நன்றிக் கடன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 20, 2022
பார்வையிட்டோர்: 1,980 
 
 

திறந்திருந்த கார் ஜன்னல் வழியே சரேலெனத் தாவிக் குதித்து ஓடியது ஜிம்மி. எதிரில் வந்த பெரிய கன்டெய்னர் லாரிக்காக சுவாமிநாதன் ஓரம் கட்டி நிறுத்திய நேரத்தில் எதிர்பாராமல் இப்படியாகிவிட்டது.

“என்னங்க..! ஜிம்மி…” பதறினாள் மனைவி லட்சுமி.

‘வீட்டிற்கு ஜிம்மி வந்த இந்த நான்கு வருடங்களில் இதுபோல ஒரு சம்பவம் நடந்ததே இல்லையே…! இப்படி திடீரென்று எங்கும் ஓடி பரபரப்பை ஏற்படுத்தியதே இல்லையே…!’ சுவாமிநாதன் குழம்பினான்.

காரை ரிவர்ஸ் எடுத்து சுமார் 200 மீட்டர் பின்னால் சென்றான்.

முருகன் கோவில் அருகே, சாலை ஓரம் மயங்கிக் கிடந்த ஒரு பெண்மணியைச் முகர்ந்து பார்ப்பதும் சுற்றிச் சுற்றி வருவதுமாய் இருந்தது ஜிம்மி.

காரை அருகில் நிறுத்தினான்.

“வா ஜிம்மி..” என்று கூப்பிட்டான், வரவில்லை.

அதன் கழுத்துப் பட்டையைப் பிடித்து செல்லமாக இழுத்தான். முன்னங்காலை அழுந்த ஊன்றி முரண்டு பிடித்தது.

கணவரும் மனைவியுமாக மல்லுக்கட்டித் தூக்கி, எப்படியாவது காரில் ஏற்றிவிடப் பார்த்தபோது திமிரிக்கொண்டு ஓடி மயங்கிக் கிடந்த அந்தப் பெண்மணியை முகர்வதும், முனகுவதுமாய் சமிக்ஞை செய்தது.

மஞ்சள் புடவையில் மங்கலகரமாக இருந்தாள் அந்தப் பெண். நெற்றி நிறையக் குங்குமம், அதன் மேல் தீற்றப்பட்ட  விபூதி… ‘இவள் யாராக இருக்கும்? அவள் மேல் ஏன் ஜிம்மிக்கு இவ்வளவு கரிசனம்…? ஒரு வேளை நம் வீட்டுக்கு வரும் முன் இவளிடம் இந்த நாய் வளர்ந்திருக்குமோ…?’ என்றெல்லாம் சிந்தனை ஓடியது சுவாமிநாதனுக்கு.

‘அதிக மனித நடமாட்டமில்லாத இந்த ‘உஷத்-கால’ வேளையில் ‘நிர்மால்ய-பூஜை’ பார்க்கத்தான் இந்தப் பெண் வந்திருக்க வேண்டும்…!’ என்று தோன்றியது அவனுக்கு.

கிடந்த நிலையைப் பார்த்தால் விபத்து போலத் தெரியவில்லை. மயங்கி சாய்ந்ததைப் போலத்தான் இருந்தது.

“டாண்…! டாண்…! டாண்….!” கோவில் காண்டா மணியோசை சீராக ஒலித்து அதிகாலை ஓசோனில் கலந்தது.

மணியோசைக் கேட்டு, அவசர அவசரமாய் கோவிலை நோக்கி  வந்த பக்தர்கள் சிலரின் உதவியோடு  அந்தப் பெண்ணை காரில் தூக்கிக் வைத்து அருகிலிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றான் சுவாமிநாதன்

‘நமக்கு ஏன் வம்பு…’ என்று போகாமல், தெருவில் மயங்கிக் கிடந்த, ஊர் பேர் தெரியாத ஒருவரை மனிதாபிமானத்தோடு பொறுப்பாக மருத்துவ மனைக்கு அழைத்து வந்த சுவாமி நாதனையும் அதற்கு உறுதுணையாக இருந்த அவர் மனைவி லட்சுமியையும் பாராட்டினார் டாக்டர். தொடர்ந்து அந்தப் பெண்ணை பரிசோதித்தார்.

நாய் ஜிம்மியோ அங்கும் இங்கும் நிலை கொள்ளாமல் சுற்றிச் சுற்றி வந்தது.

“சார்…! பயப்பட ஒண்ணுமில்லை.. நாள் முழுக்க தண்ணீர் கூடக் குடிக்காம பட்டிணி கிடந்திருக்காங்க.. அநேகமா நேத்தி சஷ்டி விரதம் இருந்திருப்பாங்க போல…! ‘டீ ஹைட்ரேட்’ ஆகி நீர் சத்து குறைந்து போய் மயங்கிட்டாங்க. ஒரு பாட்டில் ‘செலைன்’ ஏத்தினா அரை மணி நேரத்துல கண் முழிச்சிடுவாங்க.. நீங்க உங்க பயணத்தை தொடருங்க. கண் விழிச்சதும் அவங்களை விலாசம் கேட்டு ‘சேஃப்’பா அனுப்பிடறேன்..!” என்றார் டாக்டர்.

டாக்டரின் யோசனைக் கூடச் சரியாகத்தான் பட்டது சுவாமிநாதனுக்கு, ஆனால் நாய் முரண்டு பிடித்தது… ‘அரை மணி நேரம்தானே, இருந்து அந்தப் பெண் கண்விழித்ததும் போகலாம் என முடிவு செய்தார்கள்.

ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன், வேப்ப மரத்தடியில் கண் மூடி அமர்ந்திருந்த ஜிம்மியின் மனம் ஆறு மாதத்திற்கு முன் தனக்குத் தடுப்பு ஊசி போடுவதற்காக, சுவாமிநாதன் ஸ்கூட்டரில்  கால்நடை மருத்துவ மனைக்குத் அழைத்துப் போனபோது நிகழ்ந்த நிகழ்வுகள் ஜிம்மியின் நினைவில் ஓடின.

பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல். அதைத் தவிர்க்க ஸ்கூட்டரை ‘யூ டர்ன்’ போட்டுத் திருப்பி,  அந்தக் குறுக்குப் பாதையில் நுழைந்தான் சுவாமிநாதன்.

‘இது மாற்றுப் பாதையா? மாட்டுப் பாதையா?’ என்ற சந்தேகம்  வரும் அளவிற்கு  அவ்வளவு மாடுகள் சாலையில் படுத்துக் கிடந்தன.

ஒதுங்கி ஓரமாகச் செல்லலாம் என, சாலையிலிருந்து இறங்கியதுதான் தாமதம்… ஸ்கூட்டரின் மட்கார்ட் வரை பூமியில் ‘பொதக்’ எனப் புதைய, நிலை குலைந்த சுவாமிநாதன் வண்டியோடு சாய. எழமுடியாமல் ஸ்கூட்டர் அவன் மேல் கிடந்தது.

“தம்பீ…! பார்த்து வரக்கூடாதுங்களா…?” என்று பதறியபடியே அருகாமை வீட்டிலிருந்து ஒரு பெண் அவசரமாய் ஓடிவந்து ஸ்கூட்டரை தூக்கி நிறுத்தி அவனை விடுவித்தாள். அதோடு இரண்டு வாளி தண்ணீர் கொடுத்து கை, கால், உடுப்பு, ஸ்கூட்டர் எல்லாவற்றையும் சுத்தம் செய்ய வைத்து நாற்காலி போட்டு உட்காரச் சொன்னாள்.

“அதெல்லாம் வேண்டாம்!” என்று மறுத்தாலும் சுவாமிநாதனுக்கு சூடாக டீ கொடுத்து உபசரித்தாள்.. ! அவனுக்கு மட்டுமா.. ! எனக்கும் கூட ஒரு கோப்பையில் பாலும் இரண்டு ரொட்டித் துண்டும் போட்டாளே.!’ அந்த மகராசி நல்லா இருக்கணும்!’ என்று மனதார வாழ்த்தியது ஜிம்மி.

‘இந்தப் பெண் யாராக இருக்கும்..? என்று சுவாமிநாதன் தொடர்ந்து  மூளையைக் கசக்கிப் பிழிந்து கொண்டான். ஆனால்  கொஞ்சம் கூட  நினைவுக்கு வரவில்லை.

“சார் அந்த அம்மா கண் விழிச்சிட்டாங்க. வந்து பாருங்க..” என்றாள் நர்ஸ்.

சுவாமிநாதன் மனைவியோடு சென்றான்.

கை கூப்பினாள் அந்தப் பெண்.

இவர்களும் பதிலுக்குக் கூப்பினர். ஆனால் கண்களில், ‘யார் நீ?’ என்ற கேள்வி அப்பட்டமாய்த் தெரிந்தது.

“தம்பீ..! நீங்களா..? உங்களுக்குதான் எவ்ளோ உசந்த மனசு…” என்று அந்தப் பெண் சிலாகித்த போதும், அவளை யார் என்று இவனுக்குத் தெரியவில்லை..

“….” மௌனமாக இருந்தான்.

“ஸ்கூட்டர் சேத்துல உள் வாங்கி சாஞ்சப்போ தூக்கி விட்டு, சுத்தம் பண்ணிக்க ரெண்டு வாளி தண்ணி கொடுத்தேன் அவ்ளோதான்., எல்லாரும் மனிதநேயத்தோட செய்யற உதவிதான் இது. ஆனா எப்பவோ நான் செய்த இந்த சின்ன உதவியை மனசுல வெச்சிக்கிட்டு, உங்க வேலையையெல்லாம் தள்ளி வெச்சிட்டு  இப்படி எனக்காக ஆஸ்பத்திரீல வந்து நிக்கறீங்களே..! உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போறேன்…? ஜிம்மி நல்லாருக்கா? அன்றைக்கு நேரத்துக்குப் போயி ஜிம்மிக்கு ஊசி போட முடிஞ்சிதா?” என்று அந்தப் பெண்  விவரமாய் விசாரித்தபோதுதான் சுவாமிநாதனுக்கு அனைத்துமே நினைவிற்கு வந்தது.

ஆறு மாதத்திற்கு முன் இரண்டு பிஸ்கட்டும் ஒரு கோப்பைப் பாலும் கொடுத்த ஒருவரை நினைவில் வைத்துக்கொண்டு ஓடுகிற காரில் இருந்துகொண்டே அவரை அடையாளம் கண்டு, பிடிவாதமாய் நின்று நன்றிக் கடனைச் செலுத்திய நாய் ஜிம்மியை நினைத்தபோது, ‘நாம் நன்றி மறந்துவிட்டோமே..!’ என்கிற கழிவிரக்கம் வந்தது சுவாமிநாதனுக்கு.

ஆஸ்பத்திரி உள்ளே வந்த ஜிம்மியை யாரோ விரட்டினார்கள். யாரோ ஒருவர் அடிக்கக் கை ஓங்கினார்..

“ஐந்தறிவு ஜீவனுக்குச் சமமா நாம நடந்துக்கலாமா? அதை விடுங்க போயிடும்.”  என்றார் ஒருவர்.

நாய்க்கு ஐந்தறிவு, மனிசனுக்கு ஆறு அறிவு என்ற கூற்றில் முதல் முறையாகச் சந்தேகம் வந்தது சுவாமிநாதனுக்கு.

– தேன் சிட்டு தமிழ் சித்திரைப் புத்தாண்டு சிறப்பிதழ் 2022

Print Friendly, PDF & Email
இயற்பெயர்: வரதராஜன் அ புனைப்பெயர்: ஜூனியர் தேஜ் ரத்த வகை: O Positive பிறந்த தேதி: 04.06.1962 குடும்பம்: மனைவி, மகன், மருமகள் பணி: உதவித் தலைமை ஆசிரியர் (பணி ஓய்வு ஓய்வு பெற்று இப்போது பணி நீட்டிப்பில். 31 மே 2023 ல் ஓய்வு) கல்வித் தகுதி: MA(English).,M.Sc (Counseling Psychology)., B.Ed., CLIS., முதல் ஜோக்: ஜூனியர் விகடன் 1980 களில், சரியான தேதி இல்லை முதல்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *