நவயுகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 10, 2022
பார்வையிட்டோர்: 4,050 
 

ஓவ்….Z8 எனக்கு கொஞ்சம் வீக்காயிருக்கு. காட் பற்றி மாத்த வேணுமோ தெரியேல்லா. அட ஸ்ரொக்கும் இல்லை.

ரபிலட் எடுத்தியா, எனக்கு சரியான பசியாக் கடக்கு. நான் எடுக்கிறன்….

மாத்திரையில் தான் இவர்கள் சாப்பாடு, அனைத்து இயக்கத்திற்கும் பற்றிகள்தான் பயன்பாடு. வசிப்பது (F) பிலையிங் றூம். அது தரையிலும் கடலிலும் வானிலும் லாவகமாக பிரயாணிக்கும். இப்போ பிரான்ஸ்சில் நிற்கிறது நாளை – ருமெனியா போகிறது. நாளைய தேதி 18-02-2240.

பிரான்சில்தான் இவர்கள் கோட்பிளையில் ரைக்ஸ் கட்ட வேண்டும். Z8க்குப் பணிக்கப்பட்ட வேலை இந்துமா சமுத்திரத்தில் எங்காவது ஒரு மீனாவது இருக்கிறதா என்ற ஆராய்ச்சிப்பணி. எப்போதும் தண்ணிக்குள் திரியும் அவன் ஒட்சிசன் முடிய 3, 4 மாதத்துக்குப் பிறகுதான் தரைக்கே வருவான். தனிமை, தனிமை, தனிமை, அவனுக்கு ஏதோ பழகிவிட்டது.

மிஸ்டர் G3யின் வேலை மழை பெய்விக்கிற ஒபீசில மாதத்தில் 6 நாட்கள் மட்டும் ஒப்பிறேட்டர் வேலை. கெமிக்கல் கலப்பது, ஆவியாக்குவது, அதை சிலிண்டரில் பில் பண்ணி பிறகு அதை பிளேயிங் ரூமில் ஏற்றி வானில் விசிற வேணும். ஒரு மணிநேரம் மழை தொடர்ந்து பொழியும். 7 நிமிடம் முதல் 10 நிமிடம் வேலை கொஞ்சம் கஸ்டம்தான். ஆனால் ஒரு மக்கள் சேவையான பணி என்டபடியால் மனதில் கொஞ்சம் சந்தோஷம்.

இண்டைக்கு பி.எம் மலெசியா செரவாக் போக வேணும். அங்கதான் அவர்களின் தந்தை MODT-2 வின் பொடியை பதப்படுத்தி சமாதி வைத்திருக்கிறார்கள். அந்தாளும் 203 வருஷம் வாழ்ந்து போன வருஷம்தான் மூளையில் பொருத்தின றிமெப்பறிங் சேக்கிற் I.C திடீரெண்டு பியூஸ் போய் டெத்தாயிட்டார். இரவு 12.00 மணிக்கு பிறேயர் பண்ண 198 வயது சித்தப்பாவான P.A 013 யும் கியூபாவில இருந்து வாறதெண்டு போன வருஷமே என்ர சட்டலைட் கிஸ்ரி டயரியில மெசேச் போட்டவர்.

எங்கட மம்மி EOH+4 வரமாட்டா. அவா 13 வது கலியாணம் கட்டி இப்ப பேர்த்தில பாக்கிங்கில நிற்கிறா எண்டு என்ர கதிர்வீச்சு கடிகாரம் – அலாம் பண்ணினது. அவ எப்பிடிப் போனாலும் அவ எங்கட அம்மாதானே.

ருமேனியா அழகாய் இருந்தது. கடைகள் எங்கும் நகம் வளராமல் இருக்க சிறந்த கிறீம் NNOT”P கிறீம் எண்டு விளம்பரப் பலகைதான். இரண்டு நாள் பாக்கிங் முடித்து இன்றிரவு கனடா பயணம் போனோம். நயாகராவில் ஒரே கூட்டம். கடந்த எட்டு நாளில் இதுவரை 4 ரொப் தண்ணீர் வீழ்ந்தது என்று விளம்பர ஸ்கிறீனில் விரிவான விளக்கமும் பிரதியாக்க வீடியோ அஞ்சலும் ஓடிக் கொண்டிருந்தது. எங்கோ மெட்டி ஒலி ஓ… ஓ… இந்த சனத்துக்க எங்க தமிழ்ச் சனமும் ஒண்டு நிக்குது போல.

ஏய்… ஏய் 38 பெயின் றிமூவ் எடு….. எடு என்ர முள்ளந்தண்டு வலிக்குது உடனபிடி. 3 நாளா நித்திரையே கொள்ளேல்ல. இண்டைக்கு ஒரு 35 நிமிசமெண்டலும் ரெஸ்ட் எடுக்க வேணும் எண்டு என்ர பொடி ஹெல்த்சூஸ்ரர் எலாம் பண்ணினத நான் மறந்து போனன் என்டு என்ர பிளாற்றினப் பற்கள் நாக்கோடு சப்புக் கொட்டிக் கொண்டன.

இப்ப எங்கட பிளையிங் றூம் இங்கிலீஸ் கால்வாயில் போய்க் கொண்டிருந்தது. ராடர் ஸ்கிறீனில திருப்பதி யானை ஒரு செக்கன் பார்த்துக் கும்பிட்டன். இப்ப திருப்பதி கைவேக்கும் பவுண் தகடு பதிக்கிறாங்களாம், ஒரு மாதத்தில் சராசரியாய் 3 பேர் மட்டும் தரிசனத்து வருகினமாம்.

பிறேக் பெஸ்ட் ரபிலட் ஒண்டு போட்டன். இப்ப அதின்ர டிசைனையும் சைசையம் மாத்திப் போட்டாங்கள். ஆனால் அதில 185 நிமிசத்துக்குப் பசியிருக்காது எண்டும் 15-10-2360 எக்ஸ்ப ரி டேட்டும் இருந்தது. பசுபிக்சீயில 10 நாள் பாக்கிங் போடலாம் எண்டு முடிவு பண்ணி வேஸ்ட் சீ கொன்ரோல் ஒபீசில என்ரிபாசும் நெட்டில எடுத்திட்டோம். இருந்தாலும் எமர்ஜென்சி மெசேஜ் ஒன்று வந்தது. மாலைதீவு, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், ஹவாய், பியூறி, ஐஸ்லண்ட் என்ற நாடுகள் காணாமல் போன 159ஆவது ஆண்டு நிறைவு நாள் பிரார்த்தனையில் எல்லா நாட்டு பிரசின்டனும் இன்னும் 9 நிமிசத்தில பசுபிக்சீயில் கூடுகினமாம். இன்னும் 20 நிமிசத்துக்கு வெளியாட்கள் கடல்ல போகேலாதாம்.

பத்து நாள் எப்படிப் போனது என்று தெரியவில்லை . அடிக்கடி மூனில செட்டிலான BSP-6 மச்சான் F.M. சனல்ல கதைப்பான். நாளையிண்டைக்கு 5.36 P.M முதல் 7.58 வரை தங்களுக்கு பவர் கட்டாம். ஏணென்டால் அப்ப சந்திரகிரகணம் எண்டும் சொன்னான். அங்க பிளையிங் றூம் பாவிக்கேலாதாம். சொந்தமான நிலம் வாங்கித்தான் இருக்க வேணுமாம். வருஷத்தில் ஒரு திருவிழா மட்டும்தான் நடக்குமாம். அதுதான் ஏதோ புண்ணிய தடவிழாவாம். என்னெண்டு விசாரிக்க அதுதாண் நீல்ஆம்ஸ்ரோங் 1969 ஜூலை 20 திகதி முதன் முதல் கால் பதித்த நாள். ஏதோ வாழ்க்கை போகுது எண்டு அலுத்துக் கொண்டான்.

அங்கிருந்து (F) பிலை பண்ணி ரஷ்யா, மெங்கோலியாவுக்குப் போனோம். ஏதொ அருங்காட்சியகமென்டு சனமெல்லாம் அள்ளுப்பட்டுதுகள். நாங்களும் போய்ப் பார்த்தோம். அது முந்தி மனிதர்களுக்கு முடி எண்டு சொல்லி ஏதோ தலையில் முளைக்கு மாம். அதிலும் ஆம்பிளைகளுக்கு முகத்திலையும் வளர்ந்து பெரிசாத் தொங்குமாம். அதை சீர் செய்யிறத்துக்கு சலூன் எண்ட பெயரில உள்ளது. தான் அது என்டு கைடு விளக்கம் தந்தான். அங்க சனங்கள் உடுப்பு அதுக்கு மேல எங்களப்போல நொன் அக்ஸிடன் பர்முலா கோட்டும் போடாமல் நிர்வாணமாக திரிஞ்சது அதிசயமாக இருந்திச்சு.

Z8… Z8….. ராடர்ல கிறீன் சிக்னல் பீப் பண்னுது. என்ணன்டு பார். X…X.. G3 V… நீ சென்னையில எடுத்த அதிஸ்டலாபச் சீட்டுக்கு 20-12-2242 ல செவ்வாய்க் கோளுக்குச் சுற்றுப் பயணம் போக சான்ஸ் கிடைச்சிருக்கு. ஹப்பி ஹப்பி ஹப்பி ஜேனி. நானும் ராடரில் பார்த்தேன். மகிழ்ச்சி தாளவில்லை. அத்தோடு பக்கத்தில் விலத்திச் சென்ற பிளையிங் றூம் (OOEXPO-3) ராடரில் பதிந்தது. அதில் 103 வயதிருக்கும் அழகான கன்னி என் கண்களைப் பறித்தாள். எனக்கும் 116 வயதாகிவிட்டது. ஒரு 40 நிமிடமென்றாலும் அவளோட குடும்பம் நடத்த மனம் துடிக்குது.

G3 ஏதாவது உணர்ச்சிவந்தால் பிறவுண் சுகர் ரபிலட்டும், நெத்தலின் கப்சூலும் எடுப்பான். எனக்கு அதில் நாட்டமில்லை. நிஜமான உணர்வும் பாசமும் அனுபவித்தால்தானே தெரியும்.

ராடரில் வேள்ல்ட் F.M நியுஸ் போய்க் கொண்டிருந்தது. இலங்கையில் பிரிவினைவாதிகளுக்கு எதிரா அரசு இராணுவத்தில் இன்னும் ரெண்டு கோடியே 60 லட்சம் குளோனிக் இராணுவ வீரர்களை உற்பத்தி செய்யவுள்ளது. மகாத்மா காந்தியின் மூக்குக் கண்ணாடி இன்று முதல் உலகிலுள்ள 686 நாடுகளுக்கும் சுற்றுப் பயணமாக எடுத்து வரப்படவுள்ளது.

அவுஸ்திரேலியாவில் இம்முறை இடம்பெறவுள்ள வேள்ல்ட் கப் கிறிக்கெட் போட்டியில் கொள் முதலான டிக்கெற்கள் குலுக்கல் மூலம் அதிஷ்டம் பார்த்து முதல் பரிசாக ஒரு பிளையிங் றூமும் அதற்கான 30 வருஷ சேவிஸ்சும் இலவசமாக வழங்கப்படும்.

சவுத் ஆபிரிக்க காட்டில் யானை என்கின்ற மிருகத்தின் வெண்மையான நீண்ட உறுப்புப் பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விலங்கு 200 வருடங்களுக்கு முன் இப்பகுதியில் செறிவாக வாழந்திருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சினிமா நிறுவனமான A.V.M, V.M.S, M.S.J, S.J.P என்பவற்றில் கடந்த 200 வருடங்களாக நெடுந்தொடராக ஒளிபரப்பான வைர நெஞ்சம் என்னும் மெகா தொடர் நாடகம் தற்போது J.P.C இயக்கத்திலும் 30 வருடங்களாக நெடுந்தொடராக ஒளிபரப்பப்படுவது கின்னஸ் புத்தகத்தில் உலக சாதனை நெடுந்தொடராகப் பதிவாகியுள்ளது. குழந்தை பிறந்து 24 மணித்தியாலத்துக்குள் செலுத்தக்கூடிய வகையிலான எயிட்ஸ் தடுப்பு மருந்தை அமெரிக்கா சந்தைப் படுத்தியுள்ளது. இதன் மூலம் எயிட்ஸ் இல்லாத மனித சமூகம் உருவாகும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மனித சமூகம் எண்டு சொல்லிச்சினம். சமூகமெண்டால் என்ன? ஒருவனாக இருப்பவன் குடும்பமாக, உற்றார், சுற்றத்தார், ஊர், பிரதேசம், நாடு என்று வாழும்போதுதானே சமூகம். இப்ப எங்க அப்படி? ஒவ்வொருவரும் தனித்தனியப் பறந்து திரியிறாங்கள். இப்போது மனித சமூகம் எண்டு சொல்ல முடியுமா? என்ன இருந்தாலும் நான் தமிழன் எண்டபடியால் அண்ணனோட அடிக்கடி சந்திச்சு கதைச்சு உலாவித்திரியிறன். இன்னும் 65 மணித்தியாலம் தான் எனக்கு லீவு. திருப்பி இந்துமா சமுத்திரத்துக்குள்ள இறங்க வேணும். எங்காவது மியூசியத்துக்குப் போவோம் எண்டு நினைச்ச போது லண்டன் மியூசியம்தான் ஞாபகத்துக்கு வந்தது. மெக்சிக்கோவில் இருந்து யு.கே.க்குப் போய் தேம்ஸ் நதியில பிளேங் றூமை இறக்கி மியூசியத்தைப் பார்த்தோம்.

இது…காஸ் அடுப்பு…இது பிளேன்…இது…கைத் தொலைபேசி,…மோட்டர் சைக்கிள், பேனா, புத்தகம், கயிறு, கொம்யூட்டர், சிகரெட், சீப்பு, சவள், எண்டு எங்கட சனம் 350 வருஷத்துக்கு முன்னம் பாவிச்ச பொருட்கள் எண்ட பிரிவில வைச்சிருந்திச்சு. எனக்கும், அண்ணாவுக்கும் ஒரே ஆச்சரியம். சரியான மகிழ்ச்சி. அடுத்த புளக்கில புகைப்படப் பிரிவு எண்டு இருந்திச்சு. அதில் 3ஆவது உலக மகாயுத்தக் காட்சி, சீனப் பெருஞ்சுவர், ஆகாய கடல் வெளிச் சமர் வெற்றிவிழா, எட்டுக்கையுடன் பிறந்த குழந்தை, உலகின் மிகமிகச் சிறிய கோபுரமான C.N.N டவர், இலங்கை மலையக உடுவற எஸ்டேட்டில் தேயிலைக் கொழுந்து பறிக்கும் பெண்கள், பிடல் காஸ்ரோ, நடிகர் ஜாக்கிசான், இப்படி உலகின் உன்னதமான நிகழ்வுகளினதும், வரலாற்று மனிதர் களதும் படங்களோடு இங்கிலாந்தின் தற்போதைய இளவரசியான சின்சுகியின் படமும் இருந்தது.

என் அருகில் ஆவலோடு படங்களைப் பார்த்த ஒரு வெள்ளைக்கார நண்பரைக் கேட்டேன், சின்சுகியின் வரலாற்றைச் சொல்ல முடியுமா? என்று. அவர் சொன்னார். இங்கிலாந்தில் குடியேறிய ஈழத் தமிழர்களின் ஏழாவது தலைமுறையில் உதித்த வராம் இந்த சின்சுகி. இவரின் முன்னோரில் ஒருவர் ஈழத்திலிருந்து வந்து இங்கிலாந்து ராணியோட சம்பந்தம் வைச்சதாலதானாம் அந்த கௌரவமாம். அவவின்ர பேர் சின்னத்தம்பி சுகிர்தாவாம். ஆனால் சின்சுகியென்டால்தான் உலகறியுமாம். நல்ல பண்பாளராம். லண்டனில் கின்ர காடின் முதல் கம்பஸ் வரை இங்கிலீசையும் இரண்டாவது மொழியாக ஏற்றுக் கொள்ளலாம் எண்டு பரிந்துரைச்சவாவாம். ஆனால் இன்னும் ஐக்கிய ராச்சியத்தை ஆளும் தமிழ் பிரபுக்கள் சபை அங்கீகரிக்கேல்லை எண்டு ஒரு பெரிய கிஸ்ரோறியே சொன்னார். அன்பாக விடைபெற்று அடுத்த புளக்கிற்குள் போனோம். அங்கே, உலகிலுள்ள 686 நாடுகளின் வரைபடங்கள், அமைவிடங்கள், வரலாறுகள், மொழி, கலை, கலாச்சாரங்கள், தலைவர்கள், போன்ற பலவும் காணப்பட்டன. அதில் 2000 ஆண்டளவில் அதிகம் பேசப்பட்ட மொழியான “மாண்டரின்” என்னும் மொழியை தற்போது நால்வரால் மட்டுமே பேச முடியுமாம். நந்திக் கொடியோடு ஐரோப்பாவில் மட்டும் தமிழர்கள் 6 நாடுகளில் ஆட்சி புரிகிறார்களாம். சுவஸ்திக் இலச்சனை பொறிக்கப்பட்ட அவர்களின் பணமான “சுவஸ்திக்” பணப் புழக்கத்திலும், பெறுமதியிலும் 2ஆவது இடம் பிடித்துள்ளது என்ற விபரமும் இருந்தது.

டுத்த புளக்கிற்குள் சென்றோம். முட்டைக்குள் பிள்ளையார், அரிசியல் சாயிபாபா, கண்ணாடிக் கிளாசுக்குள் கீதோபதேசக் காட்சி எண்ட பல தினுசில வரைகலையின் சிறப்பையும், வினோதமான முறையையும் பேணியிருந்தார்கள். அந்தக் காலத்தில எங்கட ஆக்கள் எவ்வளவு நேரம் செலவழிச்சு இப்பிடி கலைகளை வளர்த்திச்சினம், இப்ப எண்டால் முடியுமோ?

என் கதிர்வீச்சுக் கடிகாரம் என் லீவு முடியுதென்டு பீப் பண்ணுது. நான் என்ன பண்ணுறது. நான் இனி இந்து சமுத்திரத்துக்க இறங்கப் போறன். நீங்களும் இந்த நவயுகத்தில மூழ்கியிருப்பியள். ஒருக்கா உங்கள கிள்ளிக் கொள்ளுங்கோ.. நீங்கள் இருப்பது கலியுகம். OK பாய்…

– என் மாதாந்திர ஓய்வூதியம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2012, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *