நானும் என் பஞ்சாயத்தும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 28, 2019
பார்வையிட்டோர்: 8,473 
 
 

என்னை பற்றி கொஞ்சம் அறிமுகம் செய்து கொள்வது நல்லது. அறிமுகத்தில்தான் என்னுடைய தொழில் இரகசியமே அடங்கியிருக்கிறது.சாதாரணமாக இன்னார், இன்ன வேலை செய்கிறார் என்றால் அது கேட்பவர்களுக்கு சுவாரசியத்தை தராது. அது போல என்னை போன்றவர்களுக்கு இன்னொருவர் அறிமுகப்படுத்தித்தான் பழக்கம். அதுவும் கையில் ஒரு ஒலிபெருக்கி கருவி இருந்தால் இன்னும் செளகர்யம்.

இப்பொழுது உங்களுக்கு இலேசாக புரிந்திருக்கும் என நினைக்கிறேன். இப்பொழுது என்னை மற்றொருவர் அறிமுகப்படுத்துவது போல என்னை நானே அறிமுகப்படுத்தி கொள்கிறேன். இந்த பேட்டையிலே பேரன்பு கொண்ட மக்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்தும், நம் கட்சித்தலைமைக்கு முதுகெலும்பாகவும், நம் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வருங்கால தலைவராகவும் விளங்கும் அண்ணன்..காபாலீசுவரன் அண்ணன்…. போதும் என்று உங்களுக்கு தோன்றியிருக்கும்.இதுதான் என்னுடைய தொழில்.

எப்படியோ உங்கள் கணிப்பில் வீட்டில் வெட்டி ஆபிசராக இருந்தாலும் நான்தான் குடும்பத்தை கவனித்து கொண்டிருக்கிறேன் என்று வெளி உலகத்துக்கு காண்பித்து கொண்டிருக்கிறேன். உண்மையில் என் மனைவி ஒரு இடத்தில் வேலை செய்து இரு குழந்தைகளையும், என்னையும் பராமரித்து வருகிறாள்.

சரி விசயத்துக்கு வருவோம். காலையில் என் மனைவி வழக்கம்போல வேலைக்கு கிளம்புமுன் இராசி பலனை படிப்பாள். என்னுடைய பலனையும் படித்து சொல்லிவிட்டு போவாள்.” இன்று உங்களுக்கு அறிமுகமாகும் நபரிடம் கவனமாக இருக்கவும்” என்று சத்தம் போட்டு படித்து விட்டு ஏங்க..இது உங்களுக்குத்தான், சொல்லி விட்டு கிளம்பி விட்டாள்.

நான் என்ன தொழிலில் இருக்கிறேன் என்று தெரியாமல் அவள் சொல்லி விட்டு போகிறாள் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு சிரித்துக்கொண்டேன். குழந்தைகளும் பள்ளிக்கு கிளம்பி சென்ற பின், இன்று என்ன செய்யலாம் என்று யோசனையுடன் நின்று கொண்டிருந்தேன். எப்படியும் ஏதோ ஒரு பிரச்சினை என்று யாராவது ஒருவர் எனக்கு வந்து மாட்டிக்கொள்வார்கள் என்பது எனக்கு அத்துப்படி..

ஐயா..ஐயா..குரல் கேட்டவுடன் என் தலை விலுக்கென நிமிர்ந்த்து. இன்றைய நாளுக்கு வேலை வந்து விட்டது. வீட்டில் மனைவியோ, குழந்தைகளோ இருந்தால், அவர்களை அனுப்பி
யார்? என்ன வேணும்? என்று கேட்டு அதன் பின் அவர்கள் வந்தவர்களை கூட்டிக்கொண்டு வந்து என்னை பார்த்தால்தான் நான் செய்து கொண்டிருந்த வேலைக்கு மதிப்பு. ஆனால் பாருங்கள், இவர்கள் யாரும் இல்லாததால் நானே போய் தொலைய வேண்டியிருக்கிறது. மனதுக்குள் வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு யார் என்று பார்க்க வெளியே சென்றேன்.

வெளியே நின்று கொண்டிருந்தவருக்கு வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும்,தலை நரைத்திருந்த்து,கொஞ்சம் பதட்டமாய் இருப்பது போல் முகம் காண்பித்த்து.

நீங்கதான் இந்த ஏரியா தலைவருங்களா? குரலில் நம்பிக்கையில்லாமல் இருந்தது.

நான் தலைவரோ இல்லையோ ஒருவர் வீட்டு வாசலில் நின்று நீங்கள் தலைவரா என்று கேட்கும்போது என்னால் பொய் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

ஆமாப்பா நாந்தான் தலைவர் இந்த ஏரியாவுக்கு.உங்களுக்கு என்ன வேணும்?

அவர் நம்பிக்கையில்லாமல் என்னை பார்ப்பது தெரிந்தது

ஏய்யா இந்தா ஏரியா தலைவர் நாந்தான்னு சொன்னா இப்படித்தான் நம்பிக்கையில்லாம பாப்பியா?

கோபித்துக்கொள்ளாதே தம்பி..எனக்கு ஒரு காரியம் ஆகணும்?.

முகத்தை கடுமையாக வைத்துகொண்டு இப்ப உங்களுக்கு என்ன காரியம் ஆகணும்?

ஒண்ணுமில்லை, எனக்கும், பக்கத்து வீட்டுக்காரருக்கும் கொஞ்சம் இடம் தகராறார இருக்குது, அவரு ஏதோ ஒரு கட்சியில் இருக்கறாரு, எனக்கு யாரும் இல்லை, அப்ப மத்தவங்க கிட்ட கேட்டப்போ உங்க பேரை சொன்னாங்க, நீங்க வந்தா அதை எல்லாம் தீர்த்து வைப்பீங்களாம்மா, அதுதான் உங்களை கூட்டிட்டு போகலாமுன்னு வந்தேன்.

இது ஒன்றே போதும், என்னை போன்றவர்களுக்கு,முகத்தில் புன்னகை வர என் பேரை சொன்னாங்களா, கொஞ்சம் இருங்க வந்துடுறேன்.

இது பஞ்சாயத்து விவகாரமல்லவா, உள்ளே சென்று நான் சார்ந்திருர்ந்த கட்சி வேட்டியை அணிந்து இருக்கும் ஒரே வெள்ளை சட்டையை அணிந்து வெளியே வந்தேன்.

இப்பொழுது நான் மிணு மிணுப்பதாகவும் வந்த ஆள் நிறம் மங்கி விட்டதாகவும் எனக்கு தோன்றியது.

வந்தவன் மெல்ல ஏதாவது வண்டி கொண்டு வந்திருக்கீங்களா? என்ற கேள்வியை வீசினேன்.

தம்பி மூணாவது தெருவுலதான் தம்பி என் ஊடு இருக்குது, அப்படியே நடந்து போயிடலாம், சொல்லி விட்டு அவர் பாட்டுக்கு முன்னே நடக்க ஆர்மபித்து விட்டார்.

இப்பொழுது எனக்கு இருதலை கொள்ளி நிலைமை, அவர் பின்னால் நான் நடந்தால் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள், வேக வேகமாக நடந்து அவரை கடந்தேன்.இதற்கே எனக்கு மூச்சு வாங்கியது வேறு விசயம்.

எப்படியோ மூன்று தெரு தள்ளி வரிசை வீடுகளாய் இருந்த பகுதிக்கு வந்து விட்டோம்.

என்னுடன் வந்தவர் தன் வீட்டை காண்பித்து இதுக்கு இடது பக்கத்து வீட்டுக்கார்ர்தான் தகராறு செய்வதாக தெரிவித்தார்.

சரி நீங்கள் வீட்டுக்குள் போங்கள், நான் பேசிக்கொள்கிறேன், அவர் போவதை கவனிக்காமல் அவர் காண்பித்த வீட்டு வாசலில் நின்று கொண்டு வீட்டுக்குள்ள யாருங்க?.

என் குரல் கேட்டு வெளியே வந்த ஒரு பெண் என்னை பார்த்து யார் நீங்க? என்று கேட்டாள்.

நான் பெண் என்றதும், கொஞ்சம் தயங்கி வீட்டுல ஆம்பிளை யாராவது இருக்காங்களா?

எதுக்கு கேக்கறீங்க? அவரு வேலைக்கு போயிருக்கறாரு.

எனக்கு அதற்கு மேல் அந்த பெண்ணிடம் என்ன பேசுவது என்று புரியவில்லை, ஒண்ணுமில்லை, உங்க வீட்டுக்காரரு வந்தா நான் வரேன் சொல்லி விட்டு மெல்ல அந்த இடத்தை விட்டு நகர முயற்சி செய்தேன்..

அந்த பெண் என்னை நகர விடவில்லை, நீங்க யாரு?எதுக்கு ஆம்பளை யாருமில்லையான்னு கேட்டீங்க?

எனக்கு தர்மசங்க்டமாகி விட்டது, இப்பொழுதே நடந்து சென்றுகொண்டிருந்தவர்கள் திரும்பி பார்ப்பதாக ஒரு பிரம்மை.

அம்மா உங்க பக்கத்து வீட்டுக்காரரு எங்க வீட்டுக்கு வந்து நீங்க அவர் கூட சண்டை பிடிக்கறதாகவும், அதை சமாதானம் பண்ணி வைக்கணும்னு சொல்லி கூப்பிட்டு வந்தாரு.

அந்த பெண் நம்பிக்கையில்லாமல் பார்த்தாள்.எந்த பக்கத்து வீடு?

நான் அவளது இடது புறத்தில் உள்ள வீட்டை காண்பித்து அவரை நாந்தான் வீட்டுக்குள்ள போங்க, அவங்க கூட பேசிகிட்டு உங்களை கூப்பிடறேன்னு சொன்னேன்.

இந்த வீட்டுலயா? அந்த பெண்ணின் கேள்வியே என்னை பயமுறுத்தியது.

பூவக்கா, பூவக்கா, இங்க கொஞ்சம் வாங்க?

அவள் குரல் கேட்டு வெளியே வந்த பெண்ணுக்கும் இதே பெண்ணின் வயதுதான் இருக்கும்.

என்ன பொன்னம்மா கேட்டுக்கொண்டே,வெளியே வந்தாள்.

உங்க வீட்டுல இருந்த யாராவது போய் நமக்குள்ள சண்டை பஞ்சாயத்து பண்ண வாங்கன்னு இவரை கூட்டிகிட்டு வந்தாங்களா?

யாரு என்ன பஞ்சாயத்து? எங்க வீட்டு ஆம்பளங்க எல்லாம் வேலைக்கு போயிட்டாங்களே

அந்த பெண்ணின் பதிலில் அரண்டு போனேன்

இந்த வீட்டுக்குள்ளதான் அந்த ஆள் போனாரு, குரலில் ஒரு பதட்டத்துடன் சொன்னேன்.

என்னயா வம்பா இருக்குது? நீ வேணா உள்ளே வந்து பாருய்யா? நான் வீட்டுக்குள்ளதான் இவ்வளவு நேரமா இருக்கேன்.என்னைய தாண்டி எவனும் உள்ளே எப்படி போக முடியும்.

அதற்குள் அந்த வரிசை வீட்டில் ஏறக்குறைய எல்லா பெண்களும் வாசலுக்கு வந்து விட்டனர்.

என்ன? என்ன? என்ற கேள்வியும், அந்த பெண் வந்தவர்களுக்கெல்லாம் இவர் பஞ்சாயத்து பண்ண வந்திருக்காறாம் என்று சொல்லி சொல்லி என்னுடைய நிலையை தர்ம சங்கட படுத்தினாள்.

சரி இங்கிருந்து கிளம்புவதுதான் நல்லது என்று நினைத்துக்கொண்டு மன்னிச்சுங்குங்க அம்மா, என்று அவசர அவசரமாக சொல்லிக்கொண்டு நடையை கட்டினேன்.

பின்னால் அவர்கள் சிரிப்பது எனக்கு காதில் நாரசாரமாய் விழுந்து தொலைத்தது.

அந்த ஆள் மட்டும் கிடைக்கட்டும் தொலைத்து விடுகிறேன், மனதுக்குள் கருவிக்கொண்டே நடந்தேன் என்று சொல்வதை விட ஓடினேன்.

அடுத்த வாரத்தில் அதே ஆள் வேறொரு இடத்தில் பஞ்சாயத்து பண்ண இதே போல் வேறொருவரை அழைத்துக்கொண்டு வேறொரு தெருவை காண்பித்து கொண்டிருந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *