பட்டாசுப்பாண்டியின் பட்டாசுக்கடை களையிழந்துப்போயிருக்கிறது.கடையைப்பார்க்க தீபாவளி கடையாகத்தெரியவில்லை.கடை துடைச்சிக்கிடக்கிறது.
“ அண்ணே…. இந்த வெடி எவ்வளவுண்ணே…”
“ இது என்ன வெடிண்ணே…”
“ அண்ணன்ணே……எனக்குக் கொடுத்திருங்கண்ணே…..”பலா பழத்தில மொய்க்கும் ஈக்களைப்போல கடையில்கூட்டம் மொய்யோ மொய்னு மொய்க்கும்.கூட்டம்,நெரிசல்,கைநீட்ட, எக்கிப்பார்க்க, தள்ளுமுள்ளு, சச்சரவென…கடை எப்படியெல்லாமோ இருக்கும்….
கடையில்எதிர்ப்பார்த்தக்கூட்டமில்லை.ஒன்றிரண்டுப்பேர்கடையச்சுற்றி நின்றுக்கொண்டு பட்டாசுகளை எடுத்துப்பார்க்கிறதும், விலையைக்கேட்கிறதும், ஒருத்தரையொருத்தர் பார்த்துக்கிறதும், உதட்டைப் பிதுக்கிறதுமாக இருக்கிறார்கள்.
கடையில் இருக்கிற ஒரு பெரிய்….ய மேசையில பட்டாசுகள்குவிந்துக்கிடக்கிறது.ஆய்ந்துக்கட்டிய பைத்தங்காய் பிஞ்சுகளைப்போல சரவெடி.குவித்த பல்லாரியைப்போல வெங்காய வெடி.கோபுரம் சாய்ந்த புஸ்வானமென……விதவிதமான பட்டாசுகள்.கந்தகத்தையும் நைட்ரேட் உப்பையும் கலந்துச்செய்தப் பட்டாசுகள்.டெசிபலைக்கூட்டநிக்கல், செம்பு, பொட்டாசியமென உலோகக் கலவைகளைக்கலந்துச் செய்தப்பட்டாசுகள்.ரொம்ப வருசத்திற்கு முன்னேஆல்பர்ட் நோபல்னுஒருத்தர்நைட்ரோ கிளிசரின் வெடிப்பொருளைக் கண்டுப்பிடிச்சராமே…அதை மலை உடைக்க, போர் நடத்த உலக நாடுகளுக்கு விற்றாராமே….அந்த வெடி பூமி அதிர சும்மா ‘டமா……..ர்’னு வெடிக்குமாமே…. அந்த வெடியைப்போல அதிர்ந்து வெடிக்கும பட்டாசுகள்.பிஞ்சுக்குழந்தைகள் செய்தப்பட்டாசுகள்.சிவகாசிப்பட்டாசுகள்.
எத்தனை ரகம்….எத்தனை மலிவு….ஆனால் கூட்டம்…? ஊகூம்…..! தீபாவளிக்கு மறுவாரம், மறுமாதம் நடக்கும் மந்தமான வியாபாரம்தான் நடந்துக்கொண்டிருக்கிறது.சில்லறை விற்பனை.நூற்றுக்கும் இருநூறுக்கும் நடக்கும் விற்பனை.‘இந்த நிலை நீடித்தால்…..?’ இதைநினைக்கிறப்பவேமனசிற்குள்அரிப்பு எடுக்கிறது.பயம் கலந்த சொறிந்துக்கொள்ள முடியாத அரிப்பு அது.
விடிந்தால்தீபாவளி.இராத்திரிக்குள்மொத்தப் பட்டாசையும் விற்றுக்காசாக்க வேணும்.சேட்டுக்கடையில இருக்கிற நகையைமீட்டாகணும்.கடையில்வேலைப்பார்க்கிற பையன்களுக்கு போனஸ் கொடுக்கணும்.பொண்டாட்டி புள்ளைக்கு சேலைத்துணிமணி எடுக்கணும்….இத்தனையும் ஆகணும்….!ஆகுமா…..? மனசுக்குள் திரித்திரிக்கிறது.நெஞ்சுக்குழிக்கு சற்று மேலே பட்டாசு வெடிக்கிறது.தீபாவளி தலையில்எண்ணையைவைக்குமோ…?இல்லைமுகத்தில்கரியைத்தான்பூசுமோ….?பதில் தெரியாதக் கேள்வி புஸ் வானமாகஎழுந்து அடங்குகிறது.
தீபாவளிக்கு தீபாவளி கடன் சொல்லிபட்டாசு வாங்குகிற கருப்பையன் இந்தப்பக்கம் வரக்காணோம்.ஆயிரம் ரூபாய்க்கு வெடி வாங்கி ஐநூறக்கொடுத்திட்டுமீதியைத் தலையில் தடவுகிற அய்யாவு கடைப்பக்கம்எட்டிப்பார்க்கவில்லை.முதல் ஆளாகக் கடைக்கு வரும் சோமனைக்காணோம்.அவன் மகன் ரவியைக்காணோம்…இவங்களெல்லாம் நீண்டகாலத்து நெருக்கங்கள்.சூடுப்போட்டாலும் வேறுக்கடைக்குப்போகாத கடைப்பிரியர்கள். ‘பட்டாசுப்பாண்டிக் கடையில்தான் பட்டாசுவாங்குவேன்’ என கொக்குப்போல நிற்கிறவர்கள்.பாசக்கார வாடிக்கையாளர்கள்.
சின்னத்தம்பி தீபாவளி இரண்டு நாள்இருக்கமொத்தமாகச் சரக்கு வாங்கி அவன்ஊரில்அவன் பெயருக்கேற்ப குட்டிக்கடையாகப்போடுகிறவன்.இந்நேரத்து வரைக்கும் அவன் வரக்காணோம். வருவானா….? மாட்டானா…? ரஜினி அரசியலைப்போல கணிக்க முடியவில்லை.ஒரு வார்த்தை கேட்டுத்தான்புடுவோமே….அலைபேசியை எடுத்து எண்களைத் தொடுக்கிறார் பட்டாசுப்பாண்டி.
“ யாரு….சின்னத்தம்பியா….? ”
“ ஆமாண்ணே…..”
“ என்னப்பா… தீவளிக்கடைபோடலையா….?”
“ போட்ருக்கண்ணே”
பட்டாசுப்பாண்டியின் உசிர் அறுகுது.உருவமற்ற பூதம் தொண்டைக்கும் நெஞ்சுக்கும் இடையே பாயுது.
“ எங்கேடாம்பி பட்டாசு வாங்கின…?“
“ ஒருத்தர் கொடுத்தார்ண்ணே….வித்துக்கொடுத்தால்கமிசன்ணே….வித்திட்டு இருக்கேண்ணே….”
“ எவ்ளவுடாம்பிகமிசன்…..? ”
“ நூத்துக்கு இருபதுண்ணே….”
“ எப்படி போவுது…?”
“ நல்லாப் போகுதுண்ணே….”
“ நல்லான்னா….?”
“ போன வருசத்த விட நல்லா போகுதுண்ணே.பத்தாயிர ரூவா வெடி இதுவரைக்கும் வித்திருக்குண்ணே…”
அலைபேசியை அணைத்துகால்ச்சட்டை பைக்குள்ள திணித்துக்கிறார் பாட்டாசுப் பாண்டி. ஏமாற்றம் முகத்தில் சப்பென அறைகிறது.மேசையில்குமித்து வைத்திருக்கிற பட்டாசுகளைப் பார்க்கிறார்.விலையாக வேண்டியப்பட்டாசுகள்கடையில கேட்பாரற்று கிடக்கிறது. விலைப்போகக்கூடாத சின்னத்தம்பி யாருக்கோ விலைப்போயிட்டானே…. நெஞ்சுக்கூட்டுக்குள்பற்ற வைத்த பாம்பு மாத்திரையாக ஏமாற்றம் கிளம்புகிறது. மயக்கம் கிர்ர்……ரென வருகிறது.
முத்துப்பாண்டிஓலைவெடியில்வியாபாரத்தைத் தொடங்கிராக்கெட்உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறபட்டாசு வியாபாரி.முத்துப்பாண்டி என்று சொன்னால் யாருக்கும் தெரியாது.பட்டாசுப்பாண்டினு சொன்னால்தான் சுற்றுவட்டாரத்திற்குத்தெரியும்.பட்டாசுப்பாண்டி என்பது செய்யும் தொழிலுக்குகிடைத்தப்பெயர்.இலக்கணப்படி சொல்ல வேண்டுமென்றால் வினையாலணையும் பெயர்.
“ பட்டாசுப்பாண்டி பட்டாசு எப்படி வெடிக்கும்…?”
“ டக்கரா வெடிக்கும்”
இவரது பட்டாசுக்குஊர்க்காரர்கள் கொடுத்திருக்கிற அக்மார்க் முத்திரை இது.
அவர் பட்டாசு வியாபாரத்துக்கு வந்து வருசம்பத்து ஆகிறது.மொத்த வியாபாரம்.அஞ்சு சதம் லாபம் வைத்து விற்கிற வியாபாரம். நூறு ரூபாய்க்கு பட்டாசு விற்றால்அஞ்சுரூபாய்இலாபம் கிடைக்கும்.நியாயமான வியாபாரம்.பட்டாசு வாங்கிறவர்கள் விலையைக்கேட்டு நெஞ்சு வெடிக்க வைக்காத வியாபாரம்.
தீபாவளிக்கு மட்டும் கடை விரிப்பவரல்ல பட்டாசுப்பாண்டி.எப்பவும் பட்டாசுதான் தொழில்.எத்தனையோ தீபாவளியைடமீர்…டுமீர்…னு கொண்டாட்டத்தோட வழியனுப்பி வைத்திருக்கிறார்.எத்தனையோ லட்சத்திற்கு வியாபாரம் பண்ணிருக்கிறார்.வியாபாரம் ‘பார’மானது இந்த தீபாவளிக்குத்தான்.
இரண்டு லட்சம் சரக்கு.அவ்வளவும் சிவகாசி சரக்கு.கொள்முதல் விலையில் வாங்கி ஒவ்வொரு செக்போஸ்ட்லயும் ஆயிரம் ரெண்டாயிரம் கையூட்டுக்கொடுத்து கொண்டு வந்து சேர்த்தச் சரக்கு.
“ இந்தாப்பிடி…..அரசியலை ஆட்டி படைக்கும் வெங்காய வெடி. சோடி பத்தே ரூவாதான்…. ”
“கொடுத்த வாக்குறுதியமறந்துப்போன புஸ் வானம் ஒன்னு பத்து ரூவா”
“குழந்தைகள வசீகரிக்கும் மத்தாப்பு.சித்திரம் போல சிரிக்கும் பட்டாசு.ஒரு பெட்டி அம்பது ரூவா, அம்பதே ரூவாதா…”
“ சாட்டை, சரம், யானை, லெட்சுமி….வாங்க…. வாங்க….வாங்க….”
கத்தி ,கத்தி தொண்டை வறண்டுப்போய்விட்டது. உச்சந்தலைக்கும் உள்ளங்காலுக்குமிடையே ஏமாற்றம் சுருண்டு பாய்கிறது.
எத்தனையோ வகை வெடிகள்.அத்தனையும்நவராத்திரி கொலுவைப்போல வைத்தது வைத்தபடிஇருக்கிறது.போன வருடம் நல்ல வியாபாரம்.பாக்கெட்டைநிரப்பவில்லை என்றாலும் மனசைநிறைத்தவியாபாரம்..சுறுசுறுப்பான வியாபாரம்.போட்ட முதலீட்டை நலுங்காமல், குலுங்காமல் எடுத்த வியாபாரம்.
“அண்ணே… புதுவெடி என்னண்ணே இருக்கு…? ”
“ டபுள் ராக்கெட் இருக்கா…?”
“சாட்டை வெடி இருக்கா….? ”
அந்த வியாபாரம் இந்த வருசம் இல்லையே! ஏன்…? செத்துப்போன நரகாசுரன் பிழைச்சி வந்திட்டானோ…?.நரகாசுரன் பிறக்கவுமில்லை, அவன் சாகவுமில்லை. ஏன்டா கொண்டாடுறீங்க தீபாவளி….?னுஈரோட்டுக்கிழவன்கேள்விக் கேட்டிருந்தாரே அதுக்கு விடைக்கிடைத்து விட்டதோ….!இத்தனை நாளும் வராத பகுத்தறிவு இன்றைக்கென பார்த்து மண்டைக்குள் ஏறி உட்கார்ந்து விட்டதோ…!
பட்டாசு வெடிக்கிறதனால்காற்று நஞ்சாகுதாம்.வானத்தோட கற்பு ஓசோன்ல ஓட்ட விழுகுதாம்! பட்டாசு வெடிக்காதீங்க…வெடிக்காதீங்க…செய்தித்தாளில் யாரோ ஒருத்தர் அறிவிப்புக்கொடுத்திருந்தார். அதைப்படிச்சிட்டுஅத்தனைப்பயல்களும் திருந்திட்டான்களோ….?. அறிவுரை கேட்கிறப்பயல்களா நம்ஊரில் இருக்காங்க….? செய்வினை, குறி, மந்திரம் எதுவும் வேலை செய்யுதோ….? மனசுக்குள்ள திரி திரிக்குது.சுர், சுர்…. என்கிறது.
அதெல்லாம் இருக்காது! மக்கள்கையில காசுப்புழக்கமில்லை.மக்களும் என்னதான் செய்வார்கள்.அவர்கள் பாவம்!மாதமொரு பண்டிகைனு இருந்தால் அவர்கள்பணத்திற்கு எங்கேதான்போவார்கள்…? நூறு நாள்வேலைஇல்லை.அப்படியே இருந்தாலும் அந்தப்பணமும் நேராக கைக்கு வருவதில்லை.அப்படியே வந்தாலும் முழுசாகவீடு போய் சேர்வதில்லை.வழிப்பறி கொள்ளையனைப்போல முக்கத்துக்கு முக்கம் டாஸ்மாக். பட்டாசுக்கடைக்கு வர வேண்டிய வருமானம் அந்தக்கடைக்குத்தான் போகிறது….
வயிற்றைத் தடவிப்பார்த்துக்கிறார் பட்டாசுப்பாண்டி.பசி….தலை சுற்றுகிறது.தலையை மெல்ல வெளியே நீட்டி எல்லாக்கடைகளையும் பார்க்கிறார்.
சரண்யா துணிக்கடை குளத்துதண்ணீரைப்போல நிரம்பி வழிகிறது.சேது மளிகைக்கடையில் கூட்டம் அலைமோதுகிறது.தெருவெங்கும் மக்கட்திரள்.முடிச்சு முடிச்சாக மனிதத்தலைகள்.திருவோணம் மாட்டுச்சந்தையைப்போல ஜனநெருக்கம்.கட்டுக்குள் அடங்காதக்கூட்டம்.என் கடை மட்டும் ஏன் இப்படி வெறிச்சோடிக்கிடக்கிறது..?.கேள்விக்கணை குடைகிறது.
“ தம்பி…இங்கே வாய்யா…..”
“ அண்ணே…. வாங்க.”
கூப்பிட்டுப்பார்க்கிறார் பட்டாசுப்பாண்டி.வாலிபப்பயல்கள்நரகலைப்பார்ப்பதைப்போல கடையை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு ‘சரட்…புரட்…டென ’நடக்கிறார்கள். வெறும் கையோட போகிறவர்கள்கையில திரும்பி வருகிறப்ப ஒரு பெரியப்பை பட்டாசு.நடையில அத்தனை மிடுக்கு.பூப்பூவாய் பொரியும் புன்னகை.
“பரவாயில்லப்பா…. இந்த வருஷம் தீவளிய அமர்களமா கொண்டாடிப்புடலாம்பா…”
“வெடி இப்படி மலிஞ்சி சந்திச் சிரிக்கிதே….”
“ வெடிய பார்த்து எச்சரிக்கையா வெடிக்கணும். செம அதிரு அதிரிது…..”
இப்படியாக சரவெடி பேச்சுகள்.மத்தாப்பு புன்னகையில் நனைந்தக்குரல்கள், கொக்கரிப்புகள், குதூகலங்கள்.
“ எங்கேயிருந்து வெடி வாங்கிக்கிட்டு வாராங்க…? யாருடைய கடையிலிருந்து வாங்கிக்கிட்டு வாராங்க…?” பட்டாசுப்பாண்டியின் கண்கள் படக்,படக்கென அடிச்சிக்கிறது.கண்ணீரில் இமை நனைகிறது.கைலியைத்தூக்கிக்கட்டிக்கொண்டு ஆளோடு ஆளாக ஓடுகிறார்படடாசுப்பாண்டி.
கடைத்தெருவின்கடைசி விளிம்பில ஒரு கடை. முன்னறிவிப்பின்றி முளைத்திருக்கிறக் கடை.பெரிய்….யக்கடை.திடீர்க்கடை.
பலா பழத்திலமொய்க்கும் ‘கொய்…..ய்’ ஈக்களைப் போல கடையில மொய்க்கிறது கூட்டம். ஒருவரையொருவர் அடித்துக்கொண்டும், மோதிக்கொண்டும், முட்டிக்கொண்டும்…..கும்மாளம், குதூகலம்.
“ ச்சே…. நெறிக்காதீங்கப்பா…..”
“அட கொஞ்சம் வழிய விடுங்கப்பா…..பணம் கொடுத்திட்டே. வாங்கிக்கிட்டு போயிடுதேன்”
“அண்ணே…. நான் ஐநூறு ரூவா கொடுத்திக்கேன்.மறந்திடாதீங்க. மேலப்போயி வெடிக்கிற வெடியாகக்கொடுங்க…”
கேட்டல், கெஞ்சல், கை நீட்டல்….
“ அப்படியெல்லாம் பிரிச்சித்தரமுடியாதுப்பா. பொட்டலம்தான்.புடிச்சா வாங்கிக்கோ.இல்ல… இடத்தக்காலிப்பண்ணு” – கடைக்காரரிடமிருந்து அதிர்வாணமாக சீறும்வார்த்தை.எரிக்கும் சுர்ர்…..பார்வை.
“ போய்ய்…………ய நீயும் உன் வெடியும். நான் போறே பட்டாசுப்பாண்டி கடைக்கு….”.யாராவது ஒருத்தன் சீறுவானா…? தோரணம் போல வெடிப்பானா…? ஊகூ..ம்!பொட்டு வெடி அளவிற்குக்கூட எதிர்ப்புக் கிளம்பவில்லை.விதவிதமாக மீசை வைத்து வீரத்தை பட்டாசுக்கடையில் தொலைத்தப்படிவிடலைப்பருவங்கள்.
“சாரிங்கண்ணே… சாரிங்கண்ணே….தெரியாம கேட்டுட்டேண்ணே….நீங்க கொடுக்கிறதைக்கொடுங்கண்ணே…”சுயமரியாதையற்ற கெஞ்சல்.முதுகெலும்பற்ற நாணல்.வெடியைத்தூக்கிப்பார்க்க ,விலையைக்குறைத்துபேரம் பேச, முன், பின் வழுக்கை விழுந்துப்போன பெரிசுகள்.
“ இது என்ன வெடிண்ணே….?”
கடைக்காரர் பேனாவைக் காதினில் சொறுகிக்கொண்டு வெடியை ஒரு கையில் எடுத்து தலையை ஒரு பக்கமாகச்சாய்த்தப்படி படிக்கிறார்.
“ டெட்ரா வெடி”
“ அப்படின்னா…?”
கடைக்காரர் கீழேக் குனிஞ்சி இமையை உயர்த்திப் பார்க்கிறார்.
“ என்னப்பா… நீ. படிச்சிருக்கிறீயா இல்லையா…?”
சுற்றி நிற்கிற பையன்களின் தலைகள் சட்டென ஒடிகிறது.
“ தெரியாமத்தானே கேட்கிறான். சொன்னாலென்ன…?”குறுக்கிடுகிறார் ஒரு பெரியவர் .
கடை முதலாளி,கேள்விக்கேட்ட சிறுவனையும் அந்தப்பெரியவரையும் மாறிமாறிப்பார்க்கிறார்.
“ மோனோ, டை, ட்ரை, டெட்ரா, பெண்டா..இப்ப சொல்லுடெட்ரானா எத்தனை…?”
“நாலு”
“ ம்.இந்த வெடி நாலு தடவை வெடிக்கும்”
சிறுவர்கள் மத்தியில் தேனீக்கூட்ட களைத்த மாதிரி கிளம்பும் “ கொய்ங்க்….” சத்தம்.அவர்களின் முதுகுத்தண்டு சிலிர்த்து நிமிர்கிறது.
“ ஒரு வெடி நாலுத்தடவ வெடிக்குமா…?”
“ என்ன சந்தேகமாக இருக்கா….?”
“ ம்ண்ணே! ”
வெடியை சட்டெனப் பிரிக்கிறார் கடைக்காரர்.திரியை வெளியே எடுத்து விடுறார்.“ இந்தா…. தூரத்திலப்போயி இதக்கொளுத்து. நான் சொன்னபடி வெடிச்சா வாங்கிக்கோ…”
எனக்கு, உனக்கென போட்டிப்போட்டுக்கொண்டு கைகள் நீள்கிறது.யாரோ ஒருவன் கைக்கு வெடிப்போகிறது.
“ அய்…..”
அவன் ‘மாக்’கென துள்ளிக்குதிக்கிறான்.
“வாங்கடா…. வாங்க…..”
அவன் சோட்டுப்பையன்களை அழைச்சிக்கிட்டு தூர ஓடுகிறான்.மண்ணைக்குவித்து வெடியை அதில் வைக்கிறான்.ஒரு காகிதத்தில் துளையிட்டு அதை திரிக்குள் நுழைக்கிறான்.ஒரு தீக்குச்சியால் காகிதத்தைப் பற்ற வைக்கிறான்.
“ சுர்ர்….”
“ டமார்…..”
“அய்…..”
குழந்தைகள்வானத்திற்க்கும் பூமிக்குமாக குதிக்கிறார்கள்.குதித்துக்கொண்டே வானத்தை அன்னார்ந்துப்பார்க்கிறார்கள்.வானிலிருந்து கீழே விழும் நட்சத்திரங்களாக தீப்பொரிகள்.
“ டமார்….”
இன்னும் கொஞ்சம் மேலே போகிறது வெடி. ‘பளிச்’ சென மின்னல் வெட்டு. கண்களைப்பறிக்கும்பிரகாசம்.
“டுமீர்…”
இன்னும் கொஞ்சம் மேலே “ டப்”
ஆணும்,பெண்ணும் , சிறிசும், பெரிசுமாக கடையை ‘ கொய்ங்’ ஙென மொய்க்கிறார்கள்.
“ எனக்கு இந்த வெடில ஒன்னு கொடுங்க”
“ எனக்கும்…”
“ எனக்கும்….”
கடையில் தள்ளுமுள்ளு.கைகலப்பு.சுறுசுறுவென, திரியில் முன்னேறும் நெருப்புப்போல வியாபாரம் நடந்தேறுது.
“ நெக்கு அந்த வெடிதான் வேணும்…” கால், கைகளை உதறி அடம் பிடிக்கும் சிறுசுகள்.
. “ அந்த வெடி எவ்வளவுண்ணே…?”
“ எவ்வளவு இருக்கு.விலையக்கேட்காதே. இந்தா வச்சிக்கோ…”
“ புஸ் வானம், மத்தாப்பு வானம், தொரட்டி வெடி, அட்டாம் பாம், கிங்க் பிஷர் வெடி, ரெட்ட வெடி, அதிர்வானம்,…..எல்லாம் சேர்த்து ஒரேபேக். ரெண்டாயிரம் ரூபா…”.
“ ரெண்டாயிரம் ரூபாய்க்கு வெடி வாங்கினா ஐநூறு ரூபா வெடி எலவசம்” மேலும் நீளும் இலவசஅறிவிப்புகள்.
“ அய்………..” பல் இழிப்பு.ஒற்றைக்கைத்தூக்கியபடி ‘மாக்..’கெனக்குதித்து வெளிபடும்குதூகலம்.
இத்தனையும் பார்த்தபடி நிற்கிறார் பட்டாசுப்பாண்டி.அவரால்சகிக்க முடியவில்லை.நாசி விடைக்கிறது.மயக்கம் கிறுகிறு…வென வருகிறது.காற்றோடிக்கிடக்கும் அவரது கடை, கண் முன்னே நிழலாடுது.
“ அடப்பாவி…. பட்டாசுக்குள்ள வைக்கிற மருந்தஎனக்கும் சேர்த்து வைக்கிறானே…? எந்த ஊரிலிருந்து வந்தவன் இவன்…?. லைசன்ஸ் வாங்கிருக்கானா..? வைத்திருக்கிறானா….? கட்டுப்படியாகாத விலையில இப்படி விக்கிறானே……! அவன் விற்கிற விலை வாங்கின முதலுக்கே அடையாதே! எப்படி இந்த விலைக்கு விற்க முடிகிறது!.என்னோட சரவெடி நூறு ரூபாய்.அசல் விலை தொண்ணூறு.இவன் எழுபது ரூவாய்க்கு விக்கிறானே…!.மத்தாப்பு டஜன் பெரியது அம்பதுரூபாய்.அசல் விலைநாற்பது. அவன் முப்பது ரூபாய்க்கு கொடுக்கிறானே….!
பட்டாசுப்பாண்டிஒவ்வொருத்தரையும் நிறுத்தி, அவங்க பையிலிருக்கும் வெடியை எடுத்து பார்க்கிறார். அவர் கடையில் இருப்பதைப்போல அதே வெடி,அதே ரகம் , அதே நிறம்.
“ நான் ஏமார்ந்திட்டேனோ…!.அசல் விலையை விட அதிக விலைக்கொடுத்து வாங்கிட்டேனோ….? ” நினைக்கையிலமனசுக்குள் சக்கரம் சுற்றுகிறது.இதயம் கனக்கிறது.திறுதிறுவென விழிக்கிறார்.அவருக்குள்ளேவிபரீதமான சிந்தனை.மனசை குடையும் விரக்தி. முகத்தில் சப்,சப்பென அறையும் ஏமாற்றம்.
“ டப்… சட,சட,…..டமார்….டுமீர்…..”
தெருவெங்கும்பூப்பூவாய் வெடிச்சிதறல்கள்.காகித வெள்ளம்.அத்தனையையும் காற்றுதுடைத்து இழுத்துக்கொண்டுபோகிறது.ஒரு துண்டுச்சிதறலைக்குனிந்து எடுக்கிறார் பட்டாசுப்பாண்டி. அதில்எழுதியிருக்கும் எழுத்துகளைத் துறுதுறுவெனப்பார்க்கிறார்.
தமிழ் கிடையாது.மலையாளமாக இருக்குமோ…..?.தெலுங்கு…?, இந்தி….? ஊகூம்…..வேறென்ன மொழி இது…?. சித்திரம் போல. கட்டம் கட்டமாக…..?
பட்டாசுப்பாண்டியின் இமைகள்சட்டெனத் திறந்தன.நாசிகள் விடைத்தன.
“அடேய்…..பட்டாசு கொளுத்திற பயல்களா……நரகாசுரன் இன்னும் சாகலைடோய்….. சீனாக்காரன் வெடியாவந்து நம்மவயித்தில அடிச்சிக்கிட்டு இருக்கான்டோய்…..”