நான் தான் இவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 3, 2014
பார்வையிட்டோர்: 9,175 
 

வேகமாய் நடந்து கொண்டிருக்கிறேன். நேரமாகிக் கொண்டிருந்தது. கள்ளுண்ட போதை தலைக்கேறியதைப் போன்ற கிறக்கம். கண்களுக்கு முன்பு பூச்சி பறந்தது. காலை நேரத்திலேயே கானல் நீர் படர்ந்திருந்தது தார் ரோட்டின் மீது. புழுக்கமாய் உணர்ந்தேன். வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டேன்.

man 300தார் ரோட்டிலிருந்து வலதுபுறம் திரும்பி குறுக்குத் தெருவின் சிமெண்ட் ரோட்டில் நடக்க ஆரம்பித்தேன். கட்டிடங்களின் நிழல் இரு மருங்கிலும் நெடிதுயர்ந்து பின்பு படர்ந்து குளுமையை தந்து கொண்டிருந்தது. அய்ம்பது அடிகள் வரை இந்த சுகத்தை அனுபவிக்கலாம்.

தெருவில் சாக்கடையிலிருந்து அகழ்ந்து வாரி குப்பலாய் கொட்டி வைத்திருந்த கழிவில் கைவிரல்களையே கிளறு குச்சியாய் ஆக்கிக் கொண்டு கிளறிக்கொண்டிருந்தாள் சின்ன பெண்ணொருத்தி. மூக்கிலிருந்து வழிந்த சளியை இடது புறங்கையால் துடைத்துக் கொண்டாள்.

நான் அவளை பார்த்தேன். அவளும் என்னை பார்த்தாள்.

ஆறேழு வயதுக்குள் தான் இருக்க வேண்டும். முகம் பூசினாற் போல உப்பியிருந்தது. எண்ணெய் இல்லாத பரட்டைத்தலை விரிந்து முடிக் கற்றைகள் விறைத்துக் கொண்டிருந்தது. புறங்கையால் துடைக்கப்பட்ட மூக்கின் சளி உதட்டுக்கு மேலே பட்டையாய் படர்ந்து வெண்சாம்பல் நிறத்தில் தெரிந்தது. கண்களில் எதையோ எதிர்நோக்கும் எதிர்பார்ப்பின் மிச்சம் ஒளிர்ந்தது.

அவள் உடுத்தியிருந்த துணி கிழிசலில்லாமல் அட்டைக்கறுப்பாய் அழுக்கேறி கிடந்தது. கைப்பகுதி மட்டும் புதிய உடுப்பின் மிச்சம் போல் சற்றே புது நிறத்துடன் இது தான் என் உண்மையான நிறமென்பதாய் கட்டியம் கூறியது.

கைகால் நகங்களில் அழுக்கு அப்பிக்கிடந்தது. நகக்கீறல் வரிகள் கையிலும் காலிலும் அரிப்பின் கதையை கூறும் விதமாய் பரவியிருக்க அவள் வறுமையின் மொத்த சின்னமாய் குத்துகாலிட்டு அமர்ந்து சாக்கடைக்கழிவுகளை கிளறிக்கொண்டிருந்தாள். அவளருகே ஒரு எலும்புத்துண்டு கிடந்தது.

என்னுள் ஏதோ இனம் புரியாத மாற்றம் நிகழ்வதை உணர்ந்தேன். இழப்பின் குறியீடாய் தான் அதை உணர்கிறேன் நான். என்னையே அந்த சின்னப்பெண்ணின் வறுமை நிலையுள் பொருத்திக் கொள்கிறேன்.

அவளாய் மாறிக்கொண்டிருந்தேன் நான்.

இவள் ஏன் வெளியில் இருக்கிறாள்?

ஆதி மனிதன் முழுப்பெற்ற போது எவ்வாறு தன்னை அடையாளம் காண முயன்றிருப்பானோ அதை போன்றே என்னுள்ளிருந்த அவளை வெளியில் தெரியும் அவளாய் கற்பிதம் செய்து கொண்டு வாழ்வின் அந்த கணநேரத்தை நகர்த்துகிறேன்.

சாக்கடைக்கழிவின் கிளறல் நெடி என் நாசித்துவாரம் துளைத்து அறிவுப்புலனை அடைந்திருக்க வேண்டும். நாற்றமாய் நாறினதாய் உணர்ந்தேன்.

அவளைக் கடந்து ஓரடி கூட என்னால் எடுத்து வைக்க இயலவில்லை. அவளது உருவம் பெருத்து தெருவையே அடைத்துக் கொண்டதோ அல்லது வறுமைச்சின்னத்தின் ஈர்ப்பு சக்தி காந்தமாய் பிடித்திழுத்து என்னை நகரவொட்டாமல் செய்கிறதோ? புரியாமல் அவளுள் அய்க்கியமாகிறேன். பஞ்சடைத்த காதுகளில் ரீங்காரமிடும் மௌன ஓசையை தவிர வேறொன்றுமில்லை அங்கு.

எங்கும் வெறுமை.

அவள் கண்களில் மட்டும் தேடற்பசி நிரம்பியிருப்பதை காண்கிறேன். எதைத் தேட விழைகிறாள் அச்சிறுமி?

உலக ஆதாரத்தின் மையப்புள்ளி அவளது கண்களில் தங்கிவிட்டதோ என்கிற பிரம்மை எனக்குள். கண நேரந்தான். அதையும் மீறின வறுமையின் சாயை எங்கும் படர்கிறது. நானும் வர்ணம் பூசப்பட்டவனாய் அவளது வர்ணத்துள் புதைந்து கொண்டிருக்கிறேன்.
அவள் சட்டென்று எழுந்தாள்.

நான் நெடுநேரம் அவளருகிலேயே நின்றதன் விளைவாக இருக்கலாம் என்றெண்ணினேன். நான் செழுநன் அல்லவே. எனைக் கண்டு மிரளவோ மருளவோ தேவையே கிடையாதே. மிரட்சிக்களை கண்களில் இல்லை. மீறின ஒரு பரவசம் இப்போது காண முடிந்தது அவளது கண்களில்.

எழுந்தவள் என்னருகே வந்ததும் விரிந்திருந்த என் இடது கையின் ஆட்காட்டி விரலை தனது வலது கையால் கெட்டியாக பிடித்துக் கொண்டாள். என் கைகளில் அழுக்கே படியவில்லை. ஆனால் நான் அவளாய் மாறி நிற்கிறேன்.

இடது கையில் தரையில் கிடந்த எலும்புத்துண்டை எடுத்தவள், ‘உம்’ என்பதாய் தலையசைத்தாள்.

புரியாமல் நிற்கிறேன்
.
’உம்’ என்கிறாள் மறுபடியும்.

வெறுமனாய் நிற்கிறேன் நான்.

‘போலாம்’ என்றது தான் புரிகிறது.

அது அவள் மொழி. வறுமையின் பிழிந்தெடுத்த பாவமொழி.

தூர்வாரப்பட்ட சாக்கடையில் கழிவு நீர் வேகமாய் ஓடிக் கொண்டிருந்தது. மிதக்கும் பிளாஸ்டிக் கிளாஸ்கள் அருகாமையின் டாஸ்மாக் கடையை அடையாளங்காட்டியது. சாக்கடையான மனநிலையை மாற்ற முடியாது தவிக்கிறேன். வறுமையின் மொழி வறுமையின் சின்னம் என்னுள் அய்க்கிய மாகிறது. நான் அதாகிறேன்.

விரலைப் பிடித்து இழுத்தது பிஞ்சுக்கை. மென்மையாய் இருக்கிறது அதன் ஸ்பரிசம். சாக்கடைக் கழிவுகள் அப்பியிருந்தாலும் மென்மையை உணர்ந்தேன் நான். அவளது இழுப்புக்கு அடிபணிந்து பேசாது நடக்க ஆரம்பிக்கிறேன்.

கடைத்தெருவில் இருந்த எனது கடையை அடைந்து எதானாலோ ஆட்டுவிக்கப்பட்டவனாய் அனிச்சையாய் செய்கைகள் புரிந்து கொண்டிருக்கிறேன். கடையின் கதவை திறக்கிறேன் நான்.

என் கையை விடுத்து விடுவிடுவென வேகமாய் எனக்கு முன்பேயே கடைக்குள் நுழைந்தவள் சுவற்றில் பொருத்தியிருந்த சட்டகத்துள் தன்னை பொருத்திக்கொள்கிறாள். கொழுத்து செழித்து பூரித்திருந்த பதுமைகள் அச்சட்டகத்திலிருந்து காணாமல் போகின்றன. கூடவே அவள் கையிலிருந்த எலும்புத்துண்டும் மாயமாகிறது. இப்போது கடை முழுவதும் வறுமையின் சாயை வியாபிக்கிறது.

நான் அவளைப் பார்க்கிறேன். சட்டகத்திலிருந்து என்னைப் பார்த்து சிரிக்கிறாள் அவள். நானும் அவளை நோக்கி மென்சிரிப்பை உதிர்க்கிறேன்.

வெளியே வானம் பெரும் இடியோசையுடன் பளீரிடுகிறது. மேகமூட்டம் மற்றும் மழையின் வரவு இரண்டும் ஒரு சேர்ந்து புது வாசனையோடு பரவுகிறது.

காலைப்புழுக்கத்தின் காரணம் மெதுவாய் புரிய ஆரம்பிக்கிறது எனக்கு.

நான் வெகு தூரம் வந்துவிட்டிருக்கிறேன்.

பாலை நிலத்தில் ஒண்டியனாய் நிலைக்கண்ணாடியில் என் முழு உருவத்தையும் பார்த்து பூரித்துக்கொண்டிருக்கிறேன்.

நான் தானா இவன்?

கேள்வி எழுந்து அடங்கும் முன்பேயே நீர்த்துப்போகிறது நிலைக்கண்ணாடியில் என் பிம்பம் மாயமான ஆதாமின் எலும்புத்துண்டாய்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *