நீ எந்தன் வானம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 6,266 
 
 

வந்தனா நேற்று அலுவலகத்திற்கு பிங்க் நிற சேலையில் வந்திருந்தாள். கொஞ்சமான மல்லிகைப்பூவும் சுகந்தமான ஃபெர்ப்யூமும் எந்த ஆண்மகனையும் சற்று நேரம் அவளின் அருகில் நிறுத்தச் செய்யும். அவளின் அழகை வர்ணிக்கவெல்லாம் தேவையில்லை. கண்களை மூடிக் கொண்டு மிக அழகான பெண்ணை உங்களின் கற்பனையில் உருவகித்துக் கொள்ளுங்கள். அந்தப் பெண்ணை விட வந்தனா ஒரு படி மேலே இருப்பாள் என்று சொன்னால் பில்ட் அப்பாக கூடத் தெரியலாம். ஆனால் அதுதான் உண்மை.

வந்தனாவை கல்லூரிக் காலத்தில் ஒருவன் காதலித்தான். இல்லை நூற்றுக்கணக்கானவர்கள் காதலித்தார்கள். ரவியும் நூற்றில் ஒன்று. இப்படிச் சொன்னால் ரவி அடிக்க வந்துவிடுவான். அவன் நூற்றில் ஒன்றில்லை என்பான். அவன் வந்தனாவை மிகத் தீவிரமாக காதலித்துக் கொண்டிருந்தான். அழகான பெண்கள் வழக்கமாகச் செய்வதைப் போலவே வந்தனா அவனை கண்டுகொள்ளாமல் இருந்தாள். கைகளை கிழித்துக் கொள்வது, இரத்தத்தில் கடிதம் எழுதுவது என்று ரவி முடிந்தவரை முயன்று கொண்டிருந்தான். மூன்றாம் வருடத்தின் முதல் செமஸ்டர் நெருங்கிக் கொண்டிருந்தது. கல்லூரியில் இருந்த பெரிய ஆலமரத்தின் அடியிலும் ஹாஸ்டல் வராண்டாவிலும் ஆளாளுக்கு நல்லபிள்ளைகளாகி புத்தகத்தை உருட்டிக் கொண்டிருந்தார்கள். வந்தனா ஆலமரத்துக்கு அடியில் நின்று கொண்டு ரவியை பார்க்க வேண்டும் என யாரிடமோ சொன்னாள். ரவி எங்கு இருந்தான் என்பதெல்லாம் தெரியாது ஆனால் அடுத்த இரண்டாவது நிமிடம் அவள் அருகே நின்றிருந்தான். என்னை காதலிக்கிறாயா என்றாள். ரவி ஆமாம் என்றான். அவள் ஐ லவ் யூ சொல்வாள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ரவி உட்பட. ஆனால் சொல்லிவிட்டாள்.

அதன் பிறகு ரவியின் வானம் அவனது காலடியில் இருந்தது. வந்தனாவின் பூமியை பூக்களால் அலங்கரித் துவங்கினான். வந்தனாவும் அவனுக்காக உருகியும் உறைந்தும் உருமாறிக் கிடந்தாள். கார்த்திகைத் தென்றல், இளங்கோடை வசந்தம், முன்பனி மல்லிகை என எதை வேண்டுமானாலும் அவர்களின் காதலுக்கு ஒப்பிடலாம். அப்படித்தான் தன் காதலை கவிதையாக ரவி மாற்றிக் கொண்டிருந்தான்.

கல்லூரி முடிந்த பிறகு ஒரிரு வருடங்களில் திருமணத்தை பற்றி பேச்சு வந்தது. வந்தனா ரவியைப் பற்றி தனது பெற்றோரிடம் பேசினாள். வீடு அதகளமானது அதன் பிறகாக போர்களம் ஆனது. இரண்டு நாட்கள் ரவியும் வந்தனாவும் ரகசியமாக சந்தித்து யோசனை செய்தார்கள். முடிவுக்கு வந்தவர்களாக வீட்டில் இருந்த கொஞ்சம் நகைகளையும் செலவுக்கான பணத்தையும் எடுத்துக் கொண்டு பெங்களூருக்கு ரயிலேறிய பிறகு வீட்டை மறந்து போனார்கள். கோரமங்களாவில் ஒற்றை படுக்கையறையுடன் வீடு பார்த்து அட்வான்ஸ் கொடுப்பதற்காக பாதி நகைகளை விற்றார்கள். மீதி நகைகள் தீருவதற்கு முன்பாக வேலை தேட வேண்டும் என்று பகல்களில் நாயாக அலைந்தும் இரவுகளில் பேயாக படித்தும் ரவி ஒரு கம்பெனியில் சேர்ந்துவிட்டான். மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளம் என்று ஆர்டர் வாங்கியவுடன் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டதாக நினைத்தான். ஆனால் வாழ்க்கை அத்தனை சுலபமானதாக இருக்கவில்லை. வாடகைக்கு ஐந்தாயிரமும் வேலைக்கு போய் வர அறுநூற்றைம்பதும் போக மிச்சமிருந்த சொற்ப பணத்தை மீறிய செலவுகள் ரவியின் கழுத்தை நெருக்கத் துவங்கின. வந்தனாவும் வேலை தேடத் துவங்கியிருந்தாள்.

பெங்களூர் எலெக்ட்ரானிக் சிட்டியில் ஒரு நிறுவனத்தின் கதவு வந்தனாவுக்காக திறந்த போது ரவி அத்தனை சந்தோஷம் அடையவில்லை. வந்தனாவுக்கு இருபதாயிரம் ரூபாய் சம்பளம் என்பது பிரச்சினையா அல்லது அவள் வேலைக்கு போவது பிரச்சினையா என்பதில் ரவிக்கே குழப்பமாகத்தான் இருந்தது. இருந்தாலும் எந்தச் சலனத்தையும் காட்டிக் கொள்ளவில்லை. திருமணம் ஆன புதிதில் ஒன்பது மணிக்கு விடிந்த இவர்களுக்கு இப்பொழுதெல்லாம் ஏழு மணிக்கே விடிந்துவிடுகிறது. உலகம் விரட்டத் துவங்கியது. ஆனாலும் புதுத் திருமண வாழ்க்கை அதற்கேயுரிய கேளிக்கைகளுடனும் கொண்டாட்டங்களுடனும் ஓடிக் கொண்டிருந்த போது வாழ்வின் சந்தோஷங்கள் எப்பொழுதும் நிரந்தரமானதில்லை என்பது இவர்களுக்கும் பொதுவான விதி என்றானது.

ஒரு சனிக்கிழமை மாலை இருவரும் ஃபோரம் மாலுக்கு சென்றிருந்தார்கள். இளைஞர்களால் களை கட்டியிருந்தது. தமிழ்படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் கன்னட படம் ஒன்றை பார்த்துவிட்டு பிரியாணியும் ஐஸ்கிரீமும் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது இதை விட நல்ல வாழ்க்கை யாருடனும் அமைந்திருக்க முடியாது என்று வந்தனா நினைத்துக் கொண்டாள். பில் கொடுத்துவிட்டு மிகச் சந்தோஷமாக வெளியே வந்தார்கள். ஆட்டோவை தவிர்த்துவிட்டு பேருந்தைத் தேடிய போது பேருந்துகளில் கூட்டம் அதிகம் இல்லை. கோரமங்களாவிற்கான பேருந்து வந்தபோது வந்தனா ஏறிவிட்டாள். ஆனால் ரவி தடுமாறியதில் பின் சக்கரத்தில் விழுந்தான். ஒரே ஒரு கணம்தான். இரண்டு கைகளின் மீதும் சக்கரம் ஏறி நின்றது. ரவி கதறிக் கொண்டிருந்தான். அவனை ரத்தமும் சகதியுமாக பார்த்த வந்தனா மூர்ச்சையாகிவிட்டாள். அப்பொழுதும் அவர்களின் உறவினர்கள் ஆதரிக்கவில்லை.

ரவியின் நிறுவனம் மருத்துவமனைச் செலவுகளை ஏற்றுக் கொள்வதாக பெருந்தன்மையுடன் அறிவித்தது. ஆனால் இரண்டு கைகளையும் இழந்தவனால் வேலை செய்ய முடியாது என்றும் அறிவித்துவித்த போது ரவியின் தலையில் இடி இறங்கியது. ஆனால் வந்தனா தெளிவாக இருந்தாள். ரவி பிழைத்தது அவளுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது. முன்பு இருந்ததை விடவும் அவனுக்காக உருகினாள்.

டிவி ரிமோட்டை ஆன் செய்வது போன்ற வேலைகளை செய்வதற்கு ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது. இப்பொழுது பழகிக் கொண்டான். ஆரம்பத்தில் உணவை வந்தனாதான் ஊட்டிவிட்டாள். பிறகு அதையும் ரவியே பழகிக் கொண்டான். இருந்தாலும் ஹிந்து செய்தித்தாளும் சன் நியூஸ் மட்டுமே வாழ்க்கை இல்லை என்று புலம்பத் துவங்கியிருந்தான். காயம் முழுமையாக சரியாகி இருக்கவில்லை. இன்னும் ஆறுமாதங்களுக்கு மேல் ஆகலாம் என்று தெரிவித்திருந்தார்கள். மருத்துவச் செலவுகள் தாறுமாறாக ஆகிக் கொண்டிருந்தது.

வந்தனா பிங்க் நிற சேலையில் வந்திருந்த நேற்று அவளது மேனேஜர் அழைத்தார். அவள் ஒரு மாதம் சீனா போய் வர வேண்டும் என்று சொன்னபோது தனது குடும்பச்சூழல் காரணமாகச் செல்ல முடியாது என்றாள். ப்ரோமோஷன் தருவதாகச் சொன்ன போதும் அவள் மறுத்தாள். ரவியை கவனித்துக் கொள்ள யாருமில்லை என்பது அவளது கவலையாக இருந்தது. ஆனால் ப்ரோமோஷன் தூரத்தில் தெரியும் சாக்லேட்டாக ஈர்த்துக் கொண்டிருந்தது. ரவியை செல்போனில் அழைத்து ஆலோசனை கேட்டபோது சீனா போய் வருவது நல்லதுதான் என்றான். இந்தச் சூழலிலிருந்ந்து வந்தனாவுக்கு தற்காலிக விடுதலை அளிப்பதாக அந்தப் பயணம் அமையும் என்று நம்பினான். தனிப்பட்ட வாழ்க்கை எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு வேலையும் அதில் கிடைக்கும் வெற்றியும் முக்கியம் என்று வந்தனாவும் ஒத்துக் கொண்டாள்/

கிளம்புவதற்கு முன்பாக ரவியை எவ்வளவு கொஞ்ச முடியுமோ அவ்வளவு கொஞ்சினாள். ரவி விமான நிலையம் வரை வந்து வழியனுப்பினான். ஹாங்காங் வழியாக சீனாவின் டாலியன் நகரை அடைந்தாள். விமானத்தில் இருந்து இறங்கி ஹோட்டலுக்கு செல்லும் போதே கடும் குளிரை உணர்ந்தாள். பல நாடுகளில் இருந்து வந்திருந்த அவளது நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஹோட்டல் முழுவதும் விரவியிருந்தார்கள். வந்தனாவின் டைரக்டர் ஜேம்ஸூம் அயர்லாந்தில் இருந்து வந்திருந்தான். முதன் முதலாக இப்பொழுதுதான் வந்தனாவைப் பார்க்கிறான். வந்தனா தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட போது கிட்டத்தட்ட வாயைப் பிளந்துவிட்டான். நீ ஆளை அசத்தும் அழகு என்று அந்தச் சந்திப்பிலேயே வழிந்தான். வந்தனா நன்றி என்று சொல்லி மென்புன்னைகையை உதிர்த்தாள்.

வந்தனாவிற்கு சீனாவில் எப்படிப்பட்ட வேலை இருக்கும் என்பதை மேலோட்டமாகச் சொல்லிவிட்டு அடுத்த நாள் டின்னருக்கு அவளும் வர வேண்டும் என்று கை குலுக்கும் சாக்கில் அழுந்தத் தடவினான். வந்தனா புரிந்து கொண்டாள். ஆனால் அவனை தவிர்க்க இயலவில்லை. சரி என்றாள். ஜேம்ஸ் பெரும் உற்சாகம் அடைந்தான். மனசுக்குள் குதித்துக் கொண்டான். பகலில் அலுவலகம் சென்றவள் மாலையில் குளித்து முடித்து புடைவை அணிந்து கொண்டாள். நீல நிற சிந்தெடிக் புடைவை.

ஜேம்ஸ் டீ ஷர்ட் ஜீன்ஸில் வந்திருந்தான். முதல் பார்வையிலேயே வந்தனாவை ஆழமாக பார்த்தான். ஊடுருவினான் என்றும் கூட சொல்லலாம். ரெஸ்டாரண்டில் கூட்டம் அதிகம் இல்லை. மெல்லிய இசை மங்கலான வெளிச்சத்தில் பரவியிருந்தது. இரண்டு பேருக்கான டேபிளைத் தேடி அமர்ந்து கொண்டார்கள். அருகில் தங்க மீன்கள் நீந்தும் மீன் தொட்டி ஒன்று இருந்தது. ஜேம்ஸ்தான் பேச்சை ஆரம்பித்தான். ஷாம்பெய்ன் அருந்திக் கொண்டே பேசினான். ஊர் பற்றி, வேலை பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்த போது குடும்ப விஷயங்களை அவன் தான் தொடங்கினான். அவன் குடும்பத்தை பற்றிச் சொல்லிவிட்டு வந்தனாவைப் பற்றி கேட்டான். ரவியின் நிலைமையை சொன்ன போது உதடுகள் அழாமல் கண்களில் மட்டும் நீர் சொரிந்தாள். ஜேம்ஸ் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அது வந்தனாவுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

பேச்சு அவளது ப்ரோமோஷன் சம்பள உயர்வு போன்றவற்றையும் தொட்டு வந்த போது போதை அவனது உச்சிக்கு ஏறியிருந்தது. போதையின் உச்சத்தில் “ நீ எனக்கு வேண்டும்” என நேரடியாகக் கேட்டான். வந்தனா அதிர்ச்சியாகவில்லை. உனது ப்ரோமோஷனுக்கான பிரதிபலனாக உன்னை கேட்கவில்லை ஆனால் உன்னை எனக்கு மிகப் பிடித்திருக்கிறது என்ற போது குழறினான். அவள் உடன்படவில்லை என்றாலும் தான் எதுவும் செய்யப்போவதில்லை எனினும் தன்னால் அவளை மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டு போக முடியும் என்று வற்புறுத்தினான். வந்தனா அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளது கைகளை ஜேம்ஸ் மெல்ல பற்றினான். அவனிடமிருந்து கைகளை விலக்க முயற்சித்தாள். ஜேம்ஸ் உருகினான். அவனது விருப்பம் அவனது பற்றுதலில் தெரிந்தது. ரவியின் முகம் நினைவில் வருவதை வந்தனாவால் தவிர்க்க முடியவில்லை. காதோரமாக நெருங்கி வந்தவன் “ப்ளீஸ்” என்ற போது அவனது கைகள் அவளது தொடை மீது இருந்தது. இப்பொழுது அவள் மறுப்பேதும் சொல்லவில்லை.

– ஆகஸ்ட் 1, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *