கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 9, 2023
பார்வையிட்டோர்: 1,267 
 

சார்..போன்..அந்த அலுவலகத்தின் முன்புறம் இருந்து மிஸ்ஸ்.செளதாமினி கூப்பிட்டாள். எதிரில் உட்கார்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்த சண்முகம் எழுந்து சென்று பொனை வாங்கினான். மானேஜர் அறையிலிருந்து செகரெட்டரி பேசினார். “கொஞ்சம் மானேஜர் ரூம் வரைக்கும் வந்துட்டு போங்க”. வர்றேன் சொன்னவன் செளதாமினியிடம் மானேஜர் கூப்பிடறாராம்.போயிட்டு வந்துடறேன்.

“குமாரசாமி” மேனேஜர் அவர் அறையின் சுவற்றின் மேல் இருந்த போர்டையே பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான் சண்முகம். கதவு மெல்ல திறந்து செகரட்டரியின் முகம் வெளியில் தெரிந்தது. கூப்பிடறாரு, விருட்டென தலையை உள்ளே இழுத்துக் கொண்டாள். கதவை தள்ளி உள்ளே போனவனுக்கு அந்த “ஜில்” என்ற உணர்வு

அது குளிரூட்டப்பட்ட அறை என்பதை உணர்த்தியது.

உட்காருங்க சண்முகம், நாம இப்ப பக்கத்து டவுனுக்குள்ள புதுசா பிராஞ்ச் ஒண்ணு தொடங்கப்போறோம்.

தெரியும் சார்,,கேள்விப்பட்டேன், மரியாதையாய் பதிலளித்தான்.

அதுக்கு உங்களை பொறுப்பானவரா போடலாமுன்னு தலைமைக்கிட்ட சொல்லி இருக்கேன். சண்முகத்திற்கு பெரிய ஆர்வம் ஒன்றும் வரவில்லை என்றாலும், நிறுவன வளர்ச்சி என்பதால் சந்தோஷப்பட்டான்.

என்ன சொல்றீங்க சண்முகம்? யோசனையாய் உட்கார்ந்திருந்த சண்முகம் இவரின் கேள்வியால் சுதாரித்தவன் அதுக்கென்ன சார், நீங்க என்ன சொல்லாலும் செய்யறேன்.

குட், நான் இப்ப உங்களை அங்க கூட்டிகிட்டு போய் அந்த இடத்தை கண்ண்பிச்சுடறேன், நீங்க நாளையில இருந்து அங்க போய் வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் செய்ய ஆரம்பிச்சுருங்க. இன்னும் ஒரு வாரத்துல எல்லாம் ரெடியாயிடணும், இந்த திங்கள் முடிஞ்சு அடுத்த திங்கள் நம்ம ஹெட் ஆபிஸ்ல இருந்து இன்ஸ்பெக்ஷ்ன் வருவாங்க, அவங்களுக்கு திருப்தின்னா அப்புறம் எல்லாம் ரெடிதான். சரி வாங்க. சண்முகத்தை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார். கார் அவர்கள் வரவுக்காக காத்திருந்தது.

மானேஜருடன் போய் விட்டு வந்த சண்முகத்தை அனைவரும் சூழ்ந்து கொண்டனர். கங்கிராட்ஸ்..சண்முகம், எப்படியோ ஒரு பிராஞ்சுக்கு ஹெட் ஆகப்போறீங்க, அடுத்து அசிஸ்டெண்ட் மேனேஜர், மேனேஜர் இப்படி போயிகிட்டே இருக்கும்.

அவர்களின் வாழ்த்துக்களை அடக்கமுடன் ஏற்றுக்கொண்டான் சண்முகம். நாளை அங்கு செல்ல வேண்டும், மற்ற ஏற்பாடுகளை பார்க்கவேண்டும், இவைகள் மட்டும் அவன் மனதில் தோன்றியது.

ஒரு வாரம் ஓடியிருந்தது. சண்முகம் ஓடி ஓடி வேலை செய்தான். எல்லா ஏற்பாடுகளும் பிரமாதமாய் இருந்தது. இரண்டு முறை மானேஜரை அழைத்து சென்று காண்பித்தான். அவர் அவன் ஏற்பாடுகளை பார்த்து பாராட்டினார். குட் சண்முகம் நான் எதிர்பார்த்ததை விட பிரமாத படுத்திட்டீங்க. திங்கட் கிழமை ஹெட் ஆபிசுல இருந்து வருவாங்க. ரெடியாயிருங்க. நான் உங்களை “இன்ரடியூசு” பண்ணி வைக்கிறேன்.

உங்க எதிர்காலம் பிரகாசமாயிடும்.

சண்முகம் அமைதியாய் தலை அசைத்தான்.

எதிர் பார்த்தது போல ஹெட் ஆபிசில் இருந்து வந்தவர்கள் மானேஜரையும், சண்முகத்தையும் பாராட்டி விட்டு சென்றனர். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் எல்லாம் தயாராகி விடும் என்று தெரிவித்து விட்டு சென்றார்கள்.

அலுவலகம் பரபரப்பாய் இருந்தது. மானேஜர் அலுவலகத்துக்குள் ஊழியர்களை பார்க்க வருவதாக உதவியாளர் சொல்லி விட்டு சென்றார்.

மானேஜர் தன்னுடன் ஒருவரை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு ஊழியரிடமும் பேசிவிட்டு, இவர்தான் நம்முடைய புது பிராஞ்சுக்கு ‘தலைமையாளர்’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டே வந்தார். சொன்னவுடன் அனைவரும் தன்னிச்சையாக சண்முகத்தை பார்க்க அவன் முகமும் இருளடைந்தது போல் ஆனது. சண்முகத்திடமும் வந்தவர், மிஸ்டர் சண்முகம் இவர் பெயர் ராம் பிரசாந்த், நம்முடைய புது பிராஞ்சுக்கு.

சொல்லிக்கொண்டே சென்றார். இவரை நம்ம ‘ஹெட் ஆபிசே’ ரெகமண்ட் பண்ணி அனுப்பிச்சிருக்கு, மருந்துக்குக்கூட சண்முகம்தான் இந்த ‘புது பிராஞ்சை’ நல்லபடி ஏற்பாடு செய்து கொடுத்தார் என்று ஒரு வார்த்தை சொல்லாமல், ஏதேதோ .சொல்லிக்கொண்டே சென்றவரை வெறித்து பார்த்து தலையசைத்தான்.

அடுத்த ஆளிடமும் இதே பல்லவியை சொல்லிக்கொண்டு சென்ற மானேஜரை கண்களில் நீர் திரையிட மெளனமாய் பார்த்துக்கொண்டிருந்தான் சண்முகம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *