கொஞ்சம்கூட ஜோதி எதிர் பார்க்காத ஃபோன் அது. மறு முனையில் அந்தக் குரலைக் கேட்டதும், மெய் மறந்து போனாள் ஜோதி.’ எப்படி இருக்கீங்க?! நல்லா இருக்கீங்களா? நான், கொஞ்சம்கூட உங்ககிட்டா இருந்து ஃபோன் வரும்னு எதிர்பார்க்கலை!’. மகிழ்ச்சிப்பெருக்கில் வார்த்தை கிடைக்காமல் அல்லாடினாள் ஜோதி!.
எத்தனை வருஷமாச்சு?! ஒன்றாய்ப் பணியாற்றி, உணவு வேளையில் ஒண்ணாக் கூடி உட்கார்ந்து மகிழ்ந்து கொண்டுபோனதைப் பகிர்ந்துண்டு..! சொல்லப் போனால், வேக வைத்த முட்டையை ஊறுகாய் தொட்டுக் கொண்டு சாப்பிடும் அலாதிச் சுகானுபவத்தை சொல்லிக் கொடுத்த குருவாச்சே?!’ அந்தக் குருவின்குரல் கேட்டதே கோடி நட்சத்திரத்தை கொட்டி மாலையாக்கிச் சூட்டினாற்போல குதூகலம் கொடுத்தது.
அடுத்து, ‘இப்ப எப்படி இருக்கீங்க? என்ன விசேஷம்? என்ன திடீர்னு ஃபோன்?!’ என்றாள் ஜோதி.
மறுமுனையில் ‘நம்பர் கிடைக்காத்தால்தான் இத்தனை நாள் ஃபோன் பண்ணலை! சாரி!. ரங்கராஜ்தான் உங்க நம்பர் தந்தார். அவரும் நம்மோடு ஒர்க் பண்ணினவர்தானே?! நான் இப்போ ‘ஹெச்எம்’ ஆயிட்டேன்!’ என்றபோது. ஒருவிதப்பெருமிதம் குரலில்.
இருவருடைய உரையாடலையும் இடை மறிக்காமல் கேட்டுக் கொண்டிருந்தான் இருதயராஜ்.
பேச்சு அடுத்த கட்டத்தை எட்டியது.
‘ஹெச்எம் ஆயிட்டீங்களா? வெரிகுட்..! எப்ப ரிட்டயர் மெண்ட். ஒடம்பெல்லாம் நல்லாத்தானே இருக்கு?!. இல்லே, எதுக்குக் கேட்டேன்னா?!.. இப்பல்லாம் ஒர்க் லோட் ஜாஸ்தியாச்சே?! அதான் கேட்டேன்!’ என்றாள் ஜோதி.
இடைமறித்த இருதயராஜ். சொன்னான். ‘இதபாரு… இருபது வருஷத்துக்கு முன்னாடி ஒண்ணா ஒர்க் பண்ணின பர்வதத்தோடு பேசறே?! ஆரம்பிக்கும் போதே நலம் விசாரிச்சதானே? இவ்வளவு நேரம் கழிச்சு ரொம்ப நாள் பேசாம இருந்து பேசறவங்ககிட்டே கேட்கக்கூடாத கேள்விகளை ஏன் கேட்கிறே?’ என்றான்.
‘சரி.. அப்புறம் பேசறேன்னு வந்த போனை துண்டித்துவிட்டு, இருதய ராஜ் பக்கம் திரும்பி, ‘அப்படி என்ன கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டுட்டேன்?!’ கேட்டாள் ஜோதி.
‘எப்ப ரிட்டயர் மெண்ட்? என்ன சம்பளம் வருது? ஒடம்பு பரவாயில்லையான்னு வயசான ஒருத்தர்ட்ட கேட்கவே கூடாது! ரிட்டயர்மெண்ட் ஏஜுன்னு வந்துட்டா ஒடம்புக்கு சுகர் பிரஷர் எல்லாம் வரது இயற்கை! . நீண்ட நாள் கழிச்சுப் பேச வாய்ப்புக் கிடைச்சவங்க.. நல்ல சந்தோஷமான சம்பவங்களைப் பகிர்ந்துக்கறதோட பேச்சை முடிச்சுக்கணும். அத விட்டுட்டு கடைசியா பேச்சை முடிக்கப் போகும் நேரத்தில் மறுபடியும் நலம் விசாரிக்கறது அந்தப் பக்கம் பேசற நபரின் அசெளகரித்தை நினைவு படுத்தி, நிம்மதி கெடுத்தாமாதிரி ஆறதுக்கும் வாய்ப்புண்டு.
அதுனாலதான் ஃபோன் பேசும்போது, நலம் விசாரிப்போடு பேச்சைத் தொடங்கறோம்., நன்றி! வணக்கம்! வாழ்த்துக்கள்!’னு பேச்சை முடிக்கிறோம்’ என்றான் இருதயராஜ்.
அவன் சொல்வது உண்மைதான்..
ஏன்னா, அவங்களும் ‘வயசாச்சில்ல., அதுனால சுகரும் பிரஷரும் தொர்ந்தரவு பண்ணுது! எங்கயும் வெளிய போறது, வரதில்லை என்றார் பேச்சை முடிக்கும் போது, விரக்தியாக!!. அதை நினைவு கூர்ந்த ஜோதிக்கு இருதயராஜின் வார்த்தைகளில்; நியாயமிருப்பதாய்த் தோன்றியது. எப்படி மகிழ்ச்சியாய்த் தொடங்கிய பேச்சு பொசுக்குனு முடிஞ்சு போச்சுன்னு நினைத்துக் கொண்டாள்.