ளே ஒரு மூலையில் புனிதமாக மாட்டப்பட்டிருந்த சுவாமி படங் களருகே போனார். அங்கே ஒரு தட்டில் புஷ்பங்களும், விபூதி, கற்பூரம், சாம்பிராணிக் குச்சி முதலியனவும் தயாராக இருந்தன. புஷ்பங்களை எடுத்துப் படங்களின் மேலிருந்த சிறு வளை யங்களிலே சொருகினார். இரண்டு படங்கள்: ஒன்று பிள்ளையார் – வருகிற விக்கினங்களையெல்லாம் தீர்த்துவைப்பதற்கு; செய்கிற பாவங்களையெல்லாம் மன்னித்துக் கடைக் தேற்றுவதற்கு, மற்றது லட்சுமி – செல்வத்தை அள்ளிக் குவிப்பதற்கு.

புஷ்பங்களைச் சாத்திவிட்டு, சாம்பிராணிக் குச்சிகளைக் கொழுத்தி வைப்பதற்காக நிமிர்ந்தார். அட, தூண்டாமணி விளக்கைக் கொழுத்த வேயில்லை, போய்த் தொலைகிறது: அவர்தான் கொழுத்தி விடலாமென்றாலும் விளக்கில் திரிகூட இல்லையே! சுந்தரமூர்த்திக்கச் சற்றுக் கோபம் வந்தது. “மீனாட்சி! மீனாட்சி!” என்று அவர் கூப்பிட்ட சத்தத்தின் வேகத்தைக் கேட்ட அவருடைய இல்லாள், “ஏன் ஐயா, கூப்பிட்டியளா?” என்று கேட்டுக் கொண்டே தொப்பக் தொப்பென்று நடந்து வந்து கதவருகே நின்றாள்.

“இந்த விளக்குக் கொழுத்துகிறதில்லையோ? திரிகூடப் போடவில்லை !”

“திரிகூடப் போடவில்லையா? அந்தக் கழுதையிடம் எத்தனை தரம் சொன்னேன். மூதேவி வர வர மோசமாய்ப் போகுது!… பாக்கி! பாக்கி!” என்று அந்த மீனாட்சியம்மாள் அலறினாள்.

“பாக்கி” என்று சொல்லப்பட்ட அந்தப் பாக்கியலட்சுமி “அம்மா!” என்று குரல் கொடுத்துக் கொண்டே ஓடிவந்தாள்.

“உனக்கு எத்தனை தரமடி சொல்கிறது? அந்த விளக்குக்குத் திரிபோட உனக்கு என்ன கேட்டி வந்தது?” என்று சொல்லிக்கொண்டே அந்தப் பத்து வயதுச் சிறுமியின் கையைப்ப பிடித் துத் தர தரவென்று இழுத்துக்கொண்டு பின்பக்க விறாந்தைக்குப் போனாள். மீனாட்சி யம்மாள். அங்கிருந்து வந்த “சுளீர் சுளி”ரென்ற பிரம்படியின் ஓசையும், அம்மா! அம்மா! ஒரு நாளும் இல்லையம்மா!…. சின்னம்மாதான் பேப்பர் வாங்கியரச் சொல்லிப் போகச் சொன்னா!… ஐயோ, அம்மா! அம்மா!” என்ற பரிதாபகரமான குரலும் பூசையறையிலேயிருந்த டொக்ரரின் செவிகளில் புகுந்து மனத்திலே திருப்தியை உண்டாக்கின. படத்திலே – கண்ணாடிச் சட்டத்துள்ளே கிடந்த அந்தத் தெய்வங்கள் கூடத் திருப்திப்பட்டனவோ?

சற்றுநேரத்துக்கெல்லாம் பாக்கியம் ஒரு கையில் திரியும், மறுகையில் தேங்காயெண் ணெய்ப் போத்தலும், கண்களில் ஜலமும், கன்னத்தில் நகக் கீறலும், முதுகிலே பிரம்பின் அடையாளங்களுமாக வந்துசேர்ந்தாள். அவளுடைய தலைமயிரை எப்படி வர்ணிப்பது, என்ன உபமானத்தைச் சொல்லுவதென்று தெரியவில்லை. கார் மேகம் போன்ற கூந்தலை யும், மயில் தோகை போன்ற கடல் அலை போன்ற, புகை போன்ற – இன்னும் எத்தனையோ விதமான கூந்தல்களைப் பற்றியெல்லாம் நிறையப் படித்திருக்கிறோம். ஆனால் இந்தப் “பாக்கியின் கூந்தலை யாரோ வர்ணிப்பார்! “தலையிலே காகம் கூடுகட்டப் போகிறது!” என்ற ஒரு வார்த்தைதான் ஞாபகம் வருகிறது. அழகான முகந்தான் ஆனாலும் பேணுவாரற்று பெட் பழிந்து போயிற்று. இடுப்பிலே ஒரு சீலை. அதிலே ஒரு நீளப் பீற்றல், அதன் நிறம் – ஆராய்ச் சிக்குரிய ஒரு விஷயம்!

அதோ அந்தக் கண்ணாடிச் சட்டத்துக்குள்ளே இருக்கிற – உயிரற்ற – படமாகிய – பாக்கியலட்சுமி” யையும், இந்த உயிருள்ள பாக்கியலட்சுமியையும் ஒத்துப் பார்க்கும் போது….. ஐயோ, இந்தப் பேதைப் பெண்ணும் அப்படி ஒரு படமாகப் பிறந்திருக்கக் கூடாதா? எத்தனை பூஜைகள், படையல்கள்…! படமாக இல்லாவிட்டால், சிலையாக, கல்லாக, மரமாக, மண்ணாங்கட்டியாக – ஏதேனும் உயிரற்ற ஜடமாகப் பிறந்திருக்கக் கூடாதா? இவளுக்கு “உயிர்” என்று ஒன்று இருந்தால் தானே. எட்டு ரூபாவுக்கும் சாப்பாட்டுக்குமாக கண்கண்ட நரகலோகத்திலே கதிகெட்டுக் கலங்குகிறாள்!…..

சுந்தரமூர்த்தி சாம்பிராணிக் குச்சியைக் கொழுத்தி படங்களின் கீழ் ஆணியிலே மாட்டி விட்டு, கற்பூரத்தைக் கொழுத்தி விபூதித் தட்டிலே வைத்து விட்டு, கண்களை மூடி, இரு கைகளையும் ஏந்திக்கொண்டு – ஆஹா, என்ன பரவச நிலை! என்ன பரவச நிலை!… அவர் வாய் ஏதோ முணுமுணுத்தது. “… பொல்லாப் பிழையும் இல்லாப் பிழையும்…”

திடீரென்று வாசலிலே “சிவ சிதம்பரம்! சிவ சிவ சிதம்பரம்!!” என்ற வார்த்தைகள் கணீ ரென்று ஒலித்தன. சுந்தரமூர்த்தி டக்கென்று கண்ணை விழித்துத் திரும்பி, “வாருங்கோ சாமி! வாருங்கோ !” என்று இருகைகளையும் நீட்டி உபசரித்தார்.

“சிவ சிதம்பரம்… இன்றைக்கு என்ன விசேஷம்? எல்லாம் கொஞ்சம் வெள்ளெனவே நடக்கிறது? என்று சிவானந்தசாமி விசாரித்தார்.

“ஆஸ்பத்திரிக்குப் போகமுன்னம் வேறு ஒரு இடத்துக்குப் போகவேணும் சாமி! அதனாலே தான்….”

டொக்ரருக்கு சிவானந்தசாமி என்றால் உயிர். அந்த வீட்டிலே சாமியின் சொல்லுக்கு உயர்ந்த மதிப்பு உண்டு. சாமி “தளதள வென்றும், “கொழுகொழு” வென்றும் வேஷம் குறை யாமல் பூமிக்குப் பாரமாய், டொக்ரரின் ஆத்மீக வழிகாட்டியாய் விளங்கினார்.

“இன்றைக்கு நானும் ஒரு பயணம் வெளிக்கிட உத்தேசம்…”

“எங்கே சாமி? எனக்கு இதுவரை ஒன்றும் சொல்லவில்லையே?”

“சிவசிதம்பரம்!…. எனக்கே தெரியாததை நான் எப்படிச் சொல்லியிருப்பேன்? இராத்திரித்தான் கதிரமலையான் கனவிலே வந்தான் “ஏன்ரா, என்னை மறந்துவிட்டியோ?” என்றான்….?

“சாமி கதிரமலையானை மறந்தாலும் அவன் சாமியை மறக்கவில்லை!” என்று டொக்ரர் பக்திப் பரவசமாய்ச் சிரித்தார்.

“சிவசிதம்பரம்!…..அவனுக்கு எப்போதும் பக்தனின் நினைவு இருக்குந்தானே!”

“அப்ப சாமிக்கு…. இருங்கோ சாமி, வந்து விட்டேன்” என்று சொல்லிவிட்டு டொக்ரர் அந்த அறையை விட்டு வெளியே போனார். அடுத்த அறையில் பெட்டி திறக்கும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் திரும்பி வந்த டொக்ரர், விபூதித் தட்டத்திலே பத்து ரூபா நோட்டுக்களில் ஐந்து சேர்த்து மடித்த ஒரு மடிப்பை வைத்து அதைச் சாமியின் முன்பாக நீட்டி “சாமி” என்றார்.

“சிவசிதம்பரம்… இது என்ன இது?” “இல்லைச் சாமி! ஏதோ என்னால் ஆனது. ஏற்றுக்கொள்ளவேணும்!” “உம், கதிரமலையான் சித்தம்!” என்று சொல்லிச் சாமி எடுத்துக் கொண்டார்.

சுந்தரமூர்த்திக்கு ஒரு ஆறுதல். காலையில்தான் அந்தக் காசு வந்தது, அந்த ஜம்பதோடு இன்னும் ஒரு இரு நூற்றைம்பது சேர்த்து முந்நூறு ரூபாவாக வந்தது. அட்வகேட் முருகேசு அதிகாலையில் வந்து ஒரு ரகசிய வேலைக்காக அதைக் கொடுத்தார். அந்த ரகஸ்ய வேலையைக் கவனிப்பதற்காகத் தான் இன்று ஆஸ்பத்திக்குப் போகுமுன்னர் அட்வகேட் முருகேசு வீட்டுக்கு அவர் போக வேண்டியிருந்தது. அந்த வேலையைச் செய்வது “பாவம் பழியோ” என்று உள்நெஞ்சிலே இது வரை ஒரு தாக்கம் இருந்தது. அந்தக் காசிலே ஒரு பகு தியை இப்போது ஒரு நல்ல – விஷயத்தில் – சாமிக்குக் கொடுத்துவிட்டால் மனம் ஆறுதல் அடைந்தது! அட்வகேட் முருகேசுவின் செல்வப் புதல்வி – கணவன் சிங்கப்பூரிலே இருக்க, இங்கே அவளுக்கு வயிற்றிலே ஏதோ தொந்தரவாம். அதை நீக்கிவிட வேண்டுமென்று அட்வ கேட் பெரிதும் வேண்டிக் கொண்டார்.” இது, பெரிய பாவமா? பழியா? அப்படித்தான் ஏதோ அற்பதினையத்தனை பாவம் வந்தாலும், டொக்ரர் செய்து வரும் எத்தனையோ பெரிய – மலையத்தனை புண்ணியங்களுக்கிடையே இது மறைந்து ஒழிந்து மண்ணாகிப் போகாதா?

டொக்ரரின் உள்ளம் பளிங்குபோலத் தெளிந்தது….

இங்கே சின்னமேளக்காரி ஒரு பாட்டை முடித்துவிட்டு நிற்கிற சமயம், யாரோ ஒரு வாலிபன் எழுந்தோடிப் போய் ஆர்மோனியக்காரனின் அருகில் குந்தியிருந்து ஏதோ குசுகுசுத்தான். ஆர்மோனியக்காரன் பெட்டியிலே புதிய பாட்டை வாசித்தான். சின்னமேளக் காரியும் அதைக் கவனித்துவிட்டு, “அய்யய்யய்ய – சொல்ல வெட்கம் ஆகுதே!” என்று ஆரம்பித்தாள்.

சபையோர் – பக்த சிரோன்மணிகள் – அந்தப் புது ஆட்டத்தை ரகிக்கத் தொடங்கினார்கள்.

வஸந்தமண்டபத்திலே எழுந்தருளிப் பிள்ளையார். தும்பிக்கையையும் மூடி வரிந்து கட்டி விட்டதனால் மூச்சுவிடவும் முடியாமல் புதிதாய் முளைத்த கை கால்களுடன் கத்தரித் தோட்டத்து வெருளி மாதிரி ஜம்மென்று உட்காரந்திருந்தார்!

– வரதர் புதுவருஷ மலர் – 1950, ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *