நினைவுத்திரள் உருப்பெறுவதற்கு முன்னான குழந்தைப்பருவத்தின் உறக்கங்களில் கனவுகள் கண்டேனா என்பதை சரியாகச் சொல்லமுடியவில்லை. ஆனால் நினைவு தெரிந்த பின்னால் உறக்கத்தில் கனவுகள் வராத இரவுகளே இல்லையென்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். பெரும்பாலும் துர்க்கனவுகள். சுப கனவுகளை எண்ணினால் ஒரு கை விரல்களே போதுமானது.
ஒரு கனவை அது கனவென்று அறிந்துகொள்ள நனவு என்ற வேறுபாட்டையும் பிறகு அந்த நனவு திரண்டு திரண்டு உருப்பெறும் நினைவையும் அறியவேண்டியிருக்கிறது. நனவைப் பாதரசமென்றும் நினைவைப் பசையென்றும் சொல்வேன். ஆனால் கனவைப்பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை
இனிமையானவை, வினோதமானவை, குழப்பமானவை, திகிலானவை, தர்க்கத்திற்குள் அடங்காதவை என்று எத்தனையோ கனவுகள் தம் விளிம்பைக்கடந்து நனவுக்குள்ளும் நினைவிற்குள்ளும் வருவதற்கு திராணியற்று மறைந்துபோயிருக்கின்றன. அவை எல்லாமே புகைமூட்டமான கனவுகள். ஒரு கனவு நுணுக்கமாக நினைவிலிருக்காது அல்லது அப்படியான ஒன்று விதிவிலக்கான கனவு என்பதை என் கனவுகளிலிருந்து யூகித்தேன்.
ஆனால் ஒரே ஒரு கனவு தன் எல்லையைத் தாண்டிக்குதித்து என் நனவிற்குள் வந்தபோதுதான் கனவுகள் கனவுகளாகவே கரைந்துவிடுவது நமக்கு எவ்வளவு நிம்மதியைக் கொடுக்கக்கூடியது என்று உணர்ந்தேன். ஆயினும் அந்தக்கனவு உடனடி மனக்கொந்தளிப்புகளை உருவாக்கி தினசரி லெளகீகத்தில் தொந்தரவூட்டிய ஒன்றல்ல. இன்னும் சரியாகச் சொல்வதென்றால் எதிர்பாராத கணமொன்றில் நினைவிலிருந்து முட்டியெழுந்து தத்துவார்த்தச் சிக்கலையும் துயரார்ந்த மனோநிலையையும் அளிக்கும் கனவென்பேன். எது எப்படியாயினும் அக்கனவையும் அதற்கு மூலமாய் அமைந்த நனவின் சம்பவங்களையும் உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கேட்டபின்னால் நீங்கள் என்னோடு உடன்படலாம் அல்லது இதற்கா இவ்வளவு பீடிகை என்று அலட்சியப்படுத்தலாம். அதெல்லாம் ஒரு பிரச்சனையேயில்லை. உங்களிடம் சொல்ல முயற்சிப்பதுதான் இப்போது எனக்கு முக்கியமானதாக இருக்கிறது.
எழுந்தவுடன் ராத்திரி கண்ட கனவுகளை ஆராய்ச்சி செய்யுமளவிற்கான அவகாசத்தோடு என்னுடைய காலைப்பொழுதுகள் இருந்ததில்லை.அவை வாழ்வின் மத்திமத்திலும் காலைநேர உறக்கத்தின் சுகத்தை இழக்க விரும்பாத ஒரு சுகவாசியின் அவசரமான, உலகம் முன்னால் நகர்ந்துவிட்டபின் பின்னால் துரத்தியோடுபவனின் நேரங்கள். என் வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் இடையேயான பதினெட்டுக் கிலோமீட்டர்களை உச்சபட்ச போக்குவரத்து மிகுந்த காலைநேரங்களில் பயணிப்பது களைப்பூட்டக்கூடியது. ஆகவே நான் சொந்த வாகனம் வைத்துக்கொள்ளாமல் அலுவலகப்பேருந்தின் ஜன்னலோர சீட்டிலமர்ந்து போய் வருகிறவன்.
நான் ஏறும் பஸ் ஸ்டாப்பிற்கு அலுவலகப்பேருந்து சரியாக ஒன்பது இருபதுக்கு வரவேண்டும். ஆனால் பலநாட்கள் தாமதமாகவே வரும். போக்குவரத்து உச்சமாயிருக்கும் காலைநேரங்களில் ஐந்து பத்து நிமிடங்களுக்கு வாகனங்கள் சாலையிலேயே தேங்கிவிடுமளவிற்கு நெரிசலிருக்கும். பஸ் டிரைவர்கள் பேப்பர் படிப்பார்கள். டூவீலரில் பயணிப்போர் ஹெல்மெட்டைக் கழற்றிவிட்டு நகம் கடிப்பார்கள். இயர்போனை மாட்டியிருப்பவர்கள் தலையை ஆட்டிக்கொண்டிருப்பார்கள் அல்லது செல்போனைக் குடைவார்கள். கைகளுக்கு நீளமான உறை அணிந்து முக்காடோடு முகத்துக்கும் சேர்த்து துணியைச் சுற்றியிருக்கும் பெண்களின் கண்களில் குளிர்கண்ணாடிகள் அமர்ந்திருக்கும். சாலையோர மரங்களிலிருந்து விதவிதமான நிறங்களில் பூக்கள் குலுங்கி உதிர்ந்துகொண்டிருக்கும். ஒழுங்கின்மைக்குள் உருவெடுக்கும் ஒரு சீரான மென்தாள லயத்தைப்போல அவ்வளவு பரபரப்பிலும் மெல்லிய படலமாய் அக்கணங்களில் ஒரு நிசப்தம் பரவியிருப்பதை என்னால் உணரமுடியும்.
பஸ் ஸ்டாப்பை ஒட்டி முக்கால்வாசி வேலைகள் முடிக்கப்பட்ட ஐந்து மாடிக் கட்டிடமொன்று சும்மா கிடக்கிறது. அதுவொரு பிரச்சனைக்கு உட்பட்ட கட்டிடமென்பதற்கு சாட்சியாய் வழக்குவிவரங்கள் எழுதப்பட்ட போர்டொன்று முன்னாலிருக்கும். கட்டிடத்திற்கு முன்பக்கத்திற்கு காம்ப்பவுண்ட் சுவரில்லை. மற்ற மூன்று பக்கங்களிலும் சுவர்களுக்கும் கட்டிடத்திற்கும் இடைப்பட்ட காலியிடத்தில் செடி செத்தைகளும் சிறிய மரங்களும் முளைத்துக்கிடந்தன. தரைத்தளத்தின் மறுகோடியில் கட்டிடத்தின் தூண்களிடையே சேலைகளை மறைப்பாக கட்டி ஒரு குடும்பம் வசித்தது. அவசரத்திற்கு பலர் குறிப்பாக ஆட்டோ டிரைவர்கள் கட்டிடத்தின் பக்கவாட்டில் சிறுநீர் கழிக்கப்போவார்கள்.
அந்த இடத்தில்தான் பாலனின் லிட்கர் ஷாப் வந்தது.ஒன்றரை ஆள் உயரமும் அரை ஆள் நீளமுமானதாய் பச்சைப் பெயிண்ட் அடிக்கப்பட்டு எளிதில் உருட்டிப்போய் இடமாற்றிக்கொள்ள வாகாய் கீழே உருளைகள் பொருத்தப்பட்ட பெட்டிதான் பாலனின் செருப்புத்தைக்கும் கடை. பெட்டியின் பக்கவாட்டில் அம்பேத்கர் படம்போட்டு கர்நாடகா லிட்கர் சங்கம் என்ற வாசகங்கள் கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் இருந்தன. ஒரு செருப்புத்தைக்கும் கடைக்கான அத்தனை கருவிகளும் பச்சைப்பொட்டிக்குள் இருக்க முன்னால் சாக்குப்பையை விரித்து அத்தியாவசியமானவை பரப்பி வைக்கப்பட்டிருந்தன. அதற்குப் பின்னால் பெட்டியோடு ஒட்டிப்போடப்பட்ட நைந்த தலையணையின் மீது பாலன் அமர்ந்திருப்பார். பெட்டியின் உள்பக்கத்தில் அம்பேத்கர், ஏசு மற்றும் விநாயகர் படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. முதலில் யாரோ கன்னடக்காரர் செருப்புக்கடை போட்டிருக்கிறார் என்று நினைத்து கவனிக்காமல் விட்டுவிட்டேன். மறுநாள் பேருந்திற்குக் காத்திருக்கையில் பாலன் தமிழ்ப்பேப்பர் வாசிப்பதைப் பார்த்தவுடன் கொஞ்சம் சுவாரசியமாகிக் கேட்டேன்
” நீங்க தமிழா”
”ஆமாங்ண்ணா”
பாலன் திருவண்ணாமலைக்காரராய் இருப்பாரென்று நினைத்தேன். ஆனால் அவரது உச்சரிப்பு கொங்குத்தமிழ் போலவே இருந்தது. வாடிக்கையாளர்கள் அமர்வதற்காக போட்டிருந்த ஸ்டூலை துணியால் தட்டிவிட்டு என்னை உட்காரச் சொன்னார்.அமர்ந்தவாறு கேட்டேன்.
”நீங்க எந்தூரு?”
”தர்மபுரிங்கண்ணா. நீங்க…?”
”நா திருப்பூருங்க”
”அட..அப்டிங்களா? நான் கோயமுத்தூர்லதான் பலவருஷம் பஸ் ஓட்டிக்கிட்டிருந்தேனுங்க”
”அப்டியா..? அதுதான் உங்க பேச்செல்லாம் நம்மூருப் பக்கம் மாதிரியே இருக்குது”
”பொறந்ததுதான் தர்மபுரிப் பக்கங்க…ஆனா நமக்கு வாழ்க்கைன்னு ஒண்ணு உருவானது கோயமுத்தூர்லதானுங்கண்ணா”
அதற்குள் பஸ் வரவும் அன்றைக்குக் கிளம்பிவிட்டேன். பிறகு தினமும் காலையில் நான் ஸ்டாப்புக்கு வருகையில் பரஸ்பரம் வணக்கப்புன்னகைகளைப் பரிமாறிக்கொள்வோம். பொதுவாகவே நான் மெளனதாரி. இளைஞர்களும் இளைஞிகளுமாய் பத்திருபது பேர் என்னோடு அலுவலகப்பேருந்து ஏறினாலும் அதிகமாக யாருடனும் பேசுவதில்லை. யாரேனும் செருப்புகளைக் கொடுத்துவிட்டுக் காத்திருந்தால் பாலன் முசுவாக தைத்துக்கொண்டிருப்பார். அப்போது நான் மெளனமாக பாலனின் கையோட்டங்களைப் பார்த்துக்கொண்டிருப்பேன். பேருந்து வருவதற்குத் தாமதமாகி பாலனும் வேலையில்லாமல் இருந்தால் ஏதேனும் பேசிக்கொண்டிருப்போம். பாலனுக்கு திருமணமாகி இரண்டு பையன்கள் ஊரில் பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்தார்கள். தொடர்ச்சியாக வண்டியோட்டியதில் ஏற்பட்ட முதுகுவலி காரணமாகவும் விபத்துகள் குறித்த பயத்தினால் விளைந்த குடும்ப வற்புறுத்தலினாலும் அந்தத்தொழிலை விட்டுவிட்டு இங்கே பெங்களூரில் செருப்புத் தைக்கும் கடை போட்டிருப்பதாகச் சொன்னார்.
”சின்ன வயசிலிருந்து வண்டியோட்டுனதா சொல்றீங்க…எப்படி இந்த வேலையக் கத்துக்கிட்டீங்க? “
”அது என்ன பெரிய மந்தரங்கண்ணா..ஊரில் சொந்தக்காரங்க பலபேரு இதுல பெரிய தொழிலாளிங்க…எல்லாம் சின்ன வயசுல இருந்து பாத்து வளந்ததுதாங்க..ஏன்..? என்ற அண்ணன் ஒருத்தனே இங்கே மடிவாளாவுல கடை போட்ருக்கறான்..”
”எங்க தங்கியிருக்கிறீங்க?”
”இத, இந்தக் கட்டிடத்துலாதாங்க” அவர் பின்பக்க கட்டிடத்தைக் காட்டினார்.
”இதுலயா..இங்க வேற யாரோவும் இருப்பாங்க போலயிருக்கு?”
”ஆமாங்க…அவங்களும் நம்மள மாதிரிதான்…கட்டட வேலைக்குப் போறாங்க…அவங்க ஒரு ஓரத்துல இருந்துப்பாங்க.. நம்ம ஒரு ஓரத்துல இருந்துக்க வேண்டியதுதானுங்க…அதா தூரத்துல இருக்கற சாப்பாட்டுக்கடையில போயி சாப்பாடு பார்சல் கட்டிட்டு வந்துருவன்… டிராக்டர்ல தண்ணி கொண்டுவருவானுக… ரெண்டு கொடம் புடிச்சு வச்சுக்குவன்… ஊருக்குப் போகுனுமின்னா அப்படியே பெலந்தூர் பக்கமிருக்கற பனத்தூர் ஸ்டேஷன்ல சாயங்காலமா பாசஞ்சர் ஏறுனா பாலக்கோடு ராயக்கோட்டை வழியா ரெண்டரை மணிநேரத்துல வூட்டுக்குப் போயிராலங்ணா…அவ்வளவுதானுங்கணா… வாழ்க்கைய தலைச்சுமையா எப்பவுமே வச்சுக்கிட்டதில்லே…” சொல்லிவிட்டுப் புன்னகைத்தார்.
”எவ்வளவு வருமானம் வருங்க?”
”மொத ரெண்டு வாரத்துக்கு நல்லாருக்குங்கண்ணா..மாசக்கடைசில கொஞ்சம் சோம்பலாத்தான் இருக்கும்..எப்படியும் ஒரு பத்துரூவாயிக்கு பக்கமா வருங்க..சில பேரு செருப்பக் கொடுத்துட்டு வராமயே கூடப் போயிருவாங்க..இங்க பாருங்க எத்தன சோடி கெடக்குதுன்னு” செருப்புக்களைக் காட்டிச் சொல்லிவிட்டு மறுபடியும் கேட்டார்.
”ஏனூங்கண்ணா…பசங்களும் புள்ளகளுமா இத்தன பேரு வேல செய்யறாங்களே…அப்டி என்னதாண்ணா நடக்குது சாப்ட்வேர் கம்பெனிலா?”
நான் புன்சிரித்துக்கொண்டே ஒரு மென்பொருள் நிறுவனத்தின் அமைப்பு பற்றியும் அதன் தொழில்முறைகள் பற்றியும் பற்றியும் விளக்கினேன். அவருக்கு பாதி புரிந்தது. மீதி புரியவில்லை.
”ஆனா நல்ல சம்பளங் கொடுப்பாங்க…இல்லீங்களாண்ணா?” அவருடைய ஆர்வக்கேள்விக்கு ஆமோதிப்பது போலில்லாமலும் மறுப்பது போலில்லாமலும் ஒரு தலையசைப்பை பதிலாகக் கொடுத்தேன். அப்போது என்னோடு அலுவலகம் வரும் பெண்ணொருத்தி தன் பையில் சுருட்டி வைத்திருந்த பிய்ந்த செருப்புகளை எடுத்து நீட்டி ஹிந்தியில் ஏதோ சொன்னாள். செருப்புகளை உற்றுப்பார்த்துக்கொண்டே இந்தப் பொண்ணு சொல்றது ஒண்ணும் புரியமாட்டங்கதுண்ணா என்றார். நான் அப்பெண்ணிடம் ஆங்கிலத்தில் விவரங்களைக் கேட்டு தமிழில் பாலனுக்குச் சொன்னேன்.
”கன்னடம் நல்லா வருங்கண்ணா..ஆனா ஹிந்தி இன்னும் புரியமாட்டீங்கது..இன்னுங் கொஞ்சநாள்ல அதையும் பழகீரனும்னு நெனச்சிட்டு இருக்கறன்… செருப்பப் பாத்தாவே போதுங்கண்ணா… அத எப்படித் தைக்கோணும் இல்ல இனிமேல செருப்பு வேலைக்காகதான்னு சொல்லீர முடியும்…நல்ல தொழில்காரனுக்கு கண்ணுப் பாத்தா கையி செய்யும்…எதுக்குச் சொல்றன்னா…இந்த வேலைக்குப் பேச்சே தேவையில்ல…ஆனா கஸ்டமருக ஏதாவது கேட்பாங்க…அதிலயும் பாருங்க… நிறைய இந்திக்காரங்க வாராங்க..அவங்க ஏதாவது சொன்னா நமக்கு ஒண்ணுமே புரியறதில்ல”பேசிக்கொண்டே அவர் தைத்து நீட்டிவிட்டு ட்வெண்டி ரூப்பிஸ் என்றார். ட்வெண்டி ரூபிஸ் என்று நம்பமுடியாதவளாய் கேட்டவள் முகச்சுளிப்போடு பணத்தைக் கொடுத்துவிட்டு தள்ளிப்போய் நின்றுகொண்டாள். ரூபாய்த் தாள்களை சட்டையின் மேல்பையில் சொருகிக்கொண்டே பாலன் சொன்னார்.
”ஒரு பீஸுக்கு மினிமம் பத்து ரூவா இல்லாம வேல செய்யறதில்லீங்கணா.. நெறையப்பேரு நல்லா டிப்டாப்பா வருவாங்க…காசும் வச்சிருப்பாங்க..ஆனா கொடுக்கறதுக்கு மனசே வராது.. நான் ஒண்ணும் அதிகமாக கேக்கறதில்லீங்கணா…வேலைக்குத் தகுந்த காசுதான் கேப்பேன்…கம்மியா கொடுத்தா வாங்கமாட்டேன்…சில பேரு காச வெச்சுப்போட்டு அப்படியே போயிருவாங்க..”
ஆனால் பாலனிடம் நிறையப்பேர் கடனுக்கு செருப்புத் தைத்துப் போனதையும் பார்த்திருக்கிறேன்.
”தெரியுங்கண்ணா..ஆனா அவன் ஏமாத்தமாட்டான்…அண்ணா நீங்க எல்லாம் வசதியா இருக்கறவீங்க..அது தப்புன்னு சொல்லல…ஆண்டவன் புண்ணியத்துல உங்களுக்கு எல்லாம் எண்ணாம செலவு செய்யற வாய்ப்புக் கெடச்சிருக்கு…ஆனா இதே ஊர்ல எத்தனையோ பேரு அஞ்சுக்கும் பத்துக்கும் கஷ்டப்பட்டுட்டுத்தான இருக்கறான்… நானும் அந்த மாதிரி ஒலகத்துல பொழங்கறவந்தான்…கைக்கு காசு வரும்போது அவங் கொண்டாந்து கொடுத்துருவான்..இல்லீன்னாத்தான் என்ன… போனாத்தான் போவுது”
பஸ் வந்துவிட அன்றைக்கு அந்தப்பேச்சு அத்தோடு முடிந்தது. நான் ஒருசில நாட்களில் பஸ்ஸைத் தவறவிட்டுவிடுவதுமுண்டு. வேர்த்து விறுவிறுத்து ஸ்டாப்பை அடையும்போதே பஸ் போய்விட்டதாக சொல்வார் பாலன். பஸ்ஸைத் தவறவிடும் நாட்களில் இயல்பாகவே கடுகடுப்பு கூடிவிடுவதுண்டு. இரண்டு பஸ்கள் மாறி அலுவலகம் போய்ச்சேர ஒன்றரை மணிநேரங்களாவது பிடிக்கும்.ஒருநாள் பாலன் எனக்காக இரண்டு நிமிடம் பஸ்ஸை நிறுத்தி வைத்திருந்ததும் நடந்தது.
”எங்கடா எப்பவும் நீங்க முன்னாடியே வந்து வெயிட் பண்ணுவீங்களே…இன்னிக்கு இன்னுங் காணமேன்னு நெனச்சிட்டிருந்தேன்.. நேத்து டிராபிக் கம்மியா இருக்கங்காட்டி அஞ்சு நிமிஷம் முன்னாடியே வந்துட்டான்… ரெண்டு மூணு பேருதான் ஏறுன்னாங்க…டிரைவரு கெளம்பப் பாத்தான்.. நா வுடுல…இன்னும் நெறையப்பேரு வரவேண்டியிருக்குது…உனக்கும் டைமு இருக்குதல்ல..பின்னே எதுக்கு அதுக்குள்ள வண்டிய எடுக்கறன்னு கேட்டேன்..அவனுக்கு எதோ நல்ல மூட் போலங்க… ஒண்ணுஞ் சொல்லாம வெயிட் பண்ணுனான்…அதுக்குள்ள நீங்களும் வந்துட்டீங்க”சிரித்துக்கொண்டே சொன்னார் பாலன்.
என்னைவிட மூத்தவரான பாலன் என்னை அண்ணா என்று விளிப்பது ஏனோ எனக்குக் கூச்சமாகயிருந்தது. அந்த அண்ணா என்ற விளியின் மூலம் எங்கிருக்கிறது, அது எவ்வளவு வலிமையாக தன் வேர்களைப் பரப்பியிருக்கிறது என்று என்னால் யூகிக்க முடிந்தது. அப்படி கூப்பிடவேண்டாமென்றும் பெயர் சொல்லியே அழைக்கச்சொன்னேன். மழுப்பலாகச் சிரித்தவர் பின்னரும் அப்படியேதான் விளித்தார்.
பாலனோடு பேசிக்கொண்டு பஸ்ஸுக்குக் காத்திருக்கும் அந்த நேரங்களில் தினமும் ஒரு கிழவன் காலையிலேயே நன்றாக குடித்துவிட்டு தனக்குத்தானே பேசிக்கொண்டும் தள்ளாடிக்கொண்டும் வருவான். பஸ்ஸுக்குக் காத்திருக்கும் கூட்டத்தைப் பார்த்தவுடன் கிழவனுக்கு குஷியாகிவிடும். ஒவ்வொருவரின் பக்கத்திலும் போய் நின்றுகொண்டு காசு கேட்பான். கிழவனின் பேச்சு எந்த மொழியென்று புரிந்துகொள்ள முடியாதபடி வெவ்வேறு விதமான ஒசைகளால் மட்டும் ஆனதாக இருக்கும். பெண்களைப் பார்த்து பல்லை இளிப்பான். அவர்கள் பயந்துபோய் ஒதுங்கி நின்றுகொள்வார்கள். கொஞ்சநேரம் எல்லோரிடமும் காசு கேட்டுவிட்டு பிறகு அவனாகவே நகர்ந்துவிடுவான்.
”இந்தக் கிழவன் ஒரு பைத்தியகாரன் போலிருக்கு” நான் சொன்னேன்
”அட நீங்க வேறங்கண்ணா.. பைத்தியமெல்லாம் ஒண்ணுமில்ல..லட்சக்கணக்குல பைசா வச்சிருக்கறாண்ணா இவன்..இங்கதான் குந்தலஹள்ளி கேட்ல வூடு…காலைல மத்தியானம் சாயங்காலம் மூணு நேரமும் ஓயின்ஷாப்புக்கு போயிட்டு வருவான்…இதெல்லாம் அவனுக்கு ஒரு பொழுதுபோக்கு மாதிரி… நீங்க காசு குடுத்தா வாங்கிக்குவான்…வரப்போகையில் இதே மாதிரிதான் எல்லாருகிட்டேயும் பைத்தியக்காரனாட்ட சலம்பிக்கிட்டு இருப்பான். அதுல அவனுக்கொரு குஷி பாத்துக்குங்க”
மறுநாளும் கிழவன் ஒவ்வொருவரிடமும் காசுகேட்டுக்கொண்டும் அவர்களைத் தொடப்போவதுபோலவும் விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தான். அப்போது என்னோடு அலுவலகம் வரும் இளம்பெண்ணொருத்தியின் பின்புறத்தைப் பார்த்துக்கொண்டே அவளை நெருங்க பயத்தில் அலறி நகர்ந்தவள் ஹைஹீல்ஸ் தடுக்கி நடைபாதையில் விழுந்தாள். சட்டென்று எழுந்த பாலன் கிழவனின் கன்னத்தில் பளாரென்று அறைவிட்டு லவடிகவால் என்று உறும பொறிகலங்கிய கிழவன் வேகமாகப் நகர்ந்து போய்விட்டான். அந்தப்பெண் கிட்டத்தட்ட அழுதுவிடும் நிலையிலிருந்தாள்.
”இனிப் பாருங்க..இந்தப்பக்கம் வந்தான்னா மூடிட்டுப் போவாம்”
”சடாருன்னு கைய நீட்டீட்டிங்க…”
”ஆமாண்ணா…குடிச்சா மூடிட்டுப் போகவேண்டியதுதானே…வெளையாட்டுக்கு ஒரு தராதரம் வேண்டாம்? அவன் வயசுக்கு இதெல்லாம் அதிகமில்லீஙகளா? பாருங்க அந்தப்பொண்ணு எவ்வளவு பயந்துபோச்சு? வெளையாட்டுனா அது யாருக்கும் பயத்தக் கொடுக்காததா இருக்கணுங்க”
அந்த சம்பவத்திற்குப் பின்னால் பஸ் ஸ்டாப்பில் பேருந்து ஏறும் என் சக நிறுவன ஊழியர்கள் எல்லோருக்கும் பாலனின் மேல் சின்னதாய் ஒரு மரியாதை ஏற்பட்டது.ஸ்டாப்பிற்கு வந்தபின்னால் அவரிடம் புன்னகை செய்வார்கள். சிலர் தங்களுடைய ஷீக்கள்,லெதர் பேக் போன்றவற்றைக் கொடுத்து சீர்ப்படுத்திக்கொண்டு போனார்கள்.
பொதுவாக மாசக்கடைசிகளில் இரண்டு மூன்று நாட்களுக்கு பாலன் ஊருக்குப் போய்விடுவார். ஒருமுறை அப்படிப் போய்விட்டு வந்திருந்தபோது தன் மனைவியையும் பிள்ளைகளையும் அழைத்து வந்திருந்தார். துறுதுறுப்பான அவரது பையன்கள் அந்தக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவரது மனைவி பெட்டிக்குள் அமர்ந்துகொண்டு பைபிள் வாசித்துக்கொண்டிருந்தார்.
”ஆமாண்ணா..பசங்களுக்கும் ஒருவாரம் ஸ்கூல் லீவு..பெங்களூரு பாக்கோணுமின்னு ஆசப்பட்டாங்க..அதும்போக ஊருப்பக்கமெல்லாம் நிலவரம் சரியில்லாம இருக்குது…பேப்பர்ல பாத்தீருப்பீங்களே…”சொன்னவர் மனைவியிடம் திரும்பிச்சொன்னார்.
“இதா… நா சொல்வன்ல..இவுருதான் அந்த அண்ணன்”
பைபிளை மூடிவைத்துவிட்டு அவர் மனைவி என்னிடம் திரும்பி லேசாக புன்னகை செய்தார். அந்த வாரத்தில் நான் ஸ்டாப்பிற்கு வரும்போது அவர்களிடம் புன்னகை செய்துவிட்டு தள்ளி நின்றுகொள்வேன். அவர்களுக்குள் ஏதோ தீவிரமான உரையாடல் நடந்துகொண்டிருந்தது.
அதுவொரு விடுமுறை நாளின் முற்பகல் பொழுது. உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் எந்த ஓசையையும் எனக்குக் கேட்கவில்லை. ஒலி முடக்கப்பட்ட ஒரு திரைக்காட்சிபோல் அக்கணம் இருந்தது. பெர்முடாசும் டீ ஷர்ட்டும் அணிந்தவனாய் நான் பஸ் ஸ்டாப்பிற்குப் பக்கத்தில் வந்துகொண்டிருக்கிறேன்.ஆனால் எங்கிருந்து வருகிறேனென்று தெரியவில்லை.சட்டென்று பத்துப் பதினைந்துபேர் கொண்ட கும்பலொன்று தோன்றுகிறது. அதற்கு முந்தைய கணம் அவர்கள் எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை. நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே தன் கடையின் முன்னால் உட்கார்ந்திருக்கும் பாலனைத் தரதரவென்று இழுத்துக்கொண்டு சாலைக்குப் போகிறார்கள்.வாகனங்கள் ஸ்தம்பிக்கின்றன். இருவர் பாலனின் கால்களை பிடித்துக்கொள்ள இருவர் கைகளைப் பிடித்துக்கொள்ள கும்பலின் கையிலிருந்த இறைச்சிக்கடைக் கத்திகள் பாலனை நோக்கி இறங்கின. நான் தன்னிச்சையாக அலறினேன். ஆனால் சத்தமே வரவில்லை. கும்பல் இன்னும் வெட்டிக்கொண்டிருந்தது. பார்த்துக்கொண்டிருந்தவர்கள் எல்லோரும் தெறித்து ஓடினார்கள். பயந்துபோன நானும் என் வீட்டை நோக்கி ஓட்டமெடுத்தேன்.
உடல் விதிர்த்து எழுந்து பார்த்தபோது மணி பின்னிரவு இரண்டாகியிருந்தது. முகமெல்லாம் வேர்த்துவிட்டிருந்தது. கனவு கொடுத்த அதிர்ச்சியில் உடலும் சஞ்சலத்தில் மனமும் நடுங்கின. ஒருமுறை பஸ் ஸ்டாப் வரை போய்ப்பார்த்துவிட்டு வந்தால் தேவலாம் போல் தோன்றியது. எழுந்தவன் வீட்டைப் பூட்டிவிட்டு நடந்தேன்.
இரண்டு நாட்களாக பாலனின் கடை பூட்டித்தான் இருந்தது. அவர் ஊருக்குப் போயிருக்கக்கூடுமென்று நினைத்திருந்தேன். இது என்னவிதமான கனவு? ஏன் இப்படியொரு கனவு வந்தது? கனவாகவே இருந்தாலும் நான் ஏன் பாலனை நோக்கி ஓடாமல் வீட்டை நோக்கி ஓடினேன்? என் மீதே எனக்கு எரிச்சலும் கோபமும் குற்றவுணர்ச்சியும் ஏற்பட்டன.
பஸ் ஸ்டாப் முக்கில் திரும்பினேன். அந்தப் பச்சைப்பெட்டி இருந்த இடம் இப்போது வெறுமையாக இருந்தது.
– மே 2014