நாடி வைத்தியர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 12, 2022
பார்வையிட்டோர்: 2,148 
 
 

(1934ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருவெண்காடு, சின்னப்பண்ணை சிதம்பர முதலியார் தம் வீட்டுப்புறத் திண்ணையில் உட்கார்ந்து கணக்குப்பிள்ளை காரியஸ்தர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது சுமார் எட்டு மணி இருக்கும். அவர் கணக்குப் பிள்ளையைப் பார்த்து, “அதோ தெருவில் வருகிறவர் யார்? புதியவராக இருக்கிறாரே” என்று கேட்டார்.

“அவரை நீங்கள் இன்னமும் பார்க்கவில்லையா? அவர்தான் வினை தீர்த்தான் குடியிலிருந்து வந்திருக்கும் வைத்தியர். இவ்வூருக்கு வந்து ஒரு மாதமாயிற்று. அவர் நாடி பார்ப்பதில் அதிகத் திறமையுள்ளவர். ஆதலால் அவரை நாடி வைத்தியரென்றே எல்லோரும் அழைக்கிறார் கள். அவரை இங்கே கூப்பிடுகிறேன்.”

“என்ன நாடி வைத்தியரே, இவ்வளவு காலையில் புறப்பட்டீர்? இங்கே வாரும்.”

“இங்கேதான் வர வேண்டுமென்று கிளம்பினேன். நல்ல சகுனமாயிற்று. முதலியாரவர்களை நெடு நாளாகப் பார்க்க வேண்டுமென்று ஆவல் கொண்டிருந்தேன். இன்றைக்கும் தரிசனம் கிடைத்தது.”

இவ்வாறு கூறித் திண்ணையருகில் வந்தவுடன் முதலியார் அவரைப் பார்த்து, “வாரும்; உட்காரும். உம்மைப்பற்றி மிகவும் சிறப்பாகக் கணக்குப்பிள்ளை பேசுகிறார். ஏதோ நாடி பார்ப்பதில் மிக்க சாமர்த்திய முள்ளவராமே; இதோ என் கையைப் பாரும்” என்று கூறிக் கையை நீட்டினார்.

வைத்தியர் முதலில் வலது கை நாடியைப் பார்த்தார்; பிறகு இடது கை நாடியைப் பார்க்கையில் முதலில் ஒரு விரலை வைத்தழுத்திக் கவனித்து, “ஓ, நீர்க்கோவையா? சரி” என்று கூறினார். பிறகு மற்றொரு விரலைப் பக்கத்தில் வைத்துக் கவனித்து, “வெங்காயம் சாப்பிட்டதாலும் தூக்கம் கெட்டதாலும் வந்ததா? சரி!” என்றார். பிறகு பக்கத்தில் மற்றொரு விரலை வைத்துக் கவனித்த பின், “என்ன? மிளகா? எவ்வளவு? பன்னிரண்டா? சரி” என்று சொன்னார்.

இவைகளையெல்லாம் கேட்ட முதலியார் வியப்படைந்து, “என்ன வைத்தியரே! நாடியோடு பேசுகிறீர். நான் வெங்காயம் சாப்பிட்டதும் கண் விழித்திருந்ததும் உண்மைதான். ஆனால் அவை எப்படி நாடியிலிருந்து உமக்குத் தெரிந்தன?”

“தாங்கள் தந்தி ஆபீசுக்குப் போயிருக்கிறீர்களே; அங்கே கடகட வென்று அடிக்கும் சப்தத்தினால் விஷயங்களை அவர்கள் எப்படிச் சொல்லுகிறார்கள்?”

“அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் எழுத்துக்களுக்குச் சங்கேதங்கள் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் அறிந்து கொள்ளுகிறார்கள்.”

“அதுபோலவேதான் நாடிகளுடைய பாஷைக்கும் சங்கேதங்கள் உண்டு. அவை எங்கள் குடும்பத்தவர்களுக்குத்தான் கிடைத்திருக்கின்றன. தேவருலகிலுள்ள வைத்தியர்களுள் தன்வந்தரிக்கு மாத்திரம் தெரியும்.”

“அப்படியா! உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?”

“அது தான் ரகசியம். ஆனால் இவ்விடத்தில் கூறுவதனால் பாதகமில்லை; சொல்லுகிறேன்: எங்கள் முன்னோர் உஜ்ஜயினி நகரத்தில் ஆதிகாலத்தில் இருந்து வந்தனர். அங்கே விக்கிரமாதித்தன் அரசாண்டு வருகையில் அவனுடைய குமாரனுக்கு மண்டைக் குடைச்சல் உண்டாகித் துன்பப்படுத்தியது. அக்காலத்திருந்த எங்கள் குலத்தவராகிய காலயுக்தி என்பவரை அழைத்து அரசன் கேட்டான். அவர், ‘குமாரர் நீரை அருந்தும்பொழுது தவளையின் முட்டை ஒன்று உள்ளே சென்று இருதயத்தின் வழியாய்த் தலைக்கேறித் தவளையாகித் தங்கியிருந்ததால் குடைச்சல் உண்டாகின்றது’ என்று சொன்னார்.

‘என்ன காலயுக்தி, தவளை எப்படித் தலைக்குள் உயிரோடு இருக்கும்? நீர் சொல்லுவது புதுமையாக இருக்கிறதே!’

‘மகாராஜா, இது ஒரு புதுமையா? கல்லிற்குள் தேரை இருந்து சப்தம் செய்வதைக் கண்டதில்லையா?, அதைப் போன்றதேதான் இதுவும்.’

‘ஓ! அதனால்தான் குமாரன் தூங்குகையில் தலைக்குள்ளிருந்து சப்தம் கேட்கிறது. நல்லது; அதற்கு என்ன சிகிச்சை செய்வது? சொல்லும்.’

‘தலையைப் பிளந்து தவளையை எடுக்க வேண்டும். அது செய்வதற்குத் தன்வந்தரியைத் தவிர வேறொருவருக்கும் தெரியாது. அவரை வர வழைக்க வேண்டும்.’

“அது கேட்ட அரசன் தனது தவவலிமையால் தன்வந்தரியை அழைத்துச் சிகிச்சை செய்யும்படி வேண்டினான். அவர் அதற்கிசைந்து குமாரனது தலை ஓட்டை நீக்கிப் பார்க்கையில் தவளை மூளையைக் கவ்விக் கொண்டிருந்தது. அதைப் பிடித்திழுத்தால் மூளை விழுந்துவிடுமே, என்ன செய்வதென்று சிறிது ஆலோசித்தார். அப்பொழுது பக்கத்திலிருந்த காலயுக்தி தம் கையில் தயாராக வைத்திருந்த நீர் நிறைந்த தட்டை மூளையினருகில் கொண்டு வந்தவுடன் நீரில் தவளை பாய்ந்தது. உடனே மண்டை ஓட்டை மறுபடியும் மூடி விட்டுத் தன்வந்தரி காலயுக்தியைப் பார்த்து, உன் பெயருக்கு ஏற்றபடி தகுந்த உபாயம் செய்தாய். அதனால் எனக்கு உண்டாகிய ஆனந்தத்திற்கு அளவில்லை. நீ செய்த உபகாரத்திற்குப் பிரதியாக உனக்கு நாடிகளின் பாஷையை உபதேசிக்கிறேன். அதை உங்கள் குலத்தவர்களுக்கே உபதேசித்து வரவேண்டும்; அதுவும் மூத்த மகனுக்கே உபதேசித்து வரவேண்டும்’ என்று சொல்லி உபதேசம் செய்தார். அது முதல் பரம்பரையாய் வந்து கொண்டிருக்கிறது.”

இது கேட்ட முதலியார் வைத்தியரை நோக்கி, “நீர் சொல்வது சரிதான். ஆனால் மூன்று விரல்களால் பார்த்துத் தனித்தனியாய்க் கேட்டீர்களே; அதெப்படி? சொல்லும்.”

“முதலியார், வெகு சூட்சுமமாகக் கவனித்திருக்கிறீர்கள். அது வும் அதிக ரகசியமானது; இதுவரையில் யாருக்கும் நான் சொன்னதில்லை. சாதாரணமாக வைத்தியர்களெல்லாம் இரண்டு கைகளிலும் நாடி பார்ப்பார்கள். ஆனால் அதன் காரணம் இன்னதென்று அறியார்கள். எல்லா ரும் இரண்டு கைகளிலும் பித்த வாத கபமென்று மூன்று நாடிகள் பேசுவதாகக் கூறுவார்கள். அவர்கள் இதன் உண்மையை அறியார். வலக்கை நாடிகள் இம் மூன்றையுமே காட்டும். இடது கை நாடிகளோவென்றால் நோய், அதன் மூலகாரணம், அது தீரும் வழி ஆகிய மூன்றையும் முறையே காட்டும். இதுவும் தன்வந்தரியால் சொல்லப்பட்ட விஷயம். இதைக் குறிப்பதற்காகவே திருவள்ளுவரும், ‘நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தீரும் வாய் நாடி’ என்று மூன்று நாடிகள் சொல்லியிருக்கிறார்.”

“வைத்தியரே! சற்று நிறுத்தும்; என்ன, தோன்றியபடியெல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டீர்! இந்தக் குறளில் நாடி என்பதற்கு ஆராய்ந்தறிந்து என்றல்லவோ பொருளுரைக்கிறார்கள்?”

“பண்டிதர்கள் அவ்வாறு தான் பொருள் கூறுகிறார்கள். ஆனால் நான் சொல்லியது தான் அதன் உண்மைப் பொருளென்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இதுதான் பொருளென்று திருவள்ளுவரே எங்கள் குலத்தவ ராகிய காலநேமிக்குக் கூறியுள்ளார். ஆதலால் இப்பொருள் எங்கள் குலத்தில் பரம்பரையாய் வந்து கொண்டிருக்கிறது.”

“இதென்ன விபரீதம்! திருவள்ளுவரை உங்கள் குலத்தவர் எப்படிச் சந்தித்தார்”

“அதைக் கூறுவேன்: நாயனார் சிவஸ்தலந்தோறும் சென்று வருகையில் வினை தீர்த்தான் குடியை அடைந்த பொழுது அவருக்குச் சுரம் கண்டது. அப்பொழுது அங்கே வந்து சேர்ந்திருந்த காலநேமியை அழைத்து அவர் கையைக் காட்டியபொழுது காலநேமி நாடிகளின் பாஷையை அறிந்து கூறக் கேட்டு அதிசயித்துத் தாமும் இதன் உண் மையை அறிவிக்க வேண்டியே இக்குறளில் நாடி என்னும் பதத்தை மூன்று தடவை உபயோகித் திருப்பதாகக் கூறினராம்.”

“வைத்தியரே, உம்மிடத்தில் பேசிக்கொண்டிருந்தால் பொழுது போவது தெரியாது. நல்லது; இப்பொழுது என் நீர்க் கோவைக்கு என்ன செய்ய வேண்டும்?”

“அதற்கா? பன்னிரண்டு மிளகெடுத்துச் சட்டியிலிட்டு வறுத்துக் கால்படி நீர் விட்டு வீசம் படியாகக் காய்ச்சி இறக்கி அதில் நான்கு சொட் டுத் தேன் விட்டு அருந்துங்கள். மிளகு பன்னிரண்டு இருப்பது அவசியம். ஏனெனில் ஆதித்தியர்கள் பன்னிருவர் அல்லவா? அவர்கள் தாமே நீரைச் சுருக்குபவர்கள்?”

இவ்வாறு கூறி வைத்தியர் எழுந்து சென்றார்.

முதலியார் அவருடைய சக்தியில் ஈடுபட்டவராய் அவரைக் குடும்ப வைத்தியராக வைத்து வேண்டிய அளவு திரவியம் அளித்து வந்தார்.

இவ்வாறு ஒரு வருஷ காலம் சென்ற பின் அவ்வூரில் ஒரு விஷ சுரம் கிளம்பியது. முதலியார் வீட்டில் அனைவரும் சுரத்தால் வருந்தினர். அதே சமயத்தில் வைத்தியருக்கும் சுரம் கண்டது. முதலியார் இரண்டு மூன்று நாள் சொல்லியனுப்பியும் வைத்தியருக்கு வர முடியவில்லை. அப்பொழுது முதலியார் வைத்தியரால் வர முடியாவிட்டால் சிஷ்யனை யாவது மருந்துடன் அனுப்பும்படி சொல்லிவிட்டார். உடனே தம் சீடனாகிய மதிவாணனை அழைத்துக் கை பார்த்து நோயின் காரணங்களை எப்படி அறிந்து சொல்ல வேண்டுமென்பதை ரகசியமாகக் கூறிக் கட்டு மாத்திரையையும் கொடுத்தனுப்பினார். மதிவாணன் முதலியார் வீட்டரு கில் வந்து வெளியில் சுற்றிப் பார்த்து விட்டு உள்ளே நுழைந்து கூடத் தில் படுத்திருக்கும் முதலியார் அருகிற் சென்று உட்கார்ந்தான். முதலி யார் கைகளைக் காட்டினார் சீடன் நெடு நேரம் கைகளை ஊன்றிப் பார்த்து ஒன்றும் பேசாமலிருந்தான். அது கண்ட முதலியார், “என்ன மதிவாணா, பேசவில்லை? நாடி என்ன சொல்கிறது? சும்மா பயப்படாமல் சொல்” என்றார்.

“என்ன சொல்லுகிறது? சுரம் கடுமையாய்த்தான் இருக்கிறது. ஒரு குதிரையைத் தின்றுவிட்டால் சுரம் எப்படிக் கடுமையாக அடிக்காமலிருக்கும்?”

“குதிரையாவது தின்னவாவது! என்ன பிதற்றுகிறாய்? மதிவாணா, உனக்குச் சுரம் அடிக்கிறதோ? சன்னி கண்டிருக்கிறதா?”

“அதெல்லாமில்லை. அதோ மூலையில் குதிரைஜேணம் மாத்திரம் வைத்திருக்கிறது. குதிரையைக் காணவில்லை. ஆகவே நீங்கள் அதைத் தின்றிருக்க வேண்டுமென்று தீர்மானித்தேன். என்னுடைய குரு தங்கள் வீட்டின் வெளிப்புறத்திலிருக்கும் குப்பையிலுள்ள பொருள்களால் என்ன பதார்த்தம் சாப்பிட்டீர்களென்று சொல்ல வேண்டுமென்றார். குப்பையில் ஒன்றும் காணப்படவில்லை. இங்கே குதிரைச் சாமான்கள் காணப்பட்டன. ஆனதால் நான் இவ்வாறு தீர்மானித்தேன்.”

இது கேட்ட முதலியார் தாம் அதுவரையில் வைத்தியரால் வஞ்சிக்கப்பட்டதை நினைந்து வருந்தி மதிவாணனை நோக்கி, ‘நீ போய் வைத்தியரைச் சுரம் விட்டவுடன் வரச் சொல்” என்றார்.

மதிவாணன் சென்று நடந்த விஷயங்களை வைத்தியருக்குத் தெரிவித்தான்.

அவர் நம்முடைய வஞ்சனை வெளியாகிவிட்டதே, இனி இங்கு இருக்கலாகாது என்று அன்றிரவில் சீடனும் தாமுமாய் வண்டியேறி ஊரை விட்டு ஓடிப்போயினர்.

மறுநாள் வைத்தியர் வீட்டிற்கு அனுப்பிய வேலைக்காரன் முதலியாரிடத்தில் வந்து வீடு பூட்டியிருப்பதாகவும் வைத்தியர் போன இடம் தெரியாதென்றும் சொன்னான்.

– ஜூலை, 1934 – கலைமகள் கதம்பம் (1932-1957), வெள்ளி விழா வெளியீடு, முதற் பதிப்பு: ஏப்ரல் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *