கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுபமங்களா
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 10, 2021
பார்வையிட்டோர்: 6,181 
 
 

வேலை கெடைச்சா விடிஞ்சாப் பலன்னு நெறையப் பேரு நெனைக்கிறாங்க. முக்கியமா லேடீஸ். நிஜமா அது? அப்படி எல்லாம் ஒரு மண்ணுமில்லை. எனக்கும்தான் வேலை கெடைச்சது. சங்கம் பல்கலைக் கழகத்தின் பண்பாட்டு மையத்திலே மொழி பெயர்ப்பாளர். போதாக் குறைக்கு இருபத்தியேழு வயசாகியும் சலிக்காம பார்ட்-டைம்லே பி.எச்டி வேறே பண்ணிகிட்டிருக்கேன். இருந்தும் என்ன? நிம்மதியாவா இருக்கேன்… இல்லியே…சரியாச் சொல்லணுமின்னா வேலை கெடைச்சதிலே இருந்துதான் நிம்மதி இல்லாம இருக்கிறேன்னு சொல்லணும். அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்த அன்னிக்கு அம்மாவெல்லாம் அழுதே அழுதுட்டாங்க.

பின்னே என்ன? தருமபுரி மாவட்டத்துலே இருந்து மெட்ராசுக்கு பொண்ணைத் தன்னந்தனியா அனுப்பணுமுன்னா அவங்களுக்கு கவலையா இருக்காதா? பாப்பாரப்பட்டி எங்கே? மாதவரம் எங்கே ?

பாப்பாரப்பட்டிதான் எங்க ஊர். ரொம்ப அழகான ஊர். என்னைக் கேட்டா உலகத்துலேயே ரொம்ப அழகான இடம் தருமபுரி மாவட்டம்தான்னு சொல்வேன். ஞானியின் அமைதியும் தாயின் அழகும் கலந்த ஊர். அதிலும் எங்க கிராமம் ரொம்ப அழகு. வெளி உலகத்தோட அழுக்குகளை நெருங்க விடக்கூடாதுன்னு இயற்கை அமைச்ச காம்பவுண்டுச் சுவர் மாதிரி, ஊரைச் சுத்தி வளையம் போட்டிருக்கற மலை. மேகமே இல்லாத நீல ஆகாயத்தைப் பறிச்சுதுண்டு போட்டு நட்டு வச்ச மாதிரி இருக்கும். பாதுகாப்பாக் குவிஞ்ச இரண்டு கைகளுக்குள்ளே எரியற தீபம் மாதிரி மலைகளுக்கு நடுவே இருக்கும் எங்க ஊர். மலையே அழகு தான். எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத அழகு. கருக்கலில், விடியலில், இளங்காலையில், உச்சி வெயிலில், வெள்ளைப் பொழுதில் அத்திச் சிவப்பில், மாலை மயங்கும் பொழுதில், இருள் சூழ்ந்த வேளையில் என்று ஒவ்வொரு சமயத்தில் வேறு வேறு அழகைக் காட்டியபடி கம்பீரமா நிற்கிற மலை. பச்சை அலை ததும்பித் துடிக்கிற வயல்கள். ஜிலேபித் துண்டுகளை உடைத்து எறிந்தது போன்ற கனகாம்பரப் பூக்கள் கொட்டிக் கிடக்கிற பூந்தோட்டங்கள். பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மாதிரி வரிசை வரிசையாய் நிற்கிற பாக்கும், தென்னையும். தோகை விரித்து நிற்கிற மயில்களாய் சாலையோரத்து மரங்கள். பூமியே பூரித்து பொன்னாய்க் குமிழியிட்டது மாதிரித் தோற்றம் காட்டும் வைக்கோற் போர்கள். அளவான மழை. சுகமான காற்று. இங்கிதமான சீதோஷ்ண நிலை.

“சரி! இப்ப அதுக்கு என்ன பண்றது? நம்ப வீட்டுப் புழக்கடைத் தோட்டத்திலே உனக்கு ஆபீஸ் வச்சுத் தருமா அரசாங்கம்?” அப்பா, எரிந்து விழுந்தார்.

“அதுக்குன்னு தங்க வசதியில்லாம, நிக்க நிழலில்லாம முன்னே பின்னே போய் அறியாத இடத்துக்குப் போய் பொண்ணு இருக்கப் போறாளேங்கற வருத்தம் இருக்காதா?” அம்மா, பதிலுக்குச் சீறினாள்.

அது தானே! பெண்கள் தங்கள் காலிலேயே நிற்க வேண்டும் அது இதுன்னு சொல்றாங்களே. நிக்கலாம். ஆனா காலை ஊணிக்கிட்டு நிற்க நிலம் வேணுமே. நிழல் வேணுமே.

சென்னையில் நான் நிற்பதற்கான நிழலை சித்தி பெண் கலாமணியின் வீட்டில் கண்டு பிடித்தார் அப்பா.

கலாவின் புருஷனுக்கு உள்ளூர்க் கல்லூரியில் வேலை. குழந்தைகள் இல்லை முதலில் கொஞ்ச நாட்களுக்கு எல்லாம் சரியாகத்தான் இருந்தது. அப்புறம் தான் குழப்பம் ஆரம்பித்தது.

Thilagavathi - Nizhal - Dec 1991 - 2picஎல்லாப் பெண் திலகங்களையும், குடும்ப விளக்குகளையும் போல கலாவும், கணவனை, எனது மாயவலையில் விழாமல் காப்பாற்றுகிற அபலைப் பெண் மாதிரி நடந்து கொள்ள ஆரம்பித்தாள். அவளுடைய தோற்றப் பொலிவின்மையே அவளுடைய தன்னம்பிக்கைக் குறைவுக்கும், இந்த மாதிரி நடத்தைக்கும் காரணமாக இருந்திருக்கலாம். இத்தனைக்கும் நான் ஒன்றும் பெரிய அழகியல்ல. இவ்வளவுக்கும் கலாவின் புருஷனை எனக்கு அறவே பிடிக்காது. மெகா சைஸில் ஒரு பல்லி, குச்சி குச்சியான இரண்டு கால்களுடன் நடமாடுவது போல அவன் இருப்பான். அது கூடப் பரவாயில்லை. தமிழகமெங்கும் நடைபெறும் பட்டி மன்றங்களில் கலந்து கொண்டு விவஸ்தையற்ற தலைப்புகளில் சொற்பொழிவாற்றுவான். முகத்தை அஷ்டகோணலாக்கி, கோமாளித்தனமாய் கையையும் காலையும் உதறிச் சேஷ்டைகள் பண்ணிக் கொண்டு, தொண்டை நரம்புகள் புடைத்துத் தெறிக்கிற மாதிரி மைக் பற்றிய பிரக்ஞையே இல்லாதவனாய் ‘வாள் வாள்’ என்று கத்துவான். ஒரே மாதிரி ஜோக்குகள், சொற் பிரயோகங்கள், கட்டுமானங்கள் என்று அறுத்துத் தள்ளுவான். அவைகளை அப்போதுதான் முதல் தடவையாகக் கேட்கிற பள்ளிச் சிறுமி மாதிரி கலா கலகலவென்று சிரித்துக் கொட்டுவாள். தகர டப்பாவில் இருந்து இரும்பு வில்லைகளாய்ப் பொய்யே உதிர்கிற மாதிரி இருக்கும். எனக்குப் பற்றிக்கொண்டு வரும். படித்தவன், படிக்க வைக்கிறவன் அறிவுப் பிழம்பாக இருக்க வேண்டாமா? ஞானச் சுடராக இருக்க வேண்டாமா? இப்படிக் கோமாளித் தனமா பண்ணுவது? என்ன பண்ணுவது? முட்டாள்தனமான ஜோக்குகள், அபத்தமான நாடகங்கள், சகிக்க முடியாத சினிமாக்காமெடி இவைகளை திணித்துத் திணித்து ஒருவிதமான கோமாளிக் கலாசாரத்தைத் தானே இந்தப் பொறுப்பற்றவர்கள் இந்த மண்ணில் வளர்த்து வைத்திருக்கிறார்கள்? இதை எல்லாம் நினைக்க நினைக்க எனக்கு எரிச்சல் மண்டும். ஆத்திரம் பீரிட்டுக் கொண்டு வரும். புருஷன் அடிக்கிற ஜோக்குக்கு நான் சிரிக்கவில்லை என்ற கலாவுக்கு என் மேல் கோபம் வரும். சிரிச்சாலும் அவ புருஷன் பேச்சை ரொம்ப ரசிச்சிட்டேனோன்னு கோபம் வரும்னு வச்சுக்குங்க. மொத்தத்திலே, நான் ஆம்பளைங்களோடே சண்டை போட்டாலும் போடுவேனே இல்லாமல் ஆம்பளைக்காக சண்டை போடமாட்டேன். அதுவும் இந்த மாதிரி ஒரு நடமாடும் பல்லிக்காகன்னு சத்தம் போட்டு சொல்லிடணுமுங்கற மாதிரியான நிலைமைகளை கலா உண்டு பண்ண ஆரம்பிச்சா.

ஆபீஸ் புறப்படற நேரத்துக்கு சமையல் ஆகி இருக்காது. டிபன் செய்து தர மாட்டா. ஒருநாள், அடைக்கு பருப்பை நனைச்சிட்டு பேசாம படுத்திருந்தா. சரின்னு நானே அரைச்சு அடை சுட்டுக்கலாம்னு அரைச்சேன். உடனே, ‘நீ எப்படி அதைத் தொடலாம். இன்னிக்கு தான் விரதம். இப்ப நீ தொட்டு அரைச்ச மாவிலே செஞ்ச அடையை நான் எப்படி சாப்பிடுவேன்’னு சத்தம் போட்டா. ‘அப்ப, உனக்கு மட்டும் கொஞ்சூண்டு பருப்பை ஊற வச்சி ஒன்னொரு தடவை அரைச்சுக்கு’ வேன்னு சொன்னேன். ‘இப்பவே மளிகைக்கடை பில் பட்ஜெட்டுக்கு எட்டாம் தாண்டிக் குதிக்குதாம். அப்படியெல்லாம் ஒரே நாளிலே ரெண்டு தடவை அடைக்கு நனைக்க மாட்டாளாம். இவ்வளவு நடந்ததுக்கு அப்புறம் எனக்கு அன்னிக்கு எதையுமே சாப்பிட பிடிக்கலை. பட்டினி கெடந்தேன். அரைச்சமாவு புளிச்சு பாழாப் போயிருக்கு மேன்னு வேற கவலை. சாயங்காலமா வீட்டுக்க வந்து பார்த்தா, அடை மாவு காலியாகி இருந்திச்சி. இப்படி ஏதாவது தொடர்ந்து நடந்தது. புறப்படற நேரத்துக்கு சீப்பு கிடைக்காது. பௌடர் டப்பா கிடைக்காது. ஒரு சமயத்துலே அதுக்கு மேலே பொறுத்துக்கவே முடியாதுங்கறாப்பல ஆயிடிச்சி. இங்கே கொடுக்கற பணத்தை ஒரு ஹாஸ்டல்லே கொடுக்கலாம்னு நெனச்சு கூட வேலை பார்க்கிறவங்க மூலமா விசாரிச்சி எங்கேயோ ஒரு வொர்க்கிங் வுமன்ஸ் ஹாஸ்டலிலே இடம் புடிச்சேன்.

பேருதான் ஹாஸ்டல். உண்மையிலே அது ஒரு பழைய காலத்து வீடு, மூணு மாடிக் கட்டிடம். நடுவிலே சுவரு வச்சு, படல் கட்டி ரூமுன்னு ஒரு பத்து தேத்தி வச்சிருந்தாங்க. ஒவ்வொரு ரூம்லேயும் நாலு பேரு. தவிர வராந்தாவை தடுத்து டார்மிட்டரிகள்னு ஆஸ்பத்திரி வார்டு மாதிரி கட்டில்களை வரிசையா போட்டிருந்தாங்க. எப்பவும் குளியல் அறைக்கும். டாய்லட்டுக்கும் ரஷ். எல்லோருமே கிட்டத்தட்ட ஒரே நேரத்துலே ரெடியாகிக் கிளம்பியாகணுமே. விடுதி முழுசும் ஒவ்வொரு அங்குலமும் சுமக்க முடிஞ்ச அழுக்கையும், அசுத்தத்தையும் சுமந்துகிட்டு நிக்கும். சாப்பாடோ கேக்கவே வேண்டியதில்லை. தண்ணியைப் பயன்படுத்தி தண்ணியை விட அடர்த்தி குறைஞ்ச திரவமா ஒரு விதமான சட்னியை எப்படித்தான் இவங்களாலே தயாரிக்க முடியுதுன்னு யாராவது கண்டு பிடிச்சாங்கன்னா இந்தியாவுக்கு இன்னொரு நோபல் பிரைஸ் கூட கிடைக்கலாம். வத்தக் குழம்பு மட்டும் சுமாரா இருக்கும். மத்தபடி மற்ற எல்லா அயிட்டமும் ஒரே மாதிரி இருக்கும்: டீக்கும் காப்பிக்கும் கூட வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாது. பாத்திரத்துக்கு பக்கத்துலே நிக்கற ஹெல்ப்பிங் கேர்ல்சை கேட்டுத் தெரிஞ்சுக்கணும். எப்படியோ, மல்லுக்கட்டி சாப்பாட்டை உள்ளே தள்ளினாலும், சாப்பிட்ட தட்டை கழுவப் போற இடத்திலே இருந்து கிளம்பற சகிக்க முடியாத நாத்தம் அதை அப்படியே வெளியே கொண்டு வந்துடும். அவ்வளவு குப்பை… தட்டிலே மிஞ்சினதைக் கொட்டிக்கொட்டி அது அழுகி அழுதி அப்படியொரு குடலைப் புரட்டற நாத்தம். கால் வைக்கற இடம், கண் படற எடமெல்லாம் பாசி மழமழன்னு கரும்பச்சையா படர்ந்து தொங்கும். தட்டைக்கழுவி எடுத்துகிட்டு வெளியே வர்ர வரைக்கும் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு கும்பகம் பண்ண கத்து கிட்டேன்.

Thilagavathi - Nizhal - Dec 1991 - 3picஆனா, கூட தங்கி இருந்தவங்களுடைய கொட்டத்தைத்தான் சகிக்க முடியலை. மைக்ரோ பயாலஜி படிச்சட்டு பாங்க்லே வேலை பார்த்துகிட்டிருந்தா ஒருத்தி. இசைக் கல்லூரியில் படிச்சவ போலீஸ்லே இருந்தா வரலாறு படிச்சவ ஏதோ ஒரு சின்ன ஆஸ்பத்திரியிலே ரிசப்ஷனிஸ்டா இருந்தா. ஒருத்தியும் புஸ்தகம் தொட்டு நான் பார்த்தில்லே. எனக்கு மட்டும் மாணவப் பருவத்தின் விஸ்தரிப்பு மாதிரி எப்பவும் படிச்சுகிட்டே இருக்கிற மாதிரி வேலை வாய்ச்சிடுச்சி. ஊரிலே தமிழ் மீடியத்துல படிச்சவ தானே நானு. வார்த்தைக்கு வார்த்தை அகராதியைப் புரட்டித் தான் அர்த்தம் கண்டு பிடிக்க வேண்டி இருந்தது. இதனால ரொம்ப நிதானமா தான் வேலை நடந்தது. சாயங்காலம் ரூமுக்கு வந்த பின்னாலேயும் வேலையைத் தொடர வேண்டி இருந்தது. இது மத்தவங்களுக்கு கிண்டலுக்குரிய விஷயமாப் போயிடிச்சி.

மத்தவங்க பகலெல்லாம் வேலை பார்த்த சலிப்பு தீர ரேடியோவும். டேப்ரிகார்டரும், டி.வி.யும் அலற விட்டுகிட்டிருப்பாங்க. நடிகர்களை தீவிரமாக உபாசிக்கிறவங்க, காதல் வேதனை வயப்பட்டவங்க. பாய் ஃபிரண்ட்ஸ் பிரதாபங்களை அலசற வங்கன்னு சளசளன்னு பேசறவங்களுக்கு எந்நேரமும் புஸ்தகமும் கையுமா இருக்கற நானு பைத்தியக்காரி மாதிரி தானே தெரிவேன்?

போதாக்குறைக்கு வார்டன் வேறே எங்க கற்புக்கு காவலாளியா தன்னை நியமிச்சுகிட்டவங்க மாதிரி மணிக்கணக்கு நிமிஷக்கணக்கு பார்த்து எங்களை உள்ளே விடுவாங்க. ராத்திரி பூரா வெளியே தங்கறவங்க தப்பிச்சாலும் தப்பலாம். என்னை மாதிரி போக்கிடமே இல்லாதவங்க பஸ் கிடைக்கலை. வேலை முடியலைன்னு நிஜமான காரணத்தினால் தாமதமா வந்தாலும் இலவசமா ஒழுக்கம் பற்றி உபன்யாசத்தை உச்சகுரலிலே கத்தி புண்ணாக்குவாங்க.

கட்டில் முன்தரையை வாசலா பாவிச்சு கோலம் போட்டு ஸ்லோகம் சொல்லி தூக்கத்தைக் கெடுப்பா ஒருத்தி. சாம்பிராணி போடறேன்னு சமையல் ரூம்லே இருந்து நெருப்புக் கட்டியைக் கொண்டாந்து ஹாஸ்டலுக்கே தீ வைக்கப் பார்த்தா ஒருத்தி, இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் வேதவல்லி மாதிரி ஒரு க்ரூப். கஞ்சி போடாத வாயில் புடவை. மேலு தட்டில் கருக்கோடற மீசை. பக்கம் வர விடாத வேர்வை நாத்தம். நகை நட்டு திருகாணிகூட இருக்காது. பெண்கள் போகப் பொருள் இல்லைன்னு காட்டறாங்களாம். அதுக்குன்னு இப்படியா நாறணும்?

எங்கிட்டே வேறே வந்து. ‘என்ன நீங்க வித்தியாசமானவங்களா இருப்பீங்கன்னு பார்த்தேன். ஏமாத்திட்டீங்களே’ன்னு அடுக்கினா, ‘வித்தியாசமா இருக்கணுமுங்கறதுதான் வித்தியாசமே இல்லாம எல்லாரும் நெனக்கற விஷயம்மான்னேன். வெடுக்குன்னு மொறைச்சா. “மத்தவங்க அலங்காரம் பண்ணிகிட்டு ஆம்பளைங்க கவனத்தை தங்க பக்கம் திருப்பப் பார்க்கறாங்கன்னு சொல்றீங்க. அந்த மாதிரி அலங்காரங்க ஆம்பளைங்க கண்ணுக்கு பழகிடிச்சி அதனாலே இப்படி இருந்து அதிகப்படியான கவனத்தை நீங்க தான் உங்க மேலே தருப்பிக்கறீங்க”ன்னேன். “ஏன் சாதாரணமா எல்லோரையும் போல இருந்தா என்ன”ன்னேன். அவ்வளவுதான் பெரிய விரோதமாயிடுச்சி.

மொத்தத்திலே ஹாஸ்டல்லே இருக்கறதே இனிதாங்காதுன்னு ஆனப்புறம் ஒரு மாமி வீட்ல பேயிங் கெஸ்ட்டாப் போனேன். அங்க மட்டும் என்ன நிம்மதி வாழ்ந்திச்சி? அவங்களுக்குப் பசிக்கற நேரம் நாம் சாப்பிடணும். அவங்களுக்கு தூக்கம் வர்ரப்ப நல்ல விளக்கை அணைக்கணும். அவங்க வீட்டு விசேஷத்துக்கும், பிறந்தநாளுக்கும் நாம்ப முன்னால நிக்கனும்.

இங்கேதான் இப்பிடின்னா வேலை பார்க்கற எடமாவது நிம்மதியா இருக்குதா? அங்கேயும் ஆயிரம் தொல்லை. நம்பளுக்கு இருக்கிற கஷ்டங்க பத்தாதுன்னு சுத்தி இருக்கற வங்களோட ஓயாத புலம்பல். மாமியார்க் கொடுமையைப் பேசி கண்ணைக் கசக்குவா ஒருத்தி, வீட்டிலேயும் வேலை பார்த்துட்டு இங்கேயும் வேலை பார்க்க வேண்டியிருக்கேன்னு வேதனைப்பட்டுக்குவா இன்னொருத்தி. சம்பளத்தை வாங்கிட்டுப் போய் அப்படியே புருஷன் கையிலே தந்துட வேண்டியிருக்குதாம். அம்மா வீட்டுக்கு நூறு ரூபா கூட தர முடியலியேன்னு அழுவா ஒருத்தி…இன்ஸ்டால்மெண்ட்டுலே தனக்கு வெளிநாட்டுச் சேலையும் வீட்டு பொருள்கள் கடனிலே பொருள் வாங்கித்தந்துட்டு கடன்காரனை நினைச்சுக் கலங்குவா ஒருத்தி, வேலைக்குப் போற கர்வமான்னு கேட்டுக்கேட்டு அடிச்சு நொறுக்கற புருஷன் கிட்டே வீட்டோட இருக்கறவங்களை விட அதிக பணிவோடு நடந்துக்க வேண்டியிருக்கறதை தொனச்சு சலிச்சுக்குவா ஒருத்தி. ‘புருஷன் மட்டும் என்ன புள்ளைங்களும் அப்படித்தான் இருக்குது. பக்கத்து வீட்டு ஆண்ட்டி மாதிரி நீ ஏன் மத்தியான சாப்பாட்டை எடுத்துகிட்டு வந்து தர மாட்டேங்கற’ன்னு கேட்பதாகச் சொல்லிக் கலங்குவா இன்னொருத்தி, இதெல்லாம் போக கூட வேலை பார்க்கறவங்களோட சில்மிஷங்கள் வேறே. கேட்டுக் கேட்டு மனசு நொந்து போயிடும் எனக்கு. நம்ப பொண்ணுங்களுக்கு திடமும், நெஞ்சுரப்பும் போதாது. தெளிவு போதாது. தங்களுடைய சந்தோஷம் எதுன்னு தெரிஞ்சுக்க அறிவு போதாது. அதை அடைய தைரியம் போதாது. ஆகவே எல்லாம் பிரச்சினை.

என்னவோ நமக்குன்னு தனியா ஒரு வீடு இருந்தா, வேலை முடிஞ்சதா போய் விழுந்தமான்னு இருக்கும். நானும் வீடு தேடித்தேடி அலுத்துட்டேன். ஆயிரம் கேள்விங்க. தன்னந்தனியா இருக்கற பொண்ணுக்கு வீடு விடமாட்டாங்களாம். குடித்தனக்காரங்களுக்குத்தான் விடுவாங்களாம். என்னை மாதிரி பொண்ணுங்களுக்கு வீடு விட்டா சிக்கல் வருமாம்.

சில சமயங்களிலே, பேசாம வேலையே வேண்டாமுன்னு ஊருக்கே போயிடலாமான்னு தோணுது. ஆனா, இப்ப வீட்டிலே அவங்களும் நான் இல்லாம இருக்கற வாழ்க்கைக்குப் பழகிட்டாங்க. ‘டி.வி. வாங்கணும். கூட கொஞ்சம்பணம் அனுப்பு’ன்னு அம்மா எழுதியிருக்கு. போன தடவை போய் ஒரு வாரம் தங்கினதுக்கே நான் வந்தா அதிகமா செலவாவுதுன்னு அண்ணி மூஞ்சை தூக்கி வச்சிகிச்சி. ஆக, இப்ப அம்மா வீடும் எனக்கும் அந்நியமா ஆயிடுச்சி.

தெருவுக்குத் தெரு பள்ளிக்கூடம் வந்தாப்பல என்னை மாதிரி பொண்ணுங்களுக்கு வசதியா, நிறைய நிறைய இடங்கள் இருந்தா எவ்வளவு சௌகரியமா இருக்கும்னு நெனச்சுக்கறேன்.

வேலைக்கு வந்ததுலே எத்தனை அசௌகரியங்க பாருங்க. ஆனா, இவ்வளவையும் வச்சுகிட்டு வேலை தேடித்தானே அலையறோம். ஒரு வேளை வேலை இல்லாததனால ஏற்படக்கூடிய அசௌகரியங்க இதையெல்லாம் விட பெரிசோ என்னவோ?

– டிசம்பர் 1991

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *