நதிகள், குணங்கள்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 29, 2021
பார்வையிட்டோர்: 4,968 
 
 

(இதற்கு முந்தைய ‘சாக்ரடீஸ்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது).

இந்துக்களின் திருமணச் சடங்கில் அம்மி மிதித்தல், அருந்ததி காட்டல் என்று சில சடங்குகள் இருக்கின்றன.

ஆகாயத்தின் வடக்குப் பகுதியில் ஏழு நடசத்திரங்கள் அடங்கிய ‘சப்தரிஷி மண்டலம்’ என்று ஒரு தொகுதி உண்டு. இது ஒரு பட்டம் பறக்கவிட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். பட்டம் போன்ற பகுதியில் நான்கு நடசத்திரங்களும், வால்பகுதியில் மூன்றும் இருக்கும்.

வால்பகுதியில் கடைசி விண்மீனுக்கு ஒரு விண்மீன் முன்னதாக இருப்பது வசிஷ்டர் என்னும் ரிஷியின் பெயரில் உள்ள விண்மீன். இதன் அருகில் இருப்பது அருந்ததி நட்சத்திரம்.

கணவனும், மனைவியும் இணைபிரியாமல் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்த வசிஷ்டர்-அருந்ததி இரட்டை நட்சத்திரத்தைக் காட்டுகிறார்கள். இதுமட்டுமல்ல, கணவன் மனைவியின் கண்பார்வையைச் சோதிக்கவும் இது உதவும். ஏனெனில் வசிஷ்டர் நட்சத்திரத்தை மிகவும் உற்று நோக்கினால், நல்ல கண்பார்வை உடையவர்களுக்கே அருந்ததி தெரியும்.

கற்பிற்கு அணிகலனான அருந்ததியை புகழாத தமிழ்மொழி நூல்களோ, வடமொழி நூல்களோ இல்லை. ‘பாஷன்’ எழுதிய ப்ரதிமா நாடகம்; காளிதாசன் எழுதிய ரகுவம்சம் ஆகியவற்றில் அருந்ததி அடிக்கடி குறிப்பிடப்படுகிறாள்.

சங்கத்தமிழ் நூல்களில் அகநானூறு பாடல் 73 (எருமை வெளியனார்); அகம் 16 (சாகலாசனார்); புறநானூறு 122 (கபிலர்); ஐங்குறுநூறு 442 (பேயனார்); பதிற்றுப்பத்து 15; காப்பியாற்றுக் காப்பியனார் 31; கபிலர் 65; பெருங்குன்றூர் கிழார் 89; பெரும்பாணாற்றுப் படை 302; கலித்தொகை 2-21; பரிபாடல் 5-44; சிலப்பதிகாரம் 1-23; 1-63 ஆகிய இடங்களில் அருந்ததியை புலவர்கள் போற்றியுள்ளனர்.

உலகில் வேறு எந்த மதமும் சொந்தத் தாயை தெய்வநிலைக்கு உயர்த்தவில்லை. இது இந்து மதத்தின் மகத்தான சிறப்பாகும். உணவுக்கும், கல்விக்கும் ஏற்பாடு செய்யும் தந்தையைக்கூட தாயாருக்கு அடுத்த இடத்தில்தான் வைக்கிறது இந்துமதம். தந்தை, குரு, தெய்வம் ஆகிய எல்லோரையும்விட தாயே முதலிடம் பெறுகிறாள்.

இது சொற்களில் மட்டுமல்ல, செயல்பாட்டிலும் இருந்துவருகிறது. ராமபிரான் பதினான்கு ஆண்டுகள் காட்டிற்குச் செல்லவேண்டும் என்று தசரதன் கூறியதாக கைகேயி கூறுகிறாள். “அம்மா நீங்கள் சொன்னாலே போதும். தசரதன் சொன்னதாக சொல்லத் தேவையேயில்லை…” என்கிறான் ராமன். இவ்வளவுக்கும் கைகேயி அவன் சொந்தத்தாய்கூட இல்லை.

மஹாபாரதத்தில் குந்திக்கு பஞ்சபாண்டவர்களும்; அவர்களுக்கு மூத்தோனான கர்ணனும் கொடுத்த மதிப்பை பல இடங்களில் படித்து மகிழ்கிறோம். திரெளபதியை ஐந்துபேரும் மணந்துகொண்டதற்கு அம்மாசொன்ன வாசகமே காரணம் என்பதை நாமறிவோம்.

உலகத்தையே துறந்த சன்யாசிகள்கூட அம்மாவுக்குக் கொடுக்கும் மதிப்பும் மரியாதையும் தனி. ஆதிசங்கரரின் வாழ்க்கையே இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அன்னைக்கு வாக்குக் கொடுத்தபடி, அன்னை இறக்கும் தருவாயில் அவர் இடத்திற்கு வந்த ஆதிசங்கரர், ஊரையே பகைத்துக்கொண்டு அன்னையின் சிதைக்குத் தீமூட்டிய வரலாறு யாவரும் அறிந்ததே. இதேபோல பட்டினத்தாரும் தாய்க்கு இறுதி மரியாதையை செய்தார்.

சீதையை மட்டுமே மகளாகக்கொண்ட ஜனகன், தனக்கு வாரிசாக ஒரு ஆண்மகனை தத்து எடுத்ததாக இதிகாசமோ, புராணமோ கூறவில்லை.

வேதத்தில் ‘அதிதி’ என்பவள்தான் தெய்வத்திற்கெல்லாம் தாய் என்று போற்றப்படுகிறாள். உஷா (விடிகாலைதேவதை); ராத்ரி (இரவின்தேவதை) அரண்யானி (வனதேவதை) என்று பாடலுக்குமேல் பாடி பெண்களைப் போற்றுகிறது.

கணவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை: சுயம்வரம் என்னும் வழக்கத்தை உலகில் வேறுஎந்தப் பண்பாட்டிலும் காணமுடியாது. காதல் திருமணத்தை பல கலாச்சாரங்களில் காணலாம். அதற்குத் தாய் தந்தையர் எதிர்ப்பு இருக்கும். ஆனால் பெற்றோரின் கண்முன்னே அத்தனை நாட்டு அரசர்களையும் அழைத்து அமரவைத்து தனக்குப் பிடித்தவனை தேர்ந்தெடுக்கும் பரிபூர்ண சுதந்திரம் இந்து மதத்தில் மட்டுமே உண்டு.

அரசகுல (ஷத்ரிய) பெண்களிடத்தில் இவ்வழக்கம் இருந்ததை ராமாயணம், மஹாபாரதம் மூலம் அறிகிறோம். பெற்றோர்கள் சம்மதத்துடன் இப்படியொரு திருமணம் நடப்பது வியப்பிலும் வியப்பானது.

நள-தமயந்தி திருமணத்தில் சுயம்வரக்காட்சியை அழகாக வர்ணித்துள்ளார்கள். மஹாபாரதத்தில் அம்பா-அம்பாலிகா சுயம்வரமும் படித்து இன்புறத்தக்கது. காளிதாசனின் ரகுவம்ச காவியத்தில் அஜன்-இந்துமதி சுயம்வரம் மிகவிரிவாக வர்ணிக்கப்படுகிறது. தீப்பந்தம் ஏற்றிச் செல்லுகையில் இரவுநேரத்தில் ஒவ்வொரு மாளிகையும் எப்படி வெளிச்சத்தில் ஒளிருமோ அப்படி இந்துமதி பக்கத்தில் வந்து நின்றவுடன் ஒவ்வொரு மன்னரின் முகமும் பிரகாசமானதாம். இந்த தீபசிகா உவமையைப் பின்னர் புத்தகோஷர் அப்படியே தனது நூலில் எழுதினர்.

இந்துமதத்தில் மட்டுமே பெண்தெய்வ வழிபாடு உண்டு. வேறுஎல்லா மத நூல்களுமே கடவுளை ஆணாக மட்டுமே வர்ணிக்கிறது. இந்துமத வேதங்கள் முதல், இருபதாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பாடல்கள்வரை, நாலாயிரம் ஆண்டுகளாக பெண்தெய்வ வழிபாடு தொடர்ச்சியாக இருப்பதைக் காணலாம்.

வேதத்தில் பல பெண் தெய்வங்களின் பெயர்கள் உள்ளன. ரிக் வேதத்திலுள்ள மிகச்சிறந்த மந்திரமான காயத்ரி ஒரு பெண்ணின் பெயர்தான். உலகில் தலைசிறந்த எல்லாவற்றிற்கும் பெண்களின் பெயர்களே சூட்டப்படும் சிறப்பை இந்து மதத்தில் மட்டுமே காணலாம்.

கன்னிமேரி போன்ற வழிபாடுகளை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பின்பற்றினாலும், இதற்கு பைபிளில் ஆதாரம் இல்லை. பிற்காலத்தில் ஏற்பட்ட வழக்கம் இது.

பழங்கால மதங்கள் சிலவற்றில் பெண்தெய்வ வழிபாடு இருந்தது. ஆயினும் அந்த தெய்வங்கள் அனைத்தும் மியூசியத்தில் காட்சிப்பொருளாக உள்ளன. இந்துக்களின் தெய்வங்கள் இமயம் முதல் குமரிவரை இன்றும் உள்ளன. நாடுமுழுதும் சக்தி பீடங்களில் தேவியர் கோயில்கள் உள்ளன. இந்துமதம் மட்டுமே கடவுளை ஆணாகவும் பெண்ணாகவும் வழிபட அனுமதிக்கிறது.

சிவன் இன்றி சக்தியோ; சக்தி இல்லாமல் சிவனோ செயல்பட முடியாது. அர்த்தநாரீஸ்வரர் (சிவன் பாதி, உமை பாதி) சிலை வேறு எங்கு உள்ளது? உமைக்கு உடலில் பாதியைக் கொடுத்தான் சிவன். நெஞ்சில் குடியிருக்க திருமகளுக்கு இடம் கொடுத்தான் விஷ்ணு. நாவில் குடியிருக்க கலைமகளுக்கு அனுமதி தந்தான் பிரம்மன். இது இந்துக்களின் அணுகுமுறை. அதாவது பெண்களுக்கு முக்கிய இடம் தருவது கடமை.

ஆகையால்தான் காஷ்மீரத்தில் அம்பாள்; வங்காளத்தில் காளி; ராஜஸ்தானில் பவானி; குஜராத்தில் கல்யாணி; கர்நாடகத்தில் சாமுண்டேஸ்வரி; கேரளத்தில் பகவதி; தமிழகத்தில் கொற்றவை என்று பெண்தெய்வங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. நதிகளுக்கும், நல்ல குணங்களுக்கும் பெண்களின் பெயர்களே!!

நாட்டை வளப்படுத்தும் எல்லா நதிகளுக்கும் பெண்களின் பெயர்களே! கங்கா, சிந்து, காவேரி, சரஸ்வதி, யமுனா, கோதாவரி, பவானி, கிருஷ்ணா (கிருஷ்ண – ஆண்பால்; கிருஷ்ணா – பெண்பால்) நர்மதா என்று பெயர்சூட்டி பெண்களைப் பெருமைப் படுத்தியுள்ளார்கள். இதையும் உலகில் வேறு எங்கும் காணமுடியாது.

நல்ல குணங்களுக்கான எல்லா வடமொழிச் சொற்களும் பெண்பால் சொற்களே… சத்யா (உண்மை); கருணா (கருணை); பவித்ரா (தூய்மை); கலா (கலை) மித்ரா (நட்பு) என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

செல்வத்திற்கு அதிதேவதை அலைமகள் (லெட்சுமி); கல்விக்கு கலைமகள் (சரஸ்வதி); வீரத்திற்கு மலைமகள் (பார்வதி)… இவ்வாறு உலகில் பின்பற்றப்படும் மாதங்களில் யாராவது இத்தகைய பெருமையை பெண்களுக்குச் சூட்டியுள்ளார்களா?

நாட்டையே பாரதமாதாவாக, அன்னையாக வழிபடும் பண்பாட்டை வேறு எங்கும் காணமுடியாது. தாய்நாடு என்ற கொள்கையே இந்தியாவில் உருவானதுதான். காளிதாசன் நாட்டையே ஒரு பெண்ணாக வர்ணிக்கிறான்.

தமிழ், சமஸ்கிருத இலக்கியங்களில் பெண்களை வர்ணிக்கும்போது ‘இந்த ஊரின் அழகிற்கு’ ஒப்பான பெண்ணே என்று உவமையாகக் கூறுகின்றனர். இந்த உவமை இப்போது வழக்கொழிந்து விட்டது. ஆனால் எந்த ஆண்மகனின் அழகிற்கும் ஊரின் அழகை ஒப்பிடவில்லை.

பார்க்க அகநானூறு 340, 376, 396, 359, 220, 115 புறம் 42, 347 நற்றிணை 258, 260, 340, 350; காளிதாசனின் ரகுவம்சம் 12-35; 13-9; 13-58; 13-62 சாகுந்தலம் III-13.

நாட்டைக்காக்க தவம் செய்தவளே ஒரு பெண்தான்! “நீலத் திரைக்கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை” என்று கன்யாகுமரி அம்மனைப் பாடுகிறார் பாரதியார். இமயம் உறை சிவனை நோக்கி (கயிலை பெருமான்) குமரி தவம் செய்வதாகவும்; தென் குமரியை நோக்கி சிவன் தவம் செய்வதாகவும், இது நாட்டின் ஒருமைப் பாட்டுக்கு (இமயம் முதல் குமரிவரை ஒன்று) ஒரு பெரிய எடுத்துக்காட்டு என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் குருஜி கோல்வால்கர் பேசியிருக்கிறார்…

பெண்களைப்பற்றி அலசி ஆராய்ந்து பாரதியார் பாடியதைப்போல் வேறு எவனும் பாடியதில்லை…

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவிபேணி வளர்த்திடும் ஈசன்; மண்ணுக்குள்ளே சிலமூடர், நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்.

கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்தி காட்சி கொடுத்திடலாமோ? பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதமையற்றிடும் காணீர்.

கற்புநிலை என்று சொல்ல வந்தால் இரு கட்சிக்கும் அதை பொதுவில் வைப்போம்; வற்புறுத்தி பெண்ணைக் கட்டிக்கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.

பெண்ணென்று சொல்லிடிலோ, ஒரு பேயும் இரங்கும் என்பார்; தெய்வமே நினது எண்ணம் இரங்காதோ? அந்த ஏழைகள் அங்கே சொரியும் கண்ணீர் வெறும் மண்ணிற் கலந்திடுமோ – தெற்கு மஹாகடலுக்கு நடுவினிலே அங்கோர் கண்ணற்ற தீவினிலே, தனிக்காட்டினிலே பெண்கள் நடுங்குகிறார் அந்தக் கரும்புத் தோட்டத்திலே…

தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி பெண்கள் திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்; வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் இந்த மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *