நிலமென்னும் நல்லாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 8,828 
 

“காணி நிலம்னா சுமார் எத்தனை சதுர அடி இருக்கும் மிஸ்டர் ராம்நாத்?” என்றார் பரமேஸ்வரன். இப்படி ஒரு திடீர்க் கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத ராம்நாத் கொஞ்சம் தடுமாறித்தான் போனார்.

“ஸாரி. தெரியலியே ஸார், எதுக்குக் கேட்குறீங்க? நான் வேணும்னா நெட்ல தேடிப் பார்த்துச் சொல்லட்டுமா?“ என்றார் பணிவுடன்.. “நோ நோ. பரவாயில்லை விடுங்க; சும்மாதான் கேட்டேன். நம்ம பாரதியார், பராசக்தி கிட்ட காணிநிலந்தான் கேட்டார். கடைசி வரைக்கும் அவருக்கு அது கை கூடவே இல்ல. ஆனால் அந்த மகா கவிக்கு சாத்தியப்படாதது, நாம இப்பத் தேடிப்போற மிஸ்டர் காளியப்பனுக்கு சாத்தியமாகி இருக்கு பார்த்தீங்களா? அதான் கேட்டேன்” என்றார் பரமேஸ்வரன். “ஆமாம் ஸார்.” என்று ஆமோதித்து சிரித்தார் ராம்நாத்.

பரமேஸ்வரன் டெல்லியைத் தலைமை இடமாகக் கொண்டு, சென்னை, கல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் என்று அத்தனை மெட்ரோ நகரங்களிலும் கிளைபரப்பி விரிந்திருக்கும் கே.ஜே.எம். என்னும் ரியல் எஸ்டேட் கம்பெனியின் நிர்வாக இயக்குனர். ராம்நாத் அதே நிறுவனத்தின் சென்னைக் கிளைக்கு ரீஜினல் மேனேஜர். பரமேஸ்வரன் டெல்லியிலிருந்து கிளம்பி வந்த காரியத்தையே மறந்து காளியப்பனின் தோப்பைப் பார்த்து மலைத்துப் போய் நின்றார்.

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அடர்ந்த வனம் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். அதனுள் ஓர் வீடிருப்பது யாருக்கும் புலப்படாது. வீடென்று கூட அதை வர்ணிக்க முடியாது. வனவாச இராமனின் பர்ணசாலை மாதிரி இயற்கை எழில் பொங்க எளிமையாய் அமைக்கப்பட்டிருந்தது அந்த கான்கிரீட் குடில். மொட்டை மாடியில் ஒரு தென்னோலை பந்தலும் வேயப்பட்டிருந்தது. குடிலைச் சுற்றிலும் தென்னை,மா,பலா,வாழை,கொய்யா,எலுமிச்சை,மாதுளை என்று விதவிதமான மரங்களும், கண்ணுக்குக் குளிர்ச்சியாய் பார்க்கப் பார்க்க பரவசமூட்டும் வண்ண மலர்த் தோட்டங்களும் அடர்ந்திருந்தன. பறவைகளின் கலவையான ஒலி சங்கீதமாய் வெளியெங்கும் வழிந்து கொண்டிருந்தது.

சுற்றிலும் இருக்கிற நிலங்கள் எல்லாம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கோரைப் புல்லும், காட்டுச் செடிகளும், முட்புதர்களுமாய் அடர்ந்து மொத்த நிலமும் பாழ்பட்டுக் கிடக்க, ஒரு துண்டு நிலம் மட்டும் அடையாளத்திற்காக பத்தடிக்கொரு கல்தூணும் அவற்றை இணைத்துக் கட்டிய முட்கம்பி வேலியுமாய் பிரிக்கப்பட்டு, உள்ளே பச்சைப் பசேலென்று ஒரு சொர்க்கத்தையே சிருஷ்டித்து வைத்தது போலிருந்தது!

கோரை மண்டிக் கிடந்த நிலங்களிலும் கூட ஐம்பது அறுபதடிக்கு ஒரு கிணறு கெத்கெத்தென்று தண்ணீர் நிரம்பிக் கிடந்தன. எல்லாமே நஞ்சை நிலங்களாயிருந்து இப்போது சில வருஷங்களாக விவசாயம் பண்ணப்படாததால் கரடு மண்டிக் கிடந்தது துல்லியமாய்ப் புரிந்தது. ”இதெல்லாம் அசலான விவசாய நிலங்களா இருந்துருக்கும் போலருக்கே…எப்படி அவங்க நமக்கு வித்தாங்க?” ஆச்சர்யமாய்க் கேட்டார் பரமேஸ்வரன்.

“ரொம்ப காலத்துக்கு முன்னாலயே விவசாயம் நொடிச்சுப் போயிருச்சு ஸார்; அதான் நமக்கு வசதியாப் போயிருச்சு… இந்தப் பகுதியில குவாரிகள் வேற பெருகி விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காமப் போகவும் எல்லோரும் நிலங்களத் தரிசாத் தான் போட்டுருந்தாங்க; அதான் நாம புரோக்கர்கள் மூலமா நிலம் வாங்குறது தெரிஞ்சதும் கிடைச்சவரைக்கும் லாபமின்னு குடுத்துட்டாங்க..விவசாய நிலங்கள வீடுகட்டுற மனைகளா மாத்துறதுக்கு, அரசியல் வாதிங்களையும், அரசாங்க அதிகாரிகளயும் சரிக்கட்டுறதுக்குத் தான் ரொம்ப செலவழிக்க வேண்டி இருந்துச்சு ஸார்..” என்றார் ராம்நாத்.

“உங்களின் முயற்சிகளையும் அதற்கான உழைப்பையும் நானறிவேன் ராம்நாத்.. இந்த நெலத்தையும் வாங்கிப் போட்டிருந்தேள்ன்னா நான் வந்துருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காது பரவாயில்ல; பேரனுக்கு பூணூல் கல்யாணம் வச்சிருக்கு இத முடிச்சிட்டு சொந்த ஊர்ப்பக்கம் அப்படியே தலையக் காட்டிட்டுப் போயிடணும்”

“எவ்வளவோ பேசிப் பார்த்துட்டோம் ஸார்; இந்த நெலத்துக்காரன் எதுக்குமே மசிய மாட்டேங்குறான்….புரோக்கர்கள் எஸ்.ஆர்.வோ. மூலம் போலியா பவர் ஆவணம் தயாரிச்சு இங்க இருக்கவங்கள வெளியேத்திடலாமான்னு கூடக் கேட்டாங்க; ஆனா நீங்க தான் அது சரியா வராதுன்னு சொல்லீட்டீங்களே! இந்த ஏரியா கவுன்சிலரே நம்ம புரோக்கர் தான்; அவர் மூலமா வேணுமின்னா ஏதாவது பண்ணீடலாமா ஸார்..” “நோ..நோ. நம்மளோடது கார்ப்பரேட் கம்பெனி.. அரசியல்வாதிங்க செய்றது மாதிரி அப்படியெல்லாம் பண்ண முடியாது.. விஷயம் வெளியில வந்துச்சுன்னா நம்ம இன்வெஸ்டர்ஸ் எல்லாம் நம்பிக்கை இழந்துடுவாங்க; நான் அவர்கிட்ட பேசிப் பாக்குறேன்; இன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கு.. என்றார்.

சென்னையிலிருந்து சுமார் 40கி.மீ. தொலைவில் வண்டலூர் – கேளம்பாக்கம் நெடுஞ்சாலையில் கொஞ்சம் உள்ளடங்கி பரந்து விரிந்து கிடக்கிறது சுமார் முன்னூறு ஏக்கர் நிலம். சுற்றிலுமிருக்கிற நிலங்களையெல்லாம் கே.ஜே.எம். ஏற்கெனவே காசுகொடுத்து கையகப்படுத்தி விட்டது. அடுக்குமாடி வீடுகளும், தகவல் தொழிற்நுட்பப் பூங்காக்களுமாய் வானத்தை எட்டிப் பிடிப்பது மாதிரியான உயர உயரமான கட்டிடங்களாக நிர்மாணிக்க உத்தேசித்திருக்கிறார்கள். சிங்கப்பூரிலிலிருந்தும், லண்டனிலிருந்தும் பெரிய பெரிய ஆர்க்கிடெக்ட் ஜாம்பவான்கள் எல்லாம் வரப் போகிறார்கள். இந்தப் பகுதியின் முகமே மாறப் போகிறது. அதற்கு பெரிய முட்டுக்கட்டையாக இருப்பது காளியப்பன் தான். அவர் தன்னுடைய நிலத்தை கே.ஜே.எம். கம்பெனிக்கு விற்க பிடிவாதமாய் மறுத்துக் கொண்டிருக்கிறார். பரமேஸ்வரன் அவரைச் சமாதானப் படுத்தி நிலத்தை வாங்குவதற்காகத் தான் டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்திருக்கிறார்.

காளியப்பனின் கான்கிரீட் குடிலின் தரைத்தளம் மிக உயரத்தில் ஏழெட்டுப் படிகளுடன் அமைக்கப்பட்டிருந்தது. விளை நிலத்திற்குள் வீடிருந்ததால் வெள்ள நாட்களில் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து விடாமலிருப்பதற்காக இவ்வளவு உயரமென்று புரிந்தது. படியேறி இருவரும் மேலே போனார்கள். வாசற்கதவு திறந்து தான் இருந்தது. ஆனாலும் ஆட்கள் யாரும் தென்படவில்லை. அழைப்பு மணியை அழுத்தலாமென்றால் அப்படி ஒரு ஏற்பாடு இருப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை. சத்தங் கொடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, தூக்கிச் சொருகிய சேலையுடன் பரபரப்பாய் அலைந்து கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, இவர்களைப் பார்த்ததும் சேலையைக் கீழே இறக்கி விட்டு அருகில் வந்து, “யாரு வேணுங்க.” என்றாள் பணிவுடன்.

“மிஸ்டர் காளியப்பன்” என்று ராம்நாத் இழுத்தார். ராம்நாத்தை ஏற்கெனவே பார்த்திருந்த ஞாபகம் அவளுக்குள் நிழலாட, “ஓ நீங்களா? வாங்க ஸார்.” என்றாள். இவர்கள் உள்ளே போனார்கள். சின்ன வரவேற்பறை; மிகச் சுத்தமாக இருந்தது. சுவரில் ஒரு பெரிய போட்டோ நெற்றியில் எப்போதும் எரியும் எலக்ட்ரிக் லைட்டுடனும் ஜவ்வாது மாலையுடனுமிருந்தது. போட்டாவிலிருந்தவரின் நெற்றியில் கண்ணாடிக்கு மேல் குங்குமம் அப்பிக் காய்ந்து போயிருந்தது. அவர் இப்போது உயிருடன் இல்லை என்பதற்கான சகல அறிகுறிகளும் தென்பட்டன.

அவசரமாய் உள்ளே ஓடிப்போய் இரண்டு மூங்கில் சேர்களைக் கொண்டு வந்து போட்டு உட்காரச் சொன்னாள். அப்புறம் உள்ளறை நோக்கி குரல் கொடுத்தாள். “டேய் சின்னத் தம்பி; இங்க வாடா” ஏழு அல்லது எட்டு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் அரைக்கால் சட்டை மட்டும் அணிந்து மேலே ஒன்றும் போடாமல் “என்னம்மா வேனும் உனக்கு” என்று எரிச்சல் பொங்கும் குரலுடன் வெளியே வந்தான். இவர்களைப் பார்த்ததும் குரலைத் தாழ்த்தி “என்னம்மா” என்று குசுகுசுத்தான். “நீ வெரசா ஓடிப் போய் முந்தி வந்திருந்த கம்பெனி அதிகாரிங்க வந்துருக்காங்கன்னு சொல்லி அப்பச்சிய கையோட கூட்டிட்டு வா.” என்று பையனை விரட்டினாள்.

“பரவாயில்லம்மா; அவரு எங்க இருப்பாருன்னு சொல்லுங்க நாங்களே போய்ப் பார்த்துக்குறோம்” என்றார் பரமேஸ்வரன். அவள் வாசலுக்காக வந்து தூரமாய் விரல் சுட்டி, “அதோ அங்க பம்பு செட் ரூம் இருக்கு பாருங்க; அதுக்குப் பக்கத்துல இருக்க வேப்ப மரத்து நெழல்ல தான் உட்கார்ந்துருப்பாரு.” என்றவள், “கொஞ்சம் இருங்க; காப்பித்தண்ணி வச்சுத் தர்றேன், குடிச்சுட்டுப் போங்க..”என்றாள்.

“அதெல்லாம் வேணாம்மா. நாங்க ஆபீஸுலருந்து கெளம்பும் போது குடிச்சுட்டுத்தான் வந்தோம்..” என்றபடி இருவரும் கீழே இறங்கி நடக்கத் தொடங்கினார்கள். நிலம் பசுமை போர்த்தி விஸ்தாரமாய் விரிந்து கிடந்தது. அங்கங்கே பருத்தியும், கடலையும், கத்தரியும், வெண்டையும், மல்லிச் செடியும் பாத்தி பாத்தியாய் பிரிக்கப்பட்டு செழித்து வளர்ந்து கிடந்தன. ஒரு பகுதியில் பச்சை இலைகளுக்குள் சிவப்பு சிவப்பாய் மிளகாய்ப் பழங்கள் எட்டிப் பார்த்து பவளம் மாதிரி மின்னிக் கொண்டிருந்தன. கொத்துக் கொத்தாய் அங்கங்கே ஆட்கள் வேலையிலிருந்தனர். ஆறேழு கறுத்த பெண்கள் இவர்களைப் பார்த்தும் பார்க்காதது போல் குனிந்து குசுகுசுவென்று பேசியபடி நீரும் சேறுமாயிருந்த நிலத்தில் நெல் நாற்றுக்களைப் பாவிக் கொண்டிருந்தார்கள்.

“இன்னும் நாம எவ்வளவு பரப்பளவு நிலம் வாங்க வேண்டி இருக்கு ராம்நாத்?” நடையை எட்டிப் போட்டபடி கேட்டார் பரமேஸ்வரன்.

“முன்னூத்திச் சொச்சம் ஏக்கர் நெலத்துல இந்த காளியப்பனோடது வெறும் நாலு ஏக்கர் முப்பது சென்ட் மட்டும் தான் இன்னும் நாம வாங்க வேண்டி இருக்கு ஸார். மத்த எல்லோரோட நிலத்தையும் வாங்கி கிரயம் பண்ணீட்டம். இவர்ட்டத்தான் எவ்வளவோ பேசிப் பார்த்துட்டோம்; அடியாட் களவச்சு மிரட்டியும் பார்த்துட்டம்; மசியவே மாட்டேன்கிறார். நிலத்தத் தரவே முடியாதுன்னு ஒத்தக் கால்ல நிக்கிறார்” வருத்தமாய் சொன்னார் ராம்நாத்.

“கவலைப்படாதீங்க; வாங்கிடலாம்; அதுக்குத் தான நான் வந்துருக்கேன்; மத்தவங்களுக்குக் குடுத்தத விட கொஞ்சம் காசை அதிகமாத் தூக்கி எறிஞ்சா சலாம் போட்டுக் குடுத்துருவாங்க..” பரமேஸ்வரனின் குரலில் நம்பிக்கையும் பலரை இப்படி வீழ்த்திய அனுபவமும் வழிந்தது.

வேப்பமரத்துக் காற்று சிலுசிலுவென்றிருந்தது. பம்பு செட்டிலிருந்து தண்ணீர் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. காளியப்பன் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்தபடி கீழே உட்கார்ந்திருந்த வயதான பெண்மணிக்கு வெற்றிலை இடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்தப் பெண்மணிக்கு தொண்ணூறுக்கு மேல் வயதிருக்கும். கூன்விழுந்து, உடம்பெல்லாம் சுருங்கி முகத்தில் ஏகப்பட்ட சுருக்கங்களுடன் சந்தோஷமாய்ச் சிரித்துக் கொண்டிருந்தார்.

பரமேஸ்வரனும் ராம்நாத்தும் அங்கே போகவும், காளியப்பன் கயிற்றுக் கட்டிலிலிருந்து எழும்பி, அவர்களை வரவேற்று கட்டிலில் உட்கார வைத்தார். ”நல்ல வெயில்ல இந்தக் கெழவனத் தேடி வந்துருக்கீங்க…! சுத்தமான தென்னங்கள்ளு இருக்கு; ஆளுக்கு ஒரு சொம்பு அடிக்கிறீகளா?” என்றபடி கட்டிலுக்கடியிலிருந்து ஒரு மண் கலயத்தை எடுத்தார்.

“அய்யய்யோ அதெல்லாம் வேண்டாம். இருவரும் அவசரமாய் மறுத்தார்கள்.”பெரிய மனுஷங்க இதையெல்லாம் குடிக்க மாட்டீக! ஆனா சீமைச்சரக்கைக் குடிச்சு உடம்பக் கெடுத்துக்குவீங்க. நம்ம அரசாங்கமே அப்படித்தான இருக்கு; குடியானவனக் கள் எறக்க விடாம, கண்ட கருமாந்திரங்களப் போட்டுக் காய்ச்சி பாக்கெட் சாராயம்னு வித்து, மனுஷங்களப் பாழ் பண்ணிக்கிட்டு இருக்கு. என்ன நான் சொல்றது?” சத்தம் போட்டுச் சிரித்தார் காளியப்பன். அப்புறம் இரண்டு இளநீர்க் காய்களைச் சீவி “இதையாவது குடிங்க” என்று கொடுத்தார்.

“உங்க நில விஷயமாப் பேசத்தான் வந்தோம்.” பரமேஸ்வரன் நேரிடையாக விஷயத்திற்கு வந்தார். “அப்பவே நான் ஸார்ட்ட சொல்லீட்டனே, அதை எப்பவுமே நான் விக்கிறதா இல்லன்னு” என்றார் காளியப்பன்.

“நீங்க கொஞ்சம் உங்க முடிவ மறுபரீசீலனை பண்ணணும்; எல்லாருக்கும் சென்ட்டுக்கு முப்பதாயிரம்னு கொடுத்துத் தான் கெரயம் பண்ணுனோம்; உங்க நிலத்துக்கு அம்பது தர்ரோம்; வீடுகள் கட்டி முடித்ததும் உங்க குடும்பம் குடியிருக்க மூணு படுக்கை அறை வசதி கொண்ட ஃபிளாட் ஒண்ணும் ஃப்ரியாவே தர்ரோம்.இப்பல்லாம் விவசாயத்துல என்ன வருமானம் வருது? போட்ட முதலே திரும்புறதுல்ல; உங்க மொத்த நிலத்துக்கும் சுமார் ரெண்டரைக் கோடி ரூபாய் கெடைக்கும். அதை வச்சு நீங்க வேற எதாவது பிஸினஸ் பண்ணலாம்; ஷேர்ல இன்வெஸ்ட் பண்ணலாம்; பேங்க்ல கூட டெபாஸிட் பண்ணலாம். எதுல போட்டாலும் விவசாயத்துல வர்றத விட கண்டிப்பா அதிகமா வருமானம் வரும்.”

“இதப் பாருங்க ஸார்; விவசாயத்த லாப நஷ்டக் கணக்குப் பார்க்கிற தொழிலா நாங்க நடத்தல; அது ஒரு வாழ்க்கை முறை; அது இல்லாட்டா செத்துப் போயிடுவம் சார்..”என்றார் காளியப்பன்.

“கொஞ்சம் சென்டிமென்ட்ட எல்லாம் தள்ளி வச்சுட்டு யோசிங்க மிஸ்டர் காளியப்பன்; காலத்துக்குத் தக்கன மாற வேண்டாமா? எல்லாத்துக்குமே பயன்பாடுன்னு ஒண்ணு இருக்குல்ல”

“அப்படி வாழ்க்கையில எல்லாத்தையும் பயன்பாட்டை மட்டும் வச்சி பார்க்க முடியாது ஸார்.. இதோ இந்தக் கிழவி அதான் எங்கம்மாவுக்கு 93 வயசாகுது; இனிமே பயன்பாடுன்னு பார்த்தா ஒண்ணுமே இல்ல; என்னபண்ணலாம்? வெளில வீசிடலாமா, இல்லை மூச்சைப் பிடிச்சுக் கொன்னுடலாமா? உங்கள மாதிரி படிச்சவங்க அதையும் ஞாயப்படுத்துவீங்க; கருணைக் கொலைன்னு; ஆனா எங்க மனசு ஒப்புக்காது ஸார்”

“விவசாயத்துல என்ன மிஞ்சிடும் மிஸ்டர் காளியப்பன்! அது தோத்துப் போயி எவ்வளவோ காலமாயிடுச்சு.. இன்னும் அதைப் போயி விடாமத் தொடர்றது புத்திசாலித்தனமா?”

“விவசாயம் ஏன் தோத்துப் போச்சுன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கிங்களா? டெவலப் பண்றம்னு அரசாங்கமும் உங்கள மாதிரி ஆட்களும் விவசாய நிலத்தச் சுத்தி கரைய உயர்த்தி ரோடு போடுறிங்க; ஆனால் மழைத் தண்ணி வெளியேறுறதுக்கு வடிகால் வசதி பண்றதில்ல. அதிகமான தண்ணியால பயிரெல்லாம் அழுகுது; நிலத்தடி நீரையெல்லாம் கட்டுமான வேலைகளுக்கும் குளிர்பானம் தயாரிக்கவும் உறிஞ்சிட்டா விவசாயத்துக்கு எப்படி தண்ணி கெடைக்கும்? ஆனால் ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்குங்க.. விவசாயம் நசிஞ்சா உலகமே அழிஞ்சுடும்; அதனால எங்கள மாதிரி ஆட்களயாவது ஒழுங்கா விவசாயம் பண்ண விடுங்க. நெலத்த விலைக்குக் கேட்டுக்கிட்டு இனி ஒரு முறை தயவு பண்ணி இங்க வராதீங்க.” கை கூப்பி வழி அனுப்பி வைத்தார் காளியப்பன்.

பரமேஸ்வரன் தான் படு தோல்வி அடைந்து விட்டதாக உணர்ந்தார். அவருடைய இத்தனை வருஷ அனுபவத்தில் காளியப்பன் மாதிரி எதற்குமே மசியாத இத்தனை பிடிவாதமான ஆசாமிகளைச் சந்தித்ததே இல்லை. காளியப்பனிடம் அவரின் எல்லா முயற்சிகளும் பல்லிளித்தன. காளியப்பனின் வசமுள்ள நிலத்தை வாங்க முடியாத பட்சத்தில் கம்பெனி பெருத்த நஷ்டத்தைச் சந்திக்க வேண்டி வரலாம். ஏனென்றால் அந்தப் பகுதியில் தான் தகவல் தொழிற்நுட்பப் பூங்கா அமைக்க உத்தேசிக்கப்பட்டு அதற்கான பூர்வாங்க வேலைகள் எல்லாம் முடிந்து விட்டன. இந்நிலையில் பிளானை மாற்றினால் இதில் முதலீடு செய்திருப்பவர்கள் நம்பிக்கை இழப்பார்கள். கம்பெனியின் ஷேர்களின் விலை சரியும். அப்புறம் சேர்மனிடம் முகங்காட்டவே முடியாது.

“காளியப்பனோட வாரிசுகள் யாரையாவது மடக்கி எழுதி வாங்க முயற்சிக்கலாமா ராம்நாத்.”

“இல்ல ஸார்; நாங்க அந்தக் கோணத்துலயும் ஏற்கெனவே முயற்சி பண்ணிப் பார்த்துட்டோம். அவருக்கு ஒரே ஒரு பொண்ணு தான்; நாம அவங்க வீட்டுக்குப் போயிருந்தப்ப நம்மள வரவேற்று வீட்டுக்குள்ள கூட்டிடுப் போனாங்கள்ள அவங்க தான்..இப்ப புருஷன் கூடக் கூட இல்ல; விவாகரத்துப் பண்ணீட்டாங்க. அந்த அம்மாவும் அப்பா கிழிச்ச கோட்டத் தாண்டவே மாட்டேன்னுட்டாங்க” என்றார் ராம்நாத்.

எல்லா வழிகளும் அடைபட்டுப் போனது போலிருந்தது. அலுவலகத்தில் உட்கார்ந்து நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த போது பரமேஸ்வரனுக்கு அந்த ஆச்சிரியம் கவனத்திற்கு வந்தது. வில்லங்கம், பட்டா, சிட்டா அடங்கல் என்று எல்லா ஆவணங்களிலும் நிலத்தின் உரிமையாளராக சேதுராம அய்யர் என்பவரின் பெயரே இருந்தது. 1930க்கப்புறம் நிலம் கை மாறவே இல்லை. அப்படியே கை மாறி இருந்தாலும் அது முறையாகப் பதிவு பண்ணப்படவில்லை. உற்சாகத்தில் துள்ளிக் குதித்து ராம்நாத்தை சத்தம் போட்டு அழைத்தார்.” டாக்குமெண்ட் படி காளியப்பனுக்கோ அவரோட வாரிசுகளுக்கோ நிலத்துல எந்த பாரத்தியதையுமே இல்லையே! அப்புறம் ஏன் நாம அவரோட மல்லுக்கட்டிக்கிட்டிருக்கோம்.”

“இல்ல ஸார்; நாங்க தரோவா விசாரிச்சுட்டம்; டாக்குமெண்ட் இல்லையே தவிர எல்லோருமே நிலம் காளியப்பனோடதுன்னு தான் சொல்றாங்க; அவர்கிட்ட ஏதாவது அத்தாட்சி இருக்கலாம்.” என்றார் ராம்நாத்.

“நோ. அதைப்பத்தி நமக்கு அக்கறை இல்ல; குத்தகைக்காரரா இருந்துருப்பாங்க; அல்லது சேதுராம அய்யரோட கூத்தியாளோட வாரிசுகள் மூலம் இவங்களுக்கு வந்துருக்கலாம். ஆனால் எல்லாமே வாய்மொழி பரிவர்த்தனைகள் தான். முறையா பதிவு பண்ணப் படல. நாம இதை சாதகமாப் பயன்படுத்தி சேதுராம அய்யரோட வாரிசு யாரையாவது கண்டுபிடிச்சுட்டமின்னா, அவங்க மூலம் நெலத்த நம்ம கம்பெனிக்கு எழுதி வாங்கிக்கலாம். இனியும் காலந் தாழ்த்தாம அவரோட வாரிசத் தேடுங்க.” என்றார் பரமேஸ்வரன்.

ஊருக்குள் அலைந்து வயதான கிழவர்களிடம் ஒருவர் விடாமல் விசாரித்ததில் மின்மினி மாதிரி ஒரு புள்ளி வெளிச்சம் தெரிந்தது. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு சேதுராம அய்யரின் குடும்பம் மத்திய சர்க்காரில் உயர்ந்த உத்தியோகங்கள் பெற்று டெல்லிக்கு குடி போனார்கள் என்று. அதைத் தொடர்ந்து பிரயாணித்ததில் சேதுராம அய்யரின் கொள்ளுப்பேரன் ஒருவன் நடேஷன் என்ற பெயரில் இப்போது மும்பையில் வசிப்பதாகத் தகவல் கிடைத்தது. பரமேஸ்வரன் உடனே மும்பைக்குப் பயணமானார்.

நடேஷனுக்கு சுமார் முப்பத்தைந்து வயதிருக்கும். தாராவி பகுதியில் சிதிலமடைந்து கிடந்த ஒரு பழைய வீட்டில் தன்னுடைய தாய், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அன்றாட வயிற்றுப் பாட்டுக்கே அல்லாடுகிற வறிய நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தார். எக்ஸ்போர்ட் பிஸினெஸ் நொடித்து சொத்து சுகமெல்லாம் இழந்து, இப்போது 75 இலட்ச ரூபாய் கடனுடன் தத்தளித்துக் கொண்டிருந்தார்கள். பரமேஸ்வரன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார்.

“என்னை கடவுள் அனுப்புன பிரதிநிதியா நெனச்சுக்குங்க; உங்க பிரச்னைகள் எல்லாம் இன்னைக்கோட தீரப் போகுது.” என்றார் பரமேஸ்வரன்.

“உங்களப் பார்த்தா கடவுளோட பிரதிந்தியாத் தெரியல; குடுகுடுப்பைக்காரன் மாதிரி இருக்கீங்க.” என்றார் நடேஷன் சிரித்த படி. ”உங்களுக்கு நல்ல ஹுயூமர் சென்ஸ் ஸார். சென்னைக்குப் பக்கத்துல உங்க பேமிலி பிராப்பர்ட்டி ஒண்ணு இருக்கு தெரியுமா?” என்று கேட்டார் பரமேஸ்வரன். நடேஷனுக்கு அதைப் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவனுடைய அம்மா சொன்னாள்.

“அது எங்க பூர்வீகந்தான்; ஆனால் இப்ப அங்க எங்களுக்கு யாருமில்ல. ரொம்ப காலத்துக்கு முன்னாலயே சொத்தெல்லாம் வித்தாச்சே!”

“இல்ல, இன்னும் விற்கப்படாம ஒரு நாலரை ஏக்கர் விவசாய நிலம் இருக்கு; ஆனால் அனாமத்தா ஒருத்தன் அனுபவிச்சுக்கிட்டு இருக்கான்..” தான் கையோடு கொண்டு போயிருந்த ஆவணங்களைக் காட்டி விளக்கமளித்தார் பரமேஸ்வரன். “நீங்க சேதுராம அய்யரோட லீகல் வாரிசுங்குறதுக்கான ஆதாரங்களோட என்னோட கெளம்பி, சென்னை வந்து உங்க நிலத்த எங்க கம்பெனிக்கு எழுதிக் கொடுத்தீங்கன்னா, உங்களுக்கு ரெண்டு கோடி ரூபாய் கெடைக்கும்; அதை வச்சு நீங்க உங்க பிரச்னைகள் எல்லாத்தையும் தீர்த்துக்கலாம்.” பரமேஸ்வரன் சொல்லச் சொல்ல நடேஷனின் முகம் பிரகாசமானது.

இருவரும் விமானத்தில் கிளம்பி உடனே சென்னைக்கு வந்தார்கள். நிலத்தை ரெஜிஸ்டர் பண்ணுவதற்கு முன்னால் நிலத்தையும் அதை இப்போது அனுபவிப்பவர்களையும் பார்க்க வேண்டுமென்று நடேஷன் ஆசைப்பட்டதால், முதலில் அவர்கள் காளியப்பனின் வீட்டிற்குப் போனார்கள். அந்த வீட்டின் வரவேற்பறை சுவரிலிருந்த புகைப்படத்திலிருந்தவரின் முகச்சாயல் நடேஷனின் முகத்தை ஒத்திருந்தது. அந்த புகைப்படத்தைப் பார்த்ததும் அவருக்குள் சிலீரென்று ஒரு உணர்வு அதிர்ந்தது. போட்டோவைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டார் நடேஷன். காளியப்பனுக்கு நடேஷனைப் பார்த்ததும் ஆச்சர்யமாக இருந்தது. அவர் சத்தங் கொடுக்கவும் குடும்பமே வரவேற்பறைக்கு வந்து நடேஷனை ஆச்சர்யமாய்ப் பார்த்தது.

அது 1940களின் முற்பகுதி: சூரியன் கண்விழிக்க நிறைய நேரமிருந்த ஒரு நடுநிசியில் இருளாண்டிப் பகடை தன் மனைவி, மகன் மற்றும் புது மருமகளுடன் இரத்தின மங்கலத்திலிருக்கும் சேதுராம அய்யரின் வீட்டிற்கு முன் நின்றபடி துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு பயபக்தியுடன் மிக மெதுவாக “சாமி சாமி.” என்று குரல் கொடுத்தார். எழும்பி வந்த சேதுராம அய்யர், தன்னுடைய பண்ணையாள் வேளைகெட்ட நேரத்தில் குடும்பத்துடன் நிற்பதைப் பார்த்து பதறிப்போய், “என்னடா, இந்த நேரத்துல?” என்றார்.

“எங்க ஜாதிக்காரப் பயல் ஒருத்தன் சம்சாரி வீட்டுப் பொண்ண இழுத்துட்டு ஓடிட்டானாம் சாமி. காவக்கார தேவரும் மத்த சம்சாரிகளும் சேரிக்குள்ள பூந்து எங்க குடிசைகளை எல்லாம் கொளுத்திட்டாங்க; ஆப்புட்ட ஆட்களையும் கண்ணு மண்ணு தெரியாம அடிச்சு நொறுக்கிக் கிட்டிருக்குறாங்க. அதான் எல்லோரும் உயிர் பொழச்சாப் போதுமின்னு ஊரைக் காலி பண்ணீட்டுப் போறொம் சாமி. மத்த பகடைங்கல்லாம் ஏற்கெனவே போயிட்டாங்க. நான்தான் சாமிகள் கிட்ட ஒரு வார்த்தை சொல்லீட்டுப் போயிடலாம்னுட்டு..”

“யாரோ யாரையோ இழுத்துக்கிட்டுப் போனதுக்கு நீங்க என்னடா பண்ணுவேள்? வரவர இந்த ஊர்க்காராளுக்கு அறிவின்றதே இல்லாமப் போயிடுச்சு.. அண்டிப் பொழைக்கிற ஊரை விட்டுட்டு எங்கடா போவீங்க” அய்யர் கரிசனமாய்க் கேட்கவும் இருளாண்டி “தெரியல சாமி” என்று ஒப்புச் சொல்லி அழத் தொடங்கி விட்டான்.

”முதல்ல அழறத நிறுத்துடா மடையா. எதுக்கெடுத்தாலும் அழுதுக்கிட்டு! அவாள் சொன்னா உடனே ஊரை விட்டுக் கெளம்புனுமா என்ன! எதுத்து நிக்கனுன்டா.. நீ ஊர விட்டல்லாம் போக வேண்டாம்; நம்ம ஏரிக்கரைத் தோப்பு நெலத்துல போயி குடிசை போட்டுத் தங்கிக்க” என்றார்.

“உங்களுக்கு எதுக்கு சாமி பொல்லாப்பு; அவங்க உங்க கூட சண்டைக்கு வருவாங்க.” என்று பயந்தான் இருளாண்டி. “அதெல்லாம் நான் பேசிக்கிறேன்; நீ குடும்பத்தக் கூட்டிட்டு தோட்டத்துக்குப் போ; இன்னைக்கு ஒரு ராத்திரி எப்படியாவது சமாளிச்சுக்குங்க; நாளைக்கு குடிசை போட்டுரலாம்.” என்று அனுப்பி வைத்தார்.

அன்றைக்கிலிருந்து இருளாண்டியின் குடும்பம் அய்யரின் தோப்பிலேயே தங்கிக் கொண்டு அவரின் விவசாய வேலைகளை எல்லாம் செய்தார்கள். முதலில் சம்சாரிகள் வரிந்து கட்டிக் கொண்டு அய்யருடன் சண்டை போட்டுப் பார்த்தார்கள். அய்யர் மசிவதாய் இல்லை. அப்புறம் அய்யரின் மேலிருந்த மரியாதையாலும் இருளாண்டியின் குடும்பம் எந்த வம்பு தும்பும் வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதாலும் மேலும் ஊரை விட்டு ரொம்பவும் ஒதுங்கித் தானே வசிக்கப் போகிறார்கள் ஒழிந்து போக்ட்டும் என்றும் சம்சாரிகளும் இந்த ஏற்பாட்டைக் கண்டும் காணாமல் இருந்து விட்டார்கள்.

ஆகஸ்ட் 15, 1947 சேதுராம அய்யர் தன் பண்ணையாட்களையெல்லாம் அழைத்து தன் வீட்டில் சமைத்த பசு நெய்யொழுகும் சர்க்கரைப் பொங்கலை தொன்னை இலைத் துண்டங்களில் கரண்டி கொள்ளாமல் அள்ளி அள்ளிப் பரிமாறினார். அவர் முகத்தில் சந்தோஷம் கொப்பளித்தது.

“என்ன சாமி விசேஷம்?” என்றான் இருளாண்டிப் பகடை.

“நம்ம தேசத்துக்கு சுதந்திரம் வந்துருச்சுடா; நம்மள அடிமையா வச்சு ஆண்டுக்கிட்டிருந்த வெள்ளைக்காரன் நம்ம நாட்டை விட்டு வெளியப் போப்போறாண்டா..”

“அதனால நமக்கு என்ன சாமி?”

“அட முட்டாப் பயலே, நம்ம நாட்ட நாமளே, ராஜாங்கம் பண்ணப் போறம்டா..”

“நீங்க ராஜாங்கம் பண்ணுவீங்க; நாங்க என்ன பண்ணப் போறோம் சாமி?” இருளாண்டியின் கேள்வி சேதுராம அய்யருக்கு சுரீலென்றது. அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. இந்தியாவில் சாதிகளின் ஆதிக்கம் உதிரும் நாள் தான் உண்மையான விடுதலை; அது சித்திக்க இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடக்கனுமோ? என்று எண்ணிக் கொண்டார்.

“வியாக்கியானமெல்லாம் பண்ன்ணாம நீங்களும் சந்தோஷமா கொண்டாடுங்கடா; காந்தி இருக்கார்; அவர் உங்களக் கைவிட மாட்டாருடா” என்றவர் “போடா, போயி சர்க்கரைப் பொங்கல சந்தோஷமா வாங்கிச் சாப்புடுடா, கேள்வி எதுவும் கேட்டுக்கிட்டு நிக்காம.” என்று விரட்டினார்.

1950 வாக்கில் அய்யரின் ஒரே பையனுக்கு டெல்லியில் மத்திய சர்க்காரில் வேலை கிடைத்து அவன் அங்கு போகவும், பையனை விட்டுப் பிரிந்திருக்க முடியாத அய்யரும் அய்யரம்மாவும் கிராமத்திலிருந்த நிலபுலன்களையும் சொத்து சுகங்களையும் விற்றுக் காசாக்கிக் கொண்டு டெல்லிக்கே போய்விட முடிவு செய்து, ஒவ்வொன்றாக விற்கத் தொடங்கினார்கள். கடைசியில் இருளாண்டியின் குடும்பம் குடிசை போட்டுத் தங்கியிருந்த ஏரிக்கரைத் தோப்பு நிலம் மட்டும் மீதமிருந்தது. அய்யர் இருளாண்டியை வீட்டிற்கு அழைத்தார்.

“எல்லாத்தையும் வித்திட்டீகளே சாமி, இனிமே இந்தப் பக்கமே வரமாட்டீகளா” இருளாண்டியின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

“வயசான காலத்துல அங்கிட்டும் இங்கிட்டும் அலைய முடியாதில்லடா! அதான்; கொஞ்ச நஞ்ச தூரமா என்ன? நீ இப்ப இருக்குற தோட்டத்தப் பத்தி ஒரு முடிவு எடுக்கத்தான் உன்னைக் கூப்பிட்டேன்”

“நாங்க வேற ஊரு பார்த்துக் கிளம்பிக்கிறோம் சாமி, நீங்க அதையும் வித்துக்குங்க”

“உங்க பாட்டன் காலத்துலருந்து எங்கள அண்டியே பொழச்ச, உங்கள அப்படி நிர்க்கதியா விட்டுட்டுப் போக மனசு கேட்கலடா பேசாம அந்த நெலத்த நீயே எடுத்துக்கடா..”

“அய்யோ சாமி, என்கிட்ட ஏது அவ்வளவு பணம்? அதோட பகடையெல்லாம் சொந்தமா நெலம் வச்சுப் பொழைச்சா, சம்சாரிங்க பார்த்துட்டு சும்மா இருப்பாங்களா என்ன?”

‘நான் முடிவு பண்ணீட்டன்டா; அந்த நெலம் உனக்குத் தான்; அதை உனக்கு நான் தானமாத் தர்றதா ஏற்கெனவே பத்தரம் எழுதியாச்சு.. இந்தா பத்தரம்; பத்தரமா வச்சுக்கோ.” என்று மடியிலிருந்து ஒரு பத்திரத்தை எடுத்துத் தரவும், “சாமி” என்றபடி அவரின் கால்களில் விழுந்தான்.

“அடக் கோட்டிப் பயலே எழுந்திருடா” என்று அவனைத் தழுவி தூக்கி நிறுத்தி, “போய்ப் பார்த்து பதமா பொழச்சுக்கடா.” என்று ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார்.

“இதை அப்படியே வச்சுக்காதடா; தலையாரிட்டக் குடுத்து பத்தரப்பதிவு ஆபிஸுல போயி பதிஞ்சு வச்சுக்கடா.” என்றும் சொல்லித் தான் அனுப்பினார்.

சம்சாரிகள் எல்லாம் திரண்டு வந்து அய்யரிடம் சண்டை போட்டார்கள்.”பகடைப் பயலெல்லாம் சொந்த நெலத்துல விவசாயம் பண்ணுனா, அப்புறம் அவெங்க எப்படி எங்கள மதிப்பாங்க? போறபோக்குல ஊருக்குன்னு இருக்கிற வழமைகள எல்லாம் ஒடச்சுட்டுப் போகலாம்னு பார்க்குறீங்களா!” என்றார்கள். “எல்லோரும் மனுஷங்க தானடா போய் வேலையப் பாருங்கடா” என்று அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். ஆனாலும் ஆரம்பத்தில் இருளாண்டிக்கு அவர்கள் நிறைய தொந்தரவு கொடுத்தார்கள். போராடித் தான் தங்களை நிலை நிறுத்திக் கொண்டார்கள்.

கதை போல நிலம் தங்கள் கைக்கு வந்த வரலாற்றைச் சொல்லி, காலத்தின் கசங்களும் பழுப்புமேறிக் கிடந்த சேதுராம அய்யர் தன் பாட்டனுக்கு எழுதிக் கொடுத்த பத்திரத்தை எடுத்து நடேஷனிடம் கொடுத்தார் காளியப்பன். “இதெல்லாம் செல்லாது மிஸ்டர் ந்டேஷன். ரெஜிஸ்டர் ஆபிஸ்ல இந்தப் பத்திரம் பதிவு பண்ணப்படவே இல்ல” அவசரமாய்ச் சொன்னார் பரமேஸ்வரன்.

நடேஷன் அந்தப் பத்திரத்தையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். சேதுராம அய்யரின் கையெழுத்தை கைகளால் மெதுவாய் வருடினான். அவனது கண்களிலிருந்து கண்ணீர் பொங்கி வழிந்தது. நடேஷன் நா தழுதழுக்கப் பேசத் தொடங்கினான்.

“மன்னிக்கணும் மிஸ்டர் பரமேஸ்வரன்; இந்த நெலத்த காளியப்பனே தொடர்ந்து அனுபவிக்கட்டும். தானமாத் தந்தத திருப்பி வாங்குறது முறை இல்ல. நீங்க உங்க பிளான்ல மாற்றம் பண்ணிக்குங்க. மிஸ்டர் காளியப்பன், எதுக்கும் நாளைக்கு நீங்க பத்திர பதிவு அலுவலகத்துக்கு வந்துடுங்க, இதை முறைப்படி உங்க பேருக்கே மாத்திக் குடுத்துதுறேன். அதான் உங்களுக்குப் பின்னாடி பிரச்னை வராது.” காளியப்பனின் மொத்தக் குடும்பமும் நடேஷனைக் கைகுவித்து வணங்கியது.

(நன்றி : கல்கி 07.06.2009)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *