நாய்ப் பாசம்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 21, 2020
பார்வையிட்டோர்: 6,305 
 
 

பெங்களூரு சென்னை highway யில் சென்னைக்கு சமீபமாய் , வேப்பம்பட்டு பஸ் நிறுத்தத்தை ஒட்டி அமைந்திருந்தது அந்த டீக்கடை..

டீக்கடை என்று சொன்னால் கந்தசாமிக்கு பொல்லாத கோவம் வந்து விடும். ‘ போர்டை நல்லா பாருங்க’….. என்பான்.

” 5 T Stall” !!!!…. என்றது போர்ட்…..

அந்த டீக்கடையின் ஏக போக உடமஸ்தன் கந்தசாமி தான். முப்பது வயது தான் இருக்கும். யார் யார் காலிலோ விழுந்து இந்த இடத்தில் டீக்கடை போட்டு விட்டான்.

ஓஹோ என்று சொல்ல முடியாவிட்டாலும் வண்டி ஓடுகிறது. தனியாக தவித்துக் கொண்டிருந்த போது வந்து ஒட்டிக் கொண்டவன் தான் சூர்யா!

பத்து வயது இருக்கும் சூர்யாவுக்கு… பக்கத்தில் ஒரு கிராமத்தில் இருப்பதாயும் , வீட்டை விட்டு ஓடி வந்து விட்டதாயும் , என்ன வேலை தந்தாலும் செய்வதாயும் சொன்னான்.

கந்தசாமி கண்ணில் தன்னுடைய சின்ன வயசு flash back ஆக தெரிந்தது. இதே நிலையில் தானே இருபது வருஷம் முன்னாடி தானும் இருந்தோம். பட்ட கஷ்டங்களை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா ? அவன் தோளில் கை போட்டு ” உள்ள வா ” என்று கூப்பிட்டவன்தான். பிள்ளை போலத் தான் சூர்யா !

வெறும் டீக்கடை யாக இருந்ததை 5 * ஆக மாத்தியதே சூர்யா தான். !!!

“முதலாளி , தூரத்திலிருந்து பார்த்தாலே look வேணும். ” Oreo biscuit வாங்கி வைங்க! T.V. ல பாக்கல? Juice machine இருந்தா வெயிலுக்கு கூட்டம் வரும். பில்டர் காஃபி … டீ…. பீங்கான் கப்புல தந்து பாருங்க ! ”

அவன் தான் 5 STAR T STALL idea தந்ததும்…. இது போல சூப்பர் ஐடியாக்கள் கடையின் வருமானத்தை கணிசமாய் பெருக்கியது.

ஒரு நாளைக்கு கந்தசாமி அவனைக் கூப்பிட்டு ” இன்னயிலிருந்து நீ தான் முதலாளி . நீ எடுக்கறது தான் முடிவு ” என்று சொன்னதும் அழுது விட்டான் சூர்யா.

அன்றிலிருந்து சூர்யாவை ” மாப்ளே ” என்று தான் கூப்பிடுவான். எப்போதாவது ரொம்ப கோபமாயிருந்தா மட்டும் ” டேய் சூர்யா ” என்பான். கந்தசாமி அவனுக்கு அண்ணனானான்.

ஒரு நாள் விடியல் காலை. சூர்யா தான் வாசல் தெளித்து , கோலமும் போடுவான்.. ..

இருட்டில் துணி மூட்டை மாதிரி வெள்ளையாய் மூலையில் தெரிந்தது. திடீரென்று அசையவே ” அண்ணே அண்ணே இங்க வாங்க ” என்று கத்தினான். கந்தசாமியும் ஓடி வந்தான்.

பக்கத்தில் போய் பார்த்ததில் ஒரு வயசான அம்மா படுத்திருப்பது புரிந்ததது .

” பாட்டி. ! பாட்டி ” எழுப்பினான் சூர்யா. உடனே எழுந்து விட்டாள் பாட்டி.

” இங்க எப்படி பாட்டி ? ” என்றதுக்கு ,

” ராத்திரி பஸ்ஸில் வந்த அசதிலே நல்லா தூங்கிட்டேன்போல ” ராசா மன்னிச்சுக்கோப்பா ” என்று வாரி சுருட்டிக் கொண்டு எழுந்து நின்றாள்.

பக்கெட்டில் தண்ணி கொண்டு வைத்தான். முகம் கழுவிக்கொண்டு , பையிலிருந்த துண்டால் முகத்தை அழுத்தி துடைத்து விட்டு , ஒரு சின்ன பேக்கட்டில் இருந்து கொஞ்சம் விபூதி எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டாள். முகம் பார்க்க பளிச்சென்று இருந்தது.

கந்தசாமி அனாவசியமாய் ஒரு ஈ , காக்கையைக் கூட கடையில் அண்ட விடமாட்டான். வந்தோமா….. வாங்கினோமா… போனோமா…. என்றிருக்க வேண்டும். மூன்று பேருக்கு மேல் கூட்டம் கூடினாலே கிளப்பி விட்டு விடுவான். பாட்டியை எங்கேயாவது விரட்டி விடப் போகிறானோ என்று பயந்தான் சூர்யா.

அவனுக்கென்னவோ பாட்டியைக் கண்டதுமே ரொம்ப பிடித்து விட்டது.

ஆனால் கந்தசாமி ஒரு வார்த்தை பேசவில்லை. ” போய் ஒரு டீ போட்டு கொண்டு வா மாப்ளே ! ” என்று சொன்னதும் சிட்டாய் பறந்தான் சூர்யா.

டீ ஐ குடித்ததும் தெம்பானாள் பாட்டி . பெயர் கண்ணம்மா. அதற்கு மேல் எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில் ” ஞாபகம் இல்லையே ராசா “……..!!!

” சரி .அங்க தெரியுது பார் பம்பு செட்டு. போய் குளிச்சிட்டு வா. ஏதாச்சும் சாப்பிடலாம். “

பாட்டி குளித்து துணியெல்லாம் துவைத்து மாற்றி …… ஆளே மாறிப் போனாள்…

பாட்டிக்கு டீயும் பன்னும் ரெடியாயிருந்தது. ஆனால் பாட்டி சாப்பிட மறுத்து விட்டாள்.

” சும்மா சாப்பிட்டு பழக்கமில்லப்பா. ஏதாச்சும் வேல குடு. செஞ்சிட்டு சாப்பிடுறேன் “

” பாட்டி விவரமான ஆளா இருக்கியே !
அப்படியே இங்கேயே தங்கிடலாம்னு நினைக்கிறாயா ? சூர்யா விளையாட்டாதான் கேட்டான்.

கண்ணம்மா குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்து விட்டாள்.

” ராசா நா யாருக்கும் பாரமா இருக்க மாட்டேம்பா …. இப்பவே கிளம்புறேன் ” என்று எழுந்தாள்.

கந்தசாமி இது வரை பேசாமல் இருந்தவன் ,

” பாட்டி , நீ எங்கயும் போக வேண்டாம். இங்கேயே இருக்கலாம் ” என்றதும் சூர்யாவுக்கு நம்பவே முடியவில்லை .

சாமியார் பூனை வளர்த்த கதையானது.

தனியாய் இருந்த கந்தசாமி குடும்பஸ்தனானான்.

ஒரு நாள் ராத்திரி , பாட்டி பக்கத்தில் மெத்து மெத்தென்று ஏதோ தட்டுப்பட்டது. கறுப்பும் வெளுப்பும் கலந்து ! எப்படி வந்தது இந்த நாய்க்குட்டி?

“என்னண்ணே ? ஒவ்வொரு அதிசயமா நடக்குது? யாரு கொண்டு விட்டிருப்பாங்க ?”

சொந்த உறவுகள் அந்நியமான பொழுது , தெரியாத முகங்கள் சொந்தமானது. சூர்யா காலையே சுற்றி சுற்றி வந்தான் பப்பு. கண்ணம்மா நிறைய பேசாவிட்டாலும் சிரிக்க சிரிக்க நிறைய கதைகள் சொல்வாள்.

ஒரு நாள் பெரிய Honda car வந்து கடை முன் நின்றது. கணவன் , மனைவி , கூட ஒரு குட்டிப் பையன். பையனுக்கு பசி… தாகம்….!!!!

Biscuits , chocolate வாங்கிக் கொண்டிருந்த பையன் கண்ணில் பட்டு விட்டான் பப்பு.

” Daddy , daddy look ! So cute ” என்று கத்திக்கொண்டே பப்புவைத் தூக்கி கொஞ்சினான் பையன்.

” Please daddy I want him” ” Can we take him home?”

பாட்டிக்கு ஒன்றும் விளங்கவில்லை! ஆனால் சூர்யாவுக்கு புரிந்து விட்டது.

” இது எங்க பப்பு ” என்று பிடுங்கிக் கொண்டான்.

பையனோ விடுவதாயில்லை. ” Please .. please .. என்று அழ ஆரம்பித்து விட்டான்.

” இது வேணாம்ப்பா ! நான் வேற வாங்கி தரேன் !!!!”

ஊஹூம்… பையன் கேட்டால்தானே .

” தம்பி இந்த நாய்க்குட்டியத் தருவியா?
எவ்வளவு பணம் வேணாலும் கேளுங்க…”

“இல்லீங்க .. இது எங்க குழந்தை மாதிரி..”

அதற்குள் பையன் அழுதழுது முகமெல்லாம் சிவந்து விட்டது.

அம்மா முதல் முறையாக வாயைத் திறந்தாள். கந்தசாமியைப் பார்த்து……

” சார்… போன வருஷம் எம் பையனுக்கு உடம்பு முடியாம போயிட்டுது. பிழைப்பானான்னு கிடந்தான். கொஞ்சம் மனம் சங்கடப்பட்டாலும் மயக்கமாயிடுவான்.எதுக்குமே பிடிவாதம் பிடிக்க மாட்டான். என்னவோ ஆசைப்பட்டு கேக்குறான்.. அப்புறம் உங்க இஷ்டம் .. ” என்று முடித்தாள்.

மறு வார்த்தை பேசாமல் சூர்யா கையிலிருந்த பப்புவைத் தூக்கி பையன் கையில் குடுத்தான் கந்தசாமி.பணம் வாங்க மறுத்து விட்டான்.

அப்படியும் இப்படியும் பப்பு போய் ஒரு வருஷம் ஒடி விட்டது.

அதே நாள். அதே கார். காரிலிருந்து குதித்துக் கொண்டு இறங்கினான்., பையன். பின்னால் கொழு கொழு பப்பு. நேரே சூர்யாவின் காலை நக்கியது.

” தம்பி உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல. பப்பு வந்ததிலிருந்து ஒரு நாள் கூட உடம்புன்னு படுக்கல எம்பையன். இன்னிக்கு பப்புவுக்கு birthday கொண்டாடினான். சூர்யாவுக்கு cake குடுக்கணும் ஒரே பிடிவாதம். Please மறுப்பு சொல்லாம வாங்கிக்குங்க “

பெரிய பை நிறைய பழங்கள் , தின்பண்டங்கள் , இன்னும் என்னென்னவோ. இந்த தடவை கந்தசாமி மறுக்கவில்லை.

பையிலிருந்து 5000 பணம் எடுத்து வலுக்கட்டாயமாக கந்தசாமி கையில் திணித்தார். மூன்று பேரும் திக்கு முக்காடிப் போனார்கள்.

கார் போனதும் பாட்டிதான் ஆரம்பித்தாள்.

“பப்புவுக்கு வந்த வாழ்வ பாத்தியா ?…. ‘ நாய் படாத பாடு படுவ பாரு’ ன்னு. …. திட்டுவாங்க. ஆனா இந்த பப்பு என்ன பாக்கியம் செஞ்சுதோ ? உன்னையும் என்னையும் தேடி இதுவரைக்கும் யாராச்சும் வந்திருப்பாங்களா? விட்டது சனியன்னு இருக்காங்களா ? தாய்ப் பாசம் , பிள்ள பாசம் எல்லாமே வேசந்தான் ! ஒரு நாய் மேல் காட்டுற பாசத்தில பாதி கூட நம்ம மேல காட்ட ஆளில்லயா? என்ன சன்மம் இது???”.

முதல் முறையாக மூன்று பேர் கண்ணிலும் கண்ணீர் தளும்பி நின்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *